9 December 2014

உறவுகள்... உன்னதங்கள் (தொடர்ச்சி)




உறவுகள் தொடர்பான சென்ற பதிவில் உறவென்னும் வட்டத்துள் வரும் அனைவரையுமே பொதுவில் கொண்டு கருத்தளித்திருந்தேன். அந்தப் பதிவுக்கு ஜிஎம்பி ஐயா அளித்திருந்த அவருடைய பின்னூட்டத்தில் கீழ்க்காணுமாறு குறிப்பிட்டிருக்கிறார்.

\\என் பதிவில் தொலைந்து கொண்டு போகும் உறவுகளைப் பெண்கள் நிலை நிறுத்தலாம் என்னும் கருத்தை மறைமுகமாக வைத்தேன் பலரிடம் கேட்டுப் பார்த்தால் ஒரு நிதரிசன உண்மை விளங்கும் அறிந்த உறவுகளில் தாய் வழி உறவே அதிகம் நினைவில் இருக்கும். இதற்கும் தலையணை மந்திரம் முந்தானையில் முடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் அறிவுரையும் மறைமுகக் காரணங்களாக இருக்க வாய்ப்புண்டா. தெரிய வில்லை. நடைமுறை வாழ்க்கை நிலைகள் பிளவுபடும் குடும்ப உறவுகளுக்குக் காரணமானாலும் அதைச் சீர்செய்ய யாரால் இயலும் என்னும்கேள்வியும் எழுகிறது.சில பல காரணங்கள் தெரிவதைச் சொல்ல பெண்களுக்குத் தைரியம் இருக்கிறதா இல்லை இருக்கும் நிலையை மாத்திரம் சொல்லிக் காரண காரியங்களை அவரவர் சௌகரியத்துக்கு விட்டு விடுவதா எது சரி...?\\

இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்தபிறகு என் கருத்தை இன்னும் கொஞ்சம் விளக்கமாக அளித்திருக்கலாமோ என்ற எண்ணம் பிறக்கவும் தோன்றியது இந்தப் பதிவு. உறவுகள் பலப்படுவதும் விரிசலடைவதும் பெண்கள் கையில்தான் என்ற அவரது கருத்துக்கு உறவின் தன்மையில் பெண்களுடனான என்னுடைய நிலைப்பாட்டை விளக்க இப்பதிவு போதுமானது என்று நினைக்கிறேன்.

இதில் முழுக்க முழுக்க என்னுடைய அனுபவத்தை மட்டுமே பகிரப்போகிறேன். ஜிஎம்பி ஐயா குறிப்பிட்டுள்ளது போல் தலையணை மந்திரமோ முந்தானையில் முடிந்து வைக்கும் தந்திரமோ எதுவும் என் திருமணத்தின்போது எனக்கு வழங்கப்படவில்லை. என் தாய் மட்டுமல்ல… என்னுடைய பிறந்தவீட்டு உறவுகள் யாருமே அப்படியொரு எண்ணத்தை எனக்குள் விதைக்கவில்லை. எல்லோரும் ஒன்றுபோல் சொன்னது இதுதான்.

நீ வாழ்க்கைப்பட இருக்கும் குடும்பம் பெரியது. மாமியார் மாமனார், இரண்டு கொழுந்தனார், இரண்டு நாத்தனார், அவர்களது குடும்பம், ஓரகத்தி என்று பலரையும் அனுசரித்துப் போகவேண்டும். பிறந்த வீட்டில் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்குவது பெரிய விஷயமில்லை. புகுந்த வீட்டிலும் எல்லோரிடமும் நல்ல பெண்ணாக நடந்து நல்ல பெயர் வாங்கி பிறந்த வீட்டுக்கு பெருமை சேர்க்கவேண்டும்.

கணவனையும் கணவனது குடும்பத்தாரையும் அனுசரித்துப் போ என்றுதான் அறிவுரைக்கப்பட்டதே தவிர… கவனமாயிரு… கணவனைக் கைக்குள் போட்டுக்கொள் என்று எந்த அறிவுரையும் வழங்கப்படவில்லை. அதனால்தானோ என்னவோ இன்னும் மூன்று வருடங்களில் வெள்ளிவிழா காணவிருக்கும் மண வாழ்க்கையில் இதுவரை புகுந்த வீட்டினருடன் எந்த பிணக்குமில்லாமல் நல்ல மருமகளாய் எல்லோருடைய அன்பையும் நன்மதிப்பையும் சம்பாதித்துவைத்திருக்க முடிகிறது. இதோ இந்தப் பதிவை வாசிக்கும் என் புகுந்த வீட்டு, பிறந்த வீட்டு உறவுகள் நிச்சயம் என்னை ஆமோதிப்பார்கள்.

புகுந்த வீட்டில் ஒவ்வொருவரிடமும் நான் காட்டும் அன்பு அதனினும் பன்மடங்கு என்னிடமே திருப்பித் தரப்படுவது எங்கள் உறவு பலப்பட முக்கியமான காரணமாக நினைக்கிறேன். எனக்குத் திருமணமான புதிதில் என் நாத்தனார்களை குடும்ப வழக்கப்படி அத்தாச்சி என்று அழைத்தேன். அக்கா என்றே அழை என்றார்கள். அந்த வார்த்தைகளுக்கான மதிப்பை இன்றுவரை உணர்ந்து அனுபவிக்கிறேன்.  என் நாத்தனார்களையும் ஓரகத்திகளையும் என் உடன்பிறந்த தமக்கைகளாகவே நினைக்கிறேன். அவர்களும் அப்படிதான் நினைக்கிறார்கள். உடன்பிறந்த சகோதரிகளை விடவும் ஒரு படி அதிகமாகவே பாசம் செலுத்துகிறார்கள்.

உறவுகளுக்குள் சில சமயங்களில் தவறான புரிதலினால் மனக்கிலேசங்கள் ஏற்படுவது இயற்கை. அதை ஊதி ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு பிரச்சனையைத் தீர்க்கவே முயல்கிறோம். எந்த சூழ்நிலையிலும் யாரும் எவரையும் ஒதுக்க நினைப்பதில்லை. இன்பத்திலும் துன்பத்திலும் எல்லோருமே ஒருமித்துப் பங்கு கொள்கிறோம்.

உறவுகளுக்குள் பந்தம், பாசம், மரியாதை இவற்றைத் தாண்டி நட்புமிருந்தால் உறவு இன்னும் பலப்படும். என் ஓரகத்திக்கும் எனக்கும் இடையில் இன்னதுதான் என்றில்லாமல் எவ்வளவோ கருத்துப் பரிமாற்றங்கள் நிகழும். சிறிய நாத்தனாரும் நானும் குடும்ப விவரங்கள் அல்லாது பொதுவிஷயங்களை ஏராளமாய்ப் பகிர்ந்துகொள்வோம். என் பெரிய நாத்தனாரிடம் உறவைத் தாண்டி இலக்கியம் குறித்தும் பதிவுலகம் குறித்தும் என்னால் ஒருமணி நேரத்துக்கும் மேலாக தொலைபேசியில் பேசமுடிகிறது. ஒவ்வொருவருடனும் பேசும்போது அவர்கள் இன்ன உறவு என்பதோ மூத்தவர்கள் என்பதோ எதுவும் மனத்தில் உறுத்தாமல் ஒரு உற்ற தோழியுடன் பேசுவது போன்ற உணர்வே தோன்றும். அப்படி நட்புணர்வுடன் கூடிய உறவுகள் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். தாயிடம் பகிரமுடியாத சங்கதிகளைக் கூட தாராளமாய் நான் என் புகுந்த வீட்டு உறவுகளிடம் பகிரமுடியும்.  

தானே கைம்பெண்ணான நிலையிலும் நிராதரவாய் நின்ற கைம்பெண் நாத்தனாரை அவருடைய கடைசி காலம் வரை வைத்துக் காப்பாற்றிய பெண்மணியையும், தாயும் மாமியாரும் பக்கம் பக்கம் அமர்ந்திருக்க, மாமியாரின் மடியில் உரிமையுடன் தலைவைத்துப் படுத்துக்கொள்ளும் மருமகளையும் கணவனுடன் பிறந்தவர்கள் ஏமாற்றி தம்மை சுரண்டுகிறார்கள் என்று தெரிந்தே அனுமதிக்கும் தாராள மனம் கொண்ட பெண்ணையும் அறியும் அதே சமயம் பெற்றவளுடனும் உடன் பிறந்தவர்களுடனும் பேசினால் தற்கொலை செய்துகொள்வேன் என்று கணவனை மிரட்டும் மனைவியையும் அறிவேன்.

குடும்ப உறவுகள் வலுப்படுவது பெண்களின் கையில்தான் இருக்கிறது என்று ஜிஎம்பி ஐயா சொல்வது ஒருவகையில் ஏற்கத்தக்கதுதான் என்றாலும் அதில் ஆண்களின் பங்கு எதுவுமே இல்லை என்று சொல்வதற்கில்லை.

நான் என் புகுந்த வீட்டாரிடம் எப்படி நடந்துகொள்கிறேனோ அதுபோலவே என் கணவர் என் பிறந்த வீட்டாரிடம் நடந்துகொள்கிறார். அதை நான் எதிர்பாராதபோதும் என்பதுதான் சிறப்பு. என் தம்பியை தன் சொந்த சகோதரனைப் போலவும் என் தாய் தந்தையை தன்னுடைய தாய் தந்தையைப் போலவும் மதிக்கிறார்… பாசம் காட்டுகிறார். உதாரணத்துக்கு ஒரு விஷயம் சொல்கிறேன்.. என் தம்பிக்கு திருமணம் முடிவான சமயம். என் கணவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?

"உனக்கு நாத்தனார்களாகிய என் அக்காக்கள் உன்னிடம் எப்படி பாசமாக பரிவாக நடந்துகொள்கிறார்களோ அப்படியே நீயும் வரவிருக்கும் உன் தம்பி மனைவியிடம் பாசமும் பரிவுமாக நடந்துகொள்ளவேண்டும். அந்தப்பெண் உன்னை விடவும் சிறிய பெண். தவறு செய்தால் நீ பெரியவள் என்ற முறையில் அனுசரித்துப்போ. எந்த சூழ்நிலையிலும் உங்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள். அது உன் பிறந்த வீட்டிலுள்ள மற்ற உறவுகளுக்குள்ளும் ஒரு ஆரோக்கியமான பிணைப்பை உருவாக்கும்."

எந்த அளவுக்கு என் குடும்பத்தின்மேல் அவருக்கு அக்கறை இருந்திருந்தால் இப்படி சொல்லத் தோன்றும்? என் தம்பி மனைவி என்னை அத்தாச்சி என்றபோது நானும் என்னை அக்கா என்றே அழைக்கச்செய்தேன். இன்றுவரை என் சகோதரியாகவே பார்க்கிறேன். எங்கள் இருவருக்குள்ளும் உள்ள நட்பும் பாசமும் இந்த பதினைந்து வருடங்களில் பலப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்வேன்.

நான் வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னால் உற்சாகமாக என்னை வரவேற்க தயாராகிவிடுகிறார் தம்பி மனைவி. எப்போது வருவேன் என்று எதிர்பார்த்திருக்கிறார். கணவனின் உறவுகள் வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டிருந்தால் எந்தப் பெண்ணாவது இப்படி ஆர்வத்துடன் நாத்தனாரை வரவேற்கக் காத்திருப்பாரா?

இந்தியாவிலிருக்கும்போது குழந்தைகளுக்கு காலாண்டு அரையாண்டு விடுமுறைகளில் தாய்வீட்டுக்குப் போவதற்கு நிகராக மாமியார் வீட்டுக்கு நானும் பிள்ளைகளும் குஷியாகக் கிளம்பிவிடுவோம். என்னைப் பலரும் கிண்டல் செய்திருக்கிறார்கள்… மாமியார் வீட்டுக்கும் நாத்தனார் வீடுகளுக்கும் போக இவ்வளவு ஆர்வத்துடன் கிளம்பும் ஓரே ஆள் நீங்களாகத்தான் இருக்கமுடியும் என்று. என்ன செய்ய? என் தாயின் வளர்ப்பு அது. பிறந்த வீட்டை விடவும் புகுந்த வீட்டுக்கு மரியாதை செய்யும்படி சொன்ன அறிவுரையின் காரணம் அது.

ஒருவேளை எதிர்மறையாய் அறிவுறுத்தப்படும் பெண்களின் செயல்பாடுகள் உறவுகளில் விரிசல் விழக் காரணமாயிருக்கலாம். அதைப் பற்றிய கருத்துகள் என்னிடமில்லை. ஏனெனில் என்னுடைய அனுபவத்தில் பிறந்த வீடு புகுந்த வீடு என்ற பாகுபாடில்லாமல் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழும் பெண்களைத்தான் வெகுவாக நான் பார்த்திருக்கிறேன். 


31 comments:

  1. //என் பெரிய நாத்தனாரிடம் உறவைத் தாண்டி இலக்கியம் குறித்தும் பதிவுலகம் குறித்தும் என்னால் ஒருமணி நேரத்துக்கும் மேலாக தொலைபேசியில் பேசமுடிகிறது. ஒவ்வொருவருடனும் பேசும்போது அவர்கள் இன்ன உறவு என்பதோ மூத்தவர்கள் என்பதோ எதுவும் மனத்தில் உறுத்தாமல் ஒரு உற்ற தோழியுடன் பேசுவது போன்ற உணர்வே தோன்றும். அப்படி நட்புணர்வுடன் கூடிய உறவுகள் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். தாயிடம் பகிரமுடியாத சங்கதிகளைக் கூட தாராளமாய் நான் என் புகுந்த வீட்டு உறவுகளிடம் பகிரமுடியும். //

    இருவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. இருவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நல் வாழ்த்துகள்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
    Replies
    1. ஒரு பொருளைப்பற்றி விரிவாக அலசி ஆராய்ந்து வித்யாசமான முறையில் கருத்தளிப்பதில் நீங்களும் தங்கள் நாத்தனார் அவர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களே இல்லை என்பதை நன்கு நான் அனுபவித்து உணர்ந்துள்ளதில் எனக்கு மேலும் மேலும் வியப்போ வியப்பு தான் ஏற்பட்டது. :)))))

      என் மனைவியும் அவளின் பெரிய நாத்தனார் அவர்களும் இன்றும் அதுபோலவே மிகுந்த ஒற்றுமையுடன் இருந்து வருகிறார்கள். இருவரும் பேச ஆரம்பித்தால் விடிய விடிய நேரம் காலம் தெரியாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள். :))))))

      அவ்வளவு ஒரு தனிப்பட்ட பாசம் + பிரியம். :))))) இதெல்லாம் உலகத்தில் நிகழும் சில அபூர்வ நிகழ்வுகள் என்று நான் அடிக்கடி நினைத்துப் பெருமைப்படுவது உண்டு.

      - VGK

      Delete
    2. தங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி கோபு சார். தங்களுடைய மனைவிக்கும் தங்கள் தமக்கையாருக்கும் உள்ள உறவைப் பற்றியும் அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள். மிகவும் மகிழ்வாக உள்ளது. இருவரோடு தங்களுக்கும் என் இனிய வாழ்த்துகள்.

      Delete
  2. உங்கள் உறவின் உன்னதங்கள் மகிழ்ச்சி தருகிறது. நான் உறவுகள் பற்றி எழுதி இருந்தது என் அனுபவத்தின் விளைவு அல்ல. வாழ்க்கையை ஒரு மூன்றாவது மனிதனின் கோணத்தில் பார்த்து எழுதியதே. சொந்த வாழ்க்கை அனுபவங்கள் வேறு / நடைமுறையில் விருப்பு வெறுப்பு இல்லாமல் அணுகுவது வேறு. வாழ்க்கையின் கண்ணோட்டம் அவரவர் வாழ்க்கையை வாழ்வதன் அடிப்படையிலேயேஇருக்கிறது என்பது உங்கள் பதிவினைப் படித்துத் தெரிந்து கொண்டேன் உங்கள் கருத்துக்களை மிகவும் நேர்மையாகப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா. அனுபவம் என்று குறிப்பிடப்பட்டதை சொந்த அனுபவம் என்று மட்டுமே கொள்ளவேண்டியதில்லை.. கண்ட கேட்டறிந்த அனுபவங்களாகவும் இருக்கலாம் அல்லவா? என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் என் கருத்துகளை எழுதியிருந்தேன். இப்படியொரு வாய்ப்பினை அளித்த தங்களுக்கு மிகவும் நன்றி ஐயா.

      Delete
  3. இந்தப் பகுதிக்குத் தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கும் படம் ரொம்பவும் அர்த்தபூர்வமானது. படம் வெளிப்படுத்தும் கருத்து மொத்த பதிவின் வெளிப்பாடாகவே திகழ்கிறது! சூப்பர்! தங்களின் ஆகச்சிறந்த திறமைக்கும் உணர்வு ஒன்றிய அந்த ஆற்றலுக்கும் என் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. உறவுகளைக் கையாள்வது அவரவரைப் பொறுத்தது என்று காட்டவே இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்தேன். மலரை செடியிலேயே ரசிப்பதும் பறித்து கையில் வைத்துக்கொண்டு ரசிப்பதும், தான் சூடுவதும் பிறருக்கு சூட்டுவதும் அல்லாது பிய்த்துப் போடுவதும் ஒருவிதமான மனநிலைதானே... குறிப்பால் உணர்த்தியிருந்தேன். அழகாய்க் குறிப்பிட்டு நிறைவளித்துவிட்டீர்கள். நன்றி ஜீவி சார்.

      Delete
  4. உறவுகளின் உன்னதங்களை அழகாய் எழுதி விட்டீர்கள் கீதமஞ்சரி.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கோமதி மேடம்.

      Delete
  5. Replies
    1. தங்கள் வருகைக்கும் இரண்டு பதிவுகளையும் வாசித்து ரசித்தமைக்கும் மிக்க நன்றி டீச்சர்.

      Delete
  6. அருமையாக எழுதியிருக்கிறீர்கள் கீதமஞ்சரி! உன்னதமான உறவுகளையும் உயர்ந்த உபதேசங்களையும் உங்களைப்போல் எல்லோரும் வாய்க்கப்பெற்ற‌வர்கள் அல்ல. அந்த வகையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். ஆண்களுக்கும் இதில் பங்கு இருக்கிறதென்றாலும் பெண்களுக்குத்தான் இந்த வாழ்க்கையை அழகாக நடத்திச்செல்வதில் பெரும் பங்கு இருக்கிறது. கயிற்றின் மேல் நடப்பது போல சமையலறையில் தொடங்கி எல்லாவற்றிலும் எல்லோரிடத்திலும் குடும்ப ஒற்றுமைக்காக பாலன்ஸ் பண்ண‌ வேன்டும். அழகாய் பாலன்ஸ் பண்ணி அனைவருடைய அன்பையும் சம்பாதித்திருப்பதற்கு என் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய அழகான கருத்துரையும் வாழ்த்துகளும் கண்டு மிகவும் மகிழ்ச்சி. நன்றி மேடம்.

      Delete
  7. உறவுகளின் உன்னதங்கள் அழகாய் தங்களின் எழுத்தில்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  8. மிக இயல்பாகச் சொல்லிப் போனவிதமும்
    பதிவின் மையக் கருத்தும் அருமை
    எழுத்து வெறும் பண்டிதத் திறனால் மட்டும்
    சிறப்பதில்லை
    உள்ளத்தில் உள்ளதே வாக்கினில் இயல்பாய் வரும்
    பதிவைப் படிக்க தங்கள் மீது கொண்டிருக்கும்
    மதிப்பு இன்னும் கூடிப் போனது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நுணுக்கமான மன உணர்வுகளை வெளிப்படுத்தும் பதிவரான தங்களிடமிருந்து இப்படியொரு பாராட்டைப் பெற்றதே மனம் நிறைக்கிறது. மிக்க நன்றி ரமணி சார்.

      Delete
  9. உன்னதமான உறவுகள் பற்றி உயர்வான பகிர்வுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றி மேடம்.

      Delete
  10. //புகுந்த வீட்டில் ஒவ்வொருவரிடமும் நான் காட்டும் அன்பு அதனினும் பன்மடங்கு என்னிடமே திருப்பித் தரப்படுவது எங்கள் உறவு பலப்பட முக்கியமான காரணமாக நினைக்கிறேன். // இது மிகவும் உண்மை கீதமஞ்சரி..ஒரு வழி அன்பு அவ்வளவு நெருக்கம் கொடுப்பதில்லை. உங்களைப் போலவே எனக்கும் பொறுமையாக இரு, மாமியார், மாமனார் , அம்மா அப்பா மாதிரிதான் என்று எனக்கும் சொன்னார்கள். நீங்கள் கொடுத்துவைத்தவர் என்று சொல்லும் அதே நேரத்தில் உங்கள் உறவுகளும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் சொல்கிறேன்..மகிழ்ச்சி!
    வாழ்த்துகள் கீதமஞ்சரி!

    ReplyDelete
    Replies
    1. ஆம்.. பெரும்பாலும் பெண்ணை திருமணம் செய்துகொடுக்கும்போது அப்படி சொல்லித்தான் அனுப்பிவைக்கிறார்கள். ஒருசிலர் வேண்டுமானால் மாறுபட்டு சொல்லியனுப்பலாம். ஆனால் பொதுவாக பெண்களை பொறுமையாக இரு.. அனுசரித்துப் போ என்றுதான் சொல்கிறார்கள். உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி கிரேஸ்.

      Delete
  11. அருமை...

    நமது அணுகுமுறை பொறுத்து தான் எதிர்ப்பார்க்கவும் வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. மரியாதையைக் கொடுத்து மரியாதையைப் பெறுவது போல் அன்பைக் கொடுத்து அன்பைப் பெறமுடியும். அதைத்தான் செய்கிறோம். அதனால்தான் வாழ்க்கையும் ருசிக்கிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  12. உங்களுக்கும் உதவலாம் :

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Speed-Wisdom-9.html

    ReplyDelete
    Replies
    1. புக்மார்க் செய்துகொண்டேன். மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  13. Replies
    1. பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி வெங்கட்.

      Delete
  14. வாழ்வின் இன்றைய தேவை குறித்து மிகவும் இயல்பாகப் பகிர்ந்தமைக்கு பாராட்டுகள். முடிந்தவரை எதிர்மறை நினைவுகள் மற்றும் கருத்துக்களை தவிர்த்துவிட்டு நண்பர்களையும், உறவினர்களையும் எதிர்கொள்ளும்போது வாழ்க்கை மிகவும் நிம்மதியைத் தரும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா. தங்கள் வருகைக்கும் அழகிய பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.