23 February 2014

குளிரவன் போவதெங்கே?




தோகுளிரவன்!
தூரத்து மலைமுகட்டு மரங்களுக்குப் பின்னே
மெளனமாய்ப் பதுங்கி நழுவிப் போவதெங்கே?

வசந்தமென்னும் பருவப்பெண் பச்சையம் பூசி
ஓடைக் கண்ணாடியில் ஒப்பனை செய்வதை
வழியில் பார்த்தவன், வெளிறிய தன் முகத்தை
வேறுதிசையில் திருப்பிக்கொண்டு
திரும்பிப் பாராமல் போகிறான்.

ஆனால் எனக்குத் தெரியவேண்டும்
அவன் சென்ற வழி எதுவென்று
அவனைக் கண்டுபிடிக்க இதுவரை
எவரும் முயன்றாராவென்று

இடிமுழக்கத்தால் விண்ணுக்கு இழுத்துவரப்பட்டு
மேகப் பஞ்சணையில் துஞ்சவைக்கப்பட்டிருக்கிறானோ?
சமுத்திரத்துக்குள் சென்றிருப்பானாயின்
சதிராடும் அலைகளால் சுழற்றியெறியப்பட்டிருப்பானோ?

அலைக்கழிக்கப்பட்டு ஆறாத ரணங்களுடன்
உயிர் ஊசலாடியபடி கரையோரம் ஒதுங்கி
காட்சியளிக்கிறானா மீனவர் எவருக்கேனும்?
ஆளரவமற்றத் தீவொன்றில் அசைவற்று
விறைத்துக் கிடக்கிறானா எங்கேனும்?

சாம்பல் நிறத் தலையைக் கவிழ்ந்தபடி
நித்தமும் சூரியன் மறையும் நீலமலைகளுக்கப்பால்
எவருமறியாப் பொழுதுகளில் சென்று
கல்லறையொன்றைத் தோண்டுகிறானோ?

தன் வெளிர்வண்ண ஆடையுடன்
தானே வெட்டிய கல்லறைக்குழிக்குள்
கரங்களை மார்பில் கோர்த்தபடி படுத்துக்கொண்டு
என் மறைவுக்காய் கண்ணீர் சிந்துவார் யார்?
மாறாய் மகிழுமே வசந்தத்தின் வருகையால் ஊர்!
என்றெண்ணி மருகுகிறானோ?

ஐயோகுளிரவனே
என் கண்கள் சிந்துகின்றனவே கண்ணீர்,
உனக்கு மகிழ்வளிக்கப் போதுமானதா
ஒரு குழந்தையின் கண்ணீர்?

வசந்தம் தொலைவில் வரும்போதே
உன் ஆடைநுனியை இறுகப் பற்றிக்கொண்டு
உன்னை அழைத்தபடியே தொடர்ந்தேன்.
உன் கரங்களில் முத்தமிடுகிறேன்.
உன் வேதனையைப் புரிந்துகொண்டேன்,
தொய்ந்துபோன உன் தலையை இதமாய்த் தடவுகிறேன்.

…. என்னால் பாட இயலாது
குளிரவன் இங்கே வெளிறிச் சாகிற வேளையில்
வசந்த கானமிசைத்திட என்னால் எப்படியியலும்?

<><><><><><><><><><>


(Where does the Winter go? By Ethel Turner) 
10/2/14  அன்று வல்லமை இதழில் வெளியானது.

28 comments:

  1. ஆஹா ரொம்பக் குளிருதோ ?...:))))
    ஆதவன் வருவான்
    அருள் ஒளி தருவான்
    மேதினியில் நலம் வாழ மேன்மை
    கொண்டு பாடடி என் தோழி :)
    வாழ்த்துக்கள் தோழி சிறப்பான
    உணர்சிக் கவிதை வரிகளுக்கு என்
    தளத்திலே சூடான பகிர்வு போட்டுள்ளேன்
    வந்து குளிரைப் போக்கி மகிழுங்கள் .
    த .ம 1

    ReplyDelete
  2. குளிரவன் & வார்த்தையே அழகா, ரசனையா இருக்குது! என்ன அழகா பெயர்க்கறீங்க தமிழ்ல? நானும் ஒரு சிறுவனாயிட்டேன் படிச்சு முடிக்கறபோது!

    ReplyDelete
  3. குளிரவன் படிக்கும் போதே குளிர வைக்குறான் ...!

    வல்லமை வெளியீட்டுக்கு இனிய வாழ்த்துகள்..!

    ReplyDelete
  4. மிக அருமை கீதமஞ்சரி! அழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள்..வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. இன்னும் எத்தனை திறமைகளை தான் ஒளித்துவைத்திருக்கிரீர்கள்.
    உண்மையில் உங்கள் மொழிபெயர்ப்புக்கு நான் பரம ரசிகை சகோ!
    //ஓ…. என்னால் பாட இயலாது…
    குளிரவன் இங்கே வெளிறிச் சாகிற வேளையில்
    வசந்த கானமிசைத்திட என்னால் எப்படியியலும்?//
    கிளாஸ்!

    ReplyDelete
  6. ஆகா... அருமையான தமிழாக்கம்... வல்லமை இதழில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. குளிரவன் படிக்கும் போதே குளிர வைக்குறான் ...!
    வல்லமை வெளியீட்டுக்கு இனிய வாழ்த்துகள்..!
    அருமையான தமிழாக்கம் !

    //ஓ…. என்னால் பாட இயலாது…
    குளிரவன் இங்கே வெளிறிச் சாகிற வேளையில்
    வசந்த கானமிசைத்திட என்னால் எப்படியியலும்?//

    உன்னை ஒன்று கேட்பேன் ...... உண்மை சொல்ல வேண்டும் ......
    என்னைப்பாடச் சொன்னால் ... என்ன பாடத்தோன்றும் ? ..............

    என்ற எனக்கு மிகவும் பிடித்தமான திரைப்படப்பாடல் போல முடித்துள்ளது வெகு அழகு ! ;)))))

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  8. A fine selection and rendition. Wishes!

    ReplyDelete
  9. குளிரவனா!? ஹே! ஆண் குழந்தைக்கு பெயர் சூட்ட அழகான தமிழ் பெயர் கிடைத்தது.

    ReplyDelete
  10. Anonymous23/2/14 18:47

    மிக வித்தியாசமான கருவுடைய கவிதை.
    ஈதெல் ரேனருக்கு மிகப்பெரிய நன்றி.
    தங்கள் திறமைக்கும் இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. அழகு!

    வசந்தத்தை வரவேற்க எல்லோரும் எழுகின்ற போது அதற்காய் தன் இடத்தை விட்டு நகரும் குளிரவனைப் பார்த்து சுகமா நீ என விசாரிக்கும் ஒரு குழந்தை உள்ளம் இந்த கவி மனம்.

    தொட்ட இடம் ஜொலிக்கிறது. பாராட்டுக்கள் கீதா.

    குளிரவன் ஒரு இடமும் போகவில்லை. அப்படியே தற்காலிகமாய் தப்பி உலகின் மறு பக்க உருண்டைக்கு வந்து விட்டார். அங்கு மீண்டும் வருவார்.
    தப்பிச் செல்ல முடியுமா என்ன?

    கவிமனம் கவலை கொள்ளற்க!

    ReplyDelete
  12. வசந்தத்தை வரவேற்றுப் பாடிய கவிதைகளைத் தான் இதுவரைப் படித்திருக்கிறோம். ஆனால் முதல் முறையாக குளிர்காலத்தைப் பற்றிய கவிதை! எல்லோரும் சொல்லியிருப்பது போல் குளிரவன் அழகான கண்டுபிடிப்பு! தமிழுக்குப் புது வரவு! மொழிபெயர்ப்பும் அருமை! பாராட்டுக்கள் கீதா!

    ReplyDelete
  13. மிகச் சிறப்பாய் இருக்கிறது உங்கள் கவிதை.....

    தில்லியில் ஒவ்வொரு குளிர் முடியும் போகும் போதும் மனதில் கொஞ்சம் சோகம் - இனிதான குளிர் முடிந்து கடும் கோடையில் காயப்போகிறோமே என....

    ReplyDelete
  14. அருமையான மொழிபெயர்ப்பு!

    ReplyDelete
  15. @அம்பாளடியாள் வலைத்தளம்

    வந்தேன், ரசித்தேன். உடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  16. @பால கணேஷ்

    winter ஐ ஒரு ஆண்பாலாக கவிஞர் உருவகப்படுத்தியிருந்தார். யோசித்ததில் குளிரவன் பொருத்தமாக இருப்பது போல் தோன்றியது. எழுதிவிட்டேன். உங்கள் ரசனைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கணேஷ்.

    ReplyDelete
  17. @இராஜராஜேஸ்வரி

    வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் அனபான நன்றி மேடம்.

    ReplyDelete
  18. @தேன்மதுரத்தமிழ் கிரேஸ்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி கிரேஸ்.

    ReplyDelete
  19. @Mythily kasthuri rengan

    உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு அன்பான நன்றி மைதிலி.

    ReplyDelete
  20. @திண்டுக்கல் தனபாலன்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.

    ReplyDelete
  21. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்களுக்குப் பிடித்தப் பாடலுடன் ஒப்புமைப் படுத்தி இட்ட தங்கள் கருத்துரை மனம் கவர்ந்தது. மிக்க நன்றி கோபு சார்.

    ReplyDelete
  22. @ராஜி

    உங்களுக்கும் குளிரவன் என்ற பெயர் பிடித்திருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி ராஜி. வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  23. @kovaikkavi
    இங்கும் முகப்புத்தகத்திலும் கருத்துரையிட்டு தாங்கள் தரும் ஊக்கத்துக்கு அன்பான நன்றி தோழி.

    ReplyDelete
  24. @மணிமேகலா

    அழகான கருத்துப் பின்னூட்டம். மனம் நிறைந்த நன்றி மணிமேகலா.

    ReplyDelete
  25. @Kalayarassy G

    இந்த வித்தியாசம்தான் கவிதையை மொழிபெயர்க்கத் தூண்டியது. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா.

    ReplyDelete
  26. @வெங்கட் நாகராஜ்

    எதுவுமே நம்மிடம் இருக்கும்வரை அதன் மதிப்பு தெரியாது என்று சொல்வது எவ்வளவு உண்மை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

    ReplyDelete
  27. @கே. பி. ஜனா...

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.