குழந்தைகளுக்குள் சண்டை என்பது சாதாரண விஷயம். அதைச் சில சமயங்களில் பெற்றோர் கண்டுகொள்வதும் கிடையாது. ஆனால் க்ரேட் ஈக்ரெட் (Great Egret) என்னும் பறவையோ ஒருபடி மேலே போய் குழந்தைகள் சண்டை கொலையில் முடிவதைக் கூட கண்டும் காணாமல் விட்டுவிடுகிறது. சொல்லப்போனால் எவனொருவன் மிஞ்சுகிறானோ அவனை வளர்ப்பதே தன் வாழ்வியல் கடமை என்பது போல் காத்திருக்கிறது. காரணம் உணவுப்பற்றாக்குறை! பஞ்ச காலத்தில் கிடைக்கும் துளி உணவை, பிள்ளைகள் அனைத்திற்கும் பங்கீடு செய்து, அத்தனையையும் நோஞ்சான்களாக வளர்க்க விரும்பாத அத்தாய்ப்பறவை, மற்ற உடன்பிறப்புகளைக் கொன்று வெற்றி வாகை சூடிய குஞ்சுக்கு, இருக்கும் உணவை முழுமையாய்த் தந்து வல்லாளனாக வாழ்விக்க முனைகிறது. (ஆதாரம்: Exploring The Secrets Of Nature - Reader's Digest)
என்னதான் மரபணுவில் ஊறிய குணமாக இருந்தாலும் கூட்டிலிருந்து வெளித்தள்ளப்பட்டு, துடிதுடித்துச் சாகும் குழந்தைக்காக அத்தாயின் இதயம், இம்மியளவும் இரங்காமலா இருக்கக் கூடும்? அந்த எண்ணம் விதைத்த (க)விதை இது!
என்னை மன்னிப்பாயா, என் கண்ணே?
ஏதும் செய்ய இயலாதிருக்கும்
என் நிலை அறிவாயா மகனே?
எளியோரை வலியோர் ஏறி மிதிப்பரென்று
என்றைக்கோ எழுதப்பட்டுவிட்டது
நம் இரத்தத்தில்!
அதனை நிரூபிக்கும் முயற்சிகள்
காலங்காலமாய்த் தொடர்ந்திருக்க,
கண்முன்னே காட்சியளிக்கிறாய்
கண்ணே நீயும் ஒரு சான்றாய்!
உனக்கீடான உடன்பிறப்பை
வெல்ல இயலாத உன்னால்
எங்ஙனம் எதிர்கொள்ள இயலும்,
எதிரிகளைப் பின்னால்?
வாழ்க்கைப் போராட்டத்தில்
வெல்வதற்கான வாய்ப்பைத்
தவறவிட்டாய் கண்மணி!
வாழ்நாள் யாவும்
வஞ்சகரிடம் அடிபட்டு, மிதிபட்டு
பயந்து பயந்து வாழ்ந்து,
வாழ்வைத் தொலைப்பதினும்
இயன்றவரைப் போராடித்தோற்றது
இனிதென்னும் எண்ணம் தாங்கி
அமைதியாய் இறந்துவிடு!
உன்னைப் புறந்தள்ளியதால்
உன் அண்னன் செய்தது
சரியல்லவென்று
சாபமிடமாட்டேன் அவனை!
சகோதரம் அழித்ததால்தானே இன்று
சாகாமலிருக்கிறாள் உன் அன்னை?
கொல்வதும் வெல்வதும் நம்
குலத்தின் குணமன்றோ?
குருதி விட்டு ஒழித்தல்
இறுதிவரை இயலாததன்றோ?
என் வருத்தமெல்லாம்
இப்படியான உன் முடிவை
அணுவணுவாய்த் துடிப்பதை,
நான் அருகிருந்து காணநேரிட்ட
அவலம் பற்றியது மட்டுமே!
கண்ணிரண்டும் புண்ணிரண்டாயிருக்க,
கட்டுப்பாடுகளின் பிடியில்
கட்டுண்டு தவிக்கிறேன் கண்ணே…
உன் முடிவு இப்படியன்றி
வேறெப்படியேனும் இருந்திருக்கக்கூடாதா?
நானொரு மலட்டுப்பறவையாய்
இருந்திருக்கலாம்;
அல்லது...
இட்ட முட்டைகளுள் ஒன்று
கூழ்முட்டையாய்ப் போயிருக்கலாம்;
அன்றி...
வேறோர் வான்பறவை வந்து
வட்டமிட்டு உன்னை
வாயினாற்கவ்விச் சென்றிருக்கலாம்!
இப்படி எதுவும் நிகழாமல்
இன்னமும் நீ உறங்காமல்
என் கண் முன்னே நீயும்
கதறிக்கொண்டிருக்க...
கையாலாகாதத் தாயாய் நானும்
கண்ணீரோடு காத்திருக்கிறேன்,
காலதேவன் சடுதியில் வந்து
கையோடு உன்னைக்
கொண்டுபோகமாட்டானாவென்று!
மறுபிறவியென்று ஒன்று உண்டெனில்
மகனே, நீ
குயிற்குஞ்சுகளுக்கும் சோறூட்டும்
காகத்தின் மகவாய்ப் பிறந்து,
கருணை கொண்ட தாயின் சுகமுணர் என்றே
வாழ்த்தி உன்னை
வழியனுப்புகிறேன், கண்ணே!
அருமையான படைப்பு
ReplyDeleteமலர்போல் மெல்லிய குணத்தோடு
பிறக்கிற மனிதர்களை காலமும் உலகமும்
கடின மனதுக்காரர்களாக்கிப் போகிறது
அந்தப் பறவைக்கோ இரத்தத்துடனேயே
அரக்கத்தனம் கலந்து இயற்கை படைத்துள்ளது
அதற்குள்ளும் எப்படியும் ஈரம் இருக்கவே செய்யும்
என்கிற தாய்மை குணத்தோடு தாங்கள் படைத்துள்ள பதிவு
அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
இந்தப் பறவை பற்றிய தகவல் எனக்குப் புதுசும்மா. பறவைக்குள்ளேயும் தாய்மைக் குணம் இருக்கும் என்று நம்பி, ஈர மனதுடன் நீங்கள் எழுதிய இந்தக் கவிதைக்கு என் சல்யூட்! (வேறு வார்த்தைகளில்லை என்னிடம்)
ReplyDeleteஅருமையிலும் அருமை.. என்னதான் இருந்தாலும் அந்த தாய்ப்பறவைக்கும் பாசம் இல்லாமலா போயிரும்.. அதை வடித்தெடுத்த கவிதை மிக அழகு.
ReplyDeleteஒரு தாயின் மன நிலையில் எழுதப்பட்ட கவிதை . மனம் தவிக்கிறது அந்த தாய்ப்பறவையின் நிலை எண்ணி.
ReplyDeleteSurvival of the fittest
என்னும் இயற்கையின் நியதி பற்றிய கவிதையில் மிளிரும் தாய்மை.
அருமையிலும் அருமை
அருமை சகோதரி,
ReplyDeleteபறவை இனத்தில் தன் குஞ்சுகளை தானே சாப்பிடும்
பறவைகளும் உள்ளன. குஞ்சுகள் ஒன்றுக்கொன்று அடித்துக்கொண்டு
சாகும் வகையும் உண்டு.
அந்த தாய்ப் பறைவையின் உள்மனதை ஆய்வு செய்தமைக்கு
பலமான கைதட்டல்கள்.
இனத்தின் குணம்
மனத்தில் இல்லாத தாய்ப்பறவை,
தன் சகோதரர்களை அழிக்கையில்
புரியாதது.. தன் குஞ்சுகள் சாகையில் புரிகிறது.
இதுதான் ரத்த சம்பந்தம்.
அடுத்த பிறவியில் காகத்தின் குஞ்சியாய் பிறக்கச் சொல்கையில்
பறைவைகளிடத்தும் அடுத்த இனத்தை போற்றும் பாங்கை கண்டு ரசித்தேன்.
இன்றைய மனிதர்களிடத்தில் இல்லையே.
அருமையான ஆக்கம் சகோதரி. மனதை நெகிழ்வித்தது.
தமிழ்மணம் 4
ReplyDelete//காரணம் உணவுப்பற்றாக்குறை! பஞ்ச காலத்தில் கிடைக்கும் துளி உணவை, பிள்ளைகள் அனைத்திற்கும் பங்கீடு செய்து, அத்தனையையும் நோஞ்சான்களாக வளர்க்க விரும்பாத அத்தாய்ப்பறவை, மற்ற உடன்பிறப்புகளைக் கொன்று வெற்றி வாகை சூடிய குஞ்சுக்கு, இருக்கும் உணவை முழுமையாய்த் தந்து வல்லாளனாக வாழ்விக்க முனைகிறது.//
ReplyDeleteகிரேட் ஈக்ரெட் பறவை பற்றிய தகவல் அறியத் தந்தமைக்கு நன்றி!
//காகத்தின் மகவாய்ப் பிறந்து,
கருணை கொண்ட தாயின் சுகமுணர் //
தாய்மையில் நனைந்த வரிகள்!
கீதா...நீங்களே தாய்ப்பறவையாக இருந்து எழுதிய வரிகள்.தாய்மையால் மட்டுமே இப்படிச் சிந்திக்க முடிகிறது !
ReplyDeleteபடித்ததும் நெஞ்சை என்னவோ செய்தது. வரிகளில் தாய்மையின் உணர்வுகள் கொப்பளிக்கிறது ஆற்றாமையால்.
ReplyDeleteஅந்த பறவைக்கு அது இயல்பு எனினும்
ReplyDeleteபறவயினுள் உங்களைப் புகுத்திப் பார்த்த
உங்களின் அன்புணர்வு லயிப்பதற்க்குரியது
பறவை பேசுவதானால் கவிதை அழகு,
உங்களின் கவிதை எனில் சற்று அடர்வு குறைவு.
-இயற்கைசிவம்
எளியோரைத் தாக்கி வலியோரை வாழ்த்தும் உலகம்.
ReplyDeleteபழைய பாடல்.
உங்கள் கவிதை வயிற்றைக் கலக்குகிறது.தாய்மையின் வலியை வடிவத்தை உங்களுள் புகுத்தி மனத்திலிருந்து வந்திருக்கும்
வரிகள்.
வார்த்தைகளும் அர்த்தங்களும் அருமை.
ReplyDeleteஇன்னைக்கு ஒரு வார்த்தையை உங்கள் கவிதையில் தெரிஞ்சுகிட்டேன்.
.இதுவரை கூமுட்டைன்னுதான் கேள்விப்பட்டிருக்கேன். அது கூழ்முட்டை{யா} .
கோபம் /சிரிக்காதீங்க.
அழகிய விமர்சனத்துடன் முதல் பின்னூட்டமிட்டு ஊக்கமளிப்பதற்கும், தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.
ReplyDelete@ கணேஷ்,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கணேஷ் சார். குறிப்பிட்டுள்ள புத்தகம் படிக்கும்வரை எனக்கும் இத்தகவல் புதிதுதான்.
@அமைதிச்சாரல்,
ReplyDeleteஅழகானப் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி அமைதிச்சாரல்.
@சிவகுமாரன்,
ReplyDeleteவல்லாளன் வாழ்வான் என்ற இயற்கை நியதியின் அடிப்படையில் அப்பறவைகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. பார்க்கும் நாம்தான் தவித்துப் போகிறோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவகுமாரன்.
@மகேந்திரன்,
ReplyDeleteமிக அழகான ஆழமான பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். மனம் பாதித்ததை வார்த்தைகளில் கொண்டுவர முயன்றதன் விளைவே இது. த.ம. வாக்குக்கும் மிக்க நன்றி.
@ nilaamaghal
ReplyDeleteவருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் மிகவும் நன்றி நிலாமகள்.
@ஹேமா,
ReplyDeleteஅழகானப் பின்னூட்டமிட்டு ஊக்கமளிப்பதற்கு நன்றி ஹேமா.
@ அன்புடன் மலிக்கா,
ReplyDeleteவருகைக்கும் மனம் தொட்ட கருத்துரைக்கும் மிகவும் நன்றி மலிக்கா.
@ இயற்கைசிவம்,
ReplyDeleteஎன் கவிதைகள் பற்றிய உங்கள் கூரிய அவதானிப்பு என்னை மிகவும் வியக்கவைக்கிறது. இந்த இரண்டு வருடங்களில் என் எழுத்தின் வளர்ச்சி பற்றி அறிந்த இன்னும் பலரின் விமர்சனங்களோடு இதையும் மகிழ்வுடன் ஏற்கிறேன். காரணம், இது என் ஆரம்பகால எழுத்தின் அடையாளம்! மிக மிக நன்றி.
@வல்லிசிம்ஹன்,
ReplyDeleteஉங்கள் பாராட்டும் விமர்சனமும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
@ thirumathi bs sridhar
ReplyDeleteவாங்க ஆச்சி, இந்தக்கவிதை மூலம் ஒரு வார்த்தையைப் பற்றிய தெளிவு உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் அதற்கு நான்தான் சந்தோஷப்படணும். தமிழுக்குப் பெருமையல்லவா இது? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆச்சி.
உலகில் தாய்மை தான் மிகவும் உன்னதமாகப் போற்றப்படுகின்றது. ஆனால் நம் தமிழ் நாட்டில் தான் பெற்ற பெண் குழந்தையைப் பிறந்தவுடன் நெல் மணி கொடுத்துக் கொல்லும் தாயும் இருக்கத் தானே செய்கிறாள்? அதற்கும் வறுமை தானே காரணம்? தன் மகள் பின்னாளில் சித்ரவதைப் பட்டுக் கொஞ்சங் கொஞ்சமாகச் சாவதற்குப் பதில் குழந்தையிலேயே கொன்று விடுவோம் என்று தான் மனதைக் கல்லாக்கிக் கொண்டு கொலைகாரியாகிறாள். அதைப் போலவே இப்பறவையும் செய்வதாக எனக்குத் தோன்றுகிறது.
ReplyDeleteஒரு தாய்ப் பறவையின் கோணத்தில் சிந்தித்துக் கவிதை எழுதிய்மைக்குப் பாராட்டுடன் வாழ்த்தும்.
மனதை உருக வைத்த கவிதை.
@ கலையரசி,
ReplyDeleteநம் தென்தமிழ்நாட்டில் மனம்பதற வைக்கும் பெண் சிசுக்கொலை பற்றிய பின்னணியில் இருக்கும் இயலாமை வேதனை தருவதாகவே உள்ளது. பெற்றவளின் கையாலாகாத நிலை இப்பறவையின் நிலையினும் கொடுமை.
தங்களது முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
///உன் முடிவு இப்படியன்றி
ReplyDeleteவேறெப்படியேனும் இருந்திருக்கக்கூடாதா?
நானொரு மலட்டுப்பறவையாய்
இருந்திருக்கலாம்;////
அவைகளின் நியதி அதுவே ஆயினும்...
அன்னை அல்லவா! அதனாலே
இப்படித் துடிக்கிறாள்....
அருமையானக் கவிதை..
இதயம் வருடியது.
பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரி..
தாய்மைக்கே உரிய இயல்பு ..
ReplyDeleteமிகவும் அருமையான வரிகள் .
@ தமிழ் விரும்பி
ReplyDeleteமுதல் வருகைக்கும் அழகான ஆழ்ந்த பின்னூட்டத்துக்கும் நன்றி தமிழ்விரும்பி.
முதல் வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் நன்றி சசிகலா.
ReplyDeleteமற்றவர்களின் சொல்லாத , சொல்ல முடியாத , எண்ணாத, எண்ண முடியாத
ReplyDeleteகருத்துக்களை கற்பனையில் கண்டு படைப்பவனே ஒரு சிறந்த கவிஞ்சன்.
உங்களின் கவிதையும் அவ்வாறே அருமை தோழி கீதாவே !
என்ன அழகாக வெளிக் கொணர்ந்து உள்ளீர்கள் அந்த பறைவையின்
கதறலை. இது முற்றிலும் உண்மைதான்.
முதல் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி தோழி.
ReplyDeleteவாழ்க்கைப் போராட்டத்தில்
ReplyDeleteவெல்வதற்கான வாய்ப்பைத்
தவறவிட்டாய் கண்மணி!
பெண் சிசு கொலையை நினைவூட்டியது..
தங்கள் வருகைக்கும் நெகிழ்வானக் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.
DeleteAYYO,,,,,!
ReplyDeleteENNA ORU NILAI!
SONNA VITHAM ARUMAI!
வருகைக்கும் நெகிழ்வானக் கருத்துக்கும் நன்றி சீனி.
Delete