20 December 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (28)



அந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் விக்னேஷின் வீடு, என்றுமில்லாத அதிசயமாய்  விருந்தினர்களால் நிறைந்திருந்தது. அஜய், அஷ்வத்தின் வரவு வழக்கத்துக்கு மாறான கலகலப்பை உண்டுபண்ணியிருந்தது. சுபாவை வைத்துக்கொள்வதில் இருவருக்குமிடையே எழுந்தபோட்டியை சுபாவே நடுவராய் இருந்து தீர்த்துவைத்தாள். நாகலட்சுமி, வித்யா, சுந்தரி, விக்னேஷ் இவர்களை வெவ்வேறு உணர்வுகள் முற்றுகையிட்டிருந்தன.
நாகலட்சுமி, இறந்தகால நினைவுகளுக்கும் எதிர்காலக் கனவுகளுக்கும் இடையில் அவ்வப்போது நிகழ்காலத்துக்கும் வந்து சென்றார். சுந்தரி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தாள். வித்யா தன் துக்கத்தை தற்காலிகமாய் மறக்க முயற்சி செய்துகொண்டிருந்தாள். விக்னேஷோ... பயத்தில் இருந்தான். இங்கே விக்னேஷின் பயத்துக்குக் காரணம் தாரா!
விருந்தினர் வருகைக்கு காரணம் இன்னும் சொல்லவில்லையே! இன்று விக்னேஷின் பிறந்தநாள். இந்தப் பிறந்தநாள் தனிச்சிறப்பைப் பெற பல காரணங்கள் இருந்தன. முக்கியமாய் அடுத்த இருபது நாளில் நாகலட்சுமிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான நாள் குறிக்கப்பட்டிருந்தது. நாகலட்சுமியின் அதீத மகிழ்வுக்கு அது மட்டும் காரணமல்ல; கனகவல்லியின் வரவும்தான்!
கனகவல்லியும் நாகலட்சுமியும் பால்யகால சிநேகிதிகள். குட்டைப் பாவாடைப் பருவம் முதல் தாவணிப் பருவம் வரை இணைந்தே கடந்தவர்கள்.
நாகலட்சுமியின் இல்லறவாழ்வும் மனநிலையும் ஒருசேர  சிதைந்துபோனபின், அவருக்கு  வைத்தியம் பார்ப்பதற்காகவும், விக்னேஷைப் படிக்கவைக்கவும் நாகலட்சுமியின் தந்தை நகரத்துக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின் நாகலட்சுமியின் வாழ்வு ஒரு சிறு வட்டத்துக்குள் அடங்கிவிட்டது.
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பின் எதிர்பாராத விதமாய் போனவாரம் கோயிலுக்குச் சென்றிருந்தபோது கனகவல்லியை சந்திக்க நேர்ந்தது.
அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்தபின் சுந்தரியின் வேண்டுகோளுக்கிணங்க, அவள் வேண்டுதலை நிறைவேற்றும்பொருட்டு அருகிலிருந்த சிவன் கோவிலுக்கு சென்றிருந்தனர். அப்போது கனகவல்லியும், நாகலட்சுமியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பார்த்து மலைத்து நின்றிருந்தனர். நாகலட்சுமி தயக்கத்துடன், "நீங்க கனகாவா?" என்றதும், அவர் பிடித்துக்கொண்டார்.
"நீங்க....நீ... நாகுதானே? நான் அப்போ பிடிச்சு என் பொண்ணுகிட்ட சொல்லிட்டே இருந்தேன், உன்னைப் பார்த்தா நாகு மாதிரியே இருக்குன்னு! ஏய்... நல்லா இருக்கியா? வயசாயி... தலையெல்லாம் நரச்சி... ஆளே மாறிப் போயிட்டே...?"
"நீ மட்டும் என்னவாம்? தலையில டை அடிச்சிட்டா வயசு குறைஞ்சிடுமா என்ன? உனக்கும்தான் வயசாயிப் போச்சு! ஆமா! நீ என்ன இந்த ஊரிலா இருக்கே? இத்தன நாள் கோவிலுக்கு வந்திருக்கேன், உன்னைப் பாத்ததே இல்லையே?"
"இல்லயில்ல, வந்து ஒரு வாரம்தான் ஆவுது. இதுக்கு முன்னாடி திருச்சியில இருந்தோம். இது என் பொண்ணு தாரா. இவளுக்கு இங்க வேலை கிடைச்சிருக்கு. அதான் இங்க குடிவந்துட்டோம்!"
நாகலட்சுமியின் பார்வை தாராவிடம் நிலைத்தது. தங்க விக்கிரகம் போல் மட்டுமல்ல, உடலெங்கும் தங்கத்தாலே இழைத்துமிருந்தாள். ஒரு சாதாரண நாளில் கோவிலுக்கு வருவதற்கு தேவையான அளவீடை விஞ்சியிருந்தன அவளது ஒப்பனையும், ஆடையலங்காரமும். அவளது நளினமும், நாசுக்கும் நாகலட்சுமியை வெகுவாக ஈர்த்திருந்தன. சுந்தரி பிளந்த வாயை மூடாமல்அவளைப் பார்த்திருக்க, விக்னேஷோ, அவர்கள் பேசி முடித்துவரும்வரை குழந்தையுடன் வெளிவாயிலில் காத்திருந்தான்.
"உன் வீட்டுக்காரர் என்ன பண்றார்?"
"ஹும்! பக்கவாதம் வந்து ரொம்பவருஷமா படுத்த படுக்கையா இருந்தார், பகவான் கருணை காட்டி போனவருஷம் அழைச்சிகிட்டார். என் பையன் ஒருத்தன் இருக்கான், இவளுக்கு மூத்தவன், துபாயில இருக்கான்."
கனகவல்லியின் உடலை அலங்கரித்த ஆபரணங்களின் மூலம் புரிந்தது.
"அப்படியா? உன்னப் பாத்ததில எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. என்னால ரொம்பநேரம் நிக்க முடியாது. இல்லைன்னா இன்னிக்கு பூராவும் உன்கூடவே இருந்து அரட்டை அடிச்சிட்டிருப்பேன்."
"நீ உடம்பப் பாத்துக்கோ! இது யாரு? உன் மருமகளா?"
சுந்தரியைக் காட்டிக் கேட்க, நாகலட்சுமி வேகமாய் மறுத்தார்.
"என் மகனுக்கு இன்னும் கல்யாணமாகலை. இவ என் மகள் மாதிரி. அவ கதையை அப்புறமா சொல்றேன், வர ஞாயிற்றுக்கிழமை  என் பையன் விக்னேஷுக்குப் பிறந்தநாள், நீ அவசியம் வீட்டுக்கு வரணும்! அசைவம் சாப்பிடுவேதானே?" மறக்காமல் கேட்டுக்கொண்டார்.
"ஆங், பேஷா!" என்றார் அவர்.
நாகலட்சுமி முகவரி சொல்ல தாரா குறித்துக்கொண்டாள்.
"உன் மகன் வரலையா?"
"வந்திருக்கான், இங்கேதானே இருந்தான். சுந்தரி, விக்னேஷ் எங்கம்மா?"
"உங்களுக்கு அண்ணனோட கூச்ச சுபாவம் தெரியாதாம்மா? இவங்ககிட்ட நீங்க பேச ஆரம்பிச்சதுமே அண்ணன் வாசல் பக்கம் போயிட்டார்."
அனைவரும் சிரித்தனர். வசலுக்கு வந்து விக்னேஷை அவர்களுக்கு நாகலட்சுமி அறிமுகப்படுத்த, விக்னேஷ் கூச்சத்துடன் புன்னகைக்க, தாரா ஒரு கணம் கண்சிமிட்ட மறந்தாள்.
நாகலட்சுமிக்கு அந்தக்கணம் சொர்க்கத்தில் மிதப்பது போல் இருந்தது. தாராவை விக்னேஷின் அருகில் நிறுத்தி கற்பனை செய்துபார்க்க, கச்சிதமாய் பொருந்தியது. கனகவல்லியிடம் பொறுமையாய் இதைப் பற்றிப் பேசவேண்டும் என்று நினைத்தவருக்கு விக்னேஷின் பிறந்தநாள் உதவியது.
இன்று அந்த வாய்ப்பு அமைந்திருந்தும் எடுத்தவுடன் அந்தப் பேச்சைத் துவக்க சற்றுத் தயக்கமாகவே இருந்தது. அவள் வீட்டுக்குப் போய் பெண் கேட்பதுதானே முறைவிருந்துக்கு அழைத்த இடத்தில் வைத்துக் கேட்டால் கனகவல்லி ஏதாவது தவறாக நினைத்துக்கொள்வாளோ?
"என்ன நாகு? ஏதோ கற்பனையில மிதக்கிறே?" கனகவல்லியின் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தார்.
"எல்லாம் கனவு மாதிரிதான் இருக்கு, உன்னைச் சந்திச்சது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு, தெரியுமா?"
"எனக்கும்தான்! நாம சின்ன வயசில... வக்கீல் தாத்தா வீட்டுக்கு தண்ணி எடுக்கப்போவேமே... அப்ப ஒருத்தன் வழியில் நின்னுகிட்டு அப்பப்போ நம்மளை பயமுறுத்தி ஓடவைப்பானே.... நினைவிருக்கா?"
"ஆமாம், ஆமாம்! யப்பா.... எப்படிப் பயங்கட்டுவான்? அப்புறம்... அந்த.. மாடிவீட்டு பொன்னாத்தா......."
அவர்களது இளமைக்கால அனுபவங்களின் மீள்பார்வை நிகழ்ந்துகொண்டிருக்க, தாரா பொறுமை இழந்தாள்.
விக்னேஷைப் பார்த்தாள். அவன் ராமுடன் மும்முரமாக பேச்சில் ஈடுபட்டிருந்தான். அஜய், அஷ்வத் இருவரும், சுபாவிடம் விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தனர். பொழுதுபோகாமல்
அங்கிருந்த தினசரிப் பத்திரிகைகளை எடுத்துப் புரட்டினாள். பெரும்பாலும் தமிழில் இருந்தன. தமிழுடன் அவளுக்கு தகராறு என்பதால் அவற்றை ஓரங்கட்டினாள். அடுக்களையிலிருந்து பிரியாணி வாசம் மூக்கைத் துளைத்தது. வாசமே பசியை விரைவாக வரவழைத்திருந்தது.
அடுக்களைப் பக்கம் போனால் எங்கே தன் பங்குக்கு வேலை செய்யவேண்டிவருமோ என்று பயந்து அங்கு செல்வதைத்தவிர்த்தாள். இருப்பினும் இப்போது, விருந்தின் மெனு தெரிந்துகொள்ளும் ஆவலில் மெதுவாக அங்கே சென்றாள்.
அடுக்களையில் சுந்தரி, வித்யா, மனோகரி மூவரும் ஏதேதோ பேசிக்கொண்டு விருந்து தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
"வாங்க!" சுந்தரி வரவேற்றாள். தாரா பதிலுக்குப் புன்னகைத்தபடியே அவர்கள் செய்வதை மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தாள்.
வித்யா அமைதியாய் பச்சடிக்கு கேரட் துருவிக்கொண்டிருந்தாள். தாராவைப் பார்க்கும்போதெல்லாம் நாகலட்சுமியின் முகத்தில் ஒரு மலர்ச்சி உண்டாவதைக் கண்டாள். அவசரப்பட்டு விக்னேஷின் வாழ்வை இவளுடன் இணைத்துவிடுவாரோ என்று பயந்தாள். விக்னேஷின் எதிர்காலம் மட்டுமில்லை, நாகலட்சுமியின் எதிர்பார்ப்பும் இவளால் வீணாகிவிடும் வாய்ப்புள்ளதென உணர்ந்து தவித்தாள். தாராவை மீண்டுமொருமுறை தலை முதல் பாதம் வரை ஆராய்ந்தாள்.
தாரா நவ நாகரிகத்தின் பிரதிநிதியெனத் தன்னை பிரகடனப் படுத்திக்கொண்டிருந்தாள். தோள்வரை வெட்டப்பட்டிருந்த தலைமுடி முகத்தின் பக்கம் வரும்போதெல்லாம் கைகளை உபயோகப்படுத்தாமல், தலையைச் சிலுப்பி ஒதுக்கிவிட்டாள்.  வீட்டுக்குள்ளும் குளிர்கண்ணாடி அணிந்திருந்தாள். உதட்டில் இளஞ்சிவப்பு வண்ணத்தில் பளபளக்கும் சாயம் பூசியிருந்தாள். குட்டைக்கை வைத்த ரவிக்கையணிந்து கருநீல நிறப் பூனம் புடவையை லோ ஹிப்பில் அணிந்திருந்தாள். அவள் உபயத்தால் வாசனைத் திரவியத்தின் வீச்சு வீடெங்கும் வியாபித்திருந்தது.
கடவுளே, இவளிடமிருந்து விக்கியைக் காப்பாற்று என கடவுளுக்கு ஒரு விண்ணப்பம் கொடுத்துவிட்டு வித்யா தன் வேலையில் ஆழ்ந்தாள்.
சுந்தரியின் மனமோ இதில் எதுவும் ஈடுபடாமல் சண்டித்தனம் செய்துகொண்டிருந்தது. அது ஒரு நிலையிலேயே இல்லை. கை அதுபாட்டுக்கு அது வேலையைச் செய்ய, மனம் அதுபாட்டுக்கு அதன் வேலையைச் செய்துகொண்டிருந்தது. அது வீட்டு வாசலில் காருக்குள் காத்திருக்கும் முத்துவை சந்திக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது.
அன்று கோவிலில் கனகவல்லியை வழியனுப்ப அவர்களது கார்வரை சென்றபோதுதான் அவனைக் கவனித்தாள். கார் கதவைத் திறந்துவிட்டு நின்றிருந்தான். சுந்தரி ஆவலாய் அவன் முகம் பார்க்க, அவன் பார்க்காததுபோல் திரும்பிக்கொண்டான்.
"முத்து, இந்த அட்ரஸுக்கு எப்படி வரணும்னு தம்பிகிட்ட வழி கேட்டுக்கோ!"
விக்னேஷ் விவரமாய் சொன்னான். அவன் கேட்டுக்கொண்டபின் கார் கிளம்பிச்சென்றது. சுந்தரியின் மனம் ஆற்றாமையால் அழுதது.
'உன்ன மறுபடியும் பாப்பேன்னு கனவுலயும் நினைக்கலையே? நீ எப்படிடா இருக்கே? அப்பவும் அம்மாவும் எப்படி இருக்காங்க? என்மேல உள்ள  கோவம் இன்னும் தீரலையா? முத்து! என்னப் பாக்கவேண்டாம், உன் மருமகளைப் பாத்திருக்கலாமேடா! இப்படியா மூஞ்சத் திருப்பிட்டு போறது? உன்ன மாதிரி என்னால் கண்டுங்காணாம போகமுடியலையேடா.....'
சுந்தரி மனதுக்குள் அழுதாலும் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
"சுந்தரி, என்னம்மா?"
சுந்தரி நிதானித்தாள். உண்மையைச் சொன்னால் முத்துவின் வேலைக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால்...? முத்துவே தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பாதபோது, நான் சொல்வதால் என்ன பயன்? அண்ணன் போய்க்கேட்டாலும் என்னைத் தெரியாது என்று கூறப்போகிறான். அவருக்கு ஏன் பொல்லாப்பு? என் வேதனை என்னுடனேயே இருந்துவிட்டுப் போகட்டும்.'
"ஒண்ணுமில்லண்ணே!" கண்களைத் துடைத்துக்கொண்டு பதில் சொன்னாள்.
"ஒண்ணுமில்லாம யாராவது அழுவாங்களா?" நாகலட்சுமி மடக்கினார்.
"சுந்தரி, உன் மனசு கஷ்டப்படும்படி அவங்க ஏதாவது சொன்னாங்களா?"
விக்னேஷ் யாரைக் குறிப்பிடுகிறான் என்பது புரிய, சுந்தரி வேகமாய் இடைமறித்தாள். பிரச்சனை வேறுமுகம் காட்டிவிடப்போகிறது என்று பயந்தவளாய்,
"அண்ணே! அந்தக் கார் டிரைவரைப் பார்த்தப்போ என் தம்பி ஞாபகம் வந்திடுச்சு, அண்ணே. அவனும் இந்தப் பையன் மாதிரிதான் இருப்பான்."
"நல்லாப் பாத்தியா? அது உன் தம்பியாவே இருக்கப்போவுது!" நாகலட்சுமி பரிந்து பேசினார்.
"ஆங்! என் தம்பிய எனக்குத் தெரியாதா? இல்ல அவனுக்குதான் என்ன தெரியாதா?"
"உறுதியாதான சொல்றே?"
"ஆமாண்ணே...அது என் தம்பி இல்லேண்ணே!"
"நீ கவலப்படாதே! அவங்க எங்க இருந்தாலும் நல்லா இருப்பாங்க!" நாகலட்சுமி ஆறுதல் கூறினார்.
திரும்பி வரும் வழியெல்லாம் சுந்தரி எவரும் அறியாவண்ணம் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே வந்தாள். சுபா தூங்கிவிட்டிருந்தாள். காரை ஓட்டிக்கொண்டிருந்த விக்னேக் சுந்தரியிடம், "ஆமா, உன் தம்பி பேர் என்ன?" என்றான்.
சுந்தரி திடுக்கிட்டாலும், சுதாரித்துக்கொண்டு, "கருப்பன்" என்றாள். முத்துக்கருப்பன் என்ற பெயரைச் சுருக்கி அவனை 'முத்து' என்று கனகவல்லி அழைத்தது நினைவுக்கு வந்தது.
வீட்டுக்கு வந்தபிறகும் முத்துவைப் பற்றிய நினைவுகளே வட்டமிட்டுக்கொண்டிருந்தன. விக்னேஷின் பிறந்தநாளுக்கான விருந்துக்கு அவர்களை அழைத்தது மனதுக்கு ஓரளவு நிம்மதி தந்தது. முத்துதானே கார் ஓட்டி வருவான்? அப்போது அவனுடன் பேச சந்தர்ப்பம் வாய்க்காமலா போகும்? எப்படியும் அவனிடம் பேசி அவனை சமாதானப் படுத்திவிட முடிவுசெய்தாள். சுந்தரி எண்ணியது போலவே இன்று முத்து வந்திருக்கிறான். ஆனால் எப்படி அவனை சந்திப்பது என்றுதான் புரியவில்லை.
யோசித்தபடியே கண்ணாடிக்குவளைகளில் பழச்சாறு நிரப்பினாள். முத்துவிடம் கொடுக்கும் சாக்கில் அவனிடம் பேசவேண்டும் என்று முடிவுசெய்துகொண்டாள். அது தெரியாமல் மனோகரி விக்னேஷைக்  கூப்பிட்டு பழச்சாறு பரிமாறும் வேலையை அவனிடம் ஒப்படைத்ததுடன், சுந்தரியிடம்,
"எல்லா வேலையையும் நீயே இழுத்துப் போட்டுகிட்டு செய்யாத. ஆளுக்கொரு வேலை குடுக்கப் பழகிக்கோ! அப்பதான் எல்லாருக்கும் பொறுப்பு வரும், வேலையும் சீக்கிரமா நடக்கும்"
"அது எப்படிக்கா? உங்களை எல்லாம் விருந்துக்கு கூப்பிட்டுட்டு, உங்களையே வேலை வாங்கினா எப்படி?"
"ஆளுக்கொரு வேலை பகிர்ந்துகிட்டு செஞ்சா அதில கிடைக்கிற சந்தோஷமே தனி. என்ன நான் சொல்றது, வித்யா?"
மனோகரி வேண்டுமென்றே தாராவை சீண்ட, வெறுமனே வீட்டைச் சுற்றி சுற்றி வந்து களைத்துப்போய்  அடுக்களையில் நின்று அடுத்தவர் வேலை செய்வதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த தாரா விருட்டென்று வெளியில் சென்றாள்.
மூன்று பெண்களும் ஒருவரையொருவர் பார்த்து அர்த்தத்துடன் புன்னகைத்துக்கொண்டனர்.
தொடரும்... 
*********************************************************************
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
மு.வ உரை:
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.
-------------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு

33 comments:

  1. கதை வழக்கம்போல் சுவாரஸ்யமாகவும்
    அதிக எதிபார்ப்பைத் தூண்டியபடியும் நகர்கிறது
    இறுதி வரிகள் சூசகமாக கதையின் போக்கை
    கோடிட்டுக் காட்டிப் போகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  2. முடிப்பும் அத‌ற்குப் பொருத்த‌மான‌ குற‌ளும் அழ‌கு.

    ReplyDelete
  3. கதை ஒரு நீரோட்டம் போல அழகா நகருது
    சகோதரி.. அருமை.

    "எல்லா வேலையையும் நீயே இழுத்துப் போட்டுகிட்டு செய்யாத. ஆளுக்கொரு வேலை குடுக்கப் பழகிக்கோ! அப்பதான் எல்லாருக்கும் பொறுப்பு வரும், வேலையும் சீக்கிரமா நடக்கும்"

    மிகச் சரியான கருத்து, வீட்டில குழந்தைகளா தொந்தரவு செய்ய வேணாம் னு
    சொல்லிக்கிட்டு எல்லா வேலையையும் நாமே இழுத்துபோட்டு செய்யக்கூட்டாது.
    அவர்களையும் அந்த வேளைகளில் பங்கெடுக்க வைத்தால்..
    பங்கிட்டுக்கொள்ளும் மனப்பான்மையும். எந்த சூழலையும் சமாளிக்கும் பக்குவமும் வளரும்.

    ReplyDelete
  4. நடை எளிமை.. ரொம்ப சிறப்பா போகுதுங்க ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மூன்று பெண்கள் கூடியிருக்கும் இடம் களைகட்டுகிறது கீதா.குழப்பம் வராமல் இருந்தாலே பெரும்புண்ணியம் !

    ReplyDelete
  6. அருமையாக செல்கிறது .குறளும் /மு வ அவர்களின் உரையும் மிக மிக பொருத்தம் .தொடர்கிறேன்

    ReplyDelete
  7. நல்ல கதை.
    தொடருங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. ஆரம்பத்தில் பல்வேறு கதாபாத்திரப்பெயர்கள் வந்ததால் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது. பிறகு போகப்போக கதையின் தெளிவு புரிந்தது. பாராட்டுக்கள். தொடருங்கள்.

    வாழ்த்துக்களுடன் vgk

    [பதிவிட்டதும் மெயில் மூலம் LINK குறிப்பிட்டு தகவல் கொடுத்தால் உடனே வந்து படிக்கவும், கருத்துக்கூறவும் ஏதுவாகும். என் டேஷ்போர்டில் பல பதிவுகள் தெரிவதில்லை. மேலும் மெயில் தகவல்கள் என்னால் உடனுக்குடன் படிக்கப்படுபவை ஆகும். சிரமப்பட வேண்டாம். முடிந்தால் செய்யுங்கோ - Otherwise not necessary]

    தமிழ்மணம்: 4 அன்புடன் vgk

    ReplyDelete
  9. கதையில் புதிய திருப்பம்!
    அருமை! தொடரட்டும் களை கட்டும்

    த ம ஓ 5

    ReplyDelete
  10. ஆஹா!இப்போ தாராங்ற கேரக்டர் வேற வந்துட்டா?எத்தன பேர் வந்தாலும் கதையின் நடையை அழகா கொண்டு போகிறீர்கள்.அனைவரது உணர்வுகளையும் சித்தரிக்கும் விதமும் அருமை.

    ReplyDelete
  11. இத்தனை வாசகர்களை கட்டிப்போட்டிருக்கும் இணையத்
    தொடர்கதை இப்போது என்னையும்... தொடருங்கள்.

    ReplyDelete
  12. கூடி வாழ்ந்தால் கூடி நன்மைன்னு சொல்ல போறீங்கனு நினைக்கிறேன் (prediction)
    கதையில் சுவாரசியம் குறையவே இல்லை

    ReplyDelete
  13. உறவுகளுக்கிடையே சில சமயம் இப்படி சோதனைகள் உருவாவது உண்டு. சோதனை விலகியபின் உறவு பலப்படும். அருமையான நகர்தலுடன் செல்லும் கதையை தொடர்கிறேன்.

    ReplyDelete
  14. கதை சுவாரஸ்யமாகவும் எதிபார்ப்பையும் ஏற்படுதியது. மிக அருமையாக எதர்ர்தமாகவும் இருந்தது வாழ்த்துகள் கீதா..

    ReplyDelete
  15. கதையின் விருவிருப்புக் குறையாமலும், தொடர்ச்சியை எதிர் நோக்கும் ஆர்வத்தையும் தோற்றுவிக்கும் எழுத்து நடை பிரமாதம்.

    ReplyDelete
  16. அருமை!
    பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
    பகிர்விற்கு நன்றி!
    படிக்க! சிந்திக்க! :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    ReplyDelete
  17. வழக்கம்போல் முதலாவதாக வந்து பின்னூட்டமிட்டு வாழ்த்தும் வாக்கும் வழங்கி ஊக்கமளிக்கும் தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  18. @ nilaamaghal

    \\முடிப்பும் அத‌ற்குப் பொருத்த‌மான‌ குற‌ளும் அழ‌கு.\\

    குறளைக் குறிப்பிட்டுப் பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது நிலாமகள். மிக்க நன்றி.

    ReplyDelete
  19. @ மகேந்திரன்,

    கதையினூடே வரும் கருத்தைச் சிலாகித்துப் பின்னூட்டமிட்டுப் பாராட்டியதற்கும், த.ம. வாக்குப்பதிவுக்கும் மிகவும் நன்றி மகேந்திரன்.

    ReplyDelete
  20. @ அரசன்,

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அரசன்.

    ReplyDelete
  21. @ ஹேமா,

    குழப்பம் வராமல் இருக்குமா? தொடர்ந்து வாங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா.

    ReplyDelete
  22. @ angelin

    தொடர்ந்து வருவதற்கும் குறளைக் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கும் நன்றி ஏஞ்சலின்.

    ReplyDelete
  23. @ Rathnavel

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இரத்தினவேல் ஐயா.

    ReplyDelete
  24. @ வை.கோபாலகிருஷ்ணன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வை.கோ. சார். இந்த அத்தியாயத்தின் துவக்கம் சட்டென்று புரியாததுதான். கதை முடியுந்தருவாயில் இருப்பதால் இன்னமும் நீட்டவேண்டாம் என்ற எண்ணமே காரணம்.

    தாங்கள் குறிப்பிட்டபடி புதிய பதிவுகளை மெயிலில் அனுப்புகிறேன். இதில் சிரமம் எதுவும் இல்லை. தாங்கள் ஆர்வம் காட்டுவதே எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது.

    ReplyDelete
  25. @ புலவர் சா இராமாநுசம்

    தங்கள் வருகைக்கும் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  26. @ thirumathi bs sridhar

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆச்சி. உங்களுடைய இந்த மனந்திறந்த பாராட்டு பெரும் உற்சாகம் அளிக்கிறது. மிகவும் நன்றி.

    ReplyDelete
  27. @ siva

    வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் நன்றி சிவா. தொடர்ந்து வாங்க.

    ReplyDelete
  28. @ இயற்கைசிவம்

    வருகைக்கும் கருத்துக்கும் அன்பின் பிடியில் கட்டுண்டுக் கிடப்பதற்கும் நன்றி இயற்கைசிவம்.

    ReplyDelete
  29. @ சாகம்பரி

    சிறு ஓய்வுக்குப் பின்னான தங்கள் வருகையை மிகவும் அன்புடன் வரவேற்கிறேன் சாகம்பரி. உளவியல் அறிந்த உங்கள் கூற்றுக்கு மறுப்புமொழி ஏது? தொடர்வதற்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  30. @ அன்புடன் மலிக்கா

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி மலிக்கா. தொடர்ந்து வாங்க.

    ReplyDelete
  31. தங்கள் வருகைக்கும் ஊக்கமளிக்கும் அழகுப் பின்னூட்டத்துக்கும் நன்றி சத்ரியன்.

    ReplyDelete
  32. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.