7 December 2011

மூன்றுகால் முயல்கள்



தற்செயலாகவோ, திட்டமிடப்பட்டோ
நிகழும் நிகழ்வுகளுக்கெல்லாம்
மூலகாரணமொன்று இருந்தேயாகவேண்டுமென்கிற
உன் தீவிர நம்பிக்கையை மறுதலிக்க
என்னிடம் காரணம் எதுவுமில்லை.

நீ பற்றிய மூலகாரணத்தின்
மூலாதாரம் பற்றி மட்டுமே
பிசிர் தட்டிய பேதலிப்புகள் என்னிடம்!

காரணங்களைக் கண்டறிவதைக் கைவிட்டு
நீயாகவே யூகங்களை விதைக்கிறாய்!
முன்னதினும் பின்னது வெகு எளிதாய்
கைவருகிறது உனக்கு!
விதைத்த யூகங்களுக்கு
உன் விவேகமற்ற விவரணைகளை
ஊட்டி ஊட்டி விருட்சமாக்குகிறாய்!

ஆணித்தரமான நம்பிக்கையோடு
ஆலமரமென கிளைத்து வளர்ந்து
தன்னை நிலைநிறுத்த முயலும் வேளையில்....
பரிதவிப்புடன் எடுத்தியம்பப்படும்
பலதரப்பட்ட நிதர்சனங்களை
பரிசீலிக்கவும் நீ தயாராயில்லை.

தாறுமாறாய்ப் பயணிக்கும்
உன் மனதின் தறிகெட்டப் போக்கைத்
திசை திருப்பும் முயற்சிகள் யாவும்
முறிந்த பாய்மரமென
பயனற்று வீழ்கின்றன.

குறைகூறும் உன் விநோதப்போக்கை.....
குரோதமிகுந்த குதர்க்கத்தை....
வீணில் சுமத்தப்படும் பழிகளை....
வெறுப்பு மேலிட வேடிக்கை பார்த்தபடி
விரக்தியுடன் வீற்றிருக்கும் என்னையும்
உனக்காதரவாய் ஈர்க்க முனைகிறாய்!

நீ பிடித்த முயல்களுக்கு
மூன்றுகாலென்பதை நிரூபிப்பதற்காகவே
ஒற்றைக்காலொடித்து
முடமாக்கிக் கூண்டிலடைக்கிறாய்!

உன் அறிவீனத்தை காணச்சகியாது
உன் காரண கற்பிதங்களை
கடுகளவும் ஆட்சேபணையின்றி ஏற்கிறேன்,
கையறு நிலை காரணமாய்!

இதைக் கண்டுணரும் சாமர்த்தியமற்று
இதுவும் உன் சாமர்த்தியத்தின் வெற்றியென்றே
கூக்குரலிட்டுக் குதூகலிக்கிறாய்!

44 comments:

  1. வணக்கம் சகோதரி! இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். அருமையான கருத்துகளை கவிதைகளாக உருவாக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் இந்த நட்பு... என் தளத்திற்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  2. உலகில் பெரும்பாலோர் மூன்றுகால்
    முயல் குறித்த மனோபாவம் உள்ளவர்களே
    அதை மிக அழகாகச் சொல்லிப் போகிறது
    உங்கள் பதிவு
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல கவிதை. ஏனோ தெரியவில்லை... இதைப் படிக்கும் போது தமிழக முதல்வரும், அப்பாவி பொது ஜனமும் மனதில் வந்து போனார்கள்... மிக ரசித்தேன்... நன்றி.

    ReplyDelete
  4. கவிதையின் அழகு சொற்களின் மெருகில் மட்டுமல்ல
    அதன் அர்தத்திலும் ஆழத்திலும்..
    உங்கள் கவிதை நல்ல உதாரணம்

    ReplyDelete
  5. இதுதான் முயலாமை!

    ReplyDelete
  6. சகிப்புத்தன்மையின் அளவீடுகள்
    வாழ்ந்த காலத்தின் அடர்வுகளின் பொருட்டு மாறுபடுகின்றன,
    மேலும் புரிதல் தொலைகிரபோதுதான் விட்டுக்கொடுத்தல்
    தேவைப்படுகிறது, குறைந்தபட்சம் இவ்விதம் எழுதிவிடுவதிலாவது
    ஆற்றுப்படுத்தப்படும் இன்னும் சில மனங்களை இதமாக்கும் இந்தக் கவிதை.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. ஃஃஃதாறுமாறாய்ப் பயணிக்கும்
    உன் மனதின் தறிகெட்டப் போக்கைத்
    திசை திருப்பும் முயற்சிகள் யாவும்
    முறிந்த பாய்மரமென
    பயனற்று வீழ்கின்றன.ஃஃஃஃ

    அந்தந்த இடத்தில் அரமையாக உவமைகளையிட்டு அழகாய் தந்துள்ளீர்கள்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)

    நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record

    சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்

    ReplyDelete
  9. என்ன சொல்ல இந்தக் கவிதைக்கு.சில அகம்பாவங்கள் இப்படித்தான்.இயலாமையைச் சமாளிக்க முயலுக்கு மட்டுமே கால் ஒடிப்பார்கள்.உணரும் காலத்தில் அவர்களின் காலும் ஓய்ந்துவிடும் !

    ReplyDelete
  10. சொற்களால் சித்திரம் தீட்டிய கவிதை..
    தானென்ற ஆணவம் பிடித்த ஆதிக்கவாதிகள் மட்டுமல்ல
    நிற்கும் இடம் அறியா மூடர்களும் கையாளும்
    நிதர்சமான உண்மையை அழகாக
    சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி..
    அருமை.

    ReplyDelete
  11. @ திண்டுக்கல் தனபாலன்,

    வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  12. @ Ramani

    தங்கள் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  13. @ கணேஷ்

    தங்கள் ரசனையை நானும் மிகவும் ரசித்தேன் கணேஷ் சார். வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  14. @ Muruganandan M.K.

    தங்கள் முதல் வருகைக்கும் மனந்திறந்த பாராட்டுக்கும் மிகவும் நன்றி டாக்டர்.

    ReplyDelete
  15. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விச்சு.

    ReplyDelete
  16. @ இயற்கைசிவம்,

    தங்கள் வருகைக்கும் கருத்தாழமிக்கப் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  17. @ ♔ம.தி.சுதா♔

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  18. @ ஹேமா,

    வருகைக்கும் ஆதங்கம் புரிந்த அழகானப் பின்னூட்டத்துக்கும் நன்றி ஹேமா.

    ReplyDelete
  19. @ மகேந்திரன்

    நிதர்சனம் புரிந்ததும் கருத்துச் செறிவு மிக்கதுமானப் பின்னூட்டத்துக்கு நன்றி.

    ReplyDelete
  20. சொல்லாடல்கள் மிக அருமை. மூன்றுகால் முயல்களாக்க முயற்ச்சிக்கும் மனங்கள் ஏராளம்.

    வாழ்த்துக்கள் சகோ..

    ReplyDelete
  21. வணக்கம்..

    பல புதிய ஃபேஷன் நகைகள் அறிமுகம் செய்து இருக்கிறோம்.. பார்க்க வாருங்கள்.. மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்

    அன்புடன்
    http://newjanatha-fancyjewellery.blogspot.com/

    ReplyDelete
  22. காரணங்களைக் கண்டறிவதைக் கைவிட்டு
    நீயாகவே யூகங்களை விதைக்கிறாய்!
    முன்னதினும் பின்னது வெகு எளிதாய்
    கைவருகிறது உனக்கு!
    விதைத்த யூகங்களுக்கு
    உன் விவேகமற்ற விவரணைகளை
    ஊட்டி ஊட்டி விருட்சமாக்குகிறாய்!

    ஹப்பா.. என்ன ஒரு அழுத்த்மான சாடல்.

    ReplyDelete
  23. ஒரு ஈகோ பிடித்தவரிடம் தன்னிலை வெளிப்படுத்தி நியாயப்படுத்தி,அப்போதும் முடியாமல் அந்த ஈகோ பிடித்தவனின் கருத்துக்கே ஒத்துபோகும்போது விட்டுக்கொடுத்தவரின் அருமை தெரியாமல் அவன் தான் ஜெயித்துவிட்டதாக பெருமைகொள்கிறான்.

    நான் புரிந்துகொண்டது சரிதானே!

    அப்பா! எப்படி எழுதியிருக்கீங்க!நிறைய பதிவர்களின் எழுத்துக்களின் ஆற்றலை படித்தாலும் என்க்கெல்லாம் இப்படி எழுத,யோசிக்க வராதுங்க.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. எத்தனை பேர் இப்படி இருக்கிறோம்.
    அரசியலில், வீட்டில், அலுவலகத்தில் ,
    எதிர்க்க திராணியற்று சில பேர்
    எதிர்காலம் பற்றிய பயத்தில் சில பேர்.
    சகித்துக் கொண்டு சில பேர்.
    சங்கடத்தோடு சில பேர்.
    சமயங்களில் ....நாலு கால் தான் என்பது கூட மறந்து போகும் அளவுக்கு.

    மிக மிக அழகான, மனதை தைக்கிற , கவிதை.
    அபாரம் சகோதரி.

    ReplyDelete
  25. அருமையான நடையில் அழகான கவிதை - என் மனதில், ஏதோ ஒரு 'உள்குத்து' இருக்கோணு தோணுது.மனசை ஏதோ.....பண்ணுது

    ReplyDelete
  26. நீ பிடித்த முயல்களுக்கு
    மூன்றுகாலென்பதை நிரூபிப்பதற்காகவே
    ஒற்றைக்காலொடித்து
    முடமாக்கிக் கூண்டிலடைக்கிறாய்!

    கையறு நிலையைக் கனமாய் உணர்த்தின கவிதை.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  27. "இதுவும் உன் சாமர்த்தியத்தின் வெற்றியென்றே
    கூக்குரலிட்டுக் குதூகலிக்கிறாய்!" மூன்றே காலென்று சாதிப்பவர்கள் பற்றிய கவிதையின் சாரமாய் அமைந்துள்ளன கடைசி இரு வரிகள்

    ReplyDelete
  28. சித்திர கவிதைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. \\அன்புடன் மலிக்கா said...

    சொல்லாடல்கள் மிக அருமை. மூன்றுகால் முயல்களாக்க முயற்ச்சிக்கும் மனங்கள் ஏராளம்.

    வாழ்த்துக்கள் சகோ..\\

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.

    ReplyDelete
  30. \\Rathnavel said...

    அருமை. \\

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  31. \\ரிஷபன் said...

    ஹப்பா.. என்ன ஒரு அழுத்த்மான சாடல்.\\

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரிஷபன் சார்.

    ReplyDelete
  32. திரும்பிய திசைகளெல்லாம் மூன்று கால் முயல்களே என்கிற பிரமையை ஏற்படுத்தும் நபர்களே அதிகம்

    உங்கள் கவிதையாவது நிலைப்படுத்தட்டும் உண்மைகளை.

    ReplyDelete
  33. \\ thirumathi bs sridhar said...
    ஒரு ஈகோ பிடித்தவரிடம் தன்னிலை வெளிப்படுத்தி நியாயப்படுத்தி,அப்போதும் முடியாமல் அந்த ஈகோ பிடித்தவனின் கருத்துக்கே ஒத்துபோகும்போது விட்டுக்கொடுத்தவரின் அருமை தெரியாமல் அவன் தான் ஜெயித்துவிட்டதாக பெருமைகொள்கிறான்.

    நான் புரிந்துகொண்டது சரிதானே!

    அப்பா! எப்படி எழுதியிருக்கீங்க!நிறைய பதிவர்களின் எழுத்துக்களின் ஆற்றலை படித்தாலும் என்க்கெல்லாம் இப்படி எழுத,யோசிக்க வராதுங்க.
    வாழ்த்துகள். \\

    கவிதையின் கருத்தை அழகா உள்வாங்கியிருக்கீங்க. நன்றி ஆச்சி. எவ்வளவு பிரமாதமா எழுதறீங்க, நீங்களே இப்படி சொன்னா எப்படி?

    ReplyDelete
  34. \\சிவகுமாரன் said...

    எத்தனை பேர் இப்படி இருக்கிறோம்.
    அரசியலில், வீட்டில், அலுவலகத்தில் ,
    எதிர்க்க திராணியற்று சில பேர்
    எதிர்காலம் பற்றிய பயத்தில் சில பேர்.
    சகித்துக் கொண்டு சில பேர்.
    சங்கடத்தோடு சில பேர்.
    சமயங்களில் ....நாலு கால் தான் என்பது கூட மறந்து போகும் அளவுக்கு.

    மிக மிக அழகான, மனதை தைக்கிற , கவிதை.
    அபாரம் சகோதரி.\\

    வருகைக்கும் ஆழ்ந்த விமர்சனத்துக்கும் நன்றி சிவகுமாரன்.

    ReplyDelete
  35. \\மனசாட்சி said...

    அருமையான நடையில் அழகான கவிதை - என் மனதில், ஏதோ ஒரு 'உள்குத்து' இருக்கோணு தோணுது.மனசை ஏதோ.....பண்ணுது\\

    முதல் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி நண்பரே. இதில் மறைமுகக் கருத்து எதுவும் இல்லை. நேரடியாகக் கூறப்பட்டவையே.

    ReplyDelete
  36. \\இராஜராஜேஸ்வரி said...

    கையறு நிலையைக் கனமாய் உணர்த்தின கவிதை.. பாராட்டுக்கள்.. \\

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  37. \\வியபதி said...

    "இதுவும் உன் சாமர்த்தியத்தின் வெற்றியென்றே
    கூக்குரலிட்டுக் குதூகலிக்கிறாய்!" மூன்றே காலென்று சாதிப்பவர்கள் பற்றிய கவிதையின் சாரமாய் அமைந்துள்ளன கடைசி இரு வரிகள் \\

    வருகைக்கும் அழகான கருத்துப்பதிவுக்கும் நன்றி.

    ReplyDelete
  38. \\அரசன் said...

    சித்திர கவிதைக்கு வாழ்த்துக்கள்\\

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அரசன்.

    ReplyDelete
  39. \\வல்லிசிம்ஹன் said...

    திரும்பிய திசைகளெல்லாம் மூன்று கால் முயல்களே என்கிற பிரமையை ஏற்படுத்தும் நபர்களே அதிகம்

    உங்கள் கவிதையாவது நிலைப்படுத்தட்டும் உண்மைகளை. \\

    வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  40. அருமையான அக ஆராய்ச்சி...

    ReplyDelete
  41. விட்டுக்கொடுப்பற்ற பிடிவாதமும்..
    அதற்கான விதண்டாவாதமும்...
    தானென்கிற திமிரும்...
    அழிவிற்கான வழியே கூட்டிச்செல்லும்.

    தவறையேற்க தயங்கும் மனசும்
    குறைகளை சுட்டிக்காட்டுவதை
    விரும்பா குணமும்...
    வளர்ச்சிக்கான தடைகற்கள்.

    புரியவைக்கிற முயற்சியில்
    தோற்றுப்போகிற மனசுகளின்
    இயலாமை வலி
    ஆழமானது.

    அந்த வலி இயல்பாய்
    தெரிகிறது கவிதையில்.

    பாராட்டுக்கள்.

    தீபிகா
    theepikatamil.blogspot.com

    ReplyDelete
  42. @ theepika

    தங்கள் முதல் வருகையும் கவிதை பற்றிய ஆழ்ந்த அலசலும் கருவுக்கு வலு சேர்த்து மனத்திற்கு இதமளிக்கின்றன. மிக்க நன்றி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.