15 November 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (24)





"அம்மா, பசிக்குதும்மா!"
"அம்மா......"
அஜயும் அஷ்வத்தும் கெஞ்சிக்கொண்டு இருந்தனர்.
"அம்மா....மணி எட்டாவுதும்மா....அம்மா...ப்ளீஸ்!"
"சனியன்களா....ஒரு புக் படிக்க விடறீங்களா, ஒரு சீரியல் பாக்க விடறீங்களா...உங்களையெல்லாம் உங்கப்பாகிட்டயே விட்டுட்டு வந்திருக்கணும், அந்தாளு என்னடான்னா நீ போறதா இருந்தா இந்த சனியன்களையும் கூடவே கூட்டிட்டுப் போயிடுன்னு என் தலையில் கட்டிட்டாரு.....இப்ப அங்க நிம்மதியா எவளோடயாவது கூத்தடிச்சிட்டிருப்பாரு....நான் தான் உங்களோட மாரடிச்சிகிட்டிருக்கேன்!"
நண்பரைப் பார்த்துவிட்டு அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த பலராமன் வேணியின் பேச்சைக் கேட்டு திடுக்கிட்டார்.
"வேணி! வாயை அடக்கு! குழந்தைங்க முன்னாடி என்ன பேசறதுன்னு கூடவா தெரியாது?"
பலராமன் கோபாவேசமாய்க் கத்தினார். வேணி எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை. அவள் முனகியவாறே மீண்டும் தன் கவனத்தை புத்தகத்தில் பதித்தாள்.
"தாத்தா....பசிக்கிது, தாத்தா....ஸ்கூல் விட்டு வந்ததில இருந்து எதுவுமே சாப்பிடலை. கிச்சன்லயும் எதுவும் இல்ல. ஏதாவது சாப்பிடக்குடுங்க தாத்தா...."
பலராமன் அடுக்களைக்குச் சென்று பார்க்க, காலையில் வித்யா செய்துவிட்டுப்போனதுடன் அதது அப்படியே கிடந்தது. வித்யா இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்பது புரிந்தது. பாவம், அந்தப் பெண்! இந்த வயதில் எத்தனைப் பொறுப்பாய் நடந்துகொள்கிறாள்! அலுவலகத்திலும் வேலை செய்துகொண்டு, வீட்டிலும் வேலை செய்துகொண்டு.... போதாக்குறைக்கு இப்போது அக்காவுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் சேர்த்து சமைக்கவேண்டியிருக்கிறது. சமையல் மட்டுமா? சாமான் தேய்ப்பது, துணிமணி துவைப்பது என்று எல்லா வேலைகளையும் செய்கிறாள்.
நீ கொஞ்சம் உதவக்கூடாதா என்று வேணியைக்கேட்டால், வேலைக்கு ஆள் வைத்துக்கொள் என்கிறாள். வேலைக்கு ஆள் வைக்கத் தெரியாமலா இருக்கிறோம்? கூடுமானவரை செலவுகளைக் குறைக்கவேண்டும் என்றுதான் வித்யாவே எல்லா வேலைகளையும் இழுத்துபோட்டுக்கொண்டு செய்கிறாள். நான் கூடமாட வேலை செய்யவந்தால் நெஞ்சுவலியைக் காரணம் காட்டி மறுத்துவிடுகிறாள்.
இவளோ, விருந்துக்கு வந்ததுபோல் வேளாவேளைக்கு சாப்பிட்டுக்கொண்டும், தூங்கிக்கொண்டும் காலத்தைக் கழிக்கிறாள். குறைந்தபட்சம் குழந்தைகளின் தேவையையாவது நிறைவேற்றலாம் அல்லவா? அதற்கும் லாயக்கில்லை. இப்படிப் பட்ட பெண்ணுடன் எந்தப் புருஷன்தான் குடித்தனம் நடத்த முடியும்? ஏன் இப்படி மாறினாள்? எத்தனை அனுசரணையாய் அன்பாய் இருந்தவள், இன்று தான் பெற்ற குழந்தைகளின் பசியைத் தீர்க்கவும் வழியில்லாமல் எரிந்தெரிந்து விழுகிறாளே!
வித்யாவை ஏன் இன்னும் காணவில்லை? இந்நேரம் வந்திருக்கவேண்டுமே!
"அஜய்! சித்தி இன்னும் வரலையா?"
"சித்தி ட்ராஃபிக் ஜாம்ல மாட்டிகிட்டாங்களாம். வர லேட்டாவும்னு போன் பண்ணினாங்க, தாத்தா!"
"சரி, என்கூட வாங்க, வெளியில் போய் சாப்பிடலாம்!"
இதற்குமேல் வித்யா வந்து சமைப்பதென்றால் அதுவரை குழந்தைகள் பசி தாங்க மாட்டார்கள். அதுவுமில்லாமல் வித்யாவுக்கும் சிரமம் கொடுக்கக்கூடாது என்று நினைத்தவர், வரும்போது இரு பெண்களுக்கும் ஏதாவது பார்சல் வாங்கிவந்துவிடலாம் என்று பேரன்களை அழைத்துக்கொண்டு உணவகம் செல்ல முடிவு செய்தார்.
"அப்பா! எனக்கும் அப்படியே ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வாங்க! நீங்க பாட்டுக்கு உங்கவேலை முடிஞ்சதுன்னு அப்படியே வந்திடாதீங்க!" என்றாள், வேணி.
பலராமன் விரக்தி மேலிட சிரித்துக்கொண்டே சொன்னார்,
"நான் உன்னை மாதிரி இல்லைம்மா...பெத்தபிள்ளைகள் எப்படிப் போனாலும் கவலைப்படாம இருக்க! என் குழந்தைகளை நான் என்னைக்கும் பட்டினி போடமாட்டேன்மா! கதவைச் சாத்திக்கோ! வாங்கடா பசங்களா!"
எத்தனைக்கெத்தனை வித்யாவால் நிம்மதியும் சந்தோஷமும் அடைந்திருந்தாரோ, அத்தனைக்கத்தனை வேணியால் துன்பமும், துயரமும் அடைந்தார். வருடத்துக்கு ஒருமுறை வரும்போதும் எந்த வேலையும் செய்யாமல் இப்படிதான் இருந்தாள் என்றாலும் அப்போது அது பெரிய விஷயமாய்த் தெரியவில்லை. இப்போது எதிர்காலமே பிரச்சனையில் இருக்கும்போது இவள் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பது எவ்வளவு வேதனையைக் கொடுக்கிறது!
கையில் பிடித்திருக்கும் பேரன்களைப் பார்த்தார். இரண்டுங்கெட்டான் வயதில் இவர்களுக்கு என்ன தெரியும்? இவர்களிடம் வேணி இப்படி வரம்பு மீறி வார்த்தைகளை விடலாமா? வளர்ந்தபின் தங்கள் தாயை மதிப்பார்களா?
சரி, புருஷன் சரியில்லை என்றே வைத்துக்கொள்வோம், இவள் என்ன செய்யவேண்டும்? பிள்ளைகளை நல்லமுறையில் வளர்க்க முற்படவேண்டாமா? உன் துணை இல்லாமல் என்னால் என் பிள்ளைகளை வளர்க்கமுடியும் என்று அவன்முன் வாழ்ந்துகாட்டவேண்டாமா? கொஞ்சமாவது அக்கறையோ, பொறுப்போ இல்லாத பெண்ணை என்னவென்று சொல்வது? நான் இருக்கும்வரை பிரச்சனையில்லை. நான் போய்விட்டால்.....?
வித்யாவால் எத்தனை நாளுக்கு வேணியின் பாரத்தைத் தாங்க இயலும்? அவளுக்கென்று ஒரு வாழ்க்கை அமையவேண்டாமா? வித்யாவை நினைத்ததும் விக்னேஷ்  நினைவுக்கு வந்தான்.
என்ன பையன் அவன்? அம்மாவின் மனமும் நோகக்கூடாது, காதலியையும் கைப்பிடிக்கவேண்டும் என்று நினைக்கிறான். எப்படி முடியும்? இரு குதிரையில் சவாரி செய்ய முடியுமா? அவனை நம்பிக்கொண்டு வித்யாவும் காத்திருக்கிறாள். ஒருவேளை அவன் அவனுடைய தாயின் சொற்படி அவர் தேர்ந்தெடுக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள நேரிட்டால்....வித்யாவின் நிலை? அவள் காத்திருப்பு எல்லாமே வீணாகிவிடுமே!
ஐயோ....நான் பெற்ற இரு பெண்களின் மணவாழ்வும் இப்படியா நசித்துப்போகவேண்டும்? நான் என்ன செய்வேன்? ஐய்யோ......
நெஞ்சில் யாரோ ஏறி மிதிப்பதுபோல் வலித்தது. பிள்ளைகளைப் பிடித்திருந்த கைகளை உருவி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாய, பிள்ளைகள் பதறினர்.
"தாத்தா....... தாத்தா...... ஐயோ யாராச்சும் வாங்களேன்.... எங்க தாத்தா கீழ வுழுந்திட்டாரு...."
கூடிய கூட்டத்தில் இருந்த தெரிந்தவர்கள் மூலமாக வித்யாவுக்கும், வேணிக்கும் தகவல் சொல்லப்பட, வித்யா உடனேயே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல போனிலேயே ஏற்பாடு செய்தாள். விக்னேஷுக்கும் தகவல் சொல்லிவிட்டு நேராய் மருத்துவமனை வந்துசேர்ந்தாள்.
"இது ரெண்டாவது அட்டாக்! நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன், அவரைத் தனியா எங்கேயும் வெளியில் அனுப்பாதீங்க, ரொம்ப கவனமா இருங்க.மாத்திரையெல்லாம் தவறாம சாப்பிடணும், முக்கியமா எதை நினைச்சும் கவலைப்படாம இருக்கணும்!"
டாக்டர் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டார். ஆனால்...கேட்பது யார்? கவலைப்படாதீர்கள் என்றால் கேட்டால்தானே? வித்யாவுக்கு இந்த சூழலிலும் அப்பாவின்மேல் கோபம் வந்தது. எதற்காக இந்தவேளையில் வெளியில் போகவேண்டும்? காலையிலிருந்து வீடு தங்கவே இல்லையாம். யாரோ நண்பரைப் பார்க்கப் போயிருந்தாராம். மாலைதான் வந்தாராம். வந்ததும் பேரன்களை அழைத்துக்கொண்டு வெளியில் கிளம்பிச் சென்றாராம்.
அப்பாவை அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து மாற்றினாலும், தொடர்கண்காணிப்புக்காக அங்கேயே  அனுமதித்திருந்தனர்.
சிறுவர்கள் இருவரும் பயந்துபோய் நின்றிருந்தனர். வேணி ஒரு பெஞ்சில் அமர்ந்து எங்கோ வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
வித்யா குழந்தைகளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள். விக்னேஷ் வந்தது அவளுக்கு பெரும் உதவியாய் இருந்தது. அவனிடம் குழந்தைகளை அழைத்துப்போய் சாப்பிட ஏதாவது வாங்கித் தரசொன்னபோது இளையவன் அவசரமாய்  மறுத்தான்.
"வேணாம், சித்தி, இப்ப எங்களுக்குப் பசியில்ல சித்தி."
"சித்தி, எங்களாலதான தாத்தாவுக்கு இப்படி ஆச்சி?" அஜய் அழத்துவங்க அஷ்வத்தும் சேர்ந்துகொண்டான்.
"உங்களால எதுவும் இல்ல. தாத்தாவுக்கு வயசாயிடுச்சி. வயசானா இப்படிதான் அடிக்கடி உடம்புக்கு முடியாமப் போகும். அதை நினைச்சு நீங்க சாப்பிடாம இருக்கிறதில அர்த்தமில்ல. மணி பத்தாகுது! இந்நேரத்துக்கு என்ன கிடைக்கும்னு தெரியல. கிடைக்கிறதை சாப்பிட்டு வாங்க! விக்கி, எனக்கு ரெண்டு வாழைப்பழம் மட்டும் வாங்கிட்டு வாங்க, வேற எதுவும் வேணாம்!"
சரியென்று அவர்கள் கிளம்பியவேளை, வேணியையும், விக்னேஷுடன் அனுப்பிவைத்தாள்.
வித்யா, அப்பாவின் கவலைக்கு தானும் ஒரு காரணமோ என்று பயந்தாள். வேணியின் பிரச்சனைக்கு தன்னால் ஏதாவது தீர்வு காணமுடியுமா என்று யோசித்தாள். அவள் கணவனுடன் பேசி, விவாகரத்து செய்யும் எண்ணத்தை மாற்றினாலும், தொடர்ந்து வேணியுடன் நிம்மதியான வாழ்க்கை அமையுமா என்பது சந்தேகமே! குழந்தைகள் முன் பெற்றவர்கள் தினமும் சண்டையிட்டுக்கொண்டிருந்தால் அவர்களின் மனநிலை முற்றிலுமாய் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளது. ஏற்கனவே அஜய், அஷ்வத் இருவரும் தங்கள் தாய் தகப்பன்போல் சண்டையிட்டு மிமிக்ரி செய்து காட்டி, அப்பாவை வேதனைப்படுத்தினார்கள்.
தன்னால் பிரச்சனை என்றால் தன்னை மாற்றிக்கொள்ளலாம். தன்னை சுற்றியுள்ளவர்களால் தனக்குப் பிரச்சனை என்னும்போது என்ன செய்ய முடியும்? அக்காவின் பிரச்சனை தீரவேண்டுமானால் அக்கா மாறவேண்டும், விக்கியின் பிரச்சனை தீரவேண்டுமானால் அவன் அம்மா மாறவேண்டும். அப்பாவின் பிரச்சனை தீர அவர்தான் மனம் வைக்கவேண்டும். தன் உடல்நிலையில் கவனம் வைக்கவேண்டும். இவர்கள் அனைவரின் பிரச்சனையால் தான் பாதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? வித்யாவுக்கு துக்கம் பொங்கிவந்தது. தூரத்தே அனைவரும் வருவதைப் பார்த்து தன்னைக் கட்டுப்படுத்தினாள்.
"சித்தி, இந்தாங்க!" வாழைப்பழங்களையும், பிஸ்கட் பொட்டலத்தையும் அவளிடம் கொடுத்தனர்.
"விக்கி, எல்லாரையும் வீட்டில விட்டுட்டு நீங்களும் வீட்டுக்குப் போங்க! நான் அப்பாவைப் பாத்துக்கறேன். நீங்க மட்டும் காலையில் வந்து பாத்திட்டுப் போங்க, அநேகமா நாளைக்கு வீட்டுக்கு அனுப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்!"
"சரி, வித்யா! தைரியமா இரு! ஏதாவது தேவைன்னா எனக்கு போன் பண்ணு!"
வித்யா அவர்களை அனுப்பிவைக்க மருத்துவமனையின் வாசல் வரை வந்தபோது, வேணி ரகசியமாய் அவள் காதோரம் சொன்னாள், "ஏய், உன் ஆளு சூப்பர்டீ!"
வித்யாவுக்கு அவளை ஓங்கி அறையலாம் போலிருந்தது. அப்பா மரணத்தின் வாயிலுக்கு சென்று பிழைத்திருக்கிறார். இந்நிலையில் ஒரு மகளின் எண்ணம் எங்கு வேரூன்றியிருக்கிறது? ச்சீ! இவளை இவள் கணவன் பிரிய நினைப்பது சரிதான் என்று தோன்றியது.


பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
மு.வ உரை:
ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.
--------------------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு

15 comments:

  1. நல்ல சிறுகதை! குறள் கூறுவதை தலைவர்களுக்கு நினைவு படுத்தவேண்டும்!அப்புறம் அரசியலில் வேடிக்கை வினோதங்கள் இல்லாது போய்விடும்

    ReplyDelete
  2. வேணியைப் போன்ற குணாதிசயங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. அங்கங்கே இதுபோல சிலரை பார்த்த நினைவு. தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. சோகமே உருவான கதை வித்தியாவுகும் வேணிக்கும் தான் எவ்வளவு வேறுபாடு
    தொடர்ந்து வருவேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. நல்லவர்களே அதிகள் அல்லலுக்கு ஆளாகிறார்கள்
    என்கிற கூற்று சரிதானோ ?
    அல்லது அவர்கள்தான் தாங்கிக் கொள்வார்கள்
    என ஆண்டவன் நினைக்கிறானா?
    கதை சிறப்பாகத் தொடர்கிறது வாழ்த்துக்கள்
    த.ம 4

    ReplyDelete
  5. இந்த ஒரு அத்தியாயமே ஒரு சிறுகதை போல் உள்ளது.முந்தைய பகுதிகளை முழுதும் படிக்க கால அவகாசம் இல்லை சகோதரி. மன்னிக்கவும். நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்.
    வேணியும் கேரக்டர் போல் நிறைய பெண்கள் இருக்கிறார்கள்.
    எழுத்து நடை ரமணி சந்திரன் போல் உள்ளது.
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஐயோ இப்போதுதான் படிக்கிறேன்.நல்லாயிருக்கு'னு ஒரு வார்த்தையில சொல்ல முடியாது. இருந்தாலும் நல்லாயிருக்கு.ரொம்ப எளிமையான நடையில் கதை அருமையாக அமைந்துள்ளது.ஒரு பெண்ணின் மனது இப்படிகூட இருக்குமா? தந்தையைவிட அவளின் ரசனை வேறு எதிலோ முக்கியத்துவத்தில் உள்ளது. இரண்டு பொண்ணுகளுக்கும் எவ்வளவு வேறுபாடு!

    ReplyDelete
  7. குழந்தைகள் பற்றிய சிறப்புத் தொடர் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இதில் குழந்தைகள் பற்றிய உங்கள் கருத்துக்களையும் பதிய தொடர் பதிவிற்குஅழைத்துள்ளேன. நேரமிருக்கும்போது தொடருங்கள். மிக்க நன்றி.
    http://mahizhampoosaram.blogspot.com/2011/11/blog-post_16.html

    ReplyDelete
  8. வேணி என்ற பெயர் வைத்தாலே இப்படிப்பட்ட குணம் வந்துவிடுமோ..
    நான் இதே பெயரில் இதே குணத்தில் இரண்டு மூன்று நபர்களை சந்தித்திருக்கிறேன்...

    ரொம்ப அருமையா சொல்லியிருகீங்க சகோதரி...

    ReplyDelete
  9. மனித மனங்களை அப்பட்டமாகப் படம் பிடிக்கிறீர்கள் கீதா !

    ReplyDelete
  10. கீதா மேடம்,

    சிறப்பான தொடர். முதல் பகுதியிலிருந்து படித்துவிட வேண்டும். நடப்பு நிகழ்வுகள் பிரதிபலிக்கும் கதாபாத்திர அமைப்புகள் அற்புதம்.

    வித்யாவைச் சுற்றியிருக்கும் வலை விலகும். இறுதி வரிகளின் தொடர்ச்சியை கற்பனை செய்து பார்த்தேன். “அவள் ஒரு தொடர்கதை” நிழலாடுகிறது.

    ReplyDelete
  11. @ ஓசுர் ராஜன்,

    முதல் வருகைக்கும் அரசியலோடு ஒப்பிட்டக் கருத்துரைக்கும் நன்றி.

    @ சாகம்பரி,

    வாழ்க்கையில் நாம் ஆங்காங்கே சந்திக்கும் குணாதிசயங்கள்தானே கதைமாந்தர்களிடத்தும் பிரதிபலிக்கின்றன. தொடர்வருகைக்கு நன்றி சாகம்பரி.

    @ புலவர் சா இராமாநுசம்

    உடல் நலிந்த நிலையிலும் தொடர்ந்து வந்து ஊக்கமளிப்பதற்கு நன்றி ஐயா.

    @Ramani,

    தொடர்ந்து வருகை தந்து அழகானக் கருத்துக்களால் பின்னூட்டமிட்டு ஊக்குவிப்பதற்கு நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  12. @சிவகுமாரன்,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவகுமாரன். பிரபல எழுத்தாளருடன் என் எழுத்துக்களை ஒப்பிட்டு என் பொறுப்பை அதிகரிக்கச் செய்துவிட்டீர்கள். மிகவும் நன்றி.

    @ விச்சு

    மிகுந்த ரசனையுடனான ஈடுபாட்டுக்கும் ஊக்கமிகு வார்த்தைகளுக்கும் மிகவும் நன்றி.

    @ சாகம்பரி,

    உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் நன்றி சாகம்பரி. மழலைகள் பற்றிய என் பார்வையை விரைவில் பதிவிடுகிறேன்.

    @ மகேந்திரன்,

    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மகேந்திரன். என் அனுபவத்தில் வேறொரு பெயர் கொண்டவர்களிடம் ஒத்த குணாதிசயங்களைப் பார்த்திருக்கிறேன். இவை ஒரு coincidence ஆகவும் இருக்கலாம்.

    ReplyDelete
  13. @ ஹேமா

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா.

    @சத்ரியன்,

    பெரும்பாலான குடும்பங்களில் அவர்கள் இன்னும் தொடர்கதைகளாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் சத்ரியன். பல சமயம் வெளியில் தெரிவதில்லை, விருட்சம் தாங்கும் வேர்களைப் போல.

    ReplyDelete
  14. பிள்ளைகளின் பெயர் பார்த்தவுடன் யாருதுனு தோணுச்சு,பிறகு புரியவந்தது யாருடைய பிள்ளைக்ளென்று.ரெண்டாவது அட்டாக்கா?அடுத்து ஒரு சோகம் நிகழ்ந்திடுமோ? தொடருகிறேன்.

    ReplyDelete
  15. தொடர்ந்துவந்து ஊக்கமளிப்பதற்கு நன்றி ஆச்சி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.