7 September 2011

நான் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவனாய்!


பழுதடைந்த பாட்டுப்பெட்டி உபயத்தால்
பழுதடையாக் காதுகளுக்கு உத்திரவாதத்துடன்
நெடியப் பேருந்துப் பயணம் ஒன்றில்
நிறைவாய் சன்னல் ஓரம் நான்!

யாத்திரை புறப்படக் காத்திருந்ததுபோல்
நித்திரை தேடியலைந்தன சில விழிகள்!
நொறுக்குத்தீனிப் பொட்டலத்தைப்
பரபரவெனப் பிரித்தன சில கரங்கள்!

கதைப்புத்தகத்துக்குள் புதைந்து
தொலைந்துபோயின சில முகங்கள்!
கத்திக் கதை பேசிச் சிரித்தன,
வெற்றிலைச் சிவப்பேறிய சில வாய்கள்!

கடந்து செல்லும் பாதையெங்கும்
கொஞ்சிய இயற்கையின் கோலாட்டத்தை
ரசித்தபடி நான்....
நான் மட்டும்!

பார்வைபிடுங்கும்
பளீர் மின்னலென
கண்ணாமூச்சிக் காட்டியது
மலைகளுக்கப்பால்
மாலைச்சூரியன்!

பச்சைக் கம்பளத்தைப்
பரவலாய் விரித்திட்டு அது
பறந்துவிடாதிருக்க,
நட்டுவைத்த கம்பமென
நாற்புறமும் மரங்கள்!

சலசலக்கும் சிற்றோடை
கண்மறைவதற்குள்ளாய்
சட்டென நீரில் மூழ்கிப்
பறந்துவந்து தலைசிலுப்பியது,
என் மனக்காகம்!

அச்சடித்தக் காகிதம் ஒன்று
ஆகாயத்தில் பறப்பதுபோல்
இடவலம் இடம்விட்டு
இணைச்சிறகுகளில் இடிபடாமல்
இயங்கும் நாரைக் கூட்டத்தின் நடுவே
சத்தமின்றிச் சிலதூரம் பயணித்துப்
பின் அரைமனதாய்த் திரும்பிவந்தன,
என் ஒரு சோடிக் கண்கள்!

இயற்கையின் எழிலை ரசித்து,
எண்ணிலா இன்பத்தைத் துய்த்தபடி,
ஆசீர்வதிக்கப்பட்டவனாய் நான்.....
நான் மட்டுமே!

என்ன பிறவிகள் இவர்கள் என்றே
ரசனையறியா சகபயணிகளை
ஏக்கத்துடன் சபித்தவேளை,
சடாரென உலுக்கி நின்றது, பேருந்து!

உள்ளே ஒருவன் ரத்தவாந்தியெடுத்து
உயிருக்குத் துடித்துக்கொண்டிருக்க,
அந்தவிவரம் அறியாமல்
ஆகாயத்திலிருந்து குதித்தவன்போல்,
என்னவாயிற்று என்று
அலட்சிய வினாவெழுப்பிய நொடியில்
அற்பனிலும் கீழாய் சபிக்கப்பட்டவனானேன்! 
******

(பி.கு.)சற்றுமுன் பதியப்பட்ட ஏதோவொரு தூண்டுதல் என்னும் கவிதை ஏப்ரல் மாதத்தில் முன்பே பதிந்த கவிதை. தவறி மீள்பதிவாகிவிட்டது. அதை இந்தக் கவிதையால் இடமாற்றியுள்ளேன். இண்ட்லியில் இணைப்புக் கொடுத்தபிறகே கவனித்தேன்.தவறுக்கு வருந்துகிறேன்.

16 comments:

  1. \\பச்சைக் கம்பளத்தைப்
    பரவலாய் விரித்திட்டு அது
    பறந்துவிடாதிருக்க,
    நட்டுவைத்த கம்பமென
    நாற்புறமும் மரங்கள்!\\\\

    இயற்கையின் வர்ணனை அருமை!!!

    ReplyDelete
  2. மீள்பதிவுக்கு நன்றி
    மிக அருமையாக நேர்த்தியாகப் புனையப்பட்ட
    இந்தக் கவிதை த்ங்கள் கவிதைகள் அனைத்தையும்
    படிக்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிப் போகிறது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அழகான கவிதை.. கண்முன் விரியும் காட்சியாய்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அச்சடித்தக் காகிதம் ஒன்று
    ஆகாயத்தில் பறப்பதுபோல்
    இடவலம் இடம்விட்டு
    இணைச்சிறகுகளில் இடிபடாமல்
    இயங்கும் நாரைக் கூட்டத்தின் நடுவே
    சத்தமின்றிச் சிலதூரம் பயணித்துப்
    பின் அரைமனதாய்த் திரும்பிவந்தன,
    என் ஒரு சோடிக் கண்கள்!

    ஆஹா.. அருமை அருமை..

    ReplyDelete
  5. மிக அழகாக அடுக்கப்பட்ட வார்த்தைகள் கவிதையை உயர எழுப்புகின்றன. கவிதையின் கரு சிந்திக்க வைக்கிறது. அருமை கீதா.

    ReplyDelete
  6. சலசலக்கும் சிற்றோடை
    கண்மறைவதற்குள்ளாய்
    சட்டென நீரில் மூழ்கிப்
    பறந்துவந்து தலைசிலுப்பியது,
    என் மனக்காகம்!//

    வ‌ர்ணிப்பு வெகு ஜோர்!

    ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌ திருப்தியை அனுப‌விக்கும் போதே ச‌பிக்க‌ப் ப‌ட்ட‌து போலான‌தொரு ச‌ம்ப‌வ‌ம்... ந‌ல்ல‌தொரு வாழ்விய‌ல் முர‌ண்.

    ReplyDelete
  7. பார்வைபிடுங்கும்
    பளீர் மின்னலென
    கண்ணாமூச்சிக் காட்டியது
    மலைகளுக்கப்பால்
    மாலைச்சூரியன்!


    பச்சைக் கம்பளத்தைப்
    பரவலாய் விரித்திட்டு அது
    பறந்துவிடாதிருக்க,
    நட்டுவைத்த கம்பமென
    நாற்புறமும் மரங்கள்!


    உவமைகள் அருமை -ஆகா
    உரைத்தவை பெருமை
    நவமணி மாலை-மணக்கும்
    நற்றமிழ் சோலை

    தினம்தர வைண்டும்-சற்றும்
    திகட்டிடா யாண்டும்
    மனமது மகிழும்-கற்பனை
    மலரென திகழும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. @ புஷ்பராஜ்,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  9. @ Ramani,

    தங்கள் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி சார்.

    ReplyDelete
  10. @ மோகன்ஜி,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோகன்ஜி.

    ReplyDelete
  11. @ ரிஷபன்,

    பாராட்டுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  12. @ சாகம்பரி,

    கருத்திட்டு ஊக்கமளிப்பதற்கு நன்றி சாகம்பரி.

    ReplyDelete
  13. @ nilaamaghal,

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  14. @ புலவர் சா இராமாநுசம்,

    கவியால் வாழ்த்தப்பெறும் பேறு பெற்றேன், பெரும் உவகையால் உள்ளங்குளிர்ந்தேன், ஐயா. தொடர்வதற்கு நன்றி.

    ReplyDelete
  15. வார்த்தை பிரயோகம் வியக்க வைத்தது. பயணக்குறிப்பு எப்போது வாசித்தாலும் சிரிப்பு தான்!! வாழ்த்துக்கள்!! :)

    ReplyDelete
  16. முதல் வரவுக்கும் ரசித்துப் பின்னூட்டமிட்டதற்கும் மிகவும் நன்றி தக்குடு.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.