25 June 2011

அது....



உள்ளங்காலை உரசியபடியே
கூச்சம் உண்டாக்கிய அதை
அக்கணமே உதறிவிடாதது
என் தவறென்றுதான் சொல்லவேண்டும்!

சிந்தனை மழுங்கலால்
அப்பரிசத்தை
சிறுபிள்ளையின் கைத்துழாவல் என
சிலபோது சிலிர்த்துநின்றேன்!

சுற்றிச்சுற்றி வந்து
தன் மென்ரோமங்களால் பாதம் உராயும்
செல்லப்பூனையின்
பாசவெளிப்பாடெனவும்
தவறாய் நினைத்துவிட்டேன்!

மெல்லத் தவழ்ந்து
அது மேலேறியபோதாவது
சற்றே விழிப்புற்று
தந்திரமாயேனும்
தரையிறக்கிவிட்டிருக்கவேண்டும்!

சரியாக கணித்திராதது
என் மடத்தனமே!

காட்டுக்கொடியென கணப்பொழுதில்
கால்களில் பற்றிப்படர்ந்து
இடையை ஆக்கிரமித்த
அதன் இரும்புப்பிடியைக்கூட
இடுப்புக்குழந்தையின் இறுக்கிய
கால்பின்னலென்றே
கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்!

கொஞ்சம் கொஞ்சமாய்
என் நெஞ்சக்கூட்டின் மீதமர்ந்து
நிதானமாய் என் கழுத்தைக் கவ்வியபோதுதான்
கவனிக்க நேர்ந்தது, அதன்
கடுமையான ஆக்ரோஷத்தை!

அவதானிக்கும் முன்பாகவே
அழுத்தி என் குரல்வளை நெரித்து
என் மூச்சடக்கி
அதுவும் போதாதென்று
ஆரவாரமாய் என் உச்சந்தலைமயிரைப்
பிடித்துலுக்கியும், கோரப்பல் காட்டியும்
கும்மாளம் போடுகிறது அது!

நினைவு மங்கிச்சாயும்
என் இறுதித் தருணங்களிலும்
ஒரு கவிதை தோன்றக் காரணமானதால்
அப்போதும் அதனைச் சபிக்காமல்
வாளாவிருக்கிறேன்!

10 comments:

  1. பற்றி படர்ந்து
    தொட்டு தொடர்ந்த
    அது எதுவாக
    இருப்பினும்
    ஒரு நல்ல
    கவிதைக்கான
    வீரிய
    விதை என்பதால்
    விட்டுவிடுங்களேன் சகோதரி

    ReplyDelete
  2. சிங்கத்திற்கு உடம்பில் ஏற்பட்ட காயங்கள்தான் வேகத்தை தருமாம். நம்மை போன்றோருக்கு உள்ளத்து வலிதான் கவிதையின் விதை. உயிரோடு இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வலியையும் பாராட்டுவோம்.

    ReplyDelete
  3. நல்ல கவிதை பிரமாதமான வார்த்தை ஜாலங்கள்.தன் மென்ரோமங்களால் பாதம் உராயும் பூனை,இடுப்புக்குழந்தையின் இறுக்கிய
    கால்பின்னலென்றேஇந்த இருந்தும் வார்த்தை கோவைகள். உன்கள் வார்த்தை வீச்சுக்களில் திணறி போகிறோம் நாங்கள். நன்று பாராட்டுகள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  4. @ A.R.ராஜகோபாலன்,
    //பற்றி படர்ந்து
    தொட்டு தொடர்ந்த
    அது எதுவாக
    இருப்பினும்
    ஒரு நல்ல
    கவிதைக்கான
    வீரிய
    விதை என்பதால்
    விட்டுவிடுங்களேன் சகோதரி//
    விட்டுவிட்டேன். ஆனால் கவிதையில் கட்டிவிட்டேன். கருத்துரைக்கு நன்றி A.R.ராஜகோபாலன்.

    ReplyDelete
  5. @ சாகம்பரி,
    //சிங்கத்திற்கு உடம்பில் ஏற்பட்ட காயங்கள்தான் வேகத்தை தருமாம். நம்மை போன்றோருக்கு உள்ளத்து வலிதான் கவிதையின் விதை. உயிரோடு இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வலியையும் பாராட்டுவோம்.// அழகாச் சொல்லியிருக்கீங்க, நன்றி சாகம்பரி.

    ReplyDelete
  6. @ இன்பம் துன்பம்,
    //நல்ல கவிதை பிரமாதமான வார்த்தை ஜாலங்கள்.தன் மென்ரோமங்களால் பாதம் உராயும் பூனை,இடுப்புக்குழந்தையின் இறுக்கிய
    கால்பின்னலென்றேஇந்த இருந்தும் வார்த்தை கோவைகள். உன்கள் வார்த்தை வீச்சுக்களில் திணறி போகிறோம் நாங்கள். நன்று பாராட்டுகள் வாழ்க வளமுடன்//
    உங்கள் வாழ்த்துக்கும் விமர்சனத்துக்கும் நன்றி இன்பம் துன்பம்.

    ReplyDelete
  7. எதுவோ அதை
    அதன் ஆக்கிரமிக்கும் குணத்தை
    அதன் ஆக்ரோஷத்தை
    உங்களைப் போலவே எங்களையும்
    உணர வைத்த உங்கள் கவிதை
    மிக மிக அருமை
    நாங்களும் அதற்காகவே
    சபிக்காது மௌனம் காக்கிறோம்
    தரமான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கும் விமர்சனத்துக்கும் நன்றிங்க ரமணி.

    ReplyDelete
  9. உங்கள் கவிதை யோசிக்க வைத்து
    எங்களைக் கட்டிக் போட்டுவிடுகிறது.
    வாழ்த்துக்களுடன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி அருணா.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.