சந்தையிலே பெரும் பேரம் பேசி
வாங்கி வரப்பட்டத் துடைப்பம் ஒன்று
வந்த நாள் முதலாய்
கொண்டாடப்பட்டது வகையாய்.
குப்பைகளையும், தூசுகளையும்
துரத்தித் துரத்தி விரட்டியபடியால்,
அருமையான துடைப்பம் என்றே
அனைவரும் பெருமை பேச,
பெருக்கித் தள்ளுவதையும்
பெருமிதமாய்ச் செய்தது.
பட்டுக்குஞ்சம் கட்டப்படவில்லை
எனினும்,
பாழ் வெளியில் தள்ளப்படவில்லை;
வேலை நேரம் தவிர்த்து,
முடக்கப்பட்டது மூலையில் என்றபோதும்,
தனக்கெனத் தனியிடம் என்பதில்
தன்னிறைவு கொண்டது.
பார்த்திருந்தாள் கிழவியொருத்தி,
பரிதாபப் பார்வையுடன்!
எத்தனை நாளோ உன்னைத் தாங்குவார்?
சக்தியாவும் வற்றியபின்னே
சீந்தவும் ஒரு ஆளிருக்காது என்றே
சூசகமாய்த் தன்னிலையைச் சொல்லி,
தனக்குத் தானே புலம்பிக்கொண்டாள்.
அத்துடைப்பமோ,
நாளொன்றுக்கு நாலுவேளை
நடம்புரிந்தது கூடத்தில்.
பரபரவென்று பல நேரம்;
பக்குவமாய் சில நேரம்;
ஓடி ஓடி ஒரு நேரம்;
ஒய்யாரமாய் மறு நேரம்;
நின்றும், வளைந்தும்,
மடிந்தும், கிடந்தும்
பலவாறாய்ப் பயன்படுத்தியபோதும்,
பாதம் யாவும் நொந்தபோதும்,
பணியினைத் திறம்படச் செய்தது.
காலங்காலமாய் உழைத்ததன் பலனாய்
உடல் களைத்தது;
உருவமும் மெலிந்தது!
துடைப்பம் என்ற வழக்கு மாறி,
விளக்குமாறு எனவும் ஆகிப்போனது.
மாற்று ஏற்பாடாய்
மற்றுமொரு துடைப்பம்
மூலையிலே குடிகொள்ள,
குந்தியிருந்த குறையிடமும்
சொந்தமின்றிப்போக,
அன்றொரு நாளிலே,
கூட்டிப்பெருக்கி முடிந்ததும்,
முன்னறிவிப்பு ஏதுமின்றி,
குப்பையோடு குப்பையாய்
அதுவும் வீசப்பட்டது, வெளியிலே!
இடிந்து போன கிழவியும்,
இவ்வளவுதானா உன் வாழ்வும்? என்றே
எண்ணித் துயருற்ற வேளை,
அக்கம்பக்கம் பார்த்தவண்ணம்,
குப்பையில் வந்தமர்ந்த காகமொன்று,
ஈர்க்குகளை மெல்ல உருவ,
காலாவதியான பின்னும்,
காக்கையின் கூட்டுக்கொரு
கட்டுமானப் பொருளாய்ப்போகும்,
தளர்ந்த விளக்குமாற்றின் யோகம் கண்டு
நெடுமூச்சு விடுகிறாள் ஏக்கத்துடன்!
முற்றாக நலமிழந்து போனபின்னும்
ReplyDeleteகூடாக மறுபிறப்பெடுக்கும் விளக்குமாறு...
அப்போ நாம்..
யோசித்தால் இப்படி யோசிக்க வேண்டும்
வித்தியாசமான சிந்தனை
மனங்கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அதுதானே பார்த்தேன் நாமெல்லாம் பாஸிடிவ் ஆட்களாச்சே. துடைப்பத்தின் கதியை பற்றி கவலைப்பட்டேன். நல்ல முடிவு.
ReplyDeleteவித்தியாசமான சிந்தனை.
ReplyDeleteமூதாட்டியின் வாழ்க்கையோடு துடைப்பத்தையும் ஒப்பிட்டு,
ReplyDeleteபயனுள்ள போதே மதிப்பு எனும் வாழ்வியலை அழகாச் சொல்லி நிற்கிறது உங்கள் கவிதை.
வாழ்த்துக்கு நன்றி ரமணி.
ReplyDeleteகருத்துக்கு நன்றி சாகம்பரி.
வருகைக்கு நன்றி அக்கப்போரு.
கருத்துக்கு நன்றி நிரூபன்.
எனக்கும் வயது போகப் போகப் பயமாய்த்தான் இருக்கு கீதா.ஆனால் வாழ்வை நிறையவே படிக்கிறோம் !
ReplyDeleteநிறையக் கற்றுக்கொள்கிறோம், நினைவில் வைத்துக்கொள்கிறோமா என்பதும் நடைமுறையில் செயல்படுத்துகிறோமா என்பதிலும்தானே கற்றதன் பயன் அடங்கியிருக்கு. நன்றி ஹேமா.
ReplyDeleteகடைசி வரிகள் மிக கணமானவை.... பாராட்டுக்கள்.
ReplyDelete//கடைசி வரிகள் மிக கணமானவை.... பாராட்டுக்கள்.//
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.
அட... என்று யோசிக்க வைத்துவிட்டு நெஞ்சை பதம் பார்த்த கவிதை...
ReplyDelete