ஒரு
ரொட்டித்துண்டுக்காக
ஒரு
மிடறு தண்ணீருக்காக
குழந்தைகளின்
கைகளை
ஏந்திப்
பிடித்திருப்பது எந்தக் கடவுள்?
அவர்களின்
பிஞ்சுக் கைகளில்
கஞ்சிக் குவளைகளைத் திணித்து
கலவரத்தோடு அலையவிட்டு
களிப்புடனே பார்த்திருப்பது எந்தக் கடவுள்?
மயானக்
குழிகளின் மத்தியில்
மருளும்
விழிகளோடு
மழலைகளை
உலவ விட்டு ரசிப்பது எந்தக் கடவுள்?
நேற்றுவரை தூக்கிக்கொஞ்சிய அம்மையும்
அப்பனும்
விளையாட்டு காட்டிய அக்காளும் அண்ணனும்
இன்று போன இடம் தெரியாமல்
விக்கித்து அழச்செய்து
வேடிக்கை பார்த்திருப்பது எந்தக்
கடவுள்?
சிதைக்கப்பட்ட
கனவுகளின் பெருவலியை
குருதியும்
கண்ணீருமாய்க் கடக்குமாறு
கடுஞ்சாபமிட்டது
எந்தக் கடவுள்?
வீசியெறியப்பட்ட
வாழ்வின் மிச்சத்தை
விரக்தியோடு
பார்த்திருக்கும்
சின்னஞ்சிறு
இதயங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு
எந்த நீக்குப்போக்கான
பதில்களைத் தர
நித்தமும்
ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்
உலகின்
ஒட்டுமொத்தக் கடவுளர்களும்?
***



மனதை கனக்க வைக்கும் கவிதை , கடவுள் இருக்கிறாரா என்று எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை படங்களும் நெஞ்சை நெகிழ வைக்கிறது.
ReplyDeleteபோரால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் மிகவும் வேதனையாக உள்ளது. :(
Deleteமனிதம் செத்து விட்டது என்ற எண்ணமே தோன்றுகிறது
ReplyDeleteசுயநலத்தின் அடிப்படையில் உலகம் இயங்கத் தொடங்கி வெகுகாலமாகிவிட்டது.
Deleteமனதைக் கலங்க வைக்கும் வரிகள் :(. பதிலற்ற கேள்விகள்! மனிதம் தழைக்குமா?
ReplyDeleteகுழந்தைகளின் மனதில் பழிவாங்கும் எண்ணமும் வன்மமும் விதைக்கப்படாமல் இருக்கவேண்டும்.
Delete