28 October 2016

மடமயிலும் மதியறு மாந்தரும்


மப்பும் மந்தாரமுமாய் மழைமேகம்.. மயக்கும் காதலிணை அருகில்... ஆட்டத்துக்குக் கேட்கவேண்டுமாசட்டென்று தோகை விரித்து ஆடத்துவங்கிவிட்டார் அந்த ஆணழகன். அரைவட்டத் தோகையின் அத்தனைக் கண்களும்  என்னைப் பார் என் அழகைப் பார் என்று அழகு காட்டும்போது நமக்கே அவ்வளவு ஆசையாக இருக்கிறதே.. அந்தப் பெண்மயிலுக்கு ஆசை இல்லாமலா இருக்கும்.. அவளோ.. இதென்ன பிரமாதம்.. நான் பார்க்காத அழகனாஅவன் ஆடாத ஆட்டமா என்பது போல அலட்சியப் பார்வையோடு நின்றிருந்தாள். இவரோ அவ்வளவு பெரியத் தோகையை அநாயாசமாய்த் தூக்கிநிறுத்தி, தன் முன்னழகையும் பின்னழகையும் காட்டி, அவ்வப்போது இறகு சிலிர்ப்பி காவடியாட்டம் ஆடி, எங்கே அவள் பார்க்காமல் போய்விடுவாளோ என்று இஸ்.. இஸ்.. என்று இரைந்து.. அவளைக் கவர எப்படியெப்படியெல்லாமோ பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார்..




அவளிடம் ஒரு சின்ன இணக்கம் கண்டுவிட்டால் போதும்.. காதல்மனத்தைக் கவர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு அவளைச் சுற்றிச்சுற்றி வந்து ஆடுவதும்.. இன்னுமாடீ உன் மனம் இரங்கவில்லை என்பதுபோல் இடையிடையே அகவிக் கேட்பதுமாகஅவரிருக்க... மிடுக்குடை மடமயிலோ.. செருக்குடை ஆட்டத்தையும் ஆளையும் ஓரக்கண்ணால் ரசித்தபடி மென்னடையில் மெத்தனம் காட்டி மேய்ந்துகொண்டிருந்தாள் அல்லது மேய்வதான பாவனையில் இருந்தாள். இவர் அவளை விடுவதாயில்லை.. அவள் இவருக்கு இடங்கொடுப்பதாயில்லை. இப்படியொரு ஊடல் நாடகம் அரங்கேறிக்கொண்டிருக்கும் வேளையில்தான் பூங்காவின் வாயிலில் வந்துநின்றது ஒரு சிற்றுந்து. அதிலிருந்து திபுதிபுவென்று இறங்கியது ஒரு மனிதமந்தை.. ஆம்.. மந்தைதான் அது.




ஆடும்மயிலின் அதிசயக்காட்சியைக் கண்டு ஓவென்று உச்சக்குரலில் ஆரவாரித்தது. பளீர் பளீரென்ற மின்னல்வெட்டுகளோடு படம்பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் அந்த ஆணழகன் அதற்கெல்லாம் அசரவில்லை.... ப்ளாஷ் வெளிச்சத்தில் ஆட்டம் சூடுபிடிக்க, ஒரு நடனத்தாரகை போல முன்னைவிடவும் நளினமாக ஆட ஆரம்பித்துவிட்டார். பெண்மயில்தான் மிரண்டுபோனாள். எட்ட நின்ற கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கிட்டவர ஆரம்பித்தது. அப்போதும் ஆட்டம் தொடரவே.. கூட்டத்துக்கு இப்போது குளிர்விட்டுப்போனது. செல்ஃபிக்கு அடிமையான அந்த மந்தை, வசீகரமற்ற பெண்மயிலை அங்கிருந்து விரட்டிவிட்டு அழகுமயிலோடு அளவிலாத செல்ஃபி எடுத்துத் தள்ளியது. இந்த ஆணழகனும் வந்த காரியத்தை மறந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். காதலிக்காக ஆடிய ஆட்டம் இப்போது தற்பெருமைக்காக என்றாகிப்போனது. வீண்பகட்டுக்கான சொல்லாடலான proud as a peacock என்பதன் முழுப்பதமும் உணர்ந்த தருணமது. சற்றுத் தொலைவில் மிரட்சி மாறாமல் மருளும் விழிகளோடு அக்காட்சியைப் பார்த்தபடி நின்றிருந்தாள் பெண்மயில்.




இப்படியாக அன்று எனது பறவை கூர்நோக்குந்தருணம் மனித மனங்களின் கூறுகண்டு நோகுந்தருணமாயிற்று. இயற்கை அம்சங்களின் இடைபுகுந்து இடையூறு செய்யும் மனிதமந்தை இருக்கும்வரை இதுபோன்ற அன்பின் பிறழ்வுகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கும். இவ்வளவு சொல்கிறாயே.. நீ மட்டும் என்ன ஒழுங்கா.. நீயும்தானே மாய்ந்து மாய்ந்து பறவைகளைப் படம்பிடிக்கிறாய் என்று கேட்பீர்களாயின்.. நிச்சயம் அதற்கான பதில் என்னிடம் உண்டு. 




நான் ஒருபோதும் பறவைகளைத் தொந்தரவு செய்வதில்லை. அவற்றைப் படம்பிடிக்கையில் ஃப்ளாஷ் உபயோகித்ததே இல்லை. அருகில் சென்று அவற்றை அச்சுறுத்துவதில்லை. பெரும்பாலும் ஜூம் செய்துதான் படம்பிடிக்கிறேன். பறவைகளைப் படம்பிடிக்கச்செல்லும்போது அவற்றை மிரளச்செய்யும் பளீர் வண்ண உடைகளைத் தவிர்க்குமாறு ஒரு கட்டுரையில் வாசித்தது முதல் தவறாமல் அதைப் பின்பற்றுகிறேன்.





இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும். இங்கே மஞ்சள்தாடை ஆட்காட்டிப் பறவைகள் அநேகம். அவை பெரும்பாலும் சாலையோரப் புல்வெளிகளிலும் விளையாட்டு மைதானங்களிலும்தான் முட்டையிடும். வெட்டவெளியில் கூடெதுவும் இல்லாது வெறுமனே முட்டையிட்டு அடைகாக்கும் காட்சி இங்கு சர்வசாதாரணமாகக் காணப்படும் காட்சி. இப்படி செய்வதால் இது ஒரு முட்டாள் பறவை ஒன்று ஒருசாராரும்.. மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட பறவை என்று இன்னொரு சாராரும் அடிக்கடி வாதத்தில் ஈடுபடுவதுண்டு. விஷயம் அதைப்பற்றியது அல்ல.. கால்பந்து மைதானத்தின் ஒருபக்கம் அடைகாத்துக்கொண்டிருந்த பறவையை வெகு தொலைவிலிருந்து படம்பிடித்து முன்பொருமுறை பதிவிட்டிருந்தேன். அதைப் பார்த்த பறவை ஆர்வல நண்பர் ஒருவர், இதுபோன்று பறவைகள் கூடுகட்டும், அடைகாக்கும், கூட்டில் குஞ்சுகள் இருக்கும் படங்களை இணையத்தில் பதிவிடவேண்டாமென்றும்.. பலருக்கும் நீங்கள் தவறான முன்னுதாரணமாகிவிடவேண்டாமென்றும் அறிவுறுத்தியமையால் அம்மாதிரியான படங்களையும் தவிர்த்துவருகிறேன். எனவே இப்பதிவை எழுதும் தகுதி எனக்கிருப்பதாகவே எண்ணுகிறேன்.  

&&&&&&

17 comments:

  1. நூறு வீதமும் உங்களோடு உடன் படுகிறேன் கீதா.அருமையான தேவையான அவசியமான பதிவு!!
    அதனைச் சிரப்பாக எழுதிப் பகிர்ந்து கொண்டமைக்கு கூடுதல் நன்றி.

    மட மாந்தருக்கு அழகியலை உணரும் அம்சமே இல்லாது போய் பகட்டும் பிரச்சாரமும் பெரும் போதையாகி தள்ளாடித் திரிகிறார்கள்....

    அட, என்ன மாதிரியான ஓரழகை அசிங்கம் பண்ணி விட்டார்கள்... நெஞ்சு பொறுக்குதில்லை....

    ReplyDelete
    Replies
    1. ஆம். மிகவும் மனம் வருத்தும் செயல் அது.. தவறுணர்ந்து திருந்தும் காலம் வரை சொல்லவேண்டியவற்றை சொல்லிக்கொண்டே இருப்போம்.

      இந்த அழகான பூங்காவை எனக்கு அறிமுகப்படுத்தியதற்காக உங்களுக்கு என் அன்பான நன்றி தோழி.

      Delete
  2. இயற்கை அம்சங்களின் இடைபுகுந்து இடையூறு செய்யும் மனிதமந்தை இருக்கும்வரை இதுபோன்ற அன்பின் பிறழ்வுகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கும். //
    அருமையாக சொன்னீர்கள்.
    படங்களும் அழகு.


    இயற்கையை மட்டும் அல்ல கீதமஞ்சரி , குடும்ப வாழ்க்கையிலும் இடைபுகுந்து இடையூறு செய்யும் மனித மந்தைகள் இருக்கிறது. அதனால் அன்பின் பிறழ்வுகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மேடம்.. அடுத்தவரின் சங்கடங்களை மன உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் தன்னலத்தை முன்னிறுத்தும் சிலரால் எத்தனைப் பேருக்குப் பிரச்சனைகள்... தங்கள் வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  3. தோகை விரித்தாடும் அழகான ஆண் மயில் போலவே, தாங்களும் பல்வேறு செய்திகளை மிக அழகாக, மிக நளினமாக, அனைவருக்கும் மனதில் பதியும் வண்ணம் வித்யாசமாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.

    இதில் ஒன்றல்ல .... இரண்டல்ல .... பல விஷயங்கள் யோசிக்க வைப்பதாக உள்ளன.

    அருமையான அசத்தலான பயனுள்ள பதிவு .... தங்களின் தனிப்பாணி எழுத்துக்களில்.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் அழகான ஆழமான பின்னூட்டத்துக்கும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி கோபு சார்.

      தீபாவளி வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி.

      Delete
  4. JI just in this case over enthusiatic indisciplined visitors of the zoo fall victim to lion bear and to the tigers throughout the world......

    ReplyDelete
  5. Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  6. அருமையான ஒர் பதிவு.....சகலரும் அறிய வேண்டியது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி புத்தன்.

      Delete
  7. பறவைகளுக்கு எந்த விதத்திலும் தொல்லையாக இருக்கக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரை. சிலர் மிருகக்காட்சி சாலைகளில் கூண்டிலிருக்கும் விலங்குகளைச் சீண்டி எரிச்சல் படுத்தும் காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். பறவைகளின் கூடு, குஞ்சு பொரிப்பது பற்றிய படங்களை இணையத்தில் பதிவேற்றக் கூடாது என்று பறவை ஆர்வலர் சொன்ன செய்தியை அறிந்தேன். இந்த விஷயத்தில் சில சமயம் நானும் அத்துமிறீயிருக்கிறேன். இனி அந்தத் தவறைச் செய்யமாட்டேன். நன்றி கீதா! படங்கள் மிக அழகு!

    ReplyDelete
    Replies
    1. இப்பதிவின் மூலம் தாங்களும் ஒரு புதிய தகவலை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தமைக்காய் மிகவும் மகிழ்ச்சி. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அக்கா.

      Delete
  8. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் 💐🎁

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் கிரேஸ்.

      Delete
  9. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.