குடி
குடியைக்
கெடுக்கும், புகை நமக்குப் பகை, புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்பதெல்லாம் பெயரளவில் வெறும் அறிவிப்புகளாகி வெகுகாலமாகிவிட்டது. அவற்றைக் கடைப்பிடிப்பார் மிகவும் அருகிவரும் காலமுமாயிற்று. அதற்காக அப்படியே நாம் விட்டுவிட முடியுமா.. ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருந்தால் என்றாவது அது செவிடென பாவனை செய்யும் செவிப்பறைகளை எட்டிவிடாதா என்னும் நப்பாசை நமக்கு உண்டே.. அப்படியான முயற்சிகளுள் ஒன்றுதான் வருடாவருடம் மே 31 அன்று அனுசரிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்புதினம். உலக
புகையிலை
எதிர்ப்பு
தினமான இன்று என்னாலான சிறு பங்களிப்பை வழங்கவே இப்பதிவு.
குடியும் புகையும் உடல்,மன ஆரோக்கியமுள்ள எவருக்கும் ஏற்புடையவையன்று. ஆனால் தற்போது அவையெல்லாம் இன்றைய தலைமுறையின் அடையாளமென ஆகிப்போய்விட்டன. குடியோடு ஒப்பிடுகையில் குடியை விடவும் புகை பல மடங்கு ஆபத்தானது என்பதை நாம் அனைவருமே அறிவோம். குடிகாரர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும்தான் பாதிப்புக்காளாக்குவார்கள். ஆனால் புகைப்பிடிப்பவர்களோ.. தங்களோடும் தங்கள் குடும்பத்தோடும் தங்களைச் சுற்றியிருப்பவர்களையும் தாங்கள் வெளியிடும் நச்சுப்புகையால் நாசமாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆண்டுதோறும் உலகளவில் சுமார் 55 லட்சம்பேர் புகைப்பழக்கத்தால் இறக்கிறார்கள் என்றும் அதில் பத்து லட்சம் பேர் இந்தியர் என்றும் ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் இரண்டாமிடம்.. புற்றுநோய், இருதய நோய், சுவாசக்கோளாறு போன்ற ஏராளமான நோய்களுக்கு புகைப்பழக்கம் வழிவகுக்கும் என்று தெரிந்தே எமனை எதிர்கொண்டு அழைப்பவர்கள் ஏராளம். புகைப்பிடிப்பவர் வெளியிடும் நச்சுப்புகையில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இராசாயனங்கள் உள்ளன என்றும் அவற்றுள் அறுபதுக்கும் மேற்பட்டவை மனித உடலில் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புகைப்பிடிக்க ஆரம்பித்த நொடியே பாதிக்கப்படும் உடலுறுப்புகள், புகைப்பழக்கத்தை விட்டுவிட்டால் அடுத்த நொடியே மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி ஆரோக்கியம் மீண்டுவிடுகிறதா என்றால் அதுதான் இல்லை.. புகைப்பழக்கத்தை நிறுத்திய பத்துப்பதினைந்து வருடங்களுக்குப் பிறகே உடலுறுப்புகள் பாதிப்பிலிருந்து முழுவதுமாய் விடுபட்டு உடல் ஆரோக்கிய நிலைக்கு வருமாம்..
உலகநாடுகள்
பலவற்றிலும்
பதினெட்டு
வயதுக்கு
உட்பட்டோருக்கு
சிகரெட் போன்ற புகையிலைப்பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால் பல நாடுகளில் அச்சட்டம் பெயரளவில் மட்டுமே உண்டு. ஆனால்
ஆஸியில்
அப்படியில்லை. கடுமையான தண்டனை உண்டு. ஆனாலும் குற்றங்கள் குறைந்துவிடவில்லை.. ஆஸியில்
காண்பிக்கப்படும் திருட்டு,
கொள்ளை போன்ற செய்திகளில் அடிக்கடி இடம்பிடிப்பவை புகையிலை சமாச்சாரங்களே… சில சமயம்
சிகரெட் வழங்கும் தானியங்கி எந்திரங்களையே அடியோடு பெயர்த்துக் காரில்
கட்டிவைத்துக் கொண்டுபோகிறார்கள். அவ்வளவு புகைவெறி..
இங்குள்ள பங்களாதேஷிக்
கடையொன்றில் சில நாட்களுக்கு முன் ஒரு பெண் வந்து சிகரெட் கேட்டிருக்கிறார். அவருடைய உடை மற்றும் மேக்கப்பைப் பார்த்தால் இருபத்தைந்து வயது மதிக்கலாமாம். எனவே அக்கடையில் பணிபுரிந்த இளைஞன் அப்பெண் கேட்டதைக் கொடுத்துவிட்டான். திடீரென போலீஸ் கடைக்குள் வந்து அவனைக் கைதுசெய்துவிட்டது. காரணம் சிகரெட் வாங்க வந்த பெண் போலீஸ் அனுப்பிய பெண். அப்பெண்ணுக்கு பதினெட்டு வயது இன்னும் பூர்த்தியாகவில்லையாம். சட்டப்படி, ஓட்டுநர் உரிமம் போன்ற புகைப்படத்துடன் உள்ள ஏதாவதொரு அடையாள அட்டையைக் கேட்டுவாங்கி வயதை உறுதி செய்தபின்னர்தான் கடைக்காரப்பையன் அப்பெண்ணுக்கு சிகரெட் விற்றிருக்கவேண்டும். அவன் அப்படி செய்யவில்லை.. வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குற்றம் உறுதிசெய்யப்பட்டுவிட்டால் அவ்விளைஞன் சுமார் ஐம்பதாயிரம் டாலர் வரை அபராதம் செலுத்தவேண்டும்.. குடும்பச்சுமையுள்ள இளைஞன்… அந்தக் குடும்பம் புலம்பித்தீர்க்கிறது.. என்ன புலம்பினாலும் சட்டம் சட்டம்தான். அது தன் கடமையைத் தவறாமல் செய்துவிடும்.
இதில்
வேடிக்கை
என்னவென்றால்
புகை சமாச்சாரங்களை பதினெட்டு வயதுக்குட்பட்டோருக்கு விற்பனை செய்வதுதான் சட்டப்படி குற்றம். அப்படி விற்பனை செய்வோருக்கு தண்டனை உண்டு. ஆனால் அதை வாங்கி உபயோகிக்கும் பதினெட்டு வயதுக்குட்பட்டோருக்கு எந்த தண்டனையும் இல்லை.. ஏனெனில் இன்னும் அதற்கான சட்டமேதும் இயற்றப்படவில்லை.
இந்த
சமயத்தில்
எனக்கொரு
விஷயம் நினைவுக்கு வருகிறது. எட்டு, பத்து வயதுகளில் எங்கள் அப்பா எங்களிடம் காசு கொடுத்து சிகரெட் வாங்கிவரச்சொல்லும்போதெல்லாம் தெருமுனை கடைக்கு ஓடிச்சென்று வாங்கிவந்து தருவோம். அதை பெருமையாகக் கூட அப்போது நினைத்திருக்கிறேன். இங்கெல்லாம் அதை நினைத்தும் பார்க்க முடியாது.
ஆஸியில்
நான் மெச்சும் ஒரு விஷயம் இங்கு
பேருந்து,
ரயில், படகு, விமானம் இவற்றினுள் மட்டுமல்ல… பேருந்து நிலையம், ரயில் நிலையம், படகுத்துறை, விமானநிலையம் போன்றவற்றிலும் புகைப்பிடிக்கக்கூடாது. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்.. சிகரெட் புகை மட்டுமல்ல, அடுப்புப்புகையும் ஆகாது எனக்கு. இரும ஆரம்பித்தால் நெஞ்சுக்கூடு வெடித்துவிடும் அளவுக்கு இருமிக்கொண்டே இருப்பேன். சென்னைவாழ் சமயங்களில் சென்னையிலிருந்து திருச்சிக்குப் பயணித்த என் பேருந்து அனுபவங்கள் சில கொடுமையானவை. ஓடுகிற பேருந்தில் சிலர் சுற்றியுள்ளவர்களைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள்பாட்டுக்கு புகைப்பிடித்துக்கொண்டு வருவார்கள். நமக்கோ நெஞ்சு எரியும். தாங்கமுடியாமல் நடத்துநரிடம் சொல்லி அவர்களைத் தடுக்க முயன்று
பிரச்சனைகளுக்காளாகி நிறைய சங்கடங்களை எதிர்கொண்டிருக்கிறோம். அதனால்தான் இந்த ஆசுவாசம்.
ஆஸியில்
புகைப்பிடித்தல்
தடை செய்யப்பட்டுள்ள மேலும் சில இடங்கள்…
1. பொது
இடங்களான
பூங்காக்கள், நீச்சல்குள வளாகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், போக்குவரத்து நெரிசலான இடங்கள், , அரசு அலுவலகங்கள், பணியிடங்கள், புகை அனுமதிக்கப்பட்ட உணவகங்களைத் தவிர்த்த பிற உணவகங்கள், திறந்தவெளி உணவகங்கள் இவற்றில் புகைப்பிடித்தல் கூடாது.
2. குழந்தைகள் விளையாடும் இடத்திலிருந்து பத்து மீட்டர்
சுற்றளவுக்குள் புகைப்பிடித்தல் கூடாது.
3. விளையாட்டரங்குகளில் பார்வையாளர்களோடு இருக்கையில்
புகைப்பிடித்தல் கூடாது.
4. காருக்குள்
நீங்கள் மட்டுமிருந்தால் தாராளமாய்ப் புகைப்பிடிக்கலாம்.. அதே சமயம் உங்களோடு காரில் பதினாறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்தால் அப்போது புகைப்பிடித்தல் சட்டப்படி குற்றம்.
5. பொதுவளாகங்களின் நுழைவு
வாயிலிலிருந்து
நான்கு மீட்டர் தொலைவுக்குள் புகைப்பிடித்தல் கூடாது.
தடையுத்தரவுகளை மீறினால்
அபராதம்தான்.
ஆஸியின்
அதி தீவிர புகைப்பிடிப்பாளர்களின் புகைப்பழக்கத்தைக் குறைக்கவும் முற்றிலுமாய்க் கைவிடவும் பல
விழிப்புணர்வு
பிரச்சாரங்களும்
உத்திகளும்
முன்வைக்கப்படுகின்றன.
அவற்றுள்
ஒன்று Tobacco Plain Packaging அதாவது சிகரெட் பெட்டிகளின் மேலட்டைகள், கவர்ச்சியற்று..
தயாரிப்பு
நிறுவனங்களின்
பிரத்தியேக
அடையாளமோ
நிறமோ ஏதுமற்று.. வெளிறிய நிறத்துடனும் புகைப்பழக்கத்தால்
கடுமையாகப் பாதிக்கபட்ட உடலுறுப்புகளின் படங்களையும் தாங்கி வருகின்றன. கீழே கிடக்கும் வெற்று அட்டைப்பெட்டிகளைப்
பார்த்த மாத்திரத்தில் புகைப்பழக்கமில்லாத நமக்கே பகீரென்னும்போது நிச்சயம் அதை நித்தமும்
வாங்கிப் பயன்படுத்துவோருக்கு சற்றேனும் பயத்தை அளித்து புகைப்பழக்கத்தினின்று வெளிக்கொணரும்
என்பது உண்மை. சில அறிவுஜீவிகள் இருக்கிறார்களாம்.. பாக்கெட்டாய் வாங்கினால்தானே பாதிப்பைப் பார்க்கநேரும் என்று உதிரி உதிரியாய்
வாங்கி உல்லாசமாய் புகைப்பிடிக்கிறார்களாம்… பூனை கண்ணை மூடிக்கொண்டு
பூலோகமே இருண்டுவிட்டது என்று நினைக்குமாம்.. அதைப் போலத்தான்
இருக்கிறது இவர்களுடைய செய்கை.
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
என்பது திருடனுக்கு மட்டுமல்ல.. எந்தவொரு தவறான செய்கையில் ஈடுபடும் எவருக்குமே
பொருந்தும். தாங்களாக மனம்வைத்து திருந்தினால் ஒழிய தங்கள் தவறுகளைத்
திருத்திக்கொள்ள இயலாது.
வரமாய்க் கிடைத்த வாழ்விது. அதற்கு நஞ்சூட்டி நாசம் செய்யலாகுமோ? புகைப்பிடிப்போரே.. சற்றே சிந்திப்பீர்! புகைதனைத் தவிர்ப்பீர்! நலமாய் வாழ்வீர்! பிறரையும் நலமாய் வாழவிடுவீர்!
(படங்கள் உதவி: இணையம்)
இன்றைய சூழலுக்கு ஏற்ற பயனுள்ள பதிவு சகோ.நமது இந்திய நாடு 2-வது இடம் என்பதில் வெட்கமாக இருக்கிறது.
ReplyDeleteநேரம் பயனுள்ளதாக இருந்தது நன்றிகள் சகோ.
வருகைக்கும் மனந்திறந்த கருத்துக்கும் மிகவும் நன்றி வைசாலி செல்வம்.
Deleteஎனக்கு ஒரு நண்பர் விடாது புகைப்பவர் புகை மறுக்கும் தினத்திலாவது புகை பிடிக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டு அப்படி இருந்தால் பந்தயமாக ஒரு தொகை தருகிறோம் என்றும் சொன்னோம் பந்தயத்தை ஏற்று மதியம் இரண்டு மணி வரை தாக்குப் பிடித்தார் அதற்குள் அவர் கை கால்கள் நடுங்க்த் துவங்கி பந்தயத்தில் தோற்றதை ஒப்புக் கொண்டு மீண்டும் புகக்கத் தொடங்கினார் நெடு நாளையப் புகைப் பிடிப்பவர்கள் அதை நிறுத்த மிகவும் மெனக் கெட வேண்டும் அந்தப் பழக்கம் பக்கமே போகாமல் இருப்பதே புத்திசாலித்தனம் வாழ்த்துகள்
ReplyDeleteஉண்மைதான். இங்கும் ஒருநாளாவது புகைப்பிடிக்காமல் இருக்க வலியுறுத்தி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒருநாள் முடியும் என்றால் தொடர்ந்து புகைக்காமல் இருக்க முடியாதா என்னும் பேராவல்தான். எத்தனைப் பேருக்கு சாத்தியப்படுகிறது என்பதுதான் தெரியவில்லை. வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
Deleteசரியான நாளில் உரிய பதிவு. அவர்களாகவே திருந்தினால்தான் உண்டு.
ReplyDeleteதிருந்த வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் எழுந்தால்தானே முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteமிக மிக அருமையான தெளிவான பதிவு. நம் நாட்டிலும் பொது இடத்தில் புகைக்குத் தடை வந்த போதும் அது பின்பற்றப்படவில்லை, கேரளத்தில் பின்பற்றப்படுகின்றது.
ReplyDelete18 வயது என்று ஏன் சொல்கின்றார்கள் என்று தெரியவில்லை. 18 வயதிற்குப் பிறகும் அது கெடுதல்தானே. சட்டங்களும் எல்லா வயதினருக்கும் இருந்தால் நல்லது தானே.
சரியான தினத்தில் அருமையான பதிவு..
இப்போதுதான் தங்களின் அட்டகாசமான கதையை எங்கள் ப்ளாகில் படித்துவிட்டு வந்தோம். மனதைத் தொட்டுவிட்டது...வாழ்த்துகள்
கெடுதல் என்றால் எந்த வயதிலும் கெடுதல்தான்.. சரிதான் நீங்கள் குறிப்பிடுவது.. தங்கள் வருகைக்கும் இப்பதிவு பற்றிய கருத்தோடு எங்கள் ப்ளாக்கில் கதை பற்றிய கருத்தும் இட்டு ஊக்கமளிப்பதற்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.
Deleteவிழிப்புணர்வூட்டும் மிகவும் பயனுள்ள பதிவு. பாராட்டுகள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி கோபு சார்.
Deleteசரியான நேரத்தில் சிறப்பான பகிர்வு.
ReplyDeleteஇன்று புகையிலை எதிர்ப்பு தினம் என்று அறிந்தவுடன் சட்டென்று தோன்றியதை பதிவாக்கிவிட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.
Deleteஅருமையான விழிப்புணர்வு பதிவு கீதா ..வெளிநாடுகளில் இந்திய பாகிஸ்தானிய இலங்கை பங்களா மக்கள்தான் இப்படிப்பட்ட cost cutter வகை பெட்டிகடைகளை வச்சிருக்காங்க கவனிக்காம சிகரெட் /மது விற்றதில் பிரச்சினை நம் ஆசியருக்கே நிறைய நடந்திருக்கு இங்கும் ..
ReplyDeleteநானும் உங்களைப்போலத்தான் பத்தடி தள்ளி பத்துநிமிஷமுன் சிகரெட் குடித்தவர் போனாலும் அந்த வாசனை என் நெஞ்சை எரிக்கும் ..நான் யோசிப்பேன் எனக்கே இப்படின்னா அந்தாள் குடும்பத்தில் பிள்ளைங்க இருந்தா :(
படத்தை பார்த்தெல்லாம் திருந்த மாட்டங்க கீதா புகை பிடிப்பவர்களை இவங்களை கான்சர் ஹாஸ்பிடலில் கம்யூனிடி சர்வீஸ் செய்ய விடனும் ..
வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி ஏஞ்சலின்.
Delete\\புகை பிடிப்பவர்களை இவங்களை கான்சர் ஹாஸ்பிடலில் கம்யூனிடி சர்வீஸ் செய்ய விடனும் ..\\ சரியான யோசனை ஏஞ்சலின். இதை மட்டும் நடைமுறைப் படுத்தினாலே போதும்.. ஏராளமானோர் புகைப்பழக்கத்தை விட்டுவிடும் வாய்ப்பு உள்ளது.
சூப்பர் யோசனை ஏஞ்சல்!!! அருமை!
Deleteகீதா
தாங்களாக மனம்வைத்து திருந்தினால் ஒழிய தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ள இயலாது.//
ReplyDeleteஉண்மை.
நல்ல விழிப்புணர்வு கட்டுரை.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மேடம்.
Deleteஇவர்களை திருத்துவது கடினம்தான்! நல்ல விழிப்புணர்வு பதிவு!
ReplyDeleteகடினம்தான் இருந்தாலும் முயற்சிகளை மேற்கொள்வோம்.. எறும்பு ஊரக் கல்லும் குழியுமாம்.. மனங்கள் வழிக்கு வராதா என்ன..
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.
தத்தம் உடலுக்குத் தாமே தீங்கிழைத்துக்கொள்வது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்த் தொடர்கிறது . ஆஸ்த்ரேலியாவின் சட்டங்கள் பாராட்டுக்குரியவை .
ReplyDeleteஅறிந்தே கேடுவரவழைத்துக் கொள்வோரை என்ன சொல்லியும் திருத்தமுடியாது என்றாலும் முடிந்தவரை முயற்சி செய்யலாமே என்றெண்ணியே இப்பதிவு. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
Deleteதன்னையும் சுற்றி இருப்போரையும் சூழலையும் ஒருசேரப் பாதிக்கும் பழக்கம்.
ReplyDeleteஇப்புகைக்கு எனக்குச் சிறுவயதில் இருந்தே ஒவ்வாமை உண்டு. கடும்வெறுப்பும்...!
இது பற்றிய சுவையான பழைய பாடல்கள் தமிழிலக்கியத்தில் இருக்கின்றன.
ஏதேனும் இதழ்களுக்குக் கட்டுரைக்கென எழுதினீர்களா? :)
நடை அறுவை சிகிச்சை மருத்துவரின் கத்திபோல் இருக்கிறது, :)
நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. எனக்கும் இந்த புகையோடு பகை உண்டு. எனக்கு வரவிருக்கும் கணவர் புகைப்பழக்கம் அற்றவராக இருக்கவேண்டும் என்ற என் ஆழ்மன விருப்பத்தை என் தோழியிடம் வெளியிட்டபோது அவள் சிரித்தாள்.. இந்தக்காலத்தில் அப்படி யாராவது கிடைத்தால் அதிசயம்தான் என்றாள்.. உண்மையில் அதிசயம் நடந்து புகைப்பழக்கம் இல்லாத கணவர் அமைந்தார். :)))
Deleteஇந்தக் கட்டுரையை என் மன ஆறுதலுக்காகவே எழுதினேன். எந்த இதழ்களுக்காகவும் அல்ல... இங்கே வலையில்தான் பதிவிட்டுள்ளேன். எவருக்கேனும் மனமாற்றம் உண்டாயின் அதுவே எழுதியதன் பலன் என நினைக்கிறேன். நடை அறுவை சிகிச்சை மருத்துவரின் கத்திபோல் இருக்கிறது என்ற தங்கள் விமர்சனத்தை ரசித்தேன். மிக்க நன்றி.
புகை பற்றிய சுவையான பாடல்கள் தமிழிலக்கியத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளீர்கள்.. தேடிப் பார்க்கிறேன். கிடைக்கவில்லையெனில் தங்களைத்தான் நாடிவருவேன்.. குறிப்பிட்டமைக்கு நன்றி சகோ.
Delete