24 August 2013

அன்பெனும் பெயரால்...



விதையுறக்கம் போதும் விழித்தெழுவென்று
உசுப்புகிறது உள்ளுணர்வு!
மனக்களத்தைக் கிளர்ந்துவெளிப்படும்
சுயத்தின் முளைதோறும்
சுடுநீர் ஊற்றிப்போகும் உன்செய்கைக்கு
அகந்தை என்றோ
அறியாமை என்றோ
ஆதிக்க மனோபாவம் என்றோ
பொருமல் என்றோ
பொறாமை என்றோ
புரிதலின்மை என்றோ
இன்னும் வேறேதேதோ
முற்றிலும் பொருத்தமானதொன்றைத்
தேடிக்கொண்டிருக்கையில்
அநாயாசமாய் சூட்டப்படுகிறது
அன்பென்னும் பெயர் அதற்கு!

எழ எழத் தலைதட்டி
அந்த அன்பின் பெயராலேயே
அடக்கிவைக்கப்படுகிறது வித்து!
ஆனாலும் அலட்சியமாயிருந்துவிடாதே
நீ அசந்திருக்கும் பொழுதொன்றில்
ஆகாயம் முட்டிக்கிளைத்து வளரக்கூடும்
ஓர் அசுரவிருட்சம்! 
 **************
 (அதீதம் இதழில் வெளியானது)


31 comments:

  1. //எழ எழத் தலைதட்டி அந்த அன்பின் பெயராலேயே அடக்கிவைக்கப்படுகிறது வித்து!//

    மிக அழகான கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. புரிதலின்மை என்றோ…
    இன்னும் வேறேதேதோ…//உண்மைதான்

    ReplyDelete
  3. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete

  4. / சுடுநீர் ஊற்றிப்போகும் உன்செய்கைக்கு
    அகந்தை என்றோ…
    அறியாமை என்றோ…
    ஆதிக்க மனோபாவம் என்றோ…
    பொருமல் என்றோ…
    பொறாமை என்றோ…
    புரிதலின்மை என்றோ…
    இன்னும் வேறேதேதோ…
    முற்றிலும் பொருத்தமானதொன்றைத்
    தேடிக்கொண்டிருக்கையில்/அன்பெனப் பெயர் சூட்டுவது யார் , எஙஙனம். ? /ஆனாலும் அலட்சியமாய் இருந்து விடாதே நீ அசந்திருக்கும் பொழுதில்.?இதில் வரும் ”நீ”யாரைச் சுட்டுகிறது? எதோ சொல்ல வந்தது தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாதல்லவா.. வாழ்த்துக்கள். .

    ReplyDelete
  5. ஆகாயம் முட்டிக்கிளைத்து வளரக்கூடும்
    ஓர் அசுரவிருட்சம்!
    >>
    அன்பு வளரட்டும். வளர்ந்து தன் கிளைகளை இப்புவியெங்கும் பர்ப்பட்டும்

    ReplyDelete
  6. அருமை அப்படி எழுந்த விதைகள் பலதான்
    இன்று விருட்சங்களாய் உலகுக்கு நிழல் கொடுத்துக்
    கொண்டிருக்கின்றன

    ReplyDelete
  7. அன்பென்னும் அசுர விருடசம்...!

    ReplyDelete
  8. நீ அசந்திருக்கும் பொழுதொன்றில்
    ஆகாயம் முட்டிக்கிளைத்து வளரக்கூடும்
    ஓர் அசுரவிருட்சம்!
    //

    அன்பான அசுரவிருட்சம் வளர்ந்து அதற்குள் அனைவரையும் கட்டி போடலாம், ஆனால் முடக்கி போட கூடாது அதை தானே சொல்கிறீர்கள்?

    அன்பு தனக்கு மட்டும் சொந்தம் மற்றவர்களுக்கு இல்லை என்று இல்லாமல் எல்லோருக்குமாய் கிளை பரப்பி வளர விட வேண்டும்.
    வளர்வதை கண்டு பொருமல்
    பொறாமை இல்லாமல் கண்மூடித்தனமான அன்பில் கட்டி போடாமல் சுயத்தை உண்ர வைத்து வெளி வந்து அனைவரையும் அன்பால் மகிழ்ச்சி படுத்த விட வேண்டும். அசுரவிருட்சங்கள் . அப்படிதானே கீதமஞ்சரி. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  9. Anonymous24/8/13 21:58

    அழுத்தப்பட்ட ஆழமான உணர்ச்சிகளை அழகாக
    சித்திரிக்கும் கவிதை மனதை உலுக்குகிறது .

    ReplyDelete
  10. ஆகாயம் முட்டிக்கிளைத்து வளரக்கூடும்
    ஓர் அசுரவிருட்சம்!

    ஆழமாக மனதில் பதிந்த வரிகள். வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  11. அன்பெனும் பெயரால் அடக்கிவைக்கப் படுதலை
    அழகாக, மிக மிக அழகாக வார்த்தைகளால்
    தொடுத்தர கவிசரம் மனதை மணத்தால் நிரப்பியது!

    வாழ்த்துக்கள் தோழி!

    த ம.3

    ReplyDelete
  12. அப்பப்பா..
    சுயத்தின் முளைதோறும்
    சுடுநீர் ஊற்றிப்போகும்
    என்று சொல்லி
    எத்தனை எத்தனை
    விடையங்கள்...
    உள்ளுணர்வு எனும் விதை
    நிலம்கீறி தளிராகி
    பெரும் விருட்சமாகி
    அவனியில் நிழல் தரும்முன்
    எத்தனை எத்தனை ஆதிக்க சக்திகள்
    முளைகிள்ள காத்திருக்கின்றன..
    ==
    வெற்றி எனும் பெரும்பாதையில்
    நடைபோடத் துடிக்கும் சாமானியன்
    எதிர்விழையும் உந்துதலால்
    முயற்சிக்கிறான்..
    ஏதோ ஓர் இடத்தில் அவன் சுயம்
    பெருமை தலை தூக்குகிறது..
    அங்கே ஒரு மணிக்கட்டு குட்டுகிறது...
    அகம்பாவம் கொள்ளாதே..
    சிரமற்றுப் போவாய் என...
    அந்த உந்து சக்திக்கு
    அன்பெனும் பெயர் வைத்த விதம் அழகு...
    ==
    இறுதியில் ஆனாலும் உள்ளுணர்வே (நீ என நீங்கள் குறிப்பிட்டது இதைத்தான் என நினைக்கிறேன்)
    அசட்டையாக இருந்துவிடாதே எப்போதேனும் சுயம் தலைதூக்கி
    பெருநிழல் கொடுக்க நினைக்கும் உன் விருட்ச வளர்ச்சியை தடைபோட்டு
    பெருங்கொடுமை விருட்சமாய் மாறிவிடும் என
    எச்சரித்ததும் அழகு..
    ==
    பிரகலாதன் வழித்தோன்றி மகாபலி மன்னன் பெரும் நற்குணங்கள் கொண்டவன்..
    ஆயினும் அரக்க குலமல்லவா.. தற்பெருமை அகங்காரம் எனும் தோன்றி
    அவனையே அழித்தொழித்தது..
    இந்த புராணக் கதையை இக்கவிக்கு உதாரணமாக கொள்கிறேன் சகோதரி..

    அருமை அருமை.. சொல்லிற்குள் அடக்கமுடியாத பொருளுள்ள கவிதை...

    ReplyDelete
  13. மிக அருமையான கவிதை, கீதா.

    ReplyDelete
  14. வணக்கம் கீதமஞ்சரி நலம்தானே? உங்கட வீட்ட வருவதற்கு நான்பட்ட பாடிருக்கே அப்பப்பா.... கடசியில நவிகேட்டர் பாவிச்சுத்தான் வந்தேன்:).

    உங்கள் பெயரை கிளிக் பண்ணினால்ல் புளொக் நேமும் தெரிவதுபோல செய்து வையுங்கோ..

    அழகிய கவிதை ஆனா எனக்கு உந்தத் தமிழ் புரியுதில்லை. ஆனா எனக்கு தமிழில “டி” ஆக்கும்:) எங்கிட்டயேவா?.. சரி சரி மீண்டும் ஓர் இனிய மாலைப் பொழுதில் சந்திப்போம்.. சென்று வருகிறேன்ன்.

    ReplyDelete
  15. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வை.கோ.சார்

    ReplyDelete
  16. @கவியாழி கண்ணதாசன்

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  17. @ஸ்ரீராம்.

    வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

    ReplyDelete
  18. @G.M Balasubramaniam

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா.

    அன்பின் பெயரால் தலைதட்டி வைக்கப்படும் சில சுயங்கள் பற்றிய பிரக்கினையில் எழுதப்பட்ட கவிதை இது. அன்புக்குரியவர்களின் வளர்ச்சி (தாய்மை, காதல், பாசம், நட்பு என்று எந்தவிதமான அன்புறவிலும்) அந்த அன்பின் பெயராலேயே தடுத்து நிறுத்தப்படுவதை சில இடங்களில் பார்க்கநேரும்போது எழுதத் தோன்றியது.

    ReplyDelete
  19. @ராஜி

    அதீதமாய் வளர்ந்துவிட்ட அன்பின் காரணமாகவே எழுதப்பட்ட கவிதை இது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜி.

    ReplyDelete
  20. @Ramani S

    அழகான புரிதல். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  21. @இராஜராஜேஸ்வரி

    அன்பே அசுர விருட்சமாய்... உண்மைதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

    ReplyDelete
  22. @கோமதி அரசு

    சிறப்பான புரிதல். மிக்க நன்றி தங்களுக்கு. அன்பெனும் பெயரால் வளர்ச்சி முடக்கப்படுவதை யார்தான் சகித்திருப்பார்கள். என்றேனும் ஒருநாள் கட்டுப்பாடுடைத்து வெளிவரத்தானே வேண்டும்? ஆழமான கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி மேடம்.

    ReplyDelete
  23. @ஸ்ரவாணி

    வருகைக்கும் நெகிழ்வான கருத்துரைக்கும் மிகவும் நன்றி ஸ்ரவாணி.

    ReplyDelete
  24. @Sasi Kala

    வருகைக்கும் கவிதையின் ஆழம் கண்டுணர்ந்து ரசித்தமைக்கும் மிக்க நன்றி சசிகலா.

    ReplyDelete
  25. @இளமதி

    நேரிய புரிதல். வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி இளமதி.

    ReplyDelete
  26. @மகேந்திரன்

    கவிப்பொருளை மாற்றுக்கண்ணோட்டத்தில் கண்ட கருத்துரை வெகுவாக சிந்திக்கவைக்கிறது. சிறப்பான பகிர்வு மகேந்திரன். கவிஞன் கண்டாலே கவிதை என்பதை மெய்ப்பிக்கும் வரிகள். மனம் நிறைந்த நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  27. @ராமலக்ஷ்மி

    வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  28. @athira

    வாங்க அதிரா. நேவிகேட்டர் பாவித்தாவது எங்க வீட்டுக்கு வந்துவிட்டீர்களே... மனமார்ந்த நன்றி தங்களுக்கு. கவிதையின் விளக்கம் மேலே ஜிஎம்பி ஐயாவுக்கான பதிலில் கொடுத்திருக்கிறேன். இப்போது புரியுமென்று நினைக்கிறேன். உங்கள் கொஞ்சுதமிழுக்கு நான் ரசிகையாகிவிட்டேன். வருகைக்கு மிக்க நன்றி அதிரா.

    ReplyDelete
  29. விதையுறக்கம் போதும் விழித்தெழுவென்று
    உசுப்புகிறது உள்ளுணர்வு!

    தொடக்கமே அருமை! கவிதை மரம் முளைத்து விட்டதே!

    ReplyDelete
  30. @புலவர் இராமாநுசம்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.