14 June 2013

நெடுநல்வாடையை நுகரவாருங்கள் - 6

அரண்மனையின் உள்ளே ஆட்சி செய்த அற்புத எழிலையும் செல்வச் செழிப்பையும் காண்போம் வாரீர்.
 
நெடுநல்வாடைப் பாடல் ((101- 107)
யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கைஏந்தும் ஐஅகல் நிறைய நெய்சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர்எரி
அறுஅறு காலைதோறு அமைவரப் பண்ணிப்
பல்வேறு பள்ளிதொறும் பாய்இருள் நீங்க
பீடுகெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் 

 

யவனரின் புதுமைக் கலைநயத்தையும்
யாவினும் மேவிய எழில்நலத்தையும்
யாமம் முழுவதும் எடுத்துரைப்பர்
யவ்வனமிகு பாவைப்பதுமையர்! 
 நளினம் நிறைந்த அவர்தம்
வளமான கையேந்திய விக்குகளில்
அளவோடு நெய்யூற்றி அடர்ந்த திரியேற்றி
நிமிர்ந்தெரியும் பொன்சுடர் யாவும்
அணைந்துபோகுமென அறியுந்தோறும்
எண்ணெயிட்டு எரிய ஊக்கியும்
எங்கெங்கும் இருள் நீக்கியும்
மங்கிய இரவு முழுவதும்
மாளிகையை ஒளிரச்செய்தனர்.
 
ந்தப்புறம் இருக்கும் அந்தப்புரம் தன்னில்
அரசனை அல்லாது அந்நிய ஆடவர் செல்லாது
பலத்தக் காவலிருந்தார், வலுத்தக் காவல்வீரர்!
  
வரை கண்டன்ன தோன்றல, வரைசேர்பு
வில் கிடந்தன்ன கொடிய பல்வயின்
வெள்ளி அன்ன விளங்கும் கதைஉரீஇ
மணி கண்டன்ன மாத்திரள் திண்காழ்
செம்பு இயன்றன்ன செய்வுஉறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூ ஒருகொடி வளைஇ
கருவொடு பெயரிய காண்புஇன் நல்இல் (108 – 114)

 

மாமலையென எழுந்தோங்கிய  மாளிகையதனை,
மாமலை சூழ்ந்த வானத்துவில்லென
மாளிகை சூழ்ந்த வண்ணப் பூங்கொடிகள் அசைய... 

பளபளக்கும் வெள்ளிபோல் பலவிடங்கள் பொலிந்தும்
கருகருக்கும் நீலமணிபோல் கரிய தூண்கள் எழுந்தும்
செம்பினாற் செய்தாற்போன்ற பெருஞ்சுவரில் காணும்
கொம்பற்ற கொடியோடு கோடிமலரோவியம் யாவும்
காட்டியதே நல்லதொரு இல்லம் கொண்ட
கவின்மிகு கர்ப்பக்கிரகம் இதுவேயென்று.

 தசநான்கு எய்திய பணைமருள் நோன்காள்
இகல்மீக் கூறும் ஏந்துஎழில் வரிநுதவல்
பொருதுஒழி நாகம் ஒழிஎயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர்உளிக் குயின்ற ஈர்இலை இடைஇடுபு
தூங்குஇயல் மகளிர் வீங்குமுலை கடுப்பப்
புரை திரண்டிருந்த குடத்த இடைதிரண்டு
உள்ளி நோன்முதல் பொருந்தி அடிஅமைத்து
பேர்அளவு எய்திய பெரும்பெயர் பாண்டில், (115 – 123)

 



 முரசறையும் பெரும் போர்க்களத்தில்
முரசனைய பெருங்கால்களோடும்
ஏற்றமிகு வரி ஓடும் நெற்றியோடும்
போற்றத்தக்க வெற்றி வேட்கையோடும் 

நாற்பதாண்டு பூரணம் பெற்ற
சீற்றமிக்க வாரணம் ஒன்று
வீழ்த்தப்பட்ட காரணம் கொண்டு
வீழ்ந்துவிட்ட கூர்தந்தம் கொண்டு 

நேரிய கலை பயின்ற சிற்பி
கூரிய உளிகொண்டு செதுக்கிய
ஈரிலைகளின் இடையே....

 



இடைபெருத்த கர்ப்பிணியின்
புடைத்தெழுந்த மார்பையொத்து
கடைந்தெடுத்த மரக்குடத்தை
இடையேந்திய எழிலுடனும்
பூண்டின் வலிய தலைபோன்று
வலிமை பூண்ட கால்களுடனும்
பரந்து விரிந்து திகழ்ந்தது
பாண்டில் என்னும் வட்டக்கட்டில்!
**************************************
படங்கள் நன்றி: இணையம்

36 comments:

  1. /// நாற்பதாண்டு பூரணம் பெற்ற...
    சீற்றமிக்க வாரணம் ஒன்று...
    வீழ்த்தப்பட்ட காரணம் கொண்டு...
    வீழ்ந்துவிட்ட கூர்தந்தம் கொண்டு... ///

    அழகு... அருமை... பாராட்டுக்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ™+1√ இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
  2. கொஞ்சம் சிரமப்பட்டு புரிஞ்சுக்க வேண்டி இருக்கு. நமக்குலாம் பெருமூளை அதிகமா வேலை செய்யாதுங்கோ!

    ReplyDelete
  3. படங்களும், பதிவும், விளக்கங்களும் வெகு அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. யவனரின் புதுமைக் கலைநயத்தையும்
    யாவினும் மேவிய எழில்நலத்தையும்
    யாமம் முழுவதும் எடுத்துரைப்பர்
    யவ்வனமிகு பாவைப்பதுமையர்!

    அழகான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. எந்த வரியை எடுத்துச் சொல்லி வாழ்த்துவது என்று தெரியவில்லை.
    பழைய நெடுநல்வாடையைவிட
    உங்களின் விளக்க உரை கவிதை என்னை ஈர்த்தது.
    படங்களையும் அழகாகத் தேர்வு செய்து உள்ளீர்கள்.
    அருமைங்க கீதமஞ்சரி அக்கா.

    ReplyDelete
  6. நல்ல பதிவு.இலக்கணதில் உள்ளது.it will be more reachable with the meaning..

    ReplyDelete

  7. / பாண்டில் எனும் வட்டக் கட்டில்./ ?
    /ஈரிலைகளின் இடையே / ?

    ReplyDelete
  8. ரசிப்பதை வர்ணிக்க எனக்குத் தெரியவில்லை... மலைத்துப்போய் நிற்கின்றேன்.

    உங்கள் அரும்பணிதொடர என் உளமார்ந்த வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  9. @திண்டுக்கல் தனபாலன்

    வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்கும், தமிழ்மண இணைப்புக்கும் அன்பான நன்றி தனபாலன்.

    ReplyDelete
  10. @ராஜி

    ராஜியே இப்படி சொன்னால் எப்படி? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.

    ReplyDelete
  11. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்து பாராட்டியமைக்கும் அன்பான நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  12. @இராஜராஜேஸ்வரி

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனம் நிறைந்த நன்றி மேடம்.

    ReplyDelete
  13. @அருணா செல்வம்

    வருகைக்கும் கவிதையை ரசித்ததோடு தேர்வு செய்த படங்களையும் ரசித்து மகிழ்ந்தமைக்கு மிக்க நன்றி அருணா செல்வம். படங்களின் தேர்வுக்குதான் எனக்கு நிறைய நேரமெடுக்கிறது.

    ReplyDelete
  14. @manimekalai

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றி மணிமேகலை. பலரையும் இப்பதிவு சென்றடையும் என்ற உங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  15. @G.M Balasubramaniam

    தங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் மிக்க நன்றி ஐயா.

    / பாண்டில் எனும் வட்டக் கட்டில்./ ?

    பாண்டில் என்பது அரசனும் அரசியும் பயன்படுத்தும் பெரிய அளவிலான வட்டவடிவக் கட்டிலாகும். சங்கம் தமிழ் வலைத்தளத்தில் பாண்டில் என்னும் வார்த்தைக்குப் பல பொருள்கள் (விளக்கு, ஜால்ரா என்னும் இசைக்கருவி, காட்டுக்கால்நடை, வட்ட வடிவ பொற்காசு, குதிரை இழுக்கும் ஒரு ரதம், வட்ட வடிவக் கட்டில்) தரப்பட்டுள்ளன. அவை கீழே...

    \\பாண்டில் – Pāndil is the word for cymbals. This word also has many other unrelated meanings. It could mean a round metal lamp (vilakku), forest cattle, a round metal disc, round gold coins, a horse drawn carriage, or a round bed.\\

    /ஈரிலைகளின் இடையே / ?

    இரண்டு தந்தங்களையும் இரண்டு இலை வடிவில் செதுக்கியமைத்திருப்பதே இங்கு ஈரிலை என்று குறிக்கப்படுகிறது. அவ்விலைகளுக்கு இடையில் கட்டில் அமைந்திருப்பதாகக் காட்டப்படுகிறது. இரட்டை இலை என்று குறித்தால் சிந்தனை வேறிடம் மாறிவிடலாம் என்ற நோக்கிலும் நேரிய, கூரிய என்பவற்றுக்கு எதுகையழகாக இருக்குமென்னும் காரணத்தாலும் ஈரிலை என்ற வார்த்தையை பாடலில் உள்ளவாறே பயன்படுத்தினேன்.

    ReplyDelete
  16. @இளமதி

    வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துரைக்கும் அன்பான நன்றி இளமதி.

    ReplyDelete
  17. "யவ்வனமிகு பாவைப்பதுமையர்! "

    /// நாற்பதாண்டு பூரணம் பெற்ற...
    சீற்றமிக்க வாரணம் ஒன்று.....

    நுகர்ந்தோம் .
    அழகிய உங்கள் வர்ணனை படங்களுடன் ரசனை.

    ReplyDelete
  18. அருமையாக கவிதையை
    அர்த்தமும் அழகும் உணர்வும் குறையாமல்
    புதிதாகத் தந்துள்ளீர்கள்
    தலை சிறந்த இலக்கியப் பணி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. முன்பு தங்கள் தொடரைப் படித்த ஆர்வத்தில்
    ஒரு தொடரை எழுதிக் கொண்டிருக்கிறேன்
    நேரமிருப்பின் குறை நிறைகளை விமர்சிப்பீர்கள்
    ஆயின் அது எனக்கு உதவும்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  20. மிக்க அழகாய் அமைந்திருக்கிறது கீதா.எளிய அழகு தமிழில் புதைந்து கிடந்த வைரங்கள் ஒளிவீசுகின்றன.

    தமிழை வசீகரமாக கையாள வருகிறது உங்களுக்கு.

    கீதா, இந்தப் பாடல்களில் எல்லாம் எத்தனையோ வரலாற்றுச் செய்திகளையும் அறிய முடிகிறது. குறிப்பாக யவனர் வருகை (பொருளாதார செழிப்பு) தொழில் செய்திறம் மிக்க தொழிலாளர்(மேசர், தச்சர் முதலானோர்),தமிழ் புலவோர் அதை தமிழில் செதுக்கிய திறம், /தசநான்கு எய்திய / நாற்பதாண்டுகள் கழிந்த - விலங்கினங்களின் வயதினைக்கூட மட்டிடக்கூடிய தன்மை கொண்ட மக்கள்..... இப்படிப் பல செய்திகள் தெரிந்தும் தெரியாமலும் புதையுண்டுள்ளன கீதா. முன்னய பாடலில் நேரம் கணிக்கும் முறை கூட சொல்லப்பட்டிருந்தது பாடலில்.

    இப்படியான வரலாற்றுத் தகவல்களையும் குறிப்பாக பாடலின் கீழே தந்தால் இன்னும் பூரணம் பெறுமோ தோழி?

    இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்துப் பார்த்துப் புனைந்து உங்கள் கைத்திறத்தால் மினுக்கி மினுக்கி ஒளிரப்பண்ணி நிறைவுறும் ஒரு நாள் இது ஒரு புத்தகமாய் வரவேண்டும் என்பது என் பேரவா.

    ReplyDelete
  21. பாண்டில் என்னும் வட்டக் கட்டில் பற்றிய உவமைகள் அழகுற அமைந்து மனதை ஈர்த்தன. அதைப் பற்றிய உங்களின் விவரணையையும் பின்னூட்டத்தில் படித்து மிக ரசித்தேன். அருமை!

    ReplyDelete
  22. தூங்குஇயல் மகளிர் வீங்குமுலை கடுப்பப//

    பட்டப் படிப்பில் முதலாண்டு பாடத்திட்டத்தில் நெடுநல்வாடை பயின்றதை நினைவூட்டிய பதிவு. இவ்வரியை ஒரு வகுப்பு நேரம் சிலாகித்து விளக்கிய தமிழ்ப் பேராசிரியர் நினைவில் எழுந்தார் தோழி.

    செய்யுள்களை எளிமைப் படுத்தித் தருவது இன்றைய தலைமுறையினருக்கு தமிழ் ஆர்வத்தை மிகுத்தும். நல்ல முயற்சி! பாராட்டும் வாழ்த்தும்!!

    ReplyDelete
  23. * * சகோதரிக்கு! ஒரு முக்கியமான விஷயம். தங்கள் மின்னஞ்சல் முகவரியையை எனக்கு தெரியப்படுத்தவும்.

    ReplyDelete
  24. @மாதேவி

    வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி மாதேவி.

    ReplyDelete
  25. @Ramani S

    தங்கள் ஊக்கமிகு வார்த்தைகள் கண்டு மிகவும் மகிழ்கிறேன். மனம் நிறைந்த நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  26. @Ramani S

    முதல் சில பகுதிகளைத் தவறவிட்டிருந்த காரணத்தால் என்னால் தொடரைத் தொடர இயலவில்லை. இன்று முழுமூச்சில் அனைத்துப் பகுதிகளையும் படித்ததோடு எல்லாவற்றுக்கும் பின்னூட்டமிட்டுள்ளேன். இனி தொடர்ந்து வருவேன். நினைவூட்டலுக்கு நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  27. @மணிமேகலா

    ஒவ்வொரு பகுதியையும் ஊன்றிக் கவனித்து நீங்கள் தந்துள்ள ஊக்கமிக்கக் கருத்துரைக்கு மிக்க நன்றி மணிமேகலா. முறையாகத் தமிழிலக்கணமோ தமிழிலக்கியமோ அறிந்தவள் அல்ல நான். என் ஆர்வக்கோளாறும் நண்பர்களின் உற்சாகமூட்டும் கருத்துரைகளுமே இதுவரை என்னை வழிநடத்தி வருகின்றன. வரலாற்றுத் தகவல்களையும் தர விருப்பம்தான். எனினும் அரைகுறை அறிவோடு நான் எழுதுவது தமிழுக்கு இழுக்காகிவிடுமென்று அஞ்சுகிறேன். ஆய்ந்தறிந்த தமிழறிஞர்களோ, தமிழ் இலக்கியம் படித்தவர்களோ இம்முயற்சியை மேற்கொள்வார்களேயானால் தெளிவான தகவல்கள் நமக்குக் கிடைக்கவரும். இருப்பினும் முயன்றுபார்க்கிறேன். முயற்சி வெற்றி பெற்றால் எல்லாப் பெருமையும் தங்களையே சாரும். வேறென்ன செய்வேன் அன்புக்கு அன்பையே பதிலாக்குவதைத் தவிர!

    ReplyDelete
  28. @பால கணேஷ்

    வருகைக்கும் ரசித்து மகிழ்ந்து பாராட்டியமைக்கும் அன்பான நன்றி கணேஷ்.

    ReplyDelete
  29. @நிலாமகள்

    ஒற்றை வார்த்தைக்கு ஒருவகுப்பு நேரமா? கொடுத்துவைத்தவர் நீங்கள்! வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. Anonymous28/6/13 05:27


    மிக மிக அருமை.
    நல்ல சொல்லாடல். மிக ரசித்தேன்.
    இனிய வாழ்த்து சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  32. இன்றும் சுவை குன்றாமல் எடுத்துரைக்கும் பாங்கு அருமை.கஷ்டப்பட்டுதான் படிக்க பொருள் தெரிந்து கொள்ள முடிகிறது .தெரிந்தப்பின் தேனாய் இனிக்கிறது

    ReplyDelete
  33. @kovaikkavi

    வருகைக்கும் ரசித்தமைக்கும் மனமார்ந்த நன்றி தோழி.

    ReplyDelete
  34. @கவியாழி கண்ணதாசன்

    பாடலின் பொருள் விளங்கினால் அதன் இனிமையை ரசிக்கமுடியும். அந்தவகையில் என் நோக்கம் நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.

    ReplyDelete
  35. யவன ராணியின் நினைவு வருகிறது. யவனர்களின் வருகையும் அவர்களின் தொழில் திறமையும் திறம்பட விளக்குகிறது இவ்வரிகள்.
    இடைபெருத்த கர்ப்பிணியின்
    புடைத்தெழுந்த மார்பையொத்து
    கடைந்தெடுத்த மரக்குடத்தை...... அற்புதம் அற்புதம்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.