ஒப்பனை மிகுந்த கட்டிலின்மேலே ஒப்பனையில்லா ஓவியமாய்த் திகழும் தலைவியைக் காண்போம், வாருங்கள்.
நெடுநல்வாடைப் பாடல்
மடைமாண்
நுண்இழை பொலிய தொடைமாடன்
முத்துடைச்
சாலேகம் நாற்றி, குத்துறுத்து
புலிப்பொறிக்
கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடுகண்
புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து
ஊட்டுறு
பல்மயிர் விரைஇ,
வயமான்
வேட்டம்
பொறித்து வியன்கண் கானத்து
முல்லைப்
பல்போது உறழப் பூரைத்து
மெல்லிதின்
விரிந்த சேக்கை மேம்படத்
துணை
புணர் அன்னத் தூநிறத் தூவி
இணை
அணை மேம்படப் பாய்அணை இட்டு
காடி
கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடு
அமை தூமடி விரிந்த சேக்கை (124-135)
பள்ளியறைக் கட்டிலின் மேலே
துல்லியமாய்ப் பொருத்தப்பட்ட
வல்லிய மூட்டுவாய்
மூலம்
மெல்லிய நூலிழை தன்னில்
தேர்ந்தெடுத்த முத்துக்களைக்
கோத்தெடுத்து மாலையாக்கி
பார்த்தோர் வியக்கும்வண்ணம்
பல்வரிசையாய் அலங்கரித்து
சாளரமெனவே சரம்சரமாய்ப்
பேரழகுடனே தொங்கவிட்டு....
புலியின் வரிகளின் வண்ணம் போன்ற
புதுமலர்களாலான பூந்தட்டைப்போன்று
ஒளிரும் தகடுகளை ஒருசேரக் கொண்டு
வெளிப்புறம்
பதித்த கட்டிலின் மேலே
பல்லுயிர் உருவிய உரோமம் கொண்டு
பல்வண்ண உருவ விரிப்பு நெய்து
வேட்டையாடும்
சிங்கம் போல
வீரமிகு செயல்கள் பலவும் பொறித்து….
காட்டுமுல்லைப்
பூக்களோடு
தோட்டமளித்தப் பூக்களையும்
கட்டிலினின்மேலே
இறைத்து,
பட்டினும்
மெல்லியதாய்
மென்போர்வை மேலே விரித்து
முன்னிலும்
சிறப்புறச் செய்திடவே…
பெண் அன்னப்
பேடுதன்னை
பேருவகையோடு புணர்ந்ததான
வெண் அன்னச்
சேவலுதிர்த்த
மென்சூட்டு இறகுகளடைத்த
மென் திண்டு
மெத்தைகளிரண்டு,
பஞ்சிட்ட
தலையணையோடு
பஞ்சுபோலும் பூவிதழ்கள்போலே
கஞ்சிட்டு
வெளுத்த விரிப்பு,
பஞ்சணை போர்த்தி
நின்று
நெஞ்சத்தை அள்ளும்வண்ணம்
மஞ்சத்தை
அலங்கரிக்க.....
ஆரம் தாங்கிய
அலர்முலை ஆகத்துப்
பின்அமை நெடுவீழ்
தாழத் துணைதுறந்து
நல்நுதல் உலறிய
சில்மெல் ஓதி
நெடுநீர்
வார்குழை களைந்தென, குறுங்கண்
வாயுறை அழுத்திய
வறிதுவீழ் காதின்
பொலந்தொடி தின்ற
மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு
கடிகை நூல்யாத்து
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரல் கொளீஇய
செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகில் மரீஇய
ஏந்துகோட்டு அல்குல்
அம்மாசு ஊர்ந்த
அவிர்நூல் கலிங்கமொடு
புனையா ஓவியம்
கடுப்ப, புனைவு இல்
(136 – 147)
தலைவனைப்
பிரிந்து வாடும்
முத்தாரமும்
இன்னபிறவும்
கொத்தாகத்
தழுவியிருந்து
அழகுபடுத்திய
அவள் மார்பகத்தே
தாலியொன்றே
தனித்துத் தொங்க.....
கலைந்துவீழும் கேசமும்
ஆடல்புரிந்திருந்த
செவித்துளையில்
அளவிற்சிறிய
தாளுருவியெனும்
குறுங்கம்மல்
குடியிருக்க.....
பொலிவுறு பொன்வளை போக்கி
வலம்புரி வளையும்
காப்பும்
வடிவுடைக்கரத்தை
நிறைத்திருக்க....
வாளைமீன் வாய்பிளந்தாற்போல
வளைந்திருக்கும்
நெளிமோதிரத்தை
முன்னர் அணிந்திருந்த சிவந்த
விரலில்
சின்னஞ்சிறிய மோதிரம்
இருக்க......
பூம்பட்டாடையுடுத்தி பூரித்த இடையின்று
பூம்பட்டாடையுடுத்தி பூரித்த இடையின்று
நூலாடை
தரித்து நூலாய் நைந்திருக்க....
ஒப்பனையில்லா
ஓவியம் போல்
ஓய்ந்துகிடந்தாள்
தலைவியவள்
ஒப்பனை மிகுந்த
கட்டிலின் மேல்!
***********************************
படங்கள் நன்றி: இணையம்