14 April 2017

வருகிறாள் சித்திரைப் பெண்ணாள்

அனைவருக்கும் 
இனிய சித்திரைத்திருநாள் வாழ்த்து

ATBC வானொலியில் இன்றைய சங்கீத ஸ்வரங்கள் நிகழ்ச்சியில் சித்திரைப் பெண்ணாள் என்ற தலைப்பில் நான் எழுதி வாசித்த கவிதை..

உச்சியிலே உக்கிரத்தீயெரிய
அங்கமெல்லாம் அனல்பரவ..
பார்வையிலே பெருஞ்சுவாலையோடு
அக்னியை துணைக்கொண்டு
ஆங்காரமாய் வருகின்றாள்
ஆண்டுதோறும் சித்திரைப்பெண்ணாள்..

கழனிகள் வெடித்துக்கிடக்க....
ஆறுகுளம் வறண்டுகிடக்க.…
காடெல்லாம் கருகிப்போக
பொட்டலும் பொசுங்கிப்போக..
போடுபோடென்று வருகிறாள்
புயலென சித்திரைப்பெண்ணாள்..

பச்சை இலைகள் பழுத்துதிர..
பச்சிளம்சிசுக்கள் அழுதரற்ற
பாயோடு நோயாளி பரிதவிக்க
பாலகரெல்லாம் பயந்தொளிய..
பாய்ந்துபுறப்பட்டு வருகிறாள்
பொல்லாத சித்திரைப்பெண்ணாள்

வெக்கையால் மேனி வியர்த்தொழுக
கக்கங்கள் அரித்து வெந்து சிவக்க..
சக்கையென உடல் சக்தியிழந்துபோக
சாமான்யர் வாழ்வு சரிந்து துவள
சாகசங்கள் காட்ட வருகிறாள்..
செருக்குமிகு சித்திரப்பெண்ணாள்..

உச்சிவெயில் மண்டைக்குள் ஊடுருவ
உன்மத்தம் கொண்டு உயிர்கள் உலாவ..
தார்ச்சாலைகள் உருகிப் பிசுபிசுக்க
தரைதொடும் பாதங்கள் பொசுங்கிட
வேகமாய்ப் புறப்பட்டு வருகிறாள்
வீறுகொண்ட சித்திரைப்பெண்ணாள்

வருகிறாள் சித்திரைப்பெண்ணாள்..
வருடந்தோறும் தவறாமல்..
வருகிறாள்.. இத்தரைமீதில்..
அவள் உக்கிரம் அறிந்தும்
எச்சரிக்கை உணர்வு கொண்டோமா..
ஏரி குளம் நிரப்பி அவள்
எரிச்சலை.. தகிப்பைத்..  தவிர்த்தோமா

கடல் புகுந்திடும் வெள்ளத்தை
தடுத்துத் தேக்கி வைத்தோமா
வெட்டிய மரங்களுக்கீடாய்
ஒரு வித்தேனும் விதைத்தோமா

அனுபவங்கள் ஆயிரம் கண்டோம்
ஆயினும் ஒரு பாடம் கற்றோமா
அவளருமை துளியும் அறிந்தோமா..
அவள் பெருமை ஏதும் உணர்ந்தோமா..

இப்படியொரு இரக்கமிலாப் பெண்ணா....
இவளே தமிழ்மாதங்களில் முதற்கண்ணா என
சித்திரையைப் பழித்தல் வேண்டா..
அந்நாளில் அவள் இப்படியா இருந்தாள்..
  
விடுமுறைச் சிறார்களின் கொண்டாட்டமாய்
வீதிதோறும் விளையாடிக்கிடந்தாள்..
வெம்மையின் பாதைகளில் நிழலூட்டினாள்
அம்மையின் பரிவோடு அமுதூட்டினாள்..

வேம்பூவின் வாசமும் மாம்பூவின் வாசமுமாய்
மண்ணையும் மனத்தையும் நிறைத்திருந்தாள்..
தயிரிலும் மோரிலும் தண்ணீர்ப்பானையிலும்
பதனீரிலும் பானகத்திலும் பழச்சாற்றிலும்
தெங்கிலும் நுங்கிலும் என எங்கணும் இருந்தாள்..

வெட்டிவேரும் வெள்ளரியும்
வேப்பமரக்குயிலும் வீசுதென்றலுமென
இளவேனிற்கால எழில்களால்
இளநெஞ்சங்களைக் கவர்ந்திருந்தாள்...
இல்லங்களைக் குளிர்வித்திருந்தாள்..
பூமிக்குப் புத்தாடை அணிவித்துப்
புதுப்புன்னகையோடு பார்த்திருந்தாள்..
பூஞ்சிட்டுகளோடு களித்திருந்தாள்..

தடதடக்கும் கோடைமழையால்
தகித்த நெஞ்சங்களைத் தணிவித்திருந்தாள்..
நதியிலே புதுப்புனலாய் குதித்தோடினாள்..
நம்முள் ஒருத்தியாய் நம்மோடு வாழ்ந்தாள்..
அக்காலம் இனிமேல் திரும்புமா..
வேனிற்கால இன்பம் அரும்புமா
பொற்காலம் போன்றது மீளுமா
புவிவாழ் உயிர்களின் வேதனை தீருமா..

இப்போதும் இல்லை பாதகம்..
இனிவரும் காலங்கள் சாதகம்..
இயற்கையில் இருக்கிறது சூட்சுமம்
உணர்ந்தால் புரிந்துவிடும் சூத்திரம்..

மரங்காத்து மழைபெருக்கி
நிலங்காத்து வளம்பெருக்கி
நீர்காத்து ஆறுகுளம் நிறைத்து
பேர்காத்து பெருமைகொள்ள
சீர்மிகு சித்திரையை 
சிறப்பாக வரவேற்போம்..
சித்திரைத்திருநாளை முன்னிட்டு 
கவிதை வாசிக்க வாய்ப்பளித்த
தோழி சாந்தி நாகராஜ் அவர்களுக்கும் 
ஏடிபிசி வானொலிக்கும் 
என் அன்பும் நன்றியும்..


29 comments:

 1. கவிதை ஆக்கம் அருமை. இனிய ‘ஹே விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தாமத பதிலுக்கு மன்னிக்கவும். தங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் கோபு சார்.

   Delete
 2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தாமத பதிலுக்கு மன்னிக்கவும். தங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் தனபாலன்.

   Delete
 3. நல்லதொரு கவிதை. உங்கள் இனிய குரலில் கேட்டு மகிழ்ச்சி.

  அனைவருக்கும் சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் மகிழ்ச்சி வெங்கட். தங்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள். தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.

   Delete
 4. வெட்டிய மரங்களுக்கீடாய்
  ஒரு வித்தேனும் விதைத்தோமா…
  சிந்திக்க வேண்டிய நேரமிது. ஏற்ற இறக்கங்களோடு அமைந்த குரலில் வாசிப்பு மிகவும் நன்றாயிருந்தது கீதா! இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்து!

  ReplyDelete
  Replies
  1. மிகவும் மகிழ்ச்சி அக்கா. தங்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்து. இணைய இணைப்பு பிரச்சனையால் உடனடியாக பதில் தரவியலவில்லை. மன்னிக்கவும்.

   Delete
 5. எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா. தங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள். தாமத வாழ்த்துக்குப் பொருத்தருள்க.

   Delete
 6. மிக அருமை... சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அதிரா. உங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். தாமத வாழ்த்துக்குப் பொருத்தருள்க.

   Delete
 7. வணக்கம்.

  கவிதையாக்கம் சிறப்பாக உள்ளது.

  வாழ்த்துக்கள்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி விஜி சார். தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.

   Delete
 8. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.

   Delete
 9. சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 10. நிகழ்வு ஒன்றுதான் வெவேறு அணுகுமுறையில்தான் மாற்றம் இப்போதும் இம்மாதத் துவக்கத்தில்தான் மலர்கள் மொட்டுவிரித்து மலர்கின்றன மரங்கள் பசுமைப் பொலிவு பெறுகின்றன கவிதை நன்று வாழ்த்துகள் சிறு வயதில் கேட்டவரிகள் சரியாக நினைவுக்கு வரவில்லை “ சித்திரையே சித்திரையே இத்தனை நாள் எங்கிருந்தாய்? மாசி பங்குனி மறைந்திருந்தேன் மழைக்கார் ஓட்டியிருந்தேன் ..... இப்படிப் போகும்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. உண்மையில் இங்கே நாங்கள் வசிக்கும் நாட்டில் சித்திரை என்பது குளிர்காலத் துவக்கம். ஆனால் மனம் இன்னும் சித்திரை வெயிலின் இனிய நினைவுகளிலேயே சுழன்று திரிவதால் அங்கிருக்கும் சூழலே கண்முன் நிழலாடுகிறது. சித்திரைப் பாடல் அழகு.. நினைவுக்கு வந்தால் பதிவிடுங்கள்.

   Delete
 11. இப்போதும் இல்லை பாதகம்..இயற்கையில் இருக்கிற சூட்சுமத்தை புரிந்து கொண்டால்
  இனிவரும் காலங்கள் சாதகம்.என்ற வரிகள் நம்பிக்கை ஊட்டுகிறது.
  அருமையான கவிதை.புது வருட வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   Delete
 12. அருமை!!தங்கள் கவிதை சித்திரைப் பெண்ணின் சூட்டைப் போக்கி குளிர வைத்துவிட்டதே!!!
  தமிழன்னை சித்திரைப் பெண்ணிடம் விளையாடுகிறாள்!!! மிகவும் ரசித்தோம்!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சித்திரைப் பெண்ணை சீண்டி நாம் விளையாடுவதில்தான் என்னவொரு ஆனந்தம். :)) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

   Delete
 13. அருமையான கருத்துகள் , சிறந்த கவிதை . இயற்றியவரின் குரலில் கேட்டு மகிழ்ந்தேன் , தாமதப் பின்னூட்டம் .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் இனிதான கருத்துரைக்கும் மிக்க நன்றி.

   Delete
 14. அக்காலம் இனிமேல் திரும்புமா..
  வேனிற்கால இன்பம் அரும்புமா…
  பொற்காலம் போன்றது மீளுமா…

  நல்ல மனதில் எழும்பும் ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும்!
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 15. மரங்காத்து மழைபெருக்கி
  நிலங்காத்து வளம்பெருக்கி
  நீர்காத்து ஆறுகுளம் நிறைத்து
  பேர்காத்து பெருமைகொள்ள
  சீர்மிகு சித்திரையை
  சிறப்பாக வரவேற்போம்..//
  அருமையான கருத்துக் கொண்ட கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.