19 November 2015

சந்திரமதி (3)



பெண்களின் முகத்தைப் பொதுவாக தாமரை மலருக்கு ஒப்பிடுதல் இயல்புதிருமகள் உறையும் செவ்விதழ்கள் கொண்ட அழகிய தாமரையும், காக்கும் கடவுளான திருமாலின் உந்தியில் மலர்ந்ததும் படைப்புக்கடவுளான பிரம்மன் அமர்ந்திருப்பதுமான செந்தாமரையும்தான் தாமரை மலர்களுள் சிறப்பு வாய்ந்த மலர்களாம். அத்தகைய சிறப்புடைய மலர்களும் கூட மற்றொரு தாமரை மலரைப் பார்த்து நாணுகின்றனவாம். அப்படி நாணக்கூடிய அளவுக்கு அந்தத் தாமரையில் என்ன சிறப்பு இருக்கிறது? அந்தத் தாமரைக் கொடியில் தாமரையோடு முருக்கம்பூவும், ஆம்பலும், குவளைப்பூவும், குமிழம்பூவும் முல்லை அரும்பும் ஒன்றாக மலர்ந்து காணப்படுகிறதாம். வேறெந்த தாமரையிலும் இல்லாத சிறப்பல்லவா இது? அந்த அதிசயத்தாமரை எதுவென்றுதானே கேட்கிறீர்கள்? வேறொன்றுமில்லைஅது சந்திரமதியின் அழகிய முகம்தான். அவளுடைய இதழுக்கு முருக்கம்பூவும் இதழ் நறுமணத்துக்கு ஆம்பலும், கண்களுக்கு குவளையும், மூக்கிற்கு குமிழம்பூவும், பற்களுக்கு முல்லை அரும்புகளும் அவள் உடலுக்கு வள்ளைக்கொடியும் உவமைகளாகக் காட்டுகின்றார் புலவர்.. அவளுடைய முகம் பூத்த வியர்வைத் துளிகள் கூட தாமரையின் நறுந்தேன் போன்று மணம் கமழ்கிறதாம். என்னவொரு செறிவான கவிநயம்.. கற்பனை வளம்!

செருக்கும் மோகனச்செந் திருமகள் உறையும்
சேயிதழ்த் தாமரை மலரும்
பெருக்கும் மா மறைநூல் உரைத்த நான்முகத்தோன்
பிறந்த செங்கமலமும் வெள்க
முருக்கும் ஆம்பலும் மென்காவியும் குமிழும்
முல்லையும் வள்ளையும் மலர்ந்து
திருக்கிளர் கமலம் இதுவெனச் செவ்வி
திகழ் வெயர் செறி திரு முகத்தாள்.



முனிவர்கள் சந்திரமதியின் கொங்கைகளை வர்ணிக்கும் அழகைக் கேட்டால் அவர்களென்ன முற்றும் துறந்த முனிவர்கள்தானா என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டுவிடும். அப்படி என்னதான் சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் பிறக்கிறதல்லவா? ஒரு கடினமான வேலையை செய்வதற்குமுன் அதைப் பற்றிய சிந்தனையே நம்முள் ஓடிக்கொண்டிருக்கும் அல்லவா? அப்படியொரு சிந்தனைதான் ஓடிக்கொண்டிருந்ததாம் படைப்புக்கடவுளான பிரம்மனுக்கும். எந்தக் கடின வேலையை முடித்தற்பொருட்டாம்?

சிவபெருமானின் கோபத்துக்கு ஆளாகி எரிந்துபோன மன்மதன் மீண்டுவந்தபோது அவனுக்குச் சூட்டுவதற்காக ஒரு கிரீடத்தைப் படைக்கப் போகிறார் பிரம்மன். அதற்காக தன் இருக்கையான தாமரை மலரை விட்டுச்சென்று நெடுநாள் தவமிருந்து தன்னிரு கைகளும் மனமும் வருந்தும்படியாக மன்மதனுக்கு கிரீடம் தயாரிக்கும் வேலையில் முனைகிறார். முதலில் யானையின் தந்தங்களையும் தொடர்ந்து கும்பத்தையும், சக்கரவாள மலையையும், வடக்கே உள்ள பொன்னாலான மலையையும் படைத்துத் தெளிந்தபின் படைத்ததாம் சந்திரமதியின் கொங்கைகள்அதாவது மன்மதனின் கிரீடத்துக்கு அவையே பொருத்தமாம்அந்த அளவுக்கு பூரணத்துவமும் வசீகரமும் நிறைந்தவையாம் அவைஅடேயப்பா.. என்னவொரு வர்ணனை!

இருப்பை விட்டு அயனார் நெடிதுநாள் தவம்செய்து
இரு கையும் சிந்தையும் வருந்திச்
செருப்பையின்று இறந்த மதனனைச் சூட்டத்
திருமுடி வேண்டுமென்று யானை
மருப்பையும் கும்பத் தலத்தையும் சக்ர
வாகத்தையும் வட கனகப்
பொருப்பையும் படைத்துத் தெளிந்தபின் படைத்த
புளகித பூரண முலையாள்.



சந்திரமதியைப் பற்றி புலவர்கள் அரிச்சந்திரனிடம் வர்ணிக்கும் அழகினை இதுவரை ரசித்துவந்தோம் அல்லவா? சந்திரமதியின் மார்பழகை வர்ணித்தாயிற்று.. அப்படியே இடைக்கு வந்தால் அடடா இடையழகை என்னவென்று சொல்வது? சந்திரமதிக்கு இடையென்று ஒன்று இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகத்தில் குழம்பிப்போயிருக்கிறார்கள் முனிவர்கள். அதை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறார்கள் பாருங்களேன். இவ்வளவு அழகு நிறைந்த சந்திரமதிக்கு இடை இருந்துவிட்டால் அந்த அழகால் அறமும், தவமும் ஏன் இந்த உலகமுமே நெறிதவறிப் போய்விடுமோ என்ற பயத்தால் பிரம்மன் அவளுக்கு இடையைப் படைக்கவில்லையோ என்று எண்ணும்படியாக உள்ளதாம். ஒருவேளை அவளுடைய அழகான வேல் விழியைப் படைத்த மாத்திரத்திலேயே கைகள் சோர்ந்து இடையைப் படைக்காமல் விட்டுவிட்டானோ? அல்லது அவளது அழகில் தானே திகைத்துத் தடுமாறி மதிமயங்கி இடையைப் படைக்க மறந்துவிட்டானோ? வெளிப்பார்வைக்குத் தெரியாமல் மறைவாய் வைத்திருக்கிறானோ? அல்லது சந்தனக்குழம்பு பூசிய அவளது கொங்கைகளின் பாரம் தாங்காமல் இடையானது உருகிக்கரைந்துபோயிற்றோ? இடையென்று ஒன்று இருக்கிறதா? இல்லையா? அல்லது இனிமேல்தான் படைக்கவேண்டுமோ? என்றெல்லாம் அவளுடைய இடையைப் பற்றிய ஆராய்ச்சிக் கேள்விகளோடு மன்னன் மனத்தில் மையலை ஏற்றுகின்றனர் முனிவர்பெருமக்கள்.

அறம் திகழ் தவமும் அகிலமும் இதனால்
அழியுமென்று அயன்படைத் திலனோ
சிறந்தவேல் விழியை முன்படைத்து அயர்ந்து
செங்கரம் சோர்ந்ததோ திகைத்து
மறந்ததோ கரந்து வைத்ததோ களப
வனமுலைப் பொறை சுமந் துருகி
இறந்ததோ உளதோ இல்லையோ இனிமேல்
எய்துமோ அறியொணாது இடையே.

இதைத்தான் நம் கவியரசர் தன் வரிகளில் சொல்கிறார். உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவா இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா என்று.




(தொடரும்)

28 comments:

  1. முற்றும் துறந்தவர்களையும் சந்திரமதியின் அழகு விடவில்லை போலும்! அருமையான வர்ணனை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

      Delete
  3. பல பாடல்கள் மனதில் எழுகின்றன... ஒரு பதிவே எழுத வேண்டும் அளவிற்கு...!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... எழுதுங்க.. காத்திருக்கிறேன். நன்றி தனபாலன்.

      Delete
  4. அருமை சகோ பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதது...
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி கில்லர்ஜி.

      Delete
  5. வர்ணனை மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாரதா மேடம்.

      Delete
  6. எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள்! அந்த முனிவர்கள் கடவுளை நினைத்தார்களா என்றே எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது ஹாஹாஹா
    :-) எழுத்தாக்கம் அருமை கீதமஞ்சரி

    ReplyDelete
    Replies
    1. அதே சந்தேகம்தான் எனக்கும். :))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரேஸ்.

      Delete
  7. வணக்கம்

    விளக்கமும் வர்ணணையும் நன்று... படிக்க படிக்க நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  8. த.ம3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ரூபன்.

      Delete
  9. முனிவர்கள் கூட இப்படியெல்லாம் ரசித்ததுண்டு என்று புராணங்களில் வாசித்ததுண்டு..//முனிவர்கள் சந்திரமதியின் கொங்கைகளை வர்ணிக்கும் அழகைக் கேட்டால் அவர்களென்ன முற்றும் துறந்த முனிவர்கள்தானா என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டுவிடும். // ஏற்படத்தான் செய்கின்றது. என்ன ஒரு வர்ணனை! உங்கள் எழுத்தும் அதை நிரூபிக்கின்றது சகோ. அருமை...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

      Delete
  10. முனிவர்கள் என்றால் முற்றும் துறந்தவர்காளாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சித்தர்கள் சிலர் இரண்டு மூன்று மனைவிகளோடு வாழ்ந்திருக்கிறார்கள். தவமும் தியானமும் தரும் மனவலிமை, மனதை ஒருமுகப் படுத்தும் தன்மை அவர்களுக்கு அதிகம். எதிரே ஒரு பெண் நிர்வாணமாக நின்றாலும் அவர்களால் சலனப்படாமல் இருக்க முடியும். கலவியில் ஈடுபட்டாலும் மற்றவர்களைவிட அதிகமான இன்பத்தை அவர்களால் தரமுடியும். அதேபோன்றுதான் ரசனையும்! அவர்களுக்கு இணையாக அழகை, அதுவும் பெண்ணை ரசிக்க மற்றவர்களால் முடியாது.

    அருமையான தொடர்பதிவை தந்துகொண்டிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்! தொடர்கிறேன்.
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. கூடுதல் தகவல்களுக்கு நன்றி செந்தில். அதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு மன்னனுக்கு மனைவியாகப் போகிறவளை வர்ணிப்பதற்கும் ஒரு எல்லை உண்டல்லவா? இங்கு முனிவர்கள் வர்ணித்தார்கள் என்பதை விடவும் அப்படி எழுதிய புலவரின் கவித்திறமையைதான் வியக்கிறேன். வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி செந்தில்.

      Delete
  11. சந்திரமதியின் அழகை முனிவர்கள் எடுத்துரைக்கும் விதத்தை நயம்பட விளக்கியிருக்கும் விதம் அருமை. தொடர்கிறேன். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா.

      Delete
  12. வர்ணிக்கத் தெரிந்தவர்கள்..... சிறப்பாக வர்ணித்து இருக்கிறார்கள். கூடவே நீங்கள் தந்திருக்கும் பாடல்களும் மிக அருமை.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி வெங்கட்.

      Delete
  13. சந்திரமதி தங்கள் கையில் அழகு தான்,,,,, வாழ்த்துக்கள்,,,
    தொடருங்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவரான தாங்கள் அறியாதவையா? எல்லாம் நம் முன்னோர் எழுதிவைத்துவிட்டுப் போனவைதாமே.. அவற்றை இங்கு பகிர்வதில் எனக்கு மகிழ்ச்சியே. நன்றி மகேஸ்வரி.

      Delete
  14. இன்றுதான் மூன்று பதிவுகளிலும் உள்ள, வீடியோ திரை இசைப் பாடல்களைக் கேட்க நேரம் கிடைத்தது. புதுமையான முயற்சி. ஒவ்வொரு சினிமா பாடலின் முதல்வரியையும், கவிஞரின் பெயரையும் மற்றும் படத்தின் பெயரையும் அடிக்குறிப்பாக குறிப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் தொடர்பதிவுகளை ரசித்தமைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா. சில பாடல்களில் அவற்றை இயற்றியவர் பெயரை அறிய முடியவில்லை.. இணையத் தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாகக் கிடைக்கின்றன. அதனால் அவற்றைத் தொகுப்பதைத் தவிர்த்தேன். உறுதியான தகவல்கள் கிட்டும் பட்சத்தில் அவற்றையும் சேர்த்தே தர முயல்கிறேன். கருத்துரைக்கு நன்றி ஐயா.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.