16 May 2013

நெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 3


மழைக்காலத்து மாலைப்பொழுதை எவ்வளவு அழகாக விவரிக்கிறார் பாடலாசிரியர்!
 
வெள்ளி வள்ளி வீங்குஇறைப் பணைத் தோள்
மெத்தென் சாயல்,முத்து உறழ் முறுவல்
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்துஎழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து
அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுதறிந்து
இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ
நெல்லும் மலரும் குஉய் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர (36 – 44)


வெண்சங்குவளையல் முன்கையழகைக் காட்ட,

மீன் ஆடும் கம்மல் மென்செவிக்கு அழகூட்ட,
முத்தொளியை இதழ் விரிக்க,
புத்தொளியை விழி தெறிக்க,
 
 
தளிரிளம் கொடியிடை மகளிர்,
இளந்தளிர் கொடியிடை புகுந்து
கொய்த பிச்சியரும்புகள் யாவும்
பெய்த மழை காரணமாய்
பொழுது அறியாப் பொழுதிலும்
பழுதிலாது இதழ் விரித்து
அந்தி  இதுவென்று உணர்த்தி
முந்தி அதன் மணம் பரப்ப...

 

 
நெய்விளக்கேற்றிவைத்து
நெல்லோடு மலர் தூவித்தொழுது
இல்லுறை இறையை வணங்கி
வானகம் பொழியினும்
வாணிகம் பொலிவுறும்
அங்காடித் தெருவில்
கொண்டாடி மகிழ்ந்தார்..

மனைஉறை புறவின் செங்காற் சேவல்
இன்புறு பெடையொடு மன்றுதேர்ந்து உண்ணாது
இரவும் பகலும் மயங்கி கையற்று
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப 
கடியுடை வியல் நகர்ச் சிறுகுறுந் தொழுவர்
கொள்உறழ் நறுங்கல் பலகூட்டு பறுக
வடவர் தந்த வான்கேழ் வட்டம்
தென்புல மருங்கில் சாந்தொடு துறப்பக் (45- 52)
 
 

இரவும் பகலும் இன்னதென விளங்காது
இரையுண்ணவும் முற்றத்தில் இறங்காது
அடுத்தமர்ந்து பெட்டையோடு
கடுத்த கால் மாற்றி இணைபுறா தவிக்க....

 
காவல் மிகுந்த இல்லங்களில்
ஏவல் பணிந்த வேலையாட்கள்
நறுமணமிகுந்த கத்தூரியை
கருநிற அம்மியில் அரைத்தெடுக்க....
 

வடநாட்டினர் தந்துவிட்ட
வெண்வட்ட சந்தனக்கல்
தென்னாட்டுக் கட்டைகளோடு
தீண்டுவாரற்றுக் கிடக்கும். 
படங்கள்; நன்றி இணையம்

36 comments:

  1. Anonymous16/5/13 15:59

    மிகவும் அருமை பழம்பாடலை விளக்கும் புதுக் கவிதையும் அழகு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. அழகு... அருமை... இணைக்கப்பட்ட படமும்...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete

  3. அழகான தமிழாக்கம்? ( தவறாகச் சொல்லி விட்டேன்.)இந்த பொழிப்புரை இல்லாவிட்டால் நிச்சயம் ஏதும் புரிந்திருக்காது. கடுந்தமிழிலிருந்து புரிதமிழாக்கம், சரியா.? பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. முத்தொளியை இதழ் விரிக்க,
    புத்தொளியை விழி தெறிக்க,

    ரசனை மிக்க பகிர்வுகள்.பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. மாலைப் பொழுதென்றால்


    சிவந்த சூரியன்
    அகம் புகுந்துவிட்டான்
    ஒளிமிகு வெண்ணிலவு
    புறம் காண எத்தனிக்கிறான்

    மங்கிய ஒளியழகில்
    மயக்கம் ஒன்று
    சிரமேறி ...
    மந்தகாசம் குடியேறிய
    நெஞ்சமது
    உழைத்த பொழுதது
    ஓய்ந்து போனது

    சற்றே சாய்ந்து ஓயவேடுப்போமா
    என்றென்னும் என நினைத்திருந்த பொழுது...
    ==
    நெடுநல்வாடை இங்கே அந்த மாலைப்பொழுதை
    விவரிக்கும் விதம் ...
    அப்பப்பா..
    என்ன அழகு...

    மென்தோல் நிறைமாந்தர்
    மச்சக்குழை அணிந்து
    நித்தில ஒளியதனை
    இதழ்வழி கசியவிட்டு
    கொடியிடை நடைபயில
    பிச்சிக் கொடியிடை
    மலர் பறிக்கையிலே...
    பவள இதழ்க் காரிகையே
    கருவுற்று நிறம்மாறி
    கார்மேகம் பொழிந்ததால்
    நானும் இதழ் விரிந்து போனேன்
    அந்திப் பொழுது
    எனை ஆலிங்கனம் செய்ததால்
    என் மணம் எனைவிட்டு
    கசிந்து காற்றில் பரவியது
    நீயும் நுகர்ந்துகொள் என
    முன்னே பரப்பி விடுகிறதாம்....

    ==
    சங்கப் பாடல் கொஞ்சம் புரிந்தும் புரியாமலும்
    இருந்தாலும்...
    உங்கள் விளக்கவுரைக் கவிதை...
    நெஞ்சில் மஞ்சம் போட்டு அமர்ந்துகொள்கிறது
    சகோதரி...
    நீங்கள் விவரித்த பிறகு அதன் அழகு மேலும்
    மெருகேறுகிறது...

    ReplyDelete
  6. சங்க காலத்தில்...
    மழைக்கால மாலைப்பொழுதில்
    எவ்வளவு ரம்மியமாக
    அகத்தை அலங்கரித்திருக்கிறார்கள்...

    பொழுதறியா மணிப்புறாக்கள்
    மாடம்விட்டு இறங்காமலும்...
    ==
    காவல்புரி ஏவலர்கள்
    நறுமண கத்தூரியை
    கருநிற அம்மியில் அரைத்து..
    மணமிக்க இல்லமாய்
    மாற்றி வந்தனர் போலும்...
    ==
    வடநாடும் தென்னாடும்
    பண்டமாற்றில் பகிர்ந்துகொண்ட
    வட்டக்கல்லும் சந்தனமும்

    நினைத்துப் பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறது...
    மாலைப்பொழுதின் அழகும் மணமும் ..

    ReplyDelete
  7. தொடருங்கள் சகோதரி....
    மூன்றாம் பாகமிது
    மூவாயிரமாய் வளரட்டும்......

    ReplyDelete
  8. ரசனை மிக்க படங்களுடன் கூடிய அழகான பகிர்வு. பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  9. நெய்விளக்கேற்றிவைத்து
    நெல்லோடு மலர் தூவித்தொழுது
    இல்லுறை இறையை வணங்கி
    வானகம் பொழியினும்
    வாணிகம் பொலிவுறும்
    அங்காடித் தெருவில்
    கொண்டாடி மகிழ்ந்தார்..//

    அழகாய், நெடுநெல்வாடையை புரியவைத்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
    மழைக்காலத்தில் மாலை நேரம் அருமை.

    ReplyDelete
  10. அட அட... என்னவெனச் சொல்வது...
    படங்களும் பாக்களும் மனத்தைக் கொள்ளைகொள்கிறது...
    உங்கள் பாக்களில் நான் சொக்கிப்போனேன். அதுவும் சங்கப்பாவில் இருந்த அந்த இன்சுவையை புரிகிறவிதமாய் இலகுசொற்களில் அப்படியே சாறெடுத்து வாயிலூற்றி குடியென்று தந்துவிட்டீர்களே!...
    மிகமிக அருமை. மழைக்கால மாலை நேர வாசம்.ம்.ம். அப்படியே... எங்கோ கொண்டு செல்கிறதே...

    வாழ்த்துக்கள் தோழி! தொடருங்கள்...

    ReplyDelete
  11. கீதா !!!!! உங்கள் விளக்கவுரை சூப்பர் ..சங்க இலக்கியபாடல் உண்மையில் ஒரு வார்த்தை கூட விளங்கவில்லை
    உங்கள் பொழிப்புரை அழகாய் சொல்லி புரிய வைத்தது

    ReplyDelete
  12. பாக்கள் இயற்கையோடு இயைந்த இல்வாழ்வை நறு மணத்தை சிறப்பாக சொல்லுகிறது அதை தெளிவாக பொழிப்புரை வழங்கிய தோழியின் ரசனை போற்றுதல்குரியது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அருமையான படங்கள்! அழகான விளக்கங்கள்! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
  14. அழகிய அன்னைத் தமிழை எளிய தமிழில் பா புனைந்து வழங்கியிருப்பது இம்முறையையும் ரசனைக்கு நல் விருந்தை அளித்தது! நீங்கள் தேர்வு செய்யும் படங்களும் அழகாகவே இருக்கின்றன என்பது கூடுதல் ரசனை!

    ReplyDelete
  15. தளிரிளம் கொடியிடை மகளிர்,
    இளந்தளிர் கொடியிடை புகுந்து//ஆஹா அருமை

    ReplyDelete
  16. @இக்பால் செல்வன்

    தங்கள் வருகைக்கும் ரசித்துப் பாராட்டியமைக்கும் மிகவும் நன்றி இக்பால் செல்வன்.

    ReplyDelete
  17. @திண்டுக்கல் தனபாலன்

    வருகைக்கும் வாழ்த்தியளித்த ஊக்கத்துக்கும் அன்பான நன்றி தனபாலன்.

    ReplyDelete
  18. @G.M Balasubramaniam

    புரிதமிழாக்கம்! தங்கள் அழகிய சொற்திறன் கண்டு வியந்தேன். வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  19. @ இராஜராஜேஸ்வரி

    வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மகிழ்வான நன்றி மேடம்.

    ReplyDelete
  20. @மகேந்திரன்

    முதலில் என் மனமார்ந்த பாராட்டுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் மகேந்திரன். எவ்வளவு அழகாக ஆழ்ந்து ரசனையுடன் வாசித்திருக்கிறீர்கள் என்பது உங்களுடைய ஒவ்வொரு வரியிலும் தென்படுகிறது. தங்கள் கவியழகால் மேலும் கவின்பெறுகிறது நெடுநல்வாடை. அழகிய தமிழால் அசத்தும் கவிதைகள் படைக்கும் தங்களுக்கு நெடுநல்வாடை புரியாது என்று சொன்னால் என்னால் மட்டுமல்ல, எவராலும் நம்பவியலாது. உங்களைப் போன்றோருடைய படைப்புகள் அளித்த ஊக்கமே என்னை இந்த அளவுக்கு எழுதவைக்கிறது. தொடர்ந்து வந்து தரும் ஊக்கமிகுப் பின்னூட்டத்துக்கு அன்பான நன்றி மகேந்திரன்.

    ReplyDelete
  21. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் வருகையும் கருத்தும் பாராட்டும் கண்டு அளவிலா மகிழ்ச்சி. மிக்க நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  22. @கோமதி அரசு

    தங்கள் வருகைக்கும் நெடுநல்வாடையை ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  23. @இளமதி

    பழங்காலப் பாடல்களில் பொதிந்துகிடக்கும் இனிமையையும் சிறப்பையும் அனைவரும் அறியவேண்டுமென்பதே என் நோக்கம் இளமதி. தாங்கள் அந்த இனிமையை அழகாய் அனுபவிக்கிறீர்கள் என்பதை தங்களது பின்னூட்டங்களே பகர்கின்றன. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி இளமதி.

    ReplyDelete
  24. @angelin

    வருகைக்கும் பாடல் புரிந்து ரசித்து மகிழ்ந்தமைக்கும் மனமார்ந்த நன்றி ஏஞ்சலின்.

    ReplyDelete
  25. @கோவை மு சரளா

    வருகைக்கும் பாடலை ரசித்து மகிழ்ந்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சரளா.

    ReplyDelete
  26. @Seshadri e.s.

    வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிகவும் நன்றி சேஷாத்ரி.

    ReplyDelete
  27. @பால கணேஷ்

    பாடலோடு படங்களையும் ரசித்து மகிழ்ந்த தங்களுக்கு மிகவும் நன்றி கணேஷ். மனக்கண்ணில் காட்சிகளைக் கொண்டுவர படங்கள் உதவும் என்ற நம்பிக்கையில் பதிகிறேன். அவை உங்களுக்குப் பிடித்திருப்பதைக் குறிப்பிட்டமைக்கு நன்றி கணேஷ்.

    ReplyDelete
  28. @கவியாழி கண்ணதாசன்

    தங்கள் வருகையும் ரசனையும் கண்டு மகிழ்வும் நன்றியும் ஐயா.

    ReplyDelete
  29. நெடு நல் வாடையினை மிக மிகச் சரியாக
    தங்கள் கவிதைகளின் மூலம் தான்
    உணர்ந்து ரசிக்கமுடிகிறது
    அருமையான பணி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. @Ramani S

    தங்கள் வருகைக்கும் தொடர்ந்து அளிக்கும் உற்சாகத்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  31. Anonymous10/6/13 18:27

    ''..வடவர் தந்த வான்கேழ் வட்டம்

    தென்புல மருங்கில் சாந்தொடு துறப்பக் ...
    மிகச் சிறப்பு .ரசித்து வாசித்தேன்.
    இனிய வாழ்த்து. தொடர்க!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  32. @kovaikkavi

    வருகைக்கும் பாடலை ரசித்து மகிழ்ந்தமைக்கும் இனிய வாழ்த்துக்கும் அன்பான நன்றி தோழி.

    ReplyDelete
  33. // வடநாட்டினர் தந்துவிட்ட
    வெண்வட்ட சந்தனக்கல்
    தென்னாட்டுக் கட்டைகளோடு
    தீண்டுவாரற்றுக் கிடக்கும். //

    ஒரு “ஹைகூ “ கவிதையாய் ஒலிக்கும் வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  34. @தி.தமிழ் இளங்கோ

    தங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  35. வட நாட்டையும் தென்னாட்டையும் இணைத்து பாடிய பாட்டில் அரைத்தெடுத்த சந்தணமும் மணக்கிறது தோழி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.