1 October 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (19)


விக்னேஷும், வித்யாவும்  அவ்வப்போது வந்து சுந்தரியையும், குழந்தையையும் பார்த்துச் சென்றனர். விக்னேஷுக்கு வேலை இருந்தால் வித்யாவும், வித்யாவால் வரமுடியாதபோது விக்னேஷும் வந்து பார்த்துக்கொண்டனர்.

கிட்டத்தட்ட ஒருமாதத்துக்குப் பின் விக்னேஷ் வித்யா இருவரின் சந்திப்பு அங்கு நிகழ்ந்தது. போனில் அவ்வப்போது பேசிக்கொண்டிருந்தாலும், சமீபகாலமாய் நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமையாமலேயே இருந்தது.

"அப்பாடி! உங்க ரெண்டுபேரையும் சேந்து பாக்குறதே இப்பல்லாம் அபூர்வமாயிடுச்சே!"

"என்ன பண்றது, சுந்தரி! எங்க அக்கா பிரச்சனையே பெரிய பிரச்சனையா இருக்கு! விக்கிக்கு அவங்க அம்மாவைப் பாத்துக்கணும். நேரம் ஒத்துவரவே மாட்டேங்கிது!  எங்களை விடு, பாப்பா என்ன சொல்றா?  பாப்பாவுக்கு ஏதாவது பேர் வைக்கலாமில்ல....கூப்பிட ஈஸியா இருக்கும்!"

விக்னேஷ், கையில் குழந்தையை வைத்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டிருந்தான்.

"நீங்களே வைங்களேன், அக்கா!"

"அதெப்படி? கஷ்டப்பட்டு பெத்தது நீ! பேர் வைக்கிறது நாங்களா? பெத்தவளுக்குதான் பேர் வைக்கிற உரிமையும்! நீயே சொல்லு!"

சட்டென்று சுந்தரியின் கண்கள் குளமாகின. தலைகவிழ்ந்து கண்களைத் துடைத்துக்கொண்டாள். வித்யா பதறிப்போனாள்.

"சுந்தரி, எதுக்குப்பா அழறே? நான் என்ன தப்பா சொல்லிட்டேன்?"

"நீங்க எதுவும் தப்பா சொல்லலக்கா....அவரும் இப்படிதான் சொல்வாரு. எந்தக் குழந்தை பிறந்தாலும் நான் தான் பேர் வைக்கணும்னு. கஷ்டப்பட்டு பெத்துக்கிறது நீ...பேர் வைக்க நானான்னு கேப்பாரு....அவருக்கு பொம்பளப்புள்ளதான் இஷ்டம். அதையும் சொன்னாரு!"

"அழாதே, சுந்தரி. அவர் ஆசைப்படி பொண்ணுதானே பிறந்திருக்கு, சந்தோஷமா பேர் வை!"

"பொண்ணு பிறந்திருக்கு. ஆனா....அருமைபெருமையான அப்பாரைப் பாக்கக் குடுத்துவக்கலையே!"

"சுந்தரி, இப்படியெல்லாம் பேசக்கூடாது. அது குழந்தைதானே, என்ன செய்யும், பாவம்!"

விக்னேஷ் சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்ற முயன்றவனாய் குழந்தையைக் கொஞ்சத் தொடங்கினான்.

"பாப்பா...குட்டிப்பாப்பா.......செல்லப்பாப்பா....தங்கப்பாப்பா.......பாப்பா......"

வித்யாவும், சுந்தரியும் தங்களை மறந்து, விக்னேஷ் கொஞ்சும் அழகையே பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர். எதையோ உணர்ந்தவன்போல், விக்னேஷ் தலையுயர்த்திப் பார்க்க, இரு பெண்களும் தன்னையே கவனித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து வெட்கினான்.

"ரெண்டுபேருக்கும் வேற வேலை இல்லையா? என்னையே பாத்துகிட்டு நிக்கிறீங்க?"

"ஹும்! குழந்தையைக் கொஞ்சுறதில மாஸ்டர் ஆயிட்டீங்க! அதான் எப்படின்னு யோசிக்கிறோம்!" வித்யா வேண்டுமென்றே அவனைச் சீண்டினாள்.

"எல்லாம் பாப்பாகிட்ட எடுத்துகிட்ட ப்ராக்டீஸ்தான். இல்லடா....செல்லம்.....?"

"சரிதான், எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க, பின்னாடி உதவும்!"

வித்யா அர்த்தத்துடன் புன்னகைக்க,

"ஓகோ, கதை அப்படிப் போகுதா?" என்று சுந்தரி கலாய்க்க,

விக்னேஷ் நிலைகொள்ளாமல், குழந்தையிடம்,

"வாடா....செல்லம், நாம வேற இடத்துக்குப் போகலாம். இவங்க கூட சேரவேணாம்!" என்று சொல்லிக்கொண்டு குழந்தையுடன் பால்கனிக்குச் சென்றான்.

"ஐயோ, கோவிச்சுக்காதீங்க, அண்ணே.....சாப்புடவாங்க!"

சுந்தரி அழைத்தாள்.

"நீ முதலில் சாப்பிட்டு வந்து பாப்பாவை வாங்கிக்கோம்மா! எனக்கென்ன அவசரம்? நீ வரவரைக்கும் பாப்பாவை நான் பாத்துக்கறேன், வித்யா, நீயும் சுந்தரியோட சேர்ந்து சாப்பிடு!"

வித்யா, விக்னேஷைப் பார்த்த பார்வையில் பெருமிதம் பொங்கி வழிந்தது. குழந்தையை இறக்காமல் கையில் வைத்துக் கொஞ்சுவதைப் பார்த்து ஆச்சரியம் வந்தது. குழந்தை பிறந்த முதல் வாரம் அதைத் தொடக்கூட பயந்தான். தனக்குத் தூக்கத்தெரியாது என்று சொல்லி எட்ட இருந்தே பார்த்துக்கொண்டிருந்தான்.

இன்றென்னவென்றால் இடது உள்ளங்கையால் அழகாய் அதன் கழுத்தையும், தலையையும் ஒருசேரத்தாங்கி, வலது கையால் அதன் பின்புறத்தை எந்தி லாவகமாய் வைத்திருப்பதோடு அழகழகாய் சொல்லிக் கொஞ்சுகிறான்.

பசி பொறுக்காதவன், இன்று குழந்தைக்காக பசி தாங்குகிறான். பிள்ளை பெற்றவளை முதலில் சாப்பிடச் சொல்லுகிறான். இவனைக் கணவனாய் அடைவது எத்தனை பாக்கியம் என்று உணர்ந்த வித்யாவின் மனதுக்குள் மகிழ்ச்சி கரைபுரண்டது.

சுந்தரி சாப்பிட்டு வந்து குழந்தையை வாங்கிக்கொண்டாள். வித்யா விக்னேஷுக்கு பரிமாறிக்கொண்டிருந்தாள். இந்தக் காட்சியைப் பார்த்த சுந்தரிக்கு தானும் பிரபுவும் இதுபோல் பேசிக்கொண்டே உணவருந்திய நிகழ்வுகள் நினைவுக்கு வர, வித்யாவும், விக்னேஷும் அறியாவண்ணம் கண்களைத் துடைத்துக்கொண்டாள். 

"உங்க அக்கா பிள்ளைங்க எப்படி இருக்காங்க, வித்யா?" விக்னேஷ் அக்கறையுடன் விசாரித்தது, வித்யாவுக்கு அவன் மேலிருந்த மதிப்பை இன்னும் உயர்த்தியது.

"சரியான வாலுங்க. பெரியவனுக்கு பத்து வயசு. சின்னவனுக்கு எட்டு வயசு. எப்பவும் அடிதடிதான்.ரெண்டுக்கும் சமாதானம் பண்றதுதான் எனக்கும் அப்பாவுக்கும் வேலையே."

"அக்கா ஒண்ணும் சொல்லமாட்டாங்களா?"

"ம்ஹும்! அக்காவுக்கு நல்லா சாப்பிடணும், நல்லா தூங்கணும், டிவி பாக்கணும். வேற எதைப்பத்தியும் கவலை இல்லை. பசங்க எப்படிப்போனாலும் கண்டுக்கவே மாட்டா. அவளைத் தொந்தரவு செய்தா மட்டும் கண்ணுமண்ணு தெரியாம அடிப்பா...... நானும் அப்பாவும் அவங்களை அக்காகிட்ட இருந்து காப்பாத்தியே களைச்சிட்டோம்!"

"அவங்க அப்பாவைப் பத்தி ஏதாவது கேப்பாங்களா?"

கேட்டபிறகு நாக்கைக் கடித்துக்கொண்டான். சுந்தரி இருப்பதை மறந்து கேட்டுவிட்டான். தற்காலிகமாய்ப் பிரிந்த பிள்ளைகளே அப்பாவைக் கேட்பார்கள் என்றால் நிரந்தரமாய்ப் பிரிந்த பிள்ளையின் நிலை?

வித்யா அவன் நிலையைப் புரிந்துகொண்டாலும், கவனியாதவள் போல் பதில் சொன்னாள்.

"அதுங்க ரெண்டும் ஏதோ லீவுக்கு வந்தமாதிரிதான் இருக்குதுங்க. இங்கேயே ஸ்கூல் சேர்க்கும்போதுதான் தெரியவரும். அதுக்கான ஏற்பாடெல்லாம் முடிஞ்சிடுச்சி. இன்னும் ஒரு வாரத்தில் ஸ்கூலுக்கு அனுப்பணும்."

"பிரிஞ்சி வரதா முடிவே பண்ணியாச்சா? நீ  உங்க அத்தான்கிட்ட பேசிப்பாக்க வேண்டியதுதானே?"

"என்னத்தைப் பேசறது? உங்க பொண்ணு கூட இத்தனை வருஷம் வாழ்ந்ததே பெரிசுன்னு அப்பாகிட்ட சொன்னாராம்.  நமக்குதான் நல்லாத் தெரியுதே!  கல்யாணத்துக்கு முன்னாடி அக்கா இப்படி இல்லை. அப்ப அம்மாவும் இருந்தாங்க. பொறுப்பாதான் இருந்தமாதிரி இருந்துச்சு. இப்ப என்னடான்னா.....தலகீழா மாறி நிக்கிறா. அவ எதுக்கும் கவலைப்படறமாதிரியே தெரியலை.

குழந்தைகளோட எதிர்காலத்தை நினைச்சாதான் பயமா இருக்கு. நான் ஏதாவது சொன்னா...'நீ சம்பாதிக்கிற திமிர்ல பேசுறேடி' அப்படிங்கறா. அப்பா ஏதாவது சொன்னா...'நான் இந்த வீட்டுல இருக்கிறது புடிக்கலைன்னா எங்கையாவது போய் சாவறேன்'னு சொல்லி பயங்காட்டறா. பெரிய தலைவலியா இருக்கு அவளோட! என்ன பண்றதுன்னே தெரியலை.”

"உங்க அப்பா என்ன சொல்றார்?"

"கொஞ்சநாள் இங்க இருக்கட்டும்னு  சொல்லிட்டார். அத்தான் வேற டிவோர்ஸ் பண்றதைப் பத்திப் பேச ஆரம்பிச்சுட்டார்."

"சரி, நாம கவலைப்பட்டு என்ன ஆகப்போவுது? உங்க அக்காதான் மனசு வைக்கணும்!"

"ஹும்ம்! அவளை நினைச்சு நினைச்சு அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்ததுதான் மிச்சம்."

வித்யாவின் அக்காவை எண்ணி விக்னேஷ் கவலைப்பட்டான். அன்புக்கணவனை காலனிடம் பறிகொடுத்துவிட்டு, சுந்தரி இங்கே படாதபாடு படும்வேளையில், வித்யாவின் அக்காவும் அவள் கணவனும் தங்களுக்குக் கிடைத்த அற்புத இல்லறத்தையும், அதன் அடையாளமாய்ப் பெற்ற பிள்ளைகளின் எதிர்காலத்தையும்  பாழ்படுத்துவதை எண்ணிக் கவலையுற்றான்.


*****************************************************************
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

மு. உரை:
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
----------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு

9 comments:

  1. கிடைத்ததின் அருமை உணர்ந்தால்தான் அதனை போற்றி பாதுகாக்கும் சிரத்தையும் வரும்.. கவுன்சிலிங்கில் ஆணை மனம் மாற்ற முடிகிறது. முடிவெடுத்தபின் பெண் மனதினை மாற்றவே முடிவதில்லை.

    ReplyDelete
  2. "பாப்பா...குட்டிப்பாப்பா.......செல்லப்பாப்பா....தங்கப்பாப்பா.......பாப்பா......"

    அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

    அருமையான வரிகள்..

    ReplyDelete
  3. மிக அழகாகக் கதை சொல்லிப் போகிறீர்கள்
    அதிகமாக கதாபாத்திரங்களுக்குள் புகுந்து பேசாமல்
    இயல்பாக சொல்லிப் போகிற உங்கள் திறன்தான்
    உங்கள் வெற்றிக்குக் காரணம் என நினைக்கிறேன்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  4. வாழ்வியல் முறையில் தங்கள் கதை உள்ளதை
    உணர்வோடு உரைநடையும் உரையாடலும்
    சொல்லிச் செல்கிறது
    இவை கதைக்கு மேலும் அழகுட்டுகிறது
    இதை முன்போ படித்து கருத்துரை இட்டதாக
    ஒரு நினைவு

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. உங்கள் கதை இயல்பாகவும், எளிமையாகவும் இருக்கிறது கீதா அவர்களே. தொடர்ந்து மலரட்டும் நல்ல பதிவுகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தொடர்ந்துவந்து ஊக்குவிப்பதற்கு நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  7. அழகான கருத்துரைக்கும், வாக்குப்பதிவுக்கும் மனமார்ந்த நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  8. தங்கள் மதிப்பீட்டுக்கு நன்றி ஐயா. முன்பே கருத்துரை இட்டீர்களா? வெளியாகாமைக்கு வருந்துகிறேன். என்ன காரணம் என்று தெரியவில்லையே...

    ReplyDelete
  9. @ ShankarG,

    தங்கள் வருகையும் வாழ்த்தும் உற்சாகமளிக்கின்றன. நன்றிங்க.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.