நாகலட்சுமி சம்மதித்துவிட்டார் என்பது வித்யாவுக்கு பெரும் ஆச்சரியத்தைத்தந்தபோதும், சுந்தரிக்கு இதில் வியப்பேதும் இல்லை. அவளைப் பொறுத்தவரை நாகலட்சுமியம்மாள் ஒரு தெய்வத்துக்கு ஒப்பானவர். அவர் தன்னை வீட்டுக்கு அழைத்திருப்பது விந்தைக்குரிய செயல் அல்லவென்றே எண்ணினாள்.
வித்யாவும், விக்னேஷும் அதைச் சொல்லிச் சொல்லி மாய்வதன் ரகசியம் அவளுக்குப் புரியவே இல்லை. பிரபு சுந்தரிமேல் நாகலட்சுமிக்கு அவ்வளவாக நல்லெண்ணம் கிடையாது என்பதை அவளறியாமல் வைத்திருந்தனர், வித்யாவும், விக்னேஷும். அதனால் முன்கூட்டியே அதைப் பற்றி சொல்லி அவள் உற்சாகத்தைக் கெடுக்க விரும்பவில்லை.
ஆனாலும், விக்னேஷுக்கு உள்ளூர அம்மாவைப் பற்றிய பயம் இருந்துகொண்டேதான் இருந்தது. அம்மா சந்தடிசாக்கில் சுந்தரியை ஏதாவது சொல்லிக் காயப்படுத்திவிடக்கூடாது என்று நினைத்தான். சுந்தரியிடம் அம்மாவின் தற்போதைய மனநிலையை லேசாக கோடிட்டுக் காட்டுவது என்ற முடிவுக்கு வந்தான்.
"சுந்தரி, எங்க அம்மா முன்னாடி மாதிரி இப்ப இல்ல..அவங்களுக்கு உடம்பு முடியாமப் போனதுக்கு அப்புறம் எல்லார்கிட்டயும் கொஞ்சம் கடுகடுன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதனால் உங்கிட்ட அப்படி ஏதாவது பேசினா மனசில வச்சுக்காதம்மா....உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்!"
"என்னங்க, அண்ணே....இப்படியெல்லாம் பேசுறீங்க, அவங்க உங்களுக்கு மட்டும் அம்மா இல்ல, எனக்கும்தான், கவலைய விடுங்க, அவங்கள நான் நல்லா பாத்துக்கறேன்!"
வித்யாதான் மிகவும் கவலைப்பட்டாள். சுந்தரியையும், சுபாவையும் இனிமேல் இதுபோல் அடிக்கடி பார்க்கமுடியாது என்பதும், அம்மா, பிள்ளை இருவருக்கிடையில் முதன்முதலாய் ஒரு வேற்றாளாய், பரிதாபத்துக்குரிய சுந்தரி நுழைவதால் என்னென்ன பிரச்சனைகள் வருமோ என்ற கவலையும் அவளை மிகவும் படுத்தி எடுத்தன.
தன் கழுத்தில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த மெல்லிய தங்கச் சங்கிலியை எடுத்து குழந்தையின் கழுத்தில் அணிவித்தாள்.
"எதுக்குக்கா, இதெல்லாம்? உங்க அன்பு ஒண்ணு போதுமே, என் பொண்ணுக்கு!"
"சுபாக்குட்டிய இனிமேல் எப்ப பார்க்கப்போறேன்னு தெரியலையே!"
விக்னேஷ் சட்டென்று சொன்னான்.
“வித்யா...நீயும் சுந்தரியோட எங்க வீட்டுக்கு வாயேன். பிரபுவோட ஆபிஸில் வேலை செய்யறதை வச்சு சுந்தரிக்குப் பழக்கம்னு உன்னை அறிமுகப்படுத்துறேன்."
"விக்கி, சீரியஸாதான் சொல்றீங்களா? ஏதாவது பிரச்சனையாயிடப்போகுது..."
"இதைவிட்டா உன்னை அம்மாகிட்ட அறிமுகப்படுத்த வேற சந்தர்ப்பம் கிடைக்காதுப்பா. அதுவுமில்லாம, சுந்தரியை சாக்கா வச்சி நீ அடிக்கடி வீட்டுக்கு வரலாம். அம்மாவுக்கும் உனக்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரும்!"
"திட்டமெல்லாம் நல்லாதான் இருக்கு! ஆனா பயமா இருக்கே! முதலுக்கே மோசமா சுந்தரிக்கு பிரச்சனை வந்திடப்போகுது!"
"வாங்களேன் அக்கா! அம்மா ரொம்ப நல்லவங்க, நீங்க அவங்களைப் பாத்தீங்கன்னா உங்களுக்கு ரொம்பப் புடிச்சிடும்."
சுந்தரி தன் பங்குக்கு அழைக்க, வித்யாவும் விக்னேஷும் சிரித்தனர். அவர்கள் சிரிப்பின் காரணம் புரியாமல் சுந்தரி விழித்தாள்.
'எனக்கு அவங்களைப் பிடிக்கிறது முக்கியமில்ல, அவங்களுக்கு என்னைப் பிடிக்கணும். அதுதான் முக்கியம்' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள், வித்யா.
"சுந்தரி, முதல்ல உனக்கு ஒரு விஷயம் சொல்லணும்., தயவுசெஞ்சு எங்க அம்மாகிட்ட நாங்க ரெண்டுபேரும் காதலிக்கிற விஷயத்தை சொல்லிடாதம்மா!"
"ஏண்ணே...அவங்க ரொம்ப நல்லவங்கதான, சொன்னா கோவிச்சுப்பாங்களா, என்ன?"
"கோவிச்சுப்பாங்களா, வீட்டையே ரெண்டாக்கிடுவாங்க! அது மட்டுமில்ல....இந்த ஜென்மத்துக்கு எனக்கு கல்யாணம் நடக்கவே நடக்காது!"
"ஏண்ணே அப்புடி....?"
அப்பாவியாய் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருக்கும் சுந்தரியைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது. இவளிடம் நடந்ததைச் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில் வித்யா சொல்லிவிட்டாள்.
"ம்? அவர் அவங்க அம்மா சொல்ற பொண்ணைத் தான் கட்டுவேன்னு சத்தியம் பண்ணி குடுத்திருக்கிறாராம். அதைச் சொல்லாம, சும்மா பூசி மெழுகறார்."
"அப்புடியாண்ணே? அதான் எங்க வீட்டுக்காரரும் அப்பவே சொன்னாரா?"
"பிரபுவா? என்ன சொன்னான்?"
"உங்க அம்மா ரொம்ப நல்லவங்கன்னு அவரிட்ட சொன்னேன். தன் புள்ளைக்கு பிரச்சனை வராதவரைக்கும் எல்லா அம்மாவும் நல்லவங்கதான்னு ஒரு மாதிரி குதர்க்கமா சொன்னாரு! அப்ப புரியல, இப்ப புரியுது. சத்தியமே வாங்கிட்டாங்களா?"
சுந்தரிக்கு நாகலட்சுமியின் சமயோசிதம் கண்டு முதன்முதலாய் அவர்மேல் மிதமான பயம் வந்தது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை சுந்தரி புறப்படத் தயாரானாள். தானும், பிரபுவும் வாழ்ந்த அந்தவீட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல் கலங்கினாள். தன்னை ஒரு மகளினும் மேலாக பார்த்துக்கொண்ட கோமதியம்மாவிடம், அவர் கணவரிடமும் தனக்கும், குழந்தைக்கும் ஆசி பெற்றுக்கொண்டாள்.
எங்கிருந்தாலும், நீயும், குழந்தையும் நல்லபடியா சந்தோஷமா இருக்கணும் என்று வாழ்த்தினர். வித்யாவும் வந்திருந்து இடமாற்றத்துக்கான ஏற்பாடுகள் செய்ய உதவினாள். சாமான்களை ஒரு லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டு காரில் மூவரும் குழந்தையுடன் புறப்பட்டனர்.
தான் சுந்தரியை அழைத்துவரவிருப்பதை மனோகரி அக்காவுக்கு விக்னேஷ் தெரிவித்திருந்ததால் அவள் வாசலிலேயே காத்திருந்தாள். சுந்தரி, குழந்தையுடன் இறங்கியதும், அவளையும், வித்யாவையும் வரவேற்றாள்.
போனவருஷம் தம்பதி சமேதரராய் இவளுக்கு ஆரத்தி எடுத்தது நினைவுக்கு வர, மனோகரி அழுதுவிட்டாள். சுந்தரிதான் அவளைத் தேற்றினாள். விக்னேஷ் கண்களால் அம்மாவைத் தேடினான்.நாகலட்சுமி வெளியில் வரவே இல்லை.
"காலையில இருந்து அம்மாவுக்கு ஒரே தலைவலி, அதான் மாத்திரை போட்டுகிட்டு படுத்திருக்காங்க!"
மனோகரி சொல்லியவாறே குழந்தையை கையில் வாங்கிக்கொண்டு சுந்தரியுடன் நாகலட்சுமியின் அறைக்குச் சென்றாள்.
விக்னேஷும் வித்யாவும் அவர்கள் பின்னால் சென்றனர்.
நாகலட்சுமி கண்களை மூடிப் படுத்திருந்தார். மனோகரிதான் எழுப்பினாள்,
"விக்கியம்மா! உங்க வீட்டுக்கு குட்டி விருந்தாளி வந்திருக்காங்க, எழுந்திருச்சிப் பாருங்க!"
நாகலட்சுமி எழுந்துபார்க்க, தன்னைச் சுற்றி அனைவரும் கூடியிருப்பதைப் பார்த்து என்னவோ போலாயிற்று. குழந்தையைப் பார்ப்பதைவிடவும், சுந்தரியிடம் துக்கம் விசாரிப்பதைவிடவும், சுந்தரியுடன் நிற்கும் பெண்ணை யாரென்று தெரிந்துகொள்ளும் ஆவலே மிகுந்திருந்தது.
இருப்பினும் ஆவலை அடக்கியவராய், "வாம்மா, சுந்தரி, எப்படியிருக்கே? பிரபு இப்படி அல்பாயுசிலே போவான்னு யாருமே எதிர்பார்க்கலை. அநியாயமா பெத்தவங்க சாபத்துக்கு ஆளாகிட்டானே!" என்றார்.
விக்னேஷுக்கு அம்மாவின்மேல் கோபம் வந்தது. இப்படியா எடுத்த எடுப்பில் பேசுவார்? ஆறுதல் சொல்லாவிட்டாலும், அவள் மனம் நோகப் பேசாமலாவது இருக்கலாம் இல்லையா?
சுந்தரி, குழந்தையை ஆசிர்வதிக்குமாறு வேண்ட,
"என்னன்னு ஆசிர்வதிக்கிறது? என் ஆசிர்வாதம்தான் பலிக்கமாட்டேங்குதே!" என்றார்.
மனோகரி, வித்யா, விக்னேஷ் அனைவரும், நாகலட்சுமியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தனர்.
சுந்தரி இதை ஓரளவு எதிர்பார்த்திருந்தாள். எப்போது, அவர் தன் பிள்ளையிடம் சத்தியம் வாங்கினார் என்று அறிந்தாளோ, அப்போதே அவருக்கு காதல் கல்யாணத்தின் மீதிருந்த வெறுப்பை அறிந்திருந்தாள். எனினும் வந்த நிமிடமே இப்படிப் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
இதுவரை விக்னேஷின் மூலம் கேள்விப்பட்டிருந்த நாகலட்சுமியம்மாவை நேரில் பார்த்தபோது, வித்யா கற்பனை செய்துவைத்திருந்த தோற்றத்துக்கும், குணாதிசயத்துக்கும் மிகப் பொருத்தமானவராகவே இருந்தார். அவர் சுந்தரியிடம் பேசியதைக் கேட்டபோது, இவரிடம் இன்னும் மிகுந்த எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று முடிவுசெய்துவிட்டிருந்தாள், வித்யா.
நாகலட்சுமியின் பார்வை அடிக்கடி வித்யாவின் பக்கம் செல்வதை உணர்ந்த, விக்னேஷ், அம்மாவிடம்,
"அம்மா! இது வித்யா! பிரபுவோட ஆபிஸில வேலை பாக்கறாங்க, சுந்தரிக்கு ரொம்பப் பழக்கம்!"
திவ்யா மெல்லிய புன்னகையுடனும் ஒரு தலையசைப்பினுடனும் கைகளைக் குவித்து வணங்கினாள்.
" வாம்மா!" அத்துடன் அவளுடனான பேச்சை அம்மா நிறுத்திக்கொண்டது விக்னேஷுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.
அனைவருக்கும் மனோகரியே சமையல் செய்தாள். குழந்தையைக் காரணம் காட்டி சுந்தரியை ஒருவேலையும் செய்யவிடவில்லை.
வித்யா வலுக்கட்டாயமாய் அடுக்களை சென்று மனோகரிக்கு உதவினாள். ஆனால், மனோகரி,கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் திணறிவிட்டாள். அவள் திணறுவதைப் பார்த்து மனோகரி ஓரளவு ஊகித்துவிட்டாள். வித்யா அவளைக் கையெடுத்துக் கும்பிட்டு, இந்த விஷயம், நாகலட்சுமிக்கு தெரியவேண்டாமென்று கேட்டுக்கொண்டாள்.
விக்னேஷின் திருமணம் தொடர்பாக, அவனுக்கும், அவன் அம்மாவுக்கும் இடையில் நடந்த விவரங்கள், மனோகரிக்குத் தெரியவந்ததும், விக்னேஷின்மேல் ஆத்திரப்பட்டாள். இவ்வளவு நல்லபையன், இப்படி அம்மாமேல் வைத்திருக்கும் பாசத்தால் தன் வாழ்க்கையையே பணயம் வைக்கிறானே என்று அவன்மேல் பரிதாபப்பட்டாள். வித்யா - விக்னேஷ் காதலுக்கு தன்னாலான உதவிகள் செய்வதாக வாக்களித்தாள்.
வித்யா, இனி சுந்தரியின் நிலை என்னாகுமோ என்று கவலைப்பட்டவளாய் வீடு திரும்பினாள்.
*******************************************************************
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
எல்லாரும் எள்ளப் படும்.
மு.வ உரை:
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.
-------------------------------
-------------------------------
தொடர்ந்து வாசிக்க
முந்தைய பதிவு
யாராவது தலையிட்டால்தான் பிரச்சினை தீரும் போலிருக்கிறதே. பதட்டம் வரவைக்காத நடை மிக நன்று. தொடர்கிறேன், கீதா.
ReplyDeleteஇன்றுதான் சேர்த்து வைத்து படித்தேன்.. கதைக்குள் இழுத்துப் போகும் சம்பவங்களும் வளமான நடையும்.
ReplyDeleteநேற்று ஒரு பின்னூட்டாம் இட்டிருந்தேனே! முழுதுமாய்ப் படித்தேன். கோர்வையாக சம்பவங்களை வெளிப்படுத்தும் பாங்கு.. சிக்கலில்லாத மொழி... எனக்கும் கொஞ்சம் இதை சொல்லிக் கொடுக்கக் கூடாதா?
ReplyDeleteஅடுத்து வருவதை ஆவலோடு தொடர்கதையை நிறுத்துவது என்பது மிகமிகத் திறமையான ஒன்று
ReplyDeleteதங்கள்பால் அத்திறமை உள்ளது.
புலவர் சா இராமாநுசம்
21 பாகங்களையும் படிக்க எனக்கு நேரமும் வாய்ப்பும் இல்லையே சகோதரி. என்ன செய்வது.? அனைத்து பாகங்களின் இறுதியில் வரும் திருக்குறளை மட்டுமாவது படித்து விடுகிறேன். .
ReplyDeleteதொடர்வருகைக்கு நன்றி சாகம்பரி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ரிஷபன் சார்.
ReplyDeleteஉங்கள் பின்னூட்டம் காணாமற்போனது குறித்து வருந்துகிறேன் மோகன்ஜி. வாழ்வியல் நிகழ்வுகளை சுவைபட எழுதுவதில் தேர்ந்தவரான உங்களிடமிருந்து நான் கற்கவேண்டியதே நிறைய உள்ளது.
ReplyDeleteதங்கள் தொடர்வருகையும் கருத்தும் கண்டு மகிழ்கிறேன் ஐயா.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவகுமாரன். இப்போது நேரமில்லையென்றால் என்ன, பிறகு நேரம் கிடைக்கும்போது படியுங்கள். திருக்குறளைப் படித்துச் செல்கிறேன் என்றதே மகிழ்வைத் தருகிறது.
ReplyDeleteஎனக்கு கதை படிப்பதைப் போலவே இல்லை
ReplyDeleteபோனவாரம் நிஜமாக நடந்ததை நீங்கள்
இந்த வாரம் சொல்வது போல்தான் படுகிறது
கதையின் போக்கும் சொல்லிச் செல்லும் விதமும்
அத்தனை யதார்த்தமாக உள்ளது
சுந்தரியின் இடப் பெயர்ச்சி ஒரு நல்ல திருப்பத்தை
ஏற்படுத்தும் என மனசுக்குப் படிகிறது
அருமையான தொடர்.தொடர வாழ்த்துக்கள்
த.ம 2
தவறாமல் வந்து கருத்துப் பதிந்ததோடு வாக்கும் பதிந்து ஊக்கமளிப்பதற்கு நன்றி ரமணி சார்.
ReplyDelete