12 June 2014

சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 3


தங்களை உயர்த்திக்காட்ட அடுத்தவரை மட்டம் தட்டுவது என்பது உலக மக்கள் அனைவருக்குமே மிகவும் பிடித்தமான விஷயம் போலும். தனிமனிதனாக இருக்கும் போது அடுத்தவனை, குழுவாக இருக்கும்போது அடுத்த குழுவை, மாநிலம் என்றால் அடுத்த மாநிலத்தை, நாடென்றால் அடுத்த நாட்டைப் பழிப்பதில் அவ்வளவு சந்தோஷம். ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்தவரும் பிற மாநிலத்தவரைக் கேலியாக குறிப்பிடும் பட்டப்பெயர்கள் ஐரோப்பியக் குடியேற்றத்தின் ஆரம்ப காலத்தில் (1800-களில்) மக்களிடையே புழக்கத்தில் இருந்திருக்கின்றன. கால ஓட்டத்தில் பல மறைந்துபோனாலும் ஒன்றிரண்டு இப்போதும் உள்ளன.



ஆறு மாநிலங்களையும் இரண்டு யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியதுதான் ஆஸ்திரேலியா.

மாநிலங்கள்குவீன்ஸ்லாந்து, நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா.

யூனியன் பிரதேசங்கள்வடக்கு பிரதேசம், ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேசம்.

ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் தங்களைத் தாங்களே எப்படிப் பெருமைப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதையும் மற்ற மாநிலத்தார் அவர்களை எப்படி கேலி செய்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்.



1. முதலில் குவீன்ஸ்லாந்து. கிழக்கிலிருப்பதால் ஆஸ்திரேலிய மாநிலங்களில் முதலில் சூரிய உதயத்தைக் காணும் மாநிலம் என்பதால் சூரியன் ஒளிரும் மாநிலம் (Sunshine state) என்று மார்தட்டுகிறது. வாழை அதிகமாக விளையும் மாநிலம்  என்பதால் வாழைத்தோட்டம் என்ற பெயரும் அதற்குண்டு. குவீன்ஸ்லாந்தின் தலைநகர் பிரிஸ்பேனை வாழைப்பழ நகரம் (Banana city) என்பர். வாழை விளைச்சலிலேயே வாழ்நாளை செலவழிப்பதால் அவர்கள் வேலையில்லாத நேரங்களில் வாழைப்பழங்களை வளைத்துக் கொண்டிருப்பார்கள் என்ற அர்த்தத்தில் வாழைப்பழ வளைப்பான்கள் (Banana benders) என்று நக்கலாய்க் குறிப்பிடுகின்றனர் அடுத்த மாநிலத்தினர்.

குவீன்ஸ்லாந்து மக்களுக்கு கரும்புத் தேரைகள் (cane toads) என்றொரு பட்டப்பெயரும் உண்டு. அதற்குப் பின்னால் ஒரு கதை உண்டு. ஆஸ்திரேலியாவின் பிரதானப் பணப்பயிர் கரும்பு. கரும்பின் குருத்துக்களை அழிக்கும் பூச்சிகளான கரும்பு வண்டுகளை அழிப்பதற்காக ஹவாய் தீவுகளிலிருந்து கொண்டுவரப்பட்டவை தென்னமெரிக்காவைச் சேர்ந்த இந்த கரும்புத் தேரைகள். வளர்ந்த வண்டுகள் கரும்பின் குருத்தைத் தின்று வாழும். ஆனால் மண்ணுக்குள்ளிருக்கும் அவற்றின் லார்வாக்கள் கரும்பின் வேர்களைத் தின்று வளரும். அதனால் கரும்பின் விளைச்சல் பாதிப்புறுவதால் 1935 இல் கிட்டத்தட்ட நூறு இளம் தேரைகள் கொண்டுவரப்பட்டு குவீன்ஸ்லாந்தின் சில பகுதிகளில் வயல்களில் விடப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. ஆனால் எவரும் எதிர்பாராத அளவுக்கு அவற்றின் இனம் பல்கிப்பெருகி இன்று இருநூறு மில்லியனைத் (இருபது கோடி) தாண்டிவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.



தேரை என்றால் சாதாரணமாய் நாம் பார்க்கும் சிறிய அளவுத் தேரைகள் அல்ல, பெரியவை, மிகப்பெரியவை. ஒவ்வொன்றும் 19 முதல் 23 செ.மீ. நீளமும் தோராயமாக ஒன்றேமுக்கால் முதல் இரண்டு கிலோ வரை எடையும் கொண்டவை. போதாக்குறைக்கு எதிரிகளிடமிருந்து தற்காக்க, இவற்றின் காதின் பின்னால் ஒரு நச்சு சுரப்பியும் உண்டு. அதன் நச்சுக்கு மனிதர்களைக் கொல்லும் அளவு வீரியம் இல்லை என்றாலும் கண் எரிச்சல், கை கால்கள் அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.

பரிணாம வளர்ச்சியினால் இத்தனை வருடங்களில் அவற்றின் கால்களின் நீளம் அதிகரித்திருக்கிறதாம். அதனால் இடப்பெயர்வு இன்னும் விரைவாக நடந்து பக்கத்து மாநிலங்களுக்கும் பரவி விட்டனவாம். குவீன்ஸ்லாந்து இந்த கரும்புத் தேரைகளை அறிமுகப்படுத்தியதால் ஏற்பட்ட பிரச்சனைகளால் எரிச்சலடைந்த பக்கத்து மாநிலமான நியூ சௌத் வேல்ஸ் மக்கள் குவீன்ஸ்லாந்து மக்களையும் கரும்புத் தேரைகள் என்றே குறிப்பிட்டு கேலி செய்தனர்.

2. பதிலுக்கு நியூ சௌத் வேல்ஸ் மக்களை கரப்பான்பூச்சிகள் (cockroaches) என்று நையாண்டி செய்தனர் குவீன்ஸ்லாந்து மக்கள். எங்கள் மாநிலத் தேரைகளை விடவும் எண்ணிக்கையில் அதிகம் உங்கள் மாநிலக் கரப்பான் பூச்சிகள் என்று கேலி செய்தனர். (கரப்பான் பூச்சி படம் போடமாட்டேனே..)



நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்துக்கு கோட் ஹேங்கர் மாநிலம் (coat hanger state) என்ற பட்டப்பெயரும் உண்டு. அது ஏனாம்? சிட்னியின் பிரசித்தமான ஹார்பர் பாலத்தைத் தூரநின்று பார்த்தால் கோட் ஹேங்கர் போலத் தெரிகிறதாம் அவர்களுக்கு.



ஆரம்பகாலத்தில் நியூ சௌத் வேல்ஸில் குடியேறிய ஐரோப்பிய மக்களுடைய வாரிசுகள் நெடுநெடுவென்று உயரமாகவும் மக்காச்சோள நிறத்திலும் இருந்ததால் சோளத்தட்டைகள் (cornstalk) என்ற பட்டப்பெயருக்கும் ஆளாகியிருந்திருக்கின்றனர்.




ஆனால் நியூ சௌத் வேல்ஸ் தன்னைப் பெற்றிப் பெருமையாகச் சொல்வது என்ன தெரியுமா? முதன்மை மாநிலம் (Premier state). காரணம்?

1788 இல் முதன்முதலில் ஐரோப்பிய காலணி உருவானது இங்குதான். ஆரம்பகால நியூ சௌத் வேல்ஸ் காலனியில் டாஸ்மேனியா, தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா, குவீன்ஸ்லாந்து, வடக்கு பிரதேசம் எல்லாமே அடங்கியிருந்திருக்கின்றன. 1825 க்குப் பிறகு ஒவ்வொன்றாய் தனி மாநிலமாகப் பிரிந்திருக்கின்றன. அதனால் தாய்மாநிலம் என்ற பெருமையும் சேர்ந்து முதன்மை மாநிலம் என்ற பெருமைக்குரியதாகிவிட்டது.

3. விக்டோரியா மாநிலம் ஆஸ்திரேலியாவின் மற்ற மாநிலங்களை விடவும் சிறியது என்பதாலும் அது தன்னைதோட்ட மாநிலம்’ (Garden state) என்று பெருமையாகக் குறிப்பிடுவதாலும் பிற மாநிலத்தவர் அதைமுட்டைக்கோஸ் தோட்டம்’ (Cabbage patch) என்று குறிப்பிட்டனர். விக்டோரிய மாநிலத்தைச் சார்ந்தவர்களை முட்டைக்கோஸ் தோட்டக்காரர்கள் (cabbage patchers) என்றனர்.





விக்டோரிய மாநிலத்தவரின் மற்றொரு பெயர் கோந்து மெல்பவர்கள். பொதுவாகவே ஐரோப்பியக் குடியேறிகள் அனைவரிடமும் ஒரு பழக்கம் இருந்தது. ஆஸ்திரேலிய மரமான வாட்டில் மரத்திலிருந்து கிடைக்கும் இனிப்பான பிசினை பொழுதுபோக்குக்காக மென்று கொண்டிருப்பார்களாம். சொந்த நாட்டில் சூயிங்கம் மென்று பழக்கப்பட்ட வாயால் வந்த நாட்டில் சும்மா இருக்கமுடியுமா? ஆனால் இந்த கோந்து மெல்பவர்கள் (Gum Suckers) என்ற பட்டப்பெயர் விக்டோரியா மாநிலத்தவர்க்கு மட்டும் ஏன் வழங்கப்பட்டது என்பது வியப்பு.



4. தெற்கு ஆஸ்திரேலியாவைச் சார்ந்தவர்களை காக்கை தின்னிகள் (crow eaters) என்று கேலி செய்கிறார்கள் பிற மாநிலத்தார். தெற்கு ஆஸ்திரேலியாவின் கொடியைப் பாருங்கள், ஒரு சாப்பாட்டுத் தட்டில் காக்கையை மல்லாத்தியிருப்பது போலவே இருக்கிறது. அவர்களை காக்கை தின்னிகள் என்பது சரிதானே என்கிறார்கள் அவர்கள். ஆனால் அதை மறுப்பதோடு மேற்கு ஆஸ்திரேலியர்கள்தாம் உண்மையான காக்கை தின்னிகள் என்கிறார்கள் இவர்கள்.




பாலை நிலமான மேற்கு ஆஸ்திரேலியாவில் வறட்சிக்காலத்தில் உண்ண உணவு எதுவும் கிடைக்காத நிலையில் அங்கு வசித்தவர்கள் கண்ணில் தென்படும் காக்கைகளையும் காக்கட்டூகளையும் சுட்டுவீழ்த்தி அவற்றின் கறியை உண்டார்களாம். அதற்கு ஆதாரமாக மேற்கு ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஐரோப்பியக் குடியேறிகளின் குறிப்புகள் உள்ளனவென்று அடித்துச் சொல்கிறார்கள் தெற்கு ஆஸ்திரேலியர்கள். தெற்கும் மேற்கும் வழக்கில் இடமாறிப் போய்விட்டது போலும். ஆனால் வைத்த பெயர் வைத்ததுதான் என்றாகிவிட்டது.


தெற்கு ஆஸ்திரேலியர்களுக்கு கோதுமை விவசாயிகள் (wheat fielders) என்ற பெயரும் உண்டு. அங்கு கோதுமை வயல்கள் அதிகமாக இருப்பதாலும் கோதுமை ஏற்றுமதியில் முன்னிலை வகிப்பதாலும் அந்தப்பெயர். மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும். அவர்கள் தங்களுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் தெரியுமா? திருவிழா மாநிலமாம், மதுரச மாநிலமாம், படைப்பாக்க மாநிலமாம்… இதுபோல் இன்னும் பல. இத்தனை பெருமைகளுக்கும் காரணம் இல்லாமல் இல்லை. சர்வதேச அளவிலான பல இசை, ஓவிய கலை நிகழ்ச்சிகள் தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான அடிலெய்டில் வருடந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மக்களின் கொண்டாட்டத்துக்கு காரணம் கேட்கவா வேண்டும்!

5. மேற்கு ஆஸ்திரேலியாவின் அழகிய கடற்கரைகள் யாவும் மண்ணுளிப்பூச்சிகளால் நிறைந்திருப்பதால் மேற்கு ஆஸ்திரேலியர்களுக்கு மண்ணுளிப் பூச்சிகள் (sand gropers) என்ற பட்டப்பெயர் வழங்கலாயிற்று. மண்ணுளிப் பூச்சிகளைப் பார்ப்பதற்கு நம்மூர் பிள்ளைப்பூச்சிகள் போலிருக்கின்றன.



ஆனால் மேற்கு ஆஸ்திரேலியாவோ, தன்னைத்தானே தங்க மாநிலம் (The golden state) என்று பெருமையடித்துக் கொள்கிறது. பொய்யில்லை, உண்மைதான். ஒரு வருடத்தில் ஆஸ்திரேலியா மொத்தத்திலும் கிடைக்கும் தங்கத்தில் சுமார் 60 சதவீதம் (கிட்டத்தட்ட 150 டன்) மேற்கு ஆஸ்திரேலியாவில்தான் கிடைக்கிறது என்பதும் தங்கம் மட்டுமல்லாது ஏராளமான இதர கனிமப்பொருட்களும் தோண்டியெடுக்கப்பட்டு ஏற்றுமதியாகின்றன என்பதும் அவர்களைப் பெருமை கொள்ளச் செய்யும் விஷயங்கள்.


மேற்கு ஆஸ்திரேலியாவில் 1931 இல் கிடைத்த 35 கிலோ தங்கக்கட்டி

6. உச்சிநுனிக்காரர்கள் (Top Enders) வேறு யார்? வடக்குப் பிரதேசத்தவருக்குதான் அந்த அரும்பெயர். ஆஸ்திரேலியாவின் உச்சியில் இருப்பவர்கள் அவர்கள்தானே. மற்ற மாநிலங்களிலிருந்து மாறுபட்ட சூழல், வாழ்க்கை கொண்ட வடக்குப் பிரதேசத்தினர் ஆஸ்திரேலியாவின் தனித்துவ மாநிலமாயிருப்பதே தங்கள் சிறப்பு என்கின்றனர்.



7.   எக்கச்சக்கமாய் ஆப்பிள் விளையும் டாஸ்மேனியாவை ஆப்பிள் தீவு (Apple Isle) என்றும் இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம் என்றும் டாஸ்மேனியர்கள் தங்கள் மாநிலத்தைப் பெருமை சாற்ற, மற்ற மாநிலக்காரர்களோ அவர்களை ஆப்பிள் தின்னிகள் (apple eaters) என்றும் பாராகோட்டாக்கள் (Barracoutas) என்றும் குறிப்பிட்டனர். செழுமையான காலங்களில் ஆப்பிள்களையும் வறட்சிக்காலங்களில் கடலில் கிடைக்கும் பாராகோட்டா வகை மீன்களையுமே பிரதான உணவாய்க் கொண்டு உயிர்வாழக்கூடியவர்கள் என்று கிண்டலாய்க் குறிப்பிடுவர்.


8. ஆஸ்திரேலிய தலைநகர்ப் பிரதேசத்தவருக்கு வட்டப்பாதைகளில் வலம்வருவோர் (Roundabout-abouters) என்று பெயர். தலைநகரமான கான்பெராவில் காணப்படும் பெரிய பெரிய வட்டப்பாதைகளில் சுற்றிச் சுற்றி எரிச்சலுற்ற மற்ற மாநிலத்தவர் இந்தப் பெயரை வைத்திருக்கக்கூடும். மற்றவர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். தலைநகர்ப் பிரதேசத்தவர் என்பதை விடவும் அவர்களுக்கு வேறு பெருமை வேண்டுமா என்ன?

கான்பெராவின்  பெரிய பெரிய வட்டப்பாதைகள்

இவ்வாறு ஒருவரை ஒருவர் கேலி செய்து சீண்டும்படியாக இருந்த பல பட்டப்பெயர்கள் காலப்போக்கில் ஒழிந்துவிட்டன. 1901-இல் ஆஸ்திரேலியா ஒரே நாடான பிறகு ஆஸ்திரேலியர்கள் என்னும் ஒன்றுபட்ட தேச உணர்வே மேலோங்கி நிற்கிறது. மாறுபட்ட மாநில விரோதங்கள் மறைந்துபோய்விடுகின்றன. பன்னாட்டு மக்களும் பன்னாட்டு கலாச்சாரங்களும் ஆஸ்திரேலிய வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட இக்காலத்தில் நிற இன மொழி அடையாளங்களால் ஒருவரை ஒருவர் துவேஷிப்பது சட்டப்படி குற்றமாகும்.

(அடுத்த பதிவுடன் நிறைவுறும்)

படங்கள் அனைத்துக்கும் நன்றி - இணையம்)

தொடர்ந்து வாசிக்க

சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 4

முந்தைய பதிவுகள்

சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 1

சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 2


9 June 2014

இந்த வார வல்லமையாளராக நான்...



இந்த வார வல்லமையாளர்!
ஜூன் 9, 2014 

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு திருமிகு. கீதா மதிவாணன்  அவர்கள்



மேலும் விவரங்களுக்கு 

http://www.vallamai.com/?p=46485

ஒவ்வொரு வாரமும் அறிவிக்கப்படும் வல்லமையாளர்களை வியந்து நோக்கிக்கொண்டிருக்கும் தருணத்தில் என்னையும் தெரிவு செய்து இவ்வார வல்லமையாளராய் அறிவித்துள்ள வல்லமை குழுவினருக்கு மகிழ்வும் நெகிழ்வுமான நன்றி. இது போன்ற அங்கீகாரங்கள் என் எழுத்தின் மீதான பொறுப்பை இன்னும் கூட்டுகின்றன என்பது உண்மை.  வல்லமை இதழின் ஆசிரியருக்கும் குழுவினருக்கும்  மீண்டும் என் அன்பான நன்றி. 





8 June 2014

சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும்- 2


ஆங்கிலம் உலகளாவிய மொழியாக இருந்தாலும் அதைப் பேசும் இடத்துக்கேற்ப உச்சரிப்பும் தொணியும் மாறுபடும் என்பதை நாம் அறிவோம். அவற்றுள் ஆஸ்திரேலிய ஆங்கிலம் ஒரு தனிவிதம். கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய மண்ணில் ஐரோப்பியக் குடியேற்றம் நிகழ்ந்தபோது இங்கிருந்த முற்றிலும் மாறுபட்ட சூழலும் சுற்றுப்புறமும், புதிரான மனிதர்களும், புதிய வாழ்க்கை முறையும், இதுவரை அறிந்திராத உயிரினங்களுமாக பல புதிய வார்த்தைகளை உருவாக்கும் அவசியத்தை உண்டாக்கின.


சென்னையில் புழங்கிய தமிழோடு ஆங்கிலம், இந்தி, உருது, கன்னடம், மார்வாரி, தெலுங்கு இன்னபிற மொழிகள் கலந்து ஒரு புதிய பாணியை உருவாக்கியது போல் ஆஸ்திரேலியக் குடியேறிகளின் தேவை நிமித்தம் புதிதாய் உருவாக்கப்பட்ட வார்த்தைகளும், நாடுகடத்தப்பட்டுக் கொண்டுவரப்பட்ட கைதிகளின் கொச்சை மொழிவழக்கும், ஐரோப்பியக் குடியேறிகளின் அநேக மொழிகளும், ஆஸ்திரேலிய சொந்த மண்ணின் மைந்தர்களான பழங்குடியினரின் மொழிகளும் அவர்களால் பேசப்பட்ட கற்றுக்குட்டி ஆங்கிலமும் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்தானிய ஆங்கிலத்தோடு பின்னிப்பிணைந்து ஒரு புதிய பாணியிலான ஆங்கிலம் உருவாகக் காரணமாயின. இதுவரை கிட்டத்தட்ட பத்தாயிரம் புதிய ஆஸ்திரேலிய ஆங்கிலச் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன என அறியப்பட்டுள்ளது

புதிதாக ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள், என்னதான் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தாலும், ஆஸ்திரேலிய ஆங்கிலத்தைப் பழகிக்கொள்ளும் வரை சற்று தடுமாற்றத்துடனேயே எதிர்கொள்ள நேரிடும். இது குறிப்பாக நியூ சௌத் வேல்ஸ் அல்லாத மாநிலங்களுக்குத்தான் அதிகமாகப் பொருந்தும்.

என் மகளுக்கு நேர்ந்த அனுபவம் இது. அப்போது குவீன்ஸ்லாந்தில் அவள் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். அவள் படித்த பள்ளியில் அனைவரும் ஆஸ்திரேலிய மாணவர்கள். ஒருநாள் அவள் பள்ளிவிட்டு வெளியே வரும்போது சக மாணவன், அவளிடம் ‘Hei, How (are) you going?’ என்று கேட்க, இவள் சிரத்தையாக ‘I’m going by bus’ என்றாளாம். அவன் சற்று திகைத்துவிட்டு மறுபடியும் அதையே கேட்க இவள் மறுபடியும் அதையே சொல்ல, அவன் சிரித்துவிட்டுப் போய்விட்டானாம். பிறகுதான் தெரியவந்திருக்கிறது ‘How you going?’ என்றால் ‘how are you?’ - எப்படியிருக்கிறாய்? எப்படிப்போகிறது வாழ்க்கை? என்று கேட்போமே.. அப்படி என்பது.

ஆரம்பப்பள்ளிகளில் ஒரு வழக்கம் இருந்தது. பிள்ளைகளுக்கு காண்டீனில் ஏதாவது உணவு தேவைப்பட்டால் பெற்றோர் காலையிலேயே காண்டீனில் உணவுக்கு ஆர்டர் கொடுத்து பிள்ளைகளின் பெயரையும் வகுப்பையும் குறிப்பிட்டு பணமும் கட்டிவிடவேண்டும். மதிய உணவு இடைவேளையில் உணவு சரியாக பிள்ளைகளுக்குப் போய் சேர்ந்துவிடும். என் மகனும் ஒருநாள் காண்டீனில் சாப்பிட ஆசைப்பட்டான். சரியென்று மகனை வகுப்பில் விட்டுவிட்டு, காண்டீனைத் தேடினேன். ‘Sports room’ ‘Tuck shop’ ‘uniform shop’ ‘toilet’ என்றெல்லாம் பெயர்ப்பலகைகள் கண்ணில் தென்படுகின்றனவே தவிர canteen எங்குமே இல்லை. விசாரித்தால் ‘Tuck shop’ தான் காண்டீனாம். ஆஸ்திரேலிய ஆங்கிலத்தில் ‘Tucker’ என்றால் உணவு என்று பிறகு அறிந்துகொண்டேன்.


ஆஸ்திரேலியாவில் ஆரம்பகால நினைவுகள் எல்லாமே வேடிக்கைதான். ஒருமுறை இந்திய நண்பர்களிடம் பேசும்போது பள்ளிவிழா அழைப்பிதழில் ‘Bring a plate’ என்றிருப்பதைக் குறிப்பிட்டேன். அப்படி சொல்லியிருந்தால் நாம் போகும்போது ஏதாவது உணவு வகையைச் செய்து எடுத்துப் போகவேண்டும் என்றார்கள். நல்லவேளை, முன்கூட்டியே தெரிந்தது. இல்லையென்றால் function –இல் வெறும் தட்டுடன் போய் நின்றிருப்பேன்.

ஹென்றி லாசன், பேன்ஜோ பேட்டர்சன், பார்பரா பெய்ன்டன், ஜான் ஆர்தர் பெரி, லூயிஸ் பெக் போன்ற ஆஸ்திரேலிய செவ்வியல் படைப்பாளிகளின் படைப்புகளின் வாசிப்பனுபவம்தான் எனக்கு ஆரம்பகால ஆஸ்திரேலிய ஆங்கிலம் பற்றிய புரிதலை உண்டாக்கியது என்றால் அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சி இன்னும் விசாலமாக்கியது எனலாம். சாதாரண ஆங்கிலத்துக்கும் ஆஸ்திரேலிய ஆங்கிலத்துக்குமான வேறுபாடு விளங்கியது. பலப்பல புதிய வார்த்தைகளின் பரிச்சயம் கிடைத்தது. பல வார்த்தைகள் அவற்றுக்கான பொருளை விடுத்து வேறொன்றைக் குறிப்பது புரிந்தது. சாதாரண அகராதியை விடுத்து ஆஸ்திரேலிய ஆங்கில அகராதியையும் ஆஸ்திரேலிய கொச்சைவழக்குக்கான அகராதியையும் வாசித்துதான் முழுமையான அறிவைப் பெற முடிந்தது.

மொழிபெயர்ப்பை ஆரம்பிக்குமுன் ஆஸ்திரேலிய வழக்குமொழிகளையும் கொச்சைமொழி வழக்கையும் அறிந்துகொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதுவும் இன்றைய ஆஸ்திரேலிய மொழிவழக்கு இல்லை. இது நூற்றைம்பது இருநூறு வருடங்களுக்கு முந்தைய மொழிவழக்கு. அப்போதுதான் ஆஸ்திரேலிய ஆங்கிலம் என்னும் தனித்துவ ஆங்கிலம் உருவாக ஆரம்பித்த காலம். அறிந்துகொள்ள ஆரம்பித்தபிறகு சுவாரசியம் மிகுந்துவிட்டது.


பொதுவாக Bush என்றால் புதர் என்ற மட்டில்தான் நமக்குத் தெரியும். ஆனால் ஆஸ்திரேலியாவில் bush என்பது புற்களும் அடர்த்தியான யூகலிப்டஸ் மரங்களும் நிறைந்த பகுதியாக இருக்கலாம், ஆங்காங்கு பரவலான குட்டையான ஆப்பிள் மரங்களைக் கொண்டிருக்கும் பகுதியாக இருக்கலாம், ஆளுயரப் புற்கள் அதுவும் காய்ந்து மடிந்த புற்களால் நிறைந்திருக்கலாம். இந்த இடத்தைத் தமிழில் எப்படிக் குறிப்பது. காடு என்றால் நமக்கு நினைவுக்கு வருவது பச்சைப் பசேலென்று மரங்களும் கொடிகளும் செடிகளுமான அடர்வனம். புதர் என்றால் குத்துப்புதர்கள்தாம் நினைவுக்கு வரும். புதர்க்காடு, குறுங்காடு என்ற வார்த்தைகளை உபயோகித்தேன்.

ஆஸ்திரேலியர்களின் ஆங்கில உச்சரிப்பும் வெகுவாக மாறுபடும். டே (day) என்போம் நாம். டெய் என்பார்கள் அவர்கள். Face என்பதை ஃபேஸ் என்போம் நாம், பெய்ஸ் என்பார்கள் அவர்கள். Flour – flower இரண்டுமே கிட்டத்தட்ட ஒரேமாதிரி ஃப்ளவர் என்று உச்சரிக்கப்படும். அதே சமயம் பல வார்த்தைகளை சுருக்கி நறுக்கி பேசுவதில் ஆஸ்திரேலியர்கள் கில்லாடிகள். பல ஆங்கில வார்த்தைகள் செல்லப்பெயர்களைப் போலாகிவிட்டன.

நான் ஒரு ஆஸ்திரேலியன் என்று நீட்டி முழக்கி சொல்வதற்கு பதில் நான் ஒரு ஆஸி (Aussie) என்று சட்டென முடித்துக்கொள்கிறார்கள். ஆங்கிலம் பேசும் பிற நாட்டவரை விடவும் ஆஸ்திரேலியர்தான் அதிகமாக வார்த்தைகளை நறுக்கி உபயோகிப்பதாக 4300- க்கும் அதிகமான வார்த்தைகளின் மூலம் லெக்சிகன் அகராதி ஆதாரப்படுத்துகிறது. 

அவற்றுள் சில,

ஆஸ்திரேலியன் - ஆஸி,
காக்கி
காக்ரோச்காக்கட்டூ – காக்கி
பிரேக்ஃபாஸ்ட் – பிரெக்கி
பிஸ்கட் – பிக்கி
லிப்ஸ்டிக் - லிப்பி

சாக்லேட்- சாக்கி
பா(ர்)பக்யூ பா(ர்)பி
யுனிவர்சிடி யுனி
ஆக்டோபஸ் ஆக்கி
மஷ்ரூம் - மஷ்ஷி
பா(ர்)பி

ஃபுட்பால் ஃபூட்டி
போஸ்ட்மேன் – போஸ்டி
எக்ஸ்பென்சிவ் – எக்ஸி
ரிலேடிவ் – ரெல்லி

மஸ்கிடோ மோஸி
ட்ரேட்ஸ்மேன் ட்ரேடி
பிரிஸ்பேன் பிரிஸ்ஸி
மோஸி
கிறிஸ்மஸ் – கிறிஸ்ஸி

கோல்டு டிரிங்க்ஸ் கோல்டிஸ்
அண்டர்பேண்ட்ஸ் – அண்டீஸ்
ட்ராக்சூட் பேண்ட்ஸ் – ட்ராக்கீஸ்
ஆக்வார்ட் ஆக்ஸ்

அப்ஜெக்ஷன் - ஆப்ஸ்
மொபைல் மோப்ஸ்
டோட்டலி டோட்ஸ்
மெல்போர்ன் - மெல்ப்ஸ்

அவோ
அவோகேடோ அவோ
பிஸினஸ் பிஸ்ஸோ
பிரதர் - ப்ரோ
டாகுமெண்டரி டாக்கோ
ஜர்னலிஸ்ட் ஜர்னோ
ஸ்மோக் ப்ரேக் - ஸ்மோக்கோ

ப்ராப்ளம் - ப்ராப்
கப் ஆஃப் டீ ஆர் காஃபி - கப்பா
குட் டே கிடெய் (G’day)
கங்காரூ - ரூ

மேலே கண்டவற்றைக் கொண்டு ஆஸ்திரேலியர்கள் வார்த்தைகளை முழுவதுமாய் உச்சரிக்கக் கூட இயலாத சோம்பேறிகள் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. நேரடியாய் அர்த்தம் தரும் சில வார்த்தைகளை அவற்றுக்கு மாற்றான வார்த்தைகளால் நீட்டிமுழக்கி சொல்வதும் உண்டு.

தமிழில் இடக்கரடக்கல் கேள்விப்பட்டிருப்போம். மற்றவர் முன் கூறத்தகாத அநாகரிகமான அல்லது அமங்கலமான சில சொற்களையும் சொற்றொடர்களையும் வேறு சொற்களாலும் சொற்றொடர்களாலும் நாசுக்காகக் குறிப்பிடுவோம்.

கண்ணை மூடிவிட்டார் - இறந்துவிட்டார்
கயிறு - பாம்பு
பெரிய காரியம் - சாவு
விளக்கை அமர்த்து விளக்கை அணை
கடை கட்டிவிட்டார் - கடையை மூடிவிட்டார்

அவை தவிர நகைச்சுவையாகவும் சிலவற்றைக் குறிப்பிடுவதுண்டு.

இந்தியன் காஃபி வடித்த கஞ்சி
நீர் வாழைக்காய் மீன்
நடராஜா சர்வீஸ் நடந்து போதல்
வெஞ்சாமரம் (வெண்சாமரம்) பிஞ்சிடும் விளக்குமாறு பிய்ந்துவிடும்

ஆஸ்திரேலியர்களோ இடக்கரடக்கல் போன்ற காரணம் எதுவுமில்லாமலேயே சுவாரசியத்துக்காக ரைமிங்கான வார்த்தைகளைப் போட்டு சிலவற்றைக் குறிப்பிட்டிருக்கின்றனர். எளிமையாய் சொல்லக்கூடிய வார்த்தைகளையும் Australian slang  எனப்படும் ஆஸ்திரேலிய கொச்சைவழக்கில் நீட்டிமுழக்கி எப்படி சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.


தக்காளி சாஸூக்கும் செத்த குதிரைக்கும் என்ன சம்பந்தம்? ஒரு உணவுமேசையில்  அந்த செத்த குதிரையை என் பக்கம் தள்ளு (Pass me the dead horse)’ என்று யாராவது சொல்லக்கேட்டால் பயந்துவிடாதீர்கள். அது தக்காளி சாஸைத்தான் குறிக்கிறது.

டொமேட்டோ சாஸ் (tomato sauce) - டெட் ஹார்ஸ் (dead horse)
ஷேவ் (shave) - டாட் அண் டேவ் (Dad n’ dave)
கோல் (goal) - ஸாஸேஜ் ரோல் (sausage roll)

வைஃப் (wife) – ட்ரபிள் அண் ஸ்ட்ரைஃப் (trouble and strife)
ஸிஸ்டர் (sister) – ப்ளட் ப்ளிஸ்டர் (blood blister)
கிட் (kid) – டின் லிட் (tin lid)

சூட் (suit) – பேக் ஆஃப் ஃப்ரூட் (bag of fruit)
போலீஸ் (police) – டக்ஸ் அண் கீஸ் (ducks and geese)
நியூஸ் (News) – நெய்ல் அண் ஸ்குரூஸ் (Nail and screws)

சிகரெட் (Cigarette) – ஃபர்கிவ் அண் ஃபர்கெட் (forgive and forget)
ரோட் (Road) – ஃப்ராக் அண் டோட் (frog and toad)
ட்ராம் (tram) – ப்ரெட் அண் ஜாம் (bread and Jam)

இவை தவிர எழுத்தில் வடிக்க இயலாத அநேக கொச்சை வார்த்தைகளும் ஆஸ்திரேலியர்களின் மத்தியில் புழக்கத்தில் உண்டு. அவற்றை விட்டுத்தள்ளுவோம். இங்கு நான் ஆஸ்திரேலியர்கள் என்று குறிப்பிடுவது native speakers of Australia என்பதை மீண்டும் நினைவுறுத்துகிறேன். சுவாரசியம் கூட்டும் இன்னொரு விஷயம் உண்டு. ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்தவரும் அடுத்த மாநிலத்தவரை எப்படி எப்படியெல்லாம் பட்டப்பெயர்கள் வைத்துக் கேலியாகக் குறிப்பிடுகிறார்கள் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.


(தொடர்வேன்)
(படங்களுக்கு நன்றி: இணையம்)