14 August 2022

ஒரு மரம், ஒரு பறவை, ஒரு விலங்கு

 

 

பூமியில் சுமார் 87 லட்சம் உயிரினங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரை அறியப்பட்டிருப்பவை சுமார் 12 லட்சம்தான். அவற்றுள் பெரும்பாலானவை பூச்சியினங்கள். அமேசான் போன்ற அடர்ந்த காடுகளுக்குள்ளும், கடலின் வெகு ஆழத்திலும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத உயிரினங்கள் ஏராளம் ஏராளம். 

நாம் வாழும் இந்த பூமியில் நம்முடனேயே வாழும் உயிரினங்களைப் பற்றி நாம் கொஞ்சமாவது அறிந்திருக்க வேண்டாமா? தோற்றம், இயல்பு, திறமை, செயல், நுண்ணறிவு போன்றவற்றால் நம்மை வியக்க வைக்கும் உயிரினங்கள் அநேகம். சின்னஞ்சிறு கரையான்கள் கட்டும் பிரமாண்டமான புற்றின் கட்டுமானத் திறனை என்னவென்று சொல்வது? தூக்கணாங்குருவியின் கூட்டைப் போல எவ்வளவு முயன்றும் நம்மால் ஒரு கூட்டைக் கட்டிவிட முடியுமா? இலக்கு வைக்கும் இரையை துரத்தி வளைத்துப் பிடிக்கும் ஓநாய்க் கூட்டத்தின் வேட்டை உத்தியைக் கண்டு வியக்காமல் இருக்க முடியுமா? தன் உடல் எடையைப் போல ஆயிரம் மடங்கு எடையை இழுத்துச் செல்லும் மலவண்டுதான் உலகிலேயே மாபெரும் பளு தூக்கும் பயில்வான் என்ற ஆச்சர்யகரமான உண்மையை அறிந்திருக்கிறோமா? 

எதற்காக இவ்வளவு பீடிகை என்று தோன்றும். இயற்கையின் அருமையை, முக்கியத்துவத்தை, இயற்கையை நேசிக்கவேண்டிய அவசியத்தை, இப்புவியின் பல்லுயிர் வளத்தை, இப்பூமி யாவர்க்கும் பொதுவானது என்ற உண்மையை வளரும் தலைமுறைக்கு உணர்த்துவது நம் கடமை அல்லவா? அதன் சிறு முயற்சியாக நம்முடைய சுட்டி உலகத்தில் இயற்கை சார்ந்த மூன்று தொடர்கள் வெளியாகின்றன. மாதந்தோறும் ஒரு மரம், ஒரு பறவை, ஒரு விலங்கு பற்றிய சிறு அறிமுகத்தைத் தந்துகொண்டிருக்கிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு அக்கட்டுரைகளை வாசிக்கத் தந்து இயற்கை சார்ந்த அவர்கள் புரிதலை மேம்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறோம்.

'மரம் மண்ணின் வரம்' வரிசையில்...

1. பாட்டில் மரம்

2. டிராகன் இரத்த மரம்

3. பீரங்கிக் குண்டு மரம்

'பறவைகள் பல விதம்' வரிசையில்...

1. செகரட்டரி பறவை

2. அட்லாண்டிக் பஃபின்

3. காசோவரி

'விநோத விலங்குகள்' வரிசையில்...

1. கேப்பிபாரா

2. பீவர்

3. போங்கோ

சுட்டி உலகத்தில் ஒவ்வொரு மாதமும் சிறுவர் இலக்கியம் சார்ந்த பல கட்டுரைகளும் சிறுவர்களின் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தும் பகுதிகளும் இடம்பெற்று வருகின்றன. இதில் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர்க்கேற்ற புத்தகங்கள் வயதுவாரியாக தொகுக்கப்பட்டுள்ளன. அச்சு நூல், மின்னூல், சஞ்சிகை, திரைப்படம் இவற்றோடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்கள் பற்றியும் பெற்றோர்க்கான சிறப்புக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

சுட்டி உலகத்தைத் தொடர்ந்து வாசிப்பதோடு, இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நூல்களை வாங்கித் தந்து உங்கள் குழந்தைகளுக்கும் வாசிப்பை நேசிக்கக் கற்றுத்தாருங்கள். உங்கள் குழந்தைகளின் கற்பனைச் சிறகுகளை விரிக்க உதவுங்கள். அவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஊக்கமளியுங்கள்.

 உங்களுக்கு உதவத் தயாராய் உள்ளது சுட்டி உலகம்.

தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி

team@chuttiulagam.com





4 comments:

  1. செம! மிக அருமை. இயற்கை பற்றி அறிய ரொம்ப ஆர்வம் உண்டு. சுட்டிகளை வாசிக்கிறேன்.

    கீதா

    ReplyDelete
  2. நாகலிங்க மரம் பற்றி கொஞ்சம் தெரியும் இங்கு நிறைய இருக்கின்றன. ஆமாம் பழத்தின் ஓடு அது உடையாமல் இருந்தால் கிண்ணம் போல் இருக்கும் என்பதான் நானும் கூட அதை எடுத்து சுத்தம் செய்து கிண்ணமாக கொட்டாங்கச்சி போல பயன்படுத்தியதுண்டு. வெளியில் வண்ணம் பூசி. பீரங்கி மரம் என்று வழங்கப்படுவதும் இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.

    மற்ற இரு மரங்கள் பத்தி இப்போதுதான் தெரிந்து கொண்டேன் ஆச்சரியமான தகவல்கள் அதுவும்பாட்டில் மரம்!!

    நல்லதகவல்கள்

    கீதா

    ReplyDelete
  3. அருமையான தகவல்கள்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.