பச்சை,
மஞ்சள், நீலம், சிவப்பு, ரோஸ் என்று
பற்பல
வண்ணங்களுக்கிடையே
தயங்கித் தலைநீட்டும்
ஒற்றைவெள்ளையைச் சுட்டுகிறாள்
விநோதா.
வெள்ளையைப்
போய்… ஏனம்மா என்ற கேள்வியால்
வெள்ளை
என்பது வண்ணமில்லையோவெனக் குழம்பி
சுண்டிச்சுணங்கும் அவளது
சின்னமுகம்கண்டு
கொத்திலிருந்து கொய்யப்படுகிறது வெள்ளை.
சமாதான
சம்மனசுவைப் போல
வெள்ளை பலூனைக் கரமேந்தியவளின் பூரிப்பால்
வெளியெங்கும்
பிரகாசப் பிரதிபலிப்பு.
பட்டாம்பூச்சியின் சிறகுரசலுக்கும்
பூவின்
இதழுரசலுக்கும்
பதறுபவளின்…
காற்றின்
தழுவலுக்கும் கலங்குபவளின்…
கவலைபோக்கக்
கைமாற்றுகிறேன் பலூனை.
இளையராணியைப்
போல இருகரம் வீசி
முன்னே
நடந்துகொண்டே…
அடிக்கொருதரம் தலைதிருப்பி
பலூனின்
பத்திரம் குறித்தானதொரு சோதனைப்பார்வை..
நொடிக்கொருதரம் நின்று
திரும்பி
கை
வலிக்கிறதாவென்றொரு
கரிசன வினவல்..
தலைக்குமேல்
படபடக்கும் பட்டாம்பூச்சிகளால்
கலவரப்பிரளயம் இப்போதென் அடிவயிற்றுக்குள்.
நிறைமாதசூலியென நிதான
அடிவைத்து
நடப்பவனைப்
பார்த்தொரு
நீள்பெரும்புன்னகை பூக்கிறாள்…
வெள்ளை பலூன்கள் இவ்வளவு
கனக்குமென்று
இந்நாள்வரை
எனக்கெப்படித்
தெரியாமல் போனது?
&&&&&&&
கொசுறுத்தகவல்
நடு இணைய இதழ்
11-ல் என் மற்றுமொரு மொழிபெயர்ப்புக் கதை வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிறுகதை
மன்னன் என்று சிலாகிக்கப்படுகிற ஹென்றி லாஸன் அவர்களின் பிரபல நகைச்சுவைக் கதையான ‘The
loaded dog’ எனும் ஆங்கிலச் சிறுகதையின் தமிழாக்கம். விருப்பமுள்ளோர் இங்கு சென்று
வாசிக்கலாம். பிரசுரித்த நடு இதழ்க் குழுமத்துக்கும் ஆசிரியர்க்கும் மிக்க நன்றி.
பலூன் கணக்குமா?! இன்னிக்குதான் எனக்கு தெரியும்
ReplyDeleteஹா...ஹா...குழந்தைகள் நம்மிடம் கொடுத்து பத்திரமாய்ப் பார்த்துக்கொள்ளச் சொன்னால் கனக்கத்தானே செய்யும்? :)))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.
Delete