15 February 2017

மன்னித்துவிடு மகளே...





மன்னித்துவிடு மகளே
சிறுநடை பயிலுமுனை சிறைவைத்து
பெருங்கதவடைத்த பேதைமைக்காய்...
வெளியுலகம் பொல்லாதது கண்ணே..
வேண்டாமம்மா வெளியேகும் ஆசையுனக்கு


நரப்பசியோடு அலையும் நபும்சகர்களையும்
பிள்ளைக்கறி தின்னும் பெண்பித்தர்களையும்
நெஞ்சிலே நஞ்சோடும் நயவஞ்சகர்களையும்
பிஞ்சென்றும் மூப்பென்றும் பாராது
பஞ்சமா பாதகம்புரியும் பாவியர்களையும்
அடையாளங்காணவியலா அரும்புப்பருவமிது..

அறிந்துணரும் நாள்வரை பொறுத்திரு கண்மணி
நாட்டின் சட்டங்களை இனி நாம் நம்புவதற்கில்லை..
நெடுங்கதவின் சட்டங்களாவது
காத்திருக்கட்டும் உன் குழந்தைமையை..


*****
(புகைப்படம் Syed Mohiadeen)


(குழந்தை ஹாசினிக்கு நேர்ந்த 
கொடுமையின் பாதிப்பும் 
இந்தப் படமும் 
மனத்தில் தைத்ததன் விளைவே இக்கவிதை.  
இதுபோன்ற அவலம் இனி 
எந்தக் குழந்தைக்கும்.. 
எந்தப் பெற்றோருக்கும் நேராதிருக்கட்டும்.)

11 comments:

  1. புகைப்படமும், அதற்குப்பொருத்தமான இந்தக்கவிதையும் இன்றைய சமூக அவலங்களைச் சித்தரிப்பதாக உள்ளன.

    சமீபத்தில் இதனை வாட்ஸ்-அப் மூலமும் யாரோ எனக்கு அனுப்பியதாகவும் நினைவில் உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. தொலைக்காட்சில் பார்த்தேன், திரு. துரைசெல்வராஜூ அவர்கள் பதிவிலும் படித்து மனம் கனத்து போனது.

    கவிதை தாயின் தவிப்பை சொன்னது.

    இனி
    எந்தக் குழந்தைக்கும்..
    எந்தப் பெற்றோருக்கும் நேராதிருக்கட்டும்.
    அதுதான் எல்லோர் வேண்டுதலும் இறைவனிடம்.

    ReplyDelete
  3. இந்நிலைமை வரவே கூடாது என வேண்டுகிறேன்...

    ReplyDelete
  4. கவிதையை எழுதி சொல்லி சென்ற விதம் அருமை....... இந்த மாதிரியான ஆண்களின் மனநிலை சிதைவிற்கு என்ன காரணம் என்று அறிந்து அதற்கு மாற்று வழி கண்டுபிடிக்காதவரை வீட்டில் அடைத்து வைத்து பொத்தி பாதுகாத்து வைத்தாலும் உறவினர் நண்பர்கல் போர்வையில் இந்த வெறி நாய்கள் வந்து கடித்து குதறத்தான் செய்யும்

    ReplyDelete
  5. நெடுங்கதவின் சட்டங்களாவது
    காத்திருக்கட்டும் உன் குழந்தைமையை..

    வேதனை ஆயினும் உண்மையல்லவா

    ReplyDelete
  6. இனியேனும் இக்கொடுமைகள் தொடராதிருக்கப் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  7. நிறையவே கவிதைகள் புனையலாம் அத்தனை சம்பவங்கள்

    ReplyDelete
  8. அருமையான, உணர்வுப்பூரணமான கவிதை, திருமதி. கீதா. படமும்,கருத்தும் மிகப்பொருந்தியபடி இருப்பதோடு எளிய வரிகளில் பகிரும் வேதனையுணர்வு நினைவில் நிற்கும்.

    ReplyDelete
  9. சமுகத்தின் அவலமான நிலையை ..அழமான வார்த்தைகளால் எழுதி இருக்கிறீர்கள்,,..

    ReplyDelete
  10. கவிதை மனதைத் தொடுகிறது. இனியாவது இது போன்ற கொடுமைகள் நடக்காதிருக்கட்டும்!

    ReplyDelete
  11. என்ன மாதிரியான ஜந்துக்கள் இவர்கள்...? சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும். பணத்துக்கு விலைபோகும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிமான்கள் உள்ளவரை மாறுமா இந்நிலை?!

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.