21 April 2014

மலாக்கி என்றொரு அசடன் - ஆஸ்திரேலியக் காடுறை கதை 6




நெகுநெகுவென்று வளர்ந்த ஒடிசலான தேகமும், கூன் விழுந்தாற்போன்று உட்பக்கம் குழிந்த தோள்பட்டைகளும், பரட்டைத்தலைமயிரும் மலாக்கியை சற்றே அசாதாரணமாய்க் காட்டிக்கொண்டிருந்தன. கால்நடைப் பண்ணையிலிருந்த பையன்கள் அனைவரும் மலாக்கியை மிகப்பெரிய அசடனென்று கருதினோம். அவனொரு மூடன் என்பதிலும் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை

ஒரே ஒருமுறை ஒரு சிறிய பயணமாக சிட்னி நகரத்துக்குப் போய்வந்திருந்ததைத் தவிர, அவன் தன் வாழ்நாளில் தான் பிறந்துவளர்ந்த குறுங்காட்டுப்பகுதியை விட்டு வெளியே எங்கும் சென்றது கிடையாது. நகரத்திலிருந்து அவன் திரும்பிவந்தபோது அவனுடைய நரம்புகளில் ஒருவித அதிர்வை உணர்ந்திருந்தான் என்பது உண்மை. நகரத்துக்குப் போய்வந்த அனுபவத்தைப் பற்றி அவன் வாயிலிருந்து ஒற்றை வார்த்தையைப் பெறுவதென்பது அத்தனை எளிதான காரியமன்று

அவனுக்கு அதைச் சொல்லும் திறமையில்லை என்று சொல்லிவிடமுடியாது. அது அவனுடைய விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டிருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்அவன் போய்வந்து பல வருடங்களாகிவிட்ட நிலையில், அதைப்பற்றி இப்போது கேட்டாலும் அவன் முகம் மாறிவிடும். கண்களை இடுக்கி, தலையைச் சொறிந்தபடி மிகவும் மெலிதான நிதானமான குரலில் சொல்வான், “ம்சந்தேகமேயில்லைஅபாயத்தின் அறிகுறி அது!” நகரங்கள் இருக்கும்வரைக்கும் மலாக்கியின் வருத்தமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.

மலாக்கி உணவுக்காகவும் தங்குவதற்காகவும் வாரத்துக்கு ஒரு பவுண்டு செலவழிப்பது போக வேறெதற்கும் செலவு செய்வதில்லை. அவன் எப்போதும் பழைய நைந்துபோன உடுப்புகளையே உடுத்தியிருப்பான். பையன்களாகிய நாங்கள் எங்களுக்கு விருப்பமின்றிக் கொடுக்கப்படும் வேலைகளைக் காலவரையறையின்றி ஒத்திப்போட, “மலாக்கி புதிய உடை வாங்கும்போது….” என்னும் உவமையைக் கையாண்டோம். நாங்கள் எப்போதும் அவனைக் கேலிபேசுவதில் இன்பம் கண்டோம். அவன் 

எங்களுக்காகவே படைக்கப்பட்ட கோமாளியென்றே எண்ணினோம். அவன் மிக அரிதாகவே குறைப்பட்டுக்கொள்வான். அதற்கு மேல் போனால்என்னிடம் வம்பு வளர்க்காதீங்கஎன்பதை திரும்பத் திரும்ப சொல்வதன் மூலமே தன் கண்டனத்தைத் தெரிவிப்பான்நாங்கள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காவிடில் அவனிடத்தில் மிகவும் கொடூரமான முறையில் வரம்பு மீறி நடந்துகொள்வோம். அப்போது அவன் தன்னைத்தானே நொந்தபடி மிகவும் வருத்தம் தொணிக்கும் குரலில் முணகிக்கொள்வான், “ம்சந்தேகமேயில்லைஅபாயத்தின் அறிகுறி அது!” 

மலாக்கி தூங்கும்போது அவனறியாமல் அவன் கால்சட்டையின் இரு குழாய்களையும் ஒன்றாகத் தைத்துவிடுவது, கட்டிலின் கால்களைக் கழற்றுவது, அவனுடைய புகைபிடிக்கும் குழாயில் வெடிமருந்தை நிரப்பிவைப்பது போன்ற எளிய வேடிக்கைகளில் எங்கள் மனம் திருப்தியடையவில்லை. வேடிக்கை வித்தைகளில் தேர்ந்த கலைஞர்களைப் போன்று நாங்கள் மேலும் முன்னேற விரும்பினோம்மலாக்கிக்கு அதிக எழுத்துக்களைக் கொண்ட நீளமான வார்த்தைகளின் மேல் தீராத வெறுப்பு உண்டு என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். அவன் பெருமதிப்பு வைத்திருக்கும் ஒருவர் அத்தகைய வார்த்தைகளை உபயோகிப்பதொன்றே போதுமானது, அவர்மீதான மதிப்பை இவன் மீளப்பெற்றுக்கொண்டுவிட.

நான் நீளமான வார்த்தைகளை வெறுக்கிறேன்என்பான் அவன். “என்னிடம் ஒரு புத்தகம் இருக்கிறது. எனக்குத் தேவையென்றால் அந்தப்புத்தகத்திலிருந்து வார்த்தைகளை எடுத்து என்னால் உபயோகிக்கமுடியும், ஆனால் நான் அதை விரும்புவதில்லை.” அவன் குறிப்பிடுவது ஒரு பழைய அகராதியைத்தான். நீளமான வார்த்தைகளை வெறுப்பதற்கு நிகராக அவன் எதிர்பாலினத்தினரையும் வெறுத்தான். இதை அறிந்திருந்த நாங்கள் ஒரு பெண்ணின் கையெழுத்தைக் கொண்டு நீள நீளமான வார்த்தைகள் அமைத்து, அவன் மீறிவிட்டதாக பல்வேறு வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு பயங்காட்டி அவனுக்கு கடிதம் எழுதுவோம்.

இவற்றையெல்லாம் செய்வதன் மூலம், அவனுடைய வாழ்க்கையை அவன் சுமையாக உணர்வதில் நாங்கள் ஆனந்தமும் களிப்பும் அடைந்தோம். நாங்கள் சொல்லும் எல்லாவற்றையும் அவன் நம்பினான். நாங்கள் முகத்தில் எந்த மிகையுணர்வும் காட்டாமல் இயல்பாய் சொல்லும்  நம்பமுடியாத கட்டுக்கதைகளை அவன் ஏற்றுக்கொண்டான். சிலநேரங்களில் எங்கள் கதைகள் அத்தனையும் அபாயத்தின் அறிகுறிகள் என்பான். அவ்வளவுதான், வெறோன்றும் சொல்வதில்லை.

பண்ணைவீட்டுக்கு ஏதோ வேலையாக கொத்தனார் ஒருவர் வந்தபோதுதான் மலாக்கியின் மீதான எங்கள் வேடிக்கைகள் உச்சமாய் அரங்கேறின. கொத்தனார் ஒருவகையில் மண்டையோட்டு நிபுணத்துவம் பெற்றவராயிருந்தார். மண்டையோட்டு நிபுணத்துவம் என்பது ஒருவருடைய மண்டையோட்டின் அமைப்பைக் கொண்டு அவருடைய குணாதிசயங்களைக் கணிப்பது. எதிரிலிருப்பவனின் முகபாவங்களைக் கொண்டும் அவனுடைய குணாதிசயங்களை மிகத்துல்லியமாய் எடைபோடக்கூடியவராயிருந்தார். அவர் ஆவிகளோடும் பேசக்கூடியவராய் இருந்தார். அவருடைய இதுபோன்ற செய்கைகளால் அதிருப்தி அடைந்திருந்த முதிய முதலாளிகள் இருவரும் அவரோடு இனி எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை என்று முடிவெடுத்திருந்தனர்.

கொத்தனாரைக் கண்டாலே பீதியில் உறையும் மலாக்கி, ஆரம்பத்திலிருந்தே அவர் பார்வையில் படாமல் மிகவும் எச்சரிக்கையோடு தவிர்த்துவந்திருந்தான். ஆனால் ஒருநாள் அவர், பையன்களுக்கு ஆவி தொடர்பான சில விநோத வேடிக்கைகளை செய்துகாட்டிக் களிப்பூட்டிக்கொண்டிருந்தபோது அறையில் அவனும் இருக்கநேர்ந்தது. அவர் ஆவிகளோடு பேசும் சமயம், மலாக்கி பயத்தில் உறைந்த முகத்துடன் அமர்ந்திருந்தான். அது முடிந்ததும் நாங்கள் அவரிடம் மலாக்கியின் மண்டையோட்டைப் படித்துச் சொல்லும்படி கேட்டுக்கொண்டோம்

மலாக்கி தப்பியோடிவிடுமுன் அவனைப் பிடித்து அறையின் நடுவில் நாற்காலியில் அமர்த்தினோம். கொத்தனார் தன் விரல்களை அவன் தலை முழுவதும் ஓடவிட்டார்அவரின் கைவிரல்களுக்கு மத்தியில் மலாக்கியின் தலைமுடிகள் ஒவ்வொன்றும் குத்திட்டு நின்றதை என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை. பலத்த நம்பிக்கையோடு பார்வையாளர்கள் வியந்து ஆர்ப்பரிக்க, பெண்கள் தங்களுக்குள் நகைத்துக்கொண்டனர். சிறிது நேரத்தில் மலாக்கி தனக்குத்தானே முணுமுணுத்தான், “ம்சந்தேகமேயில்லைஅபாயத்தின் அறிகுறிதான் இது!’

மறுநாள் மலாக்கி வேலைநேரத்தில் தன் மண்வாரியில் சாய்ந்தபடி, தொப்பியை ஒருகையால் முன்னிழுத்துக்கொண்டு மறுகையால் பின்மண்டையை அடிக்கடி தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தான். நாங்கள் மலாக்கியிடம் ஓடிச்சென்று கொத்தனார் தன் மண்டையோட்டு நிபுணத்துவத்தில் வெறியாக இருப்பதாகவும், ஆராய்ச்சிக்காகப் பலரைக் கொன்று அவர்களது மண்டையோட்டை எடுத்துச்செல்வதாகவும் சொன்னோம். மேலும் மலாக்கியின் மண்டையோடு மிகவும் அபூர்வமானது என்று அவர் குறிப்பிட்டதாகவும் சொல்லி அவனை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கச்சொன்னோம்

மலாக்கியின் குடிசை பண்ணையிலிருந்து சற்று தொலைவில் இருந்தது. ஒருநாள் இரவு மலாக்கி தன்வீட்டில் கணப்படுப்புக்கு அருகில் அமர்ந்து புகைத்துக்கொண்டிருந்தான். கதவை மெல்லத் திறந்தபடி உள்ளே நுழைந்தார் கொத்தனார். அவர் கையிலிருந்த துணிப்பைக்குள் ஒரு சிறிய பரங்கிக்காய் இருந்தது. அவர் அந்தப்பையை தன் கால்களுக்கிடையில் தொம்மென்று தரையில் வைத்துவிட்டு பலகையில் அமர்ந்தார். மலாக்கி பேரச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்தாலும் ஒருவாறு சமாளித்துத் திணறியபடிவணக்கம்என்றான்.

வணக்கம்!” என்றார் கொத்தனார்அங்கே பயமுறுத்தும் வகையில் அமைதி நிலவியது. சற்றுநேரத்தில் அமைதியை உடைத்தபடி கொத்தனார் கேட்டார், “எப்படியிருக்கிறாய் மலாக்கி?”

.. நன்றாக இருக்கிறேன்பதிலளித்தான் மலாக்கிசற்றுநேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. தன் படபடப்பைக் கட்டுப்படுத்தியபடி மலாக்கி கொத்தனாரிடம் அவர் எப்போது பண்ணையை விட்டுப்போவார் என்று கேட்டான்.

நாளை விடியற்காலையில் கிளம்புகிறேன், இப்போது ஜிம்மி நோலெட்டின் வீட்டுக்குப் போய்விட்டு வருகிறேன். வழியில் உன் வீட்டைப் பார்க்கவும் உன்னை விசாரித்துவிட்டு உன் தலையைக் கேட்டுப் போகலாம் என்று வந்தேன்என்றார்.

என்ன?”

நான் உன் மண்டையோட்டுக்காக வந்திருக்கிறேன்.”

மலாக்கி அதிர்ச்சியில் உறைந்துநின்றான்.

இதோ பார், ஜிம்மி நோலெட்டின் தலை இதில்தான் இருக்கிறது” 

அவர் பையைத் தூக்கி, உள்ளிருப்பதை பெரும் ஆர்வத்துடன் தொட்டுக்காட்டினார். அது கிட்டத்தட்ட நாற்பது பவுண்டுகள் எடையுள்ளதாய் இருக்கும்.

நான் கோடரியால் வெட்டும்போது அவனுடைய மண்டையின் ஒருபகுதியை சிதைத்துவிட்டேன். இரண்டுமுறை வெட்டியிருந்திருக்க வேண்டும். ஆனால் போனதை நினைத்து இனி வருந்தி என்ன லாபம்?”

சொல்லிவிட்டு மரப்பிடி கொண்ட சுத்தியலை பையிலிருந்து வெளியே எடுத்து அதிலிருந்த இரத்தம் போன்ற எதையோ தன் சட்டையில் துடைத்துக்கொண்டார். மலாக்கி வெளியில் ஒடும் முயற்சியாக வாசலை நோக்கி விரைந்தான். ஆனால் அவனுக்கு முன் அங்கே அந்த மண்டையோடுவிரும்பி வந்து நின்றார்.

கடவுளின் பெயரால் சொல்கிறேன். நீங்கள் என்னைக் கொன்றுவிடக்கூடாதுதிணறினான் மலாக்கி.

இல்லையென்றால் வேறெந்த வழியில் உன் மண்டையோட்டைப் பெறுவது?”

..” தவித்தான் மலாக்கி. அப்போதுதான் அவனுக்கு அர்த்தமற்றதும் அதேசமயம் வேடிக்கையானதும் விசித்திரமானதுமான ஒரு உபாயம் தோன்றியது. அதை அவன் இயலாமையுடன் தெரிவித்தான்

இங்கே பாருங்கள், நான் சாகும்வரைக்கும் நீங்கள் காத்திருந்தால் என் மண்டையோடு என்ன, என் எலும்புக்கூடு முழுவதையுமே நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.”

எனக்கு இப்போதுதான் வேண்டும்கொத்தனார் அழுத்தமான குரலில் சொன்னார், “என்னை என்ன முட்டாளென்று நினைத்தாயா? இந்த ஏமாற்று வேலையெல்லாம் என்னிடத்தில் ஆகாது. நீ அமைதியாயிருந்தால் வேலை சீக்கிரம் முடியும், இல்லையென்றால்…”

மிச்சத்தை அவர் சொல்லிமுடிக்கும்வரை மலாக்கி காத்திருக்கவில்லை. குடிசையின் பின்புறம் புதிதாய் அடைத்திருந்த பெரிய மரவுரிப்பலகையைப் பெயர்த்துக்கொண்டு பாய்ந்து வெளியில் ஓடினான். “அபாயத்தின் அறிகுறி அது!” அவனுக்குப் பின்னால் எழுப்பப்பட்ட சத்தத்தை அவன் கேட்டிருக்கலாம். ஆனால் ஒரு கலவரப்பட்ட கங்காருவைப் போன்று அவன் காட்டுக்குள் ஓடி மறைந்தான். பண்ணைவெளியை அடையும்வரை அவன் எங்கேயும் நின்றிருக்கமாட்டான்.

ஜிம்மி நோலெட்டும் நானும் அவன் பெயர்த்துக்கொண்டு ஓடிய பின்புற பலகை விரிசல் வழியே எட்டிப்பார்த்தபோது அது எங்கள் மேல் சரிந்துவிழுந்து காயமுண்டாக்கியது. ஆனாலும் எங்கள் வேடிக்கை விளையாட்டு அதனால் சிறிதும் குறைந்துவிடவில்லை. ஜிம்மி நோலெட் மரவுரிப்பலகையின் அடியிலிருந்து தவழ்ந்து வெளியேறி, மலாக்கியின் படுக்கையில் படுத்தபடி சிரித்தான். இவன் செத்துத் தொலையமாட்டானா என்று நாங்கள் எண்ணுமளவுக்கு அதன்பிறகு ஜிம்மி பாதியிரவுகளில் எழுந்தமர்ந்து ஓயாமல் சிரித்துக்கொண்டிருந்தான்.

கதையை இத்துடன் முடித்துவிடத்தான் விரும்புகிறேன், ஆனால் மலாக்கியைப் பற்றிச் சொல்வதற்கு இன்னும் சில மீதம் உள்ளன.
பண்ணை வீட்டில் சிறந்த பசுக்களில் ஒன்று, கன்று ஈன்றிருந்தபோது பெரும் அமளியை உண்டாக்கிக்கொண்டிருந்தது. பொதுவாக அது மிகவும் அமைதியானதும் எளிதில் பழக்குவதற்கு இடந்தரக்கூடியதுமான பசு என்றாலும் கன்று ஈன்றபிறகு அது மூர்க்கமாய் மாறியிருந்தது. யாரும் எதிர்பாராத வகையில் அது எல்லோரையும் முட்டிக் காயப்படுத்திக் கொண்டிருந்தது.

ஒருநாள் பண்ணைமுதலாளியின் மகளும் சிட்னியைச் சேர்ந்த அவளுடைய பகட்டுக் கணவனும் அந்த பசு இருந்த புல்வெளிப்பக்கம் உலவிக்கொண்டிருந்தனர். பகட்டுக்காரனின் அநாகரிக உடையா, பெண்ணின் சிவப்புநிறக் குடையா, அவளது மேடிட்ட வயிற்றை மறைத்திருந்த உடுப்பின் விநோத வடிவங்களா எது அந்தப்பசுவை வெறுப்பேற்றியது என்று தெரியவில்லை. அது அவர்களை நோக்கி ஆத்திரத்துடன் முன்னேறியது. பசுவை முதலில் பார்த்த பகட்டுக்காரன், தன் மனைவியை அம்போவென அங்கேயே விட்டுவிட்டு உடனடியாய் வேலியின் வாயிற்புறத்தை நோக்கி ஓடித் தப்பிவிட்டான். மலாக்கி மட்டும் சமயத்தில் வந்திருக்காவிட்டால் அப்பெண்ணின் கதி அதோகதிதான். அவள்  ஆபத்திலிருப்பதை உணர்ந்தநொடியே நிராயுதபாணியாக முரட்டுப்பசுவை எதிர்கொண்டான் மலாக்கி.

போராட்டம் நெடுநேரம் நீடிக்கவில்லை. ஒரு உறுமல், ஒரு சீறல்…  புழுதிப்படலத்திலிருந்து வெளிவந்த பசு ஒரே பாய்ச்சலில் தன் கன்று மறைந்திருக்கும் குறுங்காட்டுப் பகுதியை நோக்கி ஓடிப்போனது.  

நாங்கள் மலாக்கியை வீட்டுக்குள் தூக்கிவந்து படுக்கவைத்தோம். அடிவயிற்றில் காயம் மிக ஆழமாயிருந்தது. தண்ணீரைப்போல் நிற்காமல் வெளியேறிய குருதி கட்டுக்களை நனைத்துக்கொண்டிருந்தது. நாங்கள் எங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்தோம். பையன்கள் குதிரைகளை அடித்துவிரட்டிக்கொண்டு மருத்துவரை அழைக்கச் சென்றார்கள். ஆனாலும் பயனில்லை. மலாக்கியின் வாழ்க்கையின் கடைசி அரைமணி நேரத்தில் நாங்கள் அனைவரும் அவனுடைய படுக்கையைச் சுற்றிக் குழுமியிருந்தோம். அவனுக்கு வயது இருபத்தியிரண்டுதான்.

அவன் சிரமத்துடன் சொன்னான், “என் அம்மா இனி எப்படி சமாளிப்பாள்?”

ஏன்? உன் அம்மா எங்கே இருக்கிறாள்?” யாரோ மென்மையாய்க் கேட்டார்கள்

மலாக்கியை நேசிக்கவும், பெருமிதப்படவும் இந்த உலகத்தில் யாராவது இருப்பார்கள் என்று நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

பாதர்ஸ்டில் இருக்கிறாள்அவன் தொய்ந்த குரலில் சொன்னான், “அவள் மோசமாக பாதிக்கப்படுவாள். அவள் என்மேல் அளவுகடந்த பிரியம் வைத்திருக்கிறாள், நானும் அவளுமாகத்தான் கடந்த பத்து வருடங்களாக குடும்ப பாரத்தை இழுத்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் என் தம்பி ஜிம்முக்கு எல்லாவற்றையும் சரியாக அமைத்துத்தர விரும்பியிருந்தோம். ஆனால்பாவம் ஜிம்!”

 “ஏன், ஜிம்முக்கு என்ன?” யாரோ கேட்டார்கள்.

அவனுக்குப் பார்வை கிடையாது. அவன் வளர்ந்து பெரியவனாகும்போது அவனுக்குத் தேவையான எல்லாவற்றையும் சரியாக அமைத்துக்கொடுக்க வேண்டுமென்று நாங்கள் நினைத்தோம். நான் எப்படியாவது வருடத்துக்கு நாற்பது பவுண்டுகள் அனுப்பிக்கொண்டிருந்தேன். ஒரு சின்ன இடம் வாங்கியிருந்தோம். ஆனால்.. ஆனால்.. நான் இப்போது போகிறேன். ஹாரி.. அவர்களிடம் சொல்.. இது எப்படி நடந்…” 

நான் வெளியே வந்துவிட்டேன். என்னால் இதைத் தாங்கமுடியவில்லை. என் தொண்டைக்குழியில் ஏதோ அடைத்தது. மலாக்கியை வேதனைப்படுத்திய வேடிக்கைகளிலிருந்து என்னுடைய பங்கை அழித்துவிட விரும்பினேன். ஆனால் இப்போது காலம் கடந்துவிட்டிருந்தது

நான் மீண்டும் உள்ளே சென்றபோது மலாக்கி இறந்துவிட்டிருந்தான். அன்றிரவு பண்ணைமுதலாளியின் பணத்தோடு கூடுதலாய் வசூலித்தபடி அவனுடைய தொப்பி அனைவரிடமும் ஒரு சுற்று போய்வந்தது. அதைக்கொண்டு நாங்கள் மலாக்கியின் தம்பி ஜிம்முக்குத் தேவையான எல்லாவற்றையும் சரியாக அமைத்துக்கொடுத்தோம்.

****************

(ஆஸ்திரேலியப் பிரபல கவிஞரும் கதாசிரியருமான ஹென்றி லாசன் (1867-1922) எழுதிய  The Story of Malachi  என்னும் ஆங்கிலக் காடுறை கதையின் தமிழாக்கம்)

(படம்: நன்றி இணையம்)

20 comments:

  1. வித்தியாசமான கதை..!

    ReplyDelete
  2. நெகிழ்ச்சியான கதை.

    ReplyDelete
  3. Anonymous21/4/14 17:03

    நன்று ரசித்து வாசித்தேன்
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. கலங்க வைத்தது முடிவில்...

    // கதையை இத்துடன் முடித்துவிடத்தான் விரும்புகிறேன் // இந்த இடத்திலேயே முடித்திருக்கலாம்...

    ReplyDelete
  5. மலாக்கியின் கதை கடைசியில் சோகமாக முடிந்து வருத்தம் அளிக்கிறது. தமிழாக்கம் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. நெகிழ வைத்த கதை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. நம்மூர் கிராமங்களிலும் இம்மாதிரி கதாபாத்திரங்கள் இருக்கலாம் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. மனதைத் தொட்ட மலர்க்கி....

    தமிழில் கதையைத் தந்தமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  9. மிக வித்தியாசமான கதைக்களம். எளிமையான அதேநேரத்தில்
    அழகான எழத்துநடை. அருமை கீதமஞ்சரி. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
    வாழத்துக்கள்.

    ReplyDelete
  10. மலாய்கி இன் சோக முடிவு :((
    சில வேளைகளில் இப்படிதான் தவறுகளை திருத்தவே முடியாது போய்விடுகிறது! சிவப்பு நிறம் மாட்டை மிரட்டியதா? ஆஸ்ட்ரேலியாகாரர்களும் இதை நம்புகிறார்களா? நான் மாட்டிற்கு கருப்பு வெள்ளை நிறங்களாய் மட்டுமே தெரியும் என்று எதிலோ படித்த நினைவு?!?!

    ReplyDelete
  11. @இராஜராஜேஸ்வரி

    உடனடி வருகைக்கும் கதை பற்றிய கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  12. @ஸ்ரீராம்.

    வருகைக்கும் கதை பற்றிய கருத்துக்கும் மிகவும் நன்றி ஸ்ரீராம்.

    ReplyDelete
  13. @kovaikkavi

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தோழி.

    ReplyDelete
  14. @திண்டுக்கல் தனபாலன்

    எல்லாக் கதைகளுமே சுபத்தில் முடிவதில்லை அல்லவா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

    ReplyDelete
  15. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்களுடைய அயராத பணிகளுக்கிடையில் இந்தப் பதிவையும் வாசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கோபு சார்.

    ReplyDelete
  16. @‘தளிர்’ சுரேஷ்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  17. @G.M Balasubramaniam

    எளியாரை வலியார் வாட்டுதல் என்பது உலகெங்கிலும் உள்ள இயல்புதானே... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  18. @வெங்கட் நாகராஜ்

    வருகைக்கும் கதை பற்றிய கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

    ReplyDelete
  19. @புவனேஸ்வரி ராமநாதன்

    தங்கள் வருகைக்கும் கதையை ரசித்து வாசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  20. @Mythily kasthuri rengan

    வருகைக்கும் கதை பற்றிய கருத்துக்கும் மிக்க நன்றி மைதிலி. சிவப்பு நிறம் மாட்டை மிரட்டும் என்பது மேலை நாடுகளிலும் உள்ள நம்பிக்கைதான் என்பது ஸ்பெயினின் காளைச்சண்டையைப் பார்த்தாலே தெரியுமே.. ஆனால் நீங்கள் சொல்வது போல் மிருகங்களுக்கு கறுப்பு வெள்ளையில்தான் காட்சிகள் தெரியும் என்றுதான் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.