6 May 2013

நெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 2


 மழைக்காலத்தில் ஊரின் அழகையும் செழிப்பையும்  எடுத்தோம்பும் எழில்வரிகளை ரசிப்போமா?
 
புன்கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப்
பொன்போல் பீரமொடு புதல்புதல் மலரப்,

பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி,
இருங்களி பரந்த ஈர வெண்மணல்
செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்
கயல்அறல் எதிரக் கடும்புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப;


 
 வெண்ணிற முசுட்டைப்பூவும்
பொன்னிற பீர்க்கம்பூவும்
பூவாடை போர்த்தினாற்போல்
புதர்தோறும் மலர்ந்து நிற்க....



பெயல் அடங்கியப் பொழுதிலே

புயல் எனப் பறந்துவந்தன

பசுங்காற் கொக்குகளும்
செங்கோட்டு நாரைகளும்


 
கருவண்டல் படிந்த வெண்மணல்

காணும் பரப்பெல்லாம்
கனத்த ஈரம் படர்ந்திருக்க 
பறந்துவந்த பறவை யாவும்
பரந்த சேற்றில் அமர்ந்திருந்து... 


வெள்ளம் எதிர்த்து வேறுதிசை பார்த்து
நீந்திய மீன்களை ஏந்தின அலகால்! 

அடைமழை பொழியும் ஆகாயமேகமோ
நடைகற்கும் குறுமழலைபோல்
சிறுதூறல் கற்கத் தொடங்கிற்று.
 



அங்கண் அகல்வயல் ஆர்பெயல் கலித்த
வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க;
முழுமுதல் கமுகின் மணிஉறழ் எருத்தின்
கொழுமடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை
நுண்நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு
தெண்நீர் பசுங்காகய் சேறுகொள முற்ற
நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக்
குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க, (13- 28)
 




சேற்றுவயல் நிறைந்து
நாற்று யாவும் வளர்ந்து
முற்றிய கதிர் வளைந்து
மண்ணை வணங்கி நிற்க... 
 


மணியாரமென அணிவகுத்து
கமுகின் கழுத்தை அலங்கரிக்கும்
குறுமணிக்குலைகள் யாவும்,
பணியாரமென உருண்டு திரண்டு
கொழுத்து செழித்திருக்க....
 

 
எழில் சுமந்த பொழில்களில்

இலை சுமந்த கிளைகளில்
மலர் சுமந்த நுனிகளில்
மழைத்துளி சுமந்து அழகூட்ட... 
 
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்
படலைக் கண்ணி பருஏர்எறுழ் திணிதோள்

முடலை யாக்கை, முழுவலி மாக்கள்

வண்டு மூசு தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,

துவலைத் தண்துளி பேணார் பகல்இறந்து
இருகோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர, (29- 35) 


 
 
ஓங்கிய மாடமாளிகைகள் நடுவினிலே
ஆறு போன்று அகன்றோடும் தெருக்களிலே
ஓங்கிய வலியதோள்களில்
தேங்கிய பூமாலை சொரியும்
மது உண்ட வண்டாட்டம் மிக
மதுவுண்டு கொண்டாட்டம் மிக
துடிப்புடைய கீழ்மக்கள் பலரும்
பொழுது அடங்கிய பின்னரும்
பொழுது உணராப் போதையோடு

தூறலைப் பொருட்டாய் மதியாது,
ஆடித்திளைத்தும், கூடிக் களித்தும்
ஆடை நனைய ஆங்கே திரிவர்.

******************************************************************

(படங்கள் உதவி: இணையம்)
 

43 comments:

  1. அழகான அருமையான விளக்கம்... அதற்கேற்றவாறு படங்கள் அருமை... பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete

  2. // மலர் சுமந்த நுனிகளில்
    மழைத்துளி சுமந்து அழகூட்ட... //

    என்ன ஒரு அருமையான வர்ணனை...

    மழைகாலத்திலே
    எங்கள் கல்லூரி வளாக தோட்டத்தில் இதையும் கண்டிருக்கிறேன்.

    ஆஹா.. அந்த மலர் சுமந்த நுனிகள் கீழ் நோக்கி இருக்கும்
    அவற்றில் விழுந்த மழைத்துளி ஒவ்வொன்றாய் மண்ணில் விழும்

    அந்த கிளைகளின் அடிவாரத்தில் குட்டை போல் நீர் தேங்கியிருக்க‌
    விழும் மழை நீரின் ஒவ்வொரு துளியும் ஒரு வட்டத்தை ஏற்படுத்தும்.

    ஒரு வட்டம் பெரிதாகி மறையுமுன்னே அடுத்த துளி விழும்.

    வேறு எதுவும் சத்தம் இல்லாவிடின் மழைத்துளி குட்டை நீரில் விழும் சத்தமும்
    தெளிவாக கேட்கும்.

    அதைக் கேட்டு ஒரு தவளை அங்கு குதித்து தனக்கொரு போட்டியோ என‌
    வியப்புடன் நோக்கும்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  3. அருமை அருமை..

    ReplyDelete
  4. அழகான அருமையான அற்புதமான அசத்தலான படைப்பு.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். படங்களும் அருமை.

    //சேற்றுவயல் நிறைந்து
    நாற்று யாவும் வளர்ந்து
    முற்றிய கதிர் வளைந்து
    மண்ணை வணங்கி நிற்க... //

    சூப்பர் ;)))))

    ReplyDelete
  5. சிறுதூறல் கற்கத் தொடங்கிற்று.

    முற்றிய கதிர் வளைந்து
    மண்ணை வணங்கி நிற்க...


    பணியாரமென உருண்டு திரண்டு
    கொழுத்து செழித்திருக்க....

    மலர் சுமந்த நுனிகளில்
    மழைத்துளி சுமந்து அழகூட்ட... //

    அழகான வர்ணனைகள் , அதற்கேற்ற படங்கள் எல்லாம் ரசிக்க வைத்து அடுத்த நெடுநெல்வாடையை நுகர விரும்புகிறது.
    வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.

    ReplyDelete

  6. நடை கற்கும் குறுமழலைபோல் , அடைமழை பொழியும் ஆகாய மேகமோ சிறு தூரல் கற்கத் தொடங்கிற்று. எளிய வர்ணனைகள் ரசிக்க வைக்கிறது. . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அபாரமான வர்ணனை, பாராட்டுக்கள்

    ReplyDelete
  8. அழகிய விளக்கம். படங்களும் ரசனைக்கு துணை நிற்கின்றன.

    ReplyDelete
  9. கிராமத்து சூழல் அருமை.அதற்கேட்ற கவிதை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. 'எழில் சுமந்த பொழில்களில்
    இலை சுமந்த கிளைகளில்
    மலர் சுமந்த நுனிகளில்
    மழைத்துளி சுமந்து அழகூட்ட....'
    அடடா, நெடுநல்வாடைக்குப் பொழிப்புரைக் கூறவந்த இடத்தில்கூட புதியதொரு கவிதைப் பேசுவதுபோல் வார்த்தைகள் என்ன அழகாய் வருகின்றன உங்களுக்கு!

    ReplyDelete
  11. முதல் பாடலில் இயற்கை அழகு மனதைக் கவ்வியது. நாரைகளும் கொக்குகளும், சேற்றில் கால் வைத்திருந்து மீன்களைக் கவ்வியதை மனக்கண்ணில் கண்டு ரசிக்க முடிந்தது! பதிவின் முடிவில் நானும் குதூகலித்து அவர்களுடன் ஆடை நனைய மழையில் நனைவது போன்று உணர்ந்தேன். (மதுரையில இருந்தப்ப மாணவப் பருவத்தில அடிக்கடி இப்படி நனைஞ்சு அம்மாட்ட திட்டு வாங்கினதுண்டு. இப்ப... ஹும்! ஏன்தான் வளர்ந்தோமோன்னுல்ல இருக்கு!) படங்களைத் தேடி எடுத்து கவிதைக்கு மகுடமாய் பதிப்பிக்கும் உங்கள்‌ ரசனைக்கு ஒரு சல்யூட்! உங்களின் படைப்புகளில் இந்த நெடுநல்வாடைப் பயணம் நிச்சயம் ஒரு மைல்கல்! உங்கள் கிரீடத்தில் மேலும் ஒரு வெண்சிறகு! (ஓவராப் புகழலீங்க... நிஜமா மனசுல தோணறதுதான்!) தொடருங்க கீதா...!

    ReplyDelete
  12. மிக மிக அருமை கீதமஞ்சரி! அழகான விளக்கம் கவிதை வடிவில்..இரட்டை மகிழ்ச்சி :)
    படங்களும் ஒத்துப் பேசுகின்றன..வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. ரசித்தேன். அருமை கீதமஞ்சரி.

    ReplyDelete
  14. எளிய நடையில் அழகான விளக்கம் அருமை சகோதரி , எனது தமிழாசிரியர் இ. பட்டாபிராமன் அவர்களை நினைவு கூற வைத்து விட்டீர்கள் .. வளைந்த கோலினை தாங்கிய ஆயர்கள் தங்கள் ஆடு மாடுகளை மேட்டு நிலங்களில் மேய விட்டதாகவும் கள்ளுண்ட மிலேச்சர்கள் பொழுது சாய்ந்ததை அறியாமல் ஆடி திரிந்து மகிழ்ந்ததாகவும் விளக்கம் தந்தது கண் முன்னே நிழலாடுகிறது பாராட்டுக்கள் .

    ReplyDelete
  15. மணியாரமென அணிவகுத்து
    கமுகின் கழுத்தை அலங்கரிக்கும்
    குறுமணிக்குலைகள் யாவும்,
    பணியாரமென உருண்டு திரண்டு
    கொழுத்து செழித்திருக்க....//

    கீதா மிக அருமையாக எளிதில் விளங்கும்படி எழுதியிருக்கீங்க ..மேலே ஹைலைட் செய்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சது

    ReplyDelete
  16. மூலத்திற்கு ஏற்ற கச்சிதமான உரை கவியும் அதற்க்கு மெருகூட்டும் படங்களும் இன்றைய தலைமுறை ரசித்து பருக ஏதுவாக இருக்கிறது தோழி மகிழ்ச்சியுடன் என் நன்றியும் உங்களுக்கு

    ReplyDelete
  17. இனிய வணக்கம் சகோதரி...
    முசுண்டைப் பூ
    பசுங்காற் கொக்குகள்..
    என எவ்வளவு அழகழகான உவமானங்கள்...
    ==
    அதிலும்
    ////நடைகற்கும் குறுமழலைபோல்
    சிறுதூறல் கற்கத் தொடங்கிற்று.////
    அப்பப்பா...
    என்ன ஒரு சிந்தனை...
    நடை கற்கும் குறுமழலை
    ஓரிரண்டு அடி எடுத்துவைத்து
    படக்குன்னு விழுந்திடும்...
    அதுபோல
    சடசடன்னு அடிச்சிட்டு
    படக்குன்னு மழை ஓய்ந்து போய்விடுமாம்...

    ==
    சிந்தனைகள் சிறகடித்து பறக்கின்றன..
    ==
    கார்கால சிறப்பை சொல்லும் நெடுநல்வாடையின்
    பெருமையை சொல்லி மாளாது...
    மேலும்...
    அதனை அழகாய் எமக்காக
    கவி புனையும் சகோதரியே
    உம் புகழை நாளைய வலையுலகமும்
    போற்றட்டும்...
    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  18. @திண்டுக்கல் தனபாலன்

    முதல் ஆளாய் வருகை தந்து கருத்திட்டு ஊக்கப்படுத்தும் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி தனபாலன்.

    ReplyDelete
  19. @sury Siva

    அற்புதமான மழைக்கால வர்ணனை! உங்களோடு சேர்ந்து நானும் அதை அனுபவிக்கிறேன். நுனிக்கிளைகளின் நீர்ச்சொட்டு உருவாக்கும் சத்தத்தையும் ரசித்த தங்களுக்கு நெடுநல்வாடையின் மழைக்காலம் ரசிக்காமலா போகும்? அழகான காட்சியைக் கண்முன் நிறுத்திய ரசனைமிகுப் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சுப்பு தாத்தா.

    ReplyDelete
  20. @பதிவுகள்

    வருகைக்கும் ரசித்தமைக்கும் மனம் நிறைந்த நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  21. @வை.கோபாலகிருஷ்ணன்

    வருகைக்கும் இனிதே ரசித்து மகிழ்ந்து பாராட்டியமைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  22. @கோமதி அரசு

    ஆர்வமிகுப் பின்னூட்டத்துக்கும் மனங்கவர்ந்த வரிகளை மேற்கோளுடன் காட்டி மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி கோமதி மேடம்.

    ReplyDelete
  23. @G.M Balasubramaniam

    தங்கள் ரசனையும் வாழ்த்தும் கண்டு அளவிலா மகிழ்ச்சி ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  24. @NSK

    தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் பாராட்டுக்கும் மிகவும் நன்றிங்க NSK.

    ReplyDelete
  25. @மாதேவி

    வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி மாதேவி. முடிந்தவரை இணையத்தில் தேடி பொருத்தமானப் படங்களாகப் பதிவிட்டுள்ளேன். உதவிய கூகுளுக்கே அனைத்துப் பாராட்டும் உரித்தாகும்.

    ReplyDelete
  26. @கவியாழி கண்ணதாசன்

    தங்கள் வருகைக்கும் ரசித்திட்டப் பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  27. @Amudhavan

    தங்கள் வருகையும் உற்சாகமூட்டும் கருத்துரையும் கண்டு மிகவும் மகிழ்கிறேன். மிக்க நன்றி அமுதவன் ஐயா.

    ReplyDelete
  28. @பால கணேஷ்

    உங்களுடைய இந்தப் பாராட்டு பழங்காலத் தமிழ் இலக்கியங்களில் இன்னும் சிலவற்றையாவது எளிய முறையில் எழுதும் எண்ணத்தை இன்னும் வலுப்படுத்துகிறது கணேஷ். தயங்கித் தயங்கியே பதிவிட்டேன். இத்தனை வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மிகவும் நிறைவாக உள்ளது. படங்கள் யாவும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே... படங்களுடன் பதியும்போது மழைக்கால வர்ணனை இன்னும் ரசிக்குமென்று எண்ணினேன். உங்களுக்குப் பிடித்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய ஊக்கமிகுப் பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி கணேஷ்.

    ReplyDelete
  29. @கிரேஸ்

    உங்களிடமிருந்து கிடைத்திருக்கும் உற்சாகப்பாராட்டை உள்ளத்துள் பத்திரப்படுத்துகிறேன் கிரேஸ். மிக்க நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  30. @இமா

    வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி இமா.

    ReplyDelete
  31. @vimal

    தங்கள் தமிழாசிரியரை நினைவுகூறச் செய்தமைக்காக மிகவும் மகிழ்கிறேன் விமல். மிகவும் லயித்து எழுதிய பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  32. @angelin

    எளிதில் விளங்கும்படி உள்ளதென்று நீங்க சொன்னது மிகவும் மகிழ்வைத் தருகிறது ஏஞ்சலின். இந்தப் பதிவின் நோக்கமும் அதுவே என்பதால் மனநிறைவும் உண்டாகிறது. நன்றி ஏஞ்சலின்.

    ReplyDelete
  33. @கோவை மு சரளா

    வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி சரளா.

    ReplyDelete
  34. @மகேந்திரன்

    நெடுநல்வாடையின் அழகியலில் மயங்கிதான் இப்படியொரு சோதனை முயற்சி மேற்கொண்டேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
    என்னை வாழவைக்கும் தமிழுக்கு ஏதோ என்னால் இயன்ற அளவில் ஆற்றும் நன்றிக்கடன். தங்களது பின்னூட்டம் அளவிலா உற்சாகத்தைத் தருகிறது. நன்றி மகேந்திரன்.

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள் கீதமஞ்சரி அக்கா.
    தொடருகிறேன்.

    ReplyDelete
  36. பொருள் நேர்த்தி குறையாது
    மிக மிக அருமையாக எளிமையான
    கவிதையாகத் தந்து நெடு நெல் வாடையை
    நாங்களும் உணரத் தருவதற்கு
    மனமார்ந்த நன்ரி
    தொடர நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. Anonymous28/5/13 02:58

    ''...மணியாரமென அணிவகுத்து

    கமுகின் கழுத்தை அலங்கரிக்கும்

    குறுமணிக்குலைகள் யாவும்,

    பணியாரமென உருண்டு திரண்டு

    கொழுத்து செழித்திருக்க....''
    மிக நன்று சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
    இனிய வாழ்த்து.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  38. பாட்டும், படங்களும், உங்கள் தமிழும் ஒன்றிணைந்து செல்கின்றன

    ReplyDelete
  39. @அருணா செல்வம்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி அருணா செல்வம்.

    ReplyDelete
  40. @Ramani S

    தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  41. @kovaikkavi

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  42. @தி.தமிழ் இளங்கோ

    தங்கள் வருகையும் உற்சாகம் தரும் பின்னூட்டமும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.

    ReplyDelete
  43. சேற்றுவயல் நிறைந்து
    நாற்று யாவும் வளர்ந்து
    முற்றிய கதிர் வளைந்து
    மண்ணை வணங்கி நிற்க...

    காட்சிகளை படம் பிடித்து காட்டுகின்றன வரிகள் தோழி. மிக மிக ரசத்தேன். அத்தனை பகிர்வையும் ஒரு தொகுப்பாக தாருங்கள்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.