7 July 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (7)



"அம்மா.......அப்பா.............வலி தாங்க முடியலையே.....அம்மா....!"

நாகலட்சுமி  மூட்டுவலியால் துடித்துக்கொண்டிருந்தார். இந்த ஆறுமாதத்தில் எவ்வளவோ சிகிச்சை எடுத்தாகிவிட்டது. எலும்புத் தேய்மானத்தின் முன் எதுவும் எடுபடாமல் போயிற்று. உடல் எடையும் அளவுக்கு அதிகமாக இருந்ததால் அடுத்தவர் உதவியின்றி எழுவதும் சாத்தியமின்றிப் போனது.

அறுவை சிகிச்சை செய்யலாம் என்றாலோ, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் அடங்காமல் கவலை தந்தது. நாகலட்சுமிக்கு வாயைக் கட்டும் கலை கைவரவில்லை. இனிப்புணவின்மேல் அதீத ஈடுபாடு கொண்டிருந்தார்.

விக்னேஷ் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், இரண்டு நாள் கடைப்பிடித்தால் அதிகம்! நாளெல்லாம் கூடவே இருந்தா கண்காணிக்க முடியும்?  அவர் உடல்நிலையில் அவர்தானே அக்கறை கொள்ளவேண்டும்? விக்னேஷ் வெறுத்துப்போய் சொல்வதை விட்டுவிட்டான்.

விக்னேஷ், அம்மாவின் உதவிக்கென்று ஒரு பெண்ணை அமர்த்தியிருந்தான். அவள் காலை எழு மணிக்கு வந்து வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு மதிய சமையலுக்கான முன்னேற்பாடுகள் செய்து தந்துவிட்டு சென்றுவிடுவாள். மீண்டும் மாலை வந்து மற்ற வேலைகளைப் பார்த்துவிட்டு இரவு உணவுக்கான முன்னேற்பாடுகள் செய்துவிட்டுப் போவாள். அவளிடமே சமையல் பொறுப்பையும் ஒப்படைத்துவிடலாம் என்று விக்னேஷ் சொன்ன யோசனைக்கு அம்மா பலமாக மறுப்பு தெரிவித்தார்.

"அது ஒண்ணுதான் நான் செய்யிறேன். அதையும் செய்யலேன்னா..அப்புறம் நான் இருந்து என்ன பயன்? நான் பெத்த பிள்ளைக்கு என் கையால சமைச்சுபோடறதை நான் பாக்கியமா நினைக்கிறேன். அதைப் பறிச்சிடாதேப்பா!" என்று கூறிவிட்டார்.

பக்கத்துவீட்டு மனோகரி அக்கா கூட ஒருநாள் பேச்சுவாக்கில்,

"என்னம்மா, எப்ப உங்க பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணப்போறீங்க? மருமகள் வந்துட்டால் இந்தப் பிரச்சனை இருக்காதில்லே?"

என்று கேட்டுவிட்டாள். அம்மாவுக்கு வந்ததே கோபம்.

"ஏண்டியம்மா, நான் நல்லாயிருக்கிறது பிடிக்கலையா, உனக்கு? மருமக வந்து என்னை மூலையில் உக்காத்திவச்சுப் பாக்க ஆசைப்படறே?"

அக்கா, போகும்போது விக்னேஷிடம் ரகசியக்குரலில்,

"விக்கி, உங்கம்மாவுக்கு உனக்குக் கல்யாணம் பண்ணிப் பாக்கிற ஆசையே இல்லை. நீயா யாரையாவது பார்த்துப் பண்ணிகிட்டாதான் உண்டு!" என்று சொல்லிவிட்டுப்போனாள்.

விக்னேஷுக்கு ஆச்சர்யமாக இருந்தது. தன் மகன் காலாகாலத்தில் திருமணம் செய்துகொண்டு சீரும் சிறப்புமாய் வாழவேண்டுமென்பதுதானே எல்லா அம்மாவின் ஆசையாக இருக்கக்கூடும். அம்மாவுக்கு அந்த எண்ணம் இதுவரை தோன்றாமல் போனது ஆச்சர்யம்தானே? வேறு யாராவது இதைப் பற்றிப் பேசினாலும் அவர்கள் மேல் கோபப்படுகிறாரே!

விந்தைதான் இது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே, அம்மாவின் காலில் தைலத்தை தேய்த்து நீவி விட்டுக்கொண்டிருந்தான்.

"அப்பா, விக்னேஷ்! எனக்கொரு உதவி செய்யறியா?"

"சொல்லுங்கம்மா!"

"கருணைக் கொலை கருணைக்கொலைன்னு சொல்றாங்களே....என்மேல் கொஞ்சம் கருணை காட்டி அதைச் செய்யேன்ப்பா!"

"அம்மா! என்ன சொல்றீங்க?"

அதிர்ந்தான் விக்னேஷ்.

"ஏம்மா இப்படியெல்லாம் பேசுறீங்க? உலகத்தில் எவ்வளவோ கொடுமையான நோயெல்லாம் இருக்கு! இருந்தும் மக்கள் அதைத் தாங்கி வாழ்ந்துகிட்டுதான் இருக்காங்க! ஒரு சாதாரண மூட்டுவலிக்குப் போய்......"

அவன் முடிக்கவில்லை. நாகலட்சுமி அம்மாள் ஆத்திரத்துடன் குறுக்கிட்டார்.

"சாதாரண மூட்டுவலியா? உனக்கு அப்படிதான் டா இருக்கும். சும்மாவா சொன்னாங்க, தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறன்னு! சாதாரண மூட்டு வலியாமில்லே....உயிர் போற வலிடா....உயிர் போற வலி! அந்த வேதனை அதை அனுபவிக்கிறவங்களுக்குதான் தெரியும்...வெளியில இருந்து பாக்கிறவங்களுக்கு என்ன தெரியும்?

அப்பா....சாமி.....ஐயா.....இனிமே நீ எனக்கு எந்த உதவியும் செய்யவேணாம்ப்பா! ஆளவிடு!"

நாகலட்சுமி தலைக்குமேல் கரங்களை உயர்த்தி ஒரு பெரிய கும்பிடாகப் போட்டார்.

"அம்மா.....என்னம்மா......நான் என்ன சொல்லவந்தேன்னா....."

"போதும்ப்பா, போதும்! எப்போ உன் மனசில நான் சாதாரண வலியைப் பெரிசு பண்ணி ஆர்ப்பாட்டம் பண்றதா ஒரு நினைப்பு வந்திடுச்சோ, இனிமேல் நான் என்ன சொன்னாலும் அதெல்லாம் நடிப்பாத்தான் தோணும். நீ முதலில் இங்கேயிருந்து கிளம்பு! என் வேலையை நானே பாத்துக்கறேன்!"

அம்மா கட்டிலிலிருந்து தடுமாறி எழ முற்பட, விக்னேஷ் வலிந்து அவரைத் தடுத்து அமர்த்தினான்.

"அம்மா! தயவுசெய்து கோபிக்காமல் நான் சொல்றதை கொஞ்சம் காதுகொடுத்துதான் கேளுங்களேன். அம்மா...ப்ளீஸ்!"

அம்மாவின் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் வழிந்தது. அதைப் பார்த்து விக்னேஷின் கண்களும் நீரைச் சொரிந்தன.

அம்மாவின் அருகில் அமர்ந்து அவரை மெல்ல அணைத்துக்கொண்டான். அவர் சற்றே ஆசுவாசமடைந்ததுபோல் தோன்றியது.

"அம்மா! எனக்கு உங்களை விட்டால் இந்த உலகத்தில் வேற யார் இருக்கிறா, சொல்லுங்க? மூட்டுவலியைக் காரணமா வச்சி, என்னைக் கொலை பண்ணிடுன்னு மகன்கிட்ட ஒரு தாய் சொன்னால்,அவன் மனம் என்ன பாடுபடும்னு உங்களுக்குத் தெரியாதா? எனக்கு உங்க மனநிலையை மாத்த என்ன செய்யிறதுன்னு தெரியலைம்மா!

சின்ன வயசில் தாத்தா சொல்வார், நமக்கு ஒரு கஷ்டம் வந்தால், நம்மைவிடவும் கஷ்டப்படுறவங்களைப் பார்த்து, நம்ம கஷ்டம் அதைவிடவும் சின்னதுதானேன்னு நினைச்சு மனசைத் தேத்திக்கணும்னு! அதைத்தாம்மா நான் சொல்லவந்தேன். அதுக்குள்ள நீங்க என்னென்னமோ பேசிட்டீங்க!"

ஆனாலும் நாகலட்சுமிக்கு சமாதானம் உண்டாகவில்லை.

"இருந்தாலும் என் வலியை சாதாரணம்னு நீ சொல்லியிருக்கக்கூடாது! ஒருவேளை....உனக்கு அது சாதாரணமாகவும் இருக்கலாம்....."

"என்னம்மா, நீங்க! திரும்பவும்...."

"என்னப்பா செய்யறது? அடுத்தவர் உதவியை எதிர்பார்த்து வாழுற நிலையிலிருக்கும் எல்லாருக்குமே, தான் மத்தவங்களுக்கு பாரம்கிற நினைப்பு வரத்தான் செய்யும். அதைத் தடுக்க முடியாது! நீயே இப்படிப் பேசினால், நாளைக்கு வரப்போற மருமகள் எப்படிப் பேசுவாள்? அதை நினைச்சேன், கோபம் வந்துட்டுது!"

"ஆமாம்! நாளைக்கே வரப்போறாளாக்கும்? அவள் எப்ப வருவாளோ? அதுக்குள்ளே நீங்க எழுந்து நடமாட ஆரம்பிச்சிடுவீங்க”

“சொல்ல முடியாதுப்பா! இதோ, இந்தப்பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துகிட்டு ஒரு வேலைக்காரக்குட்டியை இழுத்துகிட்டு வந்திருக்கானே, பிரபு...அவனைமாதிரி நீயும் எவளையாவது இழுத்துகிட்டு வரமாட்டேன்னு என்ன நிச்சயம்?"

விக்னேஷ் அதிர்ந்துபோய் அம்மாவை ஏறிட்டான். அம்மாவா இப்படி......?

தொடரும்...
*****************************************************************


இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

மு. உரை:
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
------------------------------------

தொடர்ந்து வாசிக்க
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (8)

முந்தைய பதிவு
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (6)


8 comments:

  1. இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?.//

    ஒழுங்காக இருக்கும் மகனை தாயாரே தப்பு செய்யத்தூண்டுவது போல் விஷமான வார்த்தைகள்.

    ReplyDelete
  2. இது போன்ற மனப்பிறழ்வுகள் மற்றவரையும் தடுமாற வைத்துவிடும். நிதர்சனமான characterization .

    ReplyDelete
  3. ஒரு தாயின் பாசமாக இருந்தாலும் பிள்ளைகளுக்கும் தனிப்பட்ட ஆசைகள் இருக்கும்தானே !

    ReplyDelete
  4. அதீத அன்பின் ஆளுமை என்னவேண்டுமானலும் செய்யத் துணியும் அல்லவா? உங்கள் கருத்துக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  5. //இது போன்ற மனப்பிறழ்வுகள் மற்றவரையும் தடுமாற வைத்துவிடும். நிதர்சனமான characterization//

    கருத்துக்கு நன்றி சாகம்பரி.

    ReplyDelete
  6. //:)NICE //

    வருகைக்கு நன்றி சிவா.

    ReplyDelete
  7. //ஒரு தாயின் பாசமாக இருந்தாலும் பிள்ளைகளுக்கும் தனிப்பட்ட ஆசைகள் இருக்கும்தானே !//

    அந்தப் பாசப் போராட்டத்தை விவரிப்பதே இக்கதையின் மையம். கருத்துக்கு நன்றி ஹேமா.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.