12 June 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (3)


"ஏங்க, உங்க நண்பரோட அம்மா ரொம்ப நல்லவங்களா இருக்காங்க, இல்லே………….?"

பிரபுவின் கைகளுக்குள் தஞ்சமடைந்திருந்த சுந்தரி, அவன் முகத்தை ஏறிட்டாள்.

"ஆமாம், ஆமாம்! எல்லா அம்மாவும் நல்லவங்கதான், தன் மகனுக்குப் பிரச்சனை வராதவரை!"

"என்னாங்க, இப்படிச் சொல்லுறீங்க?"

"பின்னே? எங்கம்மாவும்தான் எதிர்வீட்டு அக்கா, தானாக் கல்யாணம் பண்ணிகிட்டப்ப, கோயிலுக்குப் போய் வாழ்த்திட்டு வந்தாங்க. தன் பிள்ளைன்னு வரும்போதுதானே சுயநலமா யோசிக்கிறாங்க!"

"…………….!"

புரிந்துகொண்டவள் போல் அவள் அமைதியாய் இருந்தாள். பிரபுவின் விரல்கள் அவள் கூந்தலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தன. திடீரென்று எதையோ நினைத்துக்கொண்டவள் போல்,

"ஆனா…………….., அந்தம்மா பாக்குறதுக்கு நல்லவங்களாதாங்க தெரியிறாங்க, பாருங்க, உடம்பு முடியாததோட,நமக்காக விருந்தெல்லாம் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க, எனக்குப் புதுச்சீலை, ரவிக்கையெல்லாம் தந்திருக்காங்க. நிச்சயமா அவுங்க நல்லவங்களாதான் இருக்கணும்!"

பிரபுவுக்கு சிரிப்பு வந்தது.

"சரிதான், உனக்கு யாராவது புதுச்சீலை, ரவிக்கை குடுத்தா அவங்கதான் நல்லவங்க, குடுக்காதவங்க கெட்டவங்கன்னு சொல்லுவே போலயிருக்கே!"

"நீங்க என்ன சொல்லுறீங்க, அந்தம்மா கெட்டவுங்கனா?"

"அடிப்பாவி! நான் எப்ப அப்படிச் சொன்னேன்? வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்பிடாதேன்னுதானே சொல்றேன். இது கிராமம் இல்லை. நகரம். இங்கே பலவிதமான மனிதர்கள் இருப்பாங்க, நீ பார்க்கிற எல்லாரையும் பத்தரைமாத்துத்தங்கமுன்னு நினைச்சிடாதே! எல்லாரிடமும் ஒரு எல்லை வச்சுப் பழகணும், சரியா?"

"என்னங்க, என்னென்னவோ சொல்லுறீங்க?"

சுந்தரியின் முகத்தில் கலவரம் குடிகொண்டது.

"புது இடம்! அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையா இருன்னு சொல்றேன்! அதுக்காக பயப்படாதே! கொஞ்சநாள் பழக்கத்தில் யார் யார் எப்படிப்பட்டவங்கன்னு உனக்குத் தெரியவரும். அதுக்கேத்தமாதிரி நீ பழகத் தொடங்கிடுவே!"

சுந்தரி பயந்தவாறே தலையாட்டினாள்.
பிரபுவுக்கு, விக்னேஷின் வீட்டில் தனக்கும் , விக்னேஷின் தாயாருக்கும் நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது. அதை சுந்தரியிடம் சொல்வது உசிதமல்ல என்று நினைத்தவன், தன் மனதுக்குள்ளேயே அசைபோட்டான்.

விருந்து முடிந்ததும், விக்னேஷை, நாகலட்சுமி, வெற்றிலை வாங்க வெளியில் அனுப்பிய காரணம் அப்போது புரியவில்லை. சுந்தரியும், மனோகரியும் பாத்திரம் கழுவிக்கொண்டே ஏதோ சுவையாகப் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தனர்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த பிரபு பொழுதுபோக, பக்கத்திலிருந்த பத்திரிகையில் பார்வையைப் பதித்திருந்தான். நாகலட்சுமி, அவனருகில் வந்தமர்ந்ததும், ஒரு புன்னகையை உதிர்த்து, தொடர்ந்து பத்திரிகையில் மூழ்கினான். அல்லது மூழ்கியிருப்பதுபோல் பாவ்லா காட்டினான்.

நாகலட்சுமி  என்ன கேட்பார், என்று தெரிந்திருந்ததால் அவருடன் பேசும் சந்தர்ப்பத்தைத் தவிர்த்து வந்தவனுக்கு, அந்தச் சந்தர்ப்பத்தை அவரே உருவாக்கியிருப்பது புரிந்தது.

"என்னப்பா, பிரபு! உங்க அப்பா அம்மா எல்லாரும் நல்லாயிருக்காங்களா?"

"ம்......"

அவன் தொடர்வதற்குள் அவரே தொடர்ந்தார்.

"எப்படி நல்லாயிருக்க முடியும்? ஒரே பிள்ளை, இப்படி தலையில் கல்லைத் தூக்கிப் போடுவான்னு கனவு கூட கண்டிருக்க மாட்டாங்களே! போன ஜென்மத்திலே என்ன பாவம் செய்தாங்களோ, இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறாங்க!"

பிரபுவுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அந்தம்மா இதைப்பற்றிதான் பேசுவார் என்று எதிர்பார்த்திருந்தாலும், இப்படி அவன் மனம் நோகுமளவுக்கு அதிரடியாய்ப் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவன் அமைதியாய் இருந்தான்.

"சரி! இந்தப்பெண்ணுக்கு பெத்தவங்க, கூடப்பொறந்தவங்கன்னு யாரும் இல்லையா, அடிச்சு உதைச்சு வீட்டில் அடக்கிவைக்க?"

"அம்மா....."

பிரபு மானசீகமாய் சுந்தரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். அவள் காதில் இந்தம்மா பேசுவது எதுவும் விழுந்துவிடக்கூடாதே என்று கவலைப்பட்டான்.

"அம்மா! நாங்க கல்யாணம் செய்துகிட்டது என் அப்பா அம்மாவுக்குப் பிடிக்காதுதான். சுந்தரியின் அப்பா அம்மாவும் எதிர்ப்புதான்.  நாளடைவில் அவங்க சமாதானமாகிடுவாங்க என்கிற நம்பிக்கையில்தான் இவளைக் கூட்டிவந்தேன். கல்யாணமும் செய்துகிட்டேன். இப்போ, அவள் என் மனைவி! அவளைப் பத்தி நீங்க இப்படிப் பேசறது எனக்குப் பிடிக்கலைம்மா!"

பிரபு மிகவும் அமைதியாய் நிதானமாய் சொன்னான். சீவிச் சிங்காரித்து, மூக்கறுத்த கதையாக, போதும் போதும் என்கிற அளவுக்கு வயிறு நிறைய உபசரித்துவிட்டு, இப்படி மனம் நோகப் பேசுவது எந்த விதத்தில் நியாயம்?

பிடிக்கவில்லையெனில், எதற்கு வீட்டுக்கு அழைக்கவேண்டும்? அப்படியே அழைத்திருந்தாலும், நீ செய்தது சரியில்லை, உன் பெற்றோரிடம் போய் முதலில் ஆசி வாங்கு, அவர்களை மனம் நோகச்செய்யாதே என்று உபதேசித்து அனுப்பவேண்டும். இப்படியா பேசி அவமானப்படுத்துவது?

நாகலட்சுமிக்கு பிரபுவின் பேச்சு முகத்தில் அறைந்ததுபோல் இருந்தாலும், இந்தக் கருவாச்சிக்கே இப்படிப் பரிந்துபேசுகிறானே, இன்னும் அழகியாய்க் கிடைத்திருந்தால் அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டார். ஆனால் அவர் உண்டாக்கிய அந்தத் தனிமை சந்தர்ப்பத்தின் நோக்கமே வேறு. இப்போது பிரபுவை வெறுப்பேற்றுவதன் மூலம் அந்த நோக்கம் ஈடேறாமல் போகக்கூடும் என்பதால் அடக்கிவாசிக்கத் துவங்கினார்.

"சரிப்பா! அதை விடு! உன் பாடு, உன்னை பெத்தவங்க பாடு! நான் உங்கிட்ட கேட்க நினைச்சதே வேற. அதுக்கு மட்டும் எனக்கு பதில் சொல்லு போதும்!"

"என்னம்மா?"

"விக்னேஷ் யாரையாவது காதலிக்கிறானா? “

திடும்மென்று அவர் கேட்ட கேள்வியால் பதில் சொல்லத் தடுமாறினான், பிரபு.

(தொடரும்)
 *****************************************************************
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

மு.வ உரை:
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
**************

4 comments:

  1. //தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.// நல்லபண்பு

    சுவாரஸ்யமாகப் போகிறது தொடர்கதை.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. தொடரட்டும்...வாசிக்கிறேன் கீதா.அம்மாக்கள் !

    ReplyDelete
  3. சீவிச் சிங்காரித்து, மூக்கறுத்த கதையாக, போதும் போதும் என்கிற அளவுக்கு வயிறு நிறைய உபசரித்துவிட்டு, இப்படி மனம் நோகப் பேசுவது எந்த விதத்தில் நியாயம்?

    இது போல பல பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ன செய்வது
    நிறையை இருந்த குறள்
    மனதிற்கு நிறைவாய் இருந்தது

    ReplyDelete
  4. நன்றி மலிக்கா... தொடர்ந்து வாங்க.

    தொடர்வதற்கு நன்றி ஹேமா.

    நன்றிங்க A.R.ராஜகோபாலன்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.