25 March 2025

தித்திக்குதே (1)


சர்க்கரை என்று சொன்னால் வாய் தித்திக்குமா?

சர்க்கரை என்று எழுதி நக்கினால் இனிக்குமா?

என்றெல்லாம் பழமொழிகள் உண்டு. ஆனால் என்னைப் போன்ற இனிப்புப் பிரியர்களுக்கோ லட்டு, பூந்தி, அல்வா, கேசரி, பாயசம், கொழுக்கட்டை, பால்கோவா, குலாப் ஜாமூன், ரசகுல்லா, மைசூர்பாக்கு, தூத் பேடா, பாதுஷா, காஜூ கட்லி, சூர்ய கலா, சந்திரகலா... என இனிப்புப் பலகாரங்களின் பெயர்களை எழுதக்கூட வேண்டாம், நினைத்த மாத்திரத்திலேயே வாய் ஊற ஆரம்பித்துவிடும். நீரிழிவு நோய் வந்த பிறகு இனிப்புகளைத் தின்பதில் வாய்க்குப் பெரும் கட்டுப்பாடு போடப்பட்டுவிட்டாலும் நினைக்கவும் ஏங்கவும் மனதுக்கு ஏது கட்டுப்பாடு?

இந்தியா செல்லும்போதெல்லாம் தேன் மிட்டாயை விடுவதில்லை.  ஜவ்வு மிட்டாய், சூட மிட்டாய், குச்சி மிட்டாய், காசு மிட்டாய், பல்லி மிட்டாய், பம்பர மிட்டாய், பரங்கிக்காய் மிட்டாய், கடலை மிட்டாய், கம்மர்கட், தேங்காய் மிட்டாய், ஆரஞ்சுச்சுளை மிட்டாய் என்று பெட்டிக்கடை மிட்டாய்களை நினைத்தமாத்திரத்தில் சிறுவயது நினைவுகள் நிழலாடா நெஞ்சங்கள் ஏது?  அஞ்சு பைசாவுக்கும் பத்து பைசாவுக்கும் ஒத்தப்பீசா (ஒற்றைப் பைசா) மிட்டாய் வாங்கி தெருவில் இருக்கும் அத்தனைக் குழந்தைகளும் பங்குபோட்டுக்கொண்டு ருசித்த பால்யகாலம் தவறாமல் நினைவுக்கு வந்து ஏங்க வைக்கும். 

இனிப்புச்சுவையை விரும்பாதவர்கள் உங்களில் எத்தனைப் பேர்? எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். குழந்தைகளுக்கு அறிமுகமாகும் ஆதி ருசியே தாய்ப்பாலின் இன்சுவைதானே! அறுசுவை விருந்துகளில் எந்தச் சுவை தவறினாலும் இனிப்புச்சுவை மட்டும் தவறவே தவறாது. பண்டிகைகள், திருவிழாக்கள், விசேஷ நாட்கள், திருமண வைபவம், பிறந்தநாள், காதுகுத்து, பிரிவுபசார விழா, விருந்தினர் வருகை, குடும்ப உறுப்பினர் கூடுகை என அனைத்துக் கொண்டாட்டங்களும் இனிப்பில் தொடங்கி இனிப்பில் முடியும். அவ்வளவு ஏன்? இறந்தவர்களுக்குப் படைக்கப்படும் பதினாறாம் நாள் துக்கக் காரியத்தில் கூட இனிப்புகள் அவசியம் இடம்பெறும்.


இனிப்புப் பலகாரங்களைச் செய்வதற்கு நாம் பயன்படுத்தும் இனிப்புச் சுவையூட்டிகள்தான் எத்தனை எத்தனை
? வெள்ளைச் சீனி, பழுப்புச் சீனி, கற்கண்டு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் (அ) மண்டை வெல்லம், பனைவெல்லம் (அ) கருப்பட்டி, பனங்கற்கண்டு, தேன், வெல்லப்பாகு, பழக்கூழ் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

கரும்பு, பனை, தென்னை, கூந்தப்பனை இப்படி நம் பகுதியில் விளையும் தாவரங்களிலிருந்து நமக்குத் தேவையான இனிப்பூட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்களே, அந்த இலுப்பையிலிருந்தும் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இப்படி உலகம் முழுவதும் அந்தந்தப் பகுதியில் அபரிமிதமாகவோ தனித்துவமாகவோ விளையும் தாவரங்களைக் கொண்டு பீட்ரூட் சர்க்கரை, மேப்பிள் சிரப், பேரீட்சை சர்க்கரை, சீனித் துளசிச் சர்க்கரை, சீந்தில் சர்க்கரை என பல்வேறு இயற்கை இனிப்பூட்டிகள் தயாரிக்கப்பட்டு, மக்களின் உணவுமேசையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கின்றன. உலகச் சந்தையிலும் முக்கிய இடம் பிடித்து பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன. அவை என்னென்ன என்று பார்க்கலாமா?

பனை மரம்

முதலில் நம் தமிழகத்தின் மாநில மரமான பனையில் இருந்து தொடங்குவோம். பனை மரம் என்று சொன்னாலும், இது மரம் அன்று. ஒரு வித்திலைத் தாவரமான பனை, இலக்கண வகைப்படுத்தலின்படி ‘புல்’ வகையைச் சேர்ந்தது. பனையின் அடி முதல் நுனி வரை அனைத்துப் பாகங்களும் நமக்கு மிகவும் பயன் தரக்கூடியவை. 


பனை மரத்திலிருந்துதான் நுங்கு, பதநீர், பனம்பழம், பனங்கிழங்கு, பனை வெல்லம் போன்றவை கிடைக்கின்றன. பனை ஓலைகள் கூரை வேயவும், விசிறி, தொப்பி, கொட்டான், ஓலைப்பெட்டி மற்றும் பல கைவினைப் பொருட்கள் செய்யவும் பயன்படுகின்றன. பனஞ்சட்டங்கள் கட்டுமானத்துக்கும் பனஞ்சப்பைகள் அடுப்பெரிக்கவும் பயன்படுகின்றன. பனந்தும்பிலிருந்து கயிறு, மிதியடி போன்றவை தயாரிக்கப்படுகின்றன. பனைநார்க் கட்டிலும் நார்ப்பாயும் தமிழ்நாட்டில் முற்காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. இப்போதும் சிலர் அத்தொழிலில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.  

இவ்வளவு பயனுள்ள பனையை தென்னையோடு ஒப்பிட்டுக் குறைத்து மதிப்பிடுவது போல் ஒரு பழமொழி உள்ளது.

\\தென்னை வச்சவன் தின்னுட்டு சாவான்; பனை வச்சவன் பார்த்துட்டு சாவான்\\

என்பதுதான் அது. தென்னை மரம் அதைக் கன்றாக வைத்தவரது வாழ்நாளிலேயே வளர்ந்து காய்த்து உரிய பலனைத் தந்துவிடும். ஆனால் பனை காய்ப்பதற்கு வெகு காலம் எடுப்பதால் வைத்து வளர்த்தவருக்குப் பலன் தராது என்று தட்டையாக பொருள் கொள்ளப்படுவதுண்டு. மேலும் பனையில் ஆண், பெண் மரங்கள் தனித்தனியே உண்டு. வளர்ப்பது ஆண் மரம் எனில் எத்தனை வருடங்கள் ஆனாலும் காய்க்க வாய்ப்பில்லை.

பொதுவாக ஐந்தாறு வருடங்களில் காய்க்கத் தொடங்கும் தென்னையோடு ஒப்பிடும்போது முதல் காய்ப்புக்கு 12 முதல் 20 வருடங்கள் எடுக்கும் பனையின் கால அளவு அதிகம்தான். ஆனால் காய்க்கத் தொடங்கிய பிறகு 120 ஆண்டுகளுக்கும் மேலாகக் காய்த்துப் பலன் தரக்கூடியது பனை. தென்னையின் ஆயுள் சுமார் 80 ஆண்டுகள் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஒரு பனைமரத்திலிருந்து வருடத்துக்கு சராசரியாக 180 லி. பதநீர், 25 கிலோ பனைவெல்லம், 16 கிலோ பனஞ்சீனி, 10 கிலோ விறகு, 10 கிலோ ஓலை, 20 கிலோ நார், 2.25 கிலோ ஈர்க்கு, 11 கிலோ தும்பு (கயிறு திரிக்கப் பயன்படும் நார்த்தூள்) போன்றவை கிடைப்பதாக ‘கிராமப் பொருளாதாரத்தில் பனையின் பங்கு’ என்ற கட்டுரையில் (கிராம உலகம்) புள்ளிவிவரத்தோடு குறிப்பிடுகிறார் முனைவர் இரா. சுதமதி அவர்கள். இவை தவிர நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு கணக்கு தனி.

பதநீர் என்றதுமே என் நினைவு பால்யத்துக்குச் சென்றுவிடுகிறது. பதநீர் ருசி அறியாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா? அரை இனிப்பும் துவர்ப்பும் லேசான புளிப்புமாய் இன்ன சுவையென்று பகுத்தறிய இயலாத பதநீரின் ருசி குடித்துமுடித்த பிறகும் நெடுநேரம் நாவில் தங்கியிருக்கும். நாங்கள் காலையில் கண் விழிக்கும் முன்பே தெருவில் ‘பதநீ... பதநீ...’ என்று சத்தம் கேட்கும். உடனே வாரிச் சுருட்டி எழுந்து அம்மாவிடம் ஓடுவோம்.

பதநீர்க்காரர் சைக்கிளின் பின்புறம் பானையைக் கட்டிக்கொண்டு வருவார். தெருவில் யாராவது வாங்கினால் நிற்பார். இல்லையென்றால் விருட்டென்று அடுத்தத் தெருவுக்குப் போய்விடுவார் (இப்போதைய இடியாப்பக்காரரைப் போல). நம் தெருவை அவர் கடப்பதற்குள் அம்மாவைக் கெஞ்சிக் கூத்தாடி சம்மதம் வாங்கவேண்டும். சில நாள் கிடைக்கும், சில நாள் கிடைக்காது. அம்மாவிடம் சம்மதம் பெற்றவுடன் தம்பி பதநீர்க்காரரை நிறுத்த ஓடுவான். நான் காசையும் லோட்டாவையும் பெற்றுக்கொண்டு பின்னால் ஓடுவேன். அடுத்தத் தெருவுக்குப் போனாலும் பின்னால் துரத்தி ஓடி பதநீரை வாங்கிக்கொண்டுதான் வீடு திரும்புவோம். நம்முடைய தெருவை அவர் தாண்டிவிட்டால் பின்னால் ஓடக்கூடாது என்பது அம்மாவின் கட்டளை. ஆனால் பதநீர் ஆசை யாரை விட்டது? சில நாட்களில் ஆச்சர்யமாக அம்மாவே வாங்கி வைத்துக்கொண்டு எங்களை எழுப்புவார்.  

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது கோடை விடுமுறைக்கு, கிராமத்தில் இருந்த எங்கள் பெரியம்மா வீட்டுக்குப் போயிருந்தோம். அப்போதுதான் கலப்படமில்லாத பதநீரின் உண்மையான ருசியைப் பதம் பார்க்க வாய்த்தது. பெரியம்மாவின் வீட்டுக்குப் பின்னாலிருக்கும் வயல்வெளியை ஒட்டி நிறைய பனைமரங்கள் இருக்கும். மரமேறி தினமும் விடியற்காலையில் பெரியம்மா வீட்டின் வழியாகத்தான் பதநீர் எடுத்துச் செல்வார். தொலைவில் வரும்போதே ‘ஆத்தா’ என்று குரல் கொடுப்பார். தயாராக வைத்திருக்கும் குவளையை அவரிடம் நீட்ட, அப்போதுதான் இறக்கிய பதநீரை சுரைக்குடுக்கையைச் சாய்த்து ஊற்றுவார். பெரியம்மா அதை வாங்கி வடிகட்டி (எறும்பு, சிறு பூச்சிகள் கிடக்கும்) டம்ளரில் ஊற்றி எங்களிடம் கொடுப்பார்கள். சில நாட்களில் மரமேறுபவர் குரல் கொடுக்காமல், எங்களைப் பார்க்காதது போல விருட்டென்று கடந்து போவார். பெரியம்மாவைக் கூப்பிடவும் மாட்டார். பிறகுதான் தெரிய வந்தது அப்போதெல்லாம் சுரைக்குடுக்கையில் இருந்தது பதநீர் அல்ல, கள் என்று.


கள்ளுக்கும் பதநீருக்கும் என்ன வித்தியாசம்?

பனைமரத்தில் பாளையைச் சீவினால் கிடைப்பது பதநீர். பாளை என்பது பனை, தென்னை போன்றவற்றின் பூக்களையும் அவற்றை மூடியிருக்கும் மடலையும் குறிக்கும். பாளையைச் சீவுதல் என்பது அந்த மடல் இருக்கும் தண்டைச் சீவுவதாகும். மரமேறுபவர் கூரிய கத்தியால் பாளையைச் சீவுவார். உடனே அதிலிருந்து சொட்டுச் சொட்டாக நீர் வடியத் தொடங்கும். 




அந்த நீர் பாலும் தண்ணீரும் கலந்தாற்போன்ற வெள்ளை நிறத்தில் இருக்கும். அதைச் சேகரிக்க சிறிய அளவிலான மண்கலயத்தை அதன் வாயில் கட்டிவிடுவார். கலயத்தின் உட்புறம் சுண்ணாம்பு தடவப்பட்டு இருக்கும். அப்போதுதான் அந்த நீர் புளித்துப்போகாது. சொட்டுச் சொட்டாகப் பானைக்குள் சேகரமாகும் நீர்தான் பதநீர். மரமேறுபவர் ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் மரமேறி அந்த சிறு மண்பானைகளில் இருக்கும் பதநீரை, தான் இடுப்பில் கட்டி எடுத்துவரும் சுரைக்குடுக்கையிலோ, குடத்திலோ சேகரித்துக்கொள்வார். சேகரிக்காமல் அப்படியே விட்டுவைத்தாலோ அல்லது சுண்ணாம்பு தடவாத பானையில் சேகரித்தாலோ அது புளித்த நீராகிவிடும். புளித்த நீரை மேலும் புளிக்கவைத்து இன்னும் சில கூடுதல் செய்முறைகளோடு தயாரிக்கப்படுவதுதான் கள்(ளு).

ஒவ்வொருநாளும் மரமேறுபவர் ஒவ்வொரு மரமாக ஏறி, தான் கொண்டுபோகும் பாத்திரத்தில் பதநீரைச் சேகரிப்பதோடு அவர் வேலை முடிந்துவிடுவதில்லை. மரத்தில் கட்டியிருக்கும் கலயத்தின் உள்ளே மறுபடியும் சுண்ணாம்பு தடவ வேண்டும். பாளையின் நுனியில் முதல்நாள் சீவிய இடத்துக்குச் சற்று மேலே மறுபடியும் புதிதாகச் சீவி விடவேண்டும். அப்போதுதான் மீண்டும் அதில் பதநீர் சுரக்கும். தேவையான சுண்ணாம்பு, அதைப் பூசுவதற்கான ப்ரஷ், பாளையைச் சீவ உதவும் கூர்கத்தி, பதநீரைச் சேகரிக்க உதவும் சுரைக்குடுக்கை அனைத்தையும் தன்னோடு இடுப்பில் கட்டிக் கொண்டு மரமேறுவார் மரமேறி.


பதநீர் சுரப்புக் காலம் என்பது ஆண்டுக்கு சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே. ஒரு பாளையிலிருந்து ஒரு லிட்டர் முதல் இரண்டு லிட்டர் வரை பதநீர் கிடைக்கும் என்றும்
, நன்கு வளர்ச்சியடைந்து நிறைய பாளைகள் விட்டிருக்கும் ஒரு பனை மரத்தில் ஒரு நாளைக்கு சுமார் 20 லிட்டர் பதநீர் கிடைக்கும் என்றும் வைத்துக்கொண்டால், ஒரு பனை மரம் தன் வாழ்நாளில் சுமார் 1,20,000 லிட்டர் பதநீரைத் தரக்கூடும் என்ற ஆதாரபூர்வமான தகவலைத் தெரிவிக்கிறது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வேளாண் இணையதளம். ஒரு மரமேறி ஒரு நாளைக்கு 25 முதல் 30 மரங்கள் ஏற முடியும் என்ற தகவலையும் அது தெரிவிக்கிறது.

மரமேறிகள் மரமேறும்போது சிறு கயிற்றுப் பிரியால் இரண்டு கால்களையும் பிணைத்தோ, அல்லது சற்று பெரிய கயிற்றுப்பிரியால் தங்கள் உடலை மரத்துடன் பிணைத்தோ ஏறுவதைப் பார்த்திருக்கிறீர்களா? கால்களைப் பிணைத்திருக்கும் கயிற்றுக்கு கால் கயிறு என்றும் உடலைப் பிணைத்திருக்கும் கயிற்றுக்கு தாங்கு கயிறு என்றும் பெயர்.   

இப்போது அடுத்தக் கட்டமாக பனைவெல்லம் தயாரிப்பு. இதில் பக்குவம் அறிந்த, பல கால அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள். அவர்கள் மரமேறிகள் கொண்டுவரும் பதநீரை வடிகட்டி, பெரிய விறகடுப்பின் மீது வைக்கப்பட்டிருக்கும் வாயகன்ற பெரிய இருப்புச்சட்டியில் ஊற்றிக் கொதிக்கவிடுவார்கள். அடுப்பை எரிக்க பனை ஓலை, பனஞ்சப்பை, பனைமட்டை போன்ற பனையின் பிற பொருட்கள் பயன்படுத்தப்படும். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தொடர்ச்சியாக அதைக் கிளறிக் கொண்டே இருந்தால், தண்ணீர் எல்லாம் ஆவியாகி பாகு போன்ற பதம் கிடைக்கும். சரியான பதம் வந்தவுடன் தயாராக இருக்கும் அச்சுகளில் அல்லது கொட்டாங்குச்சிகளில் சூடான பாகை ஊற்றுவார்கள். அச்சுக்குப் பயன்படுத்தப்படும் கொட்டாங்குச்சிகள் பிசிறுகள் இல்லாமல் தேய்த்து சுத்தமாகவும் வழுவழுப்பாகவும் இருக்கும். பாகு ஆறியதும் திடநிலையை அடைந்துவிடும். அவற்றைதான் ‘கருப்பட்டி’ என்கிறோம். அச்சிலிருந்து கருப்பட்டிகளை வெளியில் எடுத்து பனை ஓலைகளில் வைத்து ஈரம் போக நன்கு காயவைப்பார்கள். முழுமையாகத் தயாரான கருப்பட்டிகள்  பனையோலைக் கொட்டானில் வைத்து விற்பனைக்கு அனுப்பப்படும்.

கருப்பட்டி தயாரிக்கும் முறைகளில் சிற்சில மாற்றங்களுடன் சில்லுக் கருப்பட்டி, சுக்குக் கருப்பட்டி, பனந்தேன், பனங்கற்கண்டு போன்றவை தயாரிக்கப்படுகின்றன. சுக்குக் கருப்பட்டி காப்பியின் ருசிக்கு அடிமையானோர் ஏராளம். இப்போதும் கசாயம், நாட்டு மருந்து, லேகியம் போன்றவற்றுக்கு பனங்கருப்பட்டிதான் பிரதான இனிப்பூட்டியாக உள்ளது.

கொசுறாகக் கொஞ்சம் இலக்கியம்!

இனிப்பூட்டிகள் தவிர நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு என்று பருவத்துக்கு ஏற்ப பனை மரம் தரும் வரங்கள் ஏராளம். இதை அழகாகச் சொல்கிறது ஒரு புறநானூற்றுப் பாடல். புலவர் ஆலத்தூர்கிழார், சோழன் நலங்கிள்ளியின் படைபலத்தைப் பாடும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார். 

\\தலையோர் நுங்கின் தீஞ்சேறு மிசைய

இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்

கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர

நிலமலர் வையத்து வலமுறை வளைஇ

வேந்து பீடழித்த ஏந்துவேல் தானை...\\

சேனை அணிவகுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. வழியில் ஒரு இடத்தில் நிறைய பனைமரங்கள் உள்ளன. அது பனைமரங்கள் காய்க்கத் தொடங்கிய பருவம். எனவே முதலில் செல்லும் படைவீரர்களுக்கு இனிய சதைப்பத்தான நுங்குகள் சுவைக்கக் கிடைக்கின்றன. 


சேனையின் அளவு பெரியது என்பதால் அணிவகுப்பும் நெடியதாக இருக்கிறது. சேனையின் மத்தியில் உள்ள வீரர்கள் பனைமரங்கள் இருக்கும் இடத்தைக் கடக்கும்போது காய்கள் முற்றிக் கனியும் பருவமாகிவிட்டதாம். அதனால் அவர்களுக்கு நல்ல பழுத்தப் பனம்பழங்கள் ருசிக்கக் கிடைக்கின்றன. சேனையில் கடைசியாக படைவீரர்கள் வரும்போது அவர்களுக்கு என்ன கிடைக்கிறது தெரியுமா



முன்னால் சென்ற வீரர்கள் பனம்பழங்களைச் சுவைத்துவிட்டு எறிந்த பனங்கொட்டைகள் யாவும் முளைவிட்டு பனங்கிழங்குகளாக உள்ளனவாம். அவற்றை அவர்கள் சுட்டு உண்கின்றனராம். அப்படியென்றால் எவ்வளவு பெரிய படை என்று பார்த்துக் கொள்ளுங்கள். 

உயர்வு நவிற்சி அணிக்கு மிக அழகான எடுத்துக்காட்டு இப்பாடல்.

பனங்கிழங்கு என்றதும் சத்திமுத்தப் புலவர் பாடிய நாராய் பாடல் நினைவுக்கு வராமல் போகாது.

\\நாராய் நாராய் செங்கால் நாராய்

பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய் ....\\

நாரையின் அலகைப் பார்த்தபோது அவருக்கு பனங்கிழங்கின் நினைவு வந்திருக்கிறது. எனக்கோ பனங்கிழங்கைப் பார்க்குந்தோறும் நாரையின் அலகு நினைவுக்கு வருகிறது.


புலவர் பாடிய நாரை இதுவாகத்தான் இருக்கவேண்டும். செங்காலும் பவளக்கூர்வாயும் கொண்டிருக்கிறதே.. 


எனக்கென்னவோ மஞ்சள் மூக்கு நாரைக்குதான் அச்சொட்டாக அலகு அப்படியே பனங்கிழங்கு போல இருப்பதாகத் தோன்றுகிறது. 

(தொடரும்)

படங்கள் உதவி Pixabay

12 March 2025

ஒவ்வொரு நாளும் புதிதாய்...

வசந்தகாலம் முடிவடைவதற்கு முன்பாகவே கொளுத்தத் தொடங்கிய வெக்கையின் தாக்கத்தை எழுதிய புலம்பல் பதிவோடு போனவளுக்கு, கோடை முடிந்து இதம் தரும் இலையுதிர்காலமும் தொடங்கிய பிறகுதான் வலையில் தலை காட்ட மனம் வாய்த்திருக்கிறது. 

கோடையின் கடுந்தாக்கம், பிரியத்துக்குரிய தாய்மாமனின் இழப்பு, புத்தாண்டின் தொடக்கத்திலேயே கவித்தோழி உமா மோகன் அவர்களின் திடீர் மறைவு தந்த அதிர்ச்சி போன்ற சில காரணங்களால் எழுதுவதில் ஒரு வித அயர்ச்சியும் சுணக்கமும் ஏற்பட்டுவிட்டது. எழுத்தில்தான் மந்தமே தவிர வாழ்க்கை என்னவோ தன் போக்கில் படுவேகமாகவும் சுவாரசியமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. 

நெடும்பயணத்தில் சிறு இளைப்பாறல்

முதன்முதலாக தோழிகளோடு, சுமார் 2,000 கி.மீ. நீள சாலைவழி சாகசப் பயணம், மகளின் புதிய காரில் புதுப்புது இடங்களுக்கு சந்தோஷப் பயணம், மகளின் வளர்ப்புச் செல்லங்களும் அவற்றின் சேட்டைகளும், புதிய youtube சானல், புதிய கைத்தொழில், தோட்டச் சீரமைப்பு, தோட்டத்தின் புதுவரவுகள் என ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களுக்குக் குறைவில்லாமல் கழிகின்றன நாட்கள்.  

பயணத்தில் சுவாரசியம் கூட்டிய இடங்களுள் ஒன்று

பச்சைப் புல்வெளியும் கரிய மாடுகளும்

இந்த வருடம் எதிர்பாராத மகிழ்ச்சியாக Australian native bees – Family planner-ல் நான் எடுத்த புகைப்படமும் சிறு இடத்தைப் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியத் தேனீக்கள் குறித்த விழிப்புணர்வையும் அறிவியற் தகவல்களையும் அறியத் தரும் Bee Aware of Your Native Bees  என்ற ஃபேஸ்புக் குழுமம் அதில் பதியப்பட்ட பல்லாயிரக்கணக்கான படங்களுள் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து இந்த planner-ஐ உருவாக்கியுள்ளது.

நாட்காட்டியின் முன் பக்கம்

நாட்காட்டியின் கடைசிப்பக்கம்

வித்தியாசமானவை, அரியவை, தரைவாழ் தேனீக்கள், தேன் கூடு, தேனடை, தேன் சேகரிப்பு, உறக்கம், குமிழ் விடுதல், மகரந்தச் சேர்க்கை என ஒவ்வொரு மாதத்திற்குமான பிரத்தியேகத் தலைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலியத் தேனீக்கள் படங்களுள் குமிழ் விடுதல் தலைப்பில் என்னுடைய ஒளிப்படம் தேர்வானது. காலண்டரா ப்ளானரா என்ற ஆலோசனையின்போது பலரும் ப்ளானர் என்று பரிந்துரைக்க, இறுதி வடிவம் ப்ளானர் (சரியான தமிழ்வார்த்தை இன்னும் பிடிபடவில்லை) என்று முடிவானது.


தகவல் பக்கம்

வழுவழுப்பான தாள்கள். ஒரு அடி நீளம், ஒரு அடி அகலத்தோடு பெரிய அளவிலான திட்டமிடலுடன் கூடிய நாட்காட்டி ஆஸ்திரேலியத் தேனீக்கள் மற்றும் சிறப்புத் தகவல்களோடு அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. தனி விலை 25 ஆஸ்திரேலிய டாலர்கள். மொத்தமாக வாங்கினால் குறையும். நிறைய பேர் ஐம்பது, நூறு என்று வாங்கியுள்ளனர். ஆஸ்திரேலியா முழுமைக்கும் விநியோகிக்கப்பட்டுள்ள இவ்வாண்டின் நாட்காட்டியில் என்னுடைய ஒளிப்படமும் இடம்பெற்றிருக்கிறது என்பது மகிழ்வும் பெருமிதமும் அளிக்கிறது.

நானும் ஒரு மூலையில்...

நான் பிறந்த ஏப்ரல் மாதத்தில் என் ஒளிப்படம் இடம்பெற்றிருப்பது தற்செயல் என்றாலும் பிறந்தநாள் பரிசாகப் பெற்றது போல் கூடுதல் மகிழ்ச்சி.

நத்துவும் மித்துவும் 

கடந்த 2022-ஆம் ஆண்டு அமேசானில் வெளியான என்னுடைய சிறுவர் நாவல் ‘நத்துவும் மித்துவும்’ தற்போது ஒலிவடிவம் பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் வாழ்வுநல மேம்பாட்டுக்காகச் செயல்படும் ‘மெய்ப்பொருள்’ என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சென்ற பிப்ரவரி 14-ஆம் தேதியிலிருந்து தினமொரு கதையை பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக ஒலி வடிவில் ஒலிக்கச் செய்கிறார்கள். அந்த வரிசையில் பத்தாவது கதையாக என்னுடைய ‘நத்துவும் மித்துவும்’ சிறுவர் நாவல் இடம்பெற்றிருக்கிறது. சுமார் 40 நிமிட அவகாசம் எடுக்கும் இக்கதையை Spotify-இல் கேட்கலாம்.

நத்துவும் மித்துவும் ஒலி வடிவம்

‘நத்துவும் மித்துவும்’ கதையை எளிய மொழியில் மிக அழகாகச் சொல்லியிருக்கும் அபிநயா ஸ்ரீகாந்த் அவர்கள், இந்தக் கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகத் தெரிவித்தார்.

இணையப் படம் 1

1969-ஆம் ஆண்டு எரிக் கார்ல் என்ற அமெரிக்க சிறார் எழுத்தாளர் மற்றும் ஓவியரால் எழுதி வடிவமைக்கப்பட்டதுதான் The very hungry caterpillar என்ற உலகப் பிரசித்தி பெற்ற சிறார் படப் புத்தகம். புத்தகம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை சுமார் ஐம்பது மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. 66 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. வித்தியாசமான புத்தக வடிவமைப்புக்காக எண்ணற்ற விருதுகளை வென்றுள்ளது. பல தொலைக்காட்சிகளில் கார்ட்டூன்களாக வெளியாகியுள்ளது. ‘உலகச் சிறார் இலக்கியத்தில் மிக முக்கியமான நூல்களுள் ஒன்று’ என்ற சிறப்பைப் பெற்றது. கதையோடு கம்பளிப்புழு ஒவ்வொரு உணவையும் துளைத்துக் கொண்டு போவது போன்ற புத்தக வடிவமைப்பு கூடுதலாகக் குழந்தைகளை ஈர்ப்பது இன்னொரு சிறப்பு. 

ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனின் வெப்பத்தால் முட்டையிலிருந்து பொரிந்து வருகிறது ஒரு குட்டிக் கம்பளிப்புழு. திங்கள் அன்று ஒரு ஆப்பிள் தின்கிறது. ஆனாலும் பசி அடங்கவில்லை. செவ்வாய்க் கிழமை இரண்டு பேரிக்காய் தின்கிறது. அப்போதும் பசியடங்கவில்லை. புதன் கிழமை மூன்று ப்ளம் பழங்களைத் தின்கிறது. அப்போதும் பசி அடங்கவில்லை. வியாழக்கிழமை நான்கு ஸ்ட்ராபெர்ரிப் பழங்களையும் வெள்ளிக்கிழமை ஐந்து ஆரஞ்சுப் பழங்களையும் தின்கிறது. ஆனாலும் அடங்காப் பசியுடனேயே இருக்கிறது. 

இணையப் படம் 2

சனிக்கிழமையன்று அது சாக்லேட் கேக், ஒரு ஐஸ்க்ரீம், ஊறுகாய், பாலாடைக்கட்டி, சலாமி (பன்றிக்கறியால் ஆனது), லாலிபாப், செர்ரிப்பழக் கேக், சாஸேஜ் (இறைச்சி), கப் கேக் எல்லாவற்றையும் தின்றுவிட்டு கடைசியாக ஒரு துண்டு தர்ப்பூசணியும் தின்கிறது. அன்று இரவு கடுமையான வயிற்றுவலி வந்து துடிக்கிறது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஒரே ஒரு இலையை மட்டும் தின்கிறது. இப்போது அது குட்டிக் கம்பளிப்புழு இல்லை. குண்டுக் கம்பளிப்புழுவாக மாறியிருக்கிறது. அது தன்னைச் சுற்றி ஒரு கூட்டைப் பின்னி கூட்டுப்புழுவாக மாறுகிறது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதிலிருந்து வெளியேறி அழகிய வண்ணத்துப்பூச்சியாகப் பறக்கிறது. இதுதான் கதை. 

நத்துவும் மித்துவும் - கதைக் காட்சி

இந்தக் கதையை இன்ஸ்பிரேஷனாக வைத்துக்கொண்டும் கீரைகள், மூலிகைகள் இவற்றின் நன்மைகளைக் குழந்தைகளுக்குக் கதை மூலம் சொல்ல விரும்பியும் எழுதியதுதான் நத்துவும் மித்துவும் கதை. இதில் நத்து என்கிற நத்தையும் மித்து என்கிற கம்பளிப்புழுவும் ஒரு தோட்டத்து நண்பர்கள். முட்டையிலிருந்து பொரிந்துவரும் கம்பளிப்புழுவுக்கு எதைச் சாப்பிடுவது, எதைச் சாப்பிடக்கூடாது, எது எந்த ருசி, எது ஆபத்து, எங்கே, யாரிடம், எப்படி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்றெல்லாம் கற்றுத்தருகிறது நத்தை. மெதுவாக நகரும் காரணத்தால் தோட்டத்தின் மற்ற ஜீவராசிகளால் கேலி செய்யப்படும் நத்தை பிறகு எப்படி அவற்றின் ஆருயிர் நண்பனாக மாறுகிறது என்பதைச் சொல்லி கதையை முடித்திருக்கிறேன்.  

இணையப் படம் 3
என் குழந்தைகள் சிறு வயதில் Popeye show பார்த்த பிறகுதான் கீரை சாப்பிட ஆரம்பித்தார்கள். நாம் சொல்ல நினைப்பவற்றை கதைகள் மூலம் குழந்தைகளுக்குப் புரியவைப்பது எளிது என்பதை அறிந்திருந்ததால் இந்த நாவலை முயன்றேன். அதற்கு நல்ல பலன் தற்போது கிடைத்திருப்பது அறிந்து மகிழ்கிறேன்.

ஜகரண்டா மரத்தில் காலா பறவைகள்

தோட்டத்தின் புதுவரவுகள் என்று குறிப்பிட்டேன் அல்லவா? 2025 முதல்நாள் தோழிகளோடும் புதிய பூக்கன்றுகளோடும் சிறப்பாகத் தொடங்கியது. 

புதிய வரவாக நானும் இருக்கிறேன் என்று தலைகாட்டிப் போனார் பாம்பார் ஒருவர். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு சட்டையை மட்டும் கழற்றிவைத்துவிட்டுப் போனவர் இப்போது தானே என் கண்முன் வந்து தன்னிருப்பை உறுதி செய்துவிட்டுப் போனார். கொல்லைப்புறக் கண்ணாடி வழியாக தோட்டத்தை சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோது இவர் விருட்டென்று கடந்துபோனதைப் பார்த்தேன். பாம்பு போல் இருக்கிறதே, என்ன பாம்பாக இருக்கும் என்ற ஆர்வம் உந்த, கேமராவைத் தயார் செய்து கையில் எடுத்துக்கொண்டு கண்ணாடிக் கதவைத் திறந்து வெளியில் சென்று பார்த்தால் ஆளைக் காணவில்லை. உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் படம் எடுக்கும் ஆசை (அவர் படம் எடுக்காமல் இருக்கணுமே!) உந்த, போர்டிகோவில் நின்றபடி அவர் சென்ற திசையில் தேடினேன். இல்லை. வேறெங்கோ போய்விட்டார் போலும், என்று நினைத்து திரும்பி கதவை மூடப்போகும் வேளையில் போன வழியிலேயே அவர் திரும்பி வருகிறார். அடித்தது அதிர்ஷ்டம் என்று க்ளிக்கினேன். ஆனால் அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. படபடப்பு வேறு. அவரோ  விருட்டென்று செடிகளுக்குள் சென்று மறைந்துவிட்டார். 

வால் மட்டும்தான் பிடிபட்டது

கன்னங்கரேல் என்ற உடலைப் பார்த்தபோதே இது red-bellied black snake-ஆகத்தான் இருக்கவேண்டும் என்று கணித்தேன். படத்தை வைத்து இணையத்தில் தேடியபோது என் கணிப்பு உறுதியானது. ஆக, புழு, பூச்சிகள், சிலந்திகள், பறவைகள், தோட்டப்பல்லிகள், நீல நாக்கு அரணை, நத்தை, சுண்டெலி, பெருச்சாளி, பூனை இவற்றோடு தோட்டத்தின் வருகையாளராக இப்போது இவரும் இணைந்துவிட்டார். :)))

 *****

27 November 2024

ஆரம்பமே அமர்க்களம்

வசந்தகாலம் விடைபெறுவதற்குள்ளாகவே வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. நேற்று முன்தினம் 34°C வெப்பம். நேற்று 37°C. இன்று நண்பகல் 12 மணியளவில் சிட்னி விமான நிலையத்தில் உச்சபட்சமாக 38.2°C பதிவாகியுள்ளது. அந்நேரத்தில் ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல,  உலகத்திலேயே மிக அதிக வெப்பமான பகுதியாக சிட்னி இருந்துள்ளது. 


வெப்ப அலைகளிலிருந்து தப்பிக்க அனைவரும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசிடமிருந்து அறிவுறுத்தல். அதிகம் வெளியில் அலைய வேண்டாம் என்றும் வீடு, அலுவலகம், நூலகம், பேரங்காடி வளாகம் போன்ற மூடிய இடங்களுக்குள் பொழுதைக் கழிக்குமாறும், குளிர்ந்த நீர், மின்விசிறி, ஏசி போன்றவற்றின் உதவியால் உடல் வெப்பத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஏசி, மின்விசிறி போன்ற சாதனங்கள் அதிக அளவில் இயக்கப்படுவதால் இன்றைய தினம் பின்மதியம் மூன்று மணி முதல் இரவு எட்டு மணிவரை வாஷிங் மெஷின், டிஷ் வாஷர் போன்ற மற்ற மின்சாதனங்களை இயக்காதிருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


வெப்பம் ஒரு பக்கம் உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருக்க, புற ஊதாக் கதிர்வீச்சு இன்னொரு பக்கம் மிகத் தீவிரமாக உள்ளது. பொதுவாக புற ஊதாக் கதிர்வீச்சின்  அளவீடு  (1-2) என்பதுதான் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத குறைந்த அளவீடு. (3-5) மிதமானது, (6-7) என்பது அதிகம், (8-10) என்பது மிக அதிகம். 11-க்கு மேல் எனில் தீவிரம். 

இன்றைய புற ஊதாக் கதிர்வீச்சின் உச்ச அளவீடு என்ன தெரியுமா?  11.  நிறைய பேருக்கு புற ஊதா கதிர்வீச்சு பற்றிய சரியான புரிதல் இருப்பதில்லை. கண்ணுக்குத் தெரியும் சூரிய ஒளி போலவோ, உடலால் உணரப்படும்  வெப்பத்தைப் போலவோ புற ஊதா கதிர்வீச்சை நம்மால் உணர முடியாததுதான் காரணம். வானம் மேகமூட்டமாக இருந்தால் புற ஊதா கதிர்வீச்சும் அதன் தாக்கமும் இருக்காது அல்லது குறைவாக இருக்கும் என்பது பலரது நம்பிக்கை. அது தவறு. இதற்கும் அதற்கும் தொடர்பே கிடையாது. புற ஊதா கதிர்வீச்சை 'நம் கண்ணுக்குத் தெரியாத எதிரி' என்றே சொல்லலாம். அதுவும் ஆஸ்திரேலியாவில் அதன் பாதிப்பு மிக மிக அதிகம்.  அதனால்தான் வெயிலில் செல்ல நேரும்போது சன்ஸ்கிரீன் கிரீமும், தொப்பியும், குளிர்கண்ணாடியும், கை கால்களை மறைக்கும் வகையிலான ஆடைகளும் அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி கொளுத்தும்  வெப்பத்திலிருந்து நம்மால் ஓரளவு தப்பித்துவிட இயலும். ஆனால் இந்தப் பறவைகளும் விலங்குகளும் என்ன செய்யும்? கண் முன்னால் அவை படும் பாடு சொல்லி மாளாது. தோட்டத்தில் வழக்கம் போல காலையும் மாலையும் தண்ணீர் வைக்கிறேன். மைனாக்களும் நாய்சி மைனர்களும், மேக்பைகளும் லாரிகீட்களும் மாறி மாறி வந்து குடித்தும் குளித்தும் செல்கின்றன. ஆவென்று அலகைத் திறந்துவைத்துக்கொண்டு செடிகளின் நிழலில் அவை ஆங்காங்கே இளைப்பாறும் காட்சியைப் பார்த்தாலே பரிதாபமாக உள்ளது. 

நாய்சி மைனர் பறவைகள்

ஆஸ்திரேலிய மேக்பை 

லாரிகீட் பறவைக்குஞ்சு

நாய்சி மைனர் குடும்பம்

கசாப்புகாரப் பறவையின் இளம்குஞ்சு


லாரிகீட்களுக்கும் ஆஸ்திரேலிய மேக்பைக்கும் வாக்குவாதம்

நீர்த்தொட்டியை விட்டுத்தர மனமில்லாத லாரிகீட் இணை

மைனாக் குளியல்

நாய்சி மைனர் குஞ்சுகள்

லாரிகீட் குஞ்சும் நாய்சி மைனர் குஞ்சும் சமரசமாய்

அப்பாடா... ஒரு வழியாக தண்ணீர்த்தொட்டி கிடைத்துவிட்டது

பயந்தபடி சற்று இளைப்பாறல்


நாய்சி மைனர் வந்தால் வேறு யாருக்கும் இடமில்லை

தண்ணீர்த்தொட்டி அவருக்கே சொந்தம் என்பதுபோல்

ஒரே கும்மாளம்தான்.

தண்ணீர் குடிக்கும் ஆஸ்திரேலிய மேக்பை 

தோட்டத்துத் தண்ணீர்த்தொட்டியைத் தேடி பறவைகள் மட்டுமல்ல, குளவிகளும் தேனீக்களும் கூட வருகின்றன. அதைப் பற்றி முன்பே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன். என்ன வெயில் அடித்தாலும் கவலைப்படாமல் தண்ணீர்த்தொட்டியை வட்டமிடும் குளவிகளைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. கூடு எங்கே உருவாகிக் கொண்டிருக்கிறதோ என்று கலக்கமாகவும் உள்ளது. 

ஆஸ்திரேலிய அரக்குக் குளவி

அழகு நிழல் பிம்பம்


கருப்பு நிற மண் குளவி


ஐரோப்பிய அரக்குக் குளவி

மஞ்சள் ஆன்ட்டெனா கருப்புக் குளவி
 

கருப்பு நிற மண் குளவி

நீரில் பிரதிபலிக்கும் நிழலும் அழகு

ஈரமான மண்ணிலிருந்து நீர் உறிஞ்சும் தேனீ

ஐரோப்பியத் தேனீ

'அனலில் விழுந்த புழுவாக' என்றொரு சொற்பதம் கேள்விப்பட்டிருக்கிறேன். அரிசி களைந்த தண்ணீரை ஊற்றவோ, கறிவேப்பிலை பறிக்கவோ அரை நிமிடம் தோட்டத்துப் பக்கம் சென்றால் போதும், அதை அனுபவபூர்வமாக உணர்ந்துகொள்ளலாம். அரை நிமிடத்துக்கே இப்படி என்றால் நாள் முழுவதும் வெயிலில் நிற்கும் செடிகொடிகளின்  நிலையை என்னவென்று சொல்வது? இரண்டு வேளையும் தண்ணீர் ஊற்றியும் பயனில்லை. இலைகள் வாடி, துளிர்கள் கருகி,  பூக்கள் உதிர்ந்து காய்கள் வெம்பி என தோட்டமே துவண்டுபோய்க் கிடக்கிறது. தோட்டத்துப் பிரதாபம் என்று மாய்ந்து மாய்ந்து எழுதியது போக, இன்று தோட்டத்துப் பரிதாபம் என்று எழுதும் நிலை. 

வெயிலைத் தாங்கிநிற்கும் பேப்பர் டெய்சி பூக்கள்

கோடையின் ஆரம்பமே இப்படி அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது. இன்னும் மூன்று மாதங்கள் எப்படிப் போகும் என்று தெரியவில்லை. 

மிகப்பெரிய ஆறுதலாக நாளை இரவு முதல் ஒரு வாரத்துக்கு மழை என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. வெப்பநிலையும் ஓரளவு குறைவாக இருக்கும் என்று தெரிகிறது.  ஆனால் அதற்கடுத்த வாரங்களில் கோடைக்காலம் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். கடந்த வருடங்களில் நல்ல மழை பெய்து யூகலிப்டஸ் காடுகள் செழித்து வளமாக இருப்பதால் பல இடங்களில் காட்டுத்தீ உண்டாவதற்கான வாய்ப்பும் உள்ளது. அப்படி உண்டானால் பாதிப்பு கடுமையாக இருக்கும்.