22 August 2024

அசத்தும் அழகு ஆர்க்கிட் மலர்கள் -2 (பூக்கள் அறிவோம் 115-120)

1. மோத் ஆர்க்கிட் பூக்கள்

ஆர்க்கிட் குடும்பத்தில் நூற்றுக்கணக்கான பேரினங்களும் ஆயிரக்கணக்கான சிற்றினங்களும் உள்ளன என்று ஏற்கனவே பார்த்தோம். அவை ஒவ்வொன்றுக்குமான பராமரிப்பு அம்சங்கள் அவை வாழும் நிலப்பரப்பு, ஒட்டி வாழும் மரம் அல்லது பாறை, தட்பவெப்ப நிலை போன்றவற்றைப் பொறுத்து மாறுபடுகின்றன. மரத்தில் ஒட்டி வாழும் என்றவுடன் ஒட்டுண்ணியாக வாழ்கிறது என எண்ணிவிடலாகாது. இவை மேலொட்டிகள். அதாவது மரத்தைப் பற்றிக்கொண்டு வளருமே தவிர, மரத்திலிருந்து சத்துக்களை உறிஞ்சுவது கிடையாது. காற்று, மழை இவற்றிலிருந்து தங்களுக்குத் தேவையான சத்துக்களைப் பெற்றுக்கொண்டு வளரக்கூடியவை. ஒரு பிடிப்புக்காக மட்டுமே ஆர்க்கிட் தாவரங்களின் வேர்கள் மரங்களைப் பற்றிக்கொண்டு வளர்கின்றன. சில வகை ஆர்க்கிட் செடிகள் பாறைகளைப் பற்றிக்கொண்டு வளர்கின்றன. மரப்பட்டைகளுக்குள்ளும் பாறை இடுக்கிலும் தேங்கியிருக்கும் மழை நீரையும் மரப்பட்டைகளின் மீது வளரும் பூஞ்சைகளிலிருந்தும் சத்துக்களைப் பெறுவதும் உண்டு. 

ஆர்க்கிட் செடிகள் அதிகப்படியான  நீரையும் சத்துக்களையும் pseudobulb என்ற சேகர உறுப்பில் சேமித்துவைத்துக் கொள்கின்றன. பிறகு தேவைப்படும் காலத்தில் தங்கள் சேகரிப்பிலிருந்து செலவழித்துக்கொள்கின்றன. தாங்கள் சார்ந்து வாழும் மரத்துக்கு எந்த விதத்திலும் தொந்தரவு கொடுக்காமல் தங்களுக்கு வேண்டிய சத்துக்களை தாங்களே சேகரித்துச் செலவழிக்கும் அளவுக்கு எவ்வளவு தற்சார்புடையவையாக உள்ளன இந்த ஆர்க்கிட் தாவரங்கள்? 


115. கைட் ஆர்க்கிட்

2. கைட் ஆர்க்கிட் (1)

ஆர்க்கிட் பூக்களின் வழக்கமான வடிவத்தை விடவும் வித்தியாசமான வடிவத்தைக் கொண்டவை இந்த கைட் ஆர்க்கிட் பூக்கள். வாலோடு பறக்கும் காற்றாடியைப் போன்று காட்சியளிப்பதால் ‘பட்டம் ஆர்க்கிட்’ என்ற பொருளில் கைட் ஆர்க்கிட் எனப்பெயர் சூட்டப்பட்டுள்ளன. மூன்று புறவிதழ்களுள் ஒன்று மேல் பகுதியிலும் மற்ற இரண்டும் கீழ்ப்பகுதியிலுமாகக் காணப்படும். ஒவ்வொரு புறவிதழின் நுனியிலும் வால் போன்ற நீட்சி காணப்படும். இவை தென்னமெரிக்காவின் ஆண்டியன் மலைத்தொடரைத் தாயகமாகக் கொண்டவை.

2. கைட் ஆர்க்கிட் செடி
 
3. கைட் ஆர்க்கிட் close-up

கைட் ஆர்க்கிட் பராமரிப்பு என்பது மிகவும் கூடுதலான சிரத்தையும் அர்ப்பணிப்பும் தேவைப்படும் ஒன்றாகும். இவற்றுக்கு 60% முதல் 80% வரையிலான ஈரப்பதமும் குளிர்ச்சூழலும் எப்போதும் தேவை. அதே சமயம் எப்போதுமே ஈரப்பதத்துடன் இருப்பதால் பூஞ்சை மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களின் தாக்கம் வெகு எளிதில் ஏற்பட்டுவிட வாய்ப்புள்ளது. அவற்றிலிருந்து பாதுகாக்க நல்ல காற்றோட்டமும் அவசியம். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேர சூரிய ஒளி தேவை. ஆனால் நேரடி சூரிய ஒளியாக இருத்தல் கூடாது. அதிக வெப்பம், அதிக வெளிச்சம், நேரடி சூரிய ஒளி, குறைந்த ஈரப்பதம் போன்றவை இவற்றின் வளர்ச்சியைப் பாதிக்கும் அம்சங்களாகும். தண்ணீரும் கூட தாது உப்புகள் அற்ற நன்னீராக இருத்தல் அவசியம். 

4. கைட் ஆர்க்கிட் பூ

Masdevallias பேரினத்தைச் சேர்ந்த இவற்றுள் சுமார் 350 சிற்றினங்கள் உள்ளன. இவை வெள்ளை, மஞ்சள், ஊதா, சிவப்பு, ஆரஞ்சு, அரக்கு, பழுப்பு, இளஞ்சிவப்பு, பச்சை, நீலம் என அனைத்து வண்ணங்களிலும், கோடுகள் அல்லது புள்ளிகள் அல்லது திட்டுகள் போன்றவற்றுடனோ அல்லது எதுவும் இல்லாமலோ காணப்படுகின்றன. 

116. மோத் ஆர்க்கிட்

5. மோத் ஆர்க்கிட் (1)

6. மோத் ஆர்க்கிட் (2)

இந்தியா, சைனா, தைவான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியத் தீவுகளைத் தாயகமாகக் கொண்டவை மோத் ஆர்க்கிட் செடிகள். எதனால் இந்தப் பெயர்? உற்றுப் பார்த்தால் உள்ளே ஒரு அந்துப்பூச்சி பறப்பதைப் போன்று இருப்பதால் இப்படியொரு காரணப்பெயர். இதன் பேரினப் பெயரான Phalaenopsis  என்பதற்கு லத்தீன் மொழியில் ‘அந்துப்பூச்சியைப் போன்றது’ என்று பொருள்.

7. மோத் ஆர்க்கிட் (3)

8. மோத் ஆர்க்கிட் (4)

9. மோத் ஆர்க்கிட் (5)

கொத்து கொத்தாகப் பூக்கும்  பூக்கள் இரண்டு முதல் மூன்று மாதம் வரை செடியில் வாடாமல் இருக்கும். மோத் ஆர்க்கிட் செடிகள் மேலொட்டியாக வளர்வதற்கு  மரங்கள் அவசியம்.   

10. மோத் ஆர்க்கிட் (6)

ஆனால் கடைகளில் மோத் ஆர்க்கிட் செடிகள்  எப்படி விற்பனை செய்யப்படுகின்றன?  அவை மரத்துக்குப் பதிலாக மரச்செதில்கள் அல்லது சதுப்புப்பாசியுள்ள தொட்டியில் எந்தப் பிடிமானமும் இன்றி வளர்க்கப்பட்டிருக்கும்.

117. கேண்டில்ஸ்டிக் ஆர்க்கிட்

11. கேண்டில்ஸ்டிக் ஆர்க்கிட்

Arpophyllum  பேரினத்தைச் சேர்ந்த இந்த வகை ஆர்க்கிட் பூக்கள் நீளமான குச்சியில் பூக்களைச் சொருகி வைத்தாற்போல சுமார் 40 செ.மீ. உயரத்துக்கு வரிசையாகப் பூத்திருக்கும். மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் போல தோற்றமளிப்பதால் கேண்டில்ஸ்டிக் ஆர்க்கிட் என்ற பெயரும் ஹயாசிந்த் மலர்க்கொத்து போல இருப்பதால் ஹயாசிந்த் ஆர்க்கிட் என்ற பெயரும் உண்டு. 

12. கேண்டில்ஸ்டிக் ஆர்க்கிட் செடி

Arpophyllum என்னும் பேரினப் பெயருக்கு கிரேக்க மொழியில் 'கத்தி போன்ற இலைகளைக் கொண்டது' என்று பொருள். இப்பேரினத்தில் ஐந்து சிற்றினங்கள் உள்ளன. தென்னமெரிக்காவையும் மேற்கத்தியத் தீவுகளையும் தாயகமாகக் கொண்டவை.   

118. நோபிள் ராக் ஆர்க்கிட் 

13. நோபிள் ராக் ஆர்க்கிட்

Dendrobium பேரினத்தைச் சேர்ந்த இந்த ஆர்க்கிட் நோபிள் ராக் ஆர்க்கிட் அல்லது நோபிள் டென்ட்ரோபியம் எனப்படுகிறது. இமயமலைப் பகுதியைத் தாயகமாகக் கொண்ட இந்த ஆர்க்கிட் மலர் சிக்கிம் மாநிலத்தின் மாநில மலர் என்ற சிறப்புக்குரியது. 

சீனப் பாரம்பரிய மருத்துவத்தின் அடிப்படையான ஐம்பது மூலிகைகளுள் இந்த நோபிள் டென்ட்ரோபியம் ஆர்க்கிட் மலர்களும் ஒன்று.

119. பைன் கூம்பு போன்ற ஆர்க்கிட் 

14. பைன் கூம்பு போன்ற ஆர்க்கிட்

15. பைன் கூம்பு போன்ற ஆர்க்கிட் செடி

பைன் கூம்பைப் போல இந்த ஆர்க்கிட் பூங்கொத்து இருப்பதால் இதற்கு Pine-cone like raceme dendrobium என்ற நீளமான பெயர். இதன் பெயரை வைத்தே இதுவும் Dendrobium பேரினத்தைச் சேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளலாம். 

16. வெள்ளை மஞ்சள் பூக்கள்

வெள்ளை நிறத்தில் வெளி இதழ்களும் மத்தியில் மஞ்சள் வண்ணமும் கொண்ட இந்த வகை ஆர்க்கிட் பூக்கள் நறுமணம் மிகுந்தவை. இமயமலைப் பிரதேசத்தை ஒட்டிய இந்திய, சீன, பூட்டான் பகுதிகளிலும் இந்தோசீன மலைத்தொடரை ஒட்டிய பகுதிகளிலும் இயல்பாக வளரக்கூடியவை. 

120. டான்சிங் லேடி ஆர்க்கிட்

17. ஆரஞ்சு நிற டான்சிங் லேடி ஆர்க்கிட் 

18. மஞ்சள் நிற டான்சிங் லேடி ஆர்க்கிட்

பார்ப்பதற்கு கவுன் அணிந்த பெண்கள் நடனமாடுவதைப் போன்று காட்சியளிப்பதால் இதற்கு ‘டான்சிங் லேடி ஆர்க்கிட்’ என்ற செல்லப்பெயர் இடப்பட்டுள்ளது. Oncidium பேரினத்தில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன.  பெரும்பாலும் மரங்களைச் சார்ந்து வாழ்பவை. சில வகை ஆன்சிடியம் பூந்தண்டுகள் மூன்று முதல் மூன்றரை மீட்டர் நீளம் இருக்கும். சில வகை 15 செ.மீ. அளவு மட்டுமே இருக்கும்.


19. டான்சிங் லேடி ஆர்க்கிட் பூக்கள்

பூக்கள் மஞ்சள் முதல் பழுப்பு வரையிலான நிற பேதங்களுடன் காணப்படும். பூங்கொத்து போல ஒரே கிளையில் எக்கச்சக்கமாகப் பூப்பதால் ‘ஸ்ப்ரே ஆர்க்கிட்’ என்ற இன்னொரு செல்லப்பெயரும் இவற்றுக்கு உண்டு. 

****

வேறு சில வித்தியாசமான ஆர்க்கிட் பூக்களைப் பற்றி அடுத்தப் பதிவில் பார்க்கலாம். 

20. லேலியா ஆர்க்கிட்

(தொடரும்)

4 comments:

  1. அழகிய ஆர்க்கிட் மலர்கள். மலர்கள் குறித்த தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன.

    மணிப்பூர் சென்றிருந்தபோது இது போன்ற ஆர்க்கிட் மலர்களுக்காகவே இருக்கும் ஒரு பூங்கா சென்றிருந்தோம். நாங்கள் சென்றபோது அத்தனை பூக்கள் அங்கே இல்லை. இருந்தவரைக்கும் பார்த்து ரசித்தோம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட். ஆர்க்கிட் மலர்ப்பூங்காவுக்கு நீங்கள் சென்றிருந்தபோது நிறைய பூக்கள் இல்லை என்பது வருத்தமே. சரியான பூக்கும் பருவம் எது என்று பார்த்துப்போக வேண்டும்போலும். நிறைய ஆர்க்கிட் பூ வகை இமயமலை அடிவாரத்தைத்தான் தாயகமாகக் கொண்டுள்ளனவாம். அடுத்த முறை வாய்ப்பு அமைந்தால் அவசியம் பார்த்துவிடுங்கள்.

      Delete
  2. அழகு, எத்தனை வகை உள்ளன! படங்களுக்கும் வியப்பூட்டும் தகவல்களுக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.