11 November 2015

சந்திரமதி (1)


ஆஸ்திரேலிய வானொலியில் நான் தொகுத்து வழங்கும் காற்றினிலே வரும் கீதம் நிகழ்ச்சியில் அரிச்சந்திரபுராணம் விவாக காண்டத்திலிருந்து சந்திரமதி குறித்தான சில வர்ணனைப் பாடல்களை எடுத்துத் தொகுத்து பொருத்தமானத் திரைப்பாடல்களோடு ஒரு தொகுப்பை வழங்கினேன். நான் தொகுத்தளித்த அப்பாடல்களை இங்கு உங்களுடனும் பகிரவிரும்பிப் பதிகிறேன்.



உண்மையை மட்டுமே பேசும் ஒருவனுக்கு ஏற்படும் பெருந்துயரையும் எவ்வளவு சோதனைகள் வேதனைகள் உண்டானாலும் இறுதியில் வாய்மையே வெல்லும் என்பதற்கேற்ப அவனுடைய சோதனைக்காலம் முடிந்து ஆனந்தப்பெருவாழ்வு பெற்றதையும் கதையாகச் சொல்வதுதான் அரிச்சந்திரபுராணம்.. அரிச்சந்திர மகாராஜாவைக் காணும் பொருட்டு தீர்த்தயாத்திரையில் உள்ள முனிவர் பெருமக்கள் அவன் நாட்டுக்கு வருகின்றனர். அரிச்சந்திரன் அவர்களை வரவேற்று உபசரித்து அளவளாவிக் கொண்டிருக்கிறான். முனிவர் பெருமக்கள் எந்தெந்த தேசம் போனார்கள்என்னென்ன புண்ணியதரிசனம் பெற்றார்கள் என்ன புதுமைகள் கண்டார்கள் என்றெல்லாம் விசாரிக்க, அதற்கெனவே காத்திருந்தது போல முனிவர்கள் சொல்லத் தொடங்குகிறார்கள்.

அங்கண் மாநிலத்து அரிய கன்னோசி நாட்டகத்துப்
பொங்கு கண்டகி என்பதோர் புண்ணிய தீர்த்தம்
அங்கு யாம் புகுந் தாடி நின் அருள் முகங் காண
இங்கு வந்தனம் இன்னமும் கேட்டி என் றிசைப்பார்.
அந்த நாட்டினில் கன்னமா புரி நகராள்வோன்
சந்தி ரன் வழிச் சந்திர தயன் தவம் புரிந்து
கந்த வார்சடைக் கடவுள்தன் வரத்தினால் பயந்த
தந்த மாமுலைத் தையல் சந்திரவதி என்பாள்.


நாங்கள் அங்கண் மாநிலத்து கன்னோசி நாட்டு பொங்கு கண்டகி என்னும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடியபிறகு நேராக உன்னைக்காண இங்கு வந்திருக்கிறோம். அந்த நாட்டை ஆளும் சந்திரதயன் என்னும் சந்திரகுல அரசனுக்கு சிவபெருமானின் வரத்தால் பிறந்த, யானைத்தந்தங்களைப் போன்ற மதர்த்த கொங்கைகளைக் கொண்ட சந்திரமதி என்னும் மகள் இருக்கிறாள் என்கின்றனர். அவளை அரிச்சந்திரன் மணமுடிக்கும் பொருட்டு அவளைப்பற்றியும் அவளுக்கு நடக்கவிருக்கும் சுயம்வரம் பற்றியும் முனிவர் பெருமக்கள் அரிச்சந்திரனிடம் எடுத்துரைக்கிறார்கள். ஆஹா.. ஆரம்ப அறிமுகமே இப்படியென்றால் போகப் போக வர்ணனைகள் எப்படியிருக்குமோ என்ற ஆவல் எழுகிறதல்லவா


மண்ம டந்தையர் தம்முளும் வாசவன் உறையும்
விண்ம டந்தையர் தம்முளும் நிகரிலா விறல் வேல்
கண்மடந்தை தன் கருங்குழல் அருத்ததிக் கற்பிற்கு
எண்மடங்கு கற் புடையள் இந்திரையினும் எழிலாள்.

சந்திரமதி எப்படிப்பட்டவளாம்? மண்ணுலகப் பெண்கள் மட்டுமல்ல, இறைவன் உறைந்திருக்கும் விண்ணுலகத்துப் பெண்களுள்ளும் யாருக்கும் நிகரில்லாத அளவுக்கு அழகிய வேல் போன்ற கண்களை உடையவள், குளிர்ந்த கருங்கூந்தலை உடையவளும் கற்புக்கு இலக்கணமானவளுமாகிய அந்த அருந்ததியைக் காட்டிலும் எட்டு மடங்கு கற்புடையவள்.. திருமகளை விடவும் அழகு வாய்ந்தவள் என்கிறார்கள் முனிவர்பெருமக்கள். முனிவர்களே வர்ணிக்கும் அளவுக்கு அழகு என்றால் சந்திரமதியின் அழகு எப்படிப்பட்டதென்று நம்மால் யூகிக்க முடிகிறதல்லவா?





முகிலை வென்று அறலைக் கடிந்து சைவலத்தை
முனிந்து பொற் கடுக்கையை முடுக்கி
அகில் நறும்புகையும் தகரமும் புழுகும்
அளைஇப் பனி நீரிலே நனைந்து
பகலவற்கு உடைந்து வகையினால் வெள்கிப்
பலமலர்த் தார் அணிந் தவனோடு
இகல்செயக் கருதி இருள் திரண் டு ஆலித்
தெழுந்தன செழுந்தடங் குழலாள்.

அடேயப்பாகூந்தல் வர்ணனை ஒன்றே முற்றுப்புள்ளியில்லாமல் தொடர்ந்துகொண்டு போகிறதேசந்திரமதியின் கூந்தல் அழகு எப்படிப்பட்டது தெரியுமா? நிறத்தால் கருமேகத்தை வென்றதாம்.. சீராக அமைந்திருப்பதில் கருமணலையும் பாசியையும் துரத்தியதாம்.. பளபளக்கும் அழகினில்சடைசடையாய்த் தொங்கும் கருவண்ணக் கொன்றைக்காயை விஞ்சியதாம். இதெல்லாம் எப்படி வாய்த்ததாம்? நறுமண அகிலின் புகையும், மயிர்ச்சாந்தும், புனுகும் கலந்து பூசப்பட்டு பனிநீரில் நனையப்பெற்றதால் உண்டான வசீகரமாம் அது. அவள் கூந்தல் அழகைப் பார்ப்பதற்கு எப்படியிருக்கிறது தெரியுமா?… சூரியனிடம் தோற்றோடிய இருளானது, வெட்கி, பற்பல பூமாலைகளைச் சூடிக்கொண்டு அந்த சூரியனோடு போர் புரிய எண்ணி ஒன்றுகூடித் திரண்டு ஆரவாரித்து எழுந்தது போன்று காட்சியளிக்குமாம் அவளுடைய அழகிய அடர்த்தியான நீளமான கூந்தல்எந்தப் பெண்ணுக்கும் மெல்லிய பொறாமை நிச்சயமாய் எட்டிப்பார்க்குமன்றோ?




(குறிப்பு - அரிச்சந்திரனின் மனைவி பெயர் சந்திரவதி என்றாலும் நாம் சந்திரமதி என்றே குறிப்பிட்டுப் பழகியிருப்பதால் அப்பெயரையே இப்பதிவிலும் தொடர்ந்துவரும் பதிவுகளிலும் பயன்படுத்தியுள்ளேன்.. குழப்பம் வேண்டாம். சந்திரவதி என்பதே சரி.)

(தொடரும்)

(படங்கள் உதவி: இணையம்)

37 comments:

  1. திரைப்பாடல்களையும் எதிர்ப்பார்க்கிறேன் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன். பாடல் வரிகளை இணைப்பதா? பாடல் ஒலிப்பதிவை இணைப்பதா? யூ ட்யூப் சுட்டியைக் கொடுப்பதா? என்ற குழப்பத்தில் எதையுமே இணைக்காமல் விட்டுவிட்டேன். ஒலியாக இணைக்க முயற்சி செய்கிறேன்.

      Delete
  2. தங்கள் வலைத்தளத்தில், மீண்டும் ஓர் தமிழ் இலக்கியத் தொடர். மகாத்மா காந்தியின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய அரிச்சந்திர புராணத்தை மீண்டும் படிக்கும் வாய்ப்பு. – வாழ்த்துக்கள்!

    அரிச்சந்திரனின் மனைவி சந்திரவதி என்று சொல்லப்பட்டாலும், சந்திரமதி என்றே நாட்டார் பார்வையில் ( உதாரணம்: சந்திரமதி புலம்பல் – தெருக் கூத்து) அழைக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.. இத்தொடர் பதிவில் சந்திரமதி குறித்த வர்ணனைகள் மட்டுமே இடம்பெறுகின்றன. வானொலியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி என்பதால் திரையில் இடம்பெற்ற வர்ணனைப் பாடல்களோடு சந்திரமதி குறித்த வர்ணனைப் பாடல்களைத் தொகுத்து வழங்கினேன்.

      Delete
  3. சந்திரமதி சொல் பயன்பாடு குறித்து தற்போது தங்கள் பதிவு மூலமாக அறிந்தேன். தொடரகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.. சந்திரன் என்றாலும் மதி என்றாலும் ஒரே பொருள் எனும்போது ஏன் சந்திரமதி என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று முன்பு யோசித்ததுண்டு... அரிச்சந்திரபுராணம் வாசிக்கும்போது என் ஐயம் தீர்ந்தது.

      Delete
  4. உண்மையிலேயே நான் இந்த நாடகத்தைப்பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்ள இதுஒரு வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறேன்..சந்திரமதியின் கூந்தலுக்கு அவ்வளவு வர்ணனையா? இது மேலும் படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது.. நானும் தொடர்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தங்கள் எதிர்பார்ப்பு பொய்த்துப்போகுமே என்று வருந்துகிறேன். ஏனெனில் நான் இங்கு சந்திரமதி குறித்த வர்ணனைகள் அடங்கிய பாடல்களை மட்டுமே பகிரவுள்ளேன். முழுக்கதையும் பகிர இப்போது வசதிப்படவில்லை. பின்னொரு சமயம் முடிந்தால் பகிர்வேன்.

      Delete
  5. அருமை, சகோதரி! திரைப்பாடல்களோடு சேர்த்துத் தர வேண்டும் என்று தாங்கள் நினைத்து செயல்படுத்தியது தான் பிரமாதம்! கலையுள்ளம் கற்பனைகளின் காடு! அந்த உள்ளம் படைத்தோரின் செயல்களில் விதவிதமான நேர்த்தியான கற்பனைகள் பூத்துக் குலுங்க கேட்பானேன்?

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜீவி சார். ஒருமணிநேர திரையிசை நிகழ்ச்சி அது.. முடிந்தவரை பயனுள்ள தகவல்களையோ.. இலக்கியப் பகிர்வுகளையோ இணைத்துதான் திரைப்பாடல்களைத் தொகுத்து வழங்குவது வழக்கம்.. பாமரருக்கும் இலக்கியம் போய்ச்சேர இது உதவும் அல்லவா?

      Delete
  6. ரபீந்திரநாத் தாகூரை, ரவீந்திரநாத் தாகூர் என்று அழைப்பதைப் போல. வங்காள உச்சரிப்பு 'பீ' தமிழில் 'வீ'' ஆவது போல. வதி, மதியாகியிருக்கிறது! அவ்வளவு தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்.. பெங்காலிகள் வசந்தியை பசந்தி என்று அழைப்பதைக் கேட்டிருக்கிறேன்.. கருத்துக்கு நன்றி ஜீவி சார்.

      Delete
  7. வர்ணனை வியக்க வைக்கிறது! அருமை! தொடர்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      Delete
  8. ஆகா ஒரு இலக்கியச் சோலைக்குள்
    புகுந்த சுகம்
    சொல்லிச் செல்லும் பாங்கு
    படங்களுடன் வெகு வெகு அருமை

    ஆர்வமுடன் தொடர்கிறோம்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தரும் தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

      Delete
  9. விளக்கவுரையுடன் கொடுத்தது எனக்கும் கை கொடுத்தது தொடர்கிறேன் தொடருக்கு.... வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. விளக்கம் புரியாமலேயே பல நல்ல சுவையான இலக்கியங்களை நாம் அறிந்துகொள்ள முடியாமலேயே போய்விடுகிறது. இப்பதிவில் உள்ள விளக்கம் உங்களுக்குப் பயனுள்ளதாய் இருந்ததில் மகிழ்ச்சி. நன்றி கில்லர்ஜி.

      Delete
  10. வணக்கம் சகோ !

    அசத்தலான ஆரம்பம் பாட்டும் பொருளும் பளபளக்குது
    திரையிசைப் பாடல்களை எதிர்பார்த்தேன் சகோ ஒ அது அடுத்த பதிவிலா
    விரைவாக வரட்டும் ஓகே வா !
    அத்தனையும் அருமை சகோ தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
    தமிழ்மணம் 4

    ReplyDelete
    Replies
    1. திரையிசைப் பாடல்களை ஒலிவடிவில் கொடுக்க முயற்சி செய்கிறேன்.. முடியவில்லை எனில் காணொளியாய் இணைக்கிறேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சீராளன்.

      Delete
  11. ஆரம்பரேஅருமை
    தொடருங்கள் சகோதரியாரே
    நன்றி
    தம+1

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தரும் வரிகளுக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  12. அழகான வர்ணனை. அர்த்தத்துடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. பாடல்களில் ஒலி வடிவத்தினையும் கொடுக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட். பாடல்களை இணைக்க முயற்சி செய்கிறேன்.

      Delete
  13. அருமையான பகிர்வு, சந்திரவதி என்ற பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். தகவலுக்கு நன்றி!
    தொடர்கிறேன்!
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில். சந்திரவதி என்ற பெயரை நானும் அரிச்சந்திரபுராணம் வாசிக்கையில்தான் அறிந்தேன். தொடர்வதற்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி.

      Delete
  14. தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  15. ஓ சந்திரவதியா..புதிய தகவல்..நன்றிமா...கில்லர்ஜி சகோவின் கடவுளைக்கண்டேன் தொடரில் என் வலைத்தளத்தில் உங்களைப் பத்துபேரில் ஒருவராக இணைத்துள்ளேன் தொடரவும்.. காண்க http://velunatchiyar.blogspot.com/2015/11/2.html

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.. உங்கள் தளத்தில் பதிவை வாசித்தேன். அருமையான அவசியமான கேள்விகளால் கடவுளரையே பதிலளிக்க இயலாமல் ஓடச்செய்துவிட்டீர்களே.. பாராட்டுகள்.

      Delete
  16. அருமை...வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுவாதி.

      Delete
  17. வணக்கம்
    சகோதரி

    புத்தகத்தில் படிப்பதை விட தங்களின் வலைப்பூவில் வர்ணனையுடன் படிப்பது இலகுவில் விளங்கும்.. நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ரூபன்.

      Delete
  18. சந்திரமதியின் அழகோ, முனிவர்களின் பாடலோ ஈர்ப்பதைவிட உங்கள் எழுத்து என்னை அதிகம் ஈர்க்கிறது கீதமஞ்சரி. அசத்தல்! பாடல்களைக் கேட்க மீண்டும் வருவேன். (ஆமாம், எப்படி இவ்ளோ........ வேலைகள் செய்கிறீர்கள் என்று மலைப்பாக இருக்கிறது, எனக்கு டிப்ஸ் வேண்டும் ப்ளீஸ்! நிஜமாவே உங்களைக் கேட்கனும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன், சில நாட்களாய்! )

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. ரொம்பவுமே சந்தோஷமாக இருக்கிறது கிரேஸ்.. தமிழிலக்கியங்களை மிக அழகாகவும் எளிமையாகவும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அள்ளித்தருபவர் நீங்கள்.. நீங்களே பாராட்டும்போது மனம் மகிழ்வில் துள்ளுகிறது. என்ன டிப்ஸ் வேண்டும் உங்களுக்கு? கேளுங்கள் சொல்கிறேன்.. :))) அன்புக்கு நன்றிப்பா.

      Delete
  19. அழகு வர்ணனைப் பாடல்கள் . அர்த்தமும் அறிந்து கொள்கின்றோம். அதற்குப் பொருத்தமான பாடல்களும் அருமை...

    இது போன்று இலங்கை வானொலியில் முன்பு அது இயங்கி வந்த போது சில கதைகள்,இலக்கியங்களைத் திரைஇசையுடன் தொகுத்து வழங்கியதைக் கேட்டதுண்டு. நீங்கள் அழகான இலக்கியத்தோடு அதைத் தொகுத்து வழங்குவது சிறிப்பு எங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் நன்றி . தொடர்கின்றோம் சகோ....சந்த்ரிவதி - இப்போதுதான் கேள்விப்படுகின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஊக்கம் தரும் அழகான கருத்துரைக்கும் அன்பான நன்றி இருவருக்கும்... தொடர்ந்து வருவதற்கும் மிகுந்த நன்றி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.