12 March 2014

நாளை என் மகனும்.....





பலவண்ணங்களில் பட்டாம்பூச்சிகள்,
பார்த்திராத வடிவங்களில் பந்துகள்,
உச்சியிலொரு ஒழுங்கற்ற  சூரியன்,
நீரின்றித் துள்ளும் நீலநிறமீன்,
பக்கத்தில் பராக்குபார்த்தபடி
ஒற்றைக்கால் கொக்கு,
பாலு, பானுவென்று ஆங்கிலத்தில்
அரைகுறையாய் எழுதப்பட்ட பெயர்கள்,
எல்லாமும் உணர்த்தின,
இதற்குமுன் அங்கேயொரு குழந்தை….
 ஆணோ பெண்ணோ தெரியவில்லை….
வசித்திருக்கிறது என்பதை!

ஒழுங்கற்ற வட்டமுணர்த்தியது
ஒன்றரை வயதிருக்கலாமென்பதை!
ஓரடிமேலிருந்த ஆங்கில எழுத்துகள் சொல்லியது
அது பள்ளிக்குழந்தையுடையதென்பதை!
எட்டுப்போட்டு  வரையப்பட்ட பூனைக்கு
இருபக்கமும் வரையப்பட்ட வால்கள் மூலம் புரிந்தது
சண்டையிட்ட இரண்டுவாண்டுகளின்
கைவண்ணமென்பது!
சுவரின் ஒரு மூலையிலிருந்து மறுமூலை வரை
சீராய் இழுக்கப்பட்ட சிவப்பு கிரேயான் பார்த்தபோது
சின்னவயதில் அப்பாவிடம்
வாங்கிய அடி நினைவுக்கு வந்தது.

வீடு பிடித்தால் சொல்லுங்கள்,
வெள்ளையடித்துத் தயாராக்கிவிடுகிறேனென்ற
உரிமையாளரிடம்….
 இப்படியே தரமுடியுமா என்றேன்.
விநோதமாய்ப் பார்த்தவரிடம்
விளக்க நா எழவில்லை….
மனவளர்ச்சியற்ற மகனிடம்
மாற்றம் உண்டாக்கும் என்றே
எங்கள் சோர்ந்த மனதோரம்
சுடர்விடும் நம்பிக்கையை!

***************
(படம்: நன்றி இணையம்)

41 comments:

  1. கடைசிப் பாரா மனதை உலுக்கி விட்டது.

    ReplyDelete
  2. ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை அது
    உங்களைப் பெற்றிருக்கிறதே!

    சோலையாக்க முயற்சிக்கும் மனது
    சோரக் கூடாது என்றும்.
    நம்பிக்கையோடிருங்கள்
    நிச்சயம் மாற்றம் வரும்.

    என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
  3. முடிவில் கலங்க வைத்த வரிகள்...

    ReplyDelete
  4. Nice kavithai with a shocking end!!

    ReplyDelete
  5. கடைசி நான்கு வரிகள் மனதை கனக்கச் செய்து விட்டன. நம்பிக்கையோடு இருப்போம்.நிச்சயம் மாற்றம் வரும்.

    ReplyDelete
  6. அன்பின் கீதமஞ்சரி. சில நாட்களுக்கு முன் நிலாவைப்பற்றி எழுதி இருந்தீர்கள். இப்போது மனவளர்ச்சியற்ற மகன் என்கிறீர்கள். கற்பனை எது நிஜம் எது என்று புரியவில்லை. கற்பனை என்று எண்ணி, அசாதாரணமான கவிதைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. @பால கணேஷ்

    உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கணேஷ்.

    ReplyDelete
  8. @இமா

    ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைக்குத் தாயான ஒரு தோழியின் நிலையிலிருந்து எழுதிய கவிதை இது. உங்கள் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் உரியவர்களைச் சென்றடைய நானும் வாழ்த்துகிறேன். நன்றி இமா.

    ReplyDelete
  9. @திண்டுக்கல் தனபாலன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

    ReplyDelete
  10. @Mahi

    Thank you very much for your valuable comment, mahi.

    ReplyDelete
  11. @Tamizhmuhil Prakasam

    நம்பிக்கையோடு காத்திருக்கும் ஒரு தாயின் மனநிலையும் அதுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்முகில் பிரகாசம்.

    ReplyDelete
  12. @G.M Balasubramaniam

    தங்கள் பாராட்டுக்கு நன்றி ஐயா. தோழியின் நிலையிலிருந்து எழுதிய கவிதை இது. அவள் நிலையில் என்னை இருத்திப் பார்க்கும்போது மனம் தானாகவே தன்னிலையில் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டது.

    இந்தக் கவிதையை இரண்டு வருடங்களுக்கு முன் நிலாச்சாரல் இணைய தளத்தில் எழுதியிருந்தேன். கவிதையை வாசித்த பலரும் தங்கள் மனநிலையில் மாற்றம் வந்ததாக பின்னூட்டத்தில் சொன்னார்கள். இயல்பாயிருக்கும் தன் மகன் பள்ளியில் முதல் மதிப்பெண் பெறவில்லையே என்று கவலைப்பட்ட ஒரு தாய் இனி அதற்காக வருந்தப்போவதில்லை என்று சொல்லியிருந்தார்.

    ReplyDelete
  13. சுடர்விடும் நம்பிக்கை நினைவாய் மாறும்...
    அருமையான கவிதை ..

    ReplyDelete
  14. மனதைப் பிசைய வைத்த கவிதை. மிக அருமை.

    ReplyDelete
  15. மழலைகளின் உலகுக்கே கொண்டு செல்லும் வார்த்தைகள்! மனதை உலுக்கும் அந்த கடைசி வரிகள்! அற்புதமான ஓர் கவிதை!

    ReplyDelete
  16. உள்ளத்தை உருக்கும் உணர்வுள்ள வரிகள் ! காலம் மாறும் மாறும்
    போது எல்லாமும் மாறும் .நம்பிக்கை மட்டும் மாறாது இருப்பதே
    நன்று .த .ம 2

    ReplyDelete
  17. கடைசிவரிகள் கனக்க வைத்தன! அருமையான படைப்பு! அந்த குழந்தை விரைவில் நலமடையட்டும்! நன்றி!

    ReplyDelete
  18. படித்தபடியே வருகையில் கடைசிபத்தி
    கலங்கி விட்டது மனம்
    அருமை கீதாக்கா ! உங்கள் முதல்பத்திபோல
    ஒரு கவிதை என்னிடமும் இருக்கிறது.
    இனி அதை பதிவிட முடியாதே!!
    அதைவிட அழகா அக்கா சொல்லீடாங்களே!!

    ReplyDelete
  19. கடைசி நான்கு வரிகள் கலங்க வைப்பதாய் உள்ளன.

    //மனவளர்ச்சியற்ற மகனிடம் மாற்றம் உண்டாக்கும்//

    நிச்சயமாக உண்டாக்கும் ..... தங்கள் தோழியிடம் ஆறுதல் சொல்லுங்கள்.

    ReplyDelete
  20. அந்தத் தாயின் மனநிலையை
    அருமையாக கொண்டு வந்து வைத்திருக்கிறீர்கள்.

    கவிதை அருமை கீதமஞ்சரி அக்கா.

    ReplyDelete
  21. மிக அருமை.... ரசித்துப் படித்துக் கொண்டே வரும்போது மனதை உலுக்கிய கடைசி வரிகள்.....

    ReplyDelete
  22. தாயின் நம்பிக்கை மகனை மாற்றும்.
    நம்பிக்கை சுடர்விடும் கவிதை அருமை.

    ReplyDelete
  23. தோழியின் குழந்தை நலம்பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. மனம் அதிர வைத்துவிட்டீர்கள்
    அந்த இறுதி வரியில்

    ReplyDelete
  25. நெகிழ்ச்சி கீதா.

    ReplyDelete
  26. சுடர்விடும் நம்பிக்கை -தாயின் பிரார்த்தனையினால்
    நம்பிக்கை நனவாகட்டும்..!

    ReplyDelete
  27. @தேன்மதுரத்தமிழ் கிரேஸ்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரேஸ்.

    ReplyDelete
  28. @ஹுஸைனம்மா

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹூஸைனம்மா.

    ReplyDelete
  29. @கே. பி. ஜனா...

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

    ReplyDelete
  30. @அம்பாளடியாள் வலைத்தளம்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

    ReplyDelete
  31. @‘தளிர்’ சுரேஷ்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  32. @Mythily kasthuri rengan

    தயங்காமல் உங்கள் கவிதையைப் பதிவிடுங்கள் மைதிலி. ஒன்றுபோல் இருந்தாலும் நம் உள்ளத்தில் இருப்பதைத்தானே பகர்கிறோம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மைதிலி.

    ReplyDelete
  33. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் வருகைக்கும் ஆறுதலான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி கோபு சார்.

    ReplyDelete
  34. @அருணா செல்வம்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

    ReplyDelete
  35. @வெங்கட் நாகராஜ்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

    ReplyDelete
  36. @கோமதி அரசு

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி மேடம்.

    ReplyDelete
  37. @Muruganandan M.K.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டாக்டர்.

    ReplyDelete
  38. @ராமலக்ஷ்மி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  39. @இராஜராஜேஸ்வரி

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  40. நல்ல கவிதை கீதம்...

    குழந்தை பருவம் மீண்டும் வரதோ என்று ஏங்கும் நம்மில், குழந்தைகளாய் என்றும் இவர்கள்.... எத்தனை சமாதானக்கள் செய்தாலும், அவர்களின் எதிர்காலத்தை நினைக்கையில் கண்ணீரே மிஞ்சுகிறது...

    ReplyDelete
  41. @Benjamin V. Vins

    உண்மைதான். நித்தமும் அவர்களுடன் வாழ்பவர்களுக்குதான் வலி அதிகம். தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சியும் நன்றியும்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.