11 October 2013

இல்லுறை தெய்வங்களின் வீதியுலா




பரண்மேலிருக்கும் பெட்டிகளை
பத்திரமாய் இறக்கித்தந்து 
இனிதே நிறைப்பர் ஆடவர் பாத்திரம்.
எதிர்பார்ப்பெல்லாம் இதற்கு மாத்திரம். 

கையிலெடுக்கும் ஒவ்வொரு பொம்மைக்கும்
பழங்கதையும் பாரம்பரியப் பெருமையும்
வருடந்தோறும் வாய் ஓயாது
பேசித்தீர்ப்பது பேரிளம்பெண்டிர் வழக்கம்,
செவிசாய்ப்பது சிற்றிளம்பெண்டிர்க்குப் பழக்கம்.

அழகுணர்வும் அடுக்கும் கலையுணர்வும்,
பொறுப்பும், புத்தியும், புதுப்புது நேர்த்தியும்
வரவேற்பும், உபசரிப்பும், வழிபாட்டு முறைகளும்,
வயதுக்கு வருமுன்னே மனதுக்குள் பதியனிடும்
உற்சவத்தின் உற்சாகத் துவக்கம்.

சிற்றில் விளையாடும் சின்ன மனுஷிக்கெல்லாம்
பட்டாடை அணிவித்து பலவாறாய் அலங்கரித்து
முகைநறுமலர் கூட்டி சிகைதனில் அழகுற சூட்டி
மயக்குறும் வண்ணம் மையால் விழியெழுத,
நங்கையெனத் தனைக்கண்டு
நாணமும் நளினமும் மிகக்கொண்டு
மின்னெழில் பிம்பம் நோக்கி மிரளும் மான்விழிகள்!
பொன்னகை பூட்டுமுன்னே
புன்னகை பூட்டிக்கொள்ளும் பூஞ்சிற்றிதழ்கள்.

தினமொரு அலங்காரமாய் தெருவெங்கும்
விளையாடும் தெய்வங்கள் அவதாரமாய். 
பாட்டுக்கே ஈயப்படும் புட்டும் சுண்டலுமென
பாட்டிமார் சொல்லக்கேட்டு
பாடிப்பெற்றப் பதார்த்தப் பரிசில்களை 
பாவாடையில் பொட்டலங்கட்டி
வெற்றிக்களிப்போடு வீடுதிரும்புகின்றன
வீதியுலா சென்ற இல்லுறைதெய்வங்கள் யாவும்

 ************************************************************** 
படம் நன்றி: இணையம்

71 comments:

  1. வணக்கம்
    மின்னெழில் பிம்பம் நோக்கி மிரளும் மான்விழிகள்!
    பொன்னகை பூட்டுமுன்னே
    புன்னகை பூட்டிக்கொள்ளும் பூஞ்சிற்றிதழ்கள்

    கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. //கையிலெடுக்கும் ஒவ்வொரு பொம்மைக்கும்
    பழங்கதையும் பாரம்பரியப் பெருமையும்
    வருடந்தோறும் வாய் ஓயாது
    பேசித்தீர்ப்பது பேரிளம்பெண்டிர் வழக்கம்,
    செவிசாய்ப்பது சிற்றிளம்பெண்டிர்க்குப் பழக்கம்.//

    அழகான அனுபவங்களைச் சொல்லும் அற்புதமான வரிகள்.

    உண்மை தான் .... ஒவ்வொரு பொம்மைக்கும் ஒவ்வொரு சிறப்பும் வரலாறும் உண்டு தான்.

    >>>>>

    ReplyDelete
  3. //அழகுணர்வும் அடுக்கும் கலையுணர்வும்,
    பொறுப்பும், புத்தியும், புதுப்புது நேர்த்தியும்
    வரவேற்பும், உபசரிப்பும், வழிபாட்டு முறைகளும்,
    வயதுக்கு வருமுன்னே மனதுக்குள் பதியனிடும்
    உற்சவத்தின் உற்சாகத் துவக்கம்.//

    மிகுந்த அழகுணர்வோடு சொல்லியுள்ளீர்கள். வயதுக்கு வந்தபின் எல்லாவற்றையும் மனதில் அசைபோட்டு மகிழச்செய்யும், இந்த இனிய துவக்கம். ;)

    >>>>>

    ReplyDelete
  4. //நாணமும் நளினமும் மிகக்கொண்டு
    மின்னெழில் பிம்பம் நோக்கி மிரளும் மான்விழிகள்!
    பொன்னகை பூட்டுமுன்னே
    புன்னகை பூட்டிக்கொள்ளும் பூஞ்சிற்றிதழ்கள்.//

    அசத்தலான சொல்லாடல் ..... அற்புதமான வந்துள்ளது .... மகிழ்ச்சி. ;)

    >>>>>

    ReplyDelete
  5. //தினமொரு அலங்காரமாய் தெருவெங்கும்
    விளையாடும் தெய்வங்கள் அவதாரமாய்.
    பாட்டுக்கே ஈயப்படும் புட்டும் சுண்டலுமென
    பாட்டிமார் சொல்லக்கேட்டு
    பாடிப்பெற்றப் பதார்த்தப் பரிசில்களை
    பாவாடையில் பொட்டலங்கட்டி
    வெற்றிக்களிப்போடு வீடுதிரும்புகின்றன
    வீதியுலா சென்ற இல்லுறைதெய்வங்கள் யாவும். //

    வீதியுலா சென்று திரும்பும் இல்லுறை தெய்வங்கள் வாழ்க வாழ்கவே!

    மிகச்சிறப்பான படைப்பு. மிகவும் ரஸித்துப்படித்து மகிழ்ந்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. பொன்னகை பூட்டுமுன்னே
    புன்னகை பூட்டிக்கொள்ளும் பூஞ்சிற்றிதழ்கள்.

    ரசிக்கவைத்தன,,பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  7. // பாட்டுக்கே ஈயப்படும் புட்டும் சுண்டலுமென
    பாட்டிமார் சொல்லக்கேட்டு
    பாடிப்பெற்றப் பதார்த்தப் பரிசில்களை
    பாவாடையில் பொட்டலங்கட்டி
    வெற்றிக்களிப்போடு வீடுதிரும்புகின்றன
    வீதியுலா சென்ற இல்லுறைதெய்வங்கள் யாவும். //

    அந்தக் காலத்து கொலுவிற்குப் போன நினைவுகளை அருமையாகச் சொன்னீர்கள்! இந்த காலத்தில் பிளாஸ்டிக் பொட்டலங்களாய் தருகின்றனர்.




    ReplyDelete
  8. பாடிப்பெற்றப் பதார்த்தப் பரிசில்களை
    பாவாடையில் பொட்டலங்கட்டி
    வெற்றிக்களிப்போடு வீடுதிரும்புகின்றன
    வீதியுலா சென்ற இல்லுறைதெய்வங்கள் யாவும். //

    உற்சவ மூர்த்திகளாகி வீதி வலம் வந்துப்
    பின் இல்லம் திரும்பும்
    இல்லுறைத் தெய்வங்கள் குறித்த
    படமும் கவிதையும் அருமையிலும் அருமை
    பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அவர்களோடு மகிழ்ச்சியும் நம் இல்லத்துள் வருதுங்க கீதா!!

    ReplyDelete
  10. ஒவ்வொரு வரியும் அழகு... ரசித்தேன் பலமுறை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. வரி வரியாய் என்னை வரிந்துகொண்டன உங்கள் கவிதை!

    மிகமிக அருமை! ஒவ்வொரு வரிஅயையும் கற்பனையில் கண்டு மகிழ்ந்தேன்!

    // தினமொரு அலங்காரமாய் தெருவெங்கும்
    விளையாடும் தெய்வங்கள் அவதாரமாய்......// அட அட என்னவொரு ரசனைமிக்க வரிகள்!!!

    தலையங்கமும் முழுக்கவிதையும் அற்புதம் தோழி!
    இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. அனைத்து வரிகளும் அருமை..அதிலே மிக மிகப் பிடித்தது "முகைநறுமலர் கூட்டி சிகைதனில் அழகுற சூட்டி"
    இனிமையான கவிதை தோழி..ரசித்து மகிழ்ந்தேன்..நன்றி! வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. //கையிலெடுக்கும் ஒவ்வொரு பொம்மைக்கும்

    பழங்கதையும் பாரம்பரியப் பெருமையும்

    வருடந்தோறும் வாய் ஓயாது

    பேசித்தீர்ப்பது பேரிளம்பெண்டிர் வழக்கம்,

    செவிசாய்ப்பது சிற்றிளம்பெண்டிர்க்குப் பழக்கம்.//

    அருமையான வரிகள்!

    ReplyDelete
  14. அருமையான சிந்தனை.
    வணங்குகிறேன் கீதமஞ்சரி அக்கா.

    ReplyDelete
  15. இன்றைய தினத்துக்கேற்ற பதிவு.

    அருமை.

    ReplyDelete
  16. சிறப்பான கவிதை. படமும் நேர்த்தி.....

    ReplyDelete
  17. உணர்ந்து ரசித்து எழுதிய பதிவு. ஒவ்வொரு பொம்மையும் ஒரு கதை சொல்லும். ஆனால் எனக்கென்னவோ இப்பொழுதெல்லாம் நவராத்திரிக் கொலு என்பது வீடுகளில் எக்சிபிஷன் மாதிரி காட்டப் படுகிறது..பட்டும் பாவாடையுமாகப் பெண்குழந்தைகள் பாட்டுக்கள் பல பாடி பிரசாதம் வாங்கும் கோலாகலம் குறைந்து வருகிறதோ என்று தோன்றுகிறதுஉணர்வு பூர்வமான பதிவுக்குப் பாராட்டுக்கள். .

    ReplyDelete
  18. உங்களுக்காக, தமிழ் மனம் வோட்டு + 1

    ReplyDelete
  19. வணக்கம் சகோதரி கவி வரிகள் அனைத்தும் அழகு. //பேசித்தீர்ப்பது பேரிளம்பெண்டிர் வழக்கம்,
    செவிசாய்ப்பது சிற்றிளம்பெண்டிர்க்குப் பழக்கம்.// நன்றாக கவனித்து பதிந்துள்ளீர்கள். ப்கிர்வுக்கு நன்றீங்க.

    ReplyDelete
  20. அழகான வரிகள்....ஒவ்வொன்றையும் ரசித்தேன்..

    ReplyDelete
  21. குழந்தைகளும் தெய்வங்கள்தான்! இல்லுறை தெய்வங்கள் என்ற வார்த்தை அழகோ அழகு கீதா! மிக ரசித்தேன். பொம்மைகள் நிறைய ஆசை ஆசையாய் வாங்கிச் சேர்த்து எங்கம்மா வைத்த பெரிய கொலு இதைப் படிக்கையில் மனதில் விரிந்தது. இன்றைய பெண்களுக்கு (என் இல்லத்தரசியையும் சேத்துத்தான்) அப்படி பொம்மைகள் வாங்கி வெக்கறதுல விருப்பமும் சரி... இடவசதியும் சரி குறைவாத்தான் இருக்குது. என்னத்தச் செய்ய...?

    ReplyDelete
  22. அடடா அழகிய கவிதையில் ஒரு குட்டிக் கதை.. மிக அருமை..

    ReplyDelete
  23. கையிலெடுக்கும் ஒவ்வொரு பொம்மைக்கும்
    பழங்கதையும் பாரம்பரியப் பெருமையும்
    வருடந்தோறும் வாய் ஓயாது
    பேசித்தீர்ப்பது பேரிளம்பெண்டிர் வழக்கம்,
    செவிசாய்ப்பது சிற்றிளம்பெண்டிர்க்குப் பழக்கம்.//

    எனக்காக எழுதபட்ட கவிதை போல இருக்கே கீதமஞ்சரி, நான் இது போல மருமகளிடம் கதை சொன்னதை பகிர்ந்து இருக்கிறேன். நவராத்திரி சிந்தனைகள் என்று.
    கொலுவுக்கு ஏற்ற கவிதை.
    எல்லாவரிகளையும் பாராட்டலாம், அத்தனையும் உண்மையான வரிகள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. தலைப்பே கவித்துவமாக இருக்கிறது சகோதரி..

    அழகுத்தமிழில் ஆலிங்கனம் செய்கிறது கவிதை..
    இல்லுறை தெய்வங்கள்
    நெஞ்சம் நிறைக்கின்றன...

    ReplyDelete
  25. அழகு கீதா. சரஸ்வதி பூஜை போலும்! தமிழும் அலங்கரித்து மகிழ்கிறது. கீதாவின் கை வண்ணத்தில்.

    ( உங்கள் மொழி பெயர்ப்பு கதை வாசிக்க இன்னொரு நாளைக்கு நேரத்தையும் கூட்டி வந்து பார்க்கிறேன் கீதா. அதனை ஆற அமர இருந்து வாசிக்க வேண்டும்.)

    ReplyDelete
  26. வணக்கம்
    இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட…இதோ.
    http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_16.html?showComment=1381898980443#c4078958374580460760
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  27. தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில்

    http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_16.html

    ReplyDelete
  28. http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_16.html

    இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளத்தினைப்பற்றி பாராட்டிப்பேசப்பட்டுள்ளது. அதற்கு என் அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. நவராத்திரி கொலுவும் , நயமிகு கவிதையும் நன்று!

    ReplyDelete
  30. அன்புள்ள

    கொலு வருடத்திற்கொருமுறை கொலுவேறும்
    பின் பொம்மைகள் அவசரமாய் பரணேறும்
    உங்கள் கவிதையதை அழகழகாய்
    ஒவ்வொரு உள்ளமதிலும் கொலுவிருக்க
    செய்த வணணம் சிறப்பானது சுவையானது

    சின்ன வயதில் கொலுவென்றால் கூட்டுசேரும்
    அரட்டையாடும் வீடுவீடாய் ஏறும் கால்கள்
    சாதியும் பார்க்காது மதமும் பார்க்காது
    நேற்றுதான் சண்டைபோட்ட வீடென்றும் பார்க்காது
    விரும்பிய சுண்டல் கிடைத்தாவென்றே மட்டும்
    கைகள் நீட்டியிருக்கும்...நீட்டிய கைகளில் வாங்கியவுடன்
    கைவிரலிடுக்குகளின் வழியே வழியும் கடுகைகூட
    சின்னஞ்சிறு கருவேப்பிலைத்துண்டுகூட நழுவாமல்
    சேர்த்து மெல்லும் வாயில் அரைபடும் சுண்டலோடு
    அடுததவீட்டுக்கு சுண்டலுக்கு அடித்தளம் போடும்

    சலியாது சுற்றிய தெருக்கள் ஏறிய வீடுகள்
    தின்ற சுண்டல் இரவு சாப்பாட்டை விரட்டி ஒதுக்கும்
    இரவு முழுக்க வாசம் வீசும் சுண்டல் விடியும்போது
    வயிற்றைக் கலக்கும்
    ஏறிய வீடுகளும் வாங்கிய சுண்டல்களும்
    நினைவில் மிதக்க நிற்காது போகும் வயிற்றுப்போக்குக்
    கூட பொழுதுபோக்கு நிகழ்வாகும்..

    எத்தனை பொம்மைகள்
    எத்தனை காட்சிகள்
    கொலு சிறியதாக இருந்தாலும்
    கொலு பெரிதாக இருந்தாலும்
    நவராத்திரி முழுக்க
    நீங்காதிருக்கும் மகிழ்ச்சியை
    எழுத எத்தனை கவிதைகள் வேண்டும்?
    எத்தனை சொற்கள் வேண்டும்?

    நன்றி சகோதரி நினைவூட்டலுக்கு..

    ReplyDelete
  31. கொலு பொம்மைகள் என்று சாதாரணமாய் வழக்கிலிருக்கும் வார்த்தைக்கு அழகிய மகுடம் சூட்டி இல்லுறை தெய்வங்கள் என்று அசத்தலான, கவிநயமான பெயர் வைத்திருப்பது ஒன்றே போதும் உங்களின் கவித்திறனுக்குச் சான்று!

    தொடர்ந்து வரும் கவிதையின் ஒவ்வொரு வரியும் அழகோ அழகு!

    ReplyDelete
  32. ''..அழகுணர்வும் அடுக்கும் கலையுணர்வும்,

    பொறுப்பும், புத்தியும், புதுப்புது நேர்த்தியும்

    வரவேற்பும், உபசரிப்பும், வழிபாட்டு முறைகளும்,

    வயதுக்கு வருமுன்னே மனதுக்குள் பதியனிடும் ...''
    ஆம் வாழ்நாளில் மறவாதது.
    வயோதிபத்தில் குமிழாக மேல் வருவது.
    அருமைத் தமிழ் கொறு;சுகிறது.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  33. மன்னிக்கவும்.
    அருமைத் தமிழ் கொஞ்சுகிறது எனத் திருத்தவும்.
    வேதா. இலங்காதிலகம்:

    ReplyDelete
  34. அருமை... அப்படியே கண் முன்னால் காட்சிப்படுத்தும் அழகிய கவிதை

    ReplyDelete
  35. தாமத பதிலுக்கு மன்னிக்கவும் நண்பர்களே.. வேலைப்பளு காரணமாக வாரமொரு முறை மட்டுமே வலைப்பூ பக்கம் வர இயல்கிறது. நண்பர்களின் வலைத்தளங்களை வாசிப்பது கூட இடையில் தடைபட்டுவிட்டது. இனி கூடுமானவரை தொடர்ந்து வர முயல்கிறேன். விரைவில் அனைவரது தளங்களையும் பார்வையிட்டு கருத்திடுவேன்.

    ReplyDelete
  36. @2008rupan

    உடனடி வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.

    ReplyDelete
  37. @வை.கோபாலகிருஷ்ணன்

    //கையிலெடுக்கும் ஒவ்வொரு பொம்மைக்கும்
    பழங்கதையும் பாரம்பரியப் பெருமையும்
    வருடந்தோறும் வாய் ஓயாது
    பேசித்தீர்ப்பது பேரிளம்பெண்டிர் வழக்கம்,
    செவிசாய்ப்பது சிற்றிளம்பெண்டிர்க்குப் பழக்கம்.//

    \\அழகான அனுபவங்களைச் சொல்லும் அற்புதமான வரிகள்.

    உண்மை தான் .... ஒவ்வொரு பொம்மைக்கும் ஒவ்வொரு சிறப்பும் வரலாறும் உண்டு தான்.\\

    தங்கள் உடனடி வருகைக்கும் அழகான தொடர் பின்னூட்டங்களுக்கும் அன்பான நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  38. @வை.கோபாலகிருஷ்ணன்

    //அழகுணர்வும் அடுக்கும் கலையுணர்வும்,
    பொறுப்பும், புத்தியும், புதுப்புது நேர்த்தியும்
    வரவேற்பும், உபசரிப்பும், வழிபாட்டு முறைகளும்,
    வயதுக்கு வருமுன்னே மனதுக்குள் பதியனிடும்
    உற்சவத்தின் உற்சாகத் துவக்கம்.//

    \\மிகுந்த அழகுணர்வோடு சொல்லியுள்ளீர்கள். வயதுக்கு வந்தபின் எல்லாவற்றையும் மனதில் அசைபோட்டு மகிழச்செய்யும், இந்த இனிய துவக்கம். ;)\\

    வயதான பின்னும் கூட மனத்தில் நிழலாடும் நினைவுகள் அல்லவா அவை..

    தங்கள் ரசனையான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  39. @வை.கோபாலகிருஷ்ணன்

    //நாணமும் நளினமும் மிகக்கொண்டு
    மின்னெழில் பிம்பம் நோக்கி மிரளும் மான்விழிகள்!
    பொன்னகை பூட்டுமுன்னே
    புன்னகை பூட்டிக்கொள்ளும் பூஞ்சிற்றிதழ்கள்.//

    \\அசத்தலான சொல்லாடல் ..... அற்புதமான வந்துள்ளது .... மகிழ்ச்சி. ;)\\

    கவிதையை ரசித்து மகிழ்ந்த தங்களுக்கு என் அன்பான நன்றி சார்.

    ReplyDelete
  40. @வை.கோபாலகிருஷ்ணன்

    \\வீதியுலா சென்று திரும்பும் இல்லுறை தெய்வங்கள் வாழ்க வாழ்கவே!

    மிகச்சிறப்பான படைப்பு. மிகவும் ரஸித்துப்படித்து மகிழ்ந்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\\

    தங்கள் ரசனைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  41. @இராஜராஜேஸ்வரி

    தங்கள் ரசனைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  42. @தி.தமிழ் இளங்கோ

    ஆமாம் ஐயா. இப்போது பிளாஸ்டிக் கிண்ணங்களிலும் பொட்டலங்களிலும் தந்து சிரமத்தைக் குறைத்துவிடுகிறார்கள். ஆனாலும் அந்த நாள் ஞாபகங்கள் என்றும் பசுமையே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  43. @Ramani S

    தங்கள் ஊக்கமிகுப் பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

    தமிழ்மண வாக்கிட்டு அளிக்கும் ஊக்கத்துக்கும் அன்பான நன்றிகள்.

    ReplyDelete
  44. @ராஜி

    உண்மைதான் ராஜி. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றல்லவா? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜி.

    ReplyDelete
  45. @திண்டுக்கல் தனபாலன்

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி தனபாலன்.

    ReplyDelete
  46. @இளமதி

    கவிதையை ரசித்து மகிழ்ந்தமைக்கும் இனிய வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி இளமதி.

    ReplyDelete
  47. @கிரேஸ்

    உங்கள் ரசனைவெளிப்பாடு என்னை ஆட்கொண்டது. மிக்க மகிழ்ச்சி கிரேஸ். மனமார்ந்த நன்றி தோழி.

    ReplyDelete
  48. @கே. பி. ஜனா...

    தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

    ReplyDelete
  49. @அருணா செல்வம்

    வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

    ReplyDelete
  50. @ஸ்ரீராம்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

    ReplyDelete
  51. @வெங்கட் நாகராஜ்

    வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி வெங்கட்.

    ReplyDelete
  52. @G.M Balasubramaniam

    உங்கள் காலத்தில் இருந்தது போல் எங்கள் காலத்தில் இருந்திருக்காது. எங்கள் காலத்தைப் போல் இப்போது இல்லை. ஆனாலும் பாரம்பரியக் கொண்டாட்டங்களை விட்டுவிடாமல் இன்றும் தொடர்கிறோமே.. அதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளத்தான் வேண்டும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  53. @நம்பள்கி

    தங்கள் வருகைக்கும் வாக்களித்து ஊக்கமளித்தமைக்கும் மிக்க நன்றி நம்பள்கி.

    ReplyDelete
  54. @அ. பாண்டியன்

    தங்கள் வருகைக்கும் கவிதை வரிகளை ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி பாண்டியன்.

    ReplyDelete
  55. @கோவை2தில்லி

    வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி ஆதி.

    ReplyDelete
  56. @பால கணேஷ்

    காலத்திற்கேற்றாற்போல் காட்சிகளும் மாறுகின்றன. நாமும் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டியுள்ளது. நீங்கள் சொல்வது போல் இன்று இடவசதி ஒரு குறை. மேலும் பெண்கள் பணிக்குச் செல்லும் காலமாகிவிட்டது. வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்ய அன்று கூட்டுக்குடும்பம் உதவியது. இன்றைய தனிக்குடித்தனத்தில் எல்லாமே சிரமம்தான். வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி கணேஷ்.

    ReplyDelete
  57. @athira

    வருகைக்கும் கவிதையை ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக மிக நன்றி அதிரா.

    ReplyDelete
  58. @கோமதி அரசு

    எல்லா வீடுகளிலும் நடக்கும் நிகழ்வல்லவா இது? உண்மையில் இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் தலைமுறைகளுக்கிடையிலான பந்தம் வலுப்பெறுவது உறுதி. தங்கள் வருகைகும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  59. @மகேந்திரன்

    உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி மகேந்திரன். வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  60. @மணிமேகலா

    ஆம் மணிமேகலா. நவராத்திரி சமயங்களில் குழந்தைகளுக்கு அழகழகாய் அலங்கரித்துவிடுவார்கள். பார்க்க கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும் அது.

    மொழிபெயர்ப்புக் கதையை உங்களுக்கு நேரம் அமையும்போது பொறுமையாய் வாசியுங்கள். எங்கே போய்விடப்போகிறது. :)

    வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி மணிமேகலா.

    ReplyDelete
  61. @2008rupan

    தங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி ரூபன். உடனே வலைச்சரம் சென்று பார்த்துக் கருத்திட்டேன். தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  62. @r.v.saravanan

    என்னையும் வலைச்சரத் தொகுப்பில் அறிமுகப்படுத்திய தங்களுக்கு மனமார்ந்த நன்றி சரவணன்.

    ReplyDelete
  63. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி வை.கோ.சார். உடனடியாக வலைச்சரம் சென்று பார்த்துக் கருத்திட்டேன். இங்கு பதிலிடத் தாமதமாகிவிட்டது. வருந்துகிறேன். வாழ்த்துக்கு மிக்க நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  64. @புலவர் இராமாநுசம்

    தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  65. @ஹ ர ணி

    வணக்கம் ஹரணி சார். எவ்வளவு ரசனையானப் பின்னூட்டம்... மனம் கொள்ளா மகிழ்ச்சியில் திளைக்கிறேன். சுண்டல் தின்ற அழகை உங்கள் வரிகளில் விவரித்த நயம் கண்டு என் நாவிலும் எச்சில் ஊறுகிறது. அந்த நாளை நினைவுறுத்தும் அழகிய காட்சிப்பதிவைக் கண்முன் கொணர்ந்த எழுத்துக்குப் பாராட்டுகள். வருகைக்கும் அழகான ரசனையான அனுபவப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹரணி சார்.

    ReplyDelete
  66. @மனோ சாமிநாதன்

    தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்து இட்ட அழகானக் கருத்துரைக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  67. @kovaikkavi

    தங்கள் வருகைக்கும் அழகியப் பின்னூட்டத்தால் அளிக்கும் உற்சாகத்துக்கும் மனமார்ந்த நன்றி தோழி. தங்கள் தளம் உள்ளிட்ட பிற நண்பர்களின் தளங்களுக்கு விரைவில் வருவேன். தங்கள் அன்புக்கு நன்றி.

    ReplyDelete
  68. @ரிஷபன்

    வருகைக்கும் கவிதையை ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

    ReplyDelete
  69. சிற்றில் விளையாடும் சின்ன மனுஷிக்கெல்லாம்
    பட்டாடை அணிவித்து பலவாறாய் அலங்கரித்து
    முகைநறுமலர் கூட்டி சிகைதனில் அழகுற சூட்டி
    மயக்குறும் வண்ணம் மையால் விழியெழுத,
    நங்கையெனத் தனைக்கண்டு
    நாணமும் நளினமும் மிகக்கொண்டு
    மின்னெழில் பிம்பம் நோக்கி மிரளும் மான்விழிகள்!
    பொன்னகை பூட்டுமுன்னே
    புன்னகை பூட்டிக்கொள்ளும் பூஞ்சிற்றிதழ்கள்.//

    இந்த ஒரு கவிதைக்கே
    நோபல் பரிசு தரலாம்.
    நாம் நூறு லட்டு பரிசாக தரலாம்.
    தீபாவளிக்கு எங்கள் வீட்டுக்கு வாருங்கள்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
  70. @sury Siva

    நோபல் பரிசை விடவும் உயர்வாக தங்கள் இந்தப் பாராட்டைத்தான் நினைக்கிறேன். தங்கள் அழைப்புக்கும் நூறு லட்டுகளை பரிசாக அளிக்க முன்வந்த அன்புக்கும் மனமார்ந்த நன்றி சுப்பு தாத்தா.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.