18 May 2021

சுட்டி உலகம் - முதல் சிறார் வலைக்களஞ்சியம்

குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு பேரிழப்புகளிலிருந்து மனம் இன்னும் முற்றிலுமாய் மீண்டுவர இயலா சூழலில், மூத்தோர் வகுத்துச் சென்ற நற்பாதைகளில் பயணித்து மீதமுள்ள வாழ்க்கையை மேலும் பயனுள்ளதாய்க் கழிப்பதே அவர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய அஞ்சலியாகவும், எம்மைத் தொடர்ந்துவரும் இளைய தலைமுறைக்கு நாம் காட்டும் நம்பிக்கை ஒளியாகவும் இருக்கும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் சுட்டி உலகம். 

தேர்ந்த சிறார் எழுத்தாளரும் சிறந்த வாசகியுமான (ஊஞ்சல்) கலையரசி அக்காவின் நீண்டநாள் கனவு இது. அவரது கனவை மெய்ப்படுத்தி, இணையதளத்தை அழகாய் வடிவமைத்துள்ள அருணுக்கு மனம் நிறைந்த அன்பு. என்னையும் ஓர் அங்கமாக சுட்டி உலகத்தில் இணைத்துக்கொண்ட கலையரசி அக்காவுக்கு அன்பும் நன்றியும். சிறார் இலக்கிய வளர்ச்சிக்கு எந்தெந்த வழிகளில் எல்லாம் பங்காற்றலாம் என யோசித்து யோசித்து செயல்படு(த்து)ம் கலையரசி அக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலோடு என்னாலும் சுட்டி உலகத்தில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

    


சரி, சுட்டி உலகத்தில் என்னென்ன இருக்கின்றன? (0-5), (6-8), (9-12), (12+) என வயதுவாரியாக குழந்தைகளுக்கான அச்சுப் புத்தகங்கள், அச்சிதழ்கள், இணையப் புத்தகங்கள், இணைய இதழ்கள் மற்றும் சிறார் எழுத்தாளர்கள் குறித்த அறிமுகங்கள் உள்ளன. பெற்றோர் பக்கத்தில் குழந்தை வளர்ப்பு சார்ந்த படைப்புகளும் சுட்டிப்பக்கத்தில் குழந்தைகளின் குறும்புப்பேச்சு, எழுத்து, ஓவியம் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. மேலும் சிறார் இலக்கியம் சார்ந்து பிற வலைப்பூ மற்றும் வலைத்தளங்களில் வெளியான பதிவுகளின் இணைப்புகளும் சுட்டி உலகத்தில் தரப்படுகின்றன. இவை தவிர ஒவ்வொரு மாதமும் தலையங்கத்தோடு, சிறப்புப் பதிவுகளும் இடம்பெறவிருக்கின்றன. 

சொல்ல மறந்துவிட்டேனே… சுட்டி உலகத்தின் படைப்புகளாக குழந்தைப் பாடல்களும் கதைகளும், குழந்தைகள் ரசிக்கும் வகையில் சுட்டி உலகம் youtube சானலில் வீடியோக்களாக வெளியாகின்றன. மொத்தத்தில் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பதின்பருவத்தினர்க்கான தேவைகளையும் தேடல்களையும் வாசிப்பார்வத்தையும் பூர்த்தி செய்யக்கூடியதொரு முழுமையான வலைக்களஞ்சியமாக சுட்டி உலகம் வருங்காலத்தில் திகழும்.



சுட்டி உலகத்தில் நீங்களும் பங்களிக்க விரும்புகிறீர்களா? அதற்குப் பல வழிகள் உண்டு. 

  • சுட்டி உலகத்தில் உள்ள படைப்புகளை அந்தந்த வயதில் உள்ள உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு அறியத் தந்து பயன்பெறச் செய்யலாம். 

  • படைப்புகள் குறித்த உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் நாங்கள் அறியத் தரலாம். 

  • உங்களைக் கவர்ந்த படைப்புகளை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளலாம். 

  • அத்துடன் உங்கள் படைப்புகளையும் எங்களுக்கு அனுப்பலாம். சிறார் இலக்கியம் சார்ந்த உங்கள் படைப்புகள், சிறார் இலக்கியத்துக்கான உங்கள் பங்களிப்புகள் மற்றும் தமிழ், ஆங்கில மொழிகளில் நீங்கள் வாசித்த சிறார் நூல்கள் குறித்த அறிமுகங்கள் / விமர்சனங்கள் (புத்தகத்தின் அட்டைப்படத்தோடு) போன்றவற்றை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். 

  • அது மட்டுமல்ல, உங்கள் குழந்தைகளின் குறும்புப்பேச்சு, எழுத்து, ஓவியம் போன்றவற்றையும் சுட்டி உலகத்தின் வாயிலாய் உலகறியச் செய்து அவர்களது திறமைகளுக்கு ஊக்கமளியுங்கள். 

உங்கள் படைப்புகள், கருத்துகள், ஆலோசனைகள் எதுவானாலும் இனிதே வரவேற்கிறோம். சுட்டி உலகத்துக்கு உங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி team@chuttiulagam.com 

 


வாருங்கள், சிறார் இலக்கிய வளர்ச்சியில் நாம் ஒவ்வொருவரும் நமக்குரிய பங்கினை ஆற்றுவோம். சுட்டிகளின் உலகத்தை வண்ணமயமாக்குவோம்! 

&&&&&


10 comments:

  1. Replies
    1. மிகவும் நன்றி தனபாலன்.

      Delete
  2. நல்ல அறிமுகம் மிக்க நன்றி சகோதரி.

    துளசிதரன்

    நன்றாக இருக்கிறதே சுட்டிகளின் உலகம். முயற்சி செய்கிறேன் கீதா ஏதேனும் படைப்பு அனுப்ப இயலுகிறதா என்று.

    மிக்க நன்றி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கட்டாயம் அனுப்புங்க. அன்பும் நன்றியும் தோழி.

      Delete
    2. நன்றி துளசி சார்.

      Delete
  3. நல்ல முயற்சி..வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சார்.

      Delete
  4. சுட்டி உலகம். வாழ்த்துகள். அவர்கள் தளத்திலும் படித்தேன்.

    மகளிடம் ஓவியங்களை அனுப்பி வைக்கச் சொல்லி இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட். ரோஷ்ணியின் ஓவியம் சுட்டி உலகத்தில் வெளியாகி உள்ளது. அனுப்பியமைக்கு மிக்க நன்றி.

      Delete
    2. மகளின் ஓவியத்தினை வெளியிட்டதற்கு நன்றி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.