29 February 2016

ஃப்ரில் கழுத்து ஓணான் - ஆஸ்திரேலியாவின் அதிசயம் 15பெயரைக் கொண்டே புரிந்திருக்குமே.. சாதாரண ஓணான்களைப் போன்றதுதான் உடலமைப்பு. கழுத்தைச் சுற்றி பாவாடைச்சுருக்கம் போல தோலாலான ஃப்ரில்தான் வித்தியாசம். அதனாலேயே frilled neck lizard என்பது காரணப்பெயராயிற்று. மரவாழ் உயிரியானாலும் இந்த ஓணானை பெரும்பாலான நேரம் தரையில் பார்க்கமுடியும். புழு, பூச்சி, கரையான், சிலந்தி, எலி போன்ற சிற்றுயிரிகள்தாம் இதன் உணவு. ப்ரில் கழுத்து ஓணான்களின் நீளம் கிட்டத்தட்ட ஒருமீட்டர் என்றாலும் அதன் நீளத்தில் மூன்றில் இரண்டு பங்கு அதனுடைய வால்தான்.  


ஃப்ரில் கழுத்து ஓணானுக்கு அதன் கழுத்தைச்சுற்றி அமைந்திருக்கும் பளீர்மஞ்சள் மற்றும் பழுப்புவண்ண பிரத்தியேக ஃப்ரில்லால் என்ன பயன்? ஆபத்து சமயத்தில் தற்காக்கும் உத்திக்கு இதைத்தான் பயன்படுத்துகிறது. எதிரி எதிர்பாராத சமயத்தில், பட்டன்குடைபோல் படக்கென்று ஃப்ரில்லை விரிப்பதோடு, எதிரியை விழுங்கப்போவது போல் வாயையும் பெரிதாகப் பிளக்கும். இந்த திடீர் உருமாற்றத்தை எதிர்பாராத எதிரி பயந்து ஓடிவிடும். அப்படி பயமுறுத்தியும் எதிரி அசையவில்லையென்றால் அவ்வளவுதான். முன்னங்கால் தரையில் பாவாமல் பின்னங்கால்களால் படுவேகமாகத் திரும்பிப்பார்க்காமல் இது ஓட ஆரம்பித்துவிடும். வழியில் ஏதேனும் மரம் தென்பட்டால் சட்டென்று அதிலேறிக்கொள்ளும். தன்னைப் பாதுகாப்பாக உணர்ந்தபின்னர்தான் திரும்பியே பார்க்கும். ஃப்ரில் கழுத்து ஓணான் தலைதெறிக்க இப்படியும் அப்படியுமாக அசைந்து அசைந்து ஓடுவதைப் பார்த்தால் நமக்கு சிரிப்பு வந்துவிடும். அதற்காக அதை இளப்பமாகவும் எண்ணிவிடக்கூடாது. தப்பிக்க வழியே இல்லை என்று தோன்றிவிட்டால், அதன் கீழ்த்தாடையில் உள்ள இரு கூரான கோரைப்பற்களும் எதிரியைப் பதம்பார்த்துவிடும்.    
ஆண்மயில் தோகை விரித்துப் பெண்ணைக் கவர்வது போல் இனப்பெருக்கக்காலத்தில் தன் இணையைக் கவரவும் இந்த ஃப்ரில் உதுவுகிறது. ஃப்ரில் கழுத்து ஒணான்களின் இனப்பெருக்கக்காலம் செப்டம்பர் அக்டோபர் மாதங்கள். அந்த சமயத்தில் இரு ஆண் ஓணான்கள் தங்கள் விரித்த ஃப்ரில்களுடன் பின்னங்கால்களால் நின்றபடி ஒன்றுடன் ஒன்று மூர்க்கமாக சண்டையிட்டுக்கொள்வதையும் ஒன்றையொன்று கடித்துவிரட்டுவதையும் காணமுடியும். நவம்பர் முதல் பிப்ரவரி வரை முட்டையிடும் காலம். நல்ல வெயில் படும் இடத்தில் தரைக்கு கீழே 5 – 20 செ.மீ. ஆழத்தில் மெல்லிய தோல்முட்டைகள் இடப்படுகின்றன. ஒரு ஈட்டுக்கு 6 முதல் 25 முட்டைகள் வரை இருக்கலாம். 

முட்டைகளை இடுவதற்கு முன் பெண் ஓணான்கள் பத்துக்கும் மேற்பட்ட இடங்களைத் தோண்டிப்பார்த்து ஆராய்ந்து, சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்கின்றன. முட்டைகளுக்குக் கிடைக்கும் வெப்ப அளவைப் பொறுத்துதான் முட்டைக்குள்ளிருக்கும் குட்டிகளின் பால் நிர்ணயிக்கப்படுகிறது. அதிக வெப்பம் பெண்குட்டிகளையும் மிதமான வெப்பம் ஆண்குட்டிகளையும் உருவாக்குகிறது. பால் மட்டுமல்லாது குட்டிகளின் அளவு, ஓடும் வேகம், வாழுந்திறமை போன்றவற்றையும் வெப்பநிலை பாதிக்கிறது. குட்டிகள் பொரிந்துவந்ததும் தன்னிச்சையாக வாழ ஆரம்பித்துவிடுகின்றன. முட்டையிலிருந்து வெளிவந்த முதல்நாளே, எவரும் கற்றுக்கொடுக்காமலேயே ஆபத்து சமயங்களில் தங்கள் ஃப்ரில்களை அநிச்சையாகவே விரிக்கவும் செய்கின்றன. 


2 சென்ட் நாணயம் - 1991

ஃப்ரில் கழுத்து ஓணான்கள் ஆஸ்திரேலியாவிலும் நியூகினி தீவிலும் மட்டுமே காணப்படுகின்றன. இவற்றின் ஆயுட்காலம் சுமார் இருபது வருடங்கள். இவையும் பச்சோந்தியைப் போல, தாங்கள் வசிக்கும் மரத்தின் நிறத்துக்கேற்ப தங்கள் நிறத்தை பழுப்பு, சாம்பல்நிறம் என்று மாற்றிக்கொள்ளக்கூடியவை. இவை குளிர் ரத்தப் பிராணி என்பதால் தங்கள் உடலின் வெப்பநிலையை அதிகரித்துக்கொள்ள, மரங்களுக்குக் கீழே நல்ல வெயில் படும் இடங்களில் மணிக்கணக்காக குளிர்காய்வது வழக்கம்.  

லிஸ்ஸி - 2000

ஆஸ்திரேலியாவில் 1991 இல் புழக்கத்தில் இருந்த இரண்டு சென்ட் நாணயத்தில் இந்த ப்ரில் கழுத்து ஓணான்களின் உருவம் இடம்பெற்றிருந்தது. 2000 –ஆம் ஆண்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக்கான பாராலிம்பிக்கில் ‘லிஸ்ஸி’ (Lizzie) என்ற ஃப்ரில் கழுத்து ஓணான் அடையாளச்சின்னமாய் சிறப்பிக்கப்பட்டது. இதனுடைய அசாதாரணமான உருவ அமைப்பினாலும் அச்சமூட்டும் தன்மையாலும் பல திரைப்படங்களிலும் கார்ட்டூன்களிலும் இடம்பெறுகிறது. இது பலராலும் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகிறது என்பது வியப்பு தரும் தகவல். 

&&&&&&&

(படங்கள் உதவி: இணையம்)

25 comments:

 1. இதுவரை அறியாத மிகவும் விசித்திரமான தகவல்களுடன் அருமையானதோர் பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கோபு சார்.

   Delete
 2. தொடர்ந்து இயற்கை குறித்தும் ஆஸ்திரேலியாவின் அதிசயங்கள் குறித்தும் கட்டுரை படைக்கும் அக்காவிற்கு நன்றி. அருமையான கட்டுரை.

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி தம்பி.

   Delete
 3. வித்தியாசமான உயிரினம்.... தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

   Delete
 4. Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி தனபாலன்.

   Delete
 5. இந்த வகை ஓணானைப் பற்றி இப்போதுதான் அறிய வருகிறேன். அது ஓடும் அழகைக் கற்பனை செய்து பார்க்க வைத்தன உங்கள் வரிகள். தகவல்களுக்கு நன்றி. தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ராமலக்ஷ்மி.. வீடியோ கிடைத்தால் போடறேன். அருமையா இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 6. ஆச்சர்யகரமான. மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள். வெப்ப நிலையைப் பொறுத்துத்தான் பாலினமே முடிவாகும் என்பதும் வியப்பு. எதிர்த்து பயமுறுத்தி விட்டு, பயனில்லை என்றால் திரும்பிப் பாராமல் ஓடுவது தமிழ்ப்படக் காமெடிக் காட்சிகளை நினைவு படுத்துகிறது!
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். அது ஓடுவதைப் பற்றி எழுதும்போதே எனக்கும் சிரிப்புதான்.

   Delete
 7. வியப்பிற்கு உரிய விலங்குசகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

   Delete
 8. அருமையான தகவல் அக்கா!அழகான் பிரில்களுடன் ஓணான் படம் பார்க்கும் போதே ஆச்சரியப்படுத்துகின்றது!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா நிஷா.

   Delete
 9. இயற்கையே விந்தைதான். ஒவ்வொரு உயிரினத்திற்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ள என்று ஒரு யுக்தி, உடல் பாகம் இயற்கையால் படைக்கப்பட்டுள்ளது. ஸ்கங்கு, முள்ளம்பன்றி, ஹெட்ஜ் ஹாக் போன்றவற்றிற்குக் கூடத் தங்களைத் தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு யுக்தி, பாகம். ஒவ்வொரு விலங்கினமும் ஒவ்வொரு சிறப்புடையது. ரசிக்கவைக்கக் கூடியதும்..வெப்பம்தான் ஆண் பெண் முடிவு செய்கிறது என்பது இயற்கையின் அற்புதம்.

  மிக மிக அருமையான தகவல் சகோ/தோழி..மிக்க நன்றி அருமையான தகவல் களஞ்சியமாகத் தங்கள் தளம் திகழ்கின்றது. விலங்குகள் குறித்த தமிழ் விக்கியாகக் கொள்ளலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். அனைத்தும் ஆச்சர்யப்படுத்தும் தகவல்கள். அனைவரோடும் பகிர்ந்துகொள்ளமுடிவதில் எனக்கும் மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

   Delete
 10. நல்ல தகவல் ...வித்தியாசமான விலங்கு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுராதா.

   Delete
 11. வியப்பூட்டும் தகவல்கள். வெப்பநிலை பொறுத்துப் பாலும் உடல் அமைப்பும் தீர்மானிக்கப்படுகின்றன என்பது மிகவும் விந்தை. அழகான படங்கள். பகிர்வுக்கு மிகவும் நன்றி கீதா!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.. ஊர்வனவற்றுள் முதலை உள்ளிட்ட பலவற்றுக்கும் இத்தன்மை உள்ளது. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி அக்கா.

   Delete
 12. அதிசயத் தகவல்களை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி . வெப்ப அளவுக்கும் ஆண் பெண் பாலுக்கும் இருக்கிற தொடர்பு வியப்பூட்டுகிறது .

  ReplyDelete
  Replies
  1. வியப்பூட்டும் தகவல்கள்தாம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 13. சுவாரஸ்யமான தகவல்கள்.... உண்மையாகவே இது ஒரு விந்தையான விலங்குதான் ...என்றாலும் ''முட்டைகளுக்குக் கிடைக்கும் வெப்ப அளவைப் பொறுத்துதான் முட்டைக்குள்ளிருக்கும் குட்டிகளின் பால் நிர்ணயிக்கப்படுகிறது'' என்கிற வரிகள் கொஞ்சம் நெருடலை தருகிறது ... மற்றபடி கட்டுரை அருமை ...
  https://www.scientificjudgment.com/

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.