27 January 2015

கருப்பு அன்னம் - ஆஸ்திரேலியாவின் அதிசயம் 13


All swans are white  என்பது ஊரறிந்த உண்மைக்கு சொல்லப்படும் உவமை. அப்படியிருந்த காலத்தில் கருப்பு நிறத்திலும் அன்னங்கள் இருக்கின்றன என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? 1697 இல்தான் கருப்பு அன்னங்கள் (Black swans) ஆஸ்திரேலியாவில் இருப்பது ஐரோப்பியக் குடியேறிகளால் கண்டறியப்பட்டது. வெள்ளைக்காக்கா மல்லாக்கப் பறக்கிறது என்று சொன்னால் எப்படி எவரும் நம்பமாட்டார்களோ அப்படிதான் கருப்பு அன்னங்களின் இருப்பையும் நம்ப மறுத்தனர் ஐரோப்பியர். சாட்சிக்கு ஒரு சோடி கருப்பு அன்னங்கள் ஜகார்த்தாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. கண்ணால் பார்த்தபிறகு நம்பித்தானே ஆகவேண்டும்? 

கருப்பாயிருந்தாலும் கம்பீரமான அழகுடை அன்னங்கள் என்பதால் இந்த அன்னங்கள் மேற்கு ஆஸ்திரேலியாவால் உலகின் பல நாடுகளுக்கும் பரிசாக அனுப்பிவைக்கப்பட்டனவாம். ஆனால் ஐரோப்பியரிடத்தில் அதற்கு அவ்வளவாக வரவேற்பில்லை. காரணம்?ஐரோப்பிய புராணக்கதைகளின்படி கருப்புநிற விலங்குகளும் பறவைகளும் துர்தேவதைகளின் அடையாளம். கருப்புப்பூனை, காகம் போன்றவற்றின் வரிசையில் கருப்பு அன்னமும் சேர்ந்துவிட்டதாம். அதனால் ஐரோப்பாவில் இவற்றை வளர்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லையாம். ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாக மூர்க்கம் மிகுந்த கருப்பு அன்னங்கள் ஐரோப்பாவின் வெள்ளை அன்னங்களின் இருப்பிடங்களை ஆக்கிரமித்து அவற்றை விரட்டியடித்ததும் மற்றொரு காரணம். ஆஸ்திரேலியாவின் சொந்தப்பறவையான இது அண்டை நாடான நியூசிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அங்கும் பரவலாகக் காணப்படுகிறது. மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின்  மாநிலப் பறவை என்ற அந்தஸ்துடைய கருப்பு அன்னப்பறவை அம்மாநிலத்தின் கொடியிலும் அரசு முத்திரையிலும் இடம்பெற்றிருப்பதோடு ஆஸ்திரேலியாவின் கலாச்சார, கலை, விளையாட்டு, தொழில் தொடர்பான பல நிறுவனங்களின் அடையாள உருவாகவும் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.


கரிய உடலும் 'S' வடிவில் அமைந்த நீளமான கழுத்தும் செக்கச்செவேலென்ற அலகும் கொண்ட இந்த அன்னம் பார்ப்பதற்கு அழகும் கம்பீரமும் நிறைந்தது. உலகிலுள்ள அன்னப்பறவை இனங்களிலேயே நீளமான கழுத்து இதற்குதான். இதன் உயரம் 120 செ.மீ முதல் 140 செ.மீ வரை இருக்கும். எடை 4 கிலோ முதல் 9 கிலோ வரை இருக்கும். இறக்கைகளை விரித்தால் 1.6 மீ முதல் 2 மீ. நீளம் இருக்கும். இதன் உயிரியல் பெயர் Cygnus atratus என்பதாகும்.


முழுவதும் கருப்பாக காட்சியளித்தாலும் இதற்கு வெள்ளை நிற இறகுகளும் உண்டு.  இறக்கைகளை விரித்துப் பறக்கும்போது உள்ளிருக்கும் வெண்ணிற இறகுகள் பளிச்சென்று தெரியும். அதனால் கருப்பு அன்னங்கள் கூட்டமாய் வானத்தில் பறக்கும்போது கீழிருந்து பார்ப்பவர்களுக்கு கருப்பு வெள்ளை நிறத்திலான  மேக்பை வாத்துகள் என்றே நினைக்கத் தோன்றுமாம். நீளமான கழுத்தையும் மிதமான சிறகசைப்பையும் கொண்டுதான் இவை கருப்பு அன்னங்கள் என்பதை அறிந்துகொள்ளமுடியும்

கருப்பு அன்னம் 


மேக்பை வாத்துகள்

வெள்ளை அன்னங்கள் பொதுவாக பெரிய அளவில் ஒலி எழுப்புவதில்லை. அதனாலேயே ஊமை அன்னங்கள் (mute swans) என்று பெயர் பெற்றுவிட்டன. கருப்பு அன்னங்களோ விசில் போன்ற ஒலியை எழுப்புகின்றன. சில சமயங்களில் இவை எழுப்பும் எக்காளம் போன்ற ஒலி வெகு தொலைவிலும் கேட்கும். நீரைச் சார்ந்து வாழ்ந்தாலும் கருப்பு அன்னங்கள் முழுக்க முழுக்க சைவப் பறவைகள். நீர்த்தாவரங்கள், புற்கள் தவிர வேறு எதையும் தின்பதில்லை. மீன்களையோ புழு பூச்சிகளையோ திரும்பியும் பார்ப்பதில்லை.

ஏரிகுளம், குட்டை, ஆறு போன்ற நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் வாழும் கருப்பு அன்னங்கள்  இனப்பெருக்கக் காலத்தில் அந்நீர்நிலைகளைச் சுற்றி வளர்ந்துள்ள கடல்பாசி, நீர்த்தாவரங்களைக் கொண்டு  சற்று மேடாக்கி அதில் கூடமைத்து குஞ்சு பொரிக்கின்றன.  ஆணும் பெண்ணும் இணைந்தேதான் கூடமைக்கின்றன. இவை  ஒருமுறை இணை சேர்ந்தால் வாழ்நாள் முழுவதும் பிரியாமல் தொடர்கின்றன. இனப்பெருக்கக் காலத்தில் மற்றப் பறவைகளைப் போல் எல்லைத் தகராறுகளில் இவை ஈடுபடுவதில்லை. குழுவாக வாழும் இவை பக்கம் பக்கமாய்க் கூடமைத்துக் கொள்கின்றன.இந்த கருப்பு அன்னப்பறவைகளிடம் சில விநோதப் பழக்கங்களும் காணப்படுகின்றன. வாழ்நாள் இணையென்று நம்பப்பட்டாலும் இவற்றுள் இணையறியாக் கள்ளக்காதலும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஓர்பால் காதலும் உண்டாம். இரண்டு கருப்பு ஆண் அன்னங்கள் சோடி சேரும் பட்சத்தில் மற்றப் பறவைகளைப் போலவே கூடு அமைத்து, அக்கம்பக்கத்து கூடுகளிலிருந்து முட்டைகளைத் திருடிவந்து அடைகாத்துக் குஞ்சுபொரித்து குடும்பம் அமைப்பதும் உண்டாம். இவை தவிர ஐரோப்பாவில் பல இடங்களில் வெள்ளை அன்னத்தோடு இணைந்து Blute swan (Black swan + Mute swan) என்ற புதிய தலைமுறையையும் உருவாக்கியுள்ளனவாம்.

பொதுவாக ஒரு ஈட்டுக்கு நான்கு முதல் ஆறு முட்டைகள் வரை இடும். 35 – 40 நாட்கள் இரு பறவைகளும் மாறி மாறி அடைகாக்கும். குஞ்சுகள் சாம்பல் நிறத்திலும் இறக்கைகளின் முனைகளில் மட்டும் கருப்பாகவும் காணப்படும். நான்கு வாரத்தில் குஞ்சுகள் நன்றாக நீந்தவும் தாய் தந்தை ஊட்டும் அவசியமில்லாமல் தாங்களாகவே உண்ணவும் செய்கின்றன. ஆழமான நீர்நிலைகளைக் கடக்கநேரும்போது தாய் தந்தையின் முதுகில் சவாரி செய்தபடி குஞ்சுகள் கடப்பது அழகு. ஆண் பறவை cob என்றும் பெண் பறவை pen என்றும் குஞ்சுகள் cygnets என்றும் குறிப்பிடப்படுகின்றன.கருப்பு அன்னங்கள் தட்பவெப்ப சூழலுக்கேற்ப இடப்பெயர்வில் ஈடுபடுகின்றன. கடற்கரையோரங்களில் வசிப்பதை விரும்பினாலும் பெருமழைக் காலங்களில் அங்கு தாக்குப் பிடிக்க முடியாமல் உள்நிலப்பரப்பில் உள்ள நீர்நிலைகளை நோக்கி பறந்துசெல்கின்றன. அங்கு கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. அங்கு கோடையில் வறட்சி உண்டாகும் சமயம் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் கடலோர நீர்நிலைகளுக்கு வந்துவிடுகின்றன.

அடைகாத்து குஞ்சு பொரிக்கும் தருணங்களில் பெரும்பாலான நீர்ப்பறவைகளுக்கு ஏற்படுவது போலவே இவற்றுக்கும் இறகுகள் உதிர்ந்துவிடுகின்றன. அப்போது இவற்றால் பறக்க முடியாது. மீண்டும் இறகுகள் வளர்ந்து பழைய நிலையை அடைய ஒரு மாதகாலமெடுக்கும். அந்த சமயத்தில் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பெரும் குழுவாகவும் வெட்டவெளியான நீர்நிலைகளிலும் வசிக்கின்றன.பூர்வகுடி மக்களிடையே கருப்பு அன்னத்தைக் குறித்து ஒரு கதை உண்டு. பண்டைக்காலத்தில் இந்த கருப்பு அன்னமும்  வெள்ளையாக அழகாக இருந்ததாம்அழகிருந்தால் சிலருக்கு ஆணவமும் இலவச இணைப்பாக வந்துவிடுமே.  அன்னத்துக்கும் வந்துவிட்டதாம். அது சும்மா இல்லாமல் அங்கிருந்த கழுகின் முன்னால் போய்என் அழகென்ன? நிறமென்ன? நடையென்ன? நளினமென்ன?’ என்று தன் அழகைப் பற்றிப் பீற்றிக்கொண்டே இருந்ததாம். கடுப்பான கழுகு அன்னத்தின் இறக்கைகளைப் பிய்த்து சின்னாபின்னப் படுத்திவிட்டதாம். அத்தோடு விடவில்லையாம். இறக்கைகளில்லா அன்னத்தைக் கொண்டுபோய் ஆளரவமில்லாத பாலைநிலத்தில் விட்டுவிட்டுப் போய்விட்டதாம்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அன்னத்தை கழுகின் எதிரிகளான  காகங்கள்தாம் காப்பாற்றினவாம். சிறகில்லாத அன்னத்துக்கு தங்கள் சிறகுகளைத் தந்து உதவினவாம். அன்றுமுதல் வெள்ளை அன்னம் கருப்பு அன்னமாகிவிட்டதாம்.  அதனால் கழுகுக்கு அடையாளம் தெரியாமல் போகவே தப்பித்துக் கொண்டனவாம். கழுகு பிய்த்த இறகுகள் போக மீந்த சில சிறகுகள்தான் இந்த அன்னம் பறக்கும்போது வெள்ளையாய் வெளியில் தெரிகின்றவாம். கழுகு கொத்தியதால் அன்னத்தின் அலகில் ஏற்பட்ட இரத்தக்காயத்தால்தான் அதன் அலகு சிவப்பாக இருக்கிறதாம். கதை எப்படி? சுவாரசியம் அல்லவா?

(படங்கள் : நன்றி இணையம்)


28 comments:

 1. கருப்பு அன்னம் சுவாரஸ்யமன தகவல்கள். ஆச்சரியமாய் இருக்கிறது . இது வரை கருப்பு அன்னம் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. படங்கள் தகுந்தார் போல் தொகுத்து கொடுத்து இருக்கிறீர்கள் அருமை.

  வெள்ளை அன்னத்தைவிட கருப்பு அன்னம் அழகாய் இருக்கிறது.

  தம 1

  ReplyDelete
  Replies
  1. பதிவை ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி உமையாள்.

   Delete
 2. ஸ்வாரசியமான தகவல்கள். கருப்பு அன்னமும் அழகாய்த் தான் இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. அழகானவை. அதே சமயம் மூர்க்கம் நிறைந்தவை. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி வெங்கட்.

   Delete
 3. அருமையான பதிவு...சுவாரசியமான கதை .. ...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்.

   Delete
 4. கருப்பு அன்னம் பற்றி இத்தனை தகவல்களா? மிக அருமையாக சுவாரஸ்யமாக இருக்கின்றன. மிக அழகான படங்கள்.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி ப்ரியா.

   Delete
 5. BLACK SWAN ஏன்றொரு திரைப்படம் பார்த்து ரசித்ததுண்டு நான். உண்மையிலேயே கருப்பு அன்னங்களும் இருக்கின்றன என்பது இப்போதுதான் தெரிகிறது. குட்டி அன்னங்கள் பெரிய அன்னத்தின் மேல் சவாரி செய்யும் காட்சி ரம்யம். அவற்றின் வாழ்க்கை முறையை நீங்கள் சொல்லியிருப்பது சுவாரஸ்யம். எல்லாவற்றையும் விட சிறப்பு அதன் நிறத்துக்குச் சொல்லப்படும் கர்ணபரம்பரைக் கதை. சூப்பரு.

  ReplyDelete
  Replies
  1. ஆண்டாண்டு காலமாக இங்கிருக்கும் பறவைகள் மிருகங்களுக்கு இதுபோல் பூர்வகுடி மக்களுடைய கதைகள் பல இருக்கின்றன. ஒவ்வொரு குழுவிடமும் ஒரு கதை இருக்கும். ரசித்தமைக்கு நன்றி கணேஷ்.

   Delete
 6. வழக்கம் போலவே சுவாரஸ்யமான பதிவு. சொல்லப் படும் பரம்பரைக் கதையும் சுவாரஸ்யம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. புகைப்படங்கள் அருமை சகோதரி
  கில்லர்ஜி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் புகைப்படங்களை ரசித்தமைக்கும் நன்றி கில்லர்ஜி.

   Delete
 8. கருப்பு அன்னம் - ஆஸ்திரேலியாவின் அதிசயம் - கேட்கவும் பார்க்கவும் படிக்கவும் மிகவும் அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளன. படத்தேர்வுகள் மிக அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கோபு சார்.

   Delete
 9. அன்புடையீர், வணக்கம்.

  தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


  இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_28.html

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரத்தில் என்னுடையதையும் அறிமுகப்படுத்திய தங்களுடைய அன்புக்கு மிக்க நன்றி அக்கா.

   Delete
 10. வியக்க வைக்கிறது...

  எந்த நிறம் என்றாலும் அன்னம் அழகோ அழகு...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தனபாலன். அன்னங்கள் கம்பீரமான ஒரு அழகு. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 11. அறியாத தகவல்கள். குஞ்சுகளைச் சுமந்த நீந்தும் காட்சி கவருகிறது. கருப்பு அன்னங்கள் பார்க்க மிக அழகானவை. மைசூர் மிருகக்காட்சி சாலைக்கு நேர் எதிரே இருக்கும் இயற்கைப் பூங்காவில் ஏராளமான கருப்பு அன்னங்களை வைத்துப் பராமரிக்கிறார்கள். அங்கு எடுத்த படத்தில் ஒன்று: https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/8393152899/

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி. உங்கள் படத்தையும் பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி.

   Delete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. கருப்பு அன்னங்களைப் பற்றி அருமையான விளக்கங்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சொக்கன்.

   Delete
 14. Anonymous1/2/15 08:30

  இங்கு டென்மார்க்கில் நான் கறுப்பு அன்னங்கள் கண்டேன்.
  கோடையில் திறக்கும் விநோதப் பூங்காவில் கண்டேன்.
  நல்ல பதிவு. பாராட்டுகள்
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. உலகெங்கிலும் பல இடங்களில் இப்போது கருப்பு அன்னங்கள் காணப்படுகின்றன. உங்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

   Delete
 15. கதை அருமை.
  கறுப்பு அன்னம் பார்க்க அழகு. அதன் அலகு சிவப்பு மிக அழகு.
  விவரங்கள் வியப்பு.
  வெளியூரில் இருப்பதால் இணையத்தோடு இணைய முடியவில்லை. நேரமும், வாய்ப்பும் கிடைக்கும் போது படிக்கிறேன்.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.