13 May 2016

ப்ரோல்கா - ஆஸ்திரேலியாவின் அதிசயம் 17


ப்ரோல்கா (brolga) அல்லது ஆஸ்திரேலியக் கொக்கு எனப்படும் நாட்டியப் பறவைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? இனப்பெருக்கக் காலங்களில் இணையுடன் சேர்ந்து மிக அழகாக நளினமாக இவை ஆடும் நடனச்சடங்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் அபரிமிதமாய்க் காணப்படும் ப்ரோல்கா, அம்மாநிலத்தின் அடையாளப்பறவை என்ற சிறப்போடு அம்மாநிலத்தின் அரசுமுத்திரையிலும் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் தனித்துவமிக்கப் பறவையினங்களுள் ஒன்றான ப்ரோல்கா பற்றி அறிவோமா இப்போது?
பொதுவாக இனப்பெருக்கக் காலத்தில் ஆண் பறவைகள் இப்படி தங்கள் திறமைகளைக் காட்டி இணைப்பறவைகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதுண்டு. ஆனால் ப்ரோல்கா பறவைகளோ ஒரு முறை சோடி சேர்ந்தால் வாழ்நாள் முழுவதும் தொடர்வதாக அறியப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் இணையைக் கவர இந்த ஆட்டமெல்லாம் தேவையில்லைதானே. ஆனாலும் ஒவ்வொரு பருவத்தின்போதும் ப்ரோல்கா சோடிகள் இந்த சடங்கைப் பின்பற்றத் தவறுவதே இல்லை. தவிரவும் இந்த அழகிய நாட்டியத்துக்கு இன்ன காரணம், இன்ன பருவம், இன்ன காலம் என்ற கணக்கெல்லாம் கிடையாதாம். இனப்பெருக்கக் காலம் மட்டுமல்லாது ப்ரோல்காக்கள் உற்சாகமனநிலையில் இருக்கும் பொழுதெல்லாம் துள்ளலுடன் நாட்டியமாடுகின்றனவாம்.


அமைதியாக நின்றுகொண்டிருக்கும் பறவைக்கூட்டம் தங்கள் ஆட்டத்தை ஆரம்பிப்பதே ஒரு அழகுக்காட்சி. முதலில் ஒரு பறவை ஒரு புல்லை வாயால் கவ்வி அதைக் காற்றில் பறக்கவிட்டு பிறகு, எக்கிப்பிடிக்கும். தரையிலிருந்து ஒரு  மீட்டரோ அதற்கும் மேலோ உந்தியெழும்பி பாராசூட் போல இறக்கைகளைக் காற்றில் அளைந்தபடி மெதுவாகத் தரையிறங்கும். பிறகு மெல்ல மெல்ல இறக்கைகளை விரித்தும், மடக்கியும், குனிந்தும், வளைந்தும், நடந்தும், தலையை இடவலம் அசைத்தும் என பலவிதமாய் அபிநயிக்கும்.


சில சமயம் ஒரு பறவை மட்டும் தன் இணையின் முன் ஆடும். உடன் இணைப்பறவை இணைந்துகொள்ளும். கொஞ்சம் கொஞ்சமாக குழுவின் மற்றப் பறவைகளும் ஆட ஆரம்பிக்க, ஒரு பெரிய நாட்டியக்கச்சேரியே ஆரம்பமாகிவிடும்இணைப்பறவைகள் ஒன்றுக்கொன்று அலகால் முத்தமிட்டுக் கொஞ்சுவதும் துரத்தி விளையாடுவதும் தலையைப் பின்னுக்கு சாய்த்து மெலிதாய் கொம்பூதுவது போல் ஒலியெழுப்புவதும் ஆட்டத்தினூடே அமைந்த அம்சங்கள்.


பொதுவாக நீர்நிலையை ஒட்டிய பகுதிகளில் இரைதேடி வாழ்ந்தாலும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் தருணங்களில் அதற்கேற்ற இடங்களை நோக்கிப் பல கிலோமீட்டர் தூரம் பயணிக்கின்றன. ஆழமில்லா நீரோட்டமிக்க இடங்களையும் சதுப்பு நிலங்களையும் தேர்ந்தெடுத்து அங்கு கூடுகட்டும் முயற்சியில் ஆணும் பெண்ணும் இணைந்தே ஈடுபடுகின்றன. குச்சிகள், வேரோடு பிடுங்கப்பட்ட புற்கள், நாணல், நீர்த்தாவரங்கள் இவற்றால் உருவாக்கிய கூட்டில் பெண்பறவை முட்டைகளை இடும். நீருக்கு நடுவே ஒரு பெரிய குப்பைமேடு போல் காட்சியளிக்கும் அக்கூட்டின் விட்டம் கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் இருக்கும்.


சோம்பல் மிகுந்த சில ப்ரோல்காக்கள், அன்னப்பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சுபொரித்தபின் கைவிட்ட கூடுகளையே தங்கள் கூடுகளாக்கி முட்டையிடுமாம். அதனினும் சோம்பல் மிக்கவையோ கூடெல்லாம் எதற்கு என்று வெறும் தரையிலேயே முட்டையிட்டு அடைகாக்குமாம். உற்சாகத்துள்ளல் எல்லாம் நடனத்துக்கு மட்டும்தான் போலும்முறையாய்க் கூடு கட்டுவதென்றால் உடல் வளையமறுக்கிறதே.. சொகுசுகள்தான்.


இவை பொதுவாக இரண்டு முட்டைகள் இடும் என்றாலும் அரிதாக மூன்று இடுவதும் உண்டு. முட்டைகள் பழுப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆணும் பெண்ணும் மாறி மாறி முட்டைகளை அடைகாக்கும். ஒரு மாதத்துக்குப் பிறகு குஞ்சுகள் வெளிவரும். முட்டையிலிருந்து வெளிவந்த சிலமணி நேரத்திலேயே ப்ரோல்கா குஞ்சுகள் கோழிக்குஞ்சுகளைப் போல மிகுந்த சுறுசுறுப்புடன் தாய் தந்தையுடன் இரைதேட புறப்பட்டுவிடுகின்றன. கிட்டத்தட்ட ஒருவருடத்துக்கு தாய், தந்தை, பிள்ளைகள் என்ற அந்த குடும்ப அமைப்பு குலையாமல் இருக்கும்.


ப்ரோல்கா குஞ்சுகள் பறக்கக் கற்றுக்கொள்ள கிட்டத்தட்ட நூறு நாட்களாகும். தரையில் கூடுகட்டி வாழும் ஒரு பறவையின் குஞ்சு பறக்கக்கற்றுக்கொள்ள இவ்வளவு காலமெடுப்பது ப்ரோல்கா இனத்தில் மட்டும்தான். பறக்க இயலாத குஞ்சுகளை நரிகளிடமிருந்து காப்பாற்றுவதுதான் ப்ரோல்காக்களின் பெரும் பிரச்சனை. அந்தமாதிரியான சந்தர்ப்பங்களில் ப்ரோல்காக்களின் நடனமே அவற்றைக் காப்பாற்றுகிறது என்பதுதான் வியப்பு.. குழுவாய் பல ப்ரோல்காக்கள் ஒன்றிணைந்து தரையிலிருந்து எழும்பியும் தாழ்ந்தும் இறக்கைகளை விரித்தும் அசைத்தும் குதித்தும் குனிந்தும் பல்வாறாக உடலசைத்து சிறகசைத்து ஆடும் நடனத்தைக் கண்டு நரிகள் மயங்கிவிடுமா என்கிறீர்களா? இல்லை.. இல்லை நரிகள் மிரண்டோடிவிடுமாம். நரிகள் அறியுமா ப்ரோல்காக்கள் நடனமாடுகின்றன என்பதை. அவை தங்களைத் தாக்க ஆயத்தமாவதாக எண்ணிக்கொண்டு எடுக்குமாம் ஓட்டம்1.5 மீ உயரமும் இறக்கையை விரித்தால் 2.4 மீ நீளமும் உடைய ஒல்லியான உயரமான நீர்ப்பறவைதான் ப்ரோல்காமென்சிறகுகளகற்ற வழுக்கைத் தலையும்நீண்ட பசுஞ்சாம்பல்நிற அலகும் குச்சி போன்ற சாம்பல்நிறக் கால்களும் கொண்ட இப்பறவையினத்தில் ஆண்பெண் பேதம் காண்பதரிதுநூற்றுக்கணக்கானஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் குழுக்களாக வாழ்பவை இவைகுழுவாக இருந்தாலும் குழுவுக்குள் குடும்பங்கள் தனித்து இயங்கும்.


கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் (இருபது லட்சம்) வருடங்களாக ஆஸ்திரேலியாவில் வாழும் கொக்கு இனமான ப்ரோல்கா, ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் அரிய பறவை என்பது அதன் சிறப்பு. பார்ப்பதற்கு சாரஸ் கொக்கைப் போன்ற உருவ அமைப்பும் நிறமும் குழுவாக வாழுந்தன்மையும் கொண்டிருந்தாலும் ப்ரோல்காவுக்கும் சாரஸ் கொக்குக்கும் நிறைய வேறுபாடுகள்  உண்டு. தொலைவிலிருந்து பார்த்தால் இரண்டும் ஒன்று போலவே தோன்றினாலும் கூர்ந்து கவனித்தால் வேறுபாடு புலப்படும். அதனாலேயே ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆஸ்திரேலியாவில் வாழும் சாரஸ் கொக்குகளின் இருப்பு  1967 வரையிலும் அறியப்படவே இல்லைஅவற்றையும் ப்ரோல்கா என்றே மக்கள் நினைத்திருந்தார்களாம்.ப்ரோல்காவுக்கும் சாரஸ் கொக்குக்குமான முக்கிய வேறுபாடுகள் என்றால் தலையும் கால்களும்தான். ப்ரோல்காவுக்கு தலையின் சிறுபகுதி மட்டுமே சிவப்பாக இருக்கும். சாரஸ் கொக்குக்கு தலையிலிருந்து கழுத்து வரை சிவந்திருக்கும். ப்ரோல்காவின் கால்களின் நிறம் சாம்பல் அல்லது கருப்பு. சாரஸ் கொக்குக்கோ சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறக்கால்கள்.


ப்ரோல்காக்கள் ஆழமில்லாத நீர்நிலைப் பகுதிகள், சதுப்பு நிலப்பகுதிகள் போன்ற இடங்களையே வாழுமிடமாகத் தேர்ந்தெடுக்கின்றன. அங்குதான் அவற்றின் உணவான கடல் பாசிகள், நீர்த்தாவரங்கள், நிலத்தாவரங்கள், கிழங்குகள் இவற்றோடு புழு பூச்சிகள், தவளை எலி போன்ற சிற்றுயிரிகளுக்கு பஞ்சம் ஏற்படுவதில்லை. தங்களுடைய நீண்ட கூரிய அலகால் மண்ணைக் குத்திக் கிளறி மண்ணுக்குள்ளிருக்கும் கிழங்கு, வேர்கள் போன்றவற்றைத் தின்னும். உப்புநீர் சதுப்பு நிலங்களில் வாழும் பறவைகள் அங்குள்ள உவர்நீரைக் குடிக்கநேர்ந்தால் அவற்றின் கண்ணருகில் உள்ள சுரப்பிகள் அதிகப்படியான உப்பை வெளியேற்றிவிடுமாம்.


மற்ற ஆஸ்திரேலிய விலங்குகள் பறவைகளைப் போலவே ப்ரோல்காவும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களிடையே மிகுந்த செல்வாக்குடைய பறவை. அவர்களுடைய நடனங்களுள் ப்ரோல்கா நடனமும் ஒன்று. ப்ரோல்காக்களைப் போலவே அவர்கள் குழுவாய் இணைந்து தரையிலிருந்து எம்பிக்குதித்தும் கைகளைக் காற்றில் அளைந்தும் ஆடுவது அழகு. ப்ரோல்கா பற்றியும் பூர்வகுடிகளிடம் கதை ஏதாவது இருக்கவேண்டுமே.. இதோ இருக்கிறது.

முன்பொரு காலத்தில் நடந்த கதை இது. மனிதர்கள் குழுக்களாய் வாழ்ந்த அந்தக் காலத்தில் ஆண்களுடைய வேலை பறவைகள் மிருகங்களை வேட்டையாடி உணவாய்க் கொண்டுவருவது. பெண்களுடைய வேலை கிழங்குகளையும் பழங்களையும் சேகரிப்பது. அந்தக் குழுவில் செம்மயிர் கொண்ட இரு குழந்தைகள் மிகுந்த நட்புடனும் பாசத்துடனும் ஒன்றாக விளையாடி ஒன்றாக வளர்ந்தனர். இளைஞனும் இளம்பெண்ணுமாய் அவர்கள் இளமைப்பருவத்தை அடைந்தபோது இருவரும் பிரியவேண்டிய சூழல் ஏற்பட்டது. இளைஞன் ஆண்களுடன் வேட்டைக்கும் இளம்பெண் பெண்களுடன் காய்கனிகள் சேகரிக்கவுமாய்ப் பிரிந்தனர். பிரிவு அவர்களை வாட்டியது. ஒருவரை ஒருவர் காதலிப்பதை அப்போதுதான் அவர்கள் உணர்ந்தனர்.


ஒரு திருவிழா வந்தது. செம்மயிர்க்கொண்ட அந்த இளைஞன் கூட்டத்தின் நடுவில் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் நடனமாடினான். அவன் சுழன்றாடும்போது அவனுடைய செம்மயிர்த்தலை பிரகாசித்தது. பலரும் அதைக் கண்டு வியந்தனர். அவன் ஆடி முடித்ததும் அவனுடைய தோழி ஆடினாள். அவளும் மிக அழகாகவும் நளினமாகவும் சுற்றிச்சுழன்று ஆடினாள். அவளுடைய செம்மயிர்க்கூந்தல் விரிந்து ஜொலித்தது. பார்த்தவர்கள் இவர்கள் இருவரும் மிகப் பொருத்தமான சோடியென்று எண்ணும்படியாக அவர்களுடைய நடனம் இருந்தது. திருவிழாவுக்குப் பின் அவர்கள் மறுபடியும் தங்கள் பணிகளில் ஈடுபட்டனர்.


ஒருநாள் வேட்டைக்குப் போன இளைஞன் இருப்பிடத்துக்குத் திரும்பவில்லை. அவன் திரும்பி வராததற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொன்னார்கள். போன இடத்தில் பாம்பு கடித்து இறந்திருப்பான் என்றனர் சிலர். வழிதெரியாமல் காட்டில் சிக்கி காணாமல் போயிருப்பான் என்றனர் சிலர். வேறு காதலி கிடைத்து அவளுடன் போயிருப்பான் என்றனர் சிலர். திரும்பி வர முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றனர் சிலர். உண்மையில் என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியவில்லை. அந்தப் பெண் பெரிதும் மனமுடைந்துபோனாள். நித்தமும் அவன் வருகையை எதிர்பார்த்து ஏமாறினாள். வேட்டைக்குச் செல்பவர்களிடம் அவனைத் தேடிக்கண்டுபிடித்துத்தருமாறு வேண்டினாள். எதற்கும் பலனில்லாமல் போகவே ஒருநாள் தானே அவனைக் கண்டுபிடிக்கக் கிளம்பிச்சென்றுவிட்டாள். அதன்பின் அவளும் என்னவானாள் என்று எவருக்கும் தெரியவில்லை.


(படங்கள் உதவி - இணைய தளங்கள்)


வெகுநாட்கள் கழித்து ஏரிக்கரையில்  செந்தலைப் பறவை சோடியொன்று மிக அழகாக நடனமாடிக்கொண்டிருப்பதை ஊர்மக்கள் பார்த்தார்கள். அந்தப் பறவைகள் காதல் மேலிட தங்கள் செந்தலைகளை மேலும் கீழும் அசைத்தும் சுற்றிச்சுழன்றும் ஆடிய நடனம் அவர்களை வியப்புறச் செய்தது. காணாமல் போன இளைஞனும் இளம்பெண்ணும்தான் அது என்று அவர்கள் நம்பினர். உண்மைக்காதல் காதலர்களை இணைத்துவைத்துவிட்டது என்று சொல்லி மகிழ்ந்தார்கள். என்னவொரு அழகான காதல் கதை..

பின் இணைப்பு:

ப்ரோல்கா பறவைகளின் நடனத்தைக் கண்டுகளிக்க இங்கே வாருங்கள்.காணொளிகளுக்கான சுட்டிகளைப் பகிர்ந்து உதவிய கலையரசி அக்காவுக்கு என் அன்பும் நன்றியும்.
27 comments:

 1. //ப்ரோல்கா (brolga) அல்லது ஆஸ்திரேலியக் கொக்கு எனப்படும் நாட்டியப் பறவைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு?//

  இன்றுதான் தங்களின் இந்தப்பதிவு மூலம் தெரிந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி. அருமையான பகிர்வு.

  அசத்தலான விஷயங்கள் + கடைசியில் ஓர் காதல் கதை.

  அவற்றின் அழகிய நடனத்தைக் காணவேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

  ReplyDelete
  Replies
  1. உடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கோபு சார். ப்ரோல்காவின் நடன வீடியோவை கலையரசி அக்காவின் உதவியால் அனைவரும் கண்டுகளிக்க முடிந்ததில் மிகும் மகிழ்ச்சி.. இப்போது அந்த வீடியோவை பதிவிலும் இணைத்துவிட்டேன். :)))

   Delete
  2. //இப்போது அந்த வீடியோவை பதிவிலும் இணைத்துவிட்டேன். :)))//

   பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி, மேடம். :)

   Delete

 2. பரோல்கா எவ்வளவு அழகு. ஏராளமான சுவாரசியமான தகவல்கள். பறவைகள் பற்றிய உங்கள் ஆர்வத்தை வலைபதிவர் சந்திப்பு நடத்திய போட்டியில் அறிந்து கொண்டேன். தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி முரளிதரன்.

   Delete
 3. பரோல்கா அழகோ அழகு
  அறியாச் செய்திகள் பல அறிந்தேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா.

   Delete
 4. படங்களை ரசித்தேன் சகோ
  பதிவை.படித்தேன் சகோ...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

   Delete
 5. அழகான படங்கள்....

  எத்தனை எத்தனை வகை பறவைகள்.....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட். இயற்கையின் அதிசயங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் அறியும்போது வியப்பு அதிகரித்துக்கொண்டேதான் போகிறது.

   Delete
 6. அழகான கதை, நம்பிக்கை. அரிய புகைப்படங்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 7. அருமை! அருமை!!
  அரிய பல புதிய சுவாரிஷமான புதினங்கள். அழகான கதையும் கூடவே கீதா.எங்கிருந்து தான் இவற்றை எல்லாம் தேடி எடுத்து சுவை பட தமிழுக்குத் தருகிறீர்களோ என்று ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது. புகைப்படங்களும் தகவல்களுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. ஒரு விடயத்தைத் தருவதில் ஒரு முழுமையும் சுவாரிஷம் குன்றாத ஈடுபாடும் அதை தரும் ஆர்வமும் அசத்தலாய் இருக்கிறது.
  பல்சுவைச் செல்வி எனப்பட்டம் தரலாம் போல இருக்கிறது.

  தமிழ் பேசுவதைக் கேட்க இனிமையாக இருக்கிறது.கவிதைகளிலும் கரும்பு போல தமிழ் இனிக்கிறது.புகைப்படங்களில் இன்னொரு விதமான அசத்தலான சுவை, வானொலியில் இசையோடு ஒரு தமிழமுதம். பறவைகள், பூக்கள், செடிகள், கொடிகள் என்று இன்னும் சில இயற்கையின் அதிசயங்களை அள்ளி அள்ளிக் கொண்டு வருகிறீர்கள், மொழிபெயர்ப்பு இன்னொரு எல்லையில் நின்று நானும் இருக்கிறேன் என்கிறது.
  தமிழுக்கு பெருமையா? அவுஸ்திரேலியாவுக்கு பெருமையா இந்த கீதா இங்கிருப்பது?

  எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சத்தியமாக.. வாழ்க நின் பணி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் நீண்டதொரு பின்னூட்டத்துக்கும் உற்சாகமூட்டும் கருத்துகளுக்கும் மிகவும் நன்றி மணிமேகலா. உங்கள் அன்பினை வெளிப்படுத்தும் வரிகள் மிகையென்றபோதும் அதில் சொக்கிநிற்கிறேன். மிக மிக நன்றி தோழி.

   Delete
 8. சுவாரசியமான தகவல்கள். இயற்கையில் தான் எத்தனை விநோதங்கள்/ உன் பதிவைப் படித்து விட்டு ஆவலை அடக்க முடியாமல் யூ டியூப்பில் பறவைகளின் நடனமும் ஆதிவாசிகளின் நடனமும் கண்டு களித்தேன் http://www.bing.com/videos/search?q=Australian+Brolga&&view=detail&mid=4362C2F8C7D7B9854E8F4362C2F8C7D7B9854E8F&FORM=VRDGAR
  & http://www.bing.com/videos/search?q=Australian+Brolga&&view=detail&mid=9EA6EF7490B71EDDB20F9EA6EF7490B71EDDB20F&FORM=VRDGAR பகிர்வுக்கு மிகவும் நன்றி கீதா. இதன் இணைப்பையும் உன் பதிவில் கொடுத்தால், வாசிப்போருக்கு இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் குறிப்பிட்டுள்ள இணைப்புக்குச் சென்று பறவைகளின் ஆட்டத்தைக் கண்டு மகிழ்ந்தேன். நம்மையே ஆட வைத்திடும் அற்புத ஆட்டமே. மிகச்சரியான, பொருத்தமான இணைப்பினை இங்கு இணைத்துக்காட்டியுள்ளதற்கு மிக்க நன்றி, மேடம்.

   Delete
  2. @கலையரசி - தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.. காணொளியின் சுட்டிகளைத் தந்து பதிவின் சிறப்பைக் கூட்டிவிட்டீர்கள். அதற்காகவும் என் அன்பும் நன்றியும்.

   Delete
  3. காணொளியைக் கண்டுகளித்ததோடு இங்கு பின்னூட்டமிட்டு தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தியமைக்கு என் அன்பான நன்றி கோபு சார்.

   Delete
  4. கீத மஞ்சரி 16/5/16 22:13
   //காணொளியைக் கண்டுகளித்ததோடு இங்கு பின்னூட்டமிட்டு தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தியமைக்கு என் அன்பான நன்றி கோபு சார்.//

   :) மிகவும் சந்தோஷம், மேடம். :)

   Delete
 9. அழகிய பறவை பற்றி அறிந்தேன்.நன்றி. இங்கு உகாண்டாவில் crested crane என்னும் பறவை அழகோ அழகு. நாட்டின் தேசியப்பறவை. இரண்டு முறை பார்த்திருக்கிறேன். பரோல்கா மாதிரியே இருக்கும். ஆனால் நடனமாடுமா தெரியவில்லை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவகுமாரன். நீங்கள் குறிப்பிடும் பறவையும் இனப்பெருக்கக் காலத்தில் நாட்டியமாடுவதாக அறிகிறேன். இயற்கையின் அதிசயங்கள் நாம் அறிய இன்னும் ஏராளம்.

   Delete
 10. அழகிய பறவை பற்றி அறிந்தேன்.நன்றி. இங்கு உகாண்டாவில் crested crane என்னும் பறவை அழகோ அழகு. நாட்டின் தேசியப்பறவை. இரண்டு முறை பார்த்திருக்கிறேன். பரோல்கா மாதிரியே இருக்கும். ஆனால் நடனமாடுமா தெரியவில்லை

  ReplyDelete
 11. அருமையான கட்டுரை . எராள விவரங்கள் . விளக்கமான அழகிய படங்கள் . இயற்கையில் எத்தனை யெத்தனை அதிசயங்கள் ! குழு நடனத்தில் ஒருவித சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்படுவது வியப்பளிக்கிறது .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் இப்பதிவை ரசித்துக் கருத்திட்டமைக்கும் மிகவும் நன்றி.

   Delete
 12. ரசித்து ரசித்து வாசித்தோம். என்ன ஒரு அற்புதமான பறவை, அதன் குணாதிசயங்கள். இயற்கையே வினோதமானது, பல அற்புதங்களையும், ரகசியங்களையும் உள்ளடக்கி ஆச்சரியப்படுத்துகிறது. இது போன்ற விவரங்களை வாசிக்கும் போது மனம் மிகவும் மகிழ்கின்றது. கீதாக்கா மிகவும் ரசித்தோம்...

  ப்ரோல்கா நடனம் என்று வாசித்ததுமே மற்றொரு tab திறந்து கூகுளில் ப்ர்லோகா டான்ஸ் என்று அடித்து அவற்றின் நடனத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டே உங்கள் பதிவையும் வாசித்து வந்தால் இறுதியில் உங்கள் சுட்டி. அதையும் கண்டு களித்தோம். நடனத்தை மிக மிக ரசித்து மகிழ்ந்தோம்....

  அரியதொரு பறவையைப் பற்றி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி கீதாக்கா...

  கீதா: எனது மகனிற்கும் காட்டினேன் அதைப் பார்த்து ரசித்துச் சிரித்தான்...மிக்க நன்றிகீதாக்கா

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி கீதா & துளசி சார்.

   இயற்கையின் அதிசயங்களை ஆராய்ந்து அறியத்தரும் உங்கள் ரசனைக்கு சொல்லவா வேண்டும்... மிகவும் மகிழ்ச்சி நண்பர்களே.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.