9 April 2016

ரெயின்போ லாரிகீட் - ஆஸ்திரேலியாவின் அதிசயம் 16


பார்ப்பதற்கு கிளிகளைப் போலிருந்தாலும் கிளிகளுக்கும் லாரிகீட்களுக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்? மாறுபட்ட உணவுப் பழக்கத்தின் காரணமாகவே மாற்றமடைந்துள்ள உடலுறுப்புகள். பூந்தாது, பூந்தேன், பழச்சாறு என்று உணவை எளிமைப்படுத்தியதன் காரணமாக, பொதுவாக பறவைகளிடத்தில் காணப்படும் தொண்டைப்பை மற்றும் கல்தேக்க இரைப்பை போன்றவற்றின் அவசியம் லாரிகீட்களுக்குத் தேவைப்படவில்லை. விசேடமாய் சுரக்கும் நொதிப்பொருள் சீரணத்தை எளிதாக்கிவிடுகிறது.
உலகிலுள்ள 55 வகையான லாரிகீட் பறவைகளுள் ஆஸ்திரேலியாவில் காணப்படுபவை ஏழுவகை மட்டுமே. ஆஸ்திரேலியாவின் வசீகரங்களுள் ஒன்றான ரெயின்போ லாரிகீட் பறவைகள் பற்றி இப்போது அறிந்துகொள்வோமா? செல்லப்பறவைகளாக ஆஸ்திரேலியாவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் வளர்க்கப்படும் இவற்றின் அழகுக்கும் பழகும் தன்மைக்கும் ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. எளிதில் பழக்கப்படக் கூடிய ரெயின்போ லாரிகீட் பறவைகள் வளர்ப்புப் பூனைகள் போல் மனிதர்களிடத்தில் நெருங்கி விளையாடக்கூடியவை. அதனாலேயே இவற்றிற்கு கிராக்கி அதிகம். 

ரெயின்போ லாரிகீட்ஸ் (Rainbow Lorikeets) - பெயருக்கேற்றாற்போல் வானவில் வண்ணங்களைப் பூசிய அழகுப் பறவைகள். மற்ற லாரிகீட்களிலிருந்து ரெயின்போ லாரிகீட்களை அவற்றின் வண்ணங்களால் தனித்து அறியலாம். இவ்வினத்தில் ஆண் பெண் இரண்டுமே பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும்.

ஒரு இடத்தில் லாரிகீட் பறவைகள் இருப்பதை அவை எழுப்பும் பேரொலி மூலம் அறிந்துகொள்ளலாம். ஒன்றல்ல, இரண்டல்ல ஆயிரக்கணக்கானப் பறவைகளாக  கூடி வாழும் இயல்புடைய இவை ஒரு இடத்தில் கூடிவிட்டால் கீச் மூச் கிய்யாமுய்யாவென்று சத்தம் காது ஜவ்வைக் கிழிக்கும். ரெயின்போ லாரிகீட் பறவைகளின் பொழுது முழுவதும் பூக்கள், மகரந்தம், பூந்தேன், கொட்டைகள், பழங்கள், பூச்சிகள் என்று தேடித்தேடி உண்பதிலேயே கழிந்துவிடுகிறது.

ரெயின்போ லாரிகீட் பறவைகளின் விலங்கியல் பெயரான Trichoglossus haematodus-க்கு என்ன அர்த்தம் தெரியுமா? உவ்வே என்று சொல்லிவிடாதீர்கள். ரோமங்கள் உள்ள நாக்கு என்று பெயர். உண்மைதான். இந்த லாரிகீட்ஸ் பறவைகளுக்கு நாக்கில் ரோமங்கள் உண்டு. ஏன்? காரணமில்லாமல் இருக்குமா? இந்தப் பறவைகளின் பிரதான உணவு மலர்களில் உள்ள தேன்தான். அந்த தேனை உறிஞ்சிக் குடிக்கத்தான் இந்த ரோம நாக்கு.  யூகலிப்டஸ் பூந்தேனும் பூந்தாதும் இவற்றுக்கு விருப்ப உணவுகள்.
இவை ஆஸ்திரேலியப் பறவை என்றபோதும் ஆஸ்திரேலியா முழுவதும் பரவலாகக் காணப்படும் பறவையினம் இல்லை. மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான பெர்த்தில் தெரிந்தோ தெரியாமலோ அறிமுகப்படுத்தப்பட்டு அதன் பலனாய் உள்ளூர்ப் பறவைகளின் உணவு, உறைவிடம் போன்றவற்றைப் பாதிக்கும் அளவுக்கு இப்போது பல்கிப் பெருகிவிட்ட காரணத்தால் பெருந்தொல்லையாகவே அறியப்படுகிறது. 1960 இல் பத்து ரெயின்போ லாரிகீட் பறவைகள்தாம் பறக்கவிடப்பட்டனவாம். 2006 இன் கணக்கெடுப்புப்படி 15,000 முதல் 20,000 வரை இருக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது.

இப்பறவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நியூசிலாந்திலும் கூட ஒரு தலைவலியாகவே அறியப்படுகின்றன. காது கிழிக்கும் சத்தத்தோடு ஆப்பிள், செர்ரி, பேரிக்காய் பழத்தோப்புகள் மற்றும் திராட்சைத் தோட்டங்களைப் பாழாக்கியும் எச்சங்களால் வாகனங்களைப் போர்த்தியும் இவை செய்யும் அட்டகாசங்களை மக்கள் சகிக்க இயலாமல் பொறுமுகின்றனர்.
யூகலிப்டஸ் மற்றும் பனை மரப்பொந்துகள், உயரமான பாறையிடுக்குகள் போன்றவற்றுள் மென்று துப்பிய மரத்துகள்களால் மெத்தை உண்டாக்கி அதில் முட்டையிடும். ஒரு ஈட்டுக்கு இரண்டு அல்லது மூன்று முட்டைகள் இடும். பொந்து ஏற்படுத்துவதில் ஆணும் பெண்ணும் இணைந்து செயல்பட்டாலும் அடைகாப்பது முழுக்க முழுக்க பெண்ணின் வேலை. 25 நாட்களுக்குப் பிறகு குஞ்சுகள் பொரித்து வெளிவரும். குஞ்சுகளின் அலகு ஆரம்பத்தில் கருப்பாக இருந்து வளர வளர சிவப்பு வண்ணமாக மாறும்.

ரெயின்போ லாரிகீட்  பறவைகள் ஒருமுறை இணை சேர்ந்தால் வாழ்நாள் முழுவதும் பிரியாது. இவற்றின் ஆயுட்காலம் சுமார் இருபது வருடங்கள். கூடு கட்டும் சமயங்களில் ரெயின்போ லாரிகீட் பறவைகள் மிகுந்த ஆக்ரோஷம் கொண்டு மற்ற லாரிகீட்களை தங்கள் எல்லைக்கப்பால் விரட்டிவிடும். லாரிகீட் மட்டுமல்ல, மைனா போன்ற சிறிய பறவைகள் முதல் ஆஸ்திரேலிய மேக்பை போன்ற பெரிய பறவைகள் வரை எது வந்தாலும் ஒரு கை பார்த்துவிடும்.

எளிதில் மக்களுடன் பழகக்கூடியவை இந்த ரெயின்போ லாரிகீட் பறவைகள். அதனால் மனிதர்கள் புழங்கும் இடங்களில் பயமின்றி புழங்குவதோடு அவர்கள் தரும் உணவுப் பொருட்களையும் தயங்காது ஏற்கின்றன. குவீன்ஸ்லாந்து விக்டோரிய உயிரியல் பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்களுள் ஒன்று லாரீகீட் பறவைகளுக்கு உணவளித்தல். காலையும் மாலையும் குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுலாப் பயணிகளிடத்தில் பூந்தேன் போன்ற திரவம் உள்ள ஏந்தலான கிண்ணங்கள் வழங்கப்படுகின்றன. நாம் அதைக் கைகளில் ஏந்திப் பிடித்திருக்க, எங்கிருந்தோ ஆயிரக்கணக்கான லாரிகீட் பறவைகள் அங்கு வந்து குழுமுகின்றன.  கொஞ்சமும் பயமில்லாமல் அவை நம்முடைய கைகளிலும் தலைகளிலும் அமர்ந்தபடி அத்திரவத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. விநோதமான அவ்வனுபவம் உண்மையில் ரசிக்கத்தக்க ஒன்று. இதோ... என் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிகிறதே அம்மகிழ்ச்சி!
28 comments:

 1. அழகுப் பறவை
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் நன்றி ஐயா.

   Delete
 2. அழகான பறவை பற்றிய
  அருமையான பதிவு சகோதரி....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Ajai Sunilkar Joseph.

   Delete
 3. லாரிகீட் பற்றி மிக மிக விரிவான தகவல் அறிந்தோம். ஆஹா அழகு. நீங்கள் மிகவும் மகிழ்ந்து அதனை ரசித்து அனுபவிப்பது தெரிகின்றது....எல்லோரும் மகிழ்வுடன் காணப்படுவதும் தெரிகின்றது. ம்ம்ம் இயற்கையுடன் இருப்பதே மகிழ்வுதானே....மிக மிக அருமையான பதிவு. நாங்களும் இதைப் பற்றித் தெரிந்து கொண்டதில் மகிழ்வு...

  மிக்க நன்றி இப்படிப்பட்ட அருமையான தகவ்ல்கள் நிறைந்த பதிவுகளுக்கு. உங்கள் எவ்வளவு பாராட்டினாலும் தகும்!!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் அழகான ரசனையான பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி சகோ.

   Delete
 4. லாரிகீட் அழகான அந்தப் பறவை படுத்தும் பாடுகளை சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது, என்னதான் அழகாய் இருந்தாலும் அளவுக்கு மீறியிருந்தால் அதனால் தொந்தரவுதான் என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஓர் அழகுப் பறவைப்பற்றி அற்புதமாய் சொன்னதற்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தொல்லை தராதவரைக்கும்தான் அழகு ரசிக்கத்தக்கது. :)) தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்.

   Delete
 5. //கொஞ்சமும் பயமில்லாமல் அவை நம்முடைய கைகளிலும் தலைகளிலும் அமர்ந்தபடி அத்திரவத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. விநோதமான அவ்வனுபவம் உண்மையில் ரசிக்கத்தக்க ஒன்று. இதோ... என் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிகிறதே அம்மகிழ்ச்சி!//

  மிகவும் மகிழ்ச்சியான முகத்துடன் பதிவினை நிறைவு செய்துள்ளீர்கள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவையும் படங்களையும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி கோபு சார்.

   Delete
 6. //ரெயின்போ லாரிகீட் பறவைகள் ஒருமுறை இணை சேர்ந்தால் வாழ்நாள் முழுவதும் பிரியாது. இவற்றின் ஆயுட்காலம் சுமார் இருபது வருடங்கள்.//

  ஆஹா, அவை என்ன சில மனிதர்கள் போலவா? சண்டை, சச்சரவு, கோர்ட், கேஸ், டைவர்ஸ் என அலைய .... மிகவும் உத்தமமான தம்பதியினர் போலிருக்கு. :)

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. சண்டை சச்சரவு இல்லை என்று சொல்லமுடியாது. அவை இருக்குமிடத்தில் காச்மூச் என்று காதுகிழிக்கும் சத்தம். :))

   Delete
 7. ரெயின்போ லாரிகீட் - ஆஸ்திரேலியாவின் அதிசயம் 16

  வழக்கம்போல அழகான படங்களுடன் கூடிய அற்புதமான பதிவு. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் தொடர் கருத்துரைகளுக்கும் மிகுந்த நன்றி கோபு சார்.

   Delete
 8. கிளிகள் போன்றேதான் இருக்கின்றன. அழகாய் இருக்கின்றன. ஆனால் தொல்லை என்கிறீர்களே.. ஓ... அழகே தொல்லைதானோ! சுவாரஸ்யமான பதிவு.
  தம +1

  ReplyDelete
  Replies
  1. மிதமிஞ்சிப்போனால் தொல்லைதானே... ஆனால் எவ்வளவுமுறை பார்த்தாலும் சலிக்காத அழகு.. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் தமிழ் மண வாக்குக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. nice article
  thamiz manam +

  ReplyDelete
  Replies
  1. Thank you for your comment and thamiz manam vote. :))

   Delete
 10. அழகான பறவை நம் ஊர் கிளி மாதிரி நம்முடன் அன்பாய் பழகும் போல இருக்கிறது.
  கிளியின் உணவு போலவே லாரிகீட் பறவையும் சாப்பிடுது.
  உங்கள் மகிழ்ச்சி படத்தில் தெரிகிறது.
  படங்கள் . விவரங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஆனால் கிளி போல கொட்டைகளை உடைத்து உள்ளிருக்கும் பருப்புகளைத் தின்னும் வழக்கமில்லை. பழங்களின் சாறு, பூந்தேன் இவற்றைத்தான் பெரிதும் விரும்பியுண்ணும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

   Delete
 11. அந்தப் பூங்காவில் நானும் , 2002 இல் , உணவளித்திருக்கிறேன் .விவரமான கட்டுரைக்குப் பாராட்டு .

  ReplyDelete
  Replies
  1. அந்த ரசனையான அனுபவத்தைத் தாங்களும் அனுபவித்திருப்பதை அறிய மிகவும் மகிழ்ச்சி. இங்கு வீட்டுக்கொல்லைகளில் பூக்கள் பூத்துக்குலுங்கும்போதோ மரங்கள் பழுத்திருக்கும்போதோ பயமின்றி கூட்டம் கூட்டமாய் வந்திறங்குகின்றன. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

   Delete
 12. வானவில்லின் வர்ணஜாலம் லாரிகீட் பறவையின் இறக்கைகளில் ஜொலிக்கிறது. மிகவும் பொருத்தமான பெயர்! நம் அருகே அமர்ந்து உணவுன்பதைப் பார்க்கவே மகிழ்ச்சியாயிருக்கிறது. படங்களும் அழகு! சுவையான பதிவு!

  ReplyDelete
  Replies
  1. வசந்தகாலத்தில் காணுமிடமெல்லாம் லாரிகீட் பறவைகள் காட்சியளிக்கும். பூக்களும் இலைகளும் நிறைந்திருக்கும் மரங்களில் அவற்றைக் கண்டுபிடிப்பது சிரமம் என்றாலும் அவற்றின் காதுகிழிக்கும் சத்தம் காட்டிக்கொடுத்துவிடும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.

   Delete
 13. பறவைகள் பார்க்க அழகாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கின்றன.அழகிய புகைப்படங்களுடன் பகிர்ந்த விதம் நன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 14. அதிசயிக்கத் தக்க தகவல்கள்.
  அருமை சகோதரி.
  https://kovaikkavi.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.