டாஸ்மேனியன்
டெவில் (Tasmanian Devil) என்றால் Looney
Tunes உபயத்தால் நம்மை விடவும் நம் குழந்தைகளுக்கு நன்றாகவே
தெரியும். ஒரு குட்டி சூறாவளி போல் சுழன்றடித்து வந்து துறுதுறுவென்று எதையாவது தின்பதிலேயே
குறியாயிருக்கும் ஒரு கேரக்டர். கொஞ்சம் முரட்டுத்தனம் கொஞ்சம்
அப்பாவித்தனம் கலந்த Taz என்னும் டாஸ்மேனியன் டெவில்
செய்யும் அட்டகாசங்கள் காண்போர் எவரையும் ரசிக்கவைக்கும்.
டாஸ்மேனியன்
டெவில் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த தீவுமாநிலமான டாஸ்மேனியாவில் மட்டுமே காணப்படும்
விலங்கு என்பது அதன் தனித்துவச் சிறப்பு. ஒரு அடி உயரமும் எட்டு முதல் பத்து கிலோ
வரை எடையும், மிகப்பெரிய அகன்ற தலையும், குட்டையான தடித்த வாலும்
கொண்ட இதன் உடலானது, ஆப்பிரிக்க கழுதைப்புலிகளைப் போல் முன்பக்கத்
தோள்கள் உயர்ந்து உடல் பின்னோக்கி சரிந்து இருக்கும். ரோமம் கருநிறத்திலும்
மார்பிலும் முதுகிலும் சிறிய அளவிலான வெண்ணிறத் தீற்றல்களுடனோ அவை இல்லாமலோ
காணப்படும். வேகமாக ஓடக்கூடியவையாகவும், மரம் ஏறக்கூடியவையாகவும், நன்றாக
நீந்தக்கூடியவையாகவும் இருப்பது இவற்றின் சிறப்பு.
சாதாரணமாக
ஒரு மனிதனுடைய தலையின் எடை அவனுடைய உடல் எடையில் 8% இருக்குமாம். ஆனால் நன்கு வளர்ந்த டாஸ்மேனியன்
டெவில்களுக்கு அவற்றின் தலை எடை உடல் எடையில் கிட்டத்தட்ட 25% சதவீதம் என்றால் வியப்பாக உள்ளதல்லவா? எண்பது கிலோ
மனிதனுக்கு இருபது கிலோ தலை இருந்தால் எப்படியிருக்கும்? ஒவ்வொருவரும்
தலைக்கனத்துடன் திரியவேண்டியதுதான்.
டாஸ்மேனியன்
டெவில்கள் இரவு விலங்குகள். மலைப்பகுதிகளிலும், யூகலிப்டஸ் காடுகளிலும்
விவசாய நிலங்களிலும் வசிக்கும் இவை, பகல் நேரங்களில்
வளைக்குள்ளோ, உள்ளீடற்ற மரக்கட்டைகளுக்குள்ளோ படுத்துறங்கிவிட்டு, இரவுகளில் மட்டும் இரைதேடிப் போகும். இரைக்காக ஒவ்வொரு இரவும் தங்கள்
இருப்பிடத்திலிருந்து கிட்டத்தட்ட 10 முதல் 50 கி.மீ. தூரம் வரை உலவக்கூடியவை. குளிர் நாட்களில் மட்டும் பகல் நேரங்களில்
வெயிலில் படுத்து குளிர்காய்வதைக் காணலாம்.
பூச்சிகள்
மீன்கள், பறவைகள்,
தவளைகள் போன்றவற்றோடு போஸம் போன்ற சின்னச்சின்ன விலங்குகளையும்
வேட்டையாடித் தின்னும். கங்காரு இனத்தில் சிறியவைகளான வல்லபிகள் என்றால் மிகவும்
இஷ்டம். நீண்ட கூரான கால் நகங்கள் வளை தோண்டவும், வேட்டையாடும்
மிருகங்களை இறுகப் பற்றவும் உதவுகின்றன. இல்லையெனில் ஏழு கிலோ எடையுள்ள
டாஸ்மேனியன் டெவிலால் முப்பது கிலோ எடையுள்ள வாம்பேட்டை வீழ்த்தமுடியுமா? தனியாக வேட்டையாடினாலும் விருந்தெண்ணவோ சமபந்திதான். ஆம். தனித்தனியாக
வாழும் அவை இரையுண்ணும்போது பல ஒன்றாக சேர்ந்து உண்பதும், அனைத்தும்
ஒரே இடத்தைப் பொதுக் கழிப்பிடமாக உபயோகிப்பதும் விந்தை!
டாஸ்மேனியன்
டெவில்கள் அடிப்படையில் scavengers
அதாவது இறந்து அழுகியவற்றைத் தின்று வாழும் விலங்குகள். காட்டுக்குள் எந்த இடத்தில் விலங்குகள் இறந்துகிடந்தாலும் தன் அதீத
மோப்பத்திறனால் அந்த இடத்தைக் கண்டறிந்துவிடும். ஒரு இறந்த விலங்கின்
உடலை பல டாஸ்மேனியன் டெவில்கள் சூழ்ந்திருப்பதைப் பார்க்கையில் குப்பைத் தொட்டியை
நாய்கள் முற்றுகையிட்டிருப்பதைப் போல் இருக்கும். நாய்களைப் போலவே,
இவற்றிலும் ஆளுமை மிக்கது மற்றவற்றை விரட்ட முனைவதும், தங்களுக்குள் மூர்க்கமாகச் சண்டையிட்டுக் கொள்வதையும் கூட காணமுடியும்.
அவற்றின் நீளமான மீசை மயிர்கள் அந்த சமயத்தில் மிகவும் உதவுகின்றனவாம்.
இறந்துகிடக்கும் மிருகமொன்றை இருளில் பல டாஸ்மேனியன்
டெவில்கள் தின்னும்போது தனக்குப் பக்கத்தில் எவ்வளவு தூரத்தில் இன்னொரு
டாஸ்மேனியன் டெவில் இருக்கிறதென்பதை மிகுந்த தொடுதிறன் கொண்ட தங்கள் மீசை மயிர் மூலம்
அறிந்து எச்சரிக்கையாய் இருக்குமாம்.
டாஸ்மேனியன்
டெவிலின் உயிரியல் பெயரான Sarcophilus
harrisii என்பதற்கு மாமிச விரும்பி என்று பொருள். கார்ட்டூன்களில்
காட்டுவதைப் போன்று எதையும் கடித்துத் தின்னும் வகையில் பலம் வாய்ந்த தாடைகளும்
நீண்ட கூரிய பற்களும் கொண்டவை. டாஸ்மேனியன் டெவில்கள் ஒரு விலங்கைத் தின்னும்போது அதன்
உடலில் எலும்பு, ரோமம் என்று எதையும் விட்டுவைப்பதில்லை.
முள்ளம்பன்றி போன்ற எக்கிட்னாவை அதன் முட்களுடனேயே தின்று முட்களை கழிவோடு வெளியேற்றிவிடக்கூடியவை என்றால்
அவற்றின் சீரணத் திறனை வியக்காமலிருக்க முடியுமா?
பெரும்பாலான
ஆஸ்திரேலிய விலங்குகளைப் போலவே டாஸ்மேனியன் டெவிலும் ஒரு மார்சுபியல் விலங்குதான்.
இது ஒரு வளைவாழ் உயிரி என்பதால்,
வளை தோண்டும்போது வயிற்றுப்பைக்குள் மண் புகுந்து குட்டிகளை
பாதிக்காமலிருக்க ஏதுவாக இதன் வயிற்றுப்பை பின்னோக்கியத் திறப்பு கொண்டது. இதன் இனப்பெருக்க
காலம் மார்ச் முதல் மே வரை.
டாஸ்மேனியன்
டெவில்களின் இனப்பெருக்கமுறை விசித்திரமானது. இன்னார்க்கு இன்னாரென்ற எந்த
வரைமுறையுமின்றி ஒரு ஆண் பல பெண்களோடும்,
ஒரு பெண் பல ஆண்களோடும் இணையும். இரண்டு ஆண் டாஸ்மேனியன் டெவில்கள்
தங்கள் ஆளுமையை நிரூபிக்க தங்களுக்குள் சண்டையிடும்போது சுமோ வீரர்கள் மல்யுத்தம்
புரிவதைப் போன்று பின்னங்கால்களால் நின்றுகொண்டு முன்னங்கால்களாலும் தலையாலும்
எதிரியின் தோள்களில் மோதித்தள்ளும். முடிவில் வெற்றி பெற்ற ஆணுடன் பெண் இணையும்.
அதன்பின் கரு உறுதியாகும்வரை, அதாவது பிறக்கவிருக்கும் குட்டிகளுக்கு
தான்தான் தகப்பன் என்பது உறுதியாகும்வரை… தொடர்ந்து சில
நாட்களுக்கு ஆண், தன் இணையை எங்கும் வெளியில் செல்லவிடாமல்
தன் பாதுகாப்பிலேயே வைத்துக்கொள்ளும். இல்லாவிடில்… பெண்
அந்த ஆணை விட்டு அடுத்த ஆளுமை நிறைந்த ஆணிடம் சென்றுவிடுமாம்.
21 நாள் கர்ப்பத்துக்குப் பிறகு பெண் டாஸ்மேனியன் டெவில் இருபது முதல் முப்பது
வரையிலான குட்டிகளை ஈனும். டாஸ்மேனியன் டெவிலின் குட்டிகள் ‘pups,
joeys, imps’ என்ற பெயர்களில் குறிப்பிடப்படுகின்றன. இளஞ்சிவப்பு
வண்ணத்தில் நெல்மணி அளவிலான புழு போன்ற குட்டிகள் பிறந்த நொடியிலிருந்தே அவற்றின்
வாழ்க்கைப் போராட்டம் துவங்கிவிடுகிறது. ஏனெனில் இவற்றுள் நான்கே நான்கு
குட்டிகளுக்கு மட்டுமே வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கிறது இயற்கை. தாயின்
வயிற்றுப்பைக்குள் இருக்கும் நான்கு பால்காம்புகளை நோக்கி முட்டிமோதி ஒன்றையொன்று
முந்திச் சென்று தங்கள் பிறப்பைத் தக்கவைக்க வேண்டிய நிர்ப்பந்தம்.
பந்தயத்தில்
வென்ற நான்கு குட்டிகள் பால்காம்புகளைக் கவ்விக்கொள்ள வாய்க்குள் அவை வீங்கி
குட்டியைப் பத்திரமாகப் பிடித்துக்கொள்கின்றன. மற்ற குட்டிகளின் கதி? அதோகதிதான். வாழ்க்கைப்
போராட்டத்தில் வலிமையுள்ளவை மட்டுமே வாழும் என்ற நியதியை நினைத்து நம் மனத்தை
சமாதானப்படுத்திக் கொள்ளமுயன்றாலும் உள்ளே எங்கோ ஓர் ஆழத்தில் வலிப்பதென்னவோ
உண்மை.
பிறக்கும்போது
0.02 கிராம் எடையுள்ள குட்டிகள் நூறு நாளில் 200 கிராம் எடையளவுக்கு வளர்கின்றன. ஐந்து
மாதங்கள் வரை தாயின் வயிற்றுப்பைக்குள் வாழும் குட்டிகள் அதன் பின்னர், வளைக்குள் புல்லால் அமைக்கப்பட்ட
மெத்தைப்படுக்கையில் விடப்படுகின்றன. மனிதர்கள் புழங்கும் பகுதியாயிருந்தால்
தாய், வீடுகளிலிருந்து துணி, போர்வை,
தலையணைகளைத் திருடிவந்து குட்டிக்கு வசதி செய்து தரும். அடுத்த ஐந்தாவது மாதத்தில் குட்டிகள் தன்னிச்சையாய் இயங்க ஆரம்பித்துவிடுகின்றன.
இரண்டு வருடங்களில் பருவத்துக்கு வரும் அவற்றின் மொத்த ஆயுட்காலமே ஐந்தாறு
வருடங்கள்தாம்.
டாஸ்மேனியன்
டெவிலின் கரியநிறமும், கூரிய பற்களும், பிணந்தின்னும் வழக்கமும், முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் வண்ணம் வீறிட்டலறும் ஒலியும், அதன் உடலிலிருந்து வெளிப்படும் வீச்சமும், இரையுண்ணுகையில்
ஒன்றுக்கொன்று காட்டும் மூர்க்கமும் ஐரோப்பியக் குடியேறிகளை அச்சுறுத்தியதில் வியப்பென்ன?
பேய் என்று ஒன்று இருந்தால் இப்படித்தான் இருக்கும் என்று அவர்களை எண்ணவைத்து
டெவில்கள் என்று பெயரிடத் தூண்டியுள்ளது. தாமாக அன்பை வெளிப்படுத்தவோ,
நாம் வெளிப்படுத்தும் அன்பைப் புரிந்துகொள்ளவோ இயலாத டாஸ்மேனியன் டெவில்களை
எவரும் செல்லப்பிராணியாக வளர்க்க விரும்புவதில்லை. டாஸ்மேனியப்
பழங்குடியினர் இதற்கு வைத்தப் பெயர்கள் tarrabah, poirinnah, par-loo-mer-rer, Purinina போன்றவை.
ஆனால் இதில் எந்த வார்த்தைக்கும் பேய் என்ற பொருளில்லை என்பது
சுவாரசியம்.
டாஸ்மேனியன்
டெவில்கள் மனிதர்களைத் தின்னும் என்னும் நம்பிக்கை இன்னும் சில மக்களிடையே உள்ளது. புதர்க்காடுகளில் கொலை,
தற்கொலைகள் காரணமாக கிடக்கும் உடல்களை டாஸ்மேனியன் டெவில்கள்
தின்னுவதைக் கண்டவர்கள் எழுப்பிய அச்சமாக இருக்கலாம் என்று கூறப்பட்டாலும் எவரும்
புதர்க்காடுகளில் தனியே செல்வதற்குத் துணிவதில்லை.
1954
ஆம் ஆண்டுதான் Looney
Tunes –ஆல் முதன் முதலில் டாஸ்மேனியன் டெவில் உலகுக்கு
அறிமுகப்படுத்தப்பட்டது. 1964 வரை சக்கைப்போடு போட்ட அந்த கேரக்டர் அதன்பிறகு
கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 1990 இல் அந்த கேரக்டரை மறுபடியும் Taz-Mania
என்ற பெயரில் அறிமுகப்படுத்த மீண்டும் அது பிரபலமாயிற்று. தங்கள்
நாட்டைச் சார்ந்த ஒரு விலங்குக்கு உலகளவில் இருக்கும் மகத்துவம் அறிந்த பல
டாஸ்மேனிய நிறுவனங்களும், அமைப்புகளும் தங்களுக்கு இல்லாத
உரிமையா என்ற எண்ணத்தில் தங்கள் விளம்பரத்துக்கு இந்த உருவத்தைப் பயன்படுத்த
ஆரம்பித்திருந்தன.
1997
இல் ஒரு பத்திரிகை, டாஸ்மேனியன் டெவில் என்ற பெயரும் உருவமும் சட்டப்படி வார்னர் பிரதர்ஸுக்கு
உரிமையானது என்று பிரச்சனையைக் கிளப்பிவிட, அது குறித்து
வருடக்கணக்காக வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. முடிவில் டாஸ்மேனியாவின் பிரதிநிதி
ஒருவரும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் சந்தித்து வாய்மொழி ஒப்பந்தமொன்றை பரிமாறிக்கொணடனர். அதன்படி டாஸ் என்னும் டாஸ்மேனியன் டெவில் சின்னத்தைப் பயன்படுத்துவதற்காக,
வருடந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வார்னர் பிரதர்ஸுக்கு
டாஸ்மேனிய சுற்றுலாத்துறை செலுத்திவிடவேண்டுமென்று அறிவிக்கப்பட்டது. ஆனால்…
சமீப காலமாக, டாஸ்மேனியன் டெவில்களைத்
தாக்கும் முகப்புற்றுநோய் ஆராய்ச்சிக்காக டாஸ்மேனிய அரசு ஏராளமாய் செலவழிப்பதை அறிந்த
வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், அந்த ஒப்பந்தத்தை 2006 ஆம்
ஆண்டிலிருந்து விலக்கிக்கொண்டுவிட்டதாம்.
மார்சுபியல் தாவர உண்ணிகளில் பெரியது
கங்காரு எனில் மார்சுபியல் மாமிச
உண்ணிகளில் பெரியது டாஸ்மேனியன் டெவில். இதற்குமுன் வாழ்ந்த மிகப்பெரிய
மார்சுபியல் மாமிச உண்ணி தைலாஸின் (thylacine). 1936 இல் உலகின் கடைசி தைலாஸின் இறந்துபோன பிறகு அடுத்ததாய் அப்பெருமை
இதைச் சார்ந்துள்ளது. ஆனால் இவையும் இப்போது அருகிவரும் உயிரினங்கள் பட்டியலில்
இடம்பிடித்துவிட்டன. இனம் தழைப்பதற்கான முயற்சி எடுக்கப்படாவிடில் இன்னும்
இருபத்தைந்து ஆண்டுகளில் இவ்வினம் முற்றிலுமாய் அழிந்துவிட வாய்ப்புள்ளதாக
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில்
கிட்டத்தட்ட 3000 வருடங்களுக்கு முன்புவரை அவை வாழ்ந்திருந்ததாக பெரும்பாலான
புதையெலும்புப் படிமச்சான்றுகள் தெரிவிக்கின்றன. தெற்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்த
ஒரு பல் ஆஸ்திரேலியாவில் 450 ஆண்டுகளுக்கு முன்புவரை டாஸ்மேனியன் டெவில்கள்
வாழ்ந்திருக்கலாம் என்னும் கருத்தை முன்வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின்
பெருநிலப்பரப்பில் 15000 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான டிங்கோ நாய்களின்
பெருக்கம் காரணமாக இவை அங்கு அழிந்துபோயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
டாஸ்மேனியாவில் டிங்கோ நாயினம்
கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவற்றுக்கு
பதில் செந்நரிகள் உண்டு. அவை டாஸ்மேனியன் டெவில்கள் வளையில் இல்லாத நேரங்களில் வளை புகுந்து
குட்டிகளைக் கொன்றுதின்றுவிடும். சட்டத்துக்குப்
புறம்பான வகையில் டாஸ்மேனியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட செந்நரிகள்
மற்றும்
வளர்ப்பாரின்றித் திரியும் நாய்கள்,
பூனைகள் இவற்றின் எண்ணிக்கை டாஸ்மேனியன்
டெவில்களால் மட்டுமே கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
1990 களின் பிற்பகுதியில் டாஸ்மேனியன்
டெவில்களைத் தாக்க ஆரம்பித்த முகப்புற்றுநோய் காரணமாக அவற்றின் இறப்புவிகிதம்
பெருமளவில் அதிகரித்து எண்ணிக்கை சரியத் தொடங்கியது. 2008 ஆம் ஆண்டு அவை அருகிவரும் இனமாக அறிவிக்கப்பட்டன. நோய்த்தடுப்பு
வழிமுறைகள் பற்றியும் சரணாலயங்கள் அமைத்து நோயற்ற சந்ததிகளை உருவாக்கும்
முயற்சிகள் பற்றியும் டாஸ்மேனிய அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும்பொருட்டு டாஸ்மேனியாவில் 19 மீட்டர் உயரமும் 35 மீட்டர் நீளமும் கொண்ட பிரமாண்ட
டாஸ்மேனியன் டெவில் சிலையொன்று பல மில்லியன் டாலர்கள் செலவில் நிர்மாணிக்கத்
திட்டமிடப்பட்டுள்ளது.
காடுகளிலும் வயற்புறங்களிலும்
இறந்துபோன மிருகங்களை உடனுக்குடன் தின்று சுத்தப்படுத்தும் துப்புரவுப் பணியாளர்களான அவை இல்லையென்றால்….? அங்கங்கே நாறிக்கிடக்கும்
அழுகிய பிணங்களால் நோய்களும் கிருமிகளும் காட்டு மிருகங்களுக்கு மட்டுமல்ல,
கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் கூட பரவும் அபாயம் உள்ளது.
காடு வளமாயிருந்தால்தானே நாடு வளம்பெற முடியும்!
******************************
(படங்கள்: நன்றி இணையம்)