17 July 2014

பேரரண் பவளப்பாறைத் திட்டு - ஆஸ்திரேலியாவின் அதிசயம் 12


நவரத்தினங்கள் என்னென்ன என்று நமக்குத் தெரியும். அவை எங்கிருந்து கிடைக்கின்றன என்று தெரியுமா? வைரம், வைடூரியம், முத்து, பவளம், கோமேதகம், மரகதம், நீலம், புஷ்பராகம், மாணிக்கம் இவற்றுள்  முத்தையும் பவளத்தையும் தவிர்த்த மற்ற அனைத்தும் மண்ணிலிருந்து கிடைக்கின்றன. முத்துக்கும் பவளத்துக்கும் கடல்தான் தாய்வீடு. சிப்பியிலிருந்து முத்தும் பவளப் பாறைகளிலிருந்து பவளமும் கிடைக்கின்றன என்பதை அறிவோம். கடலிலிருந்து கிடைக்கின்றன என்பதோடு இந்த இரண்டுக்கும் இன்னுமொரு ஒற்றுமை உண்டு. என்னவென்று யூகியுங்கள் பார்ப்போம். சரி, அதற்குமுன் சில கேள்விகள்பவளப்பாறை என்று  சொல்கிறோமேஅது உண்மையில் என்ன? பாறைதானா? அது எப்படி உருவாகிறது?


ஆஸ்திரேலியாவின் அதிசயத்தைக் குறிப்பிடுவதாகச் சொல்லிவிட்டு பவளம் பற்றிப் பேசுகிறாளே என்று நினைக்கிறீர்களா? காரணம் உண்டு. ஆஸ்திரேலியாவிலுள்ள பேரரண் பவளப்பாறைத் திட்டு பற்றிய முன்னோட்டம்தான் அது. உலகின் பல கடற்பகுதிகளில் பவளப்பாறைகள் காணப்பட்டாலும் உலகளவில் மிகப்பெரியது Great Barrier Reef எனப்படும் இந்த பவளப்பாறைத் திட்டாகும். உலகின் ஏழு இயற்கை அதிசயங்களுள் ஒன்றான இப்பவளப்பாறை அரண், சீனப்பெருஞ்சுவரை விடப் பெரியதென்பதும் விண்வெளியிலிருந்து பார்க்கக் கிடைக்கும் வாழும் அதிசயம் இதுவொன்றுதான் என்பதும் வியப்பான செய்திகள் அல்லவா? 


பவளப்பாறைத் திட்டு என்று குறிப்பிட்டாலும் செம்பவளம் தவிர இன்னும் பல்வேறு கோடிக்கணக்கான உயிரிகளைக் கொண்ட திட்டு இது. என் கேள்விக்கான பதில் இப்போது கிடைத்திருக்குமேமுத்தைப் போலவே பவளமும் ஒரு உயிரினத்தால் உருவாகிறது என்பதுதான் அந்த மற்றொரு ஒற்றுமை. இறந்துவிட்ட உயிரிகளின் கூடுகள்தாம் நாளடைவில் பாறைகளாய் மாறுகின்றன. அரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவை உருவாகத் துவங்கியிருக்கலாம் என்று கடலியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


யுனெஸ்கோ நிறுவனத்தால் 1981 ஆம் ஆண்டு முதல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டானது, ஆஸ்திரேலியாவின் கிழக்கே பவளக் கடலில் குவீன்ஸ்லாந்து மாநிலக் கடற்கரைக்கு இணையாக கடற்கரையை விட்டுத் தள்ளி 15 கி.மீ. முதல் 150 கி,மீ வரையிலான தூரத்தில் கிட்டத்தட்ட 3000 கி.மீ.க்கும் அதிகமான நீளத்துக்கு 2900 தனித்தனி பாறைகளும் 900 தீவுப்பாறைகளுமாய் வானவில் வண்ணங்களில் கண்ணைப் பறிக்கும் அழகுடன் கிட்டத்தட்ட 3,44,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு விரவிக்கிடக்கின்றது. இது குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் மாநில அடையாளமாகவும் மதிக்கப்படுகிறது.


கடற்பூங்கா என்று கடற்காதலர்களால் அழைக்கப்படும் வண்ணமயமான இப்பாறைத்திட்டானது, ஆகாயத்தில் பறந்தபடியோ, கடலுக்கு மேல் பயணித்தபடியோ, ஆழ்கடலுக்குள் மூழ்கிச் சென்றோ எப்படிப் பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகளின் கண்களைக் கவரும் வண்ணம், மனம் கொள்ளை கொள்ளும் வண்ணம் வண்ணமயமாயிருப்பது இதன் தனித்துவம். சுற்றுலாப் பயணிகளைச் சுண்டியிழுக்கும் இப்பவளப்பாறைத் திட்டினால் மட்டும் சுற்றுலாத்துறைக்கு வருடத்துக்கு தோராயமாக 750 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் வருமானம் வருகிறதாம். ஆழ்கடல் மூழ்குவோர் பவள உயிரிகளின் அருகில் சென்றாலும் எவற்றையும் தொடக்கூடாது என்பது சட்டம்.


இந்த பேரரண் பவளப் பாறைத் திட்டைச் சார்ந்து வாழும் உயிரினங்கள் என்னென்னவென்று பார்ப்போமா?
 •         600 விதமான கடின மற்றும் மென் பவள உயிரிகள்,
 •         30 வகை திமிங்கலம், டால்ஃபின், கடற்பன்றி போன்றவை,
 •         133 வகையான சுறா, திருக்கை மீன் இனங்கள்,
 •         1625 விதமான இதர மீன் வகைகள்
 •         100 க்கும் மேற்பட்ட ஜெல்லிமீன் வகைகள்,
 •         1300 வகையான நண்டு, இறால் இனங்கள்
 •         500 வகை புழுக்கள்,
 •         630 வகையான நட்சத்திர மீன் இனங்கள்
 •         5000 வகையான நத்தை, சிப்பி வகையறாக்கள்,
 •         17 வகையான கடற்பாம்புகள்,
 •         6 வகையான ஆமைகள்,
 •         9 வகை கடற்குதிரைகள்
 •         5 வகை கடற்சிலந்திகள்,
 •         20 வகை கடற்பூச்சிகள்,
 •         20 வகையான ஊர்வன
 •         வடபகுதியில் காணப்படும் உப்புநீர் முதலைகள்
 •         40 வகை கடற்தாவரங்கள்,
 •         ஏராளமான கடற்பாசி வகைகள்,
 •         15 வகையான கடற்புற்கள்,
 •         220 வகையான பறவைகள்
இப்படிப் பல்லாயிரக்கணக்கான ஜீவராசிகளுக்கும் இந்த பவளப்பாறை அரண் அடைக்கலம் என்பது சிறப்பு.  


இவற்றுள் 120 வயதைத் தாண்டிய பெரிய பெரிய பச்சைக் கடலாமைகளும் அடக்கம் என்பதும் கூனல்முதுகுத் திமிங்கலங்கள் பேறுகாலத்தின்போது அண்டார்டிகாவிலிருந்து புலம்பெயர்ந்து இங்கு வந்துதான் பிள்ளைபெற்றுச் செல்கின்றன என்பதும் வருடத்துக்கு 1.4 முதல் 1.7 மில்லியன் வரையிலான கடற்பறவைகள் இப்பகுதியில் உள்ள தீவுகளில் கூடு கட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன என்பதும் கூடுதல் சிறப்புத் தகவல்கள். கடற்கரையை ஒட்டியுள்ள சதுப்புநிலக் காடுகளிலும் தீவுகளிலும் 2200 வகையான தாவர இனங்கள் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளன.  பவள உயிரிகள் வருடத்துக்கு 1 செ.மீ முதல் 25 செ.மீ வரை நீளவாக்கிலும் 1 செ.மீ. முதல் 3 செ.மீ வரை குறுக்குவாக்கிலும் வளர்கின்றன.  இவை வளர்வதற்கு சூரிய ஒளி தேவையென்பதால் கடல்மட்டத்திலிருந்து 150 மீட்டர் அளவிலான ஆழத்திலேயே வளர்கின்றன. கடல்மட்டத்துக்கு மேலாக வளர்வதில்லை.

பவள உயிரிகள் (corals) பார்ப்பதற்கு செடிகளைப் போன்று இருந்தாலும் அவை ஜெல்லிமீன் போன்ற விலங்குகளே. பவள உயிர்களின் கடினத்தன்மைக்கு அவற்றிலுள்ள சுண்ணாம்புச்சத்துக்களே காரணம். முன்பே குறிப்பிட்டது போல் இறந்துபோன பவள உயிரிகள் பாறைகளாகத் தங்கிவிடுகின்றன. அவற்றின்மேல் புதிய உயிர்கள் தோன்றி வளர்கின்றன. மென்பவள உயிரிக்கு முதுகெலும்பு கிடையாது. அவை நீரோட்டத்தில் அசைவதைப் பார்த்தால் தாவரமென்றே எண்ணத்தோன்றும். இவை லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் காலனியாக கூடி வாழக்கூடியவை. ஒவ்வொன்றுக்கும் ஆறு அல்லது எட்டு பற்றிழைகள் இருக்கும்.


தாவரங்கள் சூரிய ஒளியைக் கொண்டு உணவு தயாரிப்பதைப் போலவே இவையும் தங்களுக்கான உணவைத் தாங்களே தயாரிக்கின்றன. மேலும் பிளாங்க்டன் என்னும் நுண்ணுயிரிகளைகளையும் உணவாக உண்டு உயிர்வாழ்கின்றன. சில பவள உயிரிகள் சின்ன மீன்களைத் தின்னும். தங்கள் நீண்ட பற்றிழைகளால் மீனைப் பிடித்து ஒருவித விஷத்தைச் செலுத்தி முதலில் செயலிழக்கச் செய்துவிட்டு பிறகு உண்கின்றன. 

தாவர இனம் பெருக விதை, பதியன், போத்து, ஒட்டு, விழுது என்று ஏராள விதம் இருப்பது போல் பவள உயிரிகளிலும் இனப்பெருக்கம் பல விதங்களில் நடைபெறுகிறது. பெரும்பாலான பவள உயிரிகள் இருபாலின உயிரிகளே.

* ஒரே நேரத்தில் சினை முட்டைகளும் உயிரணுக்களும் நீரில் வெளியிடப்பட்டு இனப்பெருக்கம் நடைபெறுவது (spawning) ஒருவிதம்.

* உள்ளேயே கருவுற்ற முட்டையிலிருந்து லார்வாவை வெளித்தள்ளுதல் (Brooding) மற்றொரு விதம்.

செடியில் தளிர்கள் துளிர்ப்பது போல் பவள உயிரியின் உடலின் வெளிப்புறத்தில் புதிய உயிர்கள் மொட்டுப் போல் தோன்றி வளர்வது (budding) இன்னொரு விதம்.    

உயிரணுச் சேர்க்கையின்றியே கருக்கள் உருவாகி வளர்வதும் (Parthenogenesis) சில இனங்களில் உண்டு.        

மடியுந்தருவாயிலிருக்கும் ஒரு பவள உயிரி உதிர்ந்து விழ, அது இருந்த இடத்தில் ஒரு புதிய உயிரி தோன்றுவதும் (Coral bail out) ஒருவிதமான இனப்பெருக்கம். 

இவற்றுள் பெரும்பான்மையாக நடைபெறுவது spawning. இது வருடத்துக்கு ஒருமுறை ஒருவார கால அளவுக்கு இரவுநேரங்களில் மட்டும் நடைபெறும். முழுநிலா நாளுக்குப் பிறகு, நீரின் வெப்பம், பகற்பொழுதின் நீளம், அலை உயரம், நீரின் உவர்த்தன்மை போன்ற காரணிகளைப் பொறுத்து தூண்டுதல் பெற்று பவளப்பாறைத் திட்டின் பவள உயிரிகள் சினைமுட்டை மற்றும் உயிரணுக்களை ஒரே சமயத்தில் வெளியிடுகின்றன. அதைப் பார்ப்பதற்கு கடலுக்கடியில் ஒரு  பனிப்புயலைப் போல் ஆனால் வண்ணமயமாகத் தோற்றமளிக்கும். இந்த சமயம்தான் மீன்களுக்கு நல்ல விருந்துணவுத் தருணம். மீன்கள் கபளீகரம் செய்தவை போக, தப்பிக் கருவுற்ற முட்டைகளிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் பல வாரங்களுக்கு நீரில் நீந்தியபடியே வாழ்கின்றன. இறுதியாக ஓரிடத்தில் நிலைபெற்று வளர்ந்து தங்கள் காலனியை உருவாக்குகின்றன.


நூற்றுக்கணக்கான பவள உயிரி இனங்கள் இருப்பதாக அறிந்தோம். எல்லாம் ஒரே சமயத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு முட்டைகளையும் உயிரணுக்களையும் வெளியேற்றினால் குளறுபடி நேராதா? கோடிக்கணக்கானவற்றுள் ஒரே இனத்தைச் சார்ந்த முட்டையும் உயிரணுவும் இணைதல் எப்படி சாத்தியம்? என்ற ஐயம் நமக்கு நேரலாம். ஆனால் இந்த சிந்தனை அவற்றுக்கும் உண்டு என்பது விந்தை. நாம் நினைப்பது போன்று குளறுபடிகள் உண்டாகி கலப்பினங்கள் உருவாவதைத் தவிர்க்க அவை முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகின்றன. எப்படி தெரியுமா? அந்த ஒருவார காலத்திலேயே ஒவ்வொரு இனமும் தங்களுக்குள் முறை வைத்து தங்கள் கடமையை ஆற்றி தம் இனத்தை வாழ்விக்கின்றன. இயற்கைதான் எவ்வளவு ஆச்சரியத்தைத் தன்னகத்தே அடக்கியுள்ளது!   பல்லுயிர்களின் வாழ்விடமான இவ்வரண் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருப்பது நமக்கு வருத்தம் தரும் செய்தி. பேரரண் பவளப்பாறைத்திட்டு கடற்பூங்கா அமைப்புசுற்றுலாப் பயணிகளின் வருகையையும்மீன்பிடித் தொழிலையும் ஓரளவு கட்டுக்குள் வைத்து பவளப்பாறைகளுக்கு சேதமுண்டாகாமல் பாதுகாக்கிறது. ஆனால் காலநிலை மாற்றத்தாலும்கடலில் கலக்கும் மாசடைந்த நீராலும்பவள நுண்ணுயிரிகளின் எதிரியான முள்முடி நட்சத்திர மீன்களாலும் பவளப்பாறைகளுக்கு ஆபத்து உண்டாவதாக அறியப்பட்டுள்ளது.

இயற்கையைப் போற்றி வணங்கி வழிபடும் பூர்வகுடி மக்களின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நம்பிக்கையில் இப்பவளப்பாறைத் திட்டுக்கு முக்கிய இடமுண்டு என்பதில் வியப்பென்ன? ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களும் தோரஸ் தீவுவாசிகளுமே இந்த பவளப்பாறை அரணுக்கு பரம்பரை பட்டாதாரர்கள். கிட்டத்தட்ட 70 பிரிவுகளுக்கும் மேலான பழங்குடியினத்தினர் தங்கள் நிலத்தையும் கடற்புரத்தையும் தலைமுறை தலைமுறைகளாய்க் காக்கும் பொறுப்பைக் கைக்கொண்டுள்ளனர். 

டியூகாங் (Dugong)
டியூகாங் எனப்படும் கடற்பசுக்களை வேட்டையாடும் வழக்கம் ஒருசில ஆஸ்திரேலியப் பூர்வகுடியினரிடையே பண்டைக்காலம்தொட்டு இருந்துவந்துள்ளது. திருமணம் மற்றும் கல்லறைக்கல் நடுவிழா போன்ற வைபவங்களுக்கு விருந்தாக கடற்பசுவின் மாமிசம் சமைத்துப் பரிமாறப்படுகிறது.  அதனுடைய மண்டையோடு பூர்வகுடி சிறார்கள் பதின்மவயது பூர்த்தியடையும்போது நடத்தப்படும் சடங்கில் இடம்பெறுகிறது. பூர்வகுடி மக்களின் கலாச்சாரம் பேணும் முயற்சியின் ஒரு பகுதியாக அவர்கள் தொடர்ந்து கடற்பசு வேட்டையில் ஈடுபட அரசு அனுமதி அளித்துள்ளது.  மோட்டார் படகுகள், மீன்பிடி தொழில்நுட்பம் மற்றும் குளிர்சாதன வசதிகள் காரணமாக வேட்டையின் அளவு அதிகரித்து வருடத்துக்கு கிட்டத்தட்ட ஆயிரம் கடற்பசுக்கள் வேட்டையாடப்படுவது சுற்றுப்புற ஆர்வலர்களிடையே பெருத்த கவலை எழுப்பியுள்ளது. பேரரண் பவளப்பாறைத் திட்டினைப் பாதுகாக்கும் பொறுப்பில் கடற்பூங்கா அமைப்பு பூர்வகுடியினரையும் இணைத்து செயலாற்றத் தூண்டுவதன் மூலம் இவ்வரணின் அழிவைத் தவிர்க்க இயலுமென்பது கணிப்பு.


********************

(படங்களுக்கு நன்றி - இணையம்)

35 comments:

 1. பவளம் பற்றிய அரிய தகவல்களை அறிய வைத்தமைக்கு நன்றி. அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 2. இந்தியா ஸ்ரீலங்கா வுக்கு இடையே சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிர்ப்புக்கு ஒரு காரணம் அங்கிருக்கும் பவளப் பாறைகள் அழிக்கப் பட்டுவிடும் பயம் என்று படித்த நினைவு ஒரு ஆசிரியைக்கான லாகவத்துடன் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய கருத்தும் பாராட்டும் தொடர்ந்து எழுதும் உற்சாகத்தைத் தருகிறது. மிக்க நன்றி ஐயா.

   Delete
 3. Anonymous17/7/14 21:38

  மிக அருமையான ஆக்கம்
  அரிய தகவல்கள்.
  மிக்க நன்றி.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.

   Delete
 4. அம்மாடியோவ் படிக்கப்படிக்க பிரமாண்டமாய் இருக்கிறது சகோதரி

  ReplyDelete
  Replies
  1. பதிவை ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி கில்லர்ஜி.

   Delete
 5. மிக அருமையான பதிவு. படிக்க படிக்க நிறைய விஷயங்களை கல்ர்ஃபுல்லாக தெரிந்து கொள்ள முடிந்தது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி அமுதா.

   Delete
 6. இதுபோன்ற பதிவுகளிலிருந்து ஏராளமான வியப்பளிக்கும் புதிய தகவல்கள் அறிய முடிகின்றன. ஒவ்வொன்றும் படிக்கப்படிக்க மிகவும் பிரமிப்பாக உள்ளது. படங்களெல்லாம் நம்மையும் கடலுக்கடியில் கொண்டு செல்கின்றன. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. படங்களுக்கு கூகுளாருக்குதான் நன்றி சொல்லவேண்டும் கோபு சார். படங்கள் இல்லாவிடில் பதிவின் சுவாரசியம் குறைவாகத்தானே இருக்கும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

   Delete
 7. எவ்வளவு அற்புதங்களை தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது இயற்கை! அருமையாக தொகுத்து தந்துள்ளீர்கள் தோழி...

  ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களும் தோரஸ் தீவுவாசிகளுமே இந்த பவளப்பாறை அரணுக்கு பரம்பரை பட்டாதாரர்கள். கிட்டத்தட்ட 70 பிரிவுகளுக்கும் மேலான பழங்குடியினத்தினர் தங்கள் நிலத்தையும் கடற்புரத்தையும் தலைமுறை தலைமுறைகளாய்க் காக்கும் பொறுப்பைக் கைக்கொண்டுள்ளனர். //

  பாராட்டுக்குரியோர்!! ஆனாலும் இவர்கள் கடற்பசுவின் மேல் கருணை காட்ட வேண்டியவராவர்.

  காலநிலை மாற்றத்தாலும், கடலில் கலக்கும் மாசடைந்த நீராலும், பவள நுண்ணுயிரிகளின் எதிரியான முள்முடி நட்சத்திர மீன்களாலும் பவளப்பாறைகளுக்கு ஆபத்து //

  முன்னும் பின்னும் நம் கையில் இல்லை. மாசடைந்த நீரைக் கடலில் கலப்பதை தவிர்ப்பது நம்மால் இயன்றதே!

  ReplyDelete
  Replies
  1. வெகுநாட்களுக்குப் பின்னர் தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி நிலாமகள். நலம்தானே?

   மாசடைந்த நீரைக் கடலில் கலப்பதைத் தவிர்ப்பது நம் கையில் என்பது சரியே. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

   Delete
 8. பவழ மணிகள் அணிந்த மூதாட்டிகளை பார்த்து இருக்கிறேன்! பவழங்களுக்குப் பின்னால் இத்தனை தகவல்கள் இருக்கும் என்று யோசித்தது இல்லை! வியக்க வைக்கும் தகவல்கள்! அழகான படங்கள்! அறிவியல் பூர்வமான பதிவு! நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்துக் கருத்திட்டமைக்கும் மிகவும் நன்றி சுரேஷ்.

   Delete
 9. பவளப் பாறைகள் குறித்த பல்வேறு தகவல்களின் தொகுப்பு படிப்பதற்கு ஆர்வம் தருவனவாக இருந்தன.
  த.ம.1

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா.

   Delete
 10. பவளப் பாறைத் திட்டைச் சார்ந்து வாழும் உயிரினங்கள் பற்றிய தகவல் அருமை.

  கலப்பினங்கள் உருவாவதைத் தவிர்க்க அவைகள் முறை வைய்த்து செயல்படுவது, எல்லா விஷ்யங்களும் வியக்க வைக்கிறது.
  படங்கள் எல்லாம் மிக அழகு.
  உங்களுக்கு நன்றி.
  த,ம. 2

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மேடம். இயற்கையின் அதிசயம் வியக்கத்தான் வைக்கிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 11. பவளப் பாறைகள் குறித்த தகவல்களின் தொகுப்பு படித்துக் கொண்டே இருக்க வைக்கின்றது. ஆர்வத்தைத் தூண்டும் அழகான எழுத்துநடை. அருமை!

  பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் கீதமஞ்சரி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி தோழி.

   Delete
 12. வணக்கம்
  சகோதரி
  புதிய பரினாமத்தில் புதிய தகவலுடன் பதிவு ஒளிர்கிறது அறிய முடியாத பல தகவலை அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
  த.ம 4வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 13. ஆச்சரியமான தகவல்கள்..

  கடல்பசுக்கள் ,டால்பின்கள் எல்லாம் வெகு வேகமாக வேட்டையாடி அழிக்கப்படுவது சோகம்..

  பவளப்பாறைகளைக் காண் சுற்றுலா அழைத்துச்செல்கிறார்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

   Delete
 14. பயன் தரும் பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 15. அழகிய படங்களுடன் பல்வேறு வியக்க வைக்கும் தகவல்கள்... நன்றி சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 16. கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சென்றதில்லை.
  தங்களின் பதிவு மூலம் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது, பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நானும் போனது இல்லை சொக்கன். வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை பார்க்க ஆசைதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

   Delete
 17. என் பதிவில் உங்கள் 10 கேள்விகளுக்கான பதிகள். . for your inf.

  ReplyDelete
  Replies
  1. நல்லது ஐயா. வாசித்துக் கருத்திட்டேன்.

   Delete
 18. எத்தனை விஷயங்கள் அழகான படங்களுடன்... பிரமிக்க வைக்கிறீங்க கீதா.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.