12 May 2014

ஆஸ்திரேலிய மேக்பை - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் 10


கசாப்புக்கார பறவைகள் பற்றி அறிந்திருக்கிறீர்களா? கசாப்புக்காரன் தான் வெட்டிய இறைச்சியைக் கொக்கியில் தொங்கவிட்டிருப்பதைப் போன்று தாங்கள் வேட்டையாடிய இரையை மரக்கிளையிலோ  மர இடுக்கிலோ தொங்கவிடுவதால் இப்பறவைகளுக்கு கசாப்புக்கார பறவைகள் (Butcher birds) என்று பெயர். இரையைத் தின்ன ஏதுவாகவோ, நிறைய இரையைச் சேமித்துவைக்கவோ, அல்லது தன் இணையைக் கவரவோ இதுபோன்று செய்யும் இந்த கசாப்புக்கார பறவை இனத்தின் நெருங்கிய உறவுதான் ஆஸ்திரேலியாவிலும் நியூகினியா, நியூஸிலாந்து, ஃபிஜி தீவுகளிலும் காணப்படும்ஆஸ்திரேலிய மேக்பை பறவைகள். 


மேக்பைகள் கருப்பு வெள்ளை நிறத்தில் பார்ப்பதற்கு காக்கைகள் போல் இருக்கும். பொன்பழுப்பு நிறக்கண்களும்,  கூரான கொக்கிபோல் வளைந்த வெளிர்நீலம் மற்றும் கருப்பு கலந்த அலகும் கொண்ட இவற்றுள் ஆண் பெண் பேதமறிதல் அரிது. நீளமான கால்களைக் கொண்டிருப்பதால் மற்ற பறவைகளைப் போல தத்தித் தத்தியோஅசைந்து அசைந்தோ செல்லாமல் அழகாக நடந்து செல்லக் கூடியவை. இவற்றின் ஆயுட்காலம் 25 - 30 வருடங்கள் இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பார்ப்பதற்கு காக்கை போல் இருந்தாலும் குரலென்னவோ குயிலை விடவும் இனிமையானது. புல்லாங்குழல் பறவை என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய மேக்பையின் பாடல்கள் பல சிக்கலான இசைக்கோர்வையைக் கொண்டவை. நான்கு சுரங்களுள் மாறி மாறி இசைபாடும் திறனும் நாற்பதுக்கும் மேற்பட்ட பறவை மிருகங்களின் குரல்களைப் போலவே ஒலிக்கும் திறனும் கொண்ட அதி விநோதப் பறவை இது. இதனால் நாய் போல குரைக்கவும் குதிரை போல கனைக்கவும் முடியும். மனிதர்களோடு நெருங்கிவாழும் சில பகுதிகளில் மனிதர்களின் குரலையும் மிமிக்ரி செய்யக்கூடியது மேக்பை.


ஆஸ்திரேலிய மேக்பை இனத்தில் மூன்று பிரிவுகள் உண்டு. கருநிற முதுகு கொண்ட மேக்பை, வெண்ணிற முதுகு கொண்ட மேக்பை மற்றும் மேற்கு பிராந்திய மேக்பை. இப்பிரிவுகளுக்குள் கலப்புமணம் நடைபெற்று இன்னும் ஒன்பது உப பிரிவுகள் உண்டாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.க்வாடுல் ஊடுல் ஆடுல் வாடுல் டூடுல்….

மேக்பையின் பாடலிசையை தன் கவிதையொன்றில் இவ்வாறுதான் குறிப்பிடுகிறார் நியூஸிலாந்து கவிஞர் டெனிஸ் க்ளோவர். தனித்திருக்கும்போது மேக்பை பாடும் பாடலானது மிகவும் இதமான மெல்லிசையாய் மனம் உருக்கும். அதன் இனப்பெருக்க காலம் முடியுந்தருவாயில் அவ்வின்னிசை மெல்லிய சோக கீதமாக இசைக்கப்படுகிறதாம். 

இனப்பெருக்கக் காலத்தின் ஆரம்பகட்டத்தில் தங்கள் எல்லைப்பகுதியை அறிவிப்பது போல், ஆணும் பெண்ணும் இணைந்து பெருத்த குரலெடுத்து காதல் கீதம் இசைக்கின்றன. குளிர்காலம் மற்றும் வசந்தகாலத்தின் விடியற்காலையிலும், அந்திப்பொழுதிலும் பல மேக்பை பறவைகள் ஒன்றுகூடி கோரஸாகப் பாடும் சேர்ந்திசைப் பாடல்கள் ஆஸ்திரேலியாவில் மிகப் பிரசித்தம். மேக்பைகள் பாடும்போது தங்கள் கழுத்தை ஒருபுறமாய் சாய்த்து, நெஞ்சை நிமிர்த்தி, இறக்கைகளைப் பின்னோக்கித் தள்ளியபடி பாடும். இரைக்காக இறைஞ்சும் குஞ்சுகள் உச்சத்தாயியில் கத்துவதும் ஒரு பாடல்ரகம். ஆபத்து வந்தால் எச்சரிப்பதும் ஒரு வித ராகம்.


இப்பறவையின் கானமும் பயிரழிக்கும் பூச்சிகளைத் தின்னும் வழக்கமும் இவற்றை விவசாயிகளின் நண்பர்களாக்கியிருக்கிறது. தெற்கு ஆஸ்திரேலியாவின் மாநிலப் பறவை அடையாளம் Piping Shrike எனப்படும் வெண்ணிற முதுகு கொண்ட மேக்பையாகும். இது தெற்கு ஆஸ்திரேலியாவின் மாநிலக் கொடியிலும் இடம்பெற்றுள்ள பெருமைக்குரியது.


ஆஸ்திரேலிய மேக்பை பறவைகள் தங்கள் வசிப்பிடமாக பரந்த புல்வெளிகள், வயல்கள், பூங்காக்கள், தோட்டங்கள், கோல்ஃப் விளையாட்டு மைதானங்கள், தெருவோர மரங்கள் போன்றவற்றையே தேர்ந்தெடுக்கின்றன. பெரும்பாலான நேரம் மண்ணைக் கிளறி பூச்சிகளையும் அவற்றின் லார்வாக்களையும் தின்பதிலேயே கழிக்கின்றன. தரையில் வாழும் மண்புழு, பூரான், மரவட்டை, நத்தை, சிலந்தி, தேள், பல்லி, தவளை, எலி, கரப்பான்பூச்சி, எறும்பு, வண்டு, அந்துப்பூச்சி, கம்பளிப்பூச்சி மற்றும் புழுக்கள் ஆகியவைதான் மேக்பையின் பிரதான உணவு. தானியங்கள், கிழங்குகள், பழங்கள் கொட்டைகள் போன்றவற்றையும் தின்னக்கூடியவை. 

ஒருவித விஷத்தவளையைத் தின்னும்போது அதை தலைகீழாய்க் கவிழ்த்துப்போட்டு அடிப்பாகத்தை மட்டும் உண்ணுமளவும்தேனீ மற்றும் குளவிக்களைத் தின்னுமுன் அவற்றின் கொடுக்கை அகற்றிவிட்டுத் தின்னுமளவும் கூர்மதி நிறைந்தது. அலகை மண்ணுக்குள் செலுத்தி உள்ளிருக்கும் மலவண்டின் லார்வாக்களின் இருப்பை மெல்லிய அதிர்வைக் கொண்டே கண்டறிந்து உண்ணக்கூடியது.
 

கூடு கட்ட இடத்தைத் தேர்ந்தெடுப்பது, கூடு கட்டுவது, அடைகாப்பது, குஞ்சுகளுக்கு இரையூட்டுவது அனைத்தும் தாயின் வேலை. கூட்டையும் குஞ்சுகளையும் பாதுகாப்பது தந்தையின் வேலை. உயரமான மரங்களின் உச்சியில், தரையிலிருந்து கிட்டத்தட்ட 15 மீ. உயரத்தில் குச்சிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட கிண்ணவடிவிலான கூட்டில் புற்கள் மற்றும் மென்மையான மரச்செதில்களைக் கொண்டு மெத்தென்று அமைத்து முட்டையிடும். பொதுவாக யூகலிப்டஸ் மரங்களில்தான் கூடு கட்டும் என்றாலும் விதிவிலக்காக சில மேக்பைகள் பைன்எல்ம் போன்ற மரங்களிலும் கூடு கட்டுவதுண்டு. 

மேக்பையின் கூடு இருக்கும் அதே மரத்தில் வேறு சில சிறியபறவைகளும் கூடு கட்டுவதுண்டு.  இன்னும் சில பறவைகள் மேக்பையின் கூட்டுக்கடியில் பொந்து உருவாக்கி திருட்டுத்தனமாய் அதில் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். எல்லாவற்றுக்கும் மேலான திருட்டுத்தனம்,  குயில் இனங்களிலேயே மிகப்பெரியதான Channel-billed Cuckoo எனப்படும் குயில் மேக்பையின் கூட்டில் முட்டையிடுவதுதான். மற்றக் குயில் குஞ்சுகளைப் போன்று முட்டையிலிருந்து பொறிந்தவுடனேயே மற்ற முட்டைகளை வெளித்தள்ளும் வழக்கம் இந்தக் குயில்குஞ்சுக்கு கிடையாது என்றாலும் மேக்பையின் சொந்தக் குஞ்சுகளுக்கான இரையையும் சேர்த்துப் பெற்றுஅவற்றை வீழ்த்தி தான் வளரக்கூடியது அக்குயிற்குஞ்சு.மேக்பை ஒரு ஈட்டுக்கு இரண்டு முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் பார்ப்பதற்கு வெளிர்நீல நிறத்திலோ பச்சைநிறத்திலோ இருக்கும். இருபது நாட்களுக்குப் பிறகு இறகு முளைக்காத கண்திறவாத குஞ்சுகள் வெளிவரும். குஞ்சுகளுக்கு தாய்ப்பறவை உணவூட்டிப் பராமரிக்கும். தாய்ப்பறவைக்கு தந்தைப் பறவை உணவூட்டும். ஆணும் பெண்ணும் இணைந்தே குஞ்சுகளை வளர்க்கும். சில இடங்களில் பல மேக்பைகள் குழுவாக இணைந்தும் குஞ்சுகளை வளர்ப்பதுண்டு.

மேக்பை குஞ்சுகள் கூட்டை விட்டு வெளியேறிய மூன்றாவது வாரத்திலிருந்து உணவைத் தேடியுண்ண கற்றுக்கொடுக்கப்படும். ஆறாவது மாதத்திலிருந்து குஞ்சுகள் தன்னிச்சையாய் செயல்படத்தொடங்கும். முழுவளர்ச்சி அடையும் வரை குஞ்சுகள் சாம்பல் நிறத்தில் காணப்படும். ஒரு வருடத்தில் முழுவளர்ச்சி அடைந்துவிடும். பல மேக்பை குஞ்சுகள் நன்கு வளர்ந்துவிட்ட நிலையிலும் தாய் தந்தையை இரையூட்டச்சொல்லி கெஞ்சல் பாட்டு பாடிக்கொண்டு பின்னாலேயே திரியும். தாயும் தந்தையும் அவற்றைப் பொருட்படுத்தினால்தானேவேறு வழியில்லாமல் முடிவில் தானே இரைதேடி உண்ணும்.


பூர்வகுடி மக்களின் கலாச்சார ஆன்மீக நம்பிக்கைகளில் மேக்பைக்கு முக்கிய இடமுண்டு. மேக்பையின் பாடலானது தீய சக்திகளை விரட்டுவதாகவும் பல நல்ல எண்ண அலைகளை உருவாக்குவதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். மேக்பை வெற்றியின் அடையாளம் என்பதும், தங்கள் வாழ்க்கையில் வெற்றியை வேண்டுபவர்கள் மேக்பையின் பாடலையும் அதனுள்ளிருக்கும் உற்சாக ஆற்றலையும் முழு சிரத்தையுடன் தியானித்தால் வெற்றி உறுதியென்பதும் அவர்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை.


வருடம் முழுவதும் யாருக்கும் எந்த தொல்லையும் தராமல் தன்பாட்டுக்கு பாடிக்கொண்டிருக்கும் மேக்பைகள் கூடு கட்டிக் குஞ்சு பொறிக்கும் ஆறு வார காலத்தில் முற்றிலும் மாறி மூர்க்கமாகிவிடும். தங்கள் எல்லைக்குள் வரும் எவரையும் தலை, கண், காது, முகம், கழுத்து போன்ற பகுதிகளில் பயங்கரமாய்த் தாக்கும். மேக்பையால் பாதிக்கப்பட்டு சில குழந்தைகள் கண்பார்வை இழந்துள்ளனர். பறவை கொத்தியதன் மூலம் டெட்டனஸ் கிருமித்தாக்குதலால் ஒரு சிறுவன் இறந்த சம்பவமும் உண்டு. மிதிவண்டி ஓட்டிகள் இந்த திடீர்ப் பறவைத் தாக்குதலால் நிலைகுலைந்து வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதும் நேர்வதுண்டு.


மேக்பைகள் தங்களுக்கு ஒருவரால் ஆபத்து என்று உணர்ந்தால் அவரை தங்கள் எல்லைப்பகுதியில் நுழைய விடாமல் கொத்தித் துரத்தும். குறிப்பிட்ட நேரத்தில் அவர் வருகை இருக்குமானால் அந்த நேரங்களில் எல்லாம் காத்திருந்து கொத்தும். மேக்பையின் நினைவாற்றல் அதிகம் என்பதால் வேறு வேறு உடைகளிலும் அவரை அடையாளம் கண்டுகொள்ளும். மிதிவண்டி ஓட்டிகள்தாம் பெரும் எதிரிகள். மேக்பையிடம் பெரும்பாலும் சிக்கிக்கொள்பவர்கள் மிதிவண்டியையும் மெதுஊர்தியையும் உபயோகிக்கும் மிதிவண்டி பயிற்சியாளர்களும், சிறுவர் சிறுமிகளும், தபால் ஊழியர்களும்தான்.


மேக்பை கூடு கட்டும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மேக்பை இருக்கும் பகுதிகளில் புழங்கும் அனைவரையும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கச்சொல்லி அரசு அறிவுறுத்துகிறது. அதற்காக பல முன்னேற்பாடுகளைப் பரிந்துரைக்கிறது. 
 
1. மேக்பையின் தாக்குதல் இருக்கும் இடங்களை மற்றவர்களும் அறியும் வகையில் அறிவிப்புப் பலகைகளை நிறுத்துங்கள்.


2. மேக்பை கூடு கட்டியிருக்கும் இடத்தைக் கூடுமானவரை தவிர்த்து மாற்றுவழியை உபயோகியுங்கள்.

3. மிதிவண்டியில் செல்பவர்கள் மேக்பையின் கூடு இருக்கும் இடத்துக்கு 100 மீட்டர் தூரத்துக்கு முன்பே மிதிவண்டியை விட்டு இறங்கிச் செல்வது நல்லது. நடந்து செல்பவர்கள் வேகமாக அதே சமயம் ஓடாமல் நடந்துசெல்லவேண்டும்.


4. நடக்கும்போது மேக்பை கண்ணில் தென்பட்டால் அதைப் பார்த்தபடியே நடந்து செல்வது, அது நம்மைத் தாக்கும் வாய்ப்பைக் குறைக்குமாம். மேக்பை நேரடியாக எவரையும்  தாக்குவது கிடையாது. பின்புறமாக அல்லது மேலிருந்து ஒரு ஏவுகணை போலப் பாய்ந்து தாக்கும். 

5. குளிர்கண்ணாடியை தலையின் பின்புறமாக அணிவதும், மேல்பக்கம் இரு கண்கள் வரையப்பட்ட பெரிய விளிம்புள்ள தொப்பியோ தலைக்கவசமோ அணிவதும், குடை பிடித்துச்செல்வதும் ஓரளவு பயனளிக்கும்.


6. கைதட்டுதல், குச்சிகளை எடுத்து ஆட்டுதல், பறவைக்கூட்டின் மேல் கல்லெறிதல், உரக்கக் கத்துதல் போன்று மேக்பையை அச்சுறுத்தும் எரிச்சலூட்டும் எந்த செயல்களையும் செய்யாதீர்கள். 


7. ஒரு சின்னக் கயிற்றின் நுனியில் சிறு கல்லைக் கட்டி தலைக்குமேலே ஹெலிகாப்டர் போல் சுழற்றிக்கொண்டு செல்வது ஓரளவு பயன் கொடுக்கும்.


8. மிதிவண்டி ஓட்டிகள் தங்கள் தலைக்கவசத்தின் மேல் குச்சிகள், வயர்களைச் செருகிவைத்திருப்பதன் மூலம் பறவையைக் குழப்பி அருகில் நெருங்கிவர முடியாமல் தவிர்க்கலாம்.


9. மேக்பைகளுக்கு உணவிட்டு அவற்றை நட்புடன் பழக்கப்படுத்திக்கொள்வது தாக்குதலை ஓரளவு குறைக்கலாம். எளிதில் பழக்கப்படுத்தப்படக்கூடிய பறவை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


10. இறுதியாக…. இப்பறவையைப் புரிந்துகொள்ளுங்கள். குடும்பத்தின்மீது எந்த அளவுக்குப் பற்றும் பிணைப்பும் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதற்கு இடையூறு இல்லாத வகையில் நடந்துகொள்வதோடு அவற்றை நேசிக்கவும் பழகுங்கள்.


ஆஸ்திரேலிய மேக்பை பறவைகள் ஆஸ்திரேலிய வனப்பாதுகாப்பு சட்டத்தால் பாதுகாக்கப்படுவதால் கொல்வதோ முட்டைகளை அபகரிப்பதோ சட்டத்துக்குப் புறம்பானதாகும். தற்போதிருக்கும் வனப்பறவைகள் பாதுகாப்பு சட்டப்படி இவற்றை பிறநாடுகளில் அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை. ஆனால் 1860 களில் நியூசிலாந்தில் பயிரழிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றின் வளர்ச்சியால் அந்நாட்டின் சொந்தப்பறவைகள் சிலவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனாலும் அங்கும் 1950 முதல் வனப்பறவைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இப்பறவைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம், சாலமன் தீவுகளிலும் இலங்கையிலும் இப்பறவைகளை அறிமுகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தனவாம். அதனால் இப்பறவைகள் வாழ சாதகமான சூழல் இல்லாதபட்சத்தில் அவை வளர்வது கேள்விக்குறியே. 

********************
(படங்கள்: நன்றி இணையம்)


30 comments:

 1. ஆஸ்திரேலியா சென்றிருந்த போது இந்தப்பறவையின் குரலைக்கேட்டு ரசித்திருக்கிறேன்..

  தபால்காரர்களை தாக்குவதால் இதற்கு தபால்காரரின் எதிரி என்றே பெயராம்..
  http://jaghamani.blogspot.com/2011/02/blog-post_09.html

  ReplyDelete
 2. பரிந்துரைக்கும் முன்னேற்பாடுகளை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்...

  ஆஸ்திரேலிய மேக்பை பறவை பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்...

  புதிய புதிய தகவல்கள் வியப்பூட்டுகின்றன...! நன்றி சகோதரி...

  ReplyDelete
 3. அழகான குரலில் பாடுகிறது, நிறையக் குரல்களில்... ஏன் மனிதக் குரல்களைக் கூட மிமிக்ரி செய்யும் பறவையா என்று அதிசய உணர்ச்சி மேலோங்கியது. தொடர்ந்து படிக்கையில் மனிதர்கள் உடை, வாகனம் மாறினாலும் அடையாளம் காணும், அவர்கள் வரும் நேரத்தை நினைவில் வைததிருக்கும் என்ற விஷயங்கள வியப்பை ஊட்டின. ஏவுகணை போல மனிதர்களை இவை தாக்கும் என்கிற விஷய்ம் ‘அட’. ஹிட்ச்காக் நினைவுக்கு வரத் தவறவில்லை கீதா.

  ReplyDelete
 4. Anonymous12/5/14 16:11

  ஆஸ்திரேலிய மேக்பை பறவை பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்...
  மிக சுவாரஸ்யம்.
  பதிவிற்கு நன்றி.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 5. //இவற்றின் ஆயுட்காலம் 25 முதல் 30 வரை இருக்கலாம்//

  வருடங்கள்தானே! :)))))))))

  //சில பகுதிகளில் மனிதர்களின் குரலையும் மிமிக்ரி செய்யக்கூடியது மேக்பை//

  ஆச்சர்யம்.

  காக்கைகள் கூட நம்மூரில் கூடு கட்டிக் குஞ்சு பொரித்திருக்கும் காலத்தில் இப்படி அருகில் வரும் மனிதர்களைக் கொத்தும். தலையில் தட்டும்!

  நாயைப் பற்றிச் சொல்லியிருக்கும் தகவலை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. நம் மனதின் எண்ணங்களை நம் வியர்வைச் சுரப்பிகள் மூலம் அறியக் கூடியதாய் இருக்கலாம். நட்பு எண்ணத்துடன் நான் பலமுறை புதிய நாய்களைக் கூட நேருக்கு நேர் பார்த்தபடிக் கடந்திருக்கிறேன்!

  ஒன்பதாவது ஐடியாதான் பிடித்திருக்கிறது!

  ReplyDelete
 6. @இராஜராஜேஸ்வரி

  புல்லாங்குழல் பறவை என்ற பெயருக்குப் பொருத்தம்தானே? தங்கள் பதிவையும் வாசித்து மகிழ்ந்தேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

  ReplyDelete
 7. @திண்டுக்கல் தனபாலன்

  பதிவை ரசித்தமைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தனபாலன். இந்தப் பறவையின் தாக்குதலுக்கு என் கணவரும் தப்பவில்லை என்பது செய்தி.

  ReplyDelete
 8. @பால கணேஷ்

  இந்தப் பறவைகள் கூட்டமாக வந்து தாக்குவதில்லை கணேஷ். கூடு கட்டியிருக்கும் மரத்தின் பக்கம் போனால் மட்டும் ஆண்பறவை தாக்கும். பறவையின் நினைவுத்திறன் வியப்புதான்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கணேஷ்.

  ReplyDelete
 9. @kovaikkavi

  தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தோழி.

  ReplyDelete
 10. @ஸ்ரீராம்.

  ஆமாம். வருடங்கள்தாம். திருத்திவிட்டேன்.

  இங்கு பல பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்பட்டு கண்களை இழந்திருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டியுள்ளது.

  அப்புறம்... நாய் விஷயம்.. நான் முன்பு எப்போதோ கேள்விப்பட்ட தகவல் அது. ஆனால் நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அனுபவசாலியல்லவா?

  வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 11. ஏராளமான படங்களுடன் தாராளமானச் செய்திகளைக்கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

  தபால்காரர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்குமே எதிரியாக இருக்கும் போலிருக்கு இந்தப்பறவை.

  //இந்த மூன்று பிரிவுகளுக்குள் கலப்புமணம் நடைபெற்று இன்னும் ஒன்பது உப பிரிவுகள் உண்டாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.//

  ;))))) ஆஹா ! எவ்ளோ தகவல்களைத் திரட்டிக்கொடுத்துள்ளீர்கள் !

  சுவாரஸ்யமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். நன்றிகள். - VGK

  ReplyDelete
 12. தனக்கு ஆபத்து என்று அவை உணரும்போதுதான் தாக்குகிறதோ. இந்தப் பறவைகள் வளர என்று ஏதாவது நிபந்தனைகள் இருக்கிறதா. I mean இந்தியாவில் வளருமா? பல சுவையான பகிர்வுகளைத் தாங்கிய பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. வணக்கம்
  சகோதரி
  அவுஸ்ரேலியா பறவைகள் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 14. காக்கையின் வடிவம், குயிலின் குரல் கொண்ட அதிசயமான ஆஸ்திரேலியாவின் மேக்பை பறவைகள் பற்றி வாசகர்களுக்கு சலிப்பு தட்டாமல் சொன்னீர்கள். தெற்கு ஆஸ்திரேலியா மாநிலக் கொடியில் உள்ள சின்னம் எனக்கு, சிவகாசியின் மயில் மார்க், குயில் மார்க் பட்டாசுகளை நினைவு படுத்தியது.
  த.ம.3

  ReplyDelete
 15. நீண்ட நாட்களுக்குப்பின் வலைத்தள நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் .மேக்பை பறவை குறித்த விரிவான பதிவு.அதனுடனே பயணிப்பது போன்ற உணர்வை உண்டாக்கியது உங்கள் பதிவு .நன்றி தோழி

  ReplyDelete
 16. அட்டகாசமான பதிவு! ரசித்தேன். அதிலும்....

  //பல மேக்பை குஞ்சுகள் நன்கு வளர்ந்துவிட்ட நிலையிலும் தாய் தந்தையை இரையூட்டச்சொல்லி கெஞ்சல் பாட்டு பாடிக்கொண்டு பின்னாலேயே திரியும். //

  சூப்பர்:-))))

  நம்மூரில் கூட மேக் பை நிறையவே இருக்கு. இங்கே ஒரு பண்ணையில் ( (காய்களை பிக் யுவர் ஓன் என்ற வகையில் பறிச்சு வாங்கிக்கச் செல்லும் இடம்) ஒரு பெரிய கூண்டு ஏறக்குறைய ஒரு அறையின் அளவு,அதில் ஜேக் என்று ஒருத்தன் இருக்கான். பெயர்ப்பலகை போட்டுருக்கும் அவன் வீட்டுக்கு.

  நாம் ஹை ஜேக் னு கூப்பிட்டால், ஹை ஹலோன்னு பேசுவது கேக்க வேடிக்கையா இருக்கும். இதுக்காகவே மகள் சின்னவளா இருக்கும்போது வாராவாரம் சனிக்கிழமை காய் வாங்கன்னு சாக்கு வச்சுக்கிட்டுப் போய்க்கிட்டு இருந்தோம்.

  இப்பக்கூட அந்த இடம்கடக்கும்போது ஹை ஜேக் ன்னு சொல்லிக்குவேன். பழக்கமாப் போச்சுல்லே........ பார்க்காட்டியும்:-)

  ReplyDelete
 17. @G.M Balasubramaniam

  ஆமாம், தான் கூடு கட்டியிருக்கும் மரத்துக்குக் கீழே யார் வந்தாலும் மூர்க்கமாய்த் தாக்குகிறது. இப்பறவை பற்றிய இன்னும் ஏராளமானத் தகவல்களை எழுதியிருந்தேன். நீண்ட பதிவு என்றாலே பலரும் வாசிக்கத் தயங்குகின்றனர் என்பதால் கொஞ்சம் அளவைக் குறைத்தேன். உங்கள் கேள்விக்கான பதிலும் அதில் அடங்கியுள்ளது.

  இப்பறவை ஆஸ்திரேலிய வனப்பாதுகாப்பு சட்டத்தால் பாதுகாக்கப்படுவதால் கொல்வதோ முட்டைகளை அபகரிப்பதோ சட்டத்துக்குப் புறம்பானதாகும். தற்போதிருக்கும் வனப்பறவைகள் பாதுகாப்பு சட்டப்படி இவற்றை பிறநாடுகளில் அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை. ஆனால் 1860 களில் நியூசிலாந்தில் பயிரழிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றின் வளர்ச்சியால் அந்நாட்டின் சொந்தப்பறவைகள் சிலவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனாலும் அங்கும் 1950 முதல் வனப்பறவைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இப்பறவைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம், சாலமன் தீவுகளிலும் இலங்கையிலும் இப்பறவைகளை அறிமுகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தனவாம். அதனால் இப்பறவைகள் வாழ சாதகமான சூழல் இல்லாதபட்சத்தில் அவை வளர்வது கேள்விக்குறியே.

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

  ReplyDelete
 18. @ரூபன்

  தங்கள் வருகையும் அழகான கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா. தாங்கள் குறிப்பிட்டபின் எனக்கும் அந்த பட்டாசுப் படங்கள் நினைவுக்கு வருகின்றன. மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 19. @வை.கோபாலகிருஷ்ணன்

  நன்றாகப் பழக்ககூடிய பறவைதான் என்றாலும் கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கும் தருவாயில் மூர்க்கமாகிவிடுகிறது. எல்லாப் பறவைகளும் விலங்குகளும் (ஆபத்து) வரும்போது காப்போன் என்றால் இப்பறவை வருமுன் காப்போனாகி செயல்படுகிறது.

  தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கோபு சார்.

  ReplyDelete
 20. @ரூபன்

  தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.

  ReplyDelete
 21. @Geetha M

  தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து மகிழ்ந்தமைக்கும் மனமார்ந்த நன்றி கீதா.

  ReplyDelete
 22. @துளசி கோபால்

  நியூஸிலாந்தில் இப்பறவைகள் இருப்பதைக் குறிப்பிட்டிருந்த பத்தியையும் இன்னும் சிலவற்றையும் நீளம் கருதி நீக்கிவிட்டிருந்தேன். ஜிஎம்பி ஐயாவின் கேள்வியையும் தங்கள் பின்னூட்டதையும் பார்த்தபிறகு இப்போது இணைத்துவிட்டேன்.

  எங்கள் வீட்டுத் தோட்டத்தில் நித்தமும் விதவிதமாய்ப் பாடிக்கொண்டிருக்கும் மேக்பையின் குரலைக் கேட்டாலே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இதில் அழகாக பேசவும் செய்கிறது என்றால் ரசிக்காமல் இருக்கமுடியுமா?

  வருகைக்கும் பதிவை ரசித்து இட்ட அழகானப் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி டீச்சர்.

  ReplyDelete
 23. ஒரு பறவையை குறித்து இத்தனை விசயங்களா ? ஆச்சர்யமாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி.
  Killergee
  www.killergee.blogspot.com

  ReplyDelete
 24. பல குரல் மன்னனாக இருக்கும் போல இருக்கிறதே இப்பறவை. வியப்பான தகவல்களோடு தாங்கள் ஆஸ்திரேலிய பறவைகள் பற்றி பகிர்ந்து கொள்ளும் தங்கள் பதிவுகள் அனைத்துமே அருமை...

  ReplyDelete
 25. @killergee

  முதல் வருகைக்கும் பதிவை ரசித்து வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 26. @வெங்கட் நாகராஜ்

  வருகைக்கும் பதிவை ரசித்துப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி வெங்கட்.

  ReplyDelete
 27. அதிசயத்தக்க குரல் வளம் மிக்க இந்தப் பறவைக்கு BUTCHER BIRDS என்ற இந்தப் பெயர் வந்தது ஆச்சரியம் தான்! ஏன் இதன் குரல் வளத்தையொட்டி இதன் பெயர் அமையவில்லை என்பது வியப்பாக இருக்கிறது! ரொம்பவும் வித்தியாசமான தகவல்கள்!! ரசித்துப்படித்தேன் கீதமஞ்சரி!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மேடம்.

   Delete
 28. ஆஸ்திரேலிய மேக்பை - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் 10 = கீத மஞ்சரி = படங்களுடன், விரிவான தகவல்களுடன், அற்புதமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
  நன்றி & வாழ்த்துகள் கீத மஞ்சரி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.