23 May 2014

போஸம் - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் 11


போஸம் (possum)

ஆஸ்திரேலியாவின் தனித்துவமான விலங்குகளுள் ஒன்றான போஸம் மரவாழ் உயிரினம். பெரும்பான்மையான ஆஸ்திரேலிய விலங்குகளைப் போலவே போஸம்களும் இரவு விலங்குகள்தாம். ஆஸ்திரேலிய விலங்குகளிலேயே மனிதர்களின் வசிப்பிடங்களில் பயமின்றி புழங்கும் இனமும் இவைதாம். தூரிகை வால் போஸம்களும் வளையவால் போஸம்களும் குடியிருப்புகளைக் குறிவைப்பதில் முக்கியமானவை. வீடுகளின் மேற்கூரைகளைப் பிரித்து உள்ளே இறங்கி அடுக்களையை சூறையாடுவதும்தோட்டங்களைப் பாழ்படுத்துவதும், குப்பைத் தொட்டியிலிருந்து குப்பைகளை பீறாய்ந்து வெளியில் எறிந்து அசுத்தப்படுத்துவதும்கண்ட இடங்களிலும் கழிவுகளிட்டு நாறடிப்பதுமாக அவற்றின் தொல்லைகள் நம்மூரில் குரங்குத்தொல்லைக்கு நிகரானவை. ஒரு அங்குல நீளத்துக்கு பென்சில் மொத்தத்தில் கரும்பச்சை நிறத்தில் காணப்படும் புழுக்கைகள் நமக்கு சுகாதாரக்கேடு விளைவிப்பவை. கிட்டத்தட்ட 70 வகையான போஸம்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூகினியாவின் மண்ணுக்குரியவை. அங்கிருந்துதான் அவை நியூஸிலாந்து, சீனா போன்ற பிற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

போஸம் இனத்தில் மிகப்பெரியது ஏழு கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டதும் இந்தோனேஷியாவின் ஒரு சில தீவுகளில் மட்டுமே காணப்படுவதுமான குஸ்குஸ் கரடி (bear cuscus). இரண்டாவது பெரியது தூரிகைவால் போஸம் (brushtail possum), மூன்றாவது வளையவால் போஸம் (ringtail possum). எல்லாவற்றிலும் மிகச்சிறியது பத்தே கிராம் எடையுள்ள டாஸ்மேனியன் பிக்மி போஸம் எனப்படும் குள்ளப்போஸம்  (Tasmanian pygmy possum).

குஸ்குஸ் கரடி போஸம்

குள்ளப் போஸம்
போஸம் இனத்தில் உணவுப்பழக்கம் இனத்துக்கு இனம் வித்தியாசப்படும்.  சாதாரண தூரிகைவால் போஸம் ஒரு அனைத்துண்ணி. யூகலிப்டஸ் இலைகளை மட்டுமே தின்று வாழ்பவை கிரேட்டர் கிளைடர்கள்.  மலைகளில் வாழும் பிக்மி போஸம்கள் பூச்சிகளைத் தின்னும். ஹனி போஸம்கள் பூக்களின் தேனை உண்ணக்கூடியவை.

பழுப்புநிற தூரிகைவால் போஸம் 

தூரிகைவால் போஸம், இலைகள், துளிர்கள், பூக்கள், பழங்கள், கொட்டைகள் போன்ற தாவர பாகங்களை விரும்பி உண்டாலும், பூச்சிகள், பறவைகளின் முட்டைகள், எலி போன்ற சின்னச் சின்ன உயிரினங்கள் போன்றவற்றையும் தின்னக்கூடியது. இதன் வால் தூரிகை போன்று புஸூபுஸூவென்று இருப்பதால் அப்பெயர் பெற்றது. மரங்களில் கிளைக்குக் கிளை தாவுகையில் கிளைகளைப் பற்றிக்கொள்ள வால் பெரிதும் உதவுகிறது. 

வெள்ளை நிற தூரிகைவால் போஸம்

தூரிகைவால் போஸத்தின் மார்பில் உள்ள வாசனை சுரப்பியிலிருந்து சுரக்கும் செந்நிற திரவத்தால் வாசனை பரப்பியும், ஒலியெழுப்பியும் தன் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதை மற்ற போஸம்களுக்கு உணர்த்துகிறது. தூரிகைவால் போஸம் கிலுக்கம், உறுமல், இரைதல், அலறல், செருமல், கீச்சிடல் போன்று விதவிதமாய் ஒலியெழுப்பக்கூடியது. இவற்றுக்கு மரக்கிளைகளும் பொந்துகளும் பாறையிடுக்குகளும்தான் இயற்கை உறைவிடங்கள் என்றாலும் பெரும்பான்மையானவை வீடுகளின் மேற்கூரைகளையே தங்கள் உறைவிடங்களாக அமைத்துக்கொள்கின்றன.

தாயின் வயிற்றுப்பைக்குள் போஸம்குட்டி

தூரிகைவால் போஸம்களுக்கு இனப்பெருக்க காலம் என்று குறிப்பிட்ட காலம் எதுவும் கிடையாது. வளமான நாட்கள் எனில் வருடத்தின் எந்தக்காலத்திலும் பெருகக்கூடிய இனம் அது. போஸத்தின் கர்ப்பகாலம் பதினாறு முதல் பதினெட்டு நாட்கள்தாம். அதன்பின் 1.5 செ.மீ. அளவும் 2 கிராம் எடையும் கொண்ட பட்டாணி அளவிலான குட்டி ஒன்றை ஈனும். மார்சுபியல் இனங்களின் வழக்கப்படி கண்திறவாத முழுவளர்ச்சியடையாத குட்டி, தானே முன்னேறிப் பயணித்து தாயின் வயிற்றுப் பையை அடைந்து தாயின் முலைகளுள் ஒன்றினைப் பற்றிக்கொள்ளும்.

தூரிகைவால் போஸம் குட்டியுடன்

கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் பைக்குள் பாலைக் குடித்தபடி வளரும். ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு வயிற்றுப்பையை விட்டு வெளியில் வந்து தாயின் முதுகில் சவாரி செய்தபடி அடுத்த நான்கைந்து மாதங்களைக் கழிக்கும். ஒரு வயதில் பெண் போஸம் முதிர்ச்சி அடையும். ஆண் முதிர்ச்சி அடைய இரண்டு வருடங்களாகும். மகள் என்றால் தாயின் வசிப்பிடத்துக்கு அருகிலேயே வசிப்பிடத்தை அமைத்துக்கொள்ள அனுமதி உண்டு. மகன் எனில் தொலைவில் வேறு எல்லை தேடிச்செல்லும்படி விரட்டப்படும். காட்டில் வாழும் போஸத்தின் ஆயுட்காலம் தோராயமாக 13 வருடங்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

வளையவால் போஸம்
வளையவால் போஸம்களின் வாழ்க்கை சற்று வித்தியாசமானது. ஒரு ஆண், ஒன்றிரண்டு பெண்கள், கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள், கைப்பிள்ளைகள் என்று ஒரு குடும்பமாய் வாழக்கூடியவை. இந்த இனத்தில் பதினெட்டு மாதங்களுக்குப் பிறகே குட்டிகள் முதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு விலகிச்செல்கின்றன. குடும்பத்தின் ஆணும் பெண்ணும் இணைந்தே கூடுகட்டுகின்றன. தங்கள் வாலில் கூடு கட்டுவதற்குத் தேவையான பொருட்களைச் சுருட்டி எடுத்துக்கொண்டுவந்து மரக்கிளைகளில் பெரிய கோள வடிவிலான கூட்டைக்கட்டுகின்றன. உள்ளே புற்களையும் மரச்செதில்களையும் கொண்டு மெத்தையமைக்கின்றன.

வளையவால் போஸம் கூடுகள்


தூரிகைவால் போஸத்தை விடவும் குறைந்த அளவிலேயே ஒலியெழுப்பும் என்றாலும் இதன் உச்சத்தாயியிலான கீச்சுக்குரல் பல நகரவாசிகளுக்கும் பரிச்சயமானது. இலைகளைத் தின்னக்கூடியது என்றாலும் பூக்கள், மொட்டுக்கள், துளிர்கள், பழங்கள் எதையும் விட்டுவைப்பதில்லை. ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான இனப்பெருக்க காலத்தில் இரண்டு குட்டிகள் பிறக்கின்றன. தாயின் வயிற்றுப்பைக்குள் இருக்கும் நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, ஆறு மாதங்களுக்கு தாய் தந்தை இருவரது முதுகிலும் சவாரி செய்தபடி வலம் வருகின்றன.

போஸம் சாகஸம்

வீடுகளின் கூரைகளிலிருக்கும் விரிசல்களைப் பெரிதாக்கி உள்ளே நுழைவதும் புகைப்போக்கிகள் வழியே வீட்டுக்குள் பொத்தென்று விழுவதும் சர்வசாதாரணம். அம்மாதிரி சமயங்களில் அவற்றை நெருங்குவது ஆபத்து. எனவே அமைதியாகக் கதவைத் திறந்து விட்டு அவை வெளியேற வழி அமைத்துக்கொடுத்தல் வேண்டும். இவை மரவாழ் உயிரினங்கள் என்பதால் மரங்கள் மூலம் வீடுகளின் மேற்கூரைகளை எளிதில் அடைந்துவிடுகின்றன. இவை வீடுகளைத் தஞ்சம் புகுவதைத் தடுக்கவிரும்பினால் வீட்டையொட்டி உள்ள மரக்கிளைகள் வெட்டப்படவேண்டும்.

என்ன செய்தாலும் போஸம்கள் தங்கள் வீட்டு வளாகத்தை விட்டுப் போவதாய்க் காணோம் என்று ஆயாசப்படுபவர்களுக்கு ஒரு ஆலோசனையாய் போஸம் பெட்டிகள் பற்றி அறிவுறுத்தப்படுகின்றது. இப்பெட்டிகளை மரங்களை ஒட்டி அமைத்து போஸம்களுக்கு புதிய குடியிருப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு வீடுகளின் கூரைகள் பாதுகாக்கப்படுகின்றனவாம். வீட்டின் மேற்கூரைகளில் மின்விளக்குப் பொருத்துவதும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாய் சில நாட்களுக்கு எரியவிடுவதும் மற்றொரு ஆலோசனை.


குடியிருப்புகளில் தொல்லை தருவதாகவும், இரவில் தூங்கமுடியாமல் கூரைகளில் கொட்டமடிப்பதாகவும் புகார் செய்யப்பட்டால், இவற்றைப் பிடிக்க சட்டபூர்வமான நிறுவனங்கள் நாடுமுழுவதிலும் செயல்படுகின்றன. சில நிறுவனங்கள் போஸம்களைப் பிடிப்பதோடு அவற்றால் பாதிக்கப்பட்ட கூரைகளையும் சீராக்கித் தருவதாக விளம்பரப்படுத்துகின்றன. அவ்வாறு பிடிக்கப்படும் போஸம்களை என்ன செய்வார்கள்?

எதுவும் செய்யமாட்டார்கள். ஏனெனில் அவற்றைப் பிடித்த அன்று மாலையே பிடித்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்குள் விட்டுவிடவேண்டும் என்பது ஆஸ்திரேலிய மாநில அரசுகளின் பொதுவிதி. சில மாநிலங்களில் விதிவிலக்கும் உண்டு. விக்டோரியா மாநிலத்தில் பொறிவைத்துப் பிடிக்கப்படும் போஸம்கள் அங்கீகரிக்கப்பட்ட மிருகவைத்தியர்கள் மூலம் கருணைக்கொலை செய்யப்படலாம். தெற்கு ஆஸ்திரேலியாவிலோ அவை முற்றிலும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள். அரசின் அனுமதியின்றி வீடுகளில் பொறிவைத்து போஸம்களைப் பிடித்தலும் கூடாது.


வனவிலங்குகளைப் பிடிப்பதோ, துன்புறுத்துவதோ, கொல்வதோ ஆஸ்திரேலியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். அதன்படி குற்றவாளிக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை அல்லது 60,000 ஆஸ்திரேலிய டாலர் (நம்மூர் பண மதிப்பில் கிட்டத்தட்ட முப்பது லட்ச ரூபாய்) அபராதம் விதிக்கப்படும். ஆஸ்திரேலியாவில்தான் இந்த சட்டமெல்லாம். அண்டை நாடான நியூஸிலாந்தில் நிலைமை தலைகீழ்.

1840 வாக்கில் நியூஸிலாந்தில் ரோமத்தொழிலுக்காக 200 - 300 என்ற எண்ணிக்கையில் சாதாரண தூரிகை வால் போஸம்கள் ஐரோப்பியக் குடியேறிகளால் அறிமுகப்படுத்தப்பட்டன. அங்கு இந்த போஸம்களுக்கு எதிரியென எந்த விலங்கும் இல்லாமையால் அதன் வளர்ச்சி அபரிமிதமாகப் பெருகி ஒரு கட்டத்தில் பயிரழிக்கும் பிராணியாக மாறிவிட்டது. நியூஸிலாந்தின் சொந்த மண்ணின் மரங்களுக்கும் மற்ற பிராணிகளுக்கும் பாதிப்பு உண்டாக்கியதாலும், பயிர்களை நாசப்படுத்தியதாலும், கால்நடைகளிடம் காசநோய்ப் பரப்பியாக செயல்பட்டதாலும் இவ்வினத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டது. 1980 களில் எழுபது மில்லியன் என்ற எண்ணிக்கையை எட்டிவிட்டிருந்த போஸம்கள் 2009- இல் முப்பது மில்லியன் என்ற அளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. 


1996 வரை வருடத்துக்கு இரண்டு மில்லியன் போஸம்கள் அவற்றின் ரோமங்களுக்காக வேட்டையாடப்பட்டன. தூரிகை வால் போஸத்தின் ரோமத்தோடு மிக நேர்த்தியான ஆட்டுரோமத்தையும் இழைத்து நெய்யப்பட்ட மேலாடைகள், படுக்கை விரிப்புகள், கையுறைகள் போன்றவை மிகப்பெரும் அளவில் விற்பனை செய்யப்பட்டன.

போஸம்கள் ஆஸ்திரேலியா முழுமைக்கும் விரவிக் காணப்படும் இனம் என்றாலும் தாயகமான ஆஸ்திரேலியாவை விடவும் அது அறிமுகப்படுத்தப்பட்ட நியூஸிலாந்தில் அடர் எண்ணிக்கையில் காணப்படுவதற்கு காரணம் நியூஸிலாந்தில் இயற்கை எதிரிகள் இல்லாமையே. ஆஸ்திரேலியாவில் டைகர் க்வோல்கள், நாய்கள், நரிகள், பூனைகள், கோவான்னா எனப்படும் ராட்சதப்பல்லிகள், பாம்புகள், சில வகை ஆந்தைகள் மற்றும் மனிதர்கள் என்று போஸம்களுக்கு நிறைய எதிரிகள். ஆனால் நியூஸியிலோ மனிதர்களையும் பூனைகளையும் தவிர வேறு எதிரிகளே இல்லாமையால் போஸம் பல்கிப்பெருகி வளரத் தடையேதுமின்றிப் போயிற்று.ஆஸ்திரேலியாவில் தங்களுக்கென்று எல்லைகளை வகுத்து வாழும் தூரிகைவால் போஸம்கள் நியூஸிலாந்தில் ஒரே எல்லைப் பகுதியைப் பகிர்ந்துகொண்டு வாழ்கின்றன. நியூஸிலாந்தில் அவற்றின் இனம் பெருக இதுவும் ஒரு காரணம். பொதுவாகவே போஸம்கள் ஒன்றையொன்று காண நேர்கையில் மூர்க்கம் கொண்டு தாக்குவதில்லை. காதுகளை விரைத்தபடி ஒன்றையொன்று முறைத்துக்கொண்டு நிற்கும். பிறகு அது அது தன் வழியே சென்றுவிடும். அவ்வளவே.

நியூஸிலாந்தில் பயிரழிக்கும் பிராணிகளான போஸம்கள், முயல்கள், எலிகள், வல்லபிகள் இவற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக அவற்றின் வசிப்பிடங்களில் சோடியம் மோனோப்ளூரோ அசிடேட் (1080 நச்சு) என்னும் நச்சு கலந்த காரட் போன்ற உணவுப்பொருட்கள் வான்வழி தூவப்படுகின்றன. பெரும்பாலான நாடுகளில் தடைசெய்யப்பட்ட இந்நச்சை ஒருசில நாடுகள் மட்டுமே விவசாயப் பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துகின்றன. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் 1080 என்னும் நச்சில் 90% நியூஸிலாந்தில் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. அங்கு ஒரு வருடத்துக்கு உபயோகப்படுத்தப்படும் 4 டன் அளவு 1080  என்னும் நச்சானது, 20 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடிய அளவுக்கு வீரியமுடையதாம்.இந்நச்சை உட்கொண்ட பிராணிகள் சிலமணிநேரங்களில் துவண்டுவிழுந்து இறந்துவிடுகின்றன. இறந்த போஸம்களின் உடல் முழுவதுமாய் மக்குவதற்கு ஆறுமாத காலம் பிடிக்கும். இறந்துகிடக்கும் அந்த பிராணிகளைத் தின்பதன்மூலம் நாய், பூனை, பறவைகள் போன்ற மற்ற உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன என்பது கூடுதல் தகவல். ஒரு போஸத்தின் இறந்த உடலில் இருக்கும் நச்சானது அது இறந்தபிறகும் கூட வீரியத்துடன், பன்னிரண்டு நாய்களையோ பூனைகளையோ கொல்லப் போதுமானதாக இருக்கும். முதல்நிலை பாதிப்பை விடவும் இரண்டாம் நிலை பாதிப்பு மிக அதிகம் என்பதால் இந்நச்சை உபயோகிப்பதில் பல மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் இன்றுவரை இதற்கு மாற்றாக வேறெதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

காடுவாழ் உயிரிகளின் வாழ்விடத்தை அழித்து குடியிருப்புகளை அமைப்பதும், இயற்கைக்கு மாறாக உயிரினங்களை இன்னோர் இடத்தில் வாழ்விப்பதுமான தவறுகளை நாம் செய்துவிட்டு இப்போது நிலைமை கைமீறிப்போன பின்பு குத்துகிறதே குடைகிறதே என்று புலம்பி ஆவதென்ன?

**************************************
(படங்களுக்கு நன்றி: இணையம்)

43 comments:

 1. கடைசி பாராவில் அருமையாகச் சொன்னீர்கள். கூரைகளைப் பிரித்துக் கொண்டு உள்ளே இறங்கும் / குதிக்கும் என்றால் இரவில் இதை அறியாது தூங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை ஒன்றும் செய்வதில்லையா? வல்லபிகள் என்றால் என்ன?

  சுவையான இது போலக் கட்டுரைகளை அறியத் தருகிறீர்களே... எதிலிருந்து திரட்டுகிறீர்கள்?

  Tamilmanam not yet submitted. So, not voted!

  ReplyDelete
 2. அரிய தகவல்களுடன் பகிர்வு நன்று.

  ReplyDelete
 3. @ஸ்ரீராம்.

  உடனடி வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஸ்ரீராம். போஸம்கள் மனிதரை எதுவும் செய்வதில்லை. வீடுகளுள் இறங்குவது அடக்கமான கதகதப்புக்காகவும் கூடு கட்டி குட்டிகளை ஈனவும் உணவுக்காகவும்தான். ஆஸ்திரேலியாவின் எந்த உயிரினம் பற்றி எழுத நினைக்கிறேனோ அது குறித்த தகவல்களை நூலகங்கள், இணையதளங்கள் மூலம் திரட்டுகிறேன். வீட்டு நூலகத்திலும் சில புத்தகங்கள் வாங்கிவைத்துள்ளேன். கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நம்பகமான தளங்கள் குறிப்பாக ஆஸ்திரேலிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அதிகாரபூர்வ தளங்கள் மிகவும் உதவிகரமாக உள்ளன. ஒட்டுமொத்த தகவல்களைத் திரட்டி அவற்றுள் சுவாரசியமானவற்றையும் முக்கியமானவற்றையும் மட்டும் தேர்ந்தெடுத்து தமிழில் இங்கு தருகிறேன். பலரும் ரசிப்பதில் எனக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும்.

  ReplyDelete
 4. @முனைவர் இரா.குணசீலன்

  தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மனமார்ந்த நன்றி முனைவரே.

  ReplyDelete
 5. //நியூஸிலாந்தில் பயிரழிக்கும் பிராணிகளான போஸம்கள், முயல்கள், எலிகள், வல்லபிகள்//

  உடனடி பதிலுக்கும் நன்றி! :)))

  வல்லபிகள் என்றால் என்ன?

  இந்தக் கேள்விக்கு பதில் சொல்லவில்லையே! :)))))

  ReplyDelete
 6. @ஸ்ரீராம்.

  வல்லபி பற்றி கேட்டிருந்தீர்கள். குறிப்பிட மறந்துவிட்டேன். வல்லபியும் கங்காருவைப் போன்ற மேக்ரோபீடியா (பெரிய பாதங்களைக் கொண்டவை) வகையைச் சார்ந்த மார்சுபியல் விலங்குதான். பார்வைக்கு ஒரே மாதிரி இருந்தாலும் அளவில் வேறுபடும்.

  வல்லபியின் அதிகபட்ச உயரம் (வாலைச் சேர்க்காமல்) இரண்டடி, எடை 20 கிலோ.

  கங்காருவின் அதிகபட்ச உயரம் (வாலைச் சேர்க்காமல்) எட்டடி, எடை 90 கிலோ.

  இவை இரண்டுக்கும் இடைப்பட்ட அளவில் உள்ள விலங்குக்கு வல்லரூ (வல்லபி+கங்காரூ) என்று பெயர். அதுவும் பார்ப்பதற்கு கங்காரு போன்றே இருக்கும். அதிகபட்ச உயரம் நாலரை அடி, எடை 35 கிலோ.

  ReplyDelete
 7. வெளியிலிருந்து பார்க்கும் எங்களுக்கு எல்லாம் ஒரே பொதுப் பெயர் 'கங்காரு' அவ்வளவுதான்! பறவைகளை பொதுப்பெயரில் குருவி என்று பாமரத்தனமாக அழைப்பது போல!

  நன்றி.

  ReplyDelete
 8. @ஸ்ரீராம்.

  உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் அப்படித்தான். இதையெல்லாம் படித்துதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒருமுறை உயிரியல் பூங்காவில் ஒரு வல்லபியைப் பார்த்துவிட்டு நானும் குழந்தைகளும் 'ஐயையோ... கங்காரு குட்டி தனியாக நிக்குதே... அதன் அம்மாவைக் காணவில்லையே' என்று கவலைப்பட்டோம். இவ்வளவுக்கும் வல்லபி என்று பெயர்ப்பலகை இருந்தது அங்கு. அப்படியென்றால் என்னவென்று தெரிந்திருந்தால்தானே... ;)

  ReplyDelete
 9. எத்தனை எத்தனை உயிரினங்கள்..... உங்கள் மூலம் நாங்களும் பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

  இறைவனின் படைப்பில் எத்தனை எத்தனை உயிரினங்கள். அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த ஒரு பிறப்பு போதாது.

  ReplyDelete
 10. அறியாத அரிய தகவல்களுக்கு நன்றி சகோதரி... சுவாரஸ்யமான + விளக்கமான பகிர்வுகள் உட்பட மனதில் எழுந்த சந்தேகங்களுக்கு ஸ்ரீராம் சார் அவர்கள் மூலம் பதிலும் கிடைத்தது... அவருக்கும் நன்றி...

  ReplyDelete
 11. கிரிபித் பல்கலைக்கழக் வளாகத்துக்குள் சுதந்திரமாக சுற்றித் திரிந்த போஸம்களை ஆச்சரியத்துடன் ரசித்தேன் ..

  மாணவர்கள் ஆர்வக்கொளாறில் ஒரு கல்லைத்தூக்கி
  அதன் மீது எறிந்தால் போச்சு .. அபராதம் தானாம் ..

  குடியிருப்பு வளாகத்தின் நீச்சல் குளத்தில் போஸம் ஒன்று விழுந்து இறந்து கிடந்ததால் அப்புறப்படுத்தும் வரை ஜன்னல்களை மூடி வைத்திருந்தனர்.

  நானும் அதிசயமான இந்த விலங்கைப்பற்றி பதிவு ஒன்று எழுதி வைத்திருந்தேன்...

  ReplyDelete
 12. தூரிகைவால் போஸம்கள் பற்றிய தொகுப்பில் நிறைய தகவல்கள். பெரிய அளவுள்ள அணில்கள் போன்று உள்ளன. இவற்றையும் கருணைக் கொலைகள் செய்கிறார்கள் என்பது வேதனையான விஷயம்தான்.

  ReplyDelete
 13. அவற்றைப் பிடித்த அன்று மாலையே பிடித்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்குள் விட்டுவிடவேண்டும் என்பது ஆஸ்திரேலிய மாநில அரசுகளின் பொதுவிதி...'''' ஆகா அரசின் கருணை.
  அருமைத் தகவல்கள். தங்கள் முயற்சிக்கு இனிய வாழ்த்து.
  சகோதரி இப்படித்தான்
  நானும் இந்தப் பயணக் கதைகள் தகவல்களை முதலில் சேகரித்து,
  குறித்து முக்கியமானவற்றை சேர்த்து எழுதுவேன் அதில் ஓரு பரமதிருப்தி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 14. அற்புதமான, ஆச்சர்யமான, விபரங்கள் தங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி.
  Killergee
  www.killergee.blogspot.com

  ReplyDelete
 15. பார்க்க புனுகுப்பூனை போல் உள்ளது

  ReplyDelete
 16. அபூர்வமான படங்களுடன், அதிசயமானதோர் ஜந்துவைப்பற்றி, நாங்கள் இதுவரை அறியாத பல தகவல்களை அழகாக சேகரித்து அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete

 17. வணக்கம்!

  வியப்பூட்டும் செய்திகளை இங்கெழுதி வெல்லும்
  இயல்புற்றீா்! வாழ்க இனித்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 18. சிறப்பான தகவலுடன் அருமையான பகிர்வு ! வாழ்த்துக்கள் தோழி .
  http://rupika-rupika.blogspot.com/2014/05/blog-post_9392.html

  ReplyDelete
 19. கனடாவிலும் இது போன்ற marsupials உண்டு. ஆனால் அதற்குப் பெயர் Opossum.

  The Virginia Opossum in Southern Ontario.

  http://www.mnr.gov.on.ca/en/Business/FW/2ColumnSubPage/251071.html

  ReplyDelete
 20. அபூர்வ தகவல்கள்!

  ReplyDelete
 21. இறந்த போஸம்களின் உடல் முழுவதுமாய் மக்குவதற்கு ஆறுமாத காலம் பிடிக்கும். இறந்துகிடக்கும் அந்த பிராணிகளைத் தின்பதன்மூலம் நாய், பூனை, பறவைகள் போன்ற மற்ற உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன என்பது கூடுதல் தகவல். //

  படிக்கவே கவலையாக இருக்கிறது.
  படங்கள் எல்லாம் வெகு அழகு.
  இப்படிப் பட்ட உயிரினத்தைபற்றி இப்போது தான் தெரிந்து கொள்கிறேன்.
  புது செய்தியாக இருக்கிறது.இவற்றின் தொந்திரவு பொறுக்க முடியாமல் அவற்றை கருணை கொலை செல்வதும் , பிடித்து அதன் வசிப்பிடத்தில் விடுவதும், நச்சு உணவு அளிக்க படுவதையும் கேட்க்கும் போது மனதுக்கு கஷ்டமாய் இருக்கிறது.

  ReplyDelete
 22. இந்த பூமிப்பரப்பில் எத்தனை விதமான உயிரினங்கள். படிக்கப் படிக்க அற்புதமாக இருக்கின்றது. அதற்கேற்ப அழகான படங்களுடன் நல்ல விளக்கங்களைத் தந்துள்ளீர்கள்

  ReplyDelete
 23. அறியாத தகவல்கள். அருமையான பகிர்வு.

  ReplyDelete
 24. வணக்கம் ஆச்சர்யமான படங்கள் அருமையான தகவல்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. @வெங்கட் நாகராஜ்

  உண்மைதான். இயற்கையை முற்றிலுமாய் அறிந்துகொள்ள நம் வாழ்நாள் போதாது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

  ReplyDelete
 26. @திண்டுக்கல் தனபாலன்

  வருகைக்கும் கருத்துக்கும் பதிவையும் பின்னூட்டங்களையும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி தனபாலன்.

  ReplyDelete
 27. @இராஜராஜேஸ்வரி

  தங்கள் வருகைக்கும் அனுபவப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மேடம்.
  போசம் பற்றிய தங்கள் பதிவை வாசிக்க ஆவலாக உள்ளேன்.

  ReplyDelete
 28. @தி.தமிழ் இளங்கோ

  தெருநாய்களைப் போல கிருமிகளைப் பரப்புவதாலும் பயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் விளைவிப்பதாலும் எண்ணிக்கையில் ஏராளமாய் இருப்பதாலும் அரசின் அந்த முடிவு தவிர்க்கப்பட இயலாத ஒன்றாக உள்ளது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 29. @kovaikkavi

  மாநிலத்துக்கு மாநிலம் விதிகள் மாறுபடுகின்றன. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி தோழி.

  ReplyDelete
 30. @KILLERGEE Devakottai

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

  ReplyDelete
 31. @குட்டிபிசாசு

  புனுகுப்பூனை மாதிரியா இருக்கிறது? தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குட்டிபிசாசு.

  ReplyDelete
 32. @வை.கோபாலகிருஷ்ணன்

  தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து கருத்திட்டமைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கோபு சார்.

  ReplyDelete
 33. @கவிஞா் கி. பாரதிதாசன்

  அழகிய பாவால் வாழ்த்தினீர். மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 34. @அம்பாளடியாள் வலைத்தளம்

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.

  ReplyDelete
 35. @viyasan

  கனடாவில் உள்ள ஒரே மார்சுபியல் விலங்கு ஓப்போசம். இதற்கும் போசத்துக்கும் பெயரொற்றுமை தவிர நிறைய வேறுபாடுகள் உண்டு. தகவலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி தங்களுக்கு.

  ReplyDelete
 36. @கே. பி. ஜனா...

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

  ReplyDelete
 37. @கோமதி அரசு

  தங்கள் வருகைக்கும் நெகிழ்வான பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

  ReplyDelete
 38. @Chandragowry Sivapalan

  வருகைக்கும் பதிவை ரசித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி சந்திரகௌரி.

  ReplyDelete
 39. @ராமலக்ஷ்மி

  வருகைக்கும் பதிவை ரசித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 40. @பவித்ரா நந்தகுமார்

  வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பவித்ரா.

  ReplyDelete
 41. போஸம்களை பற்றி விரிவான தகவல்களை அறிந்தேன்...நன்றி

  ReplyDelete
  Replies
  1. பதிவை ரசித்துப் பின்னூட்டமிட்டதற்கு நன்றி கலாகுமரன்.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.