6 April 2014

சிரிக்கும் கூக்கபரா - ஆஸ்திரேலியாவின் அதிசயம் 8யாராவது மனம்விட்டு வாய்விட்டு சிரிப்பதைப் பார்த்தால் காரணம் தெரியாமலேயே நமக்கும் சிரிப்பு வந்துவிடும். குறைந்தபட்சம் சிறு புன்னகையாவது வெளிப்படும். கூக்கபரா பறவையெழுப்பும் கெக்கெக்…கெக்கெக்கே என்ற சிரிப்பொலி கேட்டாலும் அப்படித்தான். நம்மையறியாமல் சிரித்துவிடுவோம்.

சிரிக்கும் கூக்கபரா

சிரிக்கும் கூக்கபரா (laughing kookaburra) என்ற இப்பறவை மனிதர்கள் சிரிப்பது போல் ஒலியெழுப்பினாலும் உண்மையில் அது சிரிப்பல்ல. மற்ற பறவைகளுக்கு தன் எல்லைப்பகுதியை அறிவிக்கும் எச்சரிக்கை ஒலியே அது. இப்பறவைகள் தங்களைப் பார்த்து சிரிப்பதாக எண்ணிய ஐரோப்பியக் குடியேறிகள் ஆரம்பத்தில் இவற்றை வெறுத்தார்களாம். ஆனால் போகப்போக அவற்றின் சிரிப்பொலி அனைவருக்கும் பழகிப்போனதோடு பிடித்தும்போனதாம்.

பெரும்பாலும் விடியலும் அந்தியும்தான் கூக்கபராவுக்குப் பிடித்தப் பொழுதுகள். ஒரு பறவை மெல்ல கெக்கலிக்க ஆரம்பித்துவிட்டால் போதும், அக்கம்பக்கத்திலிருக்கும் மற்ற கூக்கபரா பறவைகளும் உடன் இணைந்துகொள்ள அந்தப் பிரதேசமே கெக்கலிப்பில் கிலுகிலுத்துப்போகும். உனக்கு நான் இளப்பமில்லை என்பதைப் போல் ஒவ்வொன்றும் தங்கள் ஆளுமையை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கிவிடும். ஆஸ்திரேலியக் காடுகளை அதிரவைக்கும், செவிகிழிக்கும் இவ்வொலியைப் பற்றி முன்பின் அறிந்திராதவர்கள் கேட்க நேர்ந்தால், அதிர்ந்து போவார்கள். இவ்வளவு சுவாரசியமான கூக்கபராவின் சிரிப்பொலியைக் கேட்கவேண்டுமென ஆசையாக உள்ளதுதானே… கீழே இருப்பதைக் கேட்டுப்பாருங்கள். கட்டாயம் சிரிப்பு வரும்.கூக்கபரா மீன்குத்தியினத்தைச் சார்ந்த பறவை. உலகிலுள்ள மொத்தம் 90 வகை மீன்குத்திகளுள் மிகவும் பெரிய பறவை ஆப்பிரிக்காவின் ராட்சத மீன்குத்திப் பறவைதான் என்றாலும் உடல் எடையில் மற்ற எல்லாவற்றையும்விடப் பெரியது ஆஸ்திரேலியாவின் சிரிக்கும் கூக்கபராதான்.


நீலச்சிறகு கூக்கபரா

கூக்கபரா பறவையினத்தில் செம்பழுப்பு மார்பு கூக்கபரா, மினுக்கும் கூக்கபரா, நீலச்சிறகு கூக்கபரா, சிரிக்கும் கூக்கபரா என்று நான்கு வகைகள் இருந்தாலும் பொதுவாக கூக்கபரா என்றால் அது சிரிக்கும் கூக்கபராவையே குறிக்கும். அந்த அளவுக்கு அதன் சிரிப்பு பிரசித்தி பெற்றது. முதலிரண்டு வகைகள் நியூகினி மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவுகளில் காணப்பட, ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பைச் சார்ந்த பிந்தைய இரண்டுக்கும்தான் அடிக்கடி எல்லைத் தகராறு ஏற்படுவதுண்டு. சிரிக்கும் கூக்கபராவின் ஒலியோடு ஒப்பிடுகையில் நீலச்சிறகு கூக்கபராவின் ஒலி கொஞ்சம் கரடுமுரடுதான்.


பெரிய தலை, பெரிய உருண்டை விழிகள், மேல்பாதி கருப்பாகவும் கீழ்பாதி இளம்பழுப்பு நிறத்திலும் உள்ள மிகப்பெரிய அலகு இவற்றைக் கொண்ட சிரிக்கும் கூக்கபரா பறவையின் உடல், வெள்ளை அல்லது வெளிர்சந்தன நிறத்திலும், இறக்கைகள் அடர்பழுப்பு நிறத்தில் ஆங்காங்கே நீலநிறத் திட்டுக்களுடனும் காணப்படும். சுமார் 45 செ.மீ. நீள உடலில் அலகின் நீளம் மட்டுமே 10 செ.மீ. இருக்கும். ஆண் பெண் இரண்டும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருந்தாலும் பெண் பறவை ஆணைவிடவும் சற்றுப் பெரியதாக இருக்கும். அதன் வாலின்பின்புறம் ஆணைவிடவும் சற்று வெளிர்நீலத்தில் இருக்கும்.

மீன்குத்தி இனத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும் கூக்கபரா பறவைகளுக்கு மீன்களைவிடவும் மாமிசம்தான் அதிவிருப்பம். இவை மாமிச உண்ணிகள் மட்டுமல்ல, கழுகு, பருந்து போன்று கொன்றுண்ணிகளும் கூட. எலி, தவளை, பாம்பு, பூச்சிகள், பிற பறவைகள், சிறிய விலங்குகள் என்று பல உயிரினங்களையும் வேட்டையாடி உண்ணக்கூடியவை. இரை சிறியதாயிருந்தால் அப்படியே விழுங்கிவிடும். பெரியதாயிருந்தால் தரையிலோ மரக்கிளையிலோ மோதிச் சாகடித்து பிறகு தின்னும். புதர்க்காடுகளிலும், வயற்புறங்களிலும் மிக நீளமான பாம்புகளை வாயில் கவ்வியபடி காட்சியளிக்கும் கூக்கபரா பறவைகளைக் காண்பது சர்வ சாதாரணம்.கூக்கபரா வசந்தகாலத்தில் மரப்பொந்திலோ கரையான் புற்றிலோ கூடமைக்கும். இரண்டு முதல் நான்கு முட்டைகள் வரை இடும். முட்டைகள் வெண்ணிறத்தில் இருக்கும். இவை ஒருமுறை சோடி சேர்ந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் இணைபிரியாதிருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆண் பெண் இரண்டுமே அடைகாப்பது முதல் குஞ்சுகளை வளர்ப்பது வரை ஒன்றுக்கொன்று உதவும். 


25 நாளில் முட்டைகள் பொரிந்து கண்பார்வையற்ற இறகுகளற்ற நிலையில் குஞ்சுகள் வெளிவருகின்றன. ஒருமாதத்துக்குப் பிறகு இறகுகள் முளைக்கின்றன. கூக்கபரா பறவைகள் குடும்பமாய் வாழும். அப்பா அம்மாவுடன் மூத்த பிள்ளைகளும் வேட்டைக்குச் சென்று உணவு கொணர்ந்து தம்பி தங்கைகளுக்கு ஊட்டி வளர்க்கும். பெரிய பறவைகள் முதலில் இரையைத் தாங்கள் விழுங்கி அது அரைவாசி சீரணமான நிலையில் கக்கி குஞ்சுகளுக்கு ஊட்டுகின்றன.கூக்கபரா பறவைகள் மனிதர்களுடன் எளிதில் பழகக்கூடியவை. உணவு கொடுத்துப் பழக்கிவிட்டால் திருடவும் கூடும். பறவைகள் வசிக்க ஏதுவாக மரங்களும் தோட்டமும் அமைத்து உதவலாமே ஒழிய அவற்றுக்கு உணவு தருதல் கூடாது. அது பறவைகளின் உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை, உடல்நலம் போன்றவற்றைக் கெடுக்கும் அபாயமிருப்பதால் வனப்பறவைகளுக்கு இயற்கைக்கு மாறாய் உணவளிப்பதை அரசு தடைசெய்துள்ளது.  

   

ஆஸ்திரேலியாவின் அடையாளங்களுள் கூக்கபராவுக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. 2000 த்தில் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டின் மூன்று சின்னங்களுள் ஒன்று ஓலி எனப்படும் கூக்கபரா. மற்ற இரண்டு சிட் எனப்படும் பிளாட்டிபஸ்ஸும் மில்லி எனப்படும் எக்கிட்னாவுமாகும்.


1914 முதல் கூக்கபராவின் உருவம் பொறித்த பல அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன என்பதும் 1990 முதல் வருடந்தோறும் கூக்கபரா உருவம் தாங்கிய தூய வெள்ளியிலான முதலீட்டு நாணயங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன என்பதும் சிறப்பு. 
நடப்பு உலக சாம்பியனான (2010) ஆஸ்திரேலிய ஆண்கள் பிரிவு ஹாக்கி அணியின் பெயர் கூக்கபரா என்பது கூடுதல் சிறப்பு. LINEAGE வீடியோ விளையாட்டிலும் இடம்பெறுகிறதாம் இந்த கூக்கபரா, ஆனால் இரட்டைத்தலையுடன். என்னே ஒரு விநோத கற்பனை!ஒவ்வொருநாளும் நமக்கு கதிரவனின் வருகையை சேவல் ‘கொக்கரக்கோ….’ என்று கூவித்தெரிவிப்பது போல, ஆதிகாலம் முதல் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களுக்கு ஆண்டவன் அருளிய அதிகாலை அலாரம், இந்த கூக்கபரா குரல்தானாம். வானக்கடவுளால் ஒவ்வொரு நாளின் துவக்கத்திலும் ஆகாயத்தில் சூரியன் என்னும் பெருநெருப்பு மூட்டப்படும் நேரத்தையும், நாளின் முடிவில் நெருப்பு அணைக்கப்படும் நேரத்தையும் பூமியில் உள்ள மக்களுக்கு தங்கள் உரத்தக் குரலொலி மூலம் கூக்கபராக்கள் தெரிவிக்கின்றன என்பது அம்மக்களின் நம்பிக்கை.

அந்தக் கதை என்னவென்று பார்ப்போமா? முன்னொரு காலத்தில் சூரியன் என்று ஒன்று இல்லவே இல்லையாம். வானில் நிலாவும் நட்சத்திரங்களும் மட்டுமே இருந்தனவாம். அரையிருளில்தான் அப்போது வாழ்க்கை. ஒருநாள் ஈமு பறவைக்கும் ப்ரோல்கா என்னும் நாட்டியப் பறவைக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையில் முடிந்துவிட்டது. ப்ரோல்கா கோபத்துடன் ஈமுவின் கூட்டிலிருந்த முட்டை ஒன்றை பலங்கொண்ட மட்டிலும் வானத்தை நோக்கி எறிய, அது வானத்தில் இருந்த விறகுக்குவியலின் மீது விழுந்தது. விழுந்த வேகத்தில் முட்டை உடைந்து மஞ்சள் கரு வெளிவந்தபோது விறகுக்குவியலில் தீப்பற்றிக் கொண்டது.நெருப்பின் ஒளியில் பூமி தகதகக்கும் அழகைப் பார்த்த வானக்கடவுள், அந்த அழகைத் தொடர்ந்து ரசிக்க தினமும் தீமூட்ட முடிவெடுத்தார். வானக்கடவுளும் அவரது உதவியாளர்களும் இரவு முழுவதும் விறகுகளை சேகரித்துவைத்துக்கொண்டு நெருப்பு மூட்டக் காத்திருந்தார்களாம். ஆனால் இதை மக்களுக்கு எப்படித் தெரிவிப்பது. எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே… அதனால் விடிவெள்ளியை அனுப்பினாராம். உறக்கத்திலிருப்பவர்கள் விடிவெள்ளியின் வருகையை எப்படி அறிவார்கள்? முயற்சி வீணானது.

என்ன செய்வது என்று கடவுள் யோசித்துக் கொண்டிருக்கையில் ஒருநாள் கூக்கபராவின் கெக்கலிப்பைக் கேட்டாராம். ‘இதை… இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்’ என்று மகிழ்ச்சியுடன் கூக்கபராவை அழைத்து தினமும் அதிகாலையிலும் அந்தியிலும் வானத்தில் தீமூட்டப்படுவதையும் தீ அணைக்கப்படுவதையும் மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பை ஒப்படைத்தாராம். அன்றிலிருந்து அவை தவறாமல் தங்கள் கடமையைச் செய்துவருகின்றனவாம். எவ்வளவு பொறுப்புமிக்கப் பறவைகள்!
பூர்வகுடி மொழியில் கூக்கபராவின் பெயர் goo-goor-gaga. இந்தப் பெயரைத் தொடர்ந்து வேகவேகமாகச் சொல்லிப்பாருங்கள்… நீங்களும் கூக்கபராவாய் மாறியிருப்பீர்கள்! 

****************************************************************************
(படங்கள், காணொளி யாவும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. உரியவர்களுக்கு நன்றி)

39 comments:

 1. வீடியோ பார்த்தேன். "சிரிப்பு வருது சிரிப்பு வருது..." என்று பாடாததுதான் குறை! :))

  வழக்கம்போல ஆச்சர்யமான பல விவரங்களுடன் சுவாரஸ்யப் பகிர்வு.

  ReplyDelete
 2. கூக்கபரா இனிமை... குஞ்சுக்களை வளர்க்கும் விதம் வியப்பு...! பல தகவல்களுக்கும் நன்றி...

  கதை சுவாரஸ்யம்...

  ReplyDelete
 3. கூக்கபராக்களின் சிரிப்பொலி கேட்க அருமை. பல அறியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 4. அழகான அருமையான சிறப்பான சிரிக்க வைக்கும் பகிர்வு.

  படங்கள் எல்லாமே அழகு. விளக்கங்களும் பிரமாதம்.

  காணொளி கண்டேன். காதால் கேட்டு நானும் சிரித்து ரஸித்து மகிழ்ந்தேன்.

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

  அன்புடன் கோபு

  ReplyDelete
 5. சிரிக்கும் பறவை பற்றி சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  சிரிக்கும் சிங்காரப் பறவைகள்..!
  http://jaghamani.blogspot.com/2013/08/blog-post_25.html

  ReplyDelete
 6. கூக்கபரா இனிமை... குஞ்சுக்களை வளர்க்கும் விதம் வியப்பு...! பல தகவல்களுக்கும் நன்றி...

  ReplyDelete
 7. கூக்கபரா பார்க்க பெரிய சைஸ் புறா மாதிரி இருக்கிறது. உலகிலேயே சிரிக்கத் தெரிந்த விலங்கு மனிதன் மட்டும்தான் என்பார்கள். இங்கேயோ கூக்கபரா அதைப் பொய்யாக்கி சிரிக்கிற்து. வீடியோவில் அதன் சிரிப்பொலியை மிக ரசித்தேன். கர்ணபரம்பரைக் கதைகள் எல்லா நாட்டிற்கும் பொது போல. கூக்கபராவைப் பற்றிய கதையும் அழகு.

  ReplyDelete
 8. சென்ற வாரம் மாலையில் வாக் போகையில் ஒரு வித்யாசமான பறவையை பார்த்தேன். கைபேசி எடுத்துச்செல்லாததற்காக வருத்தப்பட்டேன். பின்ன படம் எடுக்கமுடியலையே:(( ரெண்டு மூணு நாள் வருத்தப்பட்டு பின் மறந்துட்டேன், இப்போ தான் தெரியுது அது கூக்கூபாறா!! நன்றி அக்கா! விக்கிபீடியாவில் கூக்கூபாறா பற்றிய தமிழ் கட்டுரை இல்லை. அவர்களும் எழுதசொல்லி கேட்டிருக்கிறார்கள்! இந்த கட்டுரையை அதில் இணைத்து விடுங்களேன். பலரும் பயனடைவார்கள் இல்லை.

  ReplyDelete
 9. அத்தை இத பாத்தா எனக்கும் சிரிப்பா..வருது!(நிறைமதி)

  ReplyDelete
 10. மை... மை...மைதிலி ஆஸ்திரேலியாவுலயா இருக்காங்க?

  ReplyDelete
 11. கூக்கபராவின் ஆக்கபூர்வ சிரிப்பு கேட்டு துக்கம் வரா கணங்கள் பெற்றோம்! அற்புதம் ஆண்டவனின் படைப்புக்கள்!

  ReplyDelete
 12. சுவாரசியமான தகவல்கள். அருமை கீதா. நன்றி. :-)

  ReplyDelete
 13. கிரிக்கட் விளையாட்டில் கூக்குபுரா பந்து என்று ஒரு வகை கேள்விப்பட்டதுண்டு, இப்பதிவின் மூலம் கூக்குபுரா பறவை பற்றி ஒரு தகவல் களஞ்சியமே கொடுத்து விட்டீர்கள் நன்றி.

  ReplyDelete
 14. கூக்கபரா..... சிரிப்பொலி கேட்டு நானும் சிரித்தேன். ரசித்தேன்.

  கூக்கபரா பந்துகள் கேள்விப்பட்டதுண்டு. இன்று தான் அப்பறவை பற்றிய மற்ற விவரங்கள் தெரிந்து கொண்டேன். தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 15. @பால கணேஷ் இல்லை நான் புதுகையில் தான் இருக்கிறேன், ஏன் அண்ணா நம்ம ஊருக்கு குக்கூபாரா வரக்கூடாதா? என் பள்ளிக்கு செல்லும்வழியில் இன்னும் எத்தனையோ விதமான பறவைகளை பார்கிறேன். ஒவ்வொன்னுக்கு கீதாக்கா கிட்ட தான் பேர் கேட்கலாம்னு இருக்கேன்!

  ReplyDelete
 16. மிக அரிதான, அதிகம் கேள்விப்படாத விஷயத்தை தெளிவாக,
  மிக அருமையாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் கீதா மஞ்சரி. உங்களது
  வலைத்தளமும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. @ஸ்ரீராம்.

  சிரித்து மகிழ்ந்து கருத்திட்டமைக்கு நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 18. @திண்டுக்கல் தனபாலன்

  வருகைக்கும் ரசித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி தனபாலன்.

  ReplyDelete
 19. @ராமலக்ஷ்மி

  வருகைக்கும் பதிவை ரசித்து மகிழ்ந்தமைக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 20. @வை.கோபாலகிருஷ்ணன்

  தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து, சிரித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி கோபு சார்.

  ReplyDelete
 21. @இராஜராஜேஸ்வரி

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம். சிரிக்கும் பறவைகளைப் பற்றிய தங்கள் பதிவை நானும் ரசித்தேன்.

  ReplyDelete
 22. @Seeni

  வருகைக்கும் பதிவை ரசித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி சீனி.

  ReplyDelete
 23. @பால கணேஷ்

  பெரிய சைஸ் மீன்குத்தி என்றால் சரியாக இருக்கும் கணேஷ். வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி கணேஷ்.

  ReplyDelete
 24. @Mythily kasthuri rengan

  மைதிலி, நீங்கள் குறிப்பிடுவது இதே கூக்கபராவாயிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இது புலம்பெயர்வதில்லை. நீங்கள் பார்த்தது பனங்காடை எனப்படும் பறவையாக இருக்கலாம். இதைப்பற்றி இப்போதுதான் முகநூலில் நண்பர் மூலம் அறிந்தேன். கருத்துப்பதிவுக்கு மிக்க நன்றி மைதிலி.

  ReplyDelete
 25. @Mythily kasthuri rengan

  அப்படியா... நிறைமதியின் வருகைக்கு நன்றி. நிறைய சிரிங்க.. சந்தோஷமா இருங்க.

  ReplyDelete
 26. @கே. பி. ஜனா...

  தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

  ReplyDelete
 27. @ஹுஸைனம்மா

  வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஹூஸைனம்மா.

  ReplyDelete
 28. @G.M Balasubramaniam

  கிரிக்கெட் விளையாட்டில் குக்குபரா பந்து பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 29. @வெங்கட் நாகராஜ்

  வருகைக்கும் பதிவினை ரசித்து மகிழ்ந்தமைக்கும் நன்றி வெங்கட். குக்கபரா பந்து பற்றி இப்போதுதான் அறிகிறேன். நன்றி உங்களுக்கு.

  ReplyDelete
 30. @Mythily kasthuri rengan

  புகைப்படமெடுத்துப் பதிவிடுங்கள் மைதிலி. பறவை ஆர்வலரான என் நண்பர் மூலம் உங்களுக்கு அவற்றைப் பற்றி அறியத்தருகிறேன்.

  ReplyDelete
 31. @Mythily kasthuri rengan

  புகைப்படமெடுத்துப் பதிவிடுங்கள் மைதிலி. பறவை ஆர்வலரான என் நண்பர் மூலம் உங்களுக்கு அவற்றைப் பற்றி அறியத்தருகிறேன்.

  ReplyDelete
 32. @புவனேஸ்வரி ராமநாதன்

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம். பதிவோடு வலைத்தளத்தை ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 33. நன்றி கீதா அக்கா! ஆனால் என்ன பிரச்சனையை என்றால் காலை வேளைகளில் பள்ளிக்கு செல்லும் வழியில் பல பறவைகள் காணக்கிடைக்கிறது! அங்கு நின்று படம் எடுப்பது அத்தனை பாதுகாப்பை வேறு இல்லை! இந்த விடுமுறையில் முயற்ச்சிக்கிறேன் :))

  ReplyDelete
 34. @Mythily kasthuri rengan

  முதலில் பாதுகாப்பு முக்கியம். நேரமிருக்கும்போது, வசதிப்படும்போது முயற்சி செய்யுங்கள். உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் மைதிலி.

  ReplyDelete

 35. வணக்கம்!

  கூக்க பராப்பறவைக் கொக்கரிப்பைக் கண்டிடவே
  ஊக்கம் பிறக்கும் உளத்து

  தமிழ்மணம் 3

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 36. @கவிஞா் கி. பாரதிதாசன்

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 37. சிரிக்கும் கூக்கபரா - ஆஸ்திரேலியாவின் அதிசயம் 8 = கீத மஞ்சரி = காணொளியுடன் கூடிய, படங்கள் நிறைந்த, விபரங்கள் நிறைந்த அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் காணொளி இயக்கி பார்க்க வேண்டுகிறேன். மகிழ்வீர்கள். நன்றி கீத மஞ்சரி

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி ஐயா.

   Delete
 38. Lovely post and beautiful pictures.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.