26 March 2014

வாம்பேட் - ஆஸ்திரேலியாவின் அதிசயம் 7ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினங்களில் அடுத்ததாய் நாம் பார்க்கவிருப்பது வாம்பேட் எனப்படும் வளைவாழ் உயிரினம் பற்றி. உலகிலுள்ள வளைவாழ் தாவர உண்ணிகளிலேயே மிகப் பெரியது வாம்பேட்தான். குள்ளமான உருவமும் இடலமான தலையும், பழுப்பு சாம்பல் நிறங்களில் பளபளக்கும் ரோமமும், குட்டிக் கண்களும், கூரான காதுகளும், வலிமையான கால்களும், நீளமான கால்நகங்களும் உடைய, மண்ணில் வளை தோண்டி அதில் வாழக்கூடிய ஒரு மார்சுபியல் விலங்குதான் வாம்பேட். மார்சுபியல் இனத்தில் இரண்டாவது பெரிய விலங்கு இது. முதல் இடத்தைப் பிடிப்பது கங்காரு.

மார்சுபியல் என்றால் வயிற்றில் பை போன்ற அமைப்புள்ள விலங்குகள் என்று முன்பே அறிந்திருக்கிறோம். கங்காருவைப் போலவே இதன் வயிற்றிலும் குட்டியைப் பாதுகாக்க பை போன்ற அமைப்பு உண்டு. ஆனால் தலைகீழாக அதாவது பையின் திறப்பு பின்னோக்கி இருக்கும். ஏன் என்று புரிகிறதாஇது ஒரு வளைவாழ் உயிரினம் என்பதால் வளை தோண்டும்போது வெளியேறும் மண் தூசு போன்றவை பைக்குள் சென்று குட்டியைப் பாதிக்காமலிருக்க இப்படியொரு இயற்கை அமைப்பு.


தாயின் பைக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் குட்டி

வாம்பேட்கள் கட்டைகுட்டையாய் நல்ல வலிமையான உடலும் கூரிய பற்களும் கொண்டிருப்பதால் இவற்றின் பாதையை கதவோசுவரோவேலியோ கொண்டு தடுக்கவியலாது. அவற்றைத் தடுக்கக்கூடியவை கான்கிரீட்கடின இரும்புகடும்பாறைகள் போன்றவை மட்டுமே. அதனாலேயே இவற்றுக்கு புதர்க்காடுகளின் புல்டோசர்’ என்ற பெயர் உண்டு.

வாம்பேட் ஒரு இரவு விலங்கும் கூட. பகல் முழுவதும் வளைக்குள் உறங்கி ஓய்வெடுத்துவிட்டு இரவுநேரங்களில் வெளியே வந்து மேய ஆரம்பிக்கும். ஆம். புற்கள்தான் இதன் பிரதான உணவு. ஆனாலும் புற்கள் கிடைக்காத காலங்களில் தளிர்கள், வேர்கள், மரப்பட்டைகள், பாசி போன்றவற்றையும் உண்டு உயிர்வாழும். வாம்பேட்களுக்கு மிகவும் குறைந்த அளவில்தான் தண்ணீர் தேவைப்படும். ஒரு நாளைய உணவு சீரணிக்க எட்டு முதல் பதினான்கு நாட்களாகுமாம். மிகவும் மெதுவாக நடைபெறும் சீரணத்திறத்தால் உணவிலிருக்கும் கடைசி சத்துவரை உணவுக்குழாயால் உறிஞ்சப்படுகிறது. அதிகப்படியான நீரை உறிஞ்சிக்கொண்டு தேவையற்ற கழிவை மட்டும் வெளியேற்றும் வகையில் பிரத்யேகமான சிறுநீரகங்களைக் கொண்டுள்ளதும் மற்றொரு சிறப்பம்சம். 

வாம்பேட் பெரும்பாலான இரவுநேரங்களை தன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவு தேடுவதிலேயே கழிக்கும். கோடைக்காலத்தில் பகலில் வெளியே தலையைக் காட்டாத வாம்பேட் குளிர்காலத்தில் வெளியில் வந்து வெயில்காய்ந்துகொண்டிருப்பதைக் காணலாம். நான்கு கால்களையும் மேல்நோக்கி நீட்டியபடி அது மல்லாந்து படுத்துக் கிடப்பதைப் பார்த்தால் செத்து விறைத்துக்கிடப்பதுபோல் தோன்றும். வளைக்குள்ளும் பெரும்பாலான சமயம் அது அப்படித்தான் உறங்குமாம். தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கமும் வாம்பேட்டுக்கு உண்டு என்பதும் ஒரு வேடிக்கையான செய்தி.


வாம்பேட்கள் உறுமல், செருமல், சீற்றம், க்ளக்க்ளக்…  போன்று விதவிதமான ஒலியெழுப்பக் கூடியவை. இனப்பெருக்க காலத்தில் துணையைத் தேடி மிகவும் உரத்த குரலில் ஒலியெழுப்பும். கோபம் வந்தால் ஸ்ஸ்ஸ்ஸ்…’ என்னும் இரையும். சில நேரங்களில் பன்றியைப் போன்று க்ரீக்க்ரீக்என்று கீச்சிட்டுக் கத்தும்.

வாம்பேட் இனத்தில் சாதாரண வாம்பேட்,  வடபிராந்திய மயிர்மூக்கு வாம்பேட்தென்பிராந்திய மயிர்மூக்கு வாம்பேட் என்று மூன்று பிரிவுகள் உள்ளன. மூன்றும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகின்றன என்பது சிறப்பு. சாதாரண வாம்பேட்டுக்கும் மயிர்மூக்கு வாம்பேட்களுக்கும் என்ன வித்தியாசம். அந்த மயிர்மூக்குதான் வித்தியாசம். சாதாரண வாம்பேட்டுடைய மூக்கு ரோமங்களற்று வழுவழுப்பாக இருக்கும். காதுகள் சின்னதாகவும் தலை உருண்டையாகவும் இருக்கும். குளிர்பகுதிகளில் வாழ்வதால் ரோமங்கள் தடித்து அடர்ந்து நீளமாக இருக்கும். மயிர்மூக்கு வாம்பேட்களுக்கு மூக்கைச் சுற்றி பூனைக்கிருப்பது போல் மீசை ரோமங்கள் காணப்படும்.

சாதாரண வாம்பேட்

தென்பிராந்திய மயிர்மூக்கு வாம்பேட்

வடபிராந்திய மயிர்மூக்கு வாம்பேட்

சாதாரண வாம்பேட்டின் வளையில் ஒன்றுதான் வாழும். தன் எல்லைக்குள் வேறு வாம்பேட் வந்துவிட்டால் உறுமியும் கீச்சிட்டும் அதை விரட்டிவிட்டுதான் மறுவேலை பார்க்கும். தன் வளையிருக்கும் பகுதியைத் தனதென்று அறிவிக்கும் வகையில் அப்பகுதியின் திறந்த வெளிகளில் புழுக்கைகள் இட்டும் மரங்களைக் கீறி அடையாளங்களிட்டும் காட்டும். வாம்பேட்டின் புழுக்கைகள் கனச்சதுர வடிவத்தில் இருப்பது இன்னுமொரு சுவாரசியத் தகவல். 


கனச்சதுர புழுக்கைகள்

பொதுவாகவே வாம்பேட் புத்திகூர்மை நிறைந்தது. வோம்பேட்டின் மண்டையோடு அவற்றின் உடலுக்கேற்ற அளவில் இல்லாமல் பெரியதாக இருப்பதும் அது முழுவதுமே மூளை நிரம்பியிருப்பதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள அற்புதம். வாம்பேட்டின் சாதுர்யத்தை குறிப்பிட்ட நிகழ்வொன்றால் அறியலாம். ஒருமுறை ஆராய்ச்சிக்காக சில வாம்பேட்களைப் பிடிப்பதற்காக அவற்றின் வளைவாயில்களில் பொறிவைத்துக் காத்திருந்தார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். இரண்டுநாட்களாகியும் ஒரு வாம்பேட் கூட பொறியில் சிக்கவில்லையே என்று பார்த்தபோதுதான் தெரிந்ததாம், அவை  வேறு பக்கம் வழியமைத்து தப்பி வெளியேறி விஷயம்.

வாம்பேட் பெரும்பாலும் ஏதாவது ஒரு மரத்தை ஒட்டியே வளையை அமைக்கும். மண் சரிந்து வளையை மூடிவிடாமலிருக்க மரத்தின் வேர்கள் தூண்கள் போல தாங்கிப்பிடித்துப் பாதுகாக்கும். வாம்பேட்டின் வளைகள் வியக்கத்தக்கவகையில் பொறியியல் கட்டுமானத் திறனுடன் அமைக்கப்படுகின்றனவாம்.

வேர்களே தூண்களாய்...
வாம்பேட்களுக்கு டிங்கோ நாய்களும் டாஸ்மேனியன் டெவில்களும் கழுகுகளும்தான் இயற்கை எதிரிகள். சிறிய அளவிலான வளர்ப்பு நாயோ நரியோ வாம்பேட்டைத் துரத்தியபடி வளைக்குள் வந்துவிட்டால் வாம்பேட் அவற்றை எதிர்த்து நிற்கும். உறுமி பயமுறுத்தும். அதையும் மீறித் தொடர்ந்தால் அவ்வளவுதான், எதிரியின் உயிருக்கு உத்திரவாதமில்லை. வாம்பேட் தன் வலிமையான பின்னங்கால்களால் கழுதை போல உதைத்து மூர்க்கமாகத் தாக்குவதோடு தன் முப்பது கிலோ எடையுள்ள உடலைக்கொண்டு எதிரியை, வளையின் பக்கவாட்டுச் சுவர்களோடு வைத்து நசுக்கி சாகடித்துவிடும். சில வாம்பேட்கள் எதிர்த்து நிற்பதை விடவும் ஓடித் தப்பிக்கவே விரும்பும். மந்தமான கண்பார்வை இருந்தாலும் அபாரமான செவிக்கூர்மையும் நுட்பமான மோப்பசக்தியும், மணிக்கு 40 கி.மீ ஓடக்கூடிய திறமையும் இருப்பதால், வாம்பேட்டின் உள்ளுணர்வு தற்காத்துக்கொள்ள ஓட்டத்தையே பரிந்துரைக்கும். இவை மிகத்துல்லிய நில அதிர்வைக் கூட உணரக்கூடியவை.

ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்துதான் வைத்திருக்கிறான் என்பார்கள். ஆட்டுக்கு எப்படியோ? ஆனால் வாம்பேட்டுக்கு ஒரு அங்குல நீளத்துக்கும் குறைவான வால்தான். கிட்டத்தட்ட ஒரு மீட்டர் நீளமுள்ள வாம்பேட்டுக்கு குட்டியாய் பெயரளவில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு உறுப்புதான் வால். தனக்கு பெரிய அழகான வாலில்லையே என்று வாம்பேட் வருத்தப்படும் அவசியமே இருக்காது. மாறாக மகிழ்ச்சிதான் அடையும். ஏனெனில் வாம்பேட்டைத் துரத்திக்கொண்டு வளைக்குள் வரும் விலங்குகளுக்கு எளிதில் சிக்கமுடியாத அளவிலான வால் அல்லவா அது!


வசந்தகாலத்தின் கடைசியிலிருந்து மத்திய கோடைக்காலம் வரையிலும் இவற்றின் இனப்பெருக்க காலம். கர்ப்ப காலம் 21 நாட்கள்தானாம். அதன்பின் ஒரு மொச்சைக்கொட்டை அளவு குட்டி பிறக்கிறது. அதிசயமாக எப்போதாவது இரட்டைக்குழந்தைகள் பிறப்பதுண்டாம். குட்டி பிறந்தவுடன் பார்க்கும் திறன், கேட்கும் திறன் எதுவும் வளர்ச்சி அடைந்திராத நிலையில் நுகர்திறனை மட்டும் கொண்டு, உள்ளுணர்வு வழிநடத்த மெல்ல ஊர்ந்து தாயின் வயிற்றுப்பைக்குள் சென்று தஞ்சமடைந்துவிடுகிறது. பைக்குள்ளிருக்கும் இரண்டு பால்காம்புகளில் ஒன்றை வாயால் பற்றிக்கொண்டவுடன் அது வாய்க்குள் உப்பிக்கொண்டுவிடுகிறது. அதன்பின் எந்த சமயத்திலும் குட்டி கீழே விழமுடியாது என்பது இயற்கையின் விநோதம்.ஒன்பது மாதம் வரை வயிற்றுப்பைக்குள் வாழும் குட்டி அதன்பிறகு வளையில் சில காலம் அம்மாவின் பராமரிப்பில் வாழும். அம்மாவின் பராமரிப்பில் இருக்கும்போது குட்டிகள் வளை தோண்டக் கற்றுக்கொள்கின்றன. தாங்கள் வசிக்கும் வளைக்குப் பக்கத்தில் புதிதாய் சின்ன சின்ன வளைகள் தோண்டி பழகிப் பயிற்சி பெறுகின்றன. குட்டிகள் மூன்று வருடத்தில் பருவத்துக்கு வருகின்றன. மழையையும் மழைக்குப் பின்னான பயிர்வளத்தையும் பொறுத்துதான் இவற்றின் இனப்பெருக்க விகிதம் அமையுமாம். இவற்றின் சராசரி ஆயுட்காலம் ஐந்து முதல் இருபது ஆண்டுகள். பொதுவாக வாம்பேட்கள் தனிமை விரும்பிகள். பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் வாழ்நாளில் வாம்பேட்களை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிராதவர்கள்தாம். ஆஸ்திரேலியாவில் முதல் ஐரோப்பியக் குடியேற்றத்துக்குப் பிறகு பத்தாண்டுகள் வரையிலும் எவர் கண்ணுக்கும் வாம்பேட்கள் தென்படவில்லை என்பது வியப்பான உண்மை.எல்லா உயிரினங்களுக்கும் நேர்ந்ததைப் போலவே ஐரோப்பியக் குடியேற்றத்தால் வாம்பேட் இனமும் தங்கள் எல்லைகளைக் குறுக்கிக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. விவசாயத்துக்காக நிலப்பரப்பு அபகரிப்பு, பயிர்களை அழிக்கும் முயல்களைக் கொல்ல வைக்கப்படும் விஷம், வாகனங்களால் ஏற்படும் விபத்து போன்ற காரணங்களால் இன்று இவை அருகிவரும் உயிரினங்களாக அறிவிக்கப்பட்டு அரசால் பாதுகாக்கப்படுகின்றன. சாதாரண வாம்பேட்டை விடவும் தென்பிராந்திய மற்றும் வடபிராந்திய மயிர்மூக்கு இனங்கள் இரண்டும் அழிவின் விளிம்பில் இருக்கின்றனவாம்.

தென்பிராந்திய மயிர்மூக்கு வோம்பேட் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் அடையாள விலங்கு என்னும் சிறப்பை உடையது. வாம்பேட்களின் மேல் சிறப்பு கவனம் செலுத்தும்வண்ணம் 2005 முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 22- ந்தேதி வாம்பேட் தினமாக அனுசரிக்கப்படுகிறது. வாம்பேட் பற்றிய பூர்வகுடி கதை என்னவென்று பார்க்கலாமா? வாரேனும் மிரியமும் நண்பர்கள். இருவரும் ஒன்றாக விளையாடி, ஒன்றாக உணவு தேடி உண்டு, ஒன்றாகப் பொழுதைக் கழித்து வந்தார்கள். ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் இருவரும் கருத்து வேறுபட்டனர். இரவில் தங்குவதற்கு மரத்தாலும் மரப்பட்டைகளாலும் ஆன ஒரு சிறு குடிசையைக் கட்டினான் வாரேன். மிரியத்தையும் அதுபோலொன்று கட்டிக்கொள்ளச் சொன்னபோது, தனக்கு அது தேவையில்லை என்றும் பொட்டல் வெளியில் நெருப்பு மூட்டி அதன் அருகில் புல்மெத்தையில் படுத்துக்கொண்டு வானத்தில் மின்னும் விண்மீன்களையும் வட்டமிட்டுப் பறக்கும் மின்மினிகளையும் பார்த்தபடி படுத்துறங்குவதே சுகம் என்றும் மிரியம் கூறினான்.

ஒருநாள் கடுமையான மழையும் புயலும் வந்தது. குளிரும் அதிகமாக இருந்தது. மிரியத்தால் திறந்த வெளியில் நெடுநேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவன் வாரேனின் குடிசை வாசலில் நின்றுகொண்டு தன்னை உள்ளே அழைக்குமாறு கேட்டுக்கொண்டான். வாரேன் சம்மதிக்கவில்லை. மிரியத்தினுடைய சோம்பேறித்தனத்துக்கு அவன் அப்படித்தான் கஷடப்படவேண்டும் என்றான். மிரியம் மீண்டும் மீண்டும் கெஞ்சிய போதும் வாரேன் மனம் இறங்கவில்லை. ஆத்திரமடைந்த மிரியம் ஒரு பெரிய தட்டையான பாறாங்கல்லை எடுத்து, தூங்கிக்கொண்டிருந்த வாரேனின் முகத்தின் மேல் போட்டான். வலி தாங்காத முடியாத வாரேன் ஒரு பெரிய ஈட்டியை எடுத்து மிரியத்தை நோக்கி எறிந்தான். அது மிரியத்தின் பின்பக்கம் தண்டுவடத்தில் குத்திட்டு நின்றது. மிரியம் எவ்வளவு முயன்றும் அவனால் அதை வெளியே எடுக்க முடியவில்லை. அவன் வலியால் துடித்தபடி ஓடமுயன்றான். ஈட்டி நீட்டிக்கொண்டிருந்ததால் அவனால் ஓடவும் முடியவில்லை. துள்ளித் துள்ளிப் போக ஆரம்பித்தான். அவன்தான் கங்காருவாகிப் போனான். அந்த ஈட்டிதான் இன்றைய வால். நான்கு கால்கள் இருந்தும், மற்ற மிருகங்களைப் போல் நடக்க முடியாமல் கங்காரு வாலை ஊன்றித் தாவித் தாவிப் போக அதுதான் காரணம்.

வாரேன் என்ன ஆனான்நண்பனை அடித்துவிட்டதால் பயந்துபோய் மண்ணுக்குள் குழி பறித்து அதில் ஒளிந்துகொண்டான். அவன் தான் பிறகு வாம்பேட் ஆனான். வாம்பேட்டின் முகம் தட்டையாக இருப்பதற்குக் காரணம் மிரியம் அவன் முகத்திலெறிந்த கல்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

*********************************
படங்கள்: நன்றி இணையம்


45 comments:

 1. வாம்பேட் விலங்கின் இயற்கை அமைப்பு, குறட்டை, புத்திகூர்மை, பிரத்யேகமான சிறுநீரகங்கள் என பல தகவல்கள் அறியாதவை... வியப்பானவை... நன்றி சகோதரி...

  பூர்வகுடி கதையும் சுவாரஸ்யம்...

  ReplyDelete
 2. அதிசயமான ஓர் விலங்கினம் பற்றிய அரிய பல தகவல்கள் அளித்துள்ளது வியப்பளிக்கிறது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. பிரியம் + வாரேன் கதைகளும் சுவாரஸ்யமாக உள்ளன. இருவருமே பிரியமில்லாமல் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனரே ! ;) பாவம் தான்.

  ReplyDelete
 4. மறுபடியும் சுவாரஸ்யமான பகிர்வு.

  ReplyDelete
 5. கதை வெகு சுவார்யஸ்ம் தோழி... படங்களும் பகிர்வும் சிறப்பு.

  ReplyDelete
 6. படங்களுடன் கூடிய அற்புதமான அருகிவரும் வாம்பேட் பற்றிய பகிர்வு அருமை! நன்றி!

  ReplyDelete
 7. இப்படி அனைவரும் அறியாத விலங்குகளைப் பற்றி விரிவாகப் பல அபூர்வ தகவல்களுடன் பதிவிடுவதற்கு வாழ்த்துகள் கீதமஞ்சரி! இறுதியில் இதை ஒரு புத்தகமாகப் போட்டுவிடுங்கள்.
  வாம்பேட் அபூர்வமான ஒரு உயிரினமாக இருக்கிறதே..காக்கப்படட்டும்.

  ReplyDelete
 8. இது ஒரு வளைவாழ் உயிரினம் என்பதால் வளை தோண்டும்போது வெளியேறும் மண் தூசு போன்றவை பைக்குள் சென்று குட்டியைப் பாதிக்காமலிருக்க இப்படியொரு இயற்கை அமைப்பு.

  என்னே! இயற்கையின் படைப்பு! இதுவரை அறியாத ஒன்று! நன்றி!

  ReplyDelete
 9. சுவாரஸ்யமான தகவல்கள்...!

  ReplyDelete
 10. நான் ஒரு விபரணச் சித்திர விரும்பி என்பதால், இது பற்றி நிறையப் பார்த்துள்ளேன். ஆனால் உங்கள் பதிவு தமிழில் இன்னும் எனக்குத் தெளிவான விளக்கம் தந்தது. பழங்குடிக் கதையும் சுவாரசியமானது.

  ReplyDelete
 11. வாம்பட் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள். ஆச்சரியப்படுத்துகின்றன..

  ReplyDelete
 12. நமக்குக் காணக் கிடைக்காதஒரு விலங்கினம் வாம்பட். நன்கு தெளிவாக விளக்கியுள்ளீர்கள் ஒரு உயிரியல் விலங்கியல் பாடம் படித்தது போல் இருக்கிறது வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. வாம்பேட் என்னும் அரிய விலங்கு பற்றிய தகவல்கள் அழகிய படங்களுடன்... என்னை வியக்கவைத்த தகவல் வளை தோண்டுகையில் குட்டி பாதிக்கப்படக் குடாது என்பதற்காக இயற்கை அவற்றுக்குச் செய்திருக்கும் வசதி. வியத்தகு இயற்கை...!

  ReplyDelete
 14. எத்தனை எத்தனை விலங்கினங்கள்.... இறைவனின் படைப்பில் எத்தனை ஸ்வாரசியம்...

  தகவல்கள், படங்கள் என சிறப்பான பகிர்வு...

  ReplyDelete
 15. அதிசயமான ஓர் விலங்கினம் பற்றிய அரிய பல தகவல்கள் அளித்துள்ளது வியப்பளிக்கிறது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 16. அபூர்வ விலங்கான வாம்பேட் பற்றி அரிய தகவல்களை வாரி வழங்கியிருக்கிறீர்கள். சுவாரசியம்.

  ReplyDelete
 17. அப்பாடா ! வாம்பட் பற்றி எவ்ளோ தகவல் !
  உங்க தயவால் நானும் உயிரியல் படிக்கிறேன்!
  உங்கள் மருமகளும் படித்துவிட்டாள், அவளே சொல்லணுமாம் !
  நிறை: தேங்க்ஸ் ஆண்டி !

  ReplyDelete
 18. வாம்பேட் பற்றிய தகவல் சுவாரஸ்யமாக இருந்ததோடுஇயற்கையின் வியப்பு!! (வெறும்21நாள் கற்பகாலம் ) நன்றிசகோதரி.

  ReplyDelete
 19. குறட்டைச்சத்தம் தொந்தரவு என்றால் இனிமேல் வாம்பேட் வாம்பேட் என்றும் மெதுவாக சொல்லிக் கொள்ளலாம்...........இல்ல............

  ReplyDelete
 20. //வயிற்றிலும் குட்டியைப் பாதுகாக்க பை போன்ற அமைப்பு உண்டு. ஆனால் தலைகீழாக அதாவது பையின் திறப்பு பின்னோக்கி இருக்கும்//

  //மண் சரிந்து வளையை மூடிவிடாமலிருக்க மரத்தின் வேர்கள் தூண்கள் போல தாங்கிப்பிடித்துப் பாதுகாக்கும்//

  இறைவனின் கருணையை வியக்காமல் இருக்க முடியவில்லை.
  படைப்பை பார்த்து பார்த்து செய்து இருக்கிறான்.

  கர்ப்பகாலம், அதன் ஆயுசு, பால்குடிக்கும் முறை எல்லாம் வியப்பாய் இருக்கிறது.
  அழகாய் எல்லாவற்றையும் விரிவாக பதிவு அளித்தமைக்கு நன்றி.  வாம்பேட் பற்றிய செய்திகள் மிக அருமை.

  ReplyDelete
 21. Anonymous30/3/14 02:00

  வாம்பேட் சுவைத் தகவல்.
  மிக்க மிக்க நன்றி கீதா.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 22. நான் அறியாத ஓர் உயிரினம் பற்றிய அரிய தகவல்கள்! “வாம்பேட் பற்றிய பூர்வகுடி கதை” மிகவும் அருமை, அதை நீங்கள் சொன்னது அதைவிட அழகு! படங்களை எடுத்துப் போட்ட நேர்த்தியும் சிறப்பு சகோதரி. தொடருங்கள்

  ReplyDelete
 23. வணக்கம் சகோதரி
  ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் தங்கள் கட்டுரை மூன்றாம் பரிசினைப் பெற்றுள்ளது. வாழ்த்துகள் சகோதரி. தொடர்ந்து தங்களது சிந்தனை தமிழ்ச் சமூகத்திற்கு உதவட்டும். நன்றி..

  ReplyDelete
 24. @திண்டுக்கல் தனபாலன்

  பதிவை ரசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தனபாலன்.

  ReplyDelete
 25. @வை.கோபாலகிருஷ்ணன்

  பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி கோபு சார்.

  ReplyDelete
 26. @ஸ்ரீராம்.

  வருகைக்கும் வாம்பேட் பற்றிய பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 27. @Sasi Kala

  வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி சசி.

  ReplyDelete
 28. @Seshadri e.s.

  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சேஷாத்ரி.

  ReplyDelete
 29. @தேன்மதுரத்தமிழ் கிரேஸ்

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிரேஸ். புத்தகம் பற்றியெல்லாம் இதுவரை யோசிக்கவில்லை. பார்க்கலாம். :)

  ReplyDelete
 30. @புலவர் இராமாநுசம்

  தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து தாங்கள் இட்ட கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 31. @இராஜராஜேஸ்வரி

  தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 32. @யோகன் பாரிஸ்(Johan-Paris)

  தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா. நான் அறிந்து வியந்தவற்றை நம் தமிழ் சமூகத்தோடு பகிர்ந்துகொள்ள விரும்பியே இப்பதிவுகளை இடுகிறேன். பலரையும் சென்றடைவதில் என் மனம் நிறைகிறது. மிக்க நன்றி தங்களுக்கு.

  ReplyDelete
 33. @ADHI VENKAT

  வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஆதி.

  ReplyDelete
 34. @G.M Balasubramaniam

  இன்னும் கூட நிறைய தகவல்களைத் திரட்டி எழுதியிருந்தேன். வாசிப்போர்க்கு அலுப்புத் தட்டிவிடும் என்று சுருக்கிவிட்டேன்.அதையும் பதிவிட்டிருந்தால்...? :)
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 35. @பால கணேஷ்
  வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி கணேஷ்.

  ReplyDelete
 36. @வெங்கட் நாகராஜ்

  வருகைக்கும் வாம்பேட் பற்றிய தகவல்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி வெங்கட்.

  ReplyDelete
 37. @Seeni

  வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சீனி.

  ReplyDelete
 38. @கே. பி. ஜனா...

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

  ReplyDelete
 39. @Mythily kasthuri rengan

  வருகைக்கும் பதிவை ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி மைதிலி.

  நிறைமதியின் நன்றியை அன்போடு ஏற்றுக்கொண்டேன். வாழ்த்துக்கள்மா.

  ReplyDelete
 40. @malathi k

  பதிவை ரசித்துக் கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி மாலதி.

  ReplyDelete
 41. @malathi k

  மெதுவாக எதற்கு? சத்தமாகவே சொல்லிக்கொள்ளலாம். குறட்டைச் சத்தத்தில் கேட்கவா போகிறது? :)

  ReplyDelete
 42. @கோமதி அரசு

  பதிவின் பல விஷயங்களை வியந்து குறிப்பிட்டுப் பாராட்டிய தங்களுக்கு மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 43. @kovaikkavi

  வருகைக்கும் ரசித்துக் கருத்திட்டமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.

  ReplyDelete
 44. @நா.முத்துநிலவன்

  தங்கள் வருகையும் பதிவு பற்றிய தங்கள் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.

  ReplyDelete
 45. @அ. பாண்டியன்

  தகவலுக்கு நன்றி பாண்டியன். இப்படியொரு போட்டியை முன்னின்று சிறப்புற நடத்தி பங்குகொள்ளும் உற்சாகத்தைப் பலரிடத்தும் தோற்றுவித்த தங்கள் இருவருக்கும் என் பாராட்டுகள் பல.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.