4 February 2014

எக்கிட்னா – ஆஸ்திரேலியாவின் அதிசயம் (6)

ஆஸ்திரேலியாவிலும் நியூகினியாவிலும் மட்டுமே காணப்படும் மற்றொரு அதிசய உயிரினமான எக்கிட்னா பற்றி இன்று அறிந்துகொள்வோமா

முள்ளம்பன்றி போன்ற உடலமைப்பும் எறும்புத்தின்னி போன்ற உணவுப்பழக்கமும் இணைந்த எக்கிட்னாவை முள்ளெறும்புத்தின்னி என்று சொல்வது மிகப்பொருத்தம்.

எக்கிட்னாக்கள் பூமியின் மிகப்பழமையான உயிரினவகையைச் சார்ந்தவை. மோனோட்ரீம்ஸ் எனப்படும் முட்டையிடும் பாலூட்டி வகையில் உலகில் இருந்த ஐந்து பிரிவுகளில் இரண்டு அழிந்துபோய்விட இப்போது இருப்பவை மூன்று பிரிவுகள்தாம். ஒன்று பிளாட்டிபஸ். மற்ற இரண்டு எக்கிட்னாவின் இரண்டு பிரிவுகள்.
சுமார் 110 மில்லியன் (11 கோடி) வருடங்களுக்கு முன்பு டைனோசார் காலத்தில் வாழ்ந்த பிளாட்டிபஸ் போன்ற ஒரு உயிரினத்திலிருந்து பரிணாமவளர்ச்சிபெற்றுப் பிரிந்ததுதான் இன்றைய எக்கிட்னா என்று மூலக்கூறு கடிகாரமும் புதையெலும்புப் படிமங்களும் தெரிவிக்கின்றன. நினைத்தாலே மலைப்பாக உள்ளதல்லவா?

பிளாட்டிபஸ்ஸைப் போலவே முட்டையிட்டுக் குட்டிக்குப் பால் கொடுத்தாலும், ஒருவிஷயத்தில் எக்கிட்னாவும் பிளாட்டிபஸ்ஸூம் வேறுபடுகின்றன. அதாவது, எக்கிட்னாக்கள் மார்சுபியல் இனத்தைச் சேர்ந்தவை. மார்சுபியல் என்பது வயிற்றில் பையுள்ள விலங்கென்று அறிவோம்.
எக்கிட்னா இனத்தில் ஆண், பெண் இரண்டுக்குமே வயிற்றில் பை உண்டு என்பது ஒரு விநோதம். உண்மை என்னவெனில் எக்கிட்னாவுக்கு நிரந்தரமான வயிற்றுப்பை கிடையாது. முட்டையிடும் சமயத்தில் தசைகளை விரித்துச் சுருக்கி ஒரு தற்காலிக பையை உருவாக்கிக்கொண்டுவிடும். பெண் எக்கிட்னாவுக்கு மட்டுமல்லாது ஆண் எக்கிட்னாவுக்கும் இது போன்ற வயிற்றுத் தசைமடிப்புகள் இருப்பதால் எது பெண் எது ஆண் என்று பார்த்தவுடனேயே கண்டறிவது கடினம்.

எக்கிட்னா பொதுவாக 30 செமீ முதல் 45 செமீ வரை நீளத்துடனும் இரண்டு முதல் ஐந்து கிலோ வரை எடையுடனும் இருக்கும். எக்கிட்னா ஒரு இரவு மிருகம் என்றாலும் குளிர்காலங்களில் பகல் நேரங்களிலும் உணவு தேடி வெளியில் வரும்.

எக்கிட்னாவில் இருபிரிவுகள் உள்ளதென்று பார்த்தோம் அல்லவாபார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும் அவற்றை நீள் அலகு எக்கிட்னாகுட்டை அலகு எக்கிட்னா என அலகின் அளவைக் கொண்டுதான் அடையாளம் காண்கிறோம்அலகு என்பது இங்கே மூக்கையும் வாயையும் சேர்த்தே குறிக்கிறது.


நீள அலகு எக்கிட்னா


குட்டை அலகு எக்கிட்னா

பிளாட்டிபஸ்களைப் போலவே இவற்றின் அலகிலும் மின்னேற்பிகள் இருந்தாலும் எண்ணிக்கை அளவில் மாறுபடுகின்றன. இவற்றின் அலகிலுள்ள மின்னேற்பிகள் உணவு இருக்குமிடத்தை நுகர்திறனாலும் தொடுதிறனாலும் துல்லியமாய் அறிந்துகொள்ள உதவுகின்றன

பிளாட்டிபஸ்ஸின் அலகில் 40,000 எண்ணிக்கை மின்னேற்பிகள் என்றால் நீள் அலகு எக்கிட்னாவினுடையதில் இருப்பவை 2,000 தான். குட்டையலகு எக்கிட்னாவுக்கோ இன்னும் குறைவு. வெறும் 400 என்ற எண்ணிக்கையில்தான் உள்ளன. அவையும் எக்கிட்னாவின் அலகு நுனியில் மாத்திரமே அமைந்திருக்கும். ஆண் பிளாட்டிபஸ்ஸைப் போல எக்கிட்னாவுக்கும் பின்னங்காலில் விஷேச முட்கள் உண்டு என்றாலும் அவை விஷ முட்கள் கிடையாது. முள்ளின் முனையும் கூராக இல்லாமல் மழுங்கிக்காணப்படும்.

குழாய் போன்று மிகச்சிறிய வாயும் பற்களற்ற தாடையும் கொண்ட எக்கிட்னா, காய்ந்த மரத்துவாரங்கள், எறும்புப்புற்று, கறையான் புற்று போன்றவற்றுள் கிட்டத்தட்ட 18 செ.மீ நீளமான, பசையுள்ள நாக்கை நுழைத்துத் துழாவும். நாக்கில் ஒட்டிக்கொள்ளும் எறும்பு, கறையான், புழு, பூச்சி போன்றவற்றைத் தின்னும். எறும்பு கறையான் பூச்சிகளைத் தின்னும்போது பெருமளவு மண்ணையும் உட்கொள்வதால் எக்கிட்னா கழிக்கும் கழிவின் அளவும் அதிகமாக இருக்கும். எறும்பு கறையான்களோடு சின்னச்சின்ன பூச்சிகளையும் புழுக்களையும் வண்டுகளையும் கூட தின்னும்.
இவை குட்டையான கால்களையும் மண்ணைத் தோண்டுவதற்கு ஏற்ற  வலிமையான மூட்டுகளையும், பெரிய கூரிய நகங்களையும் கொண்டவை. எக்கிட்னாவின் பின்புறம் வளைந்த பின்னங்கால்கள் மண்ணைத் தோண்ட உதவுவதோடு, அதன் உடலில் உள்ள முட்களுக்கிடையில் சொரிந்துகொள்ளவும், சுத்தம் செய்யவும்கூட உதவுகின்றன.

எக்கிட்னாவின் இனப்பெருக்கக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான சமயத்தில் மிகவும் வேடிக்கையான காட்சியொன்றைக் காணலாம். ஒரு பெண் எக்கிட்னாவைக் கவரசங்கிலியால் கோர்த்தாற்போல் பத்துப்பன்னிரண்டு ஆண் எக்கிட்னாக்கள் அது போகுமிடமெல்லாம் பின்தொடரும் காட்சிதான் அது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராது வெற்றி பெற்ற ஆண் எக்கிட்னா, பெண் எக்கிட்னாவுடன் இணையும்

இரண்டு வாரங்களுக்குப் பிறகு பெண் எக்கிட்னா ஒரு திராட்சையின் அளவில் மெல்லிய தோல்முட்டை ஒன்றை இட்டு தன் வயிற்றுப் பைக்குள் பத்திரப்படுத்திக்கொள்ளும். பத்துநாட்களுக்குப் பிறகு முட்டையை உடைத்துக்கொண்டு 12 மிமீ அளவே உள்ள குட்டி எக்கிட்னா வெளிவரும்

முட்டைக்குள்ளிருக்கும் குட்டி எக்கிட்னாவுக்கு முட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியேற உதவுவதற்கென்றே ஒரு பல் வளரும். எக்கிட்னாவின் வாழ்க்கையில் அதற்கு வளரும் ஒரே ஒரு பல் அதுதான். அதுவும் முட்டையிலிருந்து வெளிவந்த மறுநாளே விழுந்துவிடும்.பிறக்கும்போது முட்களோ, ரோமங்களோ அற்று வெற்றுடலோடு பிறக்கும் குட்டிக்கு பியூகுள் (puggle) என்று பெயர். எக்கிட்னாவுக்கும் பிளாட்டிபஸ்ஸைப் போன்று பாலூட்டும் முலைகள் கிடையாது. அதன் உடலில் உள்ள சுரப்பி மூலம் வயிற்றுப்பைக்குள் உள்ள இரு திட்டுகளில் கசியும் பாலை, குட்டி நக்கிக் குடிக்கும். கங்காரு, போஸம் இவற்றைப் போலவே எக்கிட்னாவுக்கும் குட்டியின் வயதுக்கும் வளர்ச்சிக்கும் ஏற்ப பாலை உற்பத்தி செய்யும் வசதி உண்டு என்பது வியப்பாக உள்ளதல்லவா?இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு குட்டி தாயின் வயிற்றுப் பையைவிட்டு கட்டாயம் வெளியில் வந்தேயாகவேண்டும். ஏனெனில் அந்தசமயத்தில் குட்டியின் உடலில் முட்கள் வளர ஆரம்பித்துவிடும். பிறகெப்படி அம்மாவின் வயிற்றுக்குள் வசிக்க முடியும். அப்போது தாய் தன் குட்டியை வளைக்குள் விட்டுவிட்டு இரைதேடிப்போகும். நான்கைந்து நாட்களுக்கு ஒருமுறை வந்து பாலூட்டும்.


ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் தாய் தன் குட்டிக்கு கடைசி முறையாகப் பால் கொடுத்துவிட்டு வளையிலேயே விட்டுவிட்டு திரும்பிப்பாராமல் சென்றுவிடும். அதன்பின் மீண்டும் அந்தக் குட்டியைத் தேடி தாய் வராது. ஏனெனில் அது தன் அடுத்த வாரிசை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும். குட்டி தன் வாழ்க்கையைத் தானே பார்த்துக்கொள்ளும்.

எக்கிட்னாக்கள் நன்றாக நீந்தக்கூடியவை. நீந்தும்போது மூக்கும் ஒருசில முட்களும் மட்டுமே வெளியில் தெரியும். ஆபத்து சமயங்களில் மண்ணில் அவசர அவசரமாகக் குழிபறித்து, முட்கள் மட்டும் வெளித்தெரியும் வகையில் அதில் அமர்ந்துகொள்ளும். கடினத் தரையெனில் தன்னுடலை ஒரு முட்பந்துபோல் சுருட்டி எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளும்.
குளிர்பிரதேசங்களில் வசிக்கும் எக்கிட்னாக்களுக்கு குறைந்த அளவு முட்களும் அடர்த்தியான ரோமங்களும் இருக்கும். எக்கிட்னாவின் முள் என்பதே அதன் ரோமம்தான் என்பது வியப்பைத் தருகிறது அல்லவாமுட்கள் ஒவ்வொன்றும் 5 செமீ நீளம் வரை வளரக்கூடியவை.
எக்கிட்னாக்களுக்கு முட்கள் பாதுகாப்பு என்றாலும் முட்களையும் தின்னும் டாஸ்மேனியன் டெவில்களும் கழுகுகளும் எதிரிகளாகும். பூர்வகுடி மக்களின் விருப்ப உணவாக இருந்த எக்கிட்னாக்கள் இப்போது சட்டத்தின் தயவால் பாதுக்காக்கப்பட்டு வருகின்றன.ஆஸ்திரேலியாவின் ஐந்து சென்ட் நாணயத்தில் எக்கிட்னா உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கின் அடையாளச்சின்னங்களாக சிட் (syd) என்னும் பிளாட்டிபஸ், ஓலி (Ollie) என்னும் குக்குபராவுடன் மில்லீ (millie) என்னும் எக்கிட்னாவும் இடம்பெற்றமை சிறப்பு.
எக்கிட்னா என்றால் என்ன? கிரேக்கமொழியில் பெண்பாம்பு என்று பொருளாம்.  கிரேக்கப் புராணக்கதையில் வரும் பாதி பெண்ணுடலும் பாதி பாம்புடலும் கொண்ட எக்கிட்னா என்னும் அரக்கி, அரக்கர்குல அன்னை என்று அறியப்பட்டவளாம். சாதுவான, கூச்ச சுபாவமுள்ள உயிரினமான எக்கிட்னாவுக்கு ஏன் அந்த அரக்கியின் பெயர் இடப்பட்டது என்பது வியப்பளிக்கும் கேள்வியே. சரி, எக்கிட்னா என்று பெயரிடுமுன் அதன் பெயர் என்ன? ஒன்றல்ல, ஏராளம். ஆஸ்திரேலியப் பூர்வகுடி மொழிகளில் Nynghan, biggie-billa or bigibila, ganyi, thargomindah, inga linga என்றெல்லாம் பலவாறாகக் குறிப்பிடப்பட்டதாம். 

ஆஸ்திரேலிய பூர்வகுடி வரலாற்றில் எக்கிட்னாவுக்கு முக்கிய இடம் உண்டு. பூர்வகுடி மக்களின் பல ஓவியங்களில் எக்கிட்னா இடம்பெற்றுள்ளது.எக்கிட்னாவுக்கு பழங்காலத்தில் முட்கள் கிடையாது என்பது அவர்களது நம்பிக்கை. அவற்றுக்கு முட்கள் உருவான அதிசயத்தை பழங்கதையொன்று பகிர்கிறது. அந்தக்கதை என்னவென்று அறிந்துகொள்வோமா இப்போது? ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிக்கிபில்லா (biggie-billa)  என்பவனைப் பற்றியது அக்கதை.

பிக்கிபில்லா வயதானவன். பழங்குடியினத்தைச் சேர்ந்தவன். அவனுடைய நண்பர்கள் ஒவ்வொருவராக இறந்துவிட, அவன் இளைய தலைமுறையினருடன் வாழ்ந்துவந்தான். இளைஞர்கள் மிகுந்த உடல் வலிமையுடன் இருப்பதால் வெயில் நேரங்களிலும் சோர்வடையாமல், வெகுதூரம் வேட்டையாடிச் சென்று தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்குமான உணவைத் தேடிக்கொண்டனர்.


பிக்கிபில்லாவுக்கு வயதாகிவிட்டதால் அவனால் அவர்களுக்கு ஈடுகொடுத்து வேட்டையாட இயலவில்லை. அதனால் வேட்டைக்குப் போவதைத் தவிர்த்தான். வேட்டைக்குச் செல்லாத நிலையில் அவனுக்கு யாரும் உணவு கொடுக்க முன்வரவில்லை. ஆனாலும் அவன் திடகாத்திரமாக இருந்தான். வயதாக வயதாக அவன் உடல் வலிமை கூடிக்கொண்டே வந்தது. இதைப் பார்த்த மற்றவர்கள் அவன்மேல் ஐயங்கொண்டனர். அவன் தேகபலத்தின் ரகசியத்தை அறிய ரகசியமாய் அவன் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் ஆரம்பித்தனர். வருடக்கணக்காக ஏதோ ஒரு ரகசியத்தை அவன் தங்களிடமிருந்து மறைத்துவைத்திருப்பதாக அவர்கள் நம்பினார்கள்.

ஒருநாள் அவன் இருப்பிடத்தை விட்டு வெளியே செல்லும்போது சிலர் அவன்றியாமல் பின்தொடர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெரிய பாறையின் மறைவில் அவன் எதற்காகவோ காத்து நிற்பதை அவர்கள் புதர்மறைவிலிருந்து ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு இளம்பெண் அந்த வழியே வந்தாள். பிக்கிபில்லா சட்டென வெளிவந்து அம்பால் அவளைக் குத்தி வீழ்த்தினான். யாரும் எதிர்பாராத நொடியில் இது நடந்து முடிந்திருந்தது. கிழவன் பிக்கிபில்லா அவளுடலைப் பாதையிலிருந்து மறைவாக இழுத்துவந்து அவள் கை கால்களைத் தின்ன ஆரம்பித்தான். பார்த்தவர்கள் குலைநடுங்கிக்கொண்டிருக்க, அவனோ மிச்சத்தை மறுவேளை உணவாகப் பதுக்கிவைத்தான்.
தங்கள் பழங்குடியினத்திலிருந்து இதுவரை காணாமற்போனவர்கள் எப்படிக் காணாமற்போனார்கள் என்ற உண்மை அப்போதுதான் அவர்களுக்கு விளங்கியது. பிக்கிபில்லாவைக் கொல்வதென்று ஒரு ரகசியத் தீர்மானம் இயற்றப்பட்டது. பிக்கிபில்லா மிகவும் பலம் பொருந்தியவனாக இருப்பதால் அவனை அவன் எதிர்பாராத போதுதான் கொல்லமுடியும் என்பது தெளிவாயிற்று. அவர்கள் அமாவாசை இரவுக்காக காத்திருந்தனர். 

அந்த இரவில் அவன் நெருப்பை விட்டு வெகுதூரத்தில் மல்லார்ந்து படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். இளைஞர்கள் சத்தமின்றி அவனைச் சூழ்ந்தனர். அவன் தூக்கத்தில் ஆழ்ந்தபடி, ‘பட்டாம்பூச்சிகள் புல்தரையில் நடக்கும் ஒலி எனக்குக் கேட்கிறதுஎன்று முணுமுணுத்தான். அவன் பட்டாம்பூச்சிகளைப் பற்றிய கனவிலிருக்கும்போது இளைஞர்கள் தங்கள் அம்புகளை அவன் உடலில் பாய்ச்சினர். பிக்கிபில்லா கதறக் கதற அவர்கள் தங்கள் கழிகளால் அவனுடலின் ஒவ்வொரு எலும்பையும் அடித்து நொறுக்கினர். இறுதியில் அந்த நரமாமிசத்தின்னி மூச்சுபேச்சற்று வீழ்ந்தான்.
பிக்கிபில்லாவின் மனைவி கினீபூ (guineeboo), நடந்த பயங்கர நிகழ்வைப் பார்த்து அதிர்ச்சியுற்றாள். அவள் மண்ணைத்தோண்டும் கழியால் தன்னெற்றியில் தானே பலமாகத் தாக்கிக்கொண்டாள். இரத்தம் வழிந்து அவள் மார்பை நனைத்தது. அவள் செம்மார்பு கொண்ட ராபின் பறவையாய் மாறி அவ்விடத்தை விட்டுப் பறந்துபோனாள்.

இளைஞர்கள் நெருப்பைச் சுற்றி நடனமாடி ஆரவாரித்து பிக்கிபில்லாவின் மரணத்தைக் கொண்டாடினர். ஆனால் உண்மையில் பிக்கிபில்லா இறந்திருக்கவில்லை. அவன் பெரும் பிரயத்தனத்துடன் அம்புகள் தாங்கிய தன்னுடலை இழுத்துக்கொண்டு வந்து முர்காமுகை என்னும் சிலந்தி அமைத்திருந்த தரைவளைக்குள் விழுந்தான். காயம் ஆறும்வரை அங்கேயே இருந்தான்.
 
என்னதான் காயங்கள் ஆறினாலும் அவனால் அவன் உடலில் துளைத்த அம்புகளை எடுக்கவும்முடியவில்லை, அடிபட்ட எலும்புகளைக் கொண்டு ஒழுங்காக நடக்கவும் முடியவில்லை. அவன் பதுங்குவளையை விட்டு வெளியே வந்தபோது அவனுடைய கூட்டத்தினரால் அவனை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை. முதுகில் அம்புகளுடனும், பின்னால் வளைந்த கால்களுடனும் ஆடி ஆடி நடந்துவந்தவனுக்கு உணவுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவன் மண்ணைத்தோண்டி எறும்புகளையும் புழு பூச்சிகளையும் தின்றான். 


இப்படியாக பிக்கிபில்லா ஒரு எக்கிட்னாவானாம். அவனால் மற்ற விலங்குகளைப் போல உணவு உண்ணமுடியாமைக்கும், எதிரிகளுக்குப் பயந்து, தரைக்கடியில் வளையில் தனித்து வாழ்வதற்கும் இதுதான் காரணமாம். இதுவும் கிட்டத்தட்ட காஸோவரி கதை போலத்தான். ஆனாலும் சுவாரசியம் குறையவில்லை அல்லவா?


*************************************************************************** 
(பிப்ரவரி 2014 மஞ்சரி இதழில் வெளிவந்தது.)

படங்கள் நன்றி: இணையம்

33 comments:

 1. நிச்சயமாய் கசோவரிக்கு சற்றும் குறையாத கதை.
  பதிவை பார்த்துவிட்டு தான் home work செய்வேன் என்று விட்டாள் நிறைமதி!
  பார்த்து பார்த்து ஆச்சர்யம் கொள்கிறாள் உங்கள் மருமகள்.
  தலைப்பை பார்த்ததுமே அத்தை எனக்காக தான் எழுதியிருகிறார்கள் என்று பெருமை வேறு.டிஸ்கவரி பார்ப்பது போல் பயனுள்ள பதிவு எனக்கும் என் மகளுக்கும்.நன்றி மேடம்.(கூடவே thank you aunty னு சத்தம் கேட்குதா?)

  ReplyDelete
 2. சுவாரஸ்யமான தகவல்கள்...

  ReplyDelete
 3. ஆச்சர்யம் அளிக்கும் அதிசயமான தகவல்களுடன் அற்புதமான அலசல் கட்டுரை.

  ReplyDelete
 4. பிக்கிபில்லா (biggie-billa) – ஒரு நாடோடிக் கதை படித்தது போல இருந்தது. சுவாரஸ்யமாகவும் சொன்னீர்கள்!


  ReplyDelete
 5. எங்கிருந்து இவ்வளவு விளக்கமான தகவல்கள் பெறுகிறீர்களோ... ஒவ்வொரு பதிவும் வியப்பை தூண்டுகிறது... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. விவரங்களும் கதையும் சுவாரஸ்யம்.

  ReplyDelete
 7. பெண் எக்கிட்னா வையும் ஆண் எக்கிட்னாவையும் கண்டு கொள்வது கடினம் இருந்தாலும் ஒரு பெணெக்கிட்னாவைத் தொடர்ந்து பல ஆணெக்கிட்னாக்கள் போகும்....! ! நிறையவே தகவல்கள். இவற்றையும் வேட்டையாடி மனிதர்கள் உண்டிருக்கிறார்கள் என்பது வியப்பாய் இருக்கிறது.

  ReplyDelete
 8. அருமையான பதிவு.
  பிக்கிபில்லா ராபின் பறவையாய் மாறியதும், பிக்கிபில்லா எக்கிட்னாவாய் மாறியதும் படிக்க சுவாரஸ்யமான கதை.

  ReplyDelete
 9. Anonymous5/2/14 03:15

  வணக்கம்
  ஒவ்வொரு படத்தையும் பற்றி அருமையான விளக்கம்.. தேடலுக்கு வாழ்த்துக்கள்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 10. தங்களின் ஒவ்வொரு படமும் அதற்கான விளக்கமும் அப்பப்பா எத்தனை சிரத்தையுடன் தகவல்களை சேகரித்து தந்துள்ளீர்கள்.

  ReplyDelete
 11. @Mythily kasthuri rengan

  நிறைமதிக்கு என் உளப்பூர்வ ஆசிகள் மைதிலி. வருகைக்கும் உடனடிக் கருத்திட்டு ஊக்கமளித்ததற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 12. @இராஜராஜேஸ்வரி

  வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 13. @வை.கோபாலகிருஷ்ணன்

  வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 14. @தி.தமிழ் இளங்கோ

  கிட்டத்தட்ட நாடோடிக் கதை போன்றதுதான். ஆண்டாண்டு காலமாக பழங்குடி மக்கள் வாய்மொழியாக சொல்லும் கதைகள் அவை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 15. @திண்டுக்கல் தனபாலன்

  நூலகமும் இணையதளங்களும்தான் உதவுகின்றன. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனபாலன்.

  ReplyDelete
 16. @ஸ்ரீராம்.

  வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 17. @G.M Balasubramaniam

  நம்மால்தான் ஆண் பெண் வேறுபாட்டை அறியமுடியாது என்று நினைக்கிறேன். இயற்கையின் படைப்பில் அதன் இணையை அறிந்துகொள்ளத்தான் ஒலி,வாசனை என்று ஏராளவழி இருக்கிறதே.
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 18. @கோமதி அரசு

  வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 19. @2008rupan

  வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.

  ReplyDelete
 20. @Sasi Kala

  வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சசிகலா.

  ReplyDelete
 21. கதையையும் தகவல்களையும் சுவாரஸ்யமா சொல்லியிருக்கீங்க கீதா.

  ஆக எக்கிட்னாவின் கர்ப்பம் பத்தே நாட்கள்தானா?

  ReplyDelete
 22. இறைவன் படைப்பில் எத்தனை எத்தனை உயிரினங்கள்..... எத்தனை இழந்து விட்டோம். இருப்பதையாவது பாதுகாக்க வேண்டும்....

  சிறப்பான தகவல்கள் மற்றும் படங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி கீதமஞ்சரி.

  ReplyDelete
 23. @சுந்தரா முத்து

  எக்கிட்னாவின் கர்ப்பகாலம் இரண்டு வாரங்கள். அது முட்டையை அடைகாக்கும் காலம் பத்து நாட்களாம். மொத்தமாகப் பார்த்தால் 24 நாட்கள்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுந்தரா.

  ReplyDelete
 24. @வெங்கட் நாகராஜ்

  எங்கே பாதுகாக்கிறோம்? வனங்களை அழிப்பதால் ஊருக்குள் நுழைந்துவிட்ட புலியை மயக்க ஊசி போட்டுப் பிடிக்காமல் கொன்றே விடுகிறோம்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

  ReplyDelete
 25. ஆர்வம் குறையவிடாமல் பல தகவல்களையும் அழகாகத் தருகிறீர்கள்..வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
 26. Anonymous11/2/14 08:16

  அப்பப்பா! என்ன ஓரு விவரணம்.!
  அதிசயம்!
  ரசித்து வாசித்தேன்
  மிக்க நன்றி.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 27. அருமையான தகவல்கள் அசத்தலான புகைப்படங்கள் சகோதரி வரலாற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட எனக்கு உயிரினங்கள் பற்றிய இந்த தொடர் வரப்பிரசாதம்

  ReplyDelete
 28. @தேன்மதுரத்தமிழ் கிரேஸ்

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

  ReplyDelete
 29. @kovaikkavi

  இவ்வளவு பெரிய பதிவையும் பொறுமையுடன் வாசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தோழி.

  ReplyDelete
 30. @பாரதிக்குமார்

  தங்கள் வருகையும் கருத்துப்பதிவும் பெரும் உற்சாகம் தருகின்றன. மிக்க நன்றி தங்களுக்கு.

  ReplyDelete
 31. அறிய அறிய பெருவியப்‌பே பிரபஞ்சத்தின் ஒவ்வொன்றும்!

  திரட்டித் தந்த அக்கறைக்கு மிக்க நன்றி தோழி!

  பூர்வ கதை வெகு சுவாரஸ்யம்.

  படங்கள் எல்லாம் பதிவை அழகாக்குவதாய். எக்கிட்னாவின் குட்டியும் முட்களும் நெருக்கமாகப் பார்க்க இனம் புரியாத வியப்‌பு.

  ReplyDelete
 32. @நிலாமகள்

  வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மனம் நிறைந்த நன்றி தோழி.

  ReplyDelete
 33. எக்கிட்னா எனகிற பிராணியைப் பற்றிய அ முதல் ஃ வரையிலான தகவல்களை படிப்போர் அசந்து போகும் வண்ணம் அழகுறத் தந்திருக்கிறீர்கள். ஆண் எக்கிட்னா எது, பெண் எக்கிட்னா எதுன்னு நமக்கு கண்டுபிடிக்கறதுக்கு கஷ்டமா இருந்தாலும்... அதுங்க சுலபமா கண்டுபிடிச்சரும்ல..? (இங்கே தமிழ்நாட்டில் ‘அரசியல்வாதிகள்’ என்றொரு அதிசய உயிரினம் இருக்கிறது. தெரியுமோ?)

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.