15 February 2014

கைகலப்பு (ஆஸ்திரேலியக் காடுறை கதை 3) “அங்கே பாருங்கள், இரண்டு பேர் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். வாருங்கள், என்னவென்று போய்ப்பார்ப்போம்” வழிப்போக்கர்களில் ஒருவன் தொலைவில் சுட்டினான்.

தகிக்கும் வெப்பம் சூழ்ந்த ஆளரவமற்ற அந்தப் பருத்திப் புதர்வெளியில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வது என்பது விசித்திரமான விஷயம். ஆயினும் அரைமைல் தூரத்துக்கு அப்பால் சாலையில் இரு மனிதர்கள் கைகலப்பில் ஈடுபட்டிருந்தனர்.

மூன்று வழிப்போக்கர்களும் புகைபிடிக்கும் எண்ணத்தை ஒத்திவைத்துவிட்டு அவ்விடத்தை நோக்கி விரைந்தனர். அவர்களில் இருவர் ஆட்டுரோமம் கத்தரிப்பவர்கள். சன்லைட் என்பவன் உருவத்தில் பெரியவனாகவும் மேக்வாரி என்பவன் சிறியவனாகவும் இருந்தான். மூன்றாமவன் மில்கி, உயரமான ஒடிசலான இளைஞனாக இருந்தான். அவன் குடியேற்றத்துக்குப் புதியவன். ஆட்டுரோமம் கத்தரிக்கும் பணியில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தான்.

அவர்களில் ஒருவன் ராட்ஸ். அவனை நான் அறிவேன். அந்த இன்னொரு ஆள் எங்கிருந்து வந்தானென்று தெரியவில்லையேநான் அவனை இதற்குமுன் பார்த்ததேயில்லைஎன்றான் சன்லைட்.

அவன் இதுவரை காட்டுக்குள் மறைந்திருந்திருக்கலாம்.” மேக்வாரி சொன்னான். “இப்போது அவர்கள் முறையாக சண்டைபோடுகிறார்கள். வாருங்கள், சீக்கிரம் போய் வேடிக்கை பார்ப்போம்என்றான் மேக்வாரி.
அவர்கள் விரைந்தார்கள்.

அந்த புதியவனைப் பார்க்க வேடிக்கையாக உள்ளது,” மில்கி கத்தினான், “அவனைப் பார்த்தால் தலையே இல்லாததுபோல் தெரிகிறது. இப்போது பார், அவன் கீழே விழுந்துவிட்டான்இருவருமே விழுந்துவிட்டார்கள். சோர்ந்துவிட்டார்கள் போலும். இல்லையில்லைஅவர்கள் எழுந்துவிட்டார்கள்.. மீண்டும் சண்டையில்ஏன் இப்படி..… அடக்கடவுளேஅந்த வேற்றாள் ஒரு பெண்ணென்று நினைக்கிறேன்

சத்தியம்அவள் பெண்தான்கூவினான் சன்லைட். “அங்கே பாருங்கள்அந்த முரடன் அவளைக் கீழே தள்ளிவிட்டான். அவளை உதைக்கிறான். வாருங்கள் நண்பர்களே.. தடுப்போம். இல்லையென்றால் அவன் அவளைக் கொன்றுவிடுவான்.”

அவர்கள் தங்கள் முதுகுப்பை, தண்ணீர்ப்பை இன்னபிறவற்றை அங்கேயே போட்டுவிட்டு சண்டை நடக்கும் இடத்தை நோக்கி ஓடினர். ஆனால் எதையோ கூர்ந்து பார்த்த சன்லைட் தன் வேகத்தைத் தளர்த்தி பின்தங்கினான். அவனுடைய நடவடிக்கையைக் கண்ட சகாக்கள் அவன் முகத்தில் தெரியும் விசித்திர உணர்வைப் பார்த்துவிட்டு, மீண்டும் முன்னால் பார்த்தார்கள். இப்போது அவர்களும் ஓடுவதை நிறுத்தி நடக்க ஆரம்பித்தனர்.

அவர்கள் பிரச்சனை நடக்கும் இடத்தை அடைந்தார்கள். பாதையோரம் மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டியபடி துவண்டுபோன ஒரு முதியவன் நின்றுகொண்டிருந்தான். மொத்தமான பருத்தித்துணியால் பல இடங்களில் ஒட்டுப்போட்டதொரு உடுப்பை அணிந்திருந்தான். அரை டஜன் தக்கைகள் நரம்பில் கோர்க்கப்பட்டு அவன் தொப்பியின் முன்புற விளிம்பில் கட்டித்தொங்கவிடப்பட்டிருந்தன. மங்கிப் போன பார்வையை மேலும் மறைக்கும் விதமாக முகத்தின் முன் பறக்கும் ஈக்களைப் பயமுறுத்தி விரட்டுவதற்காக அவை அங்கே முடிந்துவைக்கப்பட்டிருந்தன. அவன் பாதையின் மத்தியில் கிடந்த திமிறித்தடித்த முதுகுப் பையை குரோதத்துடனும் வெறுப்புடனும் பார்த்தான்.

 “ஆமாம். என்ன பிரச்சனை, பெரியவரே?”

 “.. ஒன்றுமில்லை.. ஒன்றுமில்லைமுதியவன் ராட்ஸ் பார்வையைத் திருப்பாமலேயே பதிலளித்தான். “நான் என் முதுகுப்பையுடன் விழுந்துவிட்டேன். அவ்வளவுதான். அவன் என்னைக் கீழே தள்ளிவிட்டான், இப்போது பிரச்சனை இல்லை. எல்லாம் சரியாகிவிட்டது. அவனை அடக்கிவிட்டேன்

ஆனால் பாருங்கள், அவன் கீழே கிடக்கும்போது நீங்கள் அவன் மேல் ஏறிக்குதித்தீர்கள். இது நியாயமில்லை, உங்களுக்குத் தெரியும்தானே?” நண்பர்களைப் பார்த்து கண்சிமிட்டியபடிக் கேட்டான் சன்லைட்.

ஆனால்நீங்கள் நடந்த அனைத்தையும் ஆரம்பத்திலிருந்து பார்க்கவில்லை, அவன்தான் என்னை வம்பிக்கிழுத்தான், முதலில் என்னைக் குப்புறத்தள்ளினான். பாருங்கள்நான் வேண்டுமானால் இப்போது மீண்டும் சண்டை போட்டுக்காட்டுகிறேன். நான் எவ்வளவு நியாயமாக சண்டையிடுகிறேன் என்று உங்களுக்குத் தெரியவரும்.”

அவர்கள் மூவரும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். பிறகு சன்லைட் முதுகுப் பைக்கு ஆதரவாளனாகவும், அவனுடைய நண்பன் மேக்வாரி முதியவனுக்கு ஆதரவாளனாகவும் இருக்க சம்மதித்தார்கள். பலவிதமான சமாதானங்களுக்குப் பின் மில்கி நேரக்காப்பாளனாகவும், நடுவராகவும் இருக்க சம்மதித்தான்.

ராட்ஸ் முழுவேகத்தோடு களத்தில் இறங்கினான். சட்டையைக் கழற்றிவைத்தான். அவன் சண்டைக்குத் தயாராகிக்கொண்டிருக்கையில் வழிப்போக்கர்கள் மூவரும், யார் வெற்றி பெறக்கூடும் என்று தங்களுக்குள் பந்தயம் கட்டிக்கொள்வது போல் பாவனை செய்திருந்தார்கள்.
மேக்வாரி, முதியவனுக்குப் பின்னால் நின்றுகொண்டான். சன்லைட் முதுகுப் பையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டான். ராட்ஸ் பெரும் ஆயத்தத்துடன் அதைச் சுற்றிவந்து சண்டைக்கான முஸ்தீபுகளைக் காட்டினான்பிறகு அவன் அதன் மேல் பாய்ந்தான், தாக்கினான், சட்டெனக் குனிந்து அழுத்தினான், சடாரெனப் பின்வாங்கினான், மீண்டுமொருமுறை பாய்ந்தான், திடீரென்று முதுகில் குண்டடி பட்டவன் போல் மல்லாக்கச் சாய்ந்தான்

எந்த நடிகராலும் இதைவிடவும் பிரமாதமாய் செய்திருக்க இயலாது. நெற்றியில் பீரங்கி குண்டு துளைத்தாற்போன்ற கற்பனையுடன் அவன் கீழே கிடந்தான்.

மில்கி நேரம் முடிந்துவிட்டதென அறிவிக்க, முதியவன் தள்ளாடியபடி  எழுந்தான். ஆனாலும் பெரும்பலத்துடன் முதுகுப் பையை புதர்களுக்குள் வீசியெறிந்திருந்தான்.

பல சுற்றுகள் மாறுபட்ட வெற்றிகளோடு நடைபெற்று முடிந்தன.
வழிப்போக்கர்கள் தாங்கள் அதி உற்சாகமாக இருப்பதாக காட்டிக்கொண்டு பணயமில்லாத வெற்றுப் பந்தயங்களில் ஈடுபட்டிருந்தனர். ராட்ஸ் முழுவேகத்துடன் சண்டையிட்டான். இறுதியில் வேடிக்கை சலித்துப்போனது

மில்கி நேரம் முடிந்துவிட்டதென அறிவித்த நொடியில் சன்லைட் முதுகுப் பையைக் கீழே போட்டான்இந்த சண்டையின் வெற்றியாளன் ராட்ஸ்தான் என்பதை மில்கி அறிவித்தான். அவர்கள் பணயத்தைக் கொடுப்பது போல் பாசாங்கு செய்துவிட்டு, தங்கள் முதுகுப் பைகளை எடுத்துவந்தார்கள். முதியவன் மேற்சட்டையை அணிந்துகொண்டான்.

பிறகு அவன் அமைதியாக இருந்தான். தன் முதுகுப் பையை பாதையின் ஓரத்தில் வைத்துவிட்டு அதன்மேல் அமர்ந்துகொண்டான். அவன் காடுறை சம்பவங்கள் சிலவற்றை மிகைப்படுத்தலின்றி சொன்னான். சட்டென்று அவன் மௌனமானான். அவர்களைப் பார்த்து சற்றே நெளிந்தபடி புன்னகைத்தான்.

எனக்கு கொஞ்சம் இறைச்சித்துண்டு தரமுடியுமா உங்களால்?” அவன் கேட்டான்.

அவர்கள் அரைப்பவுண்டு இறைச்சியைக் கொடுத்தார்கள். அவன் தனக்கு அவ்வளவு தேவையில்லையென்று சொல்லி அதிலிருந்து ஒரு அவுன்சு மட்டும் வெட்டி எடுத்துக்கொண்டு அதை தன் முதுகுப்பையின் ஓரத்தில் வைத்தான். கெட்டிலின் மூடியைத் திறந்து அதிலிருந்து தூண்டில் நரம்பை எடுத்தான். கொக்கியில் இரையை மாட்டினான்.

பாதையை நீரோடையாகப் பாவித்து அதில் தூண்டிலிட்டு மீனுக்காகக் காத்திருக்கலானான். சிறிது நேரத்தில் பெருத்த ஆர்வத்துடன் மீன்பிடிப்பதில் ஒன்றிப்போனான். தூண்டிலை ஒன்றிரண்டு முறை மேலும் கீழுமாய் அசைத்து, வேகமாய் இழுத்தான். தூண்டில் இரை புற்களை உராய்ந்தபடி இருந்தது. முதியவன் வெறுப்புடன் கொக்கியைப் பார்த்தான்.

 “அங்கே பாருங்கள்அவன் கத்தினான், “நான் அவசரத்தில் இருந்தபோது ஒருமுறை அவனைப் பிடித்திருக்கிறேன், அவனுடன் இன்னும் கொஞ்ச நேரம் விளையாடியிருந்திருக்கவேண்டும்

அடுத்தமுறை முதியவன் மிகவும் கவனமாக இருந்தான். அவன் தூண்டிலை வெகு சிரத்தையாக இழுத்து அந்த கற்பனை மீனைக் கைப்பற்றிப் புல்வெளியில் கிடத்தினான். சன்லைட் மற்றும் அவன் நண்பர்கள் மிகவும் ஆர்வத்தோடு அவன் செயலைக் கவனித்தனர்.

 “இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்ஒரு அவுன்சு எடைக்கு முப்பது பவுண்டு எடை கிடைக்கிறது. இவ்வளவு பெரிய காட் மீனுக்கு எவ்வளவு கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? கொக்கிதான் அதன் குடல்வரை போய் பாதி உடலைக் கிழித்துவிட்டது.” ராட்ஸ் சொன்னான்.

அவன் கற்பனையில் ஏராளமான காட் மீன்களையும் ஒரு ப்ரீம் மீனையும் பிடித்தான். அவர்களை தன்னோடு சேர்ந்து உணவுண்ண தன் கூடாரத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தான். ஆனால் அவர்கள் தாங்கள் வேறொரு பணியிடத்தை மறுநாள் அடைந்திருக்கவேண்டும் என்று கூறிக் கிளம்பினார்கள். அந்த முதியவன் தூண்டில் இரைக்காகக் கேட்ட ஒரு பவுண்டு இறைச்சியைத் தந்துவிட்டு அவனை நிறைவுடன் மீன்பிடிக்க விட்டுவிட்டுக் கிளம்பினார்கள்.

அதற்குமுன் சன்லைட் தன் சட்டைப்பையிலிருந்து இரண்டு ஷில்லிங் ஆறு பென்சுகள் மதிப்புடைய அரைக்கீரீடம் எனப்படும் நாணயத்தையும் சிறிது உணவையும் முதியவனுக்குக் கொடுத்துவிட்டுக் கனிவுடன் சொன்னான்

இருட்டுவதற்கு முன்னர் தண்ணீரில் வேலை முடிந்துவிட்டால் நல்லது, முதியவரே!”

அவர்கள் தங்கள் வழியில் நடக்கத்தொடங்கியபோது ராட்ஸ் பாதையின் குறுக்கே இன்னும் மீன்பிடித்துக் கொண்டிருந்தான். சிறிது தூரம் சென்றபின் காட்டுக்குள் பாதை மறையுமிடத்தில் நின்று அவர்கள் திரும்பிப் பார்த்தபோது, ராட்ஸ் தன் முதுகுப்பையுடன் மற்றுமொரு கைகலப்பில் ஈடுபட்டிருந்தான். அவன் பிடித்த மீனைவிடவும் மிகப்பெரியதொன்றை, தான் முன்பொருமுறை பிடித்ததாக ராட்ஸின் முதுகுப் பை புளுகிய பொய்யே இந்தப் பிரச்சனைக்குக் காரணமாக இருக்கக்கூடுமென்று சன்லைட் கணித்தான்.

*********
(ஆஸ்திரேலியப் பிரபலக் கவிஞரும் கதாசிரியருமான ஹென்றி லாசன் அவர்கள் எழுதிய ‘Rats’ என்னும் ஆங்கில கதையின் தமிழாக்கம்)
(படம் நன்றி: இணையம்)


20 comments:

 1. அருமையான மொழிபெயர்ப்பு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. விசித்தமான கதை..!

  ReplyDelete
 3. கற்பனைக் கதையிலேயே விசித்திரமான கற்பனைகளை தோற்றுவித்து ஆங்கிலத்தில் வெகு அழகாக எழுதி அசத்தியுள்ளார் திரு ஹென்றி லாசன் அவர்கள்.

  இங்கு எங்கள் ஊரில் ஒருவர் கைகளை வீசி வீசி விசித்திரமாக நடப்பார். அவரை நான் தரையிலேயே நீச்சலடிக்கிறார் என வேடிக்கையாகச் சொல்வதுண்டு.

  அதுபோலவே இந்தக்கதையில் ஒருவர் நிலத்திலேயே தூண்டில் போட்டு மீன் பிடிப்பதாக கற்பனை செய்துள்ளது புதுமையாக உள்ளது.

  அதை தாங்கள் இவ்வளவு சிரத்தையாக மொழியாக்கம் செய்து கொடுத்திருப்பது மிகச்சிறப்பாக உள்ளது.

  கதாபாத்திரங்களுக்கான பெயர் தேர்வுகள் மிக அருமையாக உள்ளன.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 4. @கவியாழி கண்ணதாசன்

  தங்கள் உடனடி வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 5. @ஸ்ரீராம்.

  கருத்துக்கு நன்றி ஸ்ரீராம். ஆனால் கருத்தின் பொருள்தான் விளங்கவில்லை.

  இரண்டு 'ஹா' இணைந்திருந்தாலாவது நகைச்சுவை என்று கொள்ளலாம். "ஹா...!" என்ற ஒற்றைச் சொல்லிலிருந்து எதை அறிவேன்? அயற்சியா? அதிர்ச்சியா?


  ReplyDelete
 6. @இராஜராஜேஸ்வரி

  தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 7. @வை.கோபாலகிருஷ்ணன்

  தேர்ந்த அவதானிப்போடு மூலக்கதை அமைப்பையும் ஆசிரியரையும் சிலாகித்ததோடு மொழிபெயர்ப்பையும் பாராட்டிய தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 8. அயர்ச்சியின் குறியீடு "ஹாவ்" ... !

  இந்த 'ஹா' ஆச்சர்யம்! :)))

  ReplyDelete
 9. கற்பனைப் பறவை சிறகடித்துப் பறந்ததில் கிடைத்தது வித்தியாசமானதொரு வாசிப்பனுபவம்! அழகான மொழிபெயர்ப்புக்கு அன்புடன் நன்றி கீதா!

  ReplyDelete
 10. @ஸ்ரீராம்.

  இப்போது விளங்கியது. மிக்க நன்றி ஸ்ரீராம். :)

  ReplyDelete
 11. @பால கணேஷ்

  வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி கணேஷ்.

  ReplyDelete
 12. மேடம் ஆஸ்திரேலிய டூரிசம் போர்ட் உங்களுக்கு கௌரவ விளம்பர தூதர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு உங்கள் தயவால் ஆஸ்த்ரேலியாவை பற்றிய நிறைய தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது !! நன்றி! நன்றி!

  ReplyDelete
 13. என் மகன், சிறுவயதில் கற்பனையாக நன்றாக விளையாடுவான்.. சணடையிடுவான்., எதிராளி கீழே விழந்தது போல் அவனே கீழே விழுவான், எழுவான். கற்பனையாக நிறைய அவன் அப்பா மாதிரி இப்போது பேரனும் ஐபேடில் தாத்தா, ஆச்சியிடமிருந்து மெசேஜ் வந்தது போலவும் அதை படித்து பதில் டைப் செய்வது போலவும் கற்பனையாக சொல்கிறான். மோனோ ஆக்டிங் என்று சொல்வார்களே ஒருவனே நிறைய பாத்திரங்களாக நடிப்பான்.
  இந்த கதையை படிக்கும் போது அப்படித்தான் இருக்கிறது. முதியவர் தன் முதுகு பையோடு சணடையிட்டு விளையாடுவதை  முதியவரின் கற்பனை விளையாட்டை கேலி செய்யாமல் மூன்று வழி போக்கர்களும் அவருடன் விளையாடியது அருமை.

  முதுகு பையின் புளுகல் சிரிப்பை வரவழைத்து விட்டது.
  அருமையான கதையை மொழி பெயர்த்து கொடுத்த உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 14. வணக்கம்
  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_19.html?showComment=1392782733232#c461818290231042950

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 15. @Mythily kasthuri rengan

  எட்டுத்திக்கும் சென்று கலைச்செவல்வங்களைக் கொணரச் சொன்னான் மகாகவி. ஏதோ என்னால் இயன்றது இதுதான் என் அன்னைத் தமிழுக்கு. உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி மைதிலி.

  ReplyDelete
 16. @கோமதி அரசு

  உங்கள் மகன் மற்றும் பேரனின் சிறுவயது நிகழ்வுகள் மிகவும் சுவாரசியம். நினைத்தாலே ரசிக்கவைக்கிறது.

  \\முதியவரின் கற்பனை விளையாட்டை கேலி செய்யாமல் மூன்று வழி போக்கர்களும் அவருடன் விளையாடியது அருமை.\\

  இந்தக் கருத்துதான் கதையில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது. மிகச் சரியாக கவனித்துக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மனம் நிறைந்த நன்றி மேடம்.

  ReplyDelete
 17. @ரூபன்

  தகவலுக்கு நன்றி ரூபன்.

  ReplyDelete
 18. நல்லதோர் வாசிப்பனுபவம்..... பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 19. @வெங்கட் நாகராஜ்

  வருகைக்கும் வாசித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி வெங்கட்.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.