28 January 2014

காஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசயம் (5)


விலங்குகளில் ஆடு, மாடு, மான் போன்றவற்றுக்குக் கொம்புண்டு என்பதை அறிவோம். அழகுக்கொண்டை வைத்த மயில், கிளி, மரங்கொத்திகளை அறிவோம். கொம்பு வைத்தப் பறவை? இருக்கிறதா என்ன? இருக்கிறதே


ஆஸ்திரேலியாவிலும் அதற்கு அக்கம்பக்கமுள்ள பப்புவா நியூகினியா, நியூபிரிட்டன், யாப்பென், ஆரு போன்ற தீவுகளிலும் காணப்படும் காஸோவரி பறவைதான் அது. ஒரு ஆள் உயரத்தில் வாலிறகுகள் அற்று, பளபளக்கும் கருநிற உடலும் இறகுகளும், பளீர் நீலநிறக் கழுத்தும் செக்கச்சிவந்து தொங்கும் தாடைச்சதையும், தடித்த கால்களும், கத்தி போன்ற நகங்களும், தலையில் பழுப்புநிறக் கொம்பும் கொண்ட ஒரு விநோதப் பறவை காஸோவரி (Cassowary). காஸோவரி என்றால் பப்புவன் மொழியில் கொம்புத்தலை என்று பொருளாம். கொம்பு கொம்பு என்று சொல்கிறோமேஉண்மையில் அது கொம்புதானா? இல்லை இல்லை


அப்பறவையின் உச்சந்தலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான நுண்துளை காற்றறைகளின் மேலே அமைந்துள்ள தோலடுக்குதான் அப்பறவைக்குக் கொம்பு போன்ற தோற்றத்தைத் தருகிறது. அந்தத் தோலடுக்கு காரட்டீன் எனப்படும் நார்ப்புரதத்தால் ஆனது. விலங்குகளின் கொம்பு போன்று கடினமாகவும் கூராகவும் இல்லாமல் சற்றே மிருதுவாகவும் மழுங்கையாகவும் அதேசமயம் ஆமை ஓட்டைப்போன்று அழுத்தமாகவும் உள்ள உறுப்புதான் அந்த ஏழங்குல உயரக் கொண்டையழகு. இந்தக் கொம்பானது காஸோவரியின் வாழ்நாள் முழுவதும் வளர்ந்துகொண்டே இருப்பதால் இதைக்கொண்டு பறவையின் வயதைக் கண்டறிந்துவிடலாம்.

அடர்ந்த மழைக்காடுகளில் வாழும் இப்பறவைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள பூம்ம்ம்ம்ம்ம்என்று கொம்பூதுவது போல் ஒலியெழுப்பவும் பிற காஸோவரிகள் உண்டாக்கும் மிகக்குறைந்த அலைவரிசையுள்ள அதிர்வொலிகளைக் கேட்கவும் இந்தக் கொம்பு உதவுகிறதாம். மழைக்காடுகளில் உள்ள அடர்ந்த மரஞ்செடி கொடிகளினூடே இப்பறவை சிரமமின்றிப் புகுந்து புறப்பட ஏதுவாய் அமைந்திருப்பது அந்தக் கொம்பின் மற்றொரு சிறப்பு.


காஸோவரியில் மூன்று பிரிவுகள் இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் காணப்படுவது மூன்றிலும் பெரிய பறவையான தென்பிராந்திய காஸோவரி இனம் மட்டுமே. இது குவீன்ஸ்லாந்து மாகாணத்தில் அருகிவரும் பறவையினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இவற்றின் எண்ணிக்கை 1500 இலிருந்து 2000 க்குள்தான் இருக்குமென்று அறியப்பட்டுள்ளது. மற்ற இரு பிரிவுகளான வடபிராந்திய காஸோவரியும் குள்ளக்காஸோவரியும் பப்புவா நியூ கினியா, ஆரு, நியூபிரிட்டன்யாப்பென் போன்ற தீவுகளில் காணப்படுகின்றன.

காஸோவரியின் பிரதான உணவு பழங்கள்தாம். கிட்டத்தட்ட 26 வகையான பழங்களையும் 238 வகைத் தாவர உணவுகளையும் உண்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. Cerbera floribunda என்ற தாவரவியல் பெயர் கொண்ட மரத்தின் பழங்களை காஸோவரி பறவைகள் மிகவும் விரும்பி உண்பதால் அது காஸோவரி ப்ளம் மரம் (cassowary plum tree) என்றே அழைக்கப்படுகிறது.

காஸோவரி ப்ளம் பழம்

இப்பறவை பெரும்பாலான நேரத்தை பழமரங்களின் கீழேயே கழிக்குமாம். அதுவும் பழங்கள் பழுத்து உதிரும் சமயமென்றால் சொல்லவே வேண்டாம். முழுநேரமும் மரத்தின் அடியிலேயே சுற்றிக்கொண்டிருக்குமாம். கிட்டத்தட்ட முப்பது மீ. உயர மரங்களிலிருந்து கீழே விழும் பெரிய பழங்கள் இதன் தலையில் விழுந்தால் என்னாவது? தலைக்கு சேதமுறா வண்ணம் இயற்கை அளித்த ஒரு தலைக்கவசம் அதன் கொம்பு என்பது இன்னொரு விநோதம். ஆம். கொம்பின் உள்ளே எலும்புக்கு பதில் காற்றறைகள் இருப்பதால் கொம்பு ஒரு அதிர்வுத்தாங்கியாகவும் (shock-absorber) செயல்படுகிறது.

பறக்கவியலாத பறவையினத்தில் தற்போது உலகிலுள்ள மூன்றாவது பெரிய பறவை இது. முதலாவது பெரிய பறவை ஆப்பிரிக்காவில் உள்ள ஆஸ்ட்ரிச் (Ostrich) எனப்படும் தீக்கோழி, இரண்டாவது, ஆஸ்திரேலியப் பறவையான ஈமு (Emu). ஆனால் ஈமுவை விடவும் உடல் எடை அதிகமுள்ள பறவையினம் இது. சிறகிருந்தும் இப்பறவைகள் பறக்க இயலாமைக்குக் காரணம், வற்றின் சிறகெலும்புகளை மார்புக்கூட்டோடு பிணைக்கும் இணைப்பெலும்பு இல்லாமையே. பறக்கவியலாத பறவையினம் ராட்டைட் (ratite) இனம் என்று குறிப்பிடப்படுகிறது. ராட்டைட் என்றால் லத்தீன் மொழியில் மிதவைத்தெப்பம் என்று பொருளாம். நியூஸிலாந்தைச் சார்ந்த மோவா பறவையும் மடகாஸ்கரைச் சார்ந்த யானைப்பறவையும் இந்த ராட்டைட் இனத்தின் அழிந்துபோன உயிரினங்கள். 


காஸோவரி பறவைகள் பொதுவாக 1.5 மீ. முதல் 1.8 மீ உயரம் வரை வளரும் என்றாலும் சில பெண்பறவைகள் 2 மீ. உயரம் கூட வளரக்கூடியவை. பெண் காஸோவரியின் எடை 75 கிலோ வரையிலும் ஆண் காஸோவரியின் எடை 55 கிலோ வரையிலுமாக இருக்கும். வற்றின் ஆயுட்காலம் தோராயமாக நாற்பது முதல் ஐம்பது வருடங்கள் வரை இருக்கும். காஸோவரியால் 1.5 மீ உயரத்தைத் தாண்டவும், மணிக்கு ஐம்பது கி.மீ. வேகத்தில் ஓடவும் முடியும். பெருநதிகளிலும் கடலிலும் நன்றாக நீந்தவும் முடியும். 

காஸோவரி பறவையின் பிரதான உணவு பழங்கள் என்று முன்பே பார்த்தோம். வாழை, ஆப்பிள் போன்ற பழங்களை அப்படியே முழுங்கக்கூடியது. பழங்களை அப்படியே உண்பதால் விதைகள் எச்சத்தின் மூலம் வெளியேறி, மழைக்காடுகளில் விதை பரவுதல் சிறப்பான முறையில் நடைபெறுகிறதாம். பல கி.மீ. பரப்பளவில் இவை உலவுவதால் மழைக்காடுகளின் தாவரப்பெருக்கத்துக்கு இவற்றின் பங்கு மிக முக்கியமாம். ஏனெனில் மிகப்பெரிய அளவு பழங்களின் கொட்டைகள் பல இடங்களிலும் பரவுவதற்கு வேறு எந்த வழியும் இல்லையே. அது மட்டுமல்ல, இவற்றின் கழிவு மழைக்காட்டுக்கு நல்ல இயற்கை உரமாகிறது.


இப்பறவைகள் ஆப்பிள், காஸோவரி ப்ளம், காட்டுத் திராட்சை, பனம்பழம் போன்ற அநேக பழங்களோடு இதர உணவுகளாக துளிர்கள், பூக்கள், காளான், நத்தை, பூச்சிகள், தவளைகள், பறவைகள், மீன், எலி மற்றும் இறந்து அழுகிய பிராணிகளையும் தின்னக்கூடியவை. காஸோவரி பறவைகளுக்கு சீரணத்திறன் அதிகம். அவற்றின் சீரணத்திறனானது நச்சுப் பொருட்களையும் சீரணிக்கவல்லது. எனவே எதையாவது ஒரு காஸோவரி பறவை தின்றால் நாமும் அதைத் தின்னலாம் என்று முடிவெடுத்துவிடக்கூடாது. அது ஆபத்தில் முடியலாம்.

பொதுவாக காஸோவரி கூச்ச சுபாவமுள்ள பறவை என்றாலும் தாக்கப்படும்போது முழு வேகத்தையும் பிரயோகித்து எதிரியை வீழ்த்தக்கூடியதுஆபத்து வேளையில் தற்காத்துக்கொள்ள, மனிதர்களையும் விலங்குகளையும் தன் வலிமையான காலால் ஒரு உதை விடும்போது கால்விரலிலுள்ள ஐந்தங்குல நீள நகத்தால் தாக்கப்பட்டு உயிரிழப்பு நேர்வதுமுண்டு. 2004 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் ‘உலகிலேயே மிகவும் ஆபத்தானப் பறவை’ என்று காஸோவரியின் பெயர் இடம்பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.


பூர்வகுடி மக்களிடையே காஸோவரி பறவைகள் அவற்றின் மூர்க்கத் தாக்குதலுக்குப் பிரசித்தம் பெற்றவை. இரண்டாவது உலகப்போரின்போது நியூ கினியாவில் முகாமிட்டிருந்த அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய வீர்ர்களுக்கு இப்பறவை பற்றி அறிவிக்கப்பட்டு, அவற்றிடமிருந்து எப்போதும் விலகியிருக்குமாறு பெரும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாம்.

‘Living Birds of the World from 1958’ என்ற புத்தகத்தை எழுதிய பறவையியலாளர் தாமஸ் இ.கிலியார்ட், காஸோவரிப் பறவையைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் கால்களிலுள்ள நடுவிரல் நகமானது ஒரு குத்துவாளைப் போன்று மிக எளிதாய் பிற உயிரினங்களின் கை கால் போன்ற உடலுறுப்புகளைத் துண்டிக்கவோ, வயிற்றில் குத்திக் குடலை உருவவோ இயலுமளவுக்கு மிக நீளமாகவும் வெகு கூர்மையாகவும் உள்ளது. இங்குள்ள பூர்வகுடி மக்களில் பலர் இப்பறவையால் தாக்கிக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.காஸோவரி பறவை இனப்பெருக்க காலத்தைத் தவிர மற்ற சமயங்களில் ஒரு தனிமை விரும்பி. ஒரு ஆண் பறவை தனக்கான எல்லையாக சுமார் ஏழு சதுரகிலோமீட்டர் பரப்பை நிர்ணயித்துக்கொள்கிறது. பெண்ணோ பல ஆண்களின் எல்லைப்பரப்பிலும் ஊடுருவும் அளவுக்கு தன் எல்லைப் பரப்பை விரிவாக நிர்ணயிக்கிறது.

இரண்டு ஆண் பறவைகள் எதிரெதிரே சந்திக்க நேர்ந்தால், தங்கள் எதிர்ப்பைக் காட்டும்வண்ணம் உடலை நிமிர்த்தி சிறகுகளை சிலிர்ப்பியும் உறுமியும் ஒன்றையொன்று ஆக்ரோஷத்துடன் எதிர்கொள்ளும். முடிவில் ஏதாவதொன்று பின்வாங்கிவிடும். ஆணும் பெண்ணும் எதிர்கொண்டாலோ பெண்ணின் ஆளுமைக்கு அடங்கி, ஆண் அமைதியாக விலகிச்சென்றுவிடும். 

ஈமு இனத்தைப் போலவே காஸோவரி இனத்திலும் ஆணாதிக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லாமே பெண்ணாதிக்கம்தான். முட்டையிடுவது மட்டுமே பெண்ணின் வேலை. கூடு கட்டுவது, முட்டைகளை அடைகாப்பது, குஞ்சுகளை வளர்ப்பது, பாதுகாப்பது யாவும் ஆணின் வேலை.


இனப்பெருக்க காலம் மே, ஜூன் மாதங்களில் துவங்கும். ஆண்பறவை தரையில் இலைதழைகளைக் குவித்துக் கட்டிய கூட்டில் பெண் பறவை முட்டையிடும். ஒரு ஈட்டுக்கு மூன்று முதல் எட்டு முட்டைகள் வரை இடும். முட்டைகள் அளவில் பெரியனவாய் கரும்பச்சை நிறத்திலோ, வெளிர் நீலப்பச்சை நிறத்திலோ இருக்கும். முட்டையிட்டபிறகு தாய் திரும்பியும் பார்ப்பதில்லை. அது தொடர்ந்து பல ஆண்பறவைகளோடு இணைந்து பல ஈடு முட்டைகளை இடும். முட்டை ஒவ்வொன்றும் 600 கிராம் எடையிருக்கும்.


முட்டைகளை அடைகாக்கும் பொறுப்பு இனி தந்தைகளுக்கானது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அடைகாத்த பிறகு, முட்டையிலிருந்து மஞ்சள் நிறத்தில் பழுப்பு வரிகளைக் கொண்ட காஸோவரிக் குஞ்சுகள் வெளிவரும். ஒன்பது மாதங்கள் தந்தையின் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் வளரும் அவை அதன்பின் தனித்து வாழத் துவங்கும்.

காஸோவரி பறவைகளுக்கு ஞாபகத்திறன் அதிகம். அவை தங்களுடைய எல்லைக்குட்பட்டப் பரப்பை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளக்கூடியவை. முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும் அப்பா பறவை அவற்றை அழைத்துக்கொண்டு நீர்நிலைகள், பழமரங்கள் அதிகமுள்ள பகுதிகள் போன்ற பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச்செல்லும். பின்னாளில் குஞ்சுகள் தனித்து வாழத்தொடங்கும்போது எவ்வித சிரமமுமின்றி தங்கள் உணவைத் தேடிக்கொள்ள இந்தப் பயிற்சி உதவும்.


பண்டைக்காலத்தில் பூர்வகுடி மக்கள் இந்த காஸோவரிக் குஞ்சுகளைப் பிடித்துவந்து தங்கள் இடங்களில் வளர்த்து வந்தார்களாம். அவை வேலியடைக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களில் தன்னிச்சையாக சுற்றித்திரிந்து குப்பைகளையும் பிற தாவரக்கழிவுகளையும் உண்டு உயிர்வாழுமாம். பறவைகள் வளர்ந்து பிறரைத் தாக்க ஆரம்பிக்கும்பொழுது முளைக்குச்சியில் கட்டப்பட்டு வளர்க்கப்பட்டனவாம். இவற்றை வளர்க்கக் காரணம்உணவுக்காகவா? அதுதான் இல்லை.  

காஸோவரியின் மாமிசம் உண்பதற்கு ஏதுவானதல்ல என்பதை வேடிக்கையாக இப்படிச் சொல்வதுண்டு, ‘காஸோவரி மாமிசத்தை சமைக்கவேண்டுமெனில் ஒரு பானையில் காஸோவரியின் மாமிசத்தையும், ஒரு கல்லையும் போட்டுக் கொதிக்கவிடவேண்டும். கல் எப்போது வெந்து உண்பதற்குத் தயார்நிலையில் உள்ளதோ, அப்போது காஸோவரியின் மாமிசமும் உண்ணத்தயாராக இருக்கும்.’
கல்லைப்போன்று கடினமான மாமிசத்தை எவரும் விரும்பப்போவதில்லை. பின் எதற்காக அவற்றை வளர்த்தார்களாம்? 

நாணயப்புழக்கம் அறிமுகப்படுத்தப்படாத முந்தைய காலத்தில் பூர்வகுடி இனங்களிடையே சோழிகள், கிளிஞ்சல்கள் மற்றும் பறவையிறகுகளே மதிப்பிடுபொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தன. பழங்குடி மக்களிடையே இந்த காஸோவரி பறவையிறகுக்கு மிகுந்த மதிப்புண்டாம். அதன் காரணமாகவே இப்பறவைகள் வீடுகளில் வளர்க்கப்பட்டனவாம். நியூகினியாவின் ஒருசில பழங்குடியினத்தினர் காஸோவரி மாமிசத்தையும் விடுவதில்லையாம்.


காஸோவரி பறவையினத்துக்கு ஆபத்து என்றால் வேட்டைநாய்கள், நரிகள், பன்றிகள், இயற்கை சீற்றங்கள், வியாதிகள் தவிர மனிதர்களாலும் நேர்கிறது. காடுகளை அழித்து சாலைகள் அமைக்கப்படுவதால் வாகனங்களில் அடிபட்டு பல பறவைகள் இறக்கின்றன. மேலும் மனிதர்கள் அவற்றுக்கு ஒருமுறை உணவளித்துப் பழக்கிவிட்டால் அவை உணவுக்காக மனிதர்களைத் தொடர ஆரம்பித்துவிடுகின்றன. பின் குடியிருப்புகளைச் சுற்றிவரத்தொடங்கி, வாகனங்களில் அடிபட்டும், நாய்களிடம் சிக்கியும் இறந்துபோகின்றன. சில சமயங்களில் மனிதர்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இவ்வாறு இருதரப்பிலும் ஆபத்து உண்டாவதால் காஸோவரி பறவைகளுக்கு இயற்கைக்கு மாறாக மனிதர்கள் உணவளிப்பது கூடாதென்று வனத்துறை அறிவுறுத்துகிறது.காஸோவரி பற்றி பூர்வகுடி மக்களின் கதை என்னவென்று பார்ப்போமா?  முன்னொரு காலத்தில் கூண்டோயீ (Goon-doy-ee) என்றொரு மனிதன் இருந்தான். அவன் பலசாலியாகவும் அதிவேகத்தில் ஓடக்கூடியவனாகவும் இருந்தாலும் சோம்பேறியாக இருந்ததால் வேட்டையாடி உணவுண்ணாமல் அவன் கூட்டத்தைச் சார்ந்த சிறுகுழந்தைகளைப் பிடித்து எவரும் அறியாமல், கொன்று தின்றுவந்தான்.


குழந்தைகள் தொடர்ந்து தொலைந்துபோவதை அறிந்தவர்கள் காரணம் கூண்டோயீதான் என்பதையும் கண்டறிந்துகொண்டார்கள். அவனை அவன் விழித்திருக்கும் நிலையில் எதிர்கொள்வது கடினம் என்பதால் தூங்கும்போது அதைச் செய்ய நினைத்தார்கள். ஆனால் அவன் தலையில் நிறைய பேன்கள் இருந்தமையால் இரவில் சரிவரத் தூங்கமுடியாமல் விழித்தே இருந்தான்.

கூட்டத்தினர் ஒரு யோசனை செய்தனர். அவனுடைய நிலையைக் கண்டு அவனுக்கு இரங்குவது போல் நடித்து காரியத்தை முடிக்க எண்ணினர். அவனிடம் சென்று அவன் தலையில் பேன்பார்த்துவிடுவதாக சொன்னார்கள். முதலில் அவன் சந்தேகத்தோடு மறுத்துவிட்டாலும் தொடர்ந்த பேன்தொல்லையால் அவனால் துளியும் கண்ணை மூடமுடியவில்லை. வேறுவழியில்லாமல் இறுதியில் இறங்கிவந்தான். அவர்கள் அவன் தலையிலிருந்து பேன்களை முழுவதுமாய் அகற்றினர்.


அவன் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்த இரவொன்றில் அனைவரும் பாய்ந்து அவனை அமுக்கி அவனிரு கைகளையும் வெட்டிவிட்டனர். அதன்பின் அவன் காட்டுக்கு ஓடிப்போய்விட்டான். அவன்தான் பிறகு காஸோவரியாக மாறிப்போனான். அதனால்தான் காஸோவரியால் இறகிருந்தும் பறக்க இயலவில்லை. காட்டில் தனிமை வாழ்வு வாழ்வதற்கும் அதுதான் காரணம். மேலும் குழந்தைகளைக் கொன்று தின்ற கொடுஞ்செயலுக்கு தண்டனையாகவே வாழ்நாள் முழுவதும் அதன் குஞ்சுகளைப் பராமரிக்கும் பொறுப்பு கடவுளால் அதற்குக் கொடுக்கப்பட்டது. கதை மிகவும் சுவாரசியமாக உள்ளதல்லவா?


******************************************

(படங்கள் நன்றி: இணையம்)

36 comments:

 1. காஸோவரி பறவை பற்றி அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 2. இதுவரை அறியாத பறவையினம்
  விரிவாக படங்களுடன் பதிவாக்கி
  அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  பூர்வீக மக்களின் கதை மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. காஸோவரி பறவைகள் பற்றிய விளக்கங்கள் வியக்க வைத்தன... அறியாத, சுவாரஸ்யமான பகிர்வுக்கு நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. இதுவரை அறிந்திடாத ஒரு பறவைப் பற்றி முழுதாய் தெரீந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 5. காஸோவரி பறவை பற்றி அரிய தகவல்கள்.... படங்களும், கதையும் வெகு அருமை... பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 6. மிக ரசனையான பறவையின் விவரங்கள்.
  நன்று.
  இனிய வாழ்த்து. தங்கள் முயற்சிக்குப் பாராட்டு.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 7. காஸோவரி பறவையும், அதைப் பற்றிய பூர்வகுடி மக்களின் கதையும் தெரிந்து கொள்ள முடிந்தது உங்கள் பதிவால்.

  //முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும் அப்பா பறவை அவற்றை அழைத்துக்கொண்டு நீர்நிலைகள், பழமரங்கள் அதிகமுள்ள பகுதிகள் போன்ற பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச்செல்லும்.//

  அப்பாவின் பொறுப்பு அருமை.
  படங்கள் எல்லாம் அருமை.

  ReplyDelete
 8. இயற்கையின் அதிசயங்களை எண்ண எண்ண வியப்‌பு அதீதம் ஆகிறது தோழி! காசோவரி பற்றிய தகவல்கள் திரட்டித் தந்தமைக்கு மிக்க நன்றி. யானைப் பறவை என்றெல்லாம் கூட இருந்திருக்கிறத!! அதுவும் மனிதனை விட உயரமாக!! காசோவரி முட்டைகளும் குஞ்சுப் பறவைகளும் என்ன அழகு!

  ReplyDelete
 9. எத்தனை தகவல்கள்...... மிகச் சிறப்பான பகிர்வு. நன்றி.

  ReplyDelete
 10. முதலில் வான்கோழி இனமோ என்று எண்ணத் தோன்றியது. படிக்கப் படிக்க காஸோவரி பறவை பற்றி ஒரு தகவல் களஞ்சியம் தெரிந்தது. பறக்க இயலாத ஒன்றை பறவை என்று கூறுதல் சரியா. ? பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள். என் பதிவைப்படிக்க அழைக்கிறேன்.

  ReplyDelete
 11. முழுமையான ஒரு பதிவு கீதா.அரிய பல புதிய விடயங்கள்! பழங்குடிகளின் கதையும் அருமை.சுவாரிசமாகவும் சொல்லி இருக்கிறீர்கள்.

  பாராட்டுக்கள் கீதா. மிகுந்த பாராட்டுக்கள். மேலும் இது போன்ற அரிய தகவல்களைத் தாருங்கள்.தாகத்தோடு காத்திருக்கிறேன்.

  விக்கிப்பீடியாவுக்கும் எழுதலாமே!

  இதனை உங்கள் பெயரோடு பிரதி செய்து வைத்துக் கொள்கிறேன்.பயனுள்ள தகவல்கள்

  ReplyDelete
 12. புதிய தகவல் கீதா...காசோவரி பறவை பற்றி பல தகவல்களைப் புரியும்படி எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி!
  த.ம.4

  ReplyDelete
 13. @இராஜராஜேஸ்வரி

  உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

  ReplyDelete
 14. @Ramani S
  வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

  ReplyDelete
 15. @Ramani S

  நன்றி ரமணி சார்.

  ReplyDelete
 16. @திண்டுக்கல் தனபாலன்

  வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தனபாலன்.

  ReplyDelete
 17. @ராஜி

  வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ராஜி.

  ReplyDelete
 18. @ADHI VENKAT

  வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஆதி.

  ReplyDelete
 19. @kovaikkavi

  வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழி.

  ReplyDelete
 20. @கோமதி அரசு

  வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துரைக்கும் மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 21. @நிலாமகள்

  என்னை வியக்கவைக்கும் இயற்கையின் அதிசயங்களை அனைவருடனும் பகிர்ந்துகொள்வதில் எனக்கும் பெருமகிழ்ச்சியே. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நிலாமகள்.

  ReplyDelete
 22. @வெங்கட் நாகராஜ்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

  ReplyDelete
 23. @G.M Balasubramaniam

  பார்ப்பதற்கு வான்கோழி போலத்தான் இருக்கிறது. பறவை பற்றிய தங்கள் கேள்வி சிந்திக்கவைக்கிறது. என்னுடைய பறத்தல் பறவையியல் என்னும் கவிதை நினைவுக்கு வருகிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 24. @மணிமேகலா

  உற்சாகம் தரும் கருத்துரைக்கு நன்றி மணிமேகலா. விக்கிபீடியா பற்றிய யோசனையும் உள்ளது. அதற்கு முறையான கட்டுரை வடிவம் தரவேண்டியுள்ளதால் சற்றுக் காலமெடுக்கும் என்று நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணிமேகலா.

  ReplyDelete
 25. @கிரேஸ்

  வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

  ReplyDelete
 26. காஷோவரி !!!!!!!!!!
  எப்படிங்க இப்படி புதுசு புதுசா மேட்டர் போடுறிங்க!
  என் மகள் ஆச்சர்யத்தில் வாய் ஓயாது புகழ்ந்து கொண்டே இருக்கிறாள்!
  அம்மா அத்தையை நல்ல ப்ரைஸ் பண்ணுங்கம்மா என்று வாய் ஓயாது சொல்கிறாள்! கலக்குறிங்க!

  ReplyDelete
 27. Information arumai. Thanks.

  ReplyDelete
 28. @Mythily kasthuri rengan

  இந்தப் பதிவு உங்கள் மகளுக்குப் பிடித்திருப்பதில் எனக்கு அளவிலா மகிழ்ச்சி மைதிலி. என் மருமகளுக்காகவே விரைவில் மற்றொரு அதிசய உயிரினம் பற்றி பதிவிடுகிறேன். மிக்க நன்றி மைதிலி.

  ReplyDelete
 29. @Samy

  Thank you very much for your comment.

  ReplyDelete
 30. ஆஸி வரும்போதெல்லாம் எப்படியும் காஸோவரி தரிசனம் கிடைச்சுருது. என்ன அழகான நிறம் என்று அதிசயிச்சுத்தான் போவேன். மற்றபடி அதன் 'கதை' யும் வாழ்க்கையும் எனக்குப் புதிது!

  மிகவும் ரஸித்தேன். இனிய பாராட்டுகள்.

  ReplyDelete
 31. @துளசி கோபால்

  வருகைக்கும் பதிவை ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி டீச்சர்.

  ReplyDelete
 32. அறியாத பல தகவல்கள் .... அருமையான படங்களுடன் தந்துள்ளீர்கள். ;)

  ReplyDelete
 33. @வை.கோபாலகிருஷ்ணன்
  நேரம் ஒதுக்கி வாசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி வை.கோ. சார்.

  ReplyDelete
 34. வணக்கம்
  ஒவ்வொன்றையும் பற்றிய விளக்கம் வியக்க வைத்துள்ளது..... தொடருங்கள் அடுத்த பதிவுக்காக காத்திருக்கும் பட்டியலில் இருக்கிறேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 35. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

  வலைச்சர தள இணைப்பு : பாரதியார் வியந்த பெண்மணியும்...

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.