16 August 2013

ஈமு - ஆஸ்திரேலியாவின் அதிசயம் (3)

ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினங்கள் வரிசையில் அடுத்ததாய் நாம் அறியவிருப்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பறவையினமான ஈமு பறவைகளைப் பற்றி. ஈமுவளர்ப்பு பண்ணைகளின் உதவியால் ஈமுவை தற்போது தமிழகத்தில் பலரும் பார்த்திருக்கும் வாய்ப்பு உள்ளது. உலகிலுள்ள பறக்கவியலாத பறவையினங்களில் இரண்டாவது  பெரிய பறவை இது. முதலாவது பெரிய பறவை ஆப்பிரிக்காவின் தீக்கோழி. ஆஸ்திரேலிய அரசு முத்திரையில் இடம்பெறும் அந்தஸ்து கொண்ட இந்த ஈமு பறவை பற்றி தெரிந்துகொள்வோம், வாருங்கள்ஈமு என்று தமிழில் எழுதினாலும் சரியான ஆங்கில உச்சரிப்பு ஈம்யூ என்பதாகும்கங்காருவைப்போலவே ஈமு பறவையும் ஆஸ்திரேலியாவின் தேசிய, கலாசார அடையாளங்களுள் முக்கியமானது. இது ஆஸ்திரேலிய அரசின் முத்திரையில் இடம்பெற்றதோடு நாணயங்களிலும், தபால் தலைகளிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களின் பல பாரம்பரிய கதைகளோடும், கலாச்சாரத்தோடும் நெருங்கிய தொடர்புடையது.டைனோசார் காலத்திலிருந்தே உலவிவந்த இந்தப் பறவையினத்தில்  மூன்று வகைகள் இருந்தனவாம். ஆனால்  உணவுக்காகவும் உடைக்காகவும் வேட்டையாடப்பட்டு இரண்டு வகைகள் அழிந்துபோய், இப்போது இருப்பது  இந்த ஒரு வகைமட்டும்தான்.  ஆஸ்திரேலியா முழுக்க காணப்பட்டாலும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளைத் தவிர்த்த பிற பகுதிகளிலும் பாலை நிலங்களிலும் குறுங்காடுகளிலும்தான் இவை பெரும்பாலும் காணப்படுகின்றன. மழைக்காடுகளில் இவை வசிப்பதில்லை. இந்தப் பறவை தோராயமா ஒன்றரை மீட்டரிலிருந்து இரண்டு மீட்டர் வரைக்கும் உயரமாய் வளரக்கூடியது. எடை கிட்டத்தட்ட 35 கிலோ இருக்கும். பொதுவாக இந்த இனத்தில் ஆணை விடவும் பெண்ணே அளவில் பெரியதாக இருக்கும். பறக்க இயலாவிட்டாலும் அதிக வேகத்தோடு ஓடக்கூடியது இந்தப்பறவை. தேவைப்பட்டால் மணிக்கு 70 கிமீ வேகத்தில் கூட ஓடுமாம். தன்னிச்சையாய் காடுகளில் வாழும் ஈமுவின் ஆயுட்காலம் பத்து முதல் இருபது வருடங்கள் என்று கணக்கெடுப்பு சொல்கிறது.
ஈமுவுக்கென்று ஒரு குறிப்பிட்ட வாழும் எல்லை கிடையாது. நாடோடியைப் போல உணவு கிடைக்குமிடத்தில் திரிந்து வாழக்கூடியது. இது புல், இலைகள், பூச்சிகள் போன்றவற்றைத் தின்னும். அதே சமயம் உணவில்லாமலும் பல வாரங்களுக்கு அதனால் தாக்குப்பிடிக்க முடியும். உணவின் மூலம் கிடைக்கும் கொழுப்பை உடலில் சேகரித்து வைத்துக்கொள்ளும் தன்மை இதற்கு உண்டு. தண்ணீருக்காகவும் தவிக்காது. ஆனால் கிடைக்கும்போது தொடர்ந்து பத்து நிமிஷம் குடிக்கும். இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவெனில் இந்தப்பறவை தன் உணவோடு சின்ன சின்ன கற்கள், கண்ணாடித்துண்டுகள், இரும்புத்துண்டு என்று கண்ணில் படுவதையெல்லாம் தின்றுவிடுமாம். அவை அதன் இரைப்பையில் தங்கி உணவைச் செரிக்கவைக்க உதவுமாம். ஈமு பற்றிய மற்றொரு சுவாரசியமான விஷயம் உண்டு. இது ஒரு விலங்கையோ, மனிதனையோ கண்டால் மிகுந்த ஆர்வத்தோடு, தனக்கு அலுத்துப்போகும் வரை அவர்களைத் தொடர்ந்து வருமாம். வேடிக்கையான பழக்கம்தான் இல்லையா?

ஈமுவுக்கு ஏதாவது ஆபத்து என்றால் தன்னுடைய கால்களைத்தான் பயன்படுத்தும். அதனுடைய காலில் மூன்று விரல்கள் உள்ளன. அதனுடைய கால் மிகவும் வலிமையானது. இரும்புக்கம்பி வேலியையே காலால் கிழித்துவிடுமென்றால் எவ்வளவு வலிமையிருக்கும் அந்தக்கால்களுக்கு! ஈமுவுக்கு எதிரிகள் என்றால் டிங்கோ நாய்களும், கழுகு பருந்து போன்ற வேட்டைப் பறவைகளும்தான். நாய்களிடமிருந்து தப்பிக்க காலால் உதைத்தும், தாவிக்குதித்தும் நாய்களை எதிர்த்து விரட்டித் தப்பிவிடும். ஆனால் பாவம், கழுகு, பருந்துகளிடமிருந்து தப்ப ஓடி ஒளியவேண்டும்.

ஈமுவின் கண்கள் மிகச்சிறியவை. சிமிட்ட ஒன்றும் தூசுகளினின்று பாதுகாக்க ஒன்றும் இரண்டு சோடி இமைகள் உண்டு. ஈமுவுக்கு கூர்மையான கண்பார்வையும் செவித்திறனும் இருப்பதால் இதனால் தனக்கு வரவிருக்கும் ஆபத்தைத் தொலைவிலேயே கண்டுணரமுடியும். உடனே தன் பாதுகாப்புக்காக ஆயத்தமாகிடும். இதனுடைய இறக்கைகளும் இது வாழும் சூழலுக்கேற்றபடி தக்கதாக அமைந்துள்ளன. அடுக்கடுக்கா அமைந்திருக்கும் ஈமுவின் இறக்கைகள் இதனுடைய உடலை வெப்பத்திலிருந்து பாதுகாக்கின்றன. அதனால் ஈமுவால் நல்ல வெயில் நேரத்திலும் சுறுசுறுப்பா இயங்கமுடிகிறது. ஈமு பெரும்பாலான நேரத்தை தன் இறக்கையைக் கோதிக்கொண்டே இருக்கும். ஈமுவுக்கு நன்றாக நீந்த தெரியும் என்றாலும் வெள்ள சமயத்திலோ, ஆற்றைக் கடக்கவேண்டியிருந்தாலோ தவிர வேறு சமயங்களில் நீந்துவதில்லை. ஆனால் தண்ணீரில் சும்மா உட்கார்ந்திருக்கப் பிடிக்குமாம். சின்னக்குழந்தைகள் போல் தண்ணீரிலும் சேற்றிலும் விளையாடவும் பிடிக்குமாம்.


ஈமு தூங்கும்போது கால்களை மடக்கி அதன்மேல் அமர்ந்து, தன்னுடைய நீண்ட கழுத்தை இறக்கைக்குள் நுழைத்து தூங்கும். அப்போது தூரத்தினின்று பார்ப்பதற்கு சிறு மணற்குன்று போல தெரியும். தூங்கும்போது எதிரிகள் கவனத்தில் படாமலிருக்க இப்படி ஒரு உபாயமாம்.

பயிர்களை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள், கம்பளிப்பூச்சிகள் போன்றவற்றைத் தின்று விவசாயிகளுக்கு நன்மை புரியும் ஈமுக்களே பல சமயம் தங்களையறியாமல் நாம் விரும்பாதவற்றையும் செய்துவிடுகின்றன. ஈமுக்கள் கள்ளிச்செடியின் பழங்களைத் தின்று போகுமிடங்களிலெல்லாம் அவற்றின் விதைகளை எச்சத்தின் மூலம் பரப்ப, விளைநிலங்களில் எல்லாம் தேவையில்லாத அச்செடி வளர்ந்து பெருந்தொந்தரவாகிவிட்டதாம்.  ஆஸ்திரேலிய அரசால் 1930 1940 களில் மிகப்பெரிய அளவில் ஈமு மீதான தொடர்வேட்டைகள் நடத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாம்.ஆண்பறவைகளை விடவும் பெண்பறவைகள் சற்று பெரியவையாக இருக்கும். ஆண்பறவைகள் பன்றியைப் போல் உறுமல் ஒலி எழுப்பும். பெண்பறவைகள் பெரிதாய் முழங்கும். ஈமு பறவைகள் மே, ஜூன் மாதங்களில் முட்டையிடும். இதனுடைய கூடு ஒன்றரை மீட்டர் அகலம் வரை இருக்கும். கூட்டைக் கட்டுவது ஆண்பறவைதான். பெண்பறவை பல ஆண்பறவைகளோடு இணைந்து பல ஈடு முட்டைகளை இடும். பொதுவா ஒரு ஈட்டுக்கு இருபது முட்டைகள் வரை இடும். முட்டைகள் கரும்பச்சை நிறத்திலும், ஒவ்வொன்றும் 700 முதல் 900 கிராம் வரையிலான எடையோடும் இருக்கும். அதாவது ஒரு ஈமு முட்டை பன்னிரண்டு கோழிமுட்டைகளின் எடைக்கு சமமானதாக இருக்கும். முட்டையிடுவது மட்டும்தான் பெண்பறவையின் வேலை. கூடு கட்டும் வேலையோடு அடைகாக்கும் வேலையும்  ஆண்பறவைக்கு உரித்தானது. அடைகாக்கும்போது உணவு எதுவும் உட்கொள்ளாது.விடிகாலைப் பனித்துளிகளை அருந்தி தொண்டையை நனைத்துக்கொள்ளும்.உணவுண்ணாமல் உடலில் சேமித்துவைக்கப்பட்டுள்ள கொழுப்பும் கரைந்துவிடுமாம். ஆனாலும் மிகவும் சிரத்தையுடன் அடைகாக்கும். ஒருநாளைக்கு பத்துமுறை எழுந்து நின்று முட்டைகளைத் திருப்பிவிட்டு சரியான வெப்பத்தைப் பேணுமாம். 
எட்டுவாரங்கள் கழித்து குஞ்சுகள் பொரிந்துவந்தபின்னும் அதன் கடமை முடிந்துவிடுவதில்லைஅவற்றை வளர்த்தெடுப்பதும் முழுக்க முழுக்க அப்பாவின் வேலைதான். குஞ்சுகள் பொரிந்தவுடன்  25 செ.மீ. உயரத்தில் உடல் முழுக்க கறுப்பு வெள்ளை வரிகளுடன் இருக்கும். மூன்று மாதங்களுக்குப் பின் மெல்ல மெல்ல கருப்பு, பழுப்பு, கரும்பழுப்பு என்று நிறமாறி முழுவளர்ச்சியடையும். சிலவற்றுக்கு கழுத்தில் நீலநிறமும் காணப்படும்.ஆஸ்திரேலியாவின் சொந்தப்பறவையான ஈமு, அமெரிக்காவின் உயிரியல் பூங்காவுக்கென அங்கு அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போது அமெரிக்கப் பொருளாதாரத்தில் முக்கியப்பங்கு வகிப்பது மறுக்கமுடியாத உண்மை. உலகச்சந்தையில் ஒரு முதலீடாகவே ஈமு கணிக்கப்படுகிறது. ஈமு முட்டையோடுகள் அலங்காரப்பொருட்கள் செய்யவும் அணிகலன்கள் செய்யவும் பயன்படுகின்றன. ஈமுவின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் ஈமு எண்ணெய் நுண்ணுயிர்க்கொல்லியாகவும், தீக்காயங்களை ஆற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது. பல சரும நிவாரண மற்றும் சரும அழகு சாதனங்களில் ஈமு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஈமுவின் தோல் காலணிகள், கைப்பைகள் மற்றும் ஆடைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதன் தோல் எந்தவிதமான சாயத்தையும் ஏற்கும் திறன் கொண்டிருப்பதால் தோல்சந்தையிலும் ஆடை வடிவமைப்பாளர்களிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


எட்டுகோடி வருடங்களுக்கு முன்பிருந்தே ஆஸ்திரேலிய மண்ணில் நிலைகொண்டிருக்கும் பறவையினமான இவை பூர்வகுடி மக்களால் உணவுக்காகவும் உடைக்காகவும் வேட்டையாடப்பட்டுவந்தன. அவற்றின் கொழுப்பு வலிநிவாரணியாக பயன்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் ஒருவகை காவிமண்ணுடன் ஈமு எண்ணெய் கலந்து உடல்களில் ஓவியம் தீட்டி அலங்கரித்துக்கொண்டு பாரம்பரிய விழாக்களைக் கொண்டாடுவது பழங்கால பூர்வகுடி மக்களின் சிறப்பாகும். பூர்வகுடி மக்களின் புராணக்கதைகளோடு பெரும் தொடர்புடைய ஈமுவுக்கு மதிப்பளிக்கும் விதமாக ஆஸ்திரேலிய அரசு, மலைகள், ஆறுகள், வாய்க்கால்கள், ஊர்கள் போன்று கிட்டத்தட்ட அறுநூறு இடங்களுக்கு ஈமுவின் பெயரை வைத்து சிறப்பித்துள்ளது.

*************************************************************************************

(படங்கள் நன்றி: இணையம்)

27 comments:

 1. முட்டை 200 ரூபாய் போகும், இறைச்சி 800ரூபாய் இறகு 1000 ரூபாய் போகும்னு ஈரோடுல மோசடி நடந்துச்சே அந்த ஈம்வும் இதும் ஒண்ணா?!,

  ReplyDelete
 2. ஈமுகோழி பற்றி நிறைய தகவல்கள். கட்டுரைக்கும் படங்களுக்கும் நன்றி! இங்கு, தமிழ்நாட்டில், ஆஸ்திரேலியாவின் கவுரவமான ஈமுகோழி இனத்தை, தங்கள் பணத்தாசைக்காக, மோசடி செய்து, இழிவுபடுத்தி சாகடித்த ஆட்களை என்னவென்று சொல்வது?


  ReplyDelete
 3. இரண்டு சோடி இமைகளா ? நிறைய தகவல்கள் சிறப்பாக தொகுத்து தந்துள்ளீர்கள் தோழி.

  ReplyDelete
 4. நான் ஆஸ்திரேலியா வந்திருந்தபோது ஈம்யூவைப் பார்த்திருக்கிறேன் ; அது பற்றிய விரிவான தகவல்களைச் சுவையாய் அளித்தமைக்கு கீதமஞ்சரிக்கு நன்றி .

  ReplyDelete
 5. ஆண் ஈமூக்களின் அடைகாத்தல் தகவல்கள் வியப்பு.

  சிறப்பான தகவல்களின் தொகுப்புக்கு நன்றி தோழி.

  ReplyDelete
 6. ஈமூ என்ற பறவை பற்றி அறியாத பல தகவல்கள் அறிந்து கொண்டேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 7. ஆண்பறவைக்கு உரித்தானது. அடைகாக்கும்போது உணவு எதுவும் உட்கொள்ளாது.விடிகாலைப் பனித்துளிகளை அருந்தி தொண்டையை நனைத்துக்கொள்ளும்.உணவுண்ணாமல் உடலில் சேமித்துவைக்கப்பட்டுள்ள கொழுப்பும் கரைந்துவிடுமாம். ஆனாலும் மிகவும் சிரத்தையுடன் அடைகாக்கும். ஒருநாளைக்கு பத்துமுறை எழுந்து நின்று முட்டைகளைத் திருப்பிவிட்டு சரியான வெப்பத்தைப் பேணுமாம்//

  என்ன அருமையான தாயுமானவர் ,
  உண்ணாது, உறங்காது அடை காத்து வளர்ப்பது தந்தையின் கடன்.
  நீங்கள் ஒவ்வொரு விலங்கினங்களைப் பற்றி விரிவாக சொல்லும் போது இறைவனின் படைப்புகளைப் பற்றிய வியப்பு விரிந்து கொண்டே போகிறது.
  நன்றி கீதமஞ்சரி.

  ReplyDelete
 8. சின்னக்குழந்தைகள் போல் தண்ணீரிலும் சேற்றிலும் விளையாடவும் பிடிக்குமாம்.

  ஈமு பற்றி வித்யாசமான தகவல்கள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 9. Anonymous17/8/13 01:38

  ஈமு பற்றிய நிறைய தகவல்களை
  சுவராஸ்யமாகப் பகிர்ந்து உள்ளீர்கள்.
  படித்து ரசித்து மகிழ்ந்தேன்.
  பெரியதொரு பகிர்விற்கு பெரிய பெரிய நன்றிகள் .

  ReplyDelete
 10. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இத் தகவல்களைப் பார்க்கும் போது .பறவை இனத்தில் மட்டுமல்ல விலங்கினத்திலும் எத்தனை எத்தனை
  புதுமைகளையெல்லாம் இறைவன் படைத்துள்ளான் ! மிக்க நன்றி தோழி அருமையான பகிர்வு இதற்க்கு .

  ReplyDelete
 11. @ராஜி

  அதே... அதே.. உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.

  ReplyDelete
 12. @தி.தமிழ் இளங்கோ

  அதேதான் என் கருத்தும் ஐயா. இயற்கைக்கு மாறாய் தன் வாழ்விடங்களை விட்டு வேற்றிடம் புகுத்தப்படும் உயிர்கள் ஒன்று வாழத்தகுந்த சூழல் அமையாமல் மடிந்துபோகின்றன அல்லது தங்கள் வாழ்க்கையைத் தக்கவைக்கும் முயற்சியில் அவ்விடத்தில் வாழும் பிற உயிர்களை அழித்துவிடுகின்றன. மனிதனின் பேராசையே இத்தகு நிகழ்வுகளுக்குக் காரணம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 13. @Sasi Kala

  எனக்கும் இது வியப்பான தகவல்தான் சசிகலா. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழி.

  ReplyDelete
 14. @சொ.ஞானசம்பந்தன்

  தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துரைக்கும் மிக்க நன்றி தங்களுக்கு.

  ReplyDelete
 15. @நிலாமகள்

  எவ்வளவு வியப்பு தரும் தகவல்கள்! அதனாலேயே அவற்றைப் பகிரும் எண்ணம் உண்டானது. நீங்களும் அவற்றை ரசித்தமை குறித்து மகிழ்ச்சி. நன்றி நிலாமகள்.

  ReplyDelete
 16. @வை.கோபாலகிருஷ்ணன்

  தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 17. @கோமதி அரசு

  தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துரைக்கும் மிக்க நன்றி மேடம். விந்தைப்படைப்புகளைத் தங்கள் அனைவரோடும் பகிர்வதில் மனம் நிறைகிறது எனக்கு.

  ReplyDelete
 18. @இராஜராஜேஸ்வரி

  ஆமாம், நினைத்துப் பார்த்தாலே வேடிக்கையாகத்தான் இருக்கிறது. அல்லவா? தங்கள் வருகைக்கும் ரசித்துப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 19. @ஸ்ரவாணி

  வருகைக்கும் வாசித்து மகிழ்ந்தமைக்கும் அன்பான நன்றி ஸ்ரவாணி. எழுத ஆரம்பித்தால் தகவல்கள் நீண்டுகொண்டே போகின்றன. ஆர்வத்துக்கு ஏது முற்றுப்புள்ளி? இருந்தாலும் வாசிப்போரின் நேரத்தைக் கருத்தில் கொண்டு கொஞ்சம்போல் குறைத்திருக்கிறேன்.

  ReplyDelete
 20. @Ambal adiyal

  வருகைக்கும் பதிவை ரசித்து மகிழ்ந்தமைக்கும் அன்பான நன்றி அம்பாளடியாள்.

  ReplyDelete
 21. இவ்வளவு பலன் தரும் இப்பறவையை அரசு அழித்திருக்கின்றதே. உலகு இனங்கள் அனைத்தும் ஆண் பெண் வேறுபாடுகள் இன்றி ஒரு பிள்ளை வளர்ப்பில் ஒருவருக்கு ஒருவர் துணையாய் தொழிற்படுகின்றன. இதற்கு ஈமு பறவையும் விதிவிலக்கல்ல. சிறப்பான தகவல்களைப் பெற்றுத் தந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. ஈமு பற்றிய மேலதிக தகவல்கள்
  அனைத்தும் மிக அருமை சகோதரி...
  பகிர்வுக்கு நன்றிகள் .பல..

  ReplyDelete
 23. Anonymous21/8/13 17:44

  கடந்த வாரம் இந்த ஆக்கம் பார்த்தேன்.
  மிகவும் உள்வாங்கி வாசிக்க வேண்டியிருந்ததால் தள்ளி வைத்து
  - இன்று தான் நேரம் கிடைத்தது. நிறைந்த தகவல்கள்
  சுவையாக இருந்தது. மிகுந்த நன்றி கீதா.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 24. @சந்திரகௌரி

  வெகுநாட்களுக்குப் பின்னரான தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் அன்பான நன்றி சந்திரகௌரி.

  ReplyDelete
 25. @மகேந்திரன்

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

  ReplyDelete
 26. @kovaikkavi

  நேரமொதுக்கி வந்து மறுபடி வாசித்தமைக்கும் ஊக்கமிகுக் கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழி.

  ReplyDelete
 27. Anonymous24/8/13 18:44

  நடிகர் சரத் குமாரின் ஈமு கோழியும் இந்த ஈமு கோழியும் ஒன்று தானே

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.