1 August 2013

கொவாலா - ஆஸ்திரேலியாவின் அதிசயம் (2)

ஆஸ்திரேலிய விலங்குகள் அறிமுக வரிசையில் இன்று நாம் அறிந்துகொள்ள இருப்பது ஆஸ்திரேலியாவின் மற்றொரு அடையாளவிலங்கினமான கொவாலாக்கள் (koalas) பற்றி. ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழும் கொவாலாக்கள் அழியக்கூடிய அபாயத்திலிருக்கும் உயிரினங்களில் ஒன்று என்பது வருத்தம் தரும் செய்தி. இவை ஆஸ்திரேலியாவின் கிழக்கு மற்றும் தெற்குக் கடலோரப் பகுதிகளான குவீன்ஸ்லாந்து, நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்களில் மட்டுமே காணப்படுகின்றன.

கொவாலாக்கள் கரடி வகையைச் சார்ந்தவை என்று தவறாக கணிக்கப்படுகிறது. கரடிக்கும் கொவாலாவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. கொவாலாக்கள், கங்காருவைப்போல் மார்சுபியல் இனத்தைச் சார்ந்தவை. பார்ப்பதற்கு டெடிபேர் (Teddy bear) போல இருப்பதால் இவையும் கரடி இனத்தைச் சேர்ந்தவை என்று பலராலும் நம்பப்படுகிறது. கொவாலாவின் உயிரியல் பெயர் Phascolarctos cinereus என்பதாகும். லத்தீன் மொழியில் இதற்குவயிற்றில் பையுடைய சாம்பல் நிறக் கரடிஎன்ற பொருளாகும்.கொவாலாவின் ரோமத்தின் தன்மையும் நிறமும் அவற்றின் வசிப்பிடத்துக்கேற்ப வேறுபடுகின்றன. தென்திசைக் குளிர்காற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தெற்குப்பகுதியில் வசிக்கும் கொவாலாக்களுக்கு வடக்குப் பகுதிகளில் வசிக்கும் கொவாலாக்களை விடவும் நீளமான மற்றும் அடர்த்தியான ரோமங்கள் உள்ளன. கொவாலாக்கள் பெரிய காதுகளையும் பெரிய மூக்கையும், கூரான பற்களையும், கால்களில் கூரிய நகங்களையும் கொண்டவை. வயிற்றுப் பகுதியில் வெள்ளை நிறமும் பிற பாகங்களில் சாம்பல் நிறம் அல்லது சாக்லேட் பழுப்பு நிறம் கொண்டவை. கொவாலாக்களுக்கு வால் கிடையாது. அதாவது முன்னொரு காலத்தில் வால் இருந்ததன் அடையாளமாக வால் எலும்பின் நீட்சி காணப்பட்டாலும், வால் வெளியில் தெரிவதில்லை.

கொவாலா பொதுவாக 25 முதல் 30 செ.மீ உயரம் வரை வளரும். ஆண் கொவாலா தோராயமாக 12 கிலோ எடையிலும் பெண் கொவாலா 8 முதல் 9 கிலோ வரையிலுமாக இருக்கும். இவை 12 முதல் 16 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடியவை. இவை குறட்டை, செருமல் போன்ற ஒலிகள் மூலம் ஒன்றையொன்று தொடர்புகொள்கின்றனகொவாலாக்கள் பற்றிய மற்றொரு சுவாராசியமான விஷயம் ஒன்று உண்டு. இவற்றுடைய விரல் ரேகைகள் மனித விரல் ரேகைகளை ஒத்திருக்குமாம். மின்னணு நுண்ணோக்கி (electron microscope) வைத்துப்பார்த்தாலும் வேறுபாடு கண்டுபிடிக்க இயலாதாம். என்ன ஆச்சர்யம்!


கொவாலாக்களும் கங்காருக்களைப் போலவே இரவு விலங்குகள்தாம் (nocturnal animals). பகல் முழுவதும் உறங்கிக் கழித்துவிட்டு இரவில் மட்டுமே உணவு உண்கின்றன. கொவாலா ஒரு நாளைக்கு அரைக்கிலோ முதல் ஒரு கிலோ வரை யூகலிப்டஸ் இலைகளைத் தின்னும். கூலா (gula) என்றால் ஆஸ்திரேலிய பூர்வீக மொழிகளுள் ஒன்றான தாருக் மொழியில் தண்ணீர் தேவையில்லை என்ற பொருளாம். கொவாலாக்கள் தண்ணீர் குடிப்பதில்லை. தாங்கள் தின்னும் யூகலிப்டஸ் இலைகளிலிருந்தே தேவையான ஈரப்பதத்தைப் பெற்றுக்கொள்கின்றன. கொவாலாவின் பிரதான உணவு யூகலிப்டஸ் இலைகளே. யூகலிப்டஸ் மரக்காடுகள்தாம் அவற்றின் வசிப்பிடம். மழைக்காடுகளிலோ, பாலைநிலங்களிலோ இவற்றால் வாழ இயலாது.

ஆஸ்திரேலியாவில் 600 வகையான யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிட்ட 50 வகை மரங்களின் இலைகளை மட்டுமே கொவாலாக்கள் உண்கின்றன. இந்த இலைகளில் 50 சதவீதம் நீராகும்.  நார்ச்சத்தும் நச்சுத்தன்மையும் குறைந்த அளவே ஊட்டமும் கொண்ட யூகலிப்டஸ் இலைகளை சீரணிக்க இவற்றுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுவதால் தூக்கமொன்றே ஒரே வழி. ஒருநாளைக்கு 18 முதல் 22 மணிநேரத்தைத் தூங்கியே கழிக்கின்றன. மற்ற நேரத்தை உணவு உண்பதில் கழிக்கின்றன. அவசரமாக உண்ணவேண்டிய நிலையில் தங்கள் உணவை, குரங்குகள் செய்வதைப் போல, கூடுமானவரைக் கன்னத்தில் அதக்கிக்கொண்டு பின்னர் மெதுவாக அவற்றை உண்டுமுடிக்கின்றன.

இவை இயங்குவதில் மந்தமாக இருந்தாலும் நீந்துவதில் கெட்டி. கொவாலாக்கள் தரையில் நான்கு கால்களையும் ஊன்றி நடக்கும். முயலைப் போல் மிகவேகமாக ஓடக்கூடியவை. கொவாலாக்களுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லாமையால் அவை தங்கள் பாதங்களை நக்கியும், கால்களை உடலிலிருந்து விலக்கி நீட்டித் தொங்கப்போட்டும் உடல் வெப்பத்தைத் தணித்துக்கொள்கின்றன.


ஒரு யூகலிப்டஸ் மரத்தில் ஒரு கொவாலா மட்டுமே வசிக்கும். வாழுமிடங்கள் அழிக்கப்படும்போது இவை பதற்ற நிலையடைந்து இறக்கின்றன. பொதுவாக கொவாலாக்கள் தங்களுக்கென்று எல்லைகளை நிர்ணயிப்பதில்லை என்றாலும் இனப்பெருக்க காலத்தில் ஆண் கொவாலாக்கள் தங்கள் மார்பில் சுரக்கும் ஒருவித வாசனை சுரப்பி நீரை மரத்தின் கீழ்ப்பகுதிகளில் தேய்த்து தங்கள் மரத்தை மற்ற ஆண் கொவாலாக்கள் நெருங்காதபடி எச்சரிக்கின்றன. கொவாலாக்கள் பார்ப்பதற்கு சாதுவைப்போல் தோன்றினாலும் மிகவும் மூர்க்கமானவை. அவற்றுடைய கூரிய பற்களால் கடித்தும், கூரிய நகங்களால் தாக்கியும் எதிரிகளை சமாளிக்கின்றன.

கொவாலாக்களின் இனப்பெருக்க காலம் டிசம்பர் முதல் மார்ச் வரை. கொவாலா பொதுவாக வருடத்துக்கு ஒரு குட்டி ஈனும். மிகவும் அரிதாக இரட்டைக் குட்டிகள் பிறக்கும். வயது முதிர்ந்த பெண் கொவாலாக்கள் இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கொருமுறை ஒரு குட்டியீனும். இவற்றின் கர்ப்பகாலம் 35 நாட்கள். கொவாலா குட்டி பிறக்கும்போது இரண்டு செ.மீ. அளவுதான் இருக்கும். கண், காது போன்ற எந்த உறுப்பும் வளர்ச்சியுறா நிலையில் அவை தவழ்ந்து தாயின் மடிக்குள் தஞ்சம் அடைந்துவிடுகின்றன. அங்கிருக்கும் இரண்டு பால்காம்புகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டுவிடும். மார்சுபியல் வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் இதனுடைய வயிற்றுப்பை தலைகீழாக இருக்கும். அதாவது கோவாலா மரத்தில் அமர்ந்திருக்கும்போது அதன் பையின் திறப்பு கீழ்நோக்கி இருக்கும். மார்சுபியல் இனத்தில் இப்படி கீழ்நோக்கிய பையுள்ள மற்றொரு இனம் வோம்பேட். வோம்பேட் நிலத்தில் வாழும் உயிரினம். அவை தமது கால்களால் மண்ணைக் கிளறி புழு பூச்சிகளைத்தேடி உண்ணும். அப்போது மண் வயிற்றுக்குள்ளிருக்கும் குட்டியைப் பாதிக்காதிருக்க அவற்றின் பைக்கு பின்னோக்கிய திறப்பு அமைந்திருப்பதில் அர்த்தம் உண்டு. ஆனால் கொவாலா போன்ற மரத்தில் வாழும் உயிரினத்துக்கு பை தலைகீழாய் அமைந்திருப்பதன் காரணம் தெரியவில்லை. மரத்தில் ஏறும்போதும், தாவும்போதும் பையிலிருந்து குட்டி கீழே விழுந்துவிடாதிருக்ககொவாலாக்கள் வெகு சிரத்தையுடன் தசைகளை இழுத்துப் பிடித்துப் பையைச் சுருக்கிக் குட்டிகளைப் பாதுகாக்கின்றன. ஒரு சுருக்குப்பை போல மூடிக்கொள்வதற்கென்றே இதற்கென பிரத்யேக தசைநார்கள் நாடாக்களாக செயல்படுகின்றன.

கொவாலாக்குட்டிகளை கப் (cub), ஜோய் (joey), பேக் யங் (back young), பௌச் யங் (pouch young) என்ற பெயர்களில் குறிப்பிடுகின்றனர். தாயின் பைக்குள் ஆறுமாதங்கள் பாலைக்குடித்தபடி இருக்கும் குட்டிக்கு அதற்குள் கண், காது, கால்கள், ரோமம் அனைத்தும் உருவாகி கிட்டத்தட்ட முழுவளர்ச்சி பெற்றுவிடும். அதன்பின் அவை பையை விட்டு வெளியேறி தாயின் வயிற்றைப் பற்றிக்கொண்டோ, முதுகில் சவாரி செய்துகொண்டோ அவ்வப்போது பைக்குள் தலையை நுழைத்துப் பால் குடித்துக்கொள்ளும். இந்த சமயத்தில் குட்டிகள், தாய் வெளியேற்றும் மலக்கழிவல்லாத மற்றொரு விசேடக் கழிவை உண்டு வளர்கின்றன. இது குட்டிகள் வருங்காலத்தில் தின்னவிருக்கும் நச்சுமிகுந்த யூகலிப்டஸ் இலையை செரிக்கவைக்கும் பாக்டீரியாக்களை அவற்றின் உடலில் உருவாக்குமாம்.


குட்டிகளுக்கு மூன்று வயது வரும்வரை தாய்க்கு அருகிலேயே வாழும். பெண்குட்டிகள் இரண்டு வயதிலும் ஆண் குட்டிகள் நான்கு அல்லது ஐந்து வயதிலும் முதிர்ச்சி அடைகின்றன. இந்த நேரத்தில் அவை தாயை விட்டுப்பிரிந்து தமக்கென்று தனிப்பட்ட வசிப்பிடத்தைத் தேடவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது.

இறந்துபோய்விட்ட கொவாலாவொன்றின் மரத்தையோ அல்லது இதுவரை வேறேந்த கொவாலாவும் குடியேறியிராத புதிய மரத்தையோ தங்கள் வசிப்பிடமாக்கிக்கொள்கின்றன. மரங்களின் எண்ணிக்கை குறையும்போது வசிக்க இடமில்லாது அவை மன அழுத்தத்துக்கு ஆளாகின்றன என்றும் அவ்வாறு வசிப்பிடமிழந்து அலைபவற்றில் கிட்டத்தட்ட நாலாயிரம்  கோவாலாக்கள் வருடந்தோறும் கார்களில் அடிபட்டும், நாய்களிடம் சிக்கியும் உயிரிழப்பதாகவும் ஆஸ்திரேலியன் கோவாலா ஃபௌண்டேஷன் தகவல் தெரிவிக்கிறது.

கொவாலாக்கள் அவற்றுடைய ரோமத்துக்காக பெருமளவில் வேட்டையாடப்பட்டுவந்தன. 1908 முதல் 1927 ஆம் ஆண்டு வரையிலும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் கொவாலாக்கள் கொல்லப்பட்டனவாம். குடியிருப்புகள், நெடுஞ்சாலைகள், விவசாயம், பண்ணைத்தொழில் போன்றவற்றுக்காக கொவாலாவின் வசிப்பிடங்கள் அழிக்கப்படுவதாலும் இவற்றின் தொகை பெருமளவில் குறைந்து வருகின்றன. இப்போது உலகில் உயிர்வாழ்பவை நாற்பதாயிரம் முதல் எண்பதாயிரம் என்ற குறுகிய எண்ணிக்கையில்தான் இருக்கின்றவாம்.கொவாலா குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் மாநில விலங்காக மதிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் சட்டங்கள் கொவாலாவுக்கு எதிரான செயல்களைக் கண்டித்து, அவற்றுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. கொவாலாவைப் பிடிப்பதோ, அடைப்பதோ, அதைத் தொந்தரவு செய்வதோ சட்டவிரோதமாகும். வளர்ப்பு மிருகமாய் அதை வைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும். உயிரியல் பூங்கா காப்பாளர்கள், விஞ்ஞானிகள், மற்றும் கொவாலா பாதுகாவலர்கள் போன்றோரும்கூட வனத்துறை அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றபிறகே கொவாலாக்களைத் தங்கள் பாதுகாப்பில் வைத்திருக்க இயலும்.

காட்டை ஒட்டிய பல குடியிருப்புகளில் கொவாலாக்கள் வந்து தொந்தரவு தருவதாக சிலர் புலம்புகிறார்கள். நம் வசிப்பிடங்களில் காட்டுமிருகங்கள் வந்து அட்டகாசம் செய்வதாய்ப் புலம்பும் நாம் என்றைக்கு உணரப்போகிறோம் அவற்றின் வசிப்பிடங்களைத்தான் நாம் ஆக்கிரமித்திருக்கிறோம் என்னும் உண்மையை!

  ******************************************************************************* 
படங்கள் நன்றி: இணையம்.

24 comments:

 1. அருமையான படங்களுடன் அற்புதமானத் தகவல்கள்.

  அதுவும் அந்த கைரேகைகள் விஷயம் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. படங்களுடன் இதுவரை அறியாத ஒரு உயிரை பற்றி அறிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 3. அரிய தகவல்கள் நன்று.... நன்றி...

  ReplyDelete
 4. காட்டை ஒட்டிய பல குடியிருப்புகளில் கோவாலாக்கள் வந்து தொந்தரவு தருவதாக சிலர் புலம்புகிறார்கள். நம் வசிப்பிடங்களில் காட்டுமிருகங்கள் வந்து அட்டகாசம் செய்வதாய்ப் புலம்பும் நாம் என்றைக்கு உணரப்போகிறோம் அவற்றின் வசிப்பிடங்களைத்தான் நாம் ஆக்கிரமித்திருக்கிறோம் என்னும் உண்மையை!//

  உண்மை நீங்கள் சொல்வது.

  கோவாலக்கள் வசிக்க மரம் தேடி அலையும் போது போக்குவரத்தில் அடிப்பட்டும், நாயால் கடி பட்டும், மரம் கிடைக்காமல் மன அழுத்ததாலும் இறப்பதை கேள்வி படும் போது மிகவும் வருத்தமாய் இருக்கிறது.உயிர்வாழ எவ்வளவு கஷ்டபடவேண்டி உள்ளது!

  ReplyDelete
 5. நம் வசிப்பிடங்களில் காட்டுமிருகங்கள் வந்து அட்டகாசம் செய்வதாய்ப் புலம்பும் நாம் என்றைக்கு உணரப்போகிறோம் அவற்றின் வசிப்பிடங்களைத்தான் நாம் ஆக்கிரமித்திருக்கிறோம் என்னும் உண்மையை!

  விரிவான தகவல்கள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 6. அதிசமான தகவல்கள் கீதா.தொடருங்கள் !

  ReplyDelete
 7. கொவாலா விலங்குகள் பற்றிப் புதிய தகவல்கள் தெரிந்துகொண்டேன். நன்றி. –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

  ReplyDelete
 8. //நம் வசிப்பிடங்களில் காட்டுமிருகங்கள் வந்து அட்டகாசம் செய்வதாய்ப் புலம்பும் நாம் என்றைக்கு உணரப்போகிறோம் அவற்றின் வசிப்பிடங்களைத்தான் நாம் ஆக்கிரமித்திருக்கிறோம் என்னும் உண்மையை!..//

  அது புரிந்துவிட்டால் நல்லது....

  பல தகவல்களை தந்த உங்களது பகிர்வும், பகிர்ந்திருந்த படங்களும் மிக நன்று. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 9. அட! இந்த கைரேகை சமாச்சாரம் எனக்குப் புதுசுப்பா. அரிய தகவலுக்கு நன்றீஸ்.

  நம்ம கொஆலா அனுபத்தை நேரம் கிடைச்சால் பாருங்க.
  http://thulasidhalam.blogspot.co.nz/2012/07/20-9.html

  ReplyDelete
 10. கைரேகை ரொம்ப ஆச்சர்யமா இருக்கு... கொவாலாக்கள் பற்றிய தகவல்கள் அருமை...
  உண்மைதான்.. மனிதன் எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக்கிகொள்ளும் ஒரு சுயநலவாதி!!

  ReplyDelete
 11. கொவாலாவைப் பற்றிய அரிய பல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 12. கோவாலாக்கள் படங்களுடன் நல்ல தகவல்கள்.

  ReplyDelete
 13. @வை.கோபாலகிருஷ்ணன்

  தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 14. @ராஜி

  வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி ராஜி.

  ReplyDelete
 15. @திண்டுக்கல் தனபாலன்

  வருகைக்கும் ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி தனபாலன்.

  ReplyDelete
 16. @கோமதி அரசு

  நம் நாட்டிலும் யானைகளின் பாதையில் வீடுகளைக் கட்டிவைத்துக்கொண்டு அவை அட்டகாசம் செய்வதாய்ப் புலம்பிக்கொண்டிருக்கிறோம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 17. @இராஜராஜேஸ்வரி

  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 18. @ஹேமா

  வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி ஹேமா.

  ReplyDelete
 19. @Chellappa Yagyaswamy

  தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 20. @வெங்கட் நாகராஜ்

  அது புரியாமல்தானே இன்னமும் புலம்பிக்கொண்டிருக்கிறோம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

  ReplyDelete
 21. @துளசி கோபால்

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டீச்சர். உங்கள் பதிவைப் படித்தேன். ஒவ்வொரு தகவலையும் சுவாரசியமாகத் தொகுத்தளிக்கும் உங்கள் பாங்கு எப்போதுமே எனக்கு வியப்பையூட்டும்.

  ReplyDelete
 22. @சமீரா

  வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி சமீரா.

  ReplyDelete
 23. @வே.நடனசபாபதி

  தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 24. @மாதேவி

  வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி மாதேவி.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.