18 July 2013

கங்காரு - ஆஸ்திரேலியாவின் அதிசயம் (1)
ஆஸ்திரேலியாவின் தேசியவிலங்கு கங்காரு என்று பள்ளிகளில் படித்திருப்போம். உண்மையில் ஆஸ்திரேலியாவின் தேசியவிலங்கு என்று கங்காருவைக் குறிப்பிடுதல் சரியன்று. ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் தத்தமக்கென்று தனித்த முத்திரை, விலங்கு, பறவை, பூ, கொடி, நிறம், வாசகம் போன்ற அடையாளங்களைக் கொண்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசியமுத்திரையில் இடம்பெற்றுள்ள பெருமை விலங்குகளில் கங்காருவுக்கும் பறவைகளில் ஈமுவுக்கும் மட்டுமே உள்ளது. இரண்டுக்குமே பின்னோக்கி நடத்தலோ நகர்தலோ அசாத்தியம் என்பதால் முன்னேற்றத்துக்கான அடையாளமாக இவை அரசு முத்திரையில் இடம்பெற்றுள்ளன.கங்காருவை ஆங்கிலத்தில் கேங்கரு (kangaroo) என்று சொல்வார்கள். கங்காரு மார்சுபியல் (marsupials) என்னும் வகையைச் சேர்ந்தது. மார்சுபியல் வகையென்றால் என்ன தெரியுமா? அவற்றின் வயிற்றில் நெகிழும் தன்மையுடைய பை போல ஒரு அமைப்பு இருக்கும். இந்த வகை விலங்குகளுக்கு முழு வளர்ச்சியடையாத நிலையில்தான் குட்டிகள் பிறக்கும். அந்தக் குட்டிகள் முழு வளர்ச்சி பெறும்வரை தாய் தன் வயிற்றிலிருக்கும் பையில் வைத்து வளர்க்கும்.

மார்சுபியல் வகையைச் சேர்ந்த இன்னும் சில விலங்குகள் கொவாலா (koalas), போஸம் (possums), ஒபோஸம் (opossums), டாஸ்மேனியன் டெவில் (Tasmanian devils), வோம்பேட் (wombats) போன்றவை. இந்தவகையான விலங்கினங்களில் இப்போது உலகத்தில் வாழ்பவை மொத்தமாக 334 இனங்கள்தானாம். அவற்றில் கிட்டத்தட்ட 70 சதவீதம் அதாவது 220 இனம் ஆஸ்திரேலியாவிலும், நியூ கினியாவிலும், சுற்றியுள்ள தீவுகளிலும் வாழ்கின்றன. மற்ற முப்பது சதவீதம் அமெரிக்காவில் வாழ்கின்றன.

மார்சுபியலிலேயே மேக்ரோபாட் (macropod) என்னும் வகையைச் சார்ந்தவை கங்காருக்கள். மேக்ரோபாட் என்றால் மிகப்பெரிய பாதங்கள் கொண்டவை என்று பொருள்.

கங்காருவுக்கு கங்காரு என்கிற பெயர் வந்தது பற்றி செவிவழித் தகவல் ஒன்று உண்டு. முதன் முதலில் இங்கு வந்திறங்கிய ஐரோப்பியர்கள், இந்த விலங்கைப் பார்த்து வியந்துபோனார்களாம். தலை மானைப் போல இருக்கிறது. ஆனால் கொம்பு இல்லை, நின்றால் மனுஷனைப் போல் நிற்கிறது, ஆனால் நடக்கத்தெரியவில்லை, தவளை போல தாவித்தாவிப் போகிறது. இது என்ன மாதிரியான விலங்கு என்று தெரியலையே என்று விழித்தார்களாம். அங்கே போன சில கங்காருக்களைக் காட்டி, இது என்னவென்று அங்கிருந்த பூர்வகுடிகளைக் கேட், அவர்களோ, ‘நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியலைஎன்பதை அவர்களுடைய மொழியில் குங்குரு என்று சொன்னார்களாம். இவர்கள் அதன்பெயரே அதுதான் என்று நினைத்து திருவல்லிக்கேணியை ட்ரிப்ளிகேன்ஆக்கினதுபோல், குங்குருவை காங்கருவாக்கிவிட்டார்கள். அதுமட்டுமல், வயிற்றில் குட்டிகளோடு திரிந்த தாய் கங்காருக்களைப் பார்த்து அவையெல்லாம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்று நினைத்திருந்தார்களாம்.

கங்காரு இனங்களிலேயே அறுபதுக்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. குளிர் பிரதேத்தில் வாழ்பவையும் உண்டு, பாலைவனத்தில் வாழ்பவையும் உண்டு, மழைக்காடுகளில் வாழ்பவையும் உண்டு, கடலோரப் பகுதிகளில் வாழ்பவையும் உண்டு. வாழும் இடத்தில் தட்பவெப்ப சூழலுக்கேற்றபடி அவை தங்கள் வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்கின்றன.கங்காருக்கள் இரவு விலங்குகள் (Nocturnal animals). இரவுநேரத்தில்தான் சுறுசுறுப்பாக இயங்கும். உணவு தேடிப்போகும். சில வகைகள் அதிகாலை நேரத்திலும், பின்மதியத்திலும் உணவு உண்ணப்போகும். பகல் முழுவதும் ஏதேனும் மரநிழலிலோ, பாறையிடுக்குகளிலோ, படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும். கங்காரு பெரும்பாலும் புல்தான் தின்னும். மற்ற கால்நடைகளைப் போலவே கங்காருக்களுக்கும் இரைப்பை அறைகள் உண்டு. அதனால் இவையும் இரவில் உண்ட உணவை பகலில் அசைபோட்டு விழுங்கும். மிகவும் குறைந்த அளவே தண்ணீர் குடிக்கும். தண்ணீர் இல்லாமலேயே பல மாதங்கள் அவற்றால் உயிர்வாழ முடியும்.

எல்லாக் கங்காருகளுக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில்வலிமையான பின்னங்கால்களும் நீண்ட பாதங்களும். கங்காரு மணிக்கு நாற்பது முதல் அறுபது கிலோமீட்டர் வேகம் வரையிலும் ஓடுமாம். அது வேகமாக ஓடும்போது பேலன்ஸ் (balance) செய்ய அதன் வால்தான் உதவுகிறது. படங்களில் கங்காரு ஓடும்போது பார்த்திருப்போம்,  வாலால் உந்தி உந்தி ஓடுவது போல இருக்கும். உண்மைதான். வாலில்லையென்றால் கங்காருவால் ஒட மட்டுமில்லை, நகரவும் முடியாது. நமக்கு கட்டை விரல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்காருவுக்கு வால். கங்காருக்களால் தங்கள் கால்களைக் கொண்டு நடக்கவும் முடியாது, முன்பே குறிப்பிட்டது போல் பின்னோக்கி நகரவும் இயலாது. ஆனால் நன்றாக நீந்தத்தெரியும். ஏதாவது ஆபத்து வரும்போது பக்கத்தில் ஏதாவது நீர்நிலை இருந்தால் அதற்குள் இறங்கித் தப்பித்துவிடும்.

கங்காருக்கள் குழுக்களாகத்தான் வாழும். குழுவை மாப் (mob), கோர்ட் (court) என்று குறிப்பிடுவார்கள். ஒரு குழுவில் பத்து முதல் நூறு வரையிலும் கூட இருக்கும். கங்காருவுக்கு எதிரிகள் என்றால் டிங்கோ நாய்கள், நரிகள், காட்டு நாய், பூனைகள் மற்றும் மனிதர்கள். பொதுவாக இவை மனிதர்களை தாக்காது என்றாலும் அவர்களால் ஏதேனும் ஆபத்தின் அறிகுறியைக் கண்டால் தாக்கக் கூடியவை.

கங்காருக்கள் குத்துச்சண்டையில் தேர்ந்தவை. எதிரியை சமாளிக்கவேண்டிய நெருக்கடியில் தங்கள் முன்னங்கால்களால் நன்றாக குத்து விடும். அல்லது பின்னங்கால்களால் பலமாக உதைவிடும். தங்கள் ஆளுமையை நிரூபிக்கவும், பெண் கங்காருக்களை கவரவும் பலம் வாய்ந்த ஆண் கங்காருக்கள் தங்களுக்குள் இதுபோன்ற சண்டைகளில் ஈடுபடுவதுண்டு.


கங்காருக்கள் பெரிய அளவில் சத்தமெழுப்பாது. சின்னதாய் செருமல்கள், மெல்லிய குரைப்பொலி, சன்னமான பக் பக், க்ளக் க்ளக் போன்ற ஒலிகளைத்தான் வெளிப்படுத்தும். பெரும்பாலும் தரையில் கால்களைத் தட்டி ஒலியெழுப்பும். குட்டியை அழைக்கவும், ஆபத்தில் எச்சரிக்கவும் இப்படி செய்கின்றன.

கங்காருக்களில் மிகவும் பெரிய வகை சிவப்பு கங்காரு இனம்தான். கங்காரு இனத்தில் மட்டுமல்ல, உலகிலுள்ள மார்சுபியல் வகை விலங்குகளிலேயே பெரியதும் இதுதான். இது நின்றால் ஆறடி இருக்கும். கிட்டத்தட்ட மனிதர்களின் உயரம். எடை 85 கிலோ இருக்கும். சிவப்புக் கங்காரு இனத்தில் பெரியதும் ஆளுமையுடையதும் ஆண்தான்.

ஆண் கங்காருக்களை பக் (buck), பூமர் (boomer), ஓல்டுமேன்(old man), ஜாக் (Jack) என்றெல்லாம் குறிப்பிடுவார்கள். பெண் கங்காருக்களை டொ (doe), ஃப்ளையர் (flyer), ஜில் (Jill) என்று சொல்வார்கள். குட்டிகளை ஜோய் (Joey) என்று குறிப்பிடுவார்கள். கங்காருக்குட்டிகள் பார்க்க அவ்வளவு அழகு. அதிலும் அம்மா வயிற்றுப்பைக்குள் அமர்ந்தபடி தலையை மட்டும் வெளியில் நீட்டி உலகமறியாத குழந்தை போல அது விழிப்பது அவ்வளவு அழகு.

கங்காரு வருஷத்துக்கு ஒரு குட்டி போடும். அதனுடைய கர்ப்பகாலம் வெறும் 33 நாட்கள்தான். அதனால் குட்டி பிறக்கும்போது இரண்டுகிராம் எடையுடன் ஒரு மொச்சைக்கொட்டை அளவுதான் இருக்கும். கண், காது கால் உடல் என்று எதுவும் முழுமையாக உருவாகாமல் ஒரு புழுவைப் போல இருக்கும். மனிதக் கருவோடு ஒப்பிடுகையில் இது ஏழுவார சிசுவுக்கு சமம். 23 வாரங்களுக்குக் குறைந்த காலத்தில் குறைப்பிரசவமாகும் மனித சிசுக்கள் உயிர்பிழைப்பது அரிது. ஆனால் கங்காருவின் குட்டி பிறந்த நொடியே உள்ளுணர்வு காரணமாக உந்தப்பட்டு தன் தாய்மடியை நோக்கி நகர ஆரம்பித்துவிடுகிறது. ஏனென்றால் அதற்குத் தெரியும் தனக்கான உணவு அங்கேதான் உள்ளது என்று.

தாய்க்கங்காருவால் அந்தக் குட்டியைத் தொடக்கூட இயலாத அளவுக்கு குட்டி மிகச்சிறியதாக இருக்கும். ஆனால் அம்மா என்ன செய்யுமென்றால், குட்டி, பைக்கு போகும் பாதையை நக்கி நக்கி சுத்தம் செய்து கொடுக்கும். குட்டியும் தன்னுடைய முன்னங்கால் விரல்களால் அம்மாவின் வயிற்று ரோமத்தைப் பற்றிக்கொண்டே முன்னோக்கி நகர்ந்து நகர்ந்து நான்கு அல்லது ஐந்து நிமிடத்தில் பைக்குப் போய்விடும். பைக்குள் நான்கு பால்காம்புகள் இருக்கும். அதில் ஒன்றை வாயால் பிடித்ததென்றால் அவ்வளவுதான். உடனே அந்த பால்காம்பு வீங்கி குட்டியின் வாயைவிட்டு வெளியில் வராதபடி உள்ளே நன்றாகப் பொருந்திவிடும். அப்புறமென்ன, அம்மா எத்தனை குதி குதித்தாலும் தாவினாலும் குட்டி பத்திரமாக பைக்குள் இருக்கும். விழவே விழாது. இன்னுமொரு வியப்பான விஷயம் என்னவென்றால் அந்தக் குட்டிக்கு பாலை உறிஞ்சிக் குடிக்கவும் தெரியாது. தசைகள் சுருங்கிவிரிவது மூலமாகதான் பால் குட்டிக்குப் போய்ச்சேரும்.கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஜோயி அதே நிலையில்தான் இருக்கும். அதற்குள் அது முழுவளர்ச்சி பெற்றுவிடும். எவ்வளவு நேரந்தான் உள்ளேயே இருப்பது. அலுத்துப்போகுமேஅவ்வப்போது மெதுவாக தலையை மட்டும் பைக்கு வெளியே நீட்டி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதுபோல் வெளியில் வேடிக்கை பார்க்கும். ஆனாலும் பையைவிட்டு முழுவதுமாய் வெளியில் வர பயமிருக்கும். இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் வெளியில் வரும். வந்தாலும் அம்மா கூடவே நிற்கும். சின்ன சத்தம் கேட்டாலும் உடனே பைக்குள் ஒடி ஒளிந்துகொள்ளும். இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும், பயமெல்லாம் போய்விடும். அம்மாவை விட்டு கொஞ்சதூரம் விலகிப் போய் மேய ஆரம்பித்துவிடும். முன்போல் பயமிருக்காது. ஆனால் அம்மா எப்போதும் கவனமாகவே இருக்கும். ஆபத்து வரும் அறிகுறி அறிந்தால், உடனே தரையில் காலைத் தட்டும். சட்டென்று குட்டி அம்மாவின் பைக்குள் ஏறிக்கொள்ள, அம்மா அந்த இடத்தை விட்டு ஓட ஆரம்பித்துவிடும்.

பொதுவாகவே கங்காரு ஒரு குட்டி ஈன்றாலும் உடனே இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு, இன்னொரு குட்டியையும் அடுத்த ஈட்டுக்குத் தயாராக கருப்பையில் பத்திரப்படுத்திக்கொள்ளும். ஆனால் வளரவிடாது. காத்திருப்போர் பட்டியலில் இருப்பதுபோல் அந்தக் குட்டி அம்மா மனம் வைக்கும்வரை கருவாகவே கருப்பைக்குள் காத்திருக்கும். முதலில் பிறந்த குட்டி பையை விட்டு வெளியேறும்வரை அம்மா காத்திருக்கும். பஞ்ச காலம் வருவதைப் போல் தெரிந்தால் அம்மா அப்போதும் குட்டியீனுவதைத் தள்ளிப்போடும். அம்மாவுக்கு நல்ல உணவு கிடைத்து, நல்லமுறையில் பால்கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கை வந்தால்தான் குட்டியை ஈனத் தயாராகும்.

ஒரே சமயம் வெவ்வேறு வயதுடைய இரண்டு குட்டிகள் அம்மாவிடம் பால் குடிப்பது உண்டு. பால்குடி மறக்காத அண்ணன் ஜோயி அவ்வப்போது அம்மாவின் மடிக்குள் தலைவிட்டு பாலைக்குடிக்கும். அதே பைக்குள் தம்பி ஜோயி ஒரு பக்கம் குடித்துக்கொண்டிருக்கும். ஒரு ஜோயி பிறந்தது முதல் கடைசிவரை ஒரே பால்காம்பில்தான் பால் குடிக்கும். தவறியும் அடுத்ததில் வாய் வைக்காது. அதனால் பாலும் அக்குட்டிகளின் வயதுக்கேற்ப தனித்தன்மையுடன் இருக்கும். வளர்ந்த குட்டி மாற்று உணவுக்குப் பழகிவிட்டதால் அதற்குக் கிடைக்கும் பாலில் அத்தனை சத்துகள் இருக்காது. வளர்ச்சியடையாத ஜோயிக்கோ அது ஒன்றே உணவென்பதாலும் வளர்ச்சிக்குத்தேவை என்பதாலும் மிகவும் சத்தான பால் கிடைக்கும். அண்ணனுக்கு தண்ணிப்பால், தம்பிக்கு சத்தான பால். சின்னதென்றால் எப்பவுமே செல்லம்தானேஆஸ்திரேலியாவில் யாரும் கங்காருக்களை வீடுகளிலோ பண்ணைகளிலோ வைத்து வளர்ப்பதில்லை. கங்காரு ஆஸ்திரேலியாவின் முத்திரையில் இடம்பெறுமளவுக்கு அங்கீகாரம் பெற்றிருந்தாலும் பல இடங்களில் அது ஒரு பயிரழிக்கும் பிராணியாகத்தான் (pest) கருதப்படுகிறது. அதனால் பல இடங்களில் அரசாங்கமே அனுமதி கொடுத்து அவற்றை எக்கச்சக்கமான அளவில் வேட்டையாடச் சொல்கிறது. அவற்றின் இறைச்சிகள் கடைகளில் விற்பனையும் ஆகிறது. முதன் முதலில் கடைகளில் கங்காரு இறைச்சியைப் பார்த்து அதிர்ச்சியானேன். ஒரு நாட்டின் அடையாளச்சின்னமாய் விளங்கும் விலங்கைக் கொல்வதோடு, இப்படிக் கூறு போட்டு விற்கிறார்களே என்றுஅவற்றால் விவசாயிகளுக்கு உண்டாகும் பிரச்சனைகளைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகுதான் தெளிவானது.

ஆஸ்திரேலியாவில் கங்காரு வேட்டை காலங்காலமாகவே நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்கள் தங்களுடைய உணவுக்காகவும், உடைக்காகவும் கங்காருக்களை வேட்டையாடிக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். ஐரோப்பிய காலணி உருவான பிறகு வேட்டையாடப்படும் கங்காருக்களின் எண்ணிக்கை கூடியதாம். ஐரோப்பிய முறை விவசாயமும் கங்காருக்களின் இனப்பெருக்கத்துக்கு ஒரு முக்கியக் காரணமாம். முறையான விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட பல பயிர்கள் அவற்றுக்கு தடையில்லாத உணவு வழங்க, கங்காரு இனம் வஞ்சனையில்லாமல் பெருகிவிட்டதாம். தங்கள் உணவைத் தக்கவைக்க, வேறு வழியில்லாமல் கொத்தோடு வேட்டையாட வேண்டிய நிலை இவங்களுக்கு உண்டாயிற்று. அது இன்றும் தொடர்கிறது.ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தில் பெரும் சரிவை உண்டாக்கும் விதத்தில் இவற்றுடைய இனப்பெருக்க வளர்ச்சி இருப்பதாலும் அவற்றால் பாழ்படுத்தப்படும் விவசாய நிலங்களின் அளவு கூடிக்கொண்டே போவதாலும் கங்காருக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த,, குறிப்பிட்டப் பகுதிகளில் குறிப்பிட்ட இனங்கள் மட்டும் வேட்டையாடப்படுகின்றன. சிவப்பு கங்காரு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளைச் சேர்ந்த சாம்பல் நிறக் கங்காருகளுக்குதான் வேட்டையில் முதலிடம். வருடாவருடம் இந்த இன கங்காருக்களின் எண்ணிக்கையைக் கண்காணித்தும், சந்தையில் கங்காரு இறைச்சியின் தேவையைப் பொறுத்தும் வேட்டைக்கான கால நிர்ணயம் செய்யப்படுகிறது. இதை கங்காரு அறுவடை என்றுதான் அரசு குறிப்பிடுகிறது.

அதே சமயம் ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் சட்டத்தில் கங்காருக்களைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழிகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த சட்டங்கள் மேலே குறிப்பிட்ட இனங்களுக்குப் பொருந்தாது.

கங்காருவை ஆஸ்திரேலியாவிலிருந்து உயிரோடு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது சட்டப்படி குற்றமாகும். உயிரியல் பூங்காக்கள் விதிவிலக்கு. ஆனால் ஆஸ்திரேலியாவிலிருந்து கிட்டத்தட்ட 55 நாடுகளுக்கு உணவுக்காக கங்காரு இறைச்சி ஏற்றுமதியாகிறது. ரோமங்களுக்காகவும், தோல்பொருள் தயாரிக்கவும் அதன் தோலும் கூட ஏற்றுமதியாகிறது. இதனுடைய தோல் மிருதுவாக இருப்பதால் காலணிகள், முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள் தயாரிக்க மிகவும் ஏற்றதாம்.ஆனாலும் பல விலங்குநல அமைப்புகள் கங்காருவைக் கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆய்வரங்கங்கள் நடத்தி, அறிக்கைகள் சமர்ப்பித்தபடிதான் இருக்கின்றன.  ஆஸ்திரேலியாவின் கலாச்சார அடையாளங்களில் முக்கியமானதாயிற்றே கங்காரு. கங்காரு இல்லாத ஆஸ்திரேலியாவை நம்மால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா?

*********************************************************
தகவல் உதவிக்கு நன்றி:

படங்கள் உதவிக்கு நன்றி: விக்கிமீடியா

50 comments:

 1. குங்குரு கங்காரு ஆனது, வகைகள், உட்பட முழுத் தகவலுக்கு நன்றி... சில தகவல்கள் வியப்பையும் தந்தன...

  சின்னதென்றால் என்றுமே செல்லம் தான் என்பது உண்மை...!

  ReplyDelete
 2. அம்மா மனம் வைக்கும்வரை கருவாகவே கருப்பைக்குள் காத்திருக்கும். முதலில் பிறந்த குட்டி பையை விட்டு வெளியேறும்வரை அம்மா காத்திருக்கும்.
  >>
  அட, இது நல்லா இருக்கே! இதுப்போல நம்ம பெண்களுக்கு ஒரு வரம் கிடைச்சிருந்தா?!

  ReplyDelete
 3. வியக்க வைக்கும் படங்களும் செய்திகளும் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

  இறைவன் படைப்பில் தான் எவ்வளவு விசித்திரங்கள்.!

  அருமையான பதிவுக்கும் பகிர்வுக்கும் சிறப்பான பல தகவல்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்..

  ReplyDelete
 4. கங்காருவைப் பற்றி ஒரே பதிவில் நிறைய தகவல்கள். நன்றி!

  ReplyDelete
 5. கங்காரு ( இப்படிச் சொல்லலாமா?) பற்றி நான் அறியாத பல தகவல்கள்.

  உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. பொருத்தமான படங்களுடன் கட்டுரை அசத்துகிறது.

  வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.

  ReplyDelete
 6. நல்ல தகவல்கள்.

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு. வியப்பளிக்கின்றன பல தகவல்கள். இனம் அழியும் அபாயம் வருத்தம் தருகிறது. மனிதரின் சுயநலத்தால் உலகெங்கிலும் விலங்குகளின் வாழ்வு கேள்விக்குறியாகி வருகிறது.

  ReplyDelete

 8. ஒரு தீசிஸே எழுதிவிட்டீர்கள், கீதமஞ்சரி. அனிமல் ப்லானெட் நேஷனல் ஜியோகிராஃபிக் தொலைக் காட்சிகளில் காணும் கங்காருவைப் பற்றி இவ்வளவு செய்திகளா. ..! பல தகவல்கள் ஆச்சரியமளிக்கின்றன, பலதகவல்கள் என்னுடைய அறியாமையை வெளிப்படுத்தின. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 9. எத்தனை விரிவான தகவல்கள்! இந்த விலங்கினத்தைப் ப்ற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் இவ்வளவு டீடெய்லாகத் தெரியாது. எங்கருந்து புடிச்சீங்க அதுக்கான படங்களை இவ்வளவு பொருத்தமா? பிரமிக்க வைக்குது இந்தக் கட்டுரைக்கான உங்கள் உழைப்பு! அதுசரி... குங்குருவை... ஸாரி, கங்காருவை நீங்க நேர்ல பாத்திருக்கீங்க தானே?

  ReplyDelete
 10. இரண்டுக்குமே பின்னோக்கி நடத்தலோ நகர்தலோ அசாத்தியம் என்பதால் முன்னேற்றத்துக்கான அடையாளமாக இவை அரசு முத்திரையில் இடம்பெற்றுள்ளன.//

  பதிவின் ஒவ்வொரு செய்தியும் வியப்பை அதிகரிக்கின்றது. தாய் மடியின் காம்புகளும் அதிலொரு ஜோய் பாலருந்துவதுமான படம் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. நிறைவான உழைப்பு தோழி தங்களுடையது. பாராட்டுக்கள்.

  பதிவை அப்படியே சேமித்துக் கொண்டேன். நன்றி!

  ReplyDelete
 11. very good post you give many information about kangkaroo thank you

  ReplyDelete
 12. அனேகருக்குத் தெரியாத தகவல்களை அருமையாய் தந்தமைக்கு நன்றி. மார்சுபியல் வகையைச் சேர்ந்த கொவாலா (koalas) போன்ற விலங்குகள் பற்றியும் எழுதுங்களேன். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 13. ஆமாம் தோழி கங்காரு பற்றிய அனைத்து தகவல்களையும் வெகு சிறப்பாக சொல்லி விட்டீர்கள். படங்களும் அருமை.

  ReplyDelete
 14. கங்காரு பற்றிய தகவல்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. குறிப்பாக இனப்பெருக்கம். அம்மா மனது வைத்தால் தான் குட்டியை ஈன்றெடுக்கும் என்பது...

  நம் பெண்களுக்கும் இப்படி ஒரு நிலை இருந்தால் அனாதை ஆசிரமங்களும், தெருவில் இருக்கும் குழந்தைகளும் ஏன்...:(

  தகவல்களுக்கு நன்றி. பாராட்டுகள்.

  ReplyDelete
 15. எத்தனை எத்தனை விவரங்கள்.... அசத்தல்....

  படங்களும் விவரங்களும் நன்று. பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

  ReplyDelete
 16. கங்காருதானே... என்று நினைத்தாலும், உங்கள் எழுத்தின் சுவாரஸ்யம் மற்றும் ஆழம் கருதி படிக்க ஆரம்பித்தேன். ஏமாற்றவில்லை. நிறைய புதிய தகவல்கள் - இரவு மிருகம் என்பதும், தண்ணீர் இல்லாமல் இருப்பது என்று புதிய தகவல்கள். இனப்பெருக்கம், குட்டிகள் குறித்த தகவல்கள் இதுவரை கேள்வியே பட்டிராதவை. சுவாரஸ்யம். இறைவன் படைப்பின் அற்புதங்களில் ஒன்று!!

  ஆஸ்திரேலியாவின் கங்காரு வேட்டையும் செய்திகளில் படித்து அதிர்ச்சி அடைந்தாலும், நம் நாட்டில் மயில்கள் சில இடங்களில் பயிருக்கு நாசம் விளைவிப்பதைப் போலத்தான் என்று தெரிந்தது. தகவல் சுரங்கம். மிக்க நன்றிப்பா.

  ReplyDelete
 17. கருவை ஏற்பதை விருப்பம்போல் தள்ளிப் போடுவதும், குட்டிகள் ஆரம்பித்த காம்பிலேயே பால் குடிப்பது, மற்றும் குட்டிகளுக்கு அதனதன் வயதுக்கேற்ப தரத்தில் பால் கிடைப்பது ஆகியவை ஆச்சர்யம்.

  ஈ மெயில் சப்ஸ்கிரிப்ஷன் முயன்றேன். இல்லை என்று சொல்லி விட்டது!

  ReplyDelete
 18. இன்று உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன் கீதா... அவசியம் பார்த்து தொடருங்கள்..!

  http://www.minnalvarigal.blogspot.com/2013/07/blog-post_20.html

  ReplyDelete
 19. @திண்டுக்கல் தனபாலன்

  உடனடி வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்

  ReplyDelete
 20. @ராஜி

  ஹூம். நல்லாத்தான் இருக்கும். நமக்குதான் கொடுத்துவைக்கவில்லையே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.

  ReplyDelete
 21. @வை.கோபாலகிருஷ்ணன்

  தங்கள் வருகைக்கும் ரசித்து இட்டக் கருத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 22. @தி.தமிழ் இளங்கோ

  தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 23. @சுந்தர்ஜி

  ஆங்கிலத்தில் கேங்ரூ என்றாலும் நான் தமிழ்வழிக்கல்வி பயின்றதால் தமிழில் எழுதும்போது கங்காரு என்று குறிப்பிடுவது எனக்கு எளிதாக உள்ளது. வாசிப்பவர்களுக்கும் இலகுவாக இருக்குமென்று நினைக்கிறேன்.

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுந்தர்ஜி.

  ReplyDelete
 24. @மாதேவி

  வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி மாதேவி.

  ReplyDelete
 25. @ராமலக்ஷ்மி

  ஆமாம் ராமலக்ஷ்மி. இயற்கையை அழிப்பதன்மூலம் நம் வாழ்க்கையையும் அழித்துக்கொள்கிறோம். எப்போதுதான் உணரப்போகிறோமோ? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 26. @G.M Balasubramaniam

  தங்களுடைய வருகைக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா. நான் அறிந்து வியந்தவற்றை இங்கு அறியாதோர் அறியத் தருகிறேன். பலருக்கும் பயனுள்ளமை அறிந்து மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 27. @பால கணேஷ்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கணேஷ். படங்கள் விக்கிமீடியாவிலிருந்து எடுக்கப்பட்டவை.
  கங்காருக்களை உயிரியல் பூங்காக்களில் பார்த்து ரசித்திருக்கிறோம். அங்கேயே காப்பாளர்கள் கொடுக்கும் உணவை ஊட்டி மகிழ்ந்திருக்கிறோம்.

  ReplyDelete
 28. @நிலாமகள்

  வருகைக்கும் ரசித்தமைக்கும் பதிவை சேமித்துக்கொண்டமைக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

  ReplyDelete
 29. @mohamed salim abdullahhussaini

  welcome and thank you very much for your comment, Mohamed.

  ReplyDelete
 30. @வே.நடனசபாபதி

  தங்கள் வருகைக்கும் ஊக்கமிகுக் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா. அடுத்ததாய் எழுதவுள்ளது கொவாலா பற்றியத் தகவல்கள்தாம். தொடர்ந்து வாருங்கள்.

  ReplyDelete
 31. @Sasi Kala

  வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி சசிகலா.

  ReplyDelete
 32. @கோவை2தில்லி

  உண்மைதான் ஆதி. நமக்குக் கொடுப்பினை இல்லை :(

  வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி ஆதி.

  ReplyDelete
 33. @வெங்கட் நாகராஜ்

  வருகைக்கும் கருத்திட்டு அளிக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

  ReplyDelete
 34. @ஹுஸைனம்மா

  கங்காரு பற்றிய பல தகவல்கள் எனக்கும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அளிக்க அவற்றைப் பலரும் அறிந்துகொள்ள இங்கே பகிர்ந்தேன். ரசித்தீர்கள் என்று அறிய மிக்க மகிழ்ச்சி. நன்றி ஹூஸைனம்மா.

  ReplyDelete
 35. @ஸ்ரீராம்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

  கணினி அறிவில் கற்றுக்குட்டி நான். ஈமெயில் சப்ஸ்கிரிப்ஷன் ஏன் வேலை செய்யவில்லை என்று எனக்குத் தெரியவில்லையே...

  ReplyDelete
 36. @பால கணேஷ்

  அழைப்புக்கு நன்றி கணேஷ். விரைவில் தொடர்கிறேன்.

  ReplyDelete
 37. ரொம்பவே அருமையான விவரங்கள்.

  ஃபிஜித்தீவில் மாடுகளுக்கு ( அங்கே எருமைகள் இல்லை) புல்மகாவ் என்று ஃபிஜியன் மொழியில் சொல்கிறார்கள்.

  முதன்முதலில் வெள்ளையர்கள் கொண்டுவந்த பசுவையும் காளையையும் பார்த்த பழங்குடிகள் அவை என்ன என்று கேட்க, Bull Cow என்று வெள்ளையர் சொல்ல, அதுவே பெயராகியது:-)

  ReplyDelete
 38. பிரமிக்கவைக்கும் தகவல்கள் கங்காருக்களைப் பற்றி ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 39. Anonymous22/7/13 03:38

  மிக அறியாத தகவல்கள்- அறிவு பூர்வ தகவல் - ஏனெனில் தேவையான போது பிள்ளை உருவாக்குவது அறிவு பூர்வம் தானே!. வயதுக்கு ஏற்றபடி பால் கொடுப்பது. பிரமாதம் கீதமஞ்சரி.
  இனழய வாழ்த்து. பயணம் தொடரட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 40. கங்காரு பற்றி இவ்வளவு விஷயம் இருக்கா கீதா? உயிரினங்களில் தான் எத்தனை புதுமைகள்? ஒரு பக்கத்திலேயே சகல தகவல்களும்.

  வேறு பல விலங்கினங்கள் பற்றியும் அறியக் கிடைக்குமோ?

  ReplyDelete
 41. visit : http://blogintamil.blogspot.in/2013/07/2.html

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 42. தாய்க்கங்காருவால் அந்தக் குட்டியைத் தொடக்கூட இயலாத அளவுக்கு குட்டி மிகச்சிறியதாக இருக்கும். ஆனால் அம்மா என்ன செய்யுமென்றால், குட்டி, பைக்கு போகும் பாதையை நக்கி நக்கி சுத்தம் செய்து கொடுக்கும். குட்டியும் தன்னுடைய முன்னங்கால் விரல்களால் அம்மாவின் வயிற்று ரோமத்தைப் பற்றிக்கொண்டே முன்னோக்கி நகர்ந்து நகர்ந்து நான்கு அல்லது ஐந்து நிமிடத்தில் பைக்குப் போய்விடும். பைக்குள் நான்கு பால்காம்புகள் இருக்கும். அதில் ஒன்றை வாயால் பிடித்ததென்றால் அவ்வளவுதான். உடனே அந்த பால்காம்பு வீங்கி குட்டியின் வாயைவிட்டு வெளியில் வராதபடி உள்ளே நன்றாகப் பொருந்திவிடும். அப்புறமென்ன, அம்மா எத்தனை குதி குதித்தாலும் தாவினாலும் குட்டி பத்திரமாக பைக்குள் இருக்கும். விழவே விழாது. இன்னுமொரு வியப்பான விஷயம் என்னவென்றால் அந்தக் குட்டிக்கு பாலை உறிஞ்சிக் குடிக்கவும் தெரியாது. தசைகள் சுருங்கிவிரிவது மூலமாகதான் பால் குட்டிக்குப் போய்ச்சேரும்.//
  கங்காரு பற்றிய விரிவான செய்திகள் வியக்க வைக்கிறது. இறைவன் எப்படி எல்லாம் எல்லா உயிர்கள் வாழ்வதற்கும் கருணையோடு அருள் புரிந்து இருக்கிறான் என்பது கங்காருவின் வாழ்க்கை முறை எடுத்துக் காட்டு.
  குழந்தை பேறை நல்ல உணவு கிடைக்கும் போது வைத்துக் கொள்வது, குட்டி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முலைகாம்பு என்று படிக்கும் போது வியப்பே ஏற்படுகிறது.
  விரிவாக நிறைய விஷ்யங்களை அறிய தந்தைமைக்கு நன்றி கீதமஞ்சரி.

  ReplyDelete
 43. @துளசி கோபால்

  தகவல் சுரங்கமான தங்களிடமிருந்துதான் இதுபோன்று எழுதும் ஆர்வம் எனக்குள் எழுந்தது. தங்கள் வருகைக்கும் புதியதோர் தகவலுக்கும் மிக்க நன்றி டீச்சர்.

  ReplyDelete
 44. @இராஜராஜேஸ்வரி

  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பான நன்றி மேடம்.

  ReplyDelete
 45. @kovaikkavi

  தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி தோழி.

  ReplyDelete
 46. @மணிமேகலா

  வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் அன்பான நன்றி மணிமேகலா. ஆஸ்திரேலியாவின் அற்புத விலங்குகள் பற்றித் தொடர்ந்து தரும் ஆர்வம் உள்ளது. நிச்சயம் தொடர்வேன். நன்றி மணிமேகலா.

  ReplyDelete
 47. @திண்டுக்கல் தனபாலன்

  தகவலுக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி தனபாலன்.

  ReplyDelete
 48. @கோமதி அரசு

  ஆமாம் மேடம். நான் படித்தபோது எழுந்த வியப்புதான் அதைப் பகிரவும் தோன்றியது. தங்கள் வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.